பழைமை என்னும் பதத்திற்கு தொன்மையோடு தொடர்புடைய அனைத்தையும் எடுத்துக் கூறலாம். மூத்தது, முதியது, பண்டையது எனப் பலவாறு கூறலாம். தொன்று தொட்டு வழங்கி வரும் பழக்கங்கவழக்கங்கள் காலமாற்றத்தற்கேற்ப மாறிவந்த சூழலுக்கேற்ப மாறுபட்டு வந்திருந்தமை கண்கூடு. பழைமை வாய்ந்த அனைத்தையும் போற்றிப் பாதுகாக்க வேண்டிய அதேவேளை அவற்றின் மாற்றத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலைமை எம்மவர் மத்தியில் காணப்பட்டது.
ஆதிகால மனிதன் ஆடையின்றி, காட்டிலே திரிந்து கண்ணுக்குட்பட்ட விலங்குகளை வேட்டையாடி, இறைச்சியை நெருப்பிலே வாட்டி உண்டு, காயங்களுக்கும் நோய்களுக்கும் பச்சிலை மருத்துவம் பார்த்து வாழ்ந்து வந்தான். ஆடைக்காக இலைகுழைகளை அணியத் தொடங்கினான். காலப்போக்கில் தனக்கான ஒரு குடும்பம், ஒரு சமூகம் என வாழப் பழக்கப்பட்டபோது வேட்டையாடுதலில் இருந்து மேம்பட்டு தோட்டம் செய்யத் தலைப்பட்டான். அப்போது தனக்குத் தேவையான பொருள்களைப் பெற்றுக் கொள்வதற்காக ஒரு பொதுச்சந்தையில் தனது பொருள்களை பேரம்பேசி பண்டமாற்று முறையிலே இது தந்தால், இதைத்தா என்று பெற்றுக் கொள்ளும் முறையைக் கொண்டு வந்தான். அதன் பின்தான் பணம் என்னும் ஊடகசாதனம் உதவிக்கு வந்தது. தொழில்கள் மேம்பட்டன, ஆடைகள் நெய்யத் தொடங்கி, வகைவகையாய் அணியத் தொடங்கினார்கள்.
இவ்வாறான வளர்ச்சி பெற்ற மனிதன், இன்றைய நிலையை நினைத்துப் பார்க்கும் போது அவன் பழைமையை நாடுவதை அனுபவத்தின் மூலமும் அறியக் கூடியதாக உள்ளது. காட்டிலே திரிந்த மனிதன் சமைத்த உணவை உண்ணாது, வாட்டிய இறைச்சியையும் புழு பூச்சிகளையும் உண்ட நிலை காணப்பட்டது. இன்று Grill, Barbecue என்று கூறி மரங்கள் நிறைந்த பகுதிகளிலும், வீட்டிற்கு வெளியிலும் இறைச்சியை வாட்டி உண்டு மகிழ்கின்றனர். ஒரு வாகனத்தில் தோலுரித்த முழு மாட்டைத் தொங்கவிட்டு நெருப்பிலே வாட்டிக் கொண்டிருப்பார்கள். சுற்றவர மரங்களை செயற்கையாகவே கொண்டு வந்து நிறுத்தி காடு போன்று உருவாக்கி, அங்கிருப்பவர்கள் அவ்வாட்டிய மாட்டிறைச்சியை வெட்டி வெட்டி உண்டு மகிழ்வார்கள். இதுபோன்ற நிகழ்வுகள் ஜேர்மனியில் சில பகுதிகளில் நடைபெறுகின்றது. புதுமை மிஞ்சிய நிலையில் பழைமைக் கவர்ச்சி தற்போது ஏற்படுகின்றது.
இதைவிட புழு பூச்சிகளை உண்ணும் காட்சியை பெரும் நிகழ்வாகவே தொலைக்காட்சிகளில் காட்டி மகிழ்கின்றார்கள். Ich bin ein Star holt mich hier raus என்னும் நிகழ்ச்சி பெயர் போன ஒரு நிகழ்ச்சியாக ஜேர்மனிய தொலைக்காட்சிகளில் காட்டப்படுகின்றது. அதில் பிரபல நட்சத்திரங்கள் பங்கெடுத்து மகிழ்ச்சியடைகின்றார்கள்.
பண்டமாற்று முறை தற்காலத்தில் நாடுகளிடையே நடைபெறுவது யாவரும் அறிந்ததே. தமது நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களுக்கு ஏற்ற பொருள்களை அந்நியநாடுகளிலிருந்து பெற்றுக் கொள்ளும் பண்டமாற்று முறை தற்போது பெருகிவருகின்றது. இதுவே ஆரம்ப காலத்தில் வெளிநாட்டு வாணிகம் என்று நாம் கூறும் வியாபாரத்தை யவணர்கள் என்று அழைக்கப்பட்ட வியாபாரிகள் மிளகை எடுத்து தமது பொருள்களை எமக்குத் தந்துவிட்டுப் போன வாணிகத்தை நாம் அறிந்திருந்தோம்.
ஒரு கிராமத்திலிருந்து அதிகாலை மாட்டுவண்டி கட்டிக் கொண்டு பொதுச்சந்தைக்குச் சென்றால், தமக்குத் தேவையான அனைத்துப் பொருள்களையும் அச்சந்தையிலே இருந்து பெற்றுக் கொண்டு மாலை வீடு திரும்பிய மனிதன் அக்காலம். தற்போது shopping centre போனால், எமக்குத் தேவையான உணவுப் பொருள்களிலிருந்து மின்சார உபகரணங்கள் வரை நாம் பெற்றுக் கொண்டு வந்துவிடுகின்றோம். அதைவிட டிஸ்கோ, திரைப்படம் போன்ற நிகழ்வுகளையும் அக்கட்டிடத்தினுள்ளேயே முடித்து வருகின்றோம்.
அக்காலத்தில் வீட்டிற்கு மரக்கறி, மீன்வகைகள், உடைகள் விற்பதற்காக மனிதர்கள் வருவார்கள். அவர்களிடம் பேரம் பேசி வீட்டில் இருந்தபடி பொருள்களை வாங்கி விடுவோம். தற்போது இதேநிலை நடைபெறுகிறது onlineshop என்ற பெயரில் வீட்டில் இருந்தபடி பொருட்களை வாங்கி வீட்டில் இருந்தபடி online Bank மூலம் பணத்தைச் செலுத்திவிட்டு இருந்து விடுகின்றோம்.
பதஞ்சலி முனிவரினால் அறிமுகப்படுத்தப்பட்ட பழைமையான யோகக்கலை இன்று உலக நாடுகள் அனைத்திலும் மேலோங்கி ஆதரிக்கப்படுகின்றது. சித்த மருத்துவத்தையும், ஆயுர்வேதத்தையும் நோக்கி ஓடுகின்றான் மனிதன். வீட்டுத் தோட்டம் என்றும் Bio மரக்கறிகள் என்றும் தேடுகின்றான் மனிதன். வீட்டுப் பலகணியில் தோட்டம் செய்யும் திட்டம் அமோக வரவேற்பை இந்தியாவில் பெற்றிருக்கின்றது. அதுமட்டுமல்ல தாய்நாட்டில் வீட்டுத் தோட்டம் செய்வது கேவலம் என்று வாழ்ந்த எம் இனத்தவர்கள், வெளிநாடுகளில் தமது பலகணியிலும்; தோட்டத்திலும் மிளகாய்ச் செடிகளும், கத்தரிக்காய், கறிவேப்பிலை மரங்களும் நாட்டித் தோட்டம் செய்வது கண்கூடாகக் காணக்கூடியதாக இருக்கின்றது.
ஜேர்மனியில் ஒரு கிராமத்தில் ஆடையில்லாது நடப்பதற்காகச் செல்கின்றார்கள். அப்பகுதியில் யாருமே செல்ல முடியாது. கற்கால மனிதர்களை நினைவுபடுத்தி சுத்தக்காற்றையும் சூரியனின் கதிர்களையும் பெறுவதற்காகச் செல்வதாகக் கூறி கற்கால மனிதரைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகின்றார்கள்.
சுயம்பரம் என்ற பெயரிலே ஒரு பெண் தனக்குத் தேவையான ஆணைத் தெரிவு செய்வாள். ஒரு பெண்ணின் சுயம்பரத்திற்குப் பல இளவரசர்கள் வரிசையாக வருவார்கள். அவர்களில் தனக்குப் பிடித்த மணமகனை மாலையிட்டுத் அவள் தெரிவு செய்வது இலக்கிய காலம். இதைவிட டீயஉhநடழச என்னும் ஒரு ஜேர்மனிய தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒரு ஆண் பல பெண்களுடன் பழகித் தனக்குப் பிடித்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்வதற்காகத் தெரிவு செய்வார். இதேபோன்று தற்போது ஆர்யா எங்க வீட்டு மாப்பிள்ளை என்னும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல பெண்களுடன் பழகித் தனக்குப் பிடித்த பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளப் போகின்றார். அரச வம்சத்தினரிடையே இருந்துவந்த நடைமுறை தற்போது சாதாரண மக்கள் மத்தியிலும் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
இலக்கியக் கால பெண்கள் சேலைக்கு அணியும் Blouse கச்சை என்று அழைக்கப்பட்டது. காலப்போக்கில் அம்முறை வழக்;கொழிந்து வேறுவிதமாக அணியப்பட்டது. ஆனால், இப்போது மீண்டும் அதேவடிவத்தில் Saree Blouse ஐப் பெண்கள் திரும்பவும் கொண்டு வந்திருக்கின்றார்கள்.
ஆடைகள், உணவுப்பழக்கவழக்கங்கள், விளையாட்டுக்கள், கலைப்படைப்புக்கள், திரையிசைப்பாடல்கள் என்று எல்லாமே பழைமையை நினைவுபடுத்துவதுடன் பழைமையை நேசிப்பதாகவும் பழைமைக்குத் திரும்புவதாகவும் இருக்கின்றது.
மாற்றம் ஒன்றே மாறாதது
பதிலளிநீக்குஆடையில் பழமை என்று கூறி இன்னும் பின்னுக்குப் போகாமல் இருந்தால் சரி.
பதிலளிநீக்குபழைமைக்குத் திரும்பும் உலகம் - அது
பதிலளிநீக்குபண்பாட்டைப் பேணும் வகையில் அமைய வேணும்.
பழைமைக்கும் பண்பாடு இருந்தது - ஆனால்
நவீனம் என்ற போர்வையில் தான்
பண்பாட்டில் மாற்றம் கண்டோம்!