அன்னையர் தினம்
பிறக்கும் போது அழுகின்றோம். எம் தாயையும் அழ வைக்கின்றோம். வருகின்ற காலங்களில் என்னால் நீங்கள் அழப்போவதற்கு ஆயத்தமாகுங்கள் என்பது போல் வருகையின் வலி தாய்க்கு வந்துவிடும். ஒரு மனிதன் 45 அலகுகளே நோவைத் தாங்குவான். ஆனால் ஒரு தாய் பிரசவத்தின் போது 57 அலகுகள் நோவைத் தாங்குகின்றாள். 21 எலும்புகள் ஒன்றாக உடையும்போது ஏற்படும் வலி அப்போது ஏற்படுகின்றது. இவ் அளவுகளை முகநூலில் வசித்தறிந்தேன். வலியின் தாக்கத்தைத் தாயாய் உணர்ந்திருக்கின்றேன். வயிற்றினுள் இருக்கும் போது தன் வாய்க்குக் கட்டுப் போட்டாள். வளர்ந்து பெரியவனாகும்போது தன் வார்த்தைக்குக் கட்டுப்போட்டாள். வளருகின்ற போது தன் தாய்ப்பால் சுத்தமாக தன் ஆசைகளை அடக்கினாள். பூமிக்கு ஒப்பாக பொறுமைக்கு இலக்கணமாக வாழ்ந்து நல்மனிதர்களை உருவாக்க நாளும் பகலும் உழைக்கும் ஒரு தாய் தனது பிள்ளை கெட்டவனாக வரவேண்டும் என்று ஒருக்காலும் நினைக்க மாhட்டாள். அதேபோல் தன் பிள்ளை கால் கை இழந்திருந்தாலும் பேசமுடியாதவனாக இருந்தாலும் பார்க்க முடியாது இருந்தாலும் ஏன் வலது குறைந்து உருவமே மாறுபட்டு வாயிலிருந்து நீர் வடிய உலகத்தையே புரியாதவனாக இருந்தாலும் முகத்தைச் சுளிக்காது முழு அன்புடன் அவனைப் பராமரிக்க ஒரு தாயாலே மட்டுமே முடியும். வளர்ந்து தன் மகன் பெரியவனாக காட்சியளித்தாலும் அவன் தாய் கண்களுக்கு அவன் சிறுபிள்ளையாகவே காட்சியளிப்பான்.
அந்தத் தாய்மையைப் போற்றி ஒரு தினம், அதுவே அன்னையர் தினம் ஜேர்மனியில் இன்றையநாள் 13.05 கொண்டாடப்படுகின்றது. மலர்க் கொத்துகளை தம்முடைய தாயாருக்கு அன்பளிப்பாக வழங்கி தம்முடைய அன்பை வெளிக்காட்டி பரிசுப் பொருள்களை பிள்ளைகள் தாய்மாருக்குக் கொடுப்பதும் அவர்கள் விரும்பியபடி நடப்பதும் வழக்கமாக இருக்கின்றது. என்றுமே தமது பிள்ளைகளை மலர்களாகக் காணும் தாய்க்கு மலர்க்கொத்துக்களை வழங்குவது இயல்பே. அமெரிக்கா மேற்கு விர்ஜினிய மாநிலத்தைச் சேர்ந்த பெண்மணி Ann Maria Reevas Jaris அவர்களால் 1865 ல் இத்தினம் பற்றிய தீர்மானம் முன் வைக்கப்பட்டது. பின் அவர் மகள் Ann Marie Jarvis அவர்கள் 12.05. 1907 அன்று தனது தாய் இறந்து இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை தனது தாய் ஞாபகார்த்த தினத்தை மெதடிஸ் ஆலயத்தில் நடத்தினார். மற்றைய தாய்மார்களுக்கு முன்பாக தனது தாயை நினைத்து 500 கார்னேஷன் மலர்களை வைத்தார். இவரே அதிகாரபூர்வமான அன்னையர் தினத்தைக்கோரி தனது முழு நேரத்தையும் அர்ப்பணித்து அரசியல்வாதிகள், பாதிரிமார் தொழில் அதிபர்கள் மகளிர் சங்கங்கள் போன்றோர்க்கு கடிதங்கள் எழுதி அதிகாரபூர்வமான விடுமுறை தினத்தைக் கோரினார். இவ்வாறிருக்க இந்நிலைமை வேகமாக வளர்ந்து 1909 ல் அமெரிக்காவில் 45 மாநிலங்களில் அன்னையர் தினம் கெண்டாடப்பட்டது. 1914 ஆம் ஆண்டு மே மாதம் 8ம் திகதி அமெரிக்க ஜனாதிபதி உட்ரோவ் வில்சன் அவர்கள் அன்னையர் தினத்தை அறிவிக்கும் உத்தியோகபூர்வமான கூட்டறிக்கை ஒன்றில் கையெழுத்திட்டார். அதன்படி ஒவ்வொரு ஆண்டும் மேமாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்னையர்தினம் கொண்டாடுவது உறுதிசெய்யப்பட்டது.
இந்நாள் மனிதர்கள் ஒவ்வொருவரும் கொண்டாட வேண்டிய நன்னாள். கருவில் தாங்கிய தாயை காலமெல்லாம் காக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு. அவர் காலில் விழுந்து வணங்குதல் மூலம் நல்லாசிகளைப் பெறல் பிள்ளைகள் கடமையாகின்றது.
அனைத்து அன்னையர்க்கும் அன்னையர்தின வாழ்த்துகள்
கருவில் தங்கிய தாயை கொண்டாட விட்டாலும் கொடுமை படுத்தாமல் இருந்தால் சரி . நல்ல பதிவு நன்றிங்க .
பதிலளிநீக்குஅன்னையர் தினம் உருவான வரலாற்றை கூறி இருக்கிறீர்கள். நல்ல தகவல்.பயனுள்ள பதிவு.
பதிலளிநீக்கு