அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்
எனது குரலில் கேட்க அம்புக்குறியை அழுத்துங்கள்
வெள்ளாமை விதைக்கையிலே
வாய்க்கால் வரப்போரம்
வார்த்தைகளைப் பரிமாறி நாம்
வாழ்ந்திருந்த காலமெல்லாம்
மலையேறிப் போச்சோ மச்சான்
மட்டக்களப்பு வாவியிலே
வடிவான இறால் பிடிச்சு
மீன்பாடும் பாட்டினிலே
மெய்மறந்து நாமிருந்து
கடலோரம் கருவாடு
காயவைக்கும் பொண்டுகள
கண்டு நாம் பதுங்கியதும்
போடியாரு புள்ள என்று
பொண்டுகள் சேர்ந்திருந்து
புறுபுறுத்துப் பார்த்ததுவும்
குறுக்கால போன கடற்படையைக்
கண்டு நாம் பதறியதும்
கலங்கிவந்து மறுகா நாம்
படகுக்குள்ள பதுங்கியதும்
மறந்திடுச்சோ மச்சான்
திராய்க் கீரை சாமத்தில் புடிங்கிவந்து
சுண்டலிலே மீன் போட்டுச் சுண்டியதும்
புடிச்சுவந்த இறால் போட்டுப்
புளிஆணம் பண்ணியதும்
விறாந்தையிலே நாமிருந்து
உண்டசுகம் அத்தனையும்
உதவாமப் போனதுவோ மச்சான்
ஒண்ணா, ஒண்ணா என்று நீ ஓடியதும்
பொன்னான உன் ஊரு விட்டு போக பதறியதும்
கொள்ளிக்கட்டை அடி வாங்கி குதித்து நீ
மதிலுக்குப் பிறகால கிறுகிப் பாய்ந்ததுவும்
பின்னால வந்த அப்பூச்சி பிடித்துன்ன அனுப்பியதும்
புரியாமப் போச்சோ மச்சான்
தாய்நாட்டுச் சொந்தமெல்லாம்
தகுதி இழந்ததுவோ
சேர்ந்துநின்ற எங்களுக்கு
செவ்வாய் பகைச்சிடுச்சோ
நாவூறு கண்ணூறு
நல்லாப் பட்டிடுச்சோ
வெளிநாட்டுச் சோறெல்லாம்
மருந்துபோட்டுச் சமைச்சதுவோ
உறவுகளைப் பிரிச்செடுக்க
உதவியா இருந்திடுச்சோ
ஒரு மரமாய் வாழ்ந்திருந்தோம்
உறவுகளை வளர்த்திருந்தோம்
ஆணிவேர் அறுந்ததுவோ
அந்நியமாய்ப்போனதுவோ
வருகின்ற தீபாவளி
வருவாய் நீயென்று
வழிவழியாப் பாத்திருக்கன்
வருகின்ற சேதியொன்று
வசந்தமாய் வாராதோ!
வந்தென்னைப் பாராயோ!
மறுகா - பிறகு
குறுக்கால - இடையில்
போடியார் – வயல் சொந்தக்காரர்
விறாந்தை – திண்ணை
வெள்ளாமை – வயல்
சாமம் - நடுஇரவு
கண்ணூறு, நாவூறு,
கொள்ளிக்கட்டை - விறகு
ஆணம் - ஒருவகை பால்க்கறி
கிறுகி - திரும்பி
ஒண்ணா - முடியாது
பொண்டுகள் - பெண்கள்
நாட்டுப்புற கவிதை சொக்க வைக்குது !
பதிலளிநீக்குதீபாவளி வாழ்த்துக்கள் !
நல்லதொரு பதிவும் பகிர்வும். பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குபுரியாத வார்த்தைகளாக ஒரு 12 ஐத் தேர்ந்தெடுத்து, கடைசியில் அவற்றிற்கு பொருள் கூறியுள்ளது மிகச்சிறப்பு.
இனியாவது வேர்கள் அறுபடாமலும், உறவுகள் அந்நியப்படாமலும் இருக்கட்டும். அதற்கான முயற்சிகளில் அனைவரும் ஈடுபடட்டும்.
தங்களுக்கு என் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள், மேடம்.
வரிகள் மிகவும் அருமை...
பதிலளிநீக்குமுடிவில் விளக்கத்திற்கு நன்றி...
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...
பிராந்திய மொழிவளத்தில் தாயக நினைவுகளை மீட்டெடுக்கும் இனியதொரு கிராமியப்பாடல்
பதிலளிநீக்குஇனிய தீபாவளி வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஎன் இதயம் நிறைந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்...
பதிலளிநீக்குஅழகான நாட்டுப்புற பாடல் சகோதரி..
பதிலளிநீக்குமனம் லயித்துப் படித்தேன்...
ஆனாலும் மனதிற்குள் ஒரு மென் சோகத்துடன்
இழந்த எண்ணங்கள் மீண்டும் துளிர்க்கட்டும்
அதற்கான காலம் கனியட்டும் விரைவில்...
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
என் மனம் கனிந்த இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்..
மனம் கனிந்த தீப ஒளி நல்வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஇந்த நன்னாளில் தங்கள் இல்லத்தில் தீபங்களின் ஒளிபோல்
மகிழ்ச்சி நிலவட்டும்.
சரவெடிபோல் இன்பம் பல்கிப் பெறுகட்டும்.
மத்தாப்புபோல் குதூகலம் வீடு முழுவதும் நிறையட்டும்.-- அன்புடன் பத்மாசூரி
மனம் கனிந்த தீப ஒளி நல்வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குVetha.Elangathilakam.
மனம் கனிந்த தீப ஒளி நல்வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குVetha.Elangathilakam
சொல்ல வந்த கருத்து கவிஞர் குரலில் கேட்டிட அதன் உணர்வுகள் உள்ளத்தை ஆட்டுவிக்குது
பதிலளிநீக்கு