• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

    அம்மாவைத் தேடிக் கவிதை





    வரவும் செலவும் புண்ணியக் கணக்கில் பூர்த்தியானதனாலோ- எம்
    உள்ளக் கணக்கைச் சித்திராகுப்தன் உடைத்தெறிந்தார்
    புண்ணியங்கள் கூடிவிட்டால் இவ்வுலகின்பம் குறைந்திடுமென
    நூல்களில் நான் கற்றதில்லை
    தனக்காக வாழாத எவ்வுயிரும் இவ்வாழ்வில் தரணியில்
    ஆண்டுகள்  பல வாழ்ந்ததில்லை எனும்
    இயமன் எழுதிய தீர்ப்பை யான் அறிந்ததில்லை
    ஜடை பிண்ணி அழகு பார்த்த கண்கள் - பேத்தி
    ஜடை போட்ட காட்சி காணவில்லை
    சோறூட்டி வாழ வைத்த சொக்கத் தங்கம்
    நீறாகிப் போன துயர் தீராத வடுவாக நிலைக்கிறது
    வாழ்வின் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
    இறப்பொக்கவில்லையே!
     காலம் தெரிந்திருந்தால் கடிவாளம் போட்டுத் தடுத்திருப்பேனோ
    வேளை தெரிந்திருந்தால் வேலி  போட்டுக் காவல் இருந்திருப்பேனோ 
    நோயில் படுத்திருந்தால் நோகாது பார்த்திருந்திருந்திருப்பேனோ
    ஆறாத சோகத்திற்கு காரணம் தான் தேடுகின்றேன்
    அழியாத நினைவுகளை ஆறப்போட்டுத் தவிக்கின்றேன்
    சித்திரை வரும் பௌர்ணமியின் நித்திரை நான் செய்ததில்லை
    தாயே! உன் விரல் தேடித் தவிக்கின்றேன்
    நீ அணைத்தெடுக்கும் சுகம் உணர இன்று துடிக்கின்றேன்





    ஞாயிறு, 22 ஏப்ரல், 2018

    சுவாமி விபுலானந்த அடிகளார் ஆவணப்பட வெளியீடு சுவிற்ஸலாந்து

                  




    சுவிஸ் நாட்டில் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 125 ஆவது ஆண்டுவிழாவினை சுவிஸ் நாட்டின் உதயம், முனைப்பு அமைப்புக்களும் ஜேர்மனி தமிழ் கல்விச் சேவையும் இணைந்து

    Kirch Trimbach, Chappeligass – 39, 4632 Trimbach, Olten, Switzerland என்னும் இடத்தில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளுடன் நடத்தினர். இந்நிகழ்ச்சிக்கு வேலப்பன் ஜெயக்குமார் அவர்களே முக்கிய பொறுப்பாளராக விளங்கினார். இந்நிகழ்விலே கனடாவில் வசிக்கும் பாபு வசந்தகுமார் அவர்கள் தயாரித்து அளித்த விபுலானந்த அடிகளாரின் ஆவணப்படம் வெளியீடு செய்யப்பட்டது. அத்துடன்  மட்டக்களப்பு மாமாங்கப்பிள்ளையார் ஆலய இசை இறுவெட்டு அறிமுகமும் இடம்பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பிரதமவிருந்தினராக கனடாவில் இருந்து வருகை தந்திருந்த சுவாமி விபுலானந்த அடிகளாரின் ஆவணப்படத் தயாரிப்பாளர் பாபு வசந்தகுமார் கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினராக சமூக சிந்தனையாளரும், எழுத்தாளருமாகிய இராஜேஸ்வரி பாலசுந்தரம் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.



                     மண்டபம் நிறைந்த மக்களுடன் மங்கள விளக்கேற்றல் என்னும் பாரம்பரிய நிகழ்ச்சி ஆரம்பமானது. ஜேர்மனி தமிழ் கல்விச்சேவை பொறுப்பாளர் பொன்னுத்துரை ஸ்ரீஜீவகன் அவர்களும், சிறப்பு விருந்தினர் இராஜேஸ்வரி பாலசுந்தரம் அவர்களும், மு.குமாரசாமி அவர்களும், க.சுந்தரலிங்கம் அவர்களும், திருமதி. அன்னலட்சுமி அவர்களும் மங்களவிளக்கை ஏற்றி விழாவை ஆரம்பித்து வைத்தார்கள். அதனை அடுத்து மெனள அஞ்சலி இடம்பெற்றது. அதனை அடுத்து தமிழ்த்தாய் வாழ்த்தை தமிழையும் இறைவனையும் ஒன்றாகவே காணுகின்ற விபுலானந்த அடிகளாரின் பாடல் ஒலிபரப்பப்பட்டது. அதனைத் தொடர்ந்து வேலப்பன் ஜெயக்குமார் அவர்கள் வரவேற்புரையை நடத்தினார்.





                    இந்நிகழ்ச்சியினை ஜேர்மனி தமிழ் கல்விச்சேவை செயற்குழு உறுப்பினரும் எழுத்தாளருமான சந்திரகௌரி சிவபாலன் அவர்களும்  இராஜேந்திரம் சுயேந்திரன் அவர்களும் தொகுத்து வழங்கியிருந்தார்கள். நடன ஆசிரியை மதிவதனி அவர்களின் மாணவிகள்  வரவேற்பு நடனத்தை ஆடினர். தொடர்ந்து இடம்பெற்ற நிகழ்ச்சிகளாக விபுலானந்த அடிகளாரைப் பற்றி திருமதி. சரளா விமல்ராஜ், திருமதி. ராதிகா திவாகரன், திருமதி புஸ்பலதா சுந்தரம், திருமதி. ஜீவா விஜயகுமாரன், திருமதி. விஜயகுமாரி தேவராஜா, திருமதி சாந்தினி சிவா, கல்லாறு சதீஸ் அவர்கள், ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

                   ஜேர்மனி தமிழ் கல்விச் சேவையின் பொறுப்பாளர் ஸ்ரீஜீவகன் அவர்கள் தலைமை வகித்தார். அவர் தன்னுடைய தலைமையுரையில் ஜேர்மனி தமிழ் கல்விச்சேவையின் 28 ஆவது ஆண்டுவிழாவிலே 07.10.2017 இலே சுவாமி விபுலானந்த அடிகளாரின் ஆவணப்படமும் மட்டக்களப்பு மாமாங்கப் பிள்ளையார் ஆலய இறுவெட்டும் வெளியீடு செய்யப்பட்டமை பற்றியும் விபுலானந்த அடிகளார் பன்முகப்புலமை பற்றியும் விபுலானந்த அடிகளாருக்கு உலகம் முழுவதும் விழா எடுக்க வேண்டிய அவசியம் பற்றியும் எடுத்துரைத்தார். ஜேர்மன் தமிழ் கல்விச்சேவை செயற்குழு உறுப்பினர் சந்திரகௌரி சிவபாலன் அவர்கள் சுவாமி விபுலானந்த அடிகளாரின் பன்முகப்புலமை என்ற தலைப்பில் உரையாற்றி ஆவணப்பட வெளியீட்டுரையினையும் வழங்கினார். தொடர்ந்து செயற்குழு உறுப்பினர்களாகிய அம்பலவன் புவனேந்திரம் அவர்கள் மாமாங்கப்பிள்ளையார் இறுவெட்டுரையினையும் விபுலானந்த அடிகளார் பற்றிய கவி ஒன்றினையும் வடித்தார், திருமதி. ஜெகதீஸ்வரி மகேந்திரன் சுவாமி விபுலானந்த அடிகளார் பற்றி கவிப்பா வடித்தனர். அதன் பின் ஜேர்மனி தமிழ் கல்விச்சேவை உறுப்பினர்கள் விழாவைச் சிறப்பாக ஒழுங்குபடுத்தி நடத்திக் கொண்டிருந்த வேலப்பன். ஜெயக்குமார் அவர்களையும், ஆவணப்பட தயாரிப்பாளர் பாபு வசந்தக்குமார் அவர்களையும் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்துக் கௌரவித்தனர்.

              அதன்பின் ஆவணப்படம் சபையோருக்குப் போட்டுக் காட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆவணப்படம் வெளியீடும், மட்டக்களப்பு மாமாங்கப் பிள்ளையார் ஆலய இறுவெட்டு வெளியீடும் இடம்பெற்றது.

                   சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட திருமதி இராஜேஸ்வரி பாலசுந்தரம் தன்னுடைய ஆய்வுக் கட்டுரையனை வாசித்து அளித்தார். இவரை நிகழ்ச்சி அமைப்புக் குழுவினர் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தனர். 




                   இசை நிகழ்ச்சியினை சுந்தரலிங்கம் ஜேசான் உள்ளிட்ட மாணவர்கள் சிறப்பாக நிகழ்த்தியிருந்தனர். பங்குபற்றிய அனைத்து மாணவர்களுக்கும் விழா அமைப்புக்குழுவினர் நினைவுப்பரிசினை வழங்கினர்.

    ஆவணப்படத்தை நெறியாள்கை செய்த சீவகன் பூபாலரெட்ணம் அவர்கள் அரங்கம் வானொலி, பத்திரிகையை நிகழ்த்திக் கொண்டிருப்பவர் ஸ்கைப் மூலமாக               இலங்கையில் இருந்து பேசினார். அதனைத் தொடர்ந்து ஆவணப்படத் தயாரிப்பாளர் பாபு வசந்தகுமார் அவர்கள் தன்னுடைய உரையில் இவ் ஆவணப்படத் தயாரிப்பில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி எடுத்துரைத்தார்.




                இளையராகங்கள் ஹரோக்கி இசைக்குழு உரிமையாளர் இரஞ்சன் அவர்களே ஒலிஒளி அமைப்புக்கு அனுசரணை வழங்கியிருந்தார். புகைப்படங்கள் எடுப்பதற்கு கேதீஸ்வரன் அவர்கள் அனுசரணை வழங்கியிருந்தார். மட்டக்களப்பு காரைதீவு மக்கள் உணவுகளைப் பரிமாறி அனைத்து மக்களையும் மகிழ்ச்சிப்படுத்தினார்கள்.

                 முடிவுவரை அனைவரும் பொறுமையாக இருந்து நிகழ்ச்சியைச் சிறப்பாக நடத்திக் கொடுத்திருந்தனர்.

    புதன், 18 ஏப்ரல், 2018

    பழைமைக்குத் திரும்பும் உலகம்



    பழைமை என்னும்  பதத்திற்கு தொன்மையோடு தொடர்புடைய அனைத்தையும் எடுத்துக் கூறலாம். மூத்தது, முதியது, பண்டையது எனப் பலவாறு கூறலாம். தொன்று தொட்டு வழங்கி வரும் பழக்கங்கவழக்கங்கள் காலமாற்றத்தற்கேற்ப மாறிவந்த சூழலுக்கேற்ப மாறுபட்டு வந்திருந்தமை கண்கூடு. பழைமை வாய்ந்த அனைத்தையும் போற்றிப் பாதுகாக்க வேண்டிய அதேவேளை அவற்றின் மாற்றத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலைமை எம்மவர் மத்தியில் காணப்பட்டது.

                            ஆதிகால மனிதன் ஆடையின்றி, காட்டிலே திரிந்து கண்ணுக்குட்பட்ட விலங்குகளை வேட்டையாடி, இறைச்சியை நெருப்பிலே வாட்டி உண்டு, காயங்களுக்கும் நோய்களுக்கும் பச்சிலை மருத்துவம் பார்த்து வாழ்ந்து வந்தான். ஆடைக்காக இலைகுழைகளை அணியத் தொடங்கினான். காலப்போக்கில் தனக்கான ஒரு குடும்பம், ஒரு சமூகம் என வாழப் பழக்கப்பட்டபோது வேட்டையாடுதலில் இருந்து மேம்பட்டு தோட்டம் செய்யத் தலைப்பட்டான். அப்போது தனக்குத் தேவையான பொருள்களைப் பெற்றுக் கொள்வதற்காக ஒரு பொதுச்சந்தையில் தனது பொருள்களை பேரம்பேசி பண்டமாற்று முறையிலே இது தந்தால், இதைத்தா என்று பெற்றுக் கொள்ளும் முறையைக் கொண்டு வந்தான். அதன் பின்தான் பணம் என்னும் ஊடகசாதனம் உதவிக்கு வந்தது. தொழில்கள் மேம்பட்டன, ஆடைகள் நெய்யத் தொடங்கி, வகைவகையாய் அணியத் தொடங்கினார்கள்.

               இவ்வாறான வளர்ச்சி பெற்ற மனிதன், இன்றைய நிலையை நினைத்துப் பார்க்கும் போது அவன் பழைமையை நாடுவதை அனுபவத்தின் மூலமும் அறியக் கூடியதாக உள்ளது. காட்டிலே திரிந்த மனிதன் சமைத்த உணவை உண்ணாது, வாட்டிய இறைச்சியையும் புழு பூச்சிகளையும் உண்ட நிலை காணப்பட்டது. இன்று Grill, Barbecue என்று கூறி மரங்கள் நிறைந்த பகுதிகளிலும், வீட்டிற்கு வெளியிலும்  இறைச்சியை வாட்டி உண்டு மகிழ்கின்றனர். ஒரு வாகனத்தில் தோலுரித்த முழு மாட்டைத் தொங்கவிட்டு நெருப்பிலே வாட்டிக் கொண்டிருப்பார்கள். சுற்றவர மரங்களை செயற்கையாகவே கொண்டு வந்து நிறுத்தி  காடு போன்று உருவாக்கி, அங்கிருப்பவர்கள் அவ்வாட்டிய மாட்டிறைச்சியை வெட்டி வெட்டி  உண்டு மகிழ்வார்கள். இதுபோன்ற நிகழ்வுகள் ஜேர்மனியில் சில பகுதிகளில் நடைபெறுகின்றது. புதுமை மிஞ்சிய நிலையில் பழைமைக் கவர்ச்சி தற்போது ஏற்படுகின்றது.

               இதைவிட புழு பூச்சிகளை உண்ணும் காட்சியை பெரும் நிகழ்வாகவே தொலைக்காட்சிகளில் காட்டி மகிழ்கின்றார்கள். Ich bin ein Star holt mich hier raus என்னும் நிகழ்ச்சி பெயர் போன ஒரு நிகழ்ச்சியாக ஜேர்மனிய தொலைக்காட்சிகளில் காட்டப்படுகின்றது. அதில் பிரபல நட்சத்திரங்கள் பங்கெடுத்து மகிழ்ச்சியடைகின்றார்கள்.

               பண்டமாற்று முறை தற்காலத்தில் நாடுகளிடையே நடைபெறுவது யாவரும் அறிந்ததே. தமது நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களுக்கு ஏற்ற பொருள்களை அந்நியநாடுகளிலிருந்து பெற்றுக் கொள்ளும் பண்டமாற்று முறை தற்போது பெருகிவருகின்றது. இதுவே ஆரம்ப காலத்தில் வெளிநாட்டு வாணிகம் என்று நாம் கூறும் வியாபாரத்தை யவணர்கள் என்று அழைக்கப்பட்ட வியாபாரிகள் மிளகை எடுத்து தமது பொருள்களை எமக்குத் தந்துவிட்டுப் போன வாணிகத்தை நாம் அறிந்திருந்தோம். 
              ஒரு கிராமத்திலிருந்து அதிகாலை மாட்டுவண்டி கட்டிக் கொண்டு  பொதுச்சந்தைக்குச் சென்றால், தமக்குத் தேவையான அனைத்துப் பொருள்களையும் அச்சந்தையிலே இருந்து பெற்றுக் கொண்டு மாலை வீடு திரும்பிய மனிதன் அக்காலம். தற்போது shopping centre போனால், எமக்குத் தேவையான உணவுப் பொருள்களிலிருந்து மின்சார உபகரணங்கள் வரை நாம் பெற்றுக் கொண்டு வந்துவிடுகின்றோம். அதைவிட டிஸ்கோ, திரைப்படம் போன்ற நிகழ்வுகளையும் அக்கட்டிடத்தினுள்ளேயே முடித்து வருகின்றோம்.

                அக்காலத்தில் வீட்டிற்கு மரக்கறி, மீன்வகைகள், உடைகள் விற்பதற்காக மனிதர்கள் வருவார்கள். அவர்களிடம் பேரம் பேசி வீட்டில் இருந்தபடி பொருள்களை வாங்கி விடுவோம். தற்போது இதேநிலை நடைபெறுகிறது onlineshop  என்ற பெயரில் வீட்டில் இருந்தபடி பொருட்களை வாங்கி வீட்டில் இருந்தபடி online Bank மூலம் பணத்தைச் செலுத்திவிட்டு இருந்து விடுகின்றோம்.

               பதஞ்சலி முனிவரினால் அறிமுகப்படுத்தப்பட்ட பழைமையான யோகக்கலை இன்று உலக நாடுகள் அனைத்திலும் மேலோங்கி ஆதரிக்கப்படுகின்றது. சித்த மருத்துவத்தையும், ஆயுர்வேதத்தையும் நோக்கி ஓடுகின்றான் மனிதன். வீட்டுத் தோட்டம் என்றும் Bio மரக்கறிகள் என்றும் தேடுகின்றான் மனிதன். வீட்டுப் பலகணியில் தோட்டம் செய்யும் திட்டம் அமோக வரவேற்பை இந்தியாவில் பெற்றிருக்கின்றது. அதுமட்டுமல்ல தாய்நாட்டில் வீட்டுத் தோட்டம் செய்வது கேவலம் என்று வாழ்ந்த எம் இனத்தவர்கள், வெளிநாடுகளில் தமது பலகணியிலும்; தோட்டத்திலும் மிளகாய்ச் செடிகளும், கத்தரிக்காய், கறிவேப்பிலை மரங்களும் நாட்டித் தோட்டம் செய்வது கண்கூடாகக் காணக்கூடியதாக இருக்கின்றது.
          
               ஜேர்மனியில் ஒரு கிராமத்தில் ஆடையில்லாது நடப்பதற்காகச் செல்கின்றார்கள். அப்பகுதியில் யாருமே செல்ல முடியாது. கற்கால மனிதர்களை நினைவுபடுத்தி சுத்தக்காற்றையும் சூரியனின் கதிர்களையும் பெறுவதற்காகச் செல்வதாகக் கூறி கற்கால மனிதரைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகின்றார்கள்.
     
                சுயம்பரம் என்ற பெயரிலே ஒரு பெண் தனக்குத் தேவையான ஆணைத் தெரிவு செய்வாள். ஒரு பெண்ணின் சுயம்பரத்திற்குப் பல இளவரசர்கள் வரிசையாக வருவார்கள். அவர்களில் தனக்குப் பிடித்த மணமகனை மாலையிட்டுத் அவள் தெரிவு செய்வது இலக்கிய காலம். இதைவிட டீயஉhநடழச என்னும் ஒரு ஜேர்மனிய தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒரு ஆண் பல பெண்களுடன் பழகித் தனக்குப் பிடித்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்வதற்காகத் தெரிவு செய்வார். இதேபோன்று தற்போது ஆர்யா எங்க வீட்டு மாப்பிள்ளை என்னும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல பெண்களுடன் பழகித் தனக்குப் பிடித்த பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளப் போகின்றார். அரச வம்சத்தினரிடையே இருந்துவந்த நடைமுறை தற்போது சாதாரண மக்கள் மத்தியிலும் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

                இலக்கியக் கால பெண்கள் சேலைக்கு  அணியும் Blouse கச்சை என்று அழைக்கப்பட்டது. காலப்போக்கில் அம்முறை வழக்;கொழிந்து வேறுவிதமாக அணியப்பட்டது. ஆனால், இப்போது மீண்டும் அதேவடிவத்தில் Saree Blouse  ஐப் பெண்கள் திரும்பவும் கொண்டு வந்திருக்கின்றார்கள்.

                ஆடைகள், உணவுப்பழக்கவழக்கங்கள், விளையாட்டுக்கள், கலைப்படைப்புக்கள், திரையிசைப்பாடல்கள் என்று எல்லாமே பழைமையை நினைவுபடுத்துவதுடன் பழைமையை நேசிப்பதாகவும் பழைமைக்குத் திரும்புவதாகவும் இருக்கின்றது. 

    சனி, 14 ஏப்ரல், 2018

    சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்


    நடப்பதும் முடிவது, நடந்ததும் முடிந்தது  
    நிலைப்பது உலகில் எதுவும் இல்லை
    வருடங்கள் வருவதும் இறப்பதும் இயற்கை
    விடியலின் பொழுதுகள் விழுவதும் இயற்கை  
    விழுந்த பொழுதுகள் எழுவதும் இயற்கை

    நாளும் மகிழ்ச்சியே நலமிக்க வாழ்வென
    தேடலில் உலகில் தெளிவது காண்போம்
    தெரிந்ததைக் கொண்டு சிறந்தது செய்வோம்
    தரமான புகழை தேடியே சேர்ப்போம்
    தரணியில் உயர்ந்திட நல்லதே நினைப்போம்

    வாழ்கின்ற உலகில் வசந்தத்தைத் தேடுவோம்
    வாழ்கின்ற போதினில் நிம்மதி காணுவோம்
    வாழ்ந்தோரை போற்றுவோம் வாழ்வோரை நேசிப்போம்
    நேசிப்போர் உள்ளங்களின் மகிழ்வுக்காய் உழைப்போம்
    நிமிர்ந்து நடந்திட நல்மனம் கொள்வோமென

    மனமதில் உறுதி கொண்டு சித்திரைப் புத்தாண்டு  நல்வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்வோம்





     



    ஜெர்மனியில் தமிழர் பண்பாட்டு மாற்றம்

      ஆங்கிலேயர் , போத்துக்கேயர்கள், ஒல்லாந்தர்  தமது ஆட்சிக் காலத்தின் போது எமது நாடுகளில் தம்முடைய பண்பாட்டைக் கட்டாயமாகத் திணித்த நிலையிலிர...