• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    வெள்ளி, 23 நவம்பர், 2012

    திருமணம்



    களவினில் குற்றம் கலந்தது
    கடிமணம் உலகினில் விதந்தது
    உறவினில் கலங்கங்கள் புகுந்தது
    உதவிட பிரிவுகள் எழுந்தது
    இருமனம் இணைவதே திருமணம் - இதை
    உணர்த்திட மார்பினில் மாங்கல்யம்
    உணர்த்திடும் அவசியம் புரிந்ததால்
    திருமணம் உலகினிலின் றவசியம்.

    மனிதர்கள் மாண்புகள் உணர்ந்துவிட்டால்
    மதமது சடங்கது தேவையில்லை
    கலாசார பண்பாடு களத்திலில்லை
    எழுதாத சட்டமது திருமணமும்
    எழுதப்பட்ட சட்டமாய் தேவையில்லை.

    குணமது தெரியணும் நெறியது புரியணும்
    வளமது பெருகிட வாழ்வது சிறக்கணும்
    பணமது நீக்கியே மனமது பார்க்கணும்
    விதவைகள் திருமணம் விரும்பியே ஏற்கணும்
    தெளிவிலா மனதுடன் திருமணம் வெறுக்கணும்
    நாளைய உலகினை நாடிய வாழ்வினை
    நாளுமே எண்ணியே வாழ்வினை நடத்தணும்
    அன்புடன் துணையினை ஆதரவாய் நடத்தணும்
    பிறரது வாழ்வது சிறந்திட திருமணவாழ்வும் சிறக்கணும்

    வெள்ளி, 16 நவம்பர், 2012

    கனிந்துவந்த கார்த்திகை





    ஒலிவடிவம் கேட்க முக்கோணவடிவத்தை அழுத்துங்கள்





                 கனிந்துவந்த கார்த்திகை

    கனிந்துவந்த கார்த்திகையே! உன்னை
    கவிதைப் பெண்ணாள்
    கரங்குவித்து அழைக்கின்றாள்
    கன்னிகைக்கு உன்பெயரோ
    விண்மீனுக்கும் உன் பெயரோ
    வினோதப் பூவுக்கும் உன் பெயரோ
    விளக்கீட்டு மாதத்திற்கும் உன்பெயரோ
    விநாயகன் தம்பி சரவணனை
    விருப்புடன் வளர்த்தவர்கள் உன் பெயர்
    விளங்கி நிற்கும் பெண்களன்றோ

    விரைந்து வந்த கார்த்திகையே!
    விருட்சங்கள் காட்டிடும் வர்ணஜாலங்கள்
    எமக்கு உணர்த்திடும் பனிக்கால வாழ்வதனை
    விருப்புடன் அணிவோம் வெப்பஆடை
    விரைந்து ஏற்றுவோம் வெப்பமூட்டி - உன்
    வருகையின் அச்சமாய் வழிவிடுவோம்

    மரத்துக்கும் உனக்குமென்ன மனஸ்தாபமோ நங்காய் - உன்
    வரவுகண்டு தம் ஆடைகளைக் கழைந்துவிட்டுப்
    போர்வையற்றுக் குளிர் காய்கிறதே
    மார்கழிப் பெண்ணை எட்டிப்பிடிக்க
    மாதங்களுக்குத் தூதாய் வந்தவள் நீயோ
    தன்னைப் போர்க்க விலங்கின் போர்வையை
    உரித்துப் போர்த்தி உடலை மூடி மனிதன்
    உல்லாசமாய் வலம்வர வித்திடும் மாதம் நீயன்றோ
    உன்னில் தொட்டுப் பங்குனி வரையும் - குளிர்
    உத்தரதாண்டம் ஆடிநிற்க
    கனிந்து நீயும் வந்தாயோ
    கவிதைப் பெண்ணாள் வரவேற்க


    திங்கள், 12 நவம்பர், 2012

    அறுபடும் வேர்களும் அந்நியமாகும் உறவுகளும்



    அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்
    எனது குரலில் கேட்க அம்புக்குறியை அழுத்துங்கள்


    வெள்ளாமை விதைக்கையிலே
    வாய்க்கால் வரப்போரம் 
    வார்த்தைகளைப் பரிமாறி நாம் 
    வாழ்ந்திருந்த காலமெல்லாம்
    மலையேறிப் போச்சோ மச்சான்

    மட்டக்களப்பு வாவியிலே 
    வடிவான இறால் பிடிச்சு
    மீன்பாடும் பாட்டினிலே 
    மெய்மறந்து நாமிருந்து
    கடலோரம் கருவாடு 
    காயவைக்கும் பொண்டுகள
    கண்டு நாம் பதுங்கியதும் 
    போடியாரு புள்ள என்று
    பொண்டுகள் சேர்ந்திருந்து 
    புறுபுறுத்துப் பார்த்ததுவும் 
    குறுக்கால போன கடற்படையைக் 
    கண்டு நாம் பதறியதும் 
    கலங்கிவந்து மறுகா நாம் 
    படகுக்குள்ள பதுங்கியதும் 
    மறந்திடுச்சோ மச்சான்

    திராய்க் கீரை சாமத்தில் புடிங்கிவந்து
    சுண்டலிலே மீன் போட்டுச் சுண்டியதும்
    புடிச்சுவந்த இறால் போட்டுப் 
    புளிஆணம் பண்ணியதும்
    விறாந்தையிலே நாமிருந்து 
    உண்டசுகம் அத்தனையும்
    உதவாமப் போனதுவோ மச்சான்

    ஒண்ணா, ஒண்ணா என்று நீ ஓடியதும்
    பொன்னான உன் ஊரு விட்டு போக பதறியதும் 
    கொள்ளிக்கட்டை அடி வாங்கி குதித்து நீ
    மதிலுக்குப் பிறகால கிறுகிப் பாய்ந்ததுவும்
    பின்னால வந்த அப்பூச்சி பிடித்துன்ன அனுப்பியதும்
    புரியாமப் போச்சோ மச்சான்

    தாய்நாட்டுச் சொந்தமெல்லாம் 
    தகுதி இழந்ததுவோ
    சேர்ந்துநின்ற எங்களுக்கு 
    செவ்வாய் பகைச்சிடுச்சோ 
    நாவூறு கண்ணூறு 
    நல்லாப் பட்டிடுச்சோ
    வெளிநாட்டுச் சோறெல்லாம் 
    மருந்துபோட்டுச் சமைச்சதுவோ
    உறவுகளைப் பிரிச்செடுக்க 
    உதவியா இருந்திடுச்சோ
    ஒரு மரமாய் வாழ்ந்திருந்தோம் 
    உறவுகளை வளர்த்திருந்தோம்
    ஆணிவேர் அறுந்ததுவோ 
    அந்நியமாய்ப்போனதுவோ
    வருகின்ற தீபாவளி 
    வருவாய் நீயென்று 
    வழிவழியாப் பாத்திருக்கன் 
    வருகின்ற சேதியொன்று
    வசந்தமாய் வாராதோ! 
    வந்தென்னைப் பாராயோ! 


    மறுகா - பிறகு
    குறுக்கால - இடையில்
    போடியார் – வயல் சொந்தக்காரர்
    விறாந்தை – திண்ணை
    வெள்ளாமை – வயல்
    சாமம்      - நடுஇரவு
    கண்ணூறு, நாவூறு,
    கொள்ளிக்கட்டை - விறகு
    ஆணம்         - ஒருவகை பால்க்கறி
    கிறுகி         -  திரும்பி
    ஒண்ணா        - முடியாது
    பொண்டுகள்   - பெண்கள்

    புதன், 7 நவம்பர், 2012

    திருமணம்



                     

    உலகத்தோற்றங்களில் உன்னதமான தோற்றம் மனிதத் தோற்றம். இதன் மூலமே குடும்பம், குழந்தைகள், நாடு, அபிவிருத்தி, கண்டுபிடிப்புக்கள், உலகமாற்றங்கள் போன்ற அனைத்துப் பரிமாணங்களும் உருவாகின்றன. ஆணும் பெண்ணும் மனதாலும் உடலாலும் ஒன்றுபட்ட வாழ்க்கையை வாழ்வதன் மூலம் சிறப்பான குடும்பம் உருவாகின்றது. இக்குடும்பம் ஓர் ஒழுங்குபடுத்தப்பட்ட சமுதாயத்தின் மூலம் உருவாக வேண்டியதன் அவசியம் கருதியே திருமணநடைமுறை உலகில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. 

                     ஆதிகால மனிதனின் உறவுமுறையின் ஆரம்பமே இத்திருமணம்தான்.  மனிதர் கூட்டத்திலிருந்து மனிதக் குடும்பம் உருவாகவும் உடலுறவில் ஒழுங்குநிலை தோன்றவும் திருமணநடைமுறை தேவைப்பட்டது.  முதலில் ஆளும் வர்க்கத்தின் தலைமுறைச் சொத்தை அநுபவிக்க அரசர் திருமணத்தை உருவாக்கினர். 

                      மனிதஇனம் விலங்கினமாய் வாழ்ந்த காலத்தில் உறவு முறையற்ற  உடலுறவு மேற்கொண்டனர். சமூகம் என்னும் ஒரு அமைப்பு உருக்கொள்ளாத காலத்தில் யாரோடும் சேரலாம் என்றிருந்தது. சமூகமெனும் அமைப்பு உருப்பெற்ற காலத்தில் ஒரு சிலர் ஒரு சிலரோடு சேர்ந்து வாழும் போக்கு உருவாகிப் பின் விரும்பியவர் விரும்பியவரோடு சேர்ந்து வாழ்ந்தனர். இச்சேர்க்கை வாழ்க்கை ஓர் சமூகஅமைப்பாக உருவாகும் வரை திருமணம் என்ற நடைமுறை வழக்கில் இருந்ததில்லை.  விலங்குகளாய் மனிதன் எந்தவித உடைமைகளுமற்று உணவைத்தேடி அலைந்த காலத்தில் திருமணம் தேவைப்படவில்லை.  பின் ஆண்கள் கால்நடைகளை உடைமைகளாக்கப் பெண்கள் நிலங்களை உடைமைகளாக்கினர். நிலங்களில் பயிர் செய்வதற்கு ஆள்களின் துணை தேவைப்பட்டது. ஆள்களைப் பெருக்கவும் நிலங்களைப் பாதுகாக்கவும் பெண்களுக்கு ஆண்களின் துணை நிரந்தரத் தேவையாகப்பட்டது. இதனால் திருமணம் அவசியமாக்கபட்டது.  நிலங்கள், கால்நடைகள் உடைமைகள் ஆகியது போல் ஆள்களும் உடைமைகளாக ஒவ்வொருவரும் தங்கள் குழந்தைகளை(குழந்தைச்செல்வம்) உடைமைகளாக்கினர்.  இதற்குத் திருமணம் அவசியமாகியது. 

                     விலங்குகளுடன் இணைந்து பகுத்தறிவில்லாது வாழ்ந்த மனிதன் ஆதிகாலத்தில் அவற்றைப் போலவே உறவு கொண்டான். சகோதரன் சகோதரி, தாயும் மகனும், தந்தையும் மகளும் உறவு கொண்டனர். கணவன் இறந்தபின் மூத்தமகனைத் திருமணம் செய்துகொண்டநிலையையும் அறியக்கூடியதாக இருக்கின்றது. (J.G.Frager, Totemism&Progancy-1970 Vol.  IVP .28).

                  இவ்வாறு வரன்முறையற்ற காட்டுமிராண்டி நிலையிலிருந்து குழுமணமுறை உருவாகிற்று. ஒரு குழு ஆடவர் ஒரு குழு பெண்கூட்டத்தை மணந்து கொண்டு வாழ்ந்தனர். இக்குழுமணமுறையிலிருந்தே பல கணவன் முறை உருவாகியிருக்கலாம். பாண்டவர் ஐவரை மணந்து வாழ்ந்த திரௌபதி பற்றிய கதை ஒரு காலத்தில் இந்தியாவிலும் இப்பல கணவன்முறை இருந்திருக்கலாம் என்பதை எடுத்துக்காட்டுகின்றது. 
                 


     இக்குழுமணத்தின் பின்னேயே ஒருவன் ஒருத்திமுறை உருவானது. விரும்பிய ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழவும் குடும்பம் நடத்தவும் எந்தவித தடையும் பண்டைய காலத்தில் இருந்ததில்லை.  இதனையே களவுமணம் என்றனர். விரும்பிய ஒரு பெண் விரும்பிய ஒரு ஆடவனுடன் ஊரைவிட்டு வெளியேறிக் கூடிவாழ்ந்தமையையே உடன்போக்கு என்றனர். அக்காலத்தில் இத்தகைய மணமுறைகளில் எந்தவித தடையும் இருந்ததில்லை. இது பற்றிச் சங்ககால அகப்பாடல்களில் அறியக்கூடியதாக இருக்கின்றது. இதில் ஏற்பட்ட சிற்சில தவறுகளினால், திருமணச் சடங்குமுறை தோன்றியது. இதனையே தொல்காப்பியர் தன் கற்பியல் என்னும் பகுதியில் 
                 'பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் 
                  ஐயர் யாத்தனர் கரணம் என்ப'' 
                                                                        என்று கூறியிருக்கின்றார். அன்றைய திருமணங்களில் ஐயர் இல்லை, மந்திரங்கள் இல்லை, தீவலம் இல்லை. ஆரியர் தமிழ்நாட்டினுள் புகுந்தபின்பே இம்முறைகள் எல்லாம் கையாளப்பட்டது. அக்காலத் திருமணங்கள் பற்றி இரு அகநானுற்றுப் பாக்களில் எடுத்தாளப்பட்டிருக்கின்றது. அறவாணன் தன்னுடைய தமிழர்மேல் நடந்த பண்பாட்டுப் படையெடுப்பு என்னும் நூலில் விரிவாக விளக்கியுள்ளார்.

    திருமணத்திற்கு நல்ல நாள் தெரிவுசெய்யப்பட்டது.
    வளர்பிறை நாட்களில் திங்களும் ரோகினியும் ஒன்றாக சேர்ந்திருக்கும் நாள் நல்லநாளாகக் கருதப்பட்டது.
    திருமணங்கள் விடியற்காலையில் நடத்தப்பட்டது. 
    மணநாளுக்கு முந்தியநாள் முற்றத்தில் வெண்மணல் பரப்பப்பட்டது. பந்தல், தோரணங்கள் கட்டப்பட்டன.
    முரசுகள் முழங்கின, விளக்குகள் ஏற்றப்பட்டது.
    கடவுளைப் போற்றி வழிபட்டனர்
    மணமகளை அலங்கரித்து பந்தலுக்கு அழைத்து வந்தனர்.
    மங்களகரமான பிள்ளைகளைப் பெற்ற பெண்கள் பூவும், நெல்லும் நிறைந்த நீர்க்குடங்களைச் சுமந்து வந்தனர்.
    குழந்தைகளைப் பெற்ற வாழ்வரசிகள் இக்குடங்களிலுள்ள நீரை மணமகளின் மேல் ஊற்றுவர். அப்போது கணவனுக்கேற்ற மனைவியாக வாழ்வாயாக என பெற்றோரும் மற்றோரும் வாழ்த்துவர்.
    மணமகனிடம் மணமகளை ஒப்படைத்து வாழ்த்தொலி எழுப்புவர்.
    அன்றிரவே மணமகளும் மணமகனும் தனியறையில் கூடிமகிழ விடப்படுவர்.
    மணநாளன்று விருந்தினர்அனைவருக்கும் விருந்து வழங்கப்பட்டது.
    இடையர்களின் திருமணத்தில் செம்மறியாட்டின் பாலை உறை ஊற்றி எடுத்த தயிர், வரகரிசிச்சோறு, பொரித்த ஈரல் ஆகியவை விருந்துணவாக வழங்கப்பட்டது. 

            பின் ஆரியர் வரவின் பின் மாமுது பார்ப்பான் மறைவழிகாட்டிடத் தீவலம் வந்ததுடன் அருந்ததி காட்டல் என்ற வட இந்திய மரபும் சேர்ந்தது. பண்டைக்காலத்தில் தலிகட்டும் சடங்கு இருந்தில்லை. ஆண்பெண்ணுக்குத் தாலிகட்டும் முறை பிற்காலத்திலேயே பேசப்படுகின்றது. கந்தபுராணம் என்னும் நூலில் முருகன் தெய்வயானையின் கழுத்தில் தாலி கட்டியதாக கூறப்படுகின்றது. அதுவும் தெய்வயானை ஆரியப்பெண்ணாகக் காணப்பட்டார். இப்பழக்கத்தைத் தமிழர்கள் ஆரியச்சார்பு பெற்ற மலையாளநாயர்களிடமிருந்து பெற்றிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
              
            இவ்வாறு நாம் திருமணநடைமுறைகள் மாற்றம் பெற்று வந்திருந்தமையை  அறிந்து கொள்ளுகின்றோம். தற்காலத்தில் தமிழர் உலகமெங்கும் புலம்பெயர்ந்து வாழுகின்ற சூழ்நிலையில் அவர்கள் பழக்கவழக்கங்கள்  திருமணவாழ்க்கை முறைகள் போன்றவை அவரவர் வாழுகின்ற நாடுகளின் சூழலுக்கேற்ப மாறுபாடுபடுவதை அறியக்கூடியதாக உள்ளது. 
                   
                       

    வெள்ளி, 2 நவம்பர், 2012

    தலையீட்டைத் தவிர்க்க (அங்கம் 5)



    பொறுமை இழந்த ராமுக்கு எது செய்வதென்று அறியாத குழப்பத்தைக் காட்ட அவனது மூளையானது மேல்மாடியிலிருந்த தன் அறைக்கு விரைவாக அவனை இழுத்தெடுத்தது. பெற்றோர் இருவரையும் விலத்திவிட்டு விரைவாக மேல்மாடியிலிருக்கும் தன் அறைக்கு ஓடினான். எதுவுமே பேசாது மௌனமாய் அடங்கிய தாய் மெதுவாக வேலைக்குப் போவதற்காக கதவைத்திறந்தாள். தந்தையும் 'கோவம் மட்டும் துரைக்கு இப்போது மூக்கு நுனியிலே வந்திடும். மேலே போகிறாய் உன் அறை அலங்கோலமாக இருக்கிறது. அதை முதலில் அடுக்கி வை. எல்லாம் அம்மாதான் செய்ய வேண்டும் என்றில்லை|| என்று ஆத்திரத்துடன் கூறியவராய் மனைவியுடன் வெளியேறினார். 

                வேலைத்தளத்திலே எந்த விடயத்தில் கைவைத்தாலும் எதிலுமே மனம் நிலைநிறுத்த முடியாத சஞ்சலத்தை தேவி மனம் உணர்ந்தது. பிள்ளையின் போக்குக்கு  விட்டிருக்கலாமே. இளந்தலைமுறை தாம் விரும்பியதைத்தானே செய்யும். எமது காலந்தான் கடந்துவிட்டது. எல்லாம் அநுபவித்துத்தானே இங்கு வந்தோம். மற்றவர்களிடம் நான் சொன்ன வார்த்தைகளுக்காக பிள்ளையின் ஆசையை மறுப்பதா? என்ன தான் பெரிதாய் மறுத்துவிட்டான். நான் அடம்பிடிப்பதற்கு. சீச்சீ .... என்ன மனம் எனக்கு. நான்  பிள்ளைக்கு அடிவாங்கிக் கொடுத்துவிட்டேனே. பெற்ற மனம் பேதலித்தது. வேலையில் இருப்புக் கொள்ளவில்லை. மேற்பார்வையாளாரிடம் உடம்புக்கு முடியவில்லை டாக்டரிடம் போக வேண்டும் என்று சாட்டுச் சொல்லிவிட்டு வீடு நோக்கிச் சென்றாள் தேவி.

              இருந்தாலும் நாளை வேலைக்குப் போகும்போது வைத்தியரின் துண்டு கொண்டு போனால்த்தானே அதிகாரி மீண்டும் வேலைக்குத் தேவியை ஏற்றுக் கொள்வார். அதனால் டாக்டரிடம் சென்றாள். வழமைபோல் டாக்டர் வரவேற்பறை நாற்காலி அவளைத் தாங்கியது. சிலவேளை டாக்டரிடம் காட்டுவதற்கு அப்பொய்ன்ட்மெனட் இல்லையென்றால் அநுமதி கிடைக்காது. இன்று என்னவோ அவளுக்கு அநுமதி கிடைத்துவிட்டது. நேரம் செல்லச்செல்ல அவளுக்குச் சலிப்பேற்பட்டது.  இது அப்பொய்ன்ட்மென்ட் இல்லாது வருபவர்களுக்கு எப்போதும் வரும் சலிப்புத்தான். ஆனால்> ஒருபடியாக மருத்துவரிடம் வலிந்து தனக்கு வராத ஒரு நோயை வரவழைத்துப் பொய்யான நோய்க்கு மருந்துவரிடம் மருந்துச் சீட்டையும்  விடுமுறைக்கான சீட்டையும் பெற்றுக் கொண்டு வீடுதிரும்பினாள். வீட்டு வாசலில் சுதன் கார் நிறுத்தப்படுவதைக் கண்ட தேவி இவர் என்ன இன்று நேரத்துடன் வந்துவிட்டார் என்று நினைத்தபடி அவரருகே சென்றாள்.

               'என்ன ஆச்சரியமா இருக்கு. நேரத்தோடு வந்திட்டீங்க||. 

            'மனசு சரியில்லை தேவி மனம் நல்லா இருந்தால்த்தானே வேலை செய்ய முடியும். நான் ராமுக்குத் தேவையில்லாமல் கை நீட்டியிருக்கக் கூடாது. அவனும் தோளுக்கு மேலே வளர்ந்திட்டான்|| 

    என்றபடி கதவைத் திறந்தான். உடலென்னவோ இருவருக்கும் வாசலில் நின்றது மனமென்னவோ வீட்டினுள் இருந்தது. உடையும் கழட்டாது மகனைச் சமாதனப்படுத்துவதற்காக உடனடியாக ராம் அறையை நோக்கிச் செல்வதற்காக வரவேற்பறையினுள் இருந்த படிகளில் ஏறினான். குனிந்து படிகளில் பாதங்களை வைத்தவன் நிமிர்ந்து அடுத்த படிகளில் கால்வைப்பதற்காக மேல்நோக்கினான். அதிர்ந்துவிட்டான். படிகளில் தொங்கிய ராமுடைய பாதங்களைக் கண்டு துடித்துப் போனான். தேவி..... என்று அலறியபடி மேல் நோக்கிப் பார்த்தான்.  படிக்கட்டுகளில் தாயின் சீலையால் தூக்கிட்டுத் தொங்கிய ராமின் உயிர் பிரிந்த உடல் கண்டான். ஸ்தம்பிதமானான். தாங்கமுடியாது அவதிப்பட்டான். கயிற்றை அறுப்பதற்காகக் 'கத்தியை எடுத்துவா தேவி.....|| என்று பலமாகக் கத்தினான். விசயம் எதுவென்று அறியாது சமையல் அறையினுள் ஓடிச்சென்று கத்தியை எடுத்துக் கொண்டு வேகமாய் ஓடிவந்த தேவி மகனைப் பார்த்தாள். ஐயோ.... என்று அலறியவளாய் கையில் கத்தி இருப்பதையும் உணராதவளாய் கையால் தலையில் ஓங்கிஓங்கி அடுத்தபடி உலகமே அதிரும்படிக் கத்தினாள். அடிக்க அடிக்க கத்தி தலையைப் பதம்பார்த்தது. அப்படியே இரத்த ஓட்டத்தின் நடுவே தரையில் சாய்ந்தாள். மகனைப் பார்ப்பதா> மனைவியைப் பார்ப்பதா? சுதன் நடைப்பிணமானான். அழுது கொண்டு தரையில் சட்டென்று அமர்ந்தான். கைகள் இரண்டையும் கோர்த்துக் மேலுச்சியை அழுத்தியபடி அப்படியே படிக்கட்டுக்களில் அமர்ந்து கொண்டான். விரிந்த கண்களினுள் தொங்குகின்ற தன் மகனின் கால்களை நோக்கினான். யாரை அணைப்பது அழுவது எதுவுமே புரியாது. அம்புலனஸ்க்கு அழைப்பைக் கொடுத்தான். மருத்துவமனையில் உணர்வற்ற தேவி உடலும் உயிரற்ற ராம் உடலும் உணர்விருந்தும்  உயிரிருந்தும் சலனமற்ற மௌனமான சுதனும் ........

                அடுத்தவர் வாழ்வில் தலையீடு 
                கெடுத்திடும் வாழ்வை உணர்வீர்கள்
                மடியது சுமந்த மகவானாலும் - அவர்
                மனமது வேறு அறிவீர்கள்
                அவரவர் ஆசைகள் ஆயிரம் - அதில்
                பிறரது நுழைதல் பிழையாகும்
                கணமது கொள்ளும் ஆத்திரம் - வாழ்வை
                கடிதென முடித்திடும் நிச்சயம்.

                                

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...