எனக்குள்ளே நான் பல கேள்விகள் கேட்கின்றேன். பல பக்கப் பார்வையில் என் சிந்தனைகள் விரிவுபடுகின்றன. இறுதியில் ஒரு தீர்மானம் எடுக்கின்றேன். அவை எவ்வாறு விரிவுபடுகின்றன என வாருங்கள் இணைந்தே சிந்திப்போம்.
நாம் பிறக்கும்போது தலை முழுவதும் தலைமயிரோடே பிறந்தோம். கூட வந்த மயிர்கள் ஒவ்வொன்றாகக் கழன்றன. புதிது புதிதாக மயிர்கள் முளைத்தன. தலையில் முளைத்தவையும் கூடவரவல்லை. பழைய மயிர்களும் எமது தலையில் இருப்பது இல்லை. கழுவினோம், துடைத்தோம், அலங்கரித்தோம், இருந்தும் எம்மை விட்டே போனது. இறுதியில் வழுக்கையானது. எதுவுமே இல்லாத மண்டையில் அடர்த்தியாக இருந்த மயிர்களும் அலங்கரிப்பும் இருந்த இடம் தெரியாமல் போவது போலவேதான் வாழ்க்கையும் அமைந்திருக்கின்றது.
தனியாகப் பிறந்தோம், தலை நிமிர்ந்து வாழ்ந்தோம், தோளோடு சேர்ந்தோம், தோல்விகளை வென்றோம், சாதனைகள் புரிந்தோம், சாதித்துக் காட்டினோம்ளூ இறுதியில் தெரியாமல் போனோம். இதுவே வாழ்க்கை. போராடித் தொடர்கின்ற வாழ்க்கையில் இறுதியில் யாருடனும் போராடாது எமக்கு நாமே போராடித் தோற்றுப் போக வைப்பதே இயற்கை நியதி. அப்படியானால், இப்படித்தான் நடக்கப் போகின்றது என்பதை நாம் முன்னமே தெரிந்திருந்தும் எமது வாழ்க்கையில் ஏன் இந்தப் போராட்டம்? ஏன் இந்த மகிழ்ச்சி? ஏன் இந்த பாசப் பிணைப்பு? ஏன் இந்தப் பிரிவுத் துயர்? என்று சிந்தித்துப் பார்த்தோமென்றால், வாழ்க்கை என்பது வழுக்கை என்றே உணர்வோம்.
வாழ்க்கையில் இறுதிவரை போராடித் தோற்றுப் போனவர்களும் இருக்கின்றார்கள். வாழ்க்கையின் வெற்றி உச்சத்தைத் தொட்டவர்களும் இருக்கின்றார்கள். ஆனால், இறுதியில் இரு தரத்தினரும் உலக வாழ்க்கையில் ஒன்றுமில்லாமல் போனவர்களே. மாட மாளிகைகள், கோடான கோடிக் கோபுரங்கள் கட்டி வாழ்ந்த மன்னர்கள் இன்று எங்கே? பாட்டாலே உலகத்தை வென்ற பாவேந்தர்கள் எங்கே? நாயன்மார்கள் எங்கே? ஆழ்வார்கள் எங்கே? உலகத்தையே தன் கைக்குள் அடக்கிவிடலாம் என்று போர் தொடுத்த ஹிட்லர் எங்கே? அண்டவெளி ஆராய்ச்சியாளர்கள் எங்கே? தொழில்நுட்ப ஆய்வாளர்கள் எங்கே? தம்முடைய பெயரை நிலை நிறுத்திப் போனவர்கள் கூட பெற்றது ஏதுமில்லை. அவர் பெயர் சொல்லிப் பெயர் பெறும் சொந்தங்களே அவர்கள் புகழுடன் தொடர்கின்றார்கள் என்பது உண்மையே. அதுகூட ஓரிரு சந்ததி கடந்து மறக்கப்பட்டு அப்படியென்றால், ஏனிந்த போராட்டம்! வாழ்க்கையை நன்றாக அனுபவித்துச் செல்ல மனம் தடைபோடுவதும் ஏன்? !
இறப்பு என்பது நிச்சயம். இறந்தவர்கள் திரும்பி வருவதில்லை. படைப்புக்கள் அத்தனையும் ஒருநாள் இல்லாமல்தான் போகின்றன. கண்டுபிடிப்புக்கள் எல்லாம் காணாமல்தான் போகின்றன. அன்று நாம் பயன்படுத்திய உபகரணங்களை நாம் பயன்படுத்துகின்றோமா?(Radio, Taperecorder சமையல் உபகரணங்கள்) இன்று பயன்படுத்துபவவை நாளை தொடருமா? இல்லவே இல்லை. தொழில்நுட்பங்கள் பழையவற்றை ஒன்றுமில்லாமல் பண்ணிவிடுகின்றன. சிந்திக்கச் சிந்திக்க புதியவை பிறப்பெடுக்கின்றன. பழையவை தேக்கம் கண்டுவிடுகின்றன. எனவே உயர்திணை அஃறிணை அத்தனையும் வாழ்க்கையில் வழுக்கையே.
ஆனால், தனக்காக வாழ்ந்து ஆடு, மாடுகள் போல் பசித்தால் புல்லைத் தின்று, உறக்கம் வந்தால் உறங்கி வாழ வேண்டுமா? மிருகங்கள் போல் தேடி வேட்டை ஆடி, பசி நீங்க காலாற நடந்து, உறக்கம் வர உறங்கிப் போகும் வாழ்க்கை சரியா? அவ்வாறு மனிதன் வாழ்ந்தால், இந்தப் பூமியில் மாற்றங்கள் தோன்றியிருக்குமா! இலை குழை உடுத்தே இன்றும் மனிதன் வாழ்ந்திருப்பான். அவ்வாழ்க்கை அழகென்று சொல்பவர்களும் உண்டு. ஆறறிவு படைத்த மனிதனின் படைப்புக்கள் மேம்பட உலகத்தை வசதி படைத்த உலகம் ஆக்குவோம் என்று சொல்பவர்களும் உண்டு.
"காயமே பொய்யடா காற்றடைத்த வெறும் பையடா
மாயனார் குயவன் செய்த மண்பாண்டம் ஓடடா"
என்று பாடிய சித்தர் உலகநிலையாமையை உரைத்தார்.
"காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே"
என்ற பட்டினத்தார் இல்லாமல் போகும் உடலின் நிலையாமையை எடுத்துரைத்தார்.
ஆடிய ஆட்டம் என்ன?
பேசிய வார்த்தை என்ன?
தேடிய செல்வம் என்ன?
திரண்டதோர் சுற்றம் என்ன?
கூடுவிட்டு ஆவி போனால்
கூடவே வருவது என்ன?
என்று எதுவுமே எமக்குச் சொந்தம் இல்லை என்று கண்ணதாசன் பாடினார். இவ்வாறு அவரவர் நிலையாமை பற்றி எடுத்துரைக்க, அந்த உலக நிலையாமையை எடுத்துரைத்த திருமூலர் கூட
"தன்னை நன்றாகத் தமிழ் செய்ய என்னை நன்றாக இறைவன் படைத்தனன்"
என்று பாடித் தன் கடமையை திருமூலரே உணர்த்தியிருக்கின்றார். அதாவது உலக வாழ்க்கை வழுக்கை என்றாலும் ஒவ்வொரு மனிதர்களுக்கும் கடமை உள்ளது அல்லது கடமையை உள்ளதாக்கிக் கொள்ள வேண்டும் என்பது புலப்படுகின்றது. துறவியானவர் துறவறத்தில் இருந்த வண்ணம் சமூகத்திற்கு நல்லவற்றை உரைக்கவில்லையா?
ஒன்றுமில்லாமல் போவோம் என்று தெரியாமலே பிறக்கின்றோம். வாழ்க்கையில் நாம் எதுவுமில்லாமலே போவோம் என்று தெரிந்தே வாழ்கின்றோம்ள, சாதிக்கத் துடிக்கின்றோம். ஆனால், மனிதன் மூளையில் ஒன்று குடைந்து கொண்டே இருக்கும். இந்த பூமியில் பிறந்து விட்டோம். எமக்கோ அல்லது எம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கோ ஒரு வெளிச்சத்தைக் காட்டிவிட்டு மறைவோம் என்று சில மனிதர்கள் வாழ்க்கையைக் கொண்டு செல்வார்கள் என்பது உண்மையே. இங்கு எதிர்கால சமூகம் பற்றிய அக்கறை தொனிக்கின்றது. சிலருக்கு பிறப்பிலேயே தொடர் ஊக்கம் தொழிற்படும். தன்னால் முடியாது என்றாலும் தொடர்ந்து முயற்சியில் ஈடுபட்டு தம் இறுதிக்காலங்கள் வரையிலும் தம்முடைய எண்ணக்கருக்களை வெளிப்படுத்திக் கொண்டே இருப்பார்கள்.
வாழ்க்கையை நிலையானதான மாற்ற விஞ்ஞானிகளும் முயற்சி மேற்கொண்டுதான் இருக்கின்றார்கள். இது நடக்குமா என்று சந்தேகப்பட்ட எத்தனையோ விடயங்கள் இன்று நடத்திக்காட்டப்பட்டுள்ளன. உருவ மாற்றுச் சிகிச்சை என்பது பிறந்தது எப்படியான தோற்றமோ அத்தோற்றத்தை முழுவதுமாக மாற்றுகின்றார்கள்((Plastik surgery) ஆணைப் பெண்ணாகவும், பெண்ணை ஆணாகவும் மாற்றுகின்றார்கள், குளோனிங் முறையில் ஒரு மனிதனை மறுபடியும் உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் முனைந்து கொண்டிருக்கின்றார்கள். குளோனிங் முறையில் கலவியில்லா குளோனிங், (Asexual Reproduction) மரபணுக்களையும் DNA கூறுகளையும் பிரதி எடுக்கும் ஜீன் குளோனிங் (), ஒரு மிருகத்தை அப்படியே பிரதி எடுக்கும் இனப்பெருக்க குளோனிங் (சுநிசழனரஉவiஎந ஊடழniபெ)சிகிச்சை முறைகுளோனிங் (வுhநசயிநரவiஉ ஊடழniபெ) என குளோன்களை உருவாக்க மனிதன் முனைந்து கொண்டிருக்கின்றான். எம்மால் அறியப்பட்ட டாலி என்னும் செம்மறி ஆடு, டியூவி என்றழைக்கப்படும் மான், ஸ்நூபி என்றழைக்கப்படும் நாய் போன்றன குளோனிங்குக்கு அத்தாட்சிகளாகக் காணப்படுகின்றன. அண்டங்கள் தாண்டி ஆராய்ச்சிகளில் பிரபஞ்சத்தை நோக்கி பார்வையைக் கொண்டு செல்கின்றார்கள். இவையெல்லாம் வாழ்க்கையையும் பிறப்பையும் நியாயப்படுத்துவதற்கும் நிலைப்படுத்துவதற்கும் மனிதனின் முயற்சிகளாக இருக்கின்றன.
விஞ்ஞானிகளின் வரிசையில் உலகின் தலைசிறந்த அறிவியலாளரான ஸ்ரீபன் வில்லியம் கார்க்கிங் (08.01.1942 – 14.03.2018) என்றுமே எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துபவராகக் காணப்படுகின்றார். வாழவே முடியாத ஒரு மனிதன். தசையூட்டமற்ற பக்க மரப்பு நோயால்(Amyotrophic lateral sclerosis – ALS )அதாவது இயக்க நரம்பணு நோயால் (ஆழவழச நெரசழn னளைநயளந) பாதிக்கப்பட்டார். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூளை சொல்வதை தசை செய்யாது. உடல் அடங்கி ஒரு சக்கர நாற்காலிக்குள் ஐக்கியமாகிவிட்டது. இயக்கவியல் விஞ்ஞானியான இவர் ஷஷஈக்வலைசர்|| என்ற கொம்பியூட்டர் புரோக்ராம் உதவியோடு கன்னத் தசைகள் மூலம் கொம்பியூட்டரில் பேசி வந்தார். இந்நோய் கண்டபோது இன்னும் 2 வருடங்களே ஸ்ரீபன் வில்லியம் ஹாக்கிங் வாழ்வார் என்று மருத்துவர்கள் இவருடைய இறப்புக்கு நாள் குறித்தனர். 23 வயதில் இவருக்கு இவ் அச்சுறுத்தல் கிடைத்தது ஆனால், உலகவாழ்க்கையை விட்டுப் பிரியப் போகின்றோம் என்று தெரிந்திருந்தும் காதலித்தார். திருமணம் செய்தார். பிரபஞ்சத்தை முழுவதுமாக அறிந்து கொள்ளவேண்டும் என்ற ஆவலும் முயற்சியும் அவரை 76 வருடங்கள் வரை வாழ வைத்தது. இறப்பு எந்த நிமிடமும் வரலாம் என்று சிந்தித்த ஸ்ரீபன் ஹாக்கிங் வாழும் வரை அசைய முடியாத நிலையிலும் தன்னுடைய மூளையைப் பயன்படுத்தி தன்னுடைய ஆராய்ச்சியில் ஈடுபடுத்திக் கொண்டே இருந்தார்.
இவ்வாறான மனிதர்களை சிந்தித்துப் பார்க்கின்ற போது வாழ்ககை என்பது வழுக்கை என்று நினைத்தாலும், எதற்காவது வாழ வேண்டும் என்ற நினைப்பானது மூளை சுறுசுறுப்பான மனிதர்களுக்கு தோன்றிக் கொண்டே இருக்கும். இது இயற்கையின் நியதி, கோட்பாடு என்றே கூறலாம்.