எனக்கு எதுவுமே
பிடிக்கவில்லை. என்னைப் பார்க்க எனக்கே வெறுப்பாக இருக்கிறது. உடலெல்லாம்
வலிக்கிறது உதவிக்கு யாருமே இல்லையே. போர்த்தியிருக்கும் போர்வை கூட பாரமாக
இருக்கிறதே. மனமெல்லாம் வலிக்கிறது. எனக்கு என்னதான் வருத்தமாக இருந்தாலும்
நெற்றியிலே முத்தம் தந்துவிட்டு என்னுடைய போர்வைக்குள்ளேயே வந்து படுத்துக்
கொள்ளும் அம்மா தற்போது மருத்துவமனையில் கிடக்கின்றாள். எண்ணமோ எனக்கு அம்மாவுடன்
வாழ்ந்த நாட்களை நோக்கிப் பயணிக்க சந்தோசமாக இருக்கும். எப்போதும் அம்மாவைப் பற்றி
நினைப்பதாக இருந்தால், எனக்கு அல்வா
சாப்பிடுவது போலேதான் இருக்கும். தாய் என்பவள் அப்படித்தானே. முதல் அன்பும், முடிவில்லாத
அன்பும் அவளிடமிருந்துதானே பெற்றுக் கொள்ளுகின்றோம். அம்மாட சாப்பிடும்
சாப்பாட்டில் ஒரு கவளம் என் வாய்க்குள் போனால், அது என்னவோ மாதிரி ரேஸ்ட் ஆக இருக்கே. இதே சாப்பாடுதான்
நானும் சாப்பிடுறன். அதில் அம்மாட பாசம் சேர்ந்ததால் இப்படி சுவைக்குதோ.
பொதுவாகவே ஒரு இடத்தில்
இருக்கமாட்டா அம்மா. சுற்றிச் சுற்றி வேலைதான். காலையில் கடையில் வேலை
செய்வதற்குப் போய்விடுவாள். அங்கு என்ன இருக்க முடியுமா. தொடர்ந்து வரும் ஆட்களை
சிரித்த முகத்துடன் கவனிக்க வேண்டுமே. இந்த வயதானவர்களுக்கு என்னவென்று சொல்வது.
உயிர் போகும் சந்தர்ப்பத்தில்கூட லொத்தர் வெட்டித்தான் சாகுங்கள் போல. அவர்களுக்கு
வருகின்ற பணத்தை பெட்டிக்குள்ள வச்சுப் புதைப்பார்கள் என்று நினைப்பார்களாக்கும்.
இதைவிட பஸ்ஸூக்கு ரிக்கட் எடுக்க வாற சனங்கள், பத்திரிகை, மெகஸின் வாங்க வாற சனங்கள் என்று வேலை முடியும் வரை அம்மா
தொடர்ந்து நிற்கவே வேண்டும். அது முடிய வீட்டிற்கு வருவா. வரும்போது கார்
புள்ளாக(Car full) எங்களுக்குத் தான் சாமான்கள் வரும். என்னோடு சேர்ந்தே பிறந்ததால
என்னவோ எனக்கு வாங்குறதெல்லாம் டானியலுக்கும் வாங்க வேணும். நல்லவேளை
ஆண்பிள்ளையாகப் பிறந்திட்டான். ஆனாலும் எனக்கும் அவனக்குக் கொடுக்காம எதுவுமே
சாப்பிடப் பிடிக்காது. மூத்த அண்ணன் தினேஸ் பெரிய அள் போல்தான் நடிப்பான்.
எல்லாத்துக்கும் சட்டம் போடுவான். ஆனால், அவனுக்கு நானென்றால் கொள்ளை ஆசை. தன்னோட Girlfriend ஓட இப்ப
போய் இருந்தாலும் ஒருநாளைக்கு ஒருதரமாவது என்னை வந்து பார்க்காம இருக்க மாட்டான்.
டீன் எல்லாம் எனக்கு நேரே முதல் பிறந்த அண்ணன். அண்ணன் போலவே நடக்க மாட்டான்.
சத்தமா ஏச அவனுக்குத் தெரியவே தெரியாது. கடவுள் அம்மாவ ஹொஸ்பிட்டல்ல கோண்டு போய்
போட்டாலும் எனக்கு நல்ல அண்ணன்மாரைத் தந்திருக்கிறார். ஆனாலும் ஒரு பெண்பிள்ளையோட
வாழுறதப் போல ஆண்பிள்ளைகளோடு இருக்க முடியாது. இது வாழ்ந்து பார்த்தால்தான்
புரியும். சொன்னா யாருக்கும் அது விளங்காது.
இப்ப 5 மணிக்கு மூத்த
அண்ணன் வாற நேரமாவுது. கொம்பனியை இடையில விட்டிற்று வர முடியாதுதானே.
அட அம்மாட எண்ணம் எங்கேயோ போகுதே.
அம்மாவை நினைச்சால் இதெல்லாம் கூடவே வருகுதே. வரத்தானே வேணும். இது எல்லாம்
இணைஞ்சுதானே என்னோட வாழ்க்கை நடக்குது. சாமான்களை வைத்துவிட்டு படபடவென்று
எங்களுக்குச் சாப்பாடு செய்து வைத்துவிட்டு அடுத்த வேலைக்குக் கிளம்பிடுவா. இப்படி
ஓயாமல் ஓடிஓடி வேலை செய்துதான் இப்போது இப்படி பக்கவாதம் வந்து ஹொஸ்பிட்டலில
கிடக்கிறா. அம்மா ஒன்றும் பக்கவாதம் வந்து ஹொஸ்பிட்டலுக்குப் போகல்ல. காய்ச்சலோட
கூடிய சாதாரண இருமல்தான். விடாமல் இருமிக் கொண்டிருந்ததால இரவு வந்த அப்பாதான்
ஹொஸ்பிட்டலுக்குக் கூட்டிப் போனவர். பிறகு தனியேதான் வந்தார். கேட்டபோது அது
மாரிகாலத்தில வாற தொத்துக் காய்ச்சலாம். இப்போ எல்லோருக்கும் வருகிறதாம். சரி
கெதியா சுகமாகி வந்திடுவா என்று பார்த்தா.... அடுத்த நாள் அப்பா அம்மாட அறைக்குள்ள
போய்ப் பார்த்திருக்கிறார். அங்க அம்மாவைக் காணல்ல. அங்க விசாரிச்ச போதுதான்
தெரிஞ்சது. அம்மாக்கு பக்க வாதம் வந்து வேற கொஸ்பிட்டலுக்கு மாத்திட்டாங்க என்ற
விசயம். நாங்கெல்லாம் ஓடிப்போய்ப் பார்த்தம். அம்மாக்கு பேசும் போது வாய்
இழுக்குது. எங்களைப் பார்த்து சரியாகவே கதைக்கல்ல. கண்ணை மூடிக் கொண்டுதான்
இருந்தா. அவக்கு எல்லாம் மறந்து போச்சாம். என்னால தாங்கவே முடியல்ல. அப்பாவும்
எங்ககூட இல்ல. அம்மாவும் எங்களத் தெரியாம இருக்கிறா என்றா.... நான் என்ன அநாதையா? ஆனால், கடவுளுக்கு
எங்களில கொஞ்சம் பாசம் இருக்குது என்று நினைக்கிறன். அதுதான் இப்ப அம்மா கொஞ்சம்
சுகமாகிக் கொண்டு வர்றா. ஆனால், மறதிதான் கூட இருக்கிறது. எங்களை அடையாளம் கண்டுவிட்டா.
நாளை என்னுடையதும் டானியலுடையதும் பேர்த்டேக்கு அம்மா வாறதா சொன்னா. வந்திட்டுத்
திரும்ப போய்விடுவா என்று நினைக்கிறேன். ஆனால், வித்யா அக்கா என்னவோ அவதான் பேர்த்டேக்கு ஒழுங்கு
பண்ணியிருக்கிறா. ஆனால், டீன் என்னவோ
மறைக்கிறது மாதிரி தெரியுது. அம்மா வர மாட்டாவோ தெரியாது. ஹொஸ்பிட்டல் தூரம்
என்றதால என்னைக் கூட்டிப் போறாங்கள் இல்லை.
கதவு திறக்கப்படுவது தெரியிறது. சீனு
கதவைத்தள்ளித் திறக்கிறான். ஓஹோ... அவனுக்கும் தனிமை வந்திட்டுப் போல. வெளியில
எந்த நேரமும் நிற்பான். முகத்தில் கவலை கணக்கில்லாமல் காட்டுது. எனக்குக் கிட்டே
வருகிறான். பரிதாபமாகப் பார்க்கிறான். தலையை அசைத்து அசைத்துப் பார்க்கிறான்.
இங்கே வா..... என்று நான் கூப்பிட்டதும் வாலை ஆட்டிக் கொண்டு எனது போர்வைக்குள்
நுழைகிறான். என்ன? வீடு அமைதியாக
இருக்குதா. அம்மா இருக்கும் போது வீடு ஒருநாளும் இப்படி இருப்பதில்லையே. இந்த
வாயில்லாத ஜீவனுக்கே இந்த மாற்றம் தெரிகின்றது. குளியலறைக்குள் உடுப்பெல்லாம்
குமிஞ்சு கிடக்குது. வெளியில கொட்டிக் கொண்டே போகுது. ஆம்பிள்ளைப் பிள்ளைகள் இந்த
வேலையெல்லாம் செய்யக் கூடாதென்று எந்த மடையன் சொன்னது.
ஆ.... சீனு..... என்னடா சும்மா படு.
நெளியாத.... இவன் மியாவ் மியாவ் என்றாலும் அம்மா.... அம்மா என்றுதான் எனக்குக்
கேட்குது. அவனுக்காக கிச்சனுக்குள்ள கொட்டி வச்ச சாப்பாடு அப்பிடியே கிடக்குது.
பாருங்கள் மனிதர்களை விட மிருகங்களுக்கு பந்தபாசம் அதிகம் என்பதை அனுபவத்தால் நான்
அறிஞ்சு கொள்றன். கதவைத்தட்டும் சத்தம் கேட்கிறது. யாரது? வீட்டுக்குள்
யார் வரப் போறாங்கள்? வித்யாவாகத்தான்
இருக்கும். எங்களைக் கவனிப்பதற்காக அப்பா ஒழுங்குபண்ணிய பெண். அன்பானவர். அம்மா
போலவே எங்களுடன் பழகுவார். வீட்டுவேலைகள் செய்வதற்கு சொல்லித் தருவார். ஒன்றாக
விளையாடுவார். சுவையாகச் சமைத்துத் தருவார். வித்யா அக்காவா ..... ஆ நீங்களா? வாங்கள். உள்ளே
வந்த வித்யா
'இல்லை அக்கா அலுப்பாக இருந்தது. வாறன்.... என்றபடி பாய்ந்து
எழும்புகின்றேன். வீட்டுக்குள் யாரையாவது கண்டால், என்னுடைய மகிழ்ச்சிக்கு அளவேயில்ல. அதுவும்
வித்யா அக்கா என்றால், கொள்ளை ஆசை.
பழகுவதற்கும் ஆட்களைப் பிடிக்க வேண்டுமே. நேற்று வித்யா அக்காவோட சேர்ந்து சமையலறை
சாமான்கள் அடுக்கியது சுவாரசியமாக இருந்தது. குளியலறைக்குள் சென்ற வித்யா அக்கா
'என்ன லில்லி இவ்வளவு நிரப்பி வைச்சிருக்கிறீங்க. இந்தப்
பெடியனுகளிட்ட சொன்னால், எங்கே
செய்கின்றார்கள். இங்கே வா..... நாம் இரண்டுபேரும் சேர்ந்து இந்த உடுப்புக்கள்
எல்லாம் கழுவப் போடுவம் என்றார். ஓகே என்று சொன்ன நான் அசதி எந்த இடம் போனது என்று
தெரியாமல் வேலை செய்யத் தொடங்கிவிட்டேன். இருந்தாலும் என்னுடைய நடவடிக்கையில்
மாற்றத்தைக் கண்ட வித்யா அக்கா
'இஞ்ச பார் லில்லி. நீ ஒன்றும் செய்ய வேண்டாம். என்னோட
நின்றால் போதும். நான் பார்த்துக் கொள்ளுறேன். என்று சொல்லி எல்லா உடுப்புக்களையும்
கழுவப் போட்டார். இந்த சமயத்தில் வீடு துப்பரவு செய்யும் பெண் வந்து மீதி
வேலைகளைப் பொறுப்பெடுத்தாள். நானும் வித்யா அக்காவும் சமையலறைக்குள் போனோம்.
எனக்குக் குடிக்கத் தண்ணீர் கூட
அப்பா வாங்கி வைக்கல்ல. அப்பா நல்லவர்தான் எங்களோட நல்ல பாசம். ஆனால், அ;பபாக்கும்
அம்மாக்கும் ஒத்து வரல்லையே. அதுதான் அவர் சிமோனாவோட வாழ்றார். சிமோனா அம்மா
ஹொஸ்பிட்டலுக்குப் போனாப் பிறகு எங்களை இரண்டுதரம் வந்து பார்த்து வீட்டுச்
சாமான்களெல்லாம் வாங்கித் தந்திட்டுத்தான் போனவ. அப்பா ஒவ்வொரு நாளும்
நிறுவனத்தைப் பூட்டிப் போட்டு எங்களை வந்து பார்த்திட்டுத்தான் போவார். ஆனால், நேற்று வரல்ல.
ஏனென்ற விடயம் டீன் வித்யா அக்காட்ட விளக்கிய போதுதான் ஒட்டுக் கேட்டனான். கேட்ட
போது தலையில் யாரோ கம்பியால் அடித்தது போன்று இருந்தது. அவன் நினைக்கிறான்.
எனக்குத் தெரியாது என்று. என்ன செய்றது இந்தச் சின்ன வயசில இதையெல்லாம் நான் தாங்கத்தானே வேண்டும்.
அப்பாக்கு அம்மாவோட சேர்ந்து வாழத்தான் பிடிக்காது. ஆனாலும் அம்மாக்கு முழு
உதவிகளையும் அப்பாதானே செய்றார். இப்போ அம்மா ஹொஸ்பிட்டலிலே கிடக்கும் போது
எங்களுக்குத் தேவையான முழு வேலையும் அப்பாதானே ஒழுங்கு பண்றார். சீனு கூட அப்பாவக்
கண்டால், ஓடி வந்து மடியில
இருந்திடுவான். பெண்பிள்ளைப் பிள்ளைகளுக்கு அப்பாவோட கூட விருப்பம் என்று
சொல்வார்கள் தானே அதுதான் என்னவோ அப்பா என்றால் எனக்குக் கொள்ளை ஆசை.
டீன் சொல்லியதைக் கேட்டு
இரவிரவாக அழுததால் தானோ என்னமோ இன்று உடம்பெல்லாம் அசதியாக இருக்கிறது. எனக்கு
இப்படி என்றால், ஹீமோதெரபி செய்த
அப்பாக்கு எப்பிடி இருக்கும். நினைக்க நினைக்க அழுகையாய் வருது. சிகரெட்டைக்
குடிக்காதீங்கள் என்று அம்மா எத்தனை தரம் சொல்லியிருப்பா. அப்போதெல்லாம் கேட்காத
அப்பா இப்ப மட்டும் ஏன் குடிப்பதில்லை என்று இப்பத்தான் எனக்கு விளங்குது. வாயிலே
எந்த நேரமும் மாஸ்க் போட்டிருப்பதை நான் கேட்ட போது. அது மகள் எனக்கு ஒரு நோயும்
தொத்தக் கூடாது என்று டொக்டர் சொன்னவர். நுரையீரலில் ஏதோ இருக்கிறது. அது கொஞ்ச
நாளில் சரிவரும். அதுக்குப் பிறகு மாஸ்க் எடுத்துவிடலாம் என்று என்னை
சமாதானப்படுத்த அப்பா பொய் சொல்லியிருக்கிறார் என்ற விசயம் நேற்றுத்தான் அறிந்து
கொண்டன். நுரையீரல் புற்றுநோய் வந்தவர்கள் தப்ப மாட்டார்கள் என்று
கேள்விப்பட்டிருக்கிறேனே இதை நினைக்க நினைக்க என்னால அழுகையைத் தாங்க முடியல்ல.
என் கண்களில் கண்ணீரைக் கண்ட வித்யா அக்கா
'லில்லி..... ஏன் அழுறீங்க. அம்மா வந்திடுவா. இன்னும்
கொஞ்சநாள்தான் ஹொஸ்பிட்டல். பிறகு உங்களோடதானே இருப்பா. இனிமேல் ஒரு வேளைக்கும்
போக மாட்டா.... என்று சொன்னபோது
என்னது இன்னும்
கொஞ்சநாளா.... நாளைக்கு என்னுடைய பேர்த்டேக்கு அம்மா வர மாட்டாவா.... என்று நான்
ஆச்சரியத்தில் கேட்டபோது
'இல்லை லில்லி அம்மாக்கு இன்னும் கொஞ்சம் சுகமாக வேண்டுமாம்.
சுகமாகாமல் வந்தால் உங்களுக்கு நல்லதா சொல்லுங்கள்? நாங்கள் பேர்த்டேக்கு ஒரு இடத்திற்குப் போறம்.
போயிற்று அம்மாட்டப் போறம். இப்போ சாப்பாடு செய்வோமா||
என்று கேட்டார். வித்யா
அக்கா எவ்வளவு நல்லவர். என்னுடைய கவலையை திசை திருப்ப எவ்வளவு முயற்சி
எடுக்கின்றார். இருவரும் சேர்ந்து சமைத்தோம். முடிந்தவுடன் சாப்பிட அழைத்தார்.
நான் டானியலுக்காகக் காத்திருப்போம் என்றேன். டானியல் வீட்டில் இருக்கப்
பிடிக்காமல் தன்னுடைய நண்பனுடன் விளையாடப் போய்விட்டான். அப்பா பெர்மிஸன்
கொடுத்தால் மட்டுமே போகலாம். எனக்கும் போக விருப்பம் வித்யா அக்கா ஸ்கூல்
ஹோம்வேர்க் பார்த்து முடித்தால், அப்பாட பெர்மிஸன் கிடைக்கும். ஆனால், எனக்கு என்னவோ
வெளியில் போகப் பிடிக்கவே இல்லை.
இரண்டு தடவை ஹொஸ்பிட்டலில் வைத்து
அம்மாக்கு பக்க வாதம் வந்திருக்கிறது. ஏன் அடிக்கடி வருகிறது என்றுதான்
விளங்கவில்லை. இங்கு திரும்ப வந்தால் திரும்பவும் வருமோ. அம்மாக்கு அப்பா வேற
நண்பியைப் பிடித்து அவருடன் வாழ்வது கவலையாக இருக்குமோ! அப்படிச் சொல்ல முடியாது.
அம்மா அப்பாவோட நல்லாத்தானே கதைக்கிறா. அப்பா அம்மாட விருப்பத்தோடதானே
விட்டிற்றுப் போனவர். சிலவேளை அப்பாட வருத்தத்தைப் பற்றி யோசிக்கிறாவோ! அப்படி
இருக்க முடியாது. அம்மா எங்களப் பற்றித்தான் நிறைய யோசிப்பா. எனக்கு அப்பாவும்
வேணும் அம்மாவும் வேணும். ஆனால், என்ன அப்பா சிமோனாவோடத் தான் வாழ்வார். பெரியவர்கள்
எடுக்கிற முடிவுக்கு நாங்கள் கட்டுப்பட்டுத்தானே வாழவேண்டும். எங்களுக்காக அவர்கள்
கொஞ்சம் பொறுக்கலாம். ஆனால்,
அவர்களும்
சந்தோசமாக இருக்கத்தானே வேணும்.
திரும்பிப் பார்க்கிறேன்.
வித்யா அக்கா எங்களுக்குத் தேவையான பொருட்கள் வாங்குவதற்கு லிஸ்ட் போட்டுக் கொண்டு
நிற்கின்றா. அக்கா விளையாடுவோமா என்று கேட்கிறேன். ஓகே. எடுத்துக் கொண்டு
வாருங்கள் என்று சொல்லிச் சொல்லுகின்றா. அப்போது என்னுடைய நண்பன் லதன் ரெலிபோன்
எடுக்கிறான். இருவரும் சேர்ந்து நகரத்துக்குப் போவோமா என்று கேட்கிறான். டேய்
எனக்கு விருப்பமில்லடா.... நீ போ..... என்று சொல்லிவிட்டு விளையாட
ஆயத்தமாகின்றேன். விளையாட்டு முழுவதும் அம்மா, அப்பா பேச்சுடனே தொடர்கிறது. வீட்டுக்குள் நுழைந்த டீன்
கையில் கொண்டுவந்த தண்ணீர் போத்தல்களைக் கீழே வைக்கிறான். வழக்கமாகக் கலகலப்பாகப்
பேசும் டீன். அப்பா இதை வாங்கிக் கொடுக்கும்படிச் சொன்னவர் என்று சொல்லிவிட்டு
வித்யா அக்காவுடன் பேசாமலே அறைக்குப் போய்விட்டான். பின் தொடர்ந்த நான் ஏன் அண்ணா
அப்பா இன்றைக்கும் வரல்ல. என்று கேட்டேன். எதுவுமே சொல்லாத அண்ணாவினுடைய கண்கள்
கண்ணீரால் நிறைந்திருப்பதைக் கண்டேன். என்ன சொல்லு பிளீஸ் என்று கேட்டேன்.
ஒன்றுமில்ல அப்பா ஹொஸ்பிட்டலில என்று சொல்லிவிட்டு வெளியே போய்விட்டான். டீன்
என்று அழைத்தபடி ஓடிச்சென்ற வித்யா அக்கா அவனைப் பிடித்து நிறுத்தினார். அவனும்
அழுதபடி ஏதோ பேசினான். நிச்சயமாக அப்பாக்கும் ஏதோ பிரச்சினை. ஹொஸ்பிட்டலில்
வைத்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மையாக இருக்கும்.
அப்படியென்றால், ஐயோ கடவுளே!
இப்படியான பிரச்சினைகளுடன் நான் எப்படிப் படிக்க முடியும். அம்மாவும் அப்பாவும்
ஹொஸ்பிட்டலிலேயா? அப்படியென்றால், நான் வயதுக்கு
வந்த விடயத்தை மறைத்து வைத்திருக்காமல் வித்யா அக்காவிடம்தான் சொல்ல வேண்டும்.
ஆறுதல் பெற வேண்டிய நேரம்...
பதிலளிநீக்குநலமா அக்கா .
பதிலளிநீக்குஎப்பவும்போல இயல்பாக நிஜமான சம்பவங்கள் மற்றும் மனித மனங்களை அழகாய் படம்பிடித்து காட்டினீங்க இந்த கதையில் சிறுபெண் பாவம் .வித்யா தேற்றட்டும் துணையாக இருக்கட்டும் லில்லிக்கு .
மனம் கனத்துவிட்டது.
பதிலளிநீக்கு