ரோஜா, நந்தியாவட்டை, செவ்வந்தி, ஓக்கிட்ஸ், அந்தூரியம் என்னும் வகைவகையான மலர்கள் நிறைந்த வீட்டுப் பூங்காவின் நடுவே காலைச்சூரியன் கரங்கள் மண்ணில் முத்தமிடும் பொழுது மஞ்சள் முகத்தின் நடுவே மங்கலக்குங்குமப் பொட்டிட்டு பின் தூங்கி முன் எழும் மலராய் திருமதி பரமேஸ்வரி என்னும் மலர், காலைவேளை கண்முழிப்பது நந்தவனத்தினுள். கரங்களால் அம்மலர்களை ஒரு தடவை ஸ்பரிசம் செய்தபின்புதான் தன் கடமைகளை மேற்கொள்வார்.
சித்திராபௌர்ணமி என்னும் இன்றைய நாளிலே என்னை உலகுக்களித்த தெய்வத்தை வரிகளால் வந்தனை செய்ய ஆவல் கொண்டேன். இயற்கை எழில் கொஞ்சும் இலங்கை மண்ணின் கிழக்குப் பகுதியின் ஏர்ஊரில் முத்திரை பதித்த வேலுப்பிள்ளை பரமேஸ்வரி காதல் தம்பதியினர், இல்லறம் இனிதே நடைபெறுவதற்கு உறுதுணை புரிந்தது, இல்லாளின் நல்லறமே. ஏறுபோல் பீடு நடை கணவன் கொள்ள மனையாள் மாட்சியே காரணம். வீடுவசதியற்;றியிருந்த மக்களை, இலங்கையில் வடமுனை, புனாணை போன்ற நகரங்களில் குடியேற்றம் செய்து குடியமர்த்தவும், தாம் வாழும் ஊர்மக்கள் கல்வி வசதி வேண்டி கல்விக்கூடம் அமைக்கவும், ஆலயங்கள் சிறந்த முறையில் நடைபெறவும், வேலையின்றி வாடும் மக்களுக்கு வேலைவசதி செய்து கொடுக்கவும் என வாழும் ஊர்மக்கள் வசதிக்காய் தன்னை அர்ப்பணித்த என் தந்தை, வீடு வரும் போதெல்லாம் இன்முகத்துடன் வரவேற்று வலக்கரமாய் வாழ்ந்திறந்த அந்தக் குலவிளக்கை இலக்கியப்பரப்பில் குறிப்பிடாது செல்ல என் மனம் இடம் தரவில்லை. முத்தான செல்வங்களை உலகுக்கீன்று, முறையாய் வளர்த்துத் தன் கடமையனைத்தும் முடித்துக் கடன் தீர்க்க வழிவிடாது கடைத்தேறிய எனது தாய், ஆங்கிலத்தில் குழந்தையை அழைக்கும் அற்புதமான சொல்லால் இறக்கும் வரை ஆயிரம் தடவை என்னை அழைக்கும் ஒலி என் செவிகளில் இன்றும் கேட்கும். அற்புதமாய் சமைத்தாலும் அழகான உணவகத்தில் உண்டாலும் அவர் சமையல் கைப்பக்குவம் எனக்கும் வரவில்லை நான் எங்குமே கண்டதும் இல்லை. அச்சுவையைப் பெறுவதற்கு நாளும்தான் ஏங்குகிறேன் என்றுமே திரும்பக் கிடைக்காது என்று என் உள் மனம் அலுத்துச் சொல்கின்றது. இறுதி நொடியில் அவர் ஊட்டிய சோயாக்கறியின் அமுதச்சுவை எனக்கு எதிலுமே கிடைத்ததில்லை. அவர் அழகைக் காண்பதற்கு அனைவரிடமும் எத்தனிக்கின்றேன். ஆனால், அத்தனையும் பொய்மையாகிப் போகின்றன. அவர் ஆர்வமும் ஆற்றல்களும் எண்ணிலடங்காதவை. முடியாது என்பதை எள்ளளவும் புரியாத என் தாய், இயமனை வெல்ல முடியாது என்பதை இறுதியில்தான் புரிந்திருப்பார்.
என்னை விட்டு வெகுதூரம் சென்று 17 வருடங்கள் பறந்துவிட்டன. என் திருமணத்தின் 23 நாள்களின் பின் ஒரு நாள் சந்தோஷவானில் என் வீட்டார். அமோகமாக விழாவை அற்புதமாய் நடத்திவிட்ட ஆனந்தக் களைப்பில் இருந்தனர். அன்றே என் தாயும் 58 வயதிலேயே தன் கடமை முடிந்ததாய் கருதிவிட்டாரோ. நோயில் படுக்கவில்லை. நொந்து அழுததில்லை. வேதனைப்பட்டதில்லை. விடுதலையாவதை இம்மியளவும் தெரியப்படுத்தவில்லை. வழமை போல் ஒரு கைப்பிடி உணவை என் வாயினுள் திணித்த போது தொலைபேசிஅழைப்பு. என் கணவர் திரும்பவும் நாடு வந்தடைந்த செய்தியை அறிய தொலைபேசியை நான் நாடினேன். திடீரென மூளையினுள் ஒரு மெல்லிய இரத்த ஓட்டம். தெரிந்ததை தெரியப்படுத்தினார். சிறிது திக்கு முக்காடினார். வைத்தியரை வரவழைத்தோம். இரத்தஅழுத்தத்தின் அதிகரிப்பை அறியச்செய்து வைத்தியசாலை அனுப்பிவைத்தார். வாகனத்தினுள் வார்த்தைகள் அடங்கிவிட்டன. வைத்தியசாலையினுள் உயிரும் அடங்கிவிட்டது. அவர் இழப்பு வாழ்க்கையின் அர்த்தம் போதித்துவிட்டது.என் வாழ்வுக்கு நான் போட்டது, பிள்ளையார் சுழி. அவர் வாழ்வுக்கு அவர் போட்டது முற்றுப்புள்ளி. அவர் போட்ட அர்ச்சதையில் நான் வாழ்கின்றேன். ஆனால், அவர் விட்ட வெற்றிடத்தை நிரப்ப ஆளின்றி கலங்குகின்றேன். அமைதியான அம்மாவின் இழப்பு. ஈடுசெய்யவொண்ணா பேரிழப்பு. உறவுகள் வரலாம் போகலாம். பெற்றோர் என்னும் உறவு என்றுமே இமயத்தில் வைத்துப் போற்றப்படவேண்டிய உறவு.
அலைகளின் மெய்மையை அடித்து நிரூபிப்பவள் யான். அந்த அலைகளில் நம்பிக்கை கொண்டவளாய், வானிருந்து என்னை வாழவைக்கும் அவர் செவிகளுக்கு வாய் அலை மூலம் என் வரிகளை அர்ப்பணம் செய்கின்றேன். என் மனக்கடலுள் மூழ்கியிருந்து நித்தம் நித்தம் ஆறுதல் தந்துதவும் ஆற்றலின் அற்புதத்தை வியக்கின்றேன். என் செயல்களில் அவர் மரபணுக்களின் மகிமை கண்டு மகிழ்ச்சி கொள்கின்றேன். என் இரத்த ஓட்டம் நிற்கும்வரை தினமும் அவர் நினைவிலேயே வாழுவேன்.
உலகெங்கும் அன்னையர் மயம் - அதில்
உருவாகும் அன்பெனும் பாடம்
கருவாகி உருவான பின்னும்
கருவறை போல் காக்கும் பாசம்
கடமை முடித்து கடைத்தேறினால்
கலங்கி நிற்கும் கண்மணிகளில்
கலக்கம் தீர்க்க நிழற்படமாய்
கண்சிமிட்டி ஆறுதல் தரும்.
விதியென்றே விளக்கிவிட முடியாது - இறைவன்
சதியென்று சாடிவிட முடியவில்லை.
எதுவென்ற புரியாத நிலையில்
எதிலும் அவர் முகம்
பூக்களில் காண்கின்றேன்
ஆடைஅலங்காரங்களில் காண்கின்றேன்.
சுவையுள்ள உணவுகளில் காண்கின்றேன்.
சுகாதாரமான வீட்டில் காண்கின்றேன்.
அறிவுரையில் காண்கின்றேன்.
ஆராய்ச்சியில் காண்கின்றேன்.
எதிலுமே காண்பதனால்
என்னால் முடியவில்லை
என்னிலிருந்து அவரைமீட்க.