கண்ணுக்குள்ளும் கருத்துக்குள்ளும் அது புகுந்துவிட்டால், கள்ளமும் தவிப்பும்
துணிவும் எங்கிருந்துதான் வருகின்றது என்பது புரியாது. புரிகின்ற வயதுதான், தெளிவான மனதுதான், எங்கிருந்துதான் அது
பொங்குகின்றது. சூடேற்றும்போதுதான் பால் பொங்குகின்றது. சர்க்கரை சேர்க்கும்போதுதான்
தின்பண்டங்கள் இனிப்பாகின்றன. பிரச்சினைகள் வருகின்ற போதுதான் துன்பமும் வந்தடைகின்றது.
அதுபோல், ஒரு மனதுள் வேறு ஒரு
மனது இணைந்து புகுந்துவிட்டால் காதல் அணைகடந்து பொங்கும். இதை வயதுக்கோளாறு என்பதா? உடலுள் உற்பத்தியாகி
உலகையே உலுக்கும் ஹோமனின் தொழிற்பாடு என்பதா?
எதுவாக இருந்தாலும் இதுவே மிருதுளாவிற்கும் நித்திரையைத் தொலைத்தது. நினைவுகளை
ஒருமுகப்படுத்தியது. எதிலும் எவற்றிலும் அவன் நினைவே அவளை ஆட்டிப்படைத்தது. என்றோ ஒருநாள்
ஒரு நிகழ்வில் பவனைச் சந்தித்தாள். எத்தனையோ இளைஞர்கள் அந்நிகழ்வில் எதிர்ப்பட்டாலும், பவனே அவள் கண்களுக்கு
மன்மதனாய்த் தெரிந்தான். காந்தக்கண்கள் அவன் முகத்தையே கவர்ந்திழுத்துக் கொண்டன. நிகழ்வு
முடிந்தது. ஆனால், அவன் நினைவு தொடர்ந்தது. இளையவர்களின் சொல்லுக்கும்
செயலுக்கும் இடைவெளி இவ்விடயத்தில் மிக அதிகமே. பெற்றார் கட்டளைக்கு அடிபணியும் எண்ணமும்
ஷஷஉங்களை மீறி உங்களுக்குத் தெரியாது எந்த ஒரு பெடியனையும் நான் காதலிக்கப் போவதில்லை|| என்று உத்தரவு தந்த
சொல்லானது, செயலால் மாறுபடும். இவ்வாறுதான் மிருதுளா
நடவடிக்கையும் நாளும் பொழுதும் நிதானமாய் வளர்ந்தது.
“எப்படி பவனுடன் தொடர்பு கொள்வேன்.
என் சிந்தைக்குள் சிறைப்பட்டுவிட்ட அவன் மனதுக்குள் நான் எப்படிச் சிறைப்பட முடியும்.
எனது வீட்டிலோ கட்டுப்பாடு. யாருமே அறியாது, வேறு ஒரு பெயரில் நான் நுழைந்து விளையாடும், சிரித்துக் கும்மாளம்
இடும், உலகத்து நண்பர்கள்
அனைவருடனும் பக்கத்திலிருந்து பழகுவது போல் கைகுலுக்கும் முகப்புத்தகத்துக்குள் நுழைந்து
பக்கம் பக்கமாய்த் தேடலாமா! இல்லை என் பவனைத் தேடித்தரும்படி ரிவிட்டர் பறவையை சிறகடிக்க விடலாமா! இல்லை லிங்கடினுக்கூடாகத்
துருவித் துருவித் தேடலாமா! இல்லை ஸ்கைப் ஐடியை பெயர் கொடுத்துத் தேடலாமா! ஓகோ எம்.எஸ்.என்
மூலம் அறியலாமா! ஓகோ உலகமெல்லாம் சட் பண்ணும் வோட்ஸ்அப் மூலம் தொடர்பு கொள்ளலாமா! சா.....
எதுவுமே கைகொடுப்பதாக இல்லையே. ஒருவேளை அவனும் என்னைப் போல் தந்திரமாக வேறு ஒரு பெயரில்தான்
சமூகத்தளங்களினூடாக சல்லடை போடுகின்றானோ! இவ்வாறு மிருதுளா தன் எண்ணங்களால்
நாட்களை ஏக்கத்துடனும் வலியுடனும் நகர்த்தினாள்.
எங்கோ போகிறது இவ்வுலகு? உலகத்து மக்கள் அனைவரையும் ஒன்றிணைக்கவும், கலாசாரம் பண்பாடு
அனைத்தையும் ஒன்று கலக்கவும் முகந்தெரியாதவர்களுடன் எழுத்தின் மூலமும் பேச்சின் மூலமும்
தொடர்புகொள்ளவும் பலவிதமான இணையத் தொடர்புகள் தற்போது உலகப்பந்தில் உலாவருகின்றன. இதை
உதவிக்காய் எடுக்கும் மக்களில் இளையோர் பெரும்பங்கு வகிக்கின்றனர். தேவைகருதி தொழிற்படும்
இத்தளங்களினால் சமுதாய சீர்கேடுகள் கட்டுக்கடங்காது செல்வது தவிர்க்கமுடியாதுள்ளது.
சட்டென அவள் எண்ணத்தில் அவ்விழாவில் பவனுடன் சரளமாக சிரித்துச் சிரித்துப் பேசிய
தன் ஒரு நண்பியின் நினைவுகள் தட்டியது. உடனே அவள் விரல்களும் அந்நண்பியின் தொலைபேசி
நம்பரைத் தட்டியது.
“சத்யா... நான் மிருதுளா..”
“என்னடி! ரெலிபோனே எடுக்காத நீ. இன்றைக்கு என்னைத்
தேடி எடுக்கிறாய். என்ன நடந்தது அம்மையாருக்கு? எங்கே இருந்துடி என்ர நம்பரைச் சுட்டநீ” ஆச்சரியத்தில் அளவுகடந்த ஆர்வம் அவள் நண்பி சத்யாவிற்கு.
“இல்லை. சும்மாதான். உனக்கு பவனுடைய முகநூல் பெயர்
தெரியுமா?
“ஆஹா...... இது புதிசா இருக்கே? என்ன விசயம்? மனசுக்குள்ள தூண்டில்
போட்டாச்சோ? என்னவா இருந்தாலும் என்னட்டச் சொல்லிப்போடு மவளே. பிறகு உன்ர அம்மாட்ட நான் தப்ப
முடியாது. இருந்தாலும் மிருதுளாக்கு ஒன்டென்றால், என்ர இதயம் தாங்காதுப்பா....”
“சும்மா போடி. எதுக்கெடுத்தாலும் சந்தேகம்... ஏன்
பிரெண்டா பழகக் கூடாதா? சும்மா நோண்டிக் கொண்டு.... தெரிந்தா சொல்லு. இல்லாட்டி
விடு. அவரென்ன பெரிய மன்மதனா? கெஞ்சிக் கெஞ்சி பெயரை எடுக்க....”
“சரிசரி.... அலட்டாத..... நிஜம். இதுதான் அவன்ட பேஸ்புக்
பெயர். விசயம் முடிந்தது என்று கைவிட்டுறாத அம்மா..... எனக்கும் எழுது. அல்லது ரெலிபோன்
எடு...”
“இதென்னடி புதுசா இருக்கு. புதினமான பெயர் வச்சிருக்கான்...”
“இப்பிடித்தான் எல்லோரும். சொந்தப் பெயர் மறைத்து.
நல்லபிள்ளைகளுக்கு ஆடுதுகள். நான் அப்பிடியில்லப்பா. செய்றதை வெளிப்படையாச் செய்ய வேண்டும்.
எதுக்கு ஒளிவு மறைவு. இப்பிடியானவர்கள் தான் பிழைகளை தயங்காம செய்றாங்க. சிலருக்கு
2, 3 பேஸ்புக் பெயர்கள் இருக்கு. கவனம் மிருதுளா. பேஸ்புக்
பொல்லாத ஊடகம். பார்த்து நடந்துக்க. நான் சொல்லிப்போட்டன். மற்றது உன்ர இஸ்டம்....
நான் வைக்கிரன்டி”
தகவல் தந்த நண்பியைத் தாண்டிப் பாய்ந்தது மனம் சின்னத் தகவல்தான் ஆனால், சிந்தையை நிறைக்கும்
தகவல். யார் சொல்லித்தான் அறிவுரை கேட்கப் போகிறது மனம். அதற்குத்தான் நிலையான குணமே
இல்லையே. அது அடிக்கடி பாயும் குரங்குதானே. ஒன்றை நினைத்துவிட்டால், சுற்றிச்சுற்றி அதற்குள்ளேயே
நின்று சுழலும். அது மிருதுளாவுக்கு பவனைச் சுற்றிச் சுற்றியே சுழல்கிறது.
ஓடிப்போய் லப்டொப்பைத் திறந்தாள். பட்டனை அழுத்தினாள்.
“இதோ வந்திட்டன்....”|
என்று கூறிப் பணிவிடைக்குத் தயாரானது லப்டொப். முகப்புத்தகம்
பந்திவிரித்து முன்னே வந்து அமர்ந்தது. தன்னுடைய அழகான படத்துடன் விரிந்த பக்கத்துக்குள்
மிருதுளா நுழைந்தாள். விழுந்து கிடந்த பற்பல செய்திகள் அவள் சுவைப்பதற்காய் சிவப்பு
வெளிச்சம் காட்டி வரவேற்றது.
“இவை என்ன சுவை? என் சுவை பவனே... அச்சுவையன்றி எச்சுவையும் இன்றெனக்கு
தித்திக்கும் சுவையல்ல....”
என்ற வண்ணம் முகப்புத்தகத்தில் நிஜம் கொடுத்தாள்.
நிழற்படம் கண்முன்னே நிஜமானது. ஆகா......... ஆயிரம் மின்வார்ட் மின்சாரம் அவள் மனதுள்
பாய்ந்தது. படபடவென்று ஒரு மெசேஜ்
“என்னை நண்பியாக ஏற்றுக்கொள்வீர்களா?
அழகான பெண்ணென்றால், நிராகரிப்பார் யாருண்டு. குணமெல்லாம் இரண்டாம் பட்சம்தானே.
பழகியபின் தெரிவதுதான் குணம். பார்த்தவுடன் பதிவது முகமதின் பொலிவுதானே. மனதை வெளிக்காட்டும்
பண்பு முகத்தில் இருக்குமானால், இந்த அழகுக்கு அடிபணியும் பண்பு என்பது உலகில் இல்லாமலே
இருந்திருக்கும்.
பவனுக்கு மனதுக்குள் பெரிதான ஆர்வம் பதியவில்லையானாலும், அழகொன்று ஆர்வமாய்
அழைக்கிறது. பேசித்தான் பார்ப்போமே. சம்மதம் தெரிவித்தாயிற்று. தொடர்ந்தது மொழியூடு
உளப்பாங்கு வெளிப்பாடு. வளர்ந்தது காதலென்னும் உறுதிப்பாடு. உள்ளத்தை எப்படித்தான்
தொலைத்தாளோ! தன் மதத்தையே மறந்துவிட்டு வேறு மதத்தில் மயங்கிக்கிடக்கும் மனமுள்ளவன், தன் மனதுள் சேர்ந்திருப்பாளை
பிரித்தெறிய எவ்வளவு நேரமாகும் என்று மிருதுளா நினைத்துப் பார்க்கவில்லை.
வீட்டிலிருப்பார் காலை எழுந்திருக்க நேரமாகும் என்பதை அறிந்து கொண்ட மிருதுளா
விடிகாலை வேளை கண்முழுப்பாள். மெதுவாக பூனை பதுங்கிவருவதுபோல் வரவேற்பறையை நாடுவாள்.
பவனுடைய இலக்கங்களை மெல்லத்தட்டுவாள். எதிர்பார்த்திருந்த அவனோ ஒரு அழைப்பிலேயே முழித்துக்
கொள்வான். கள்ளத்தனம் மனதுள் புகுந்து கொண்டால், மனக்கட்டுப்பாடும் அடக்கமும் பயமும் இருப்பிடம்
இன்றி மறைந்துவிடும்.
“நித்திரையைத் தொலைத்துவிட்டேன். எப்போது விடியும்
என்று காத்திருப்பதனால், கண்ணில் உறக்க வாசனையே மறந்துவிட்டேன். என்னைப்பாடாய்ப்
படுத்தும் இந்நோய் மறைய என்னதான் செய்வேனோ தெரியாது பவன்....”
தித்திக்கும் அவள் பேச்சில் உலகத்தையே மறந்துவிடுவான்
பவன். எடுத்துரைக்கும் வார்த்தைகள் நாடிநரம்புகளை மீட்டிப்பார்த்தது. குரலோ இனிமை, வடிவழகோ சொர்க்கம்.
வார்த்தைகளோ மனத்தூண்டில். இத்தனையும் கசக்கிப்பிழிய எப்படியோ அவளைச் சந்திக்கவேண்டும்
என்று முடிவாய் முடிவெடுத்தான்.
“எவ்வளவு நாட்கள்தான் இப்படி அருகே அமர்ந்திருக்காது.
எங்கோ இருந்து நீ என்னைக் கொல்வது. சந்திக்கவேண்டும். சேர்ந்தே இருந்து கதைபேச வேண்டும்.
உன் மூச்சுக்காற்றின் சுவாசத்தை அருகே நான் உணர வேண்டும். எனக்கு நீ. உனக்கு நான் என்று
நாமாகவே நிச்சயித்துவிட்டோம். நாளும் பொழுதும் உனக்காகவே ஏங்கும் என் ஏக்கத்தை பேச்சு
ஒன்றும் வெளிப்படுத்திவிடாது அது வெறும் வார்த்தை ஊடகமே. நீ என் வாழ்வு, உயிர் மூச்சு. என்னைக்
கொல்லாதே. உன்னைக் காணவேண்டும். நேரடியாக ஓராயிரம் வார்த்தைகள் பேசவேண்டும். சந்திப்போம், அளவுகடந்து எனக்குள்
பாயும் ஆர்வநீரை வேறு பாதைக்குத் திசைதிருப்பிவிடாதே. பிளீஸ்........” பவனின் வார்த்தைகளில்
தன் உறுதிப்பாட்டை மிருதுளா துடைத்தெறிந்தாள்.
ஜேர்மனி Nordreihn
westfalen இல் பிரபல்யமான நகரம் டுசுல்டோப். அதன் புகையிரதத்
தளத்தில் பவனின் ஆசை நிறைவேற்றப்படும் நாள். பொதுவாகவே காதலர்கள் கைகுலுக்கும் புiயிரதநிலையம். இங்கு
உண்மைக்காதலும் உறவாடும். பொய்யான காதலும் புகலிடம் தேடும்.
இருவரும் இருவேறு ரயிலில் வந்து
ஒரு இடத்தில் சந்தித்தனர். கண்டவுடன் இருகரங்களும் குலுக்கும்போது மனதும் பரிமாறிக்
கொண்டது. சட்டென்று மிருதுளாவை இறுக்கமாய் பவன் கட்டிப்பிடித்தான். அது அவளுக்குப்
பயமாக இருந்தாலும், பிடித்துக் கொண்டது. இளமைப்பருவத்தின் இதமான சுகங்கள்
இணையும்போது ஒதுக்கிக் கொள்ள இதயம் இடம்தராது. சிலநிமிடங்கள் தம்மை மறந்து இமைகள் இறுகப்பற்றிக்கொள்ள
இருந்தவர்களை இரயலின் இரைச்சல் இடைநிறுத்தியது.
முறையான கட்டுப்பாடு கலாச்சார
உணர்வுகளுடன் வளர்க்கப்படும் இளையவர்கள் இவ்வாறான சந்தர்ப்பங்களில் தம்மைக் கட்டுப்படுத்திக்
கொள்வது வழமை. கலாசாரத்தை ஊட்டி வளர்ப்பதற்கும் மனதுக்குள் பதிய வைப்பதற்கும் வேறுபாடு
உண்டு. ஊட்டி வளர்த்த பிள்ளை இன்று மதிமயங்கி நிற்கின்றாள் என்றால், கவனம் எடுத்ததில்
தவறுண்டு என்றுதானே கருதவேண்டும். பெற்றோரோ பண்பை மதிப்பவர்கள். கலாசாரத்தில் கவனம்
எடுப்பவர்கள். பிள்ளை தடுமாறுகின்றது என்றால், அங்கு கலாசாரக் கட்டுப்பாடு விரும்பாதவகையில் ஊட்டப்பட்டுள்ளது
என்றுதானே அர்த்தம்.
கையிலே வைத்திருந்த கோலாப் போத்தலை
மிருதுளா கைகளுக்குள் பவன் திணித்தான். தானும் ஒரு கோலாவைப் பருகினான்.
ஷஷகுடி மிருதுளா.... நாங்கள் ஸ்ரட்டுக்குள் போவோமா.
அங்கே ஒரு இடம் இருக்கிறது. நாங்கள் ரெண்டு பேரும் தனியாகக் கதைத்துக் கொண்டிருக்கலாம்.
கோக் பருகியபடி இருவரும் கைகோர்த்தவண்ணம் நடந்தனர். நடை தொடர நிதானம் மெல்லமெல்ல மிருதுளா
கட்டுப்பாட்டை தாண்டி விடைபெற்றது. கோக் தந்த மயக்கம் பவன் தோள்களில் சாய்ந்தது. குடிபானத்துள்
கரைந்து தன் குணம் மாறிய கோலா மிருதுளா போக்கை தடம்மாறச் செய்தது.
ஏமாந்தவளைத் தன் வழிக்குக் கொண்டுவர பவனுக்கு நாளாகவில்லை. தமிழனென்னும் பெயரில்
தரங்கெட்ட வாழ்வைத் திறமான வாழ்வென்று வாழும் நற்குணங்கெட்ட கேடி பவன் என்று புரியாத
அப்பாவி மிருதுளா, கட்டிலில் சல்லடையானாள். தன் இச்சைக்கு மிச்சம்
வைக்காது அமைதியாய் நடந்தேற்றிய காமத்து களியாட்டம், காட்சிப்படமாக்க எடுத்த முயற்சியிலும் வெற்றி கண்டான்.
தன்னிலை மறந்து துவண்டுகிடந்த மிருதுளா விழித்துக் கொண்டாள்.
“என்ன நடந்தது பவன். உடம்பெல்லாம் ஒரே அலுப்பாக
இருக்கிறதே. எப்படி நான் இங்கே...... இது யாருடைய வீடு? என்ன நடந்தது....?
“மிருதுளா.... நீ மயங்கிப் போயிட்டாய். அதுதான்
உன்னை இங்கே கொண்டுவந்தேன். இது என்னுடைய பிரண்ட்டினுடைய வீடு. நீ எழும்பும்வரைதான்
பார்த்துக் கொண்டு இருக்கிறேன். வா போவோம்”
“என்ன கதைக்கிறீங்கள்?
மயங்கினால், ஹொஸ்பிட்டலுக்கெல்லோ
கொண்டு போகவேணும். இது என்ன யாரோ ஒருவருடைய வீட்டிலே கொண்டு படுக்க விட்டிருக்கின்றீர்கள்”
“ஹொஸ்பிட்டலுக்குப் போனால், உங்கட வீட்டில தெரிஞ்சிருமெல்லா
மிருதுளா... என்ன கதைக்கிறாய் நீ?
சட்டென்று எழுந்தாள். கால்கள் தடுமாறின. உடம்பெல்லாம் உலுக்கி எடுத்தது வலி.
பவனுடைய சேட்டை இறுகப்பிடித்தாள். அவனை ஒருதரம் முறைத்துப் பார்hத்தாள்.
“உண்மையைச் சொல் பவன். என்னை என்ன செய்தாய்? சொல் பவன் என்ன செய்தாய்?
“உன்னை நான் என்ன செய்வது? வா வீட்டிற்குப் போகலாம்....”
“இல்லை. உண்மையைச் சொல்... “
“என்ன உண்மை உனக்கு வேண்டும். வருவதாய் இருந்தால், வா! இல்லை எப்படியாவது
போ!
இறுக்கமாகப் பேசிய அவன் வார்த்தைகளால், கலங்கிப் போனாள் மிருதுளா. பெற்றோரை மதிக்காது தன்
காதல் பெரிதென்று நம்பி இரகசியமாய் வந்தது பிழையாகப் போய்விட்டதோ என்று மனதுக்குள்
பயம் பற்றிக் கொண்டது. ஆனால், தனக்கு ஏதோ நடந்துவிட்டது என்பது மட்டும் அவளுக்குப்
புரிந்தது. ஆனால், இனிப் புரிந்துதான் என்ன செய்ய முடியும். பெண்களுக்கு
தவறு நடந்துவிட்டால் அது கலங்கம். ஆண்களுக்கோ அது வெறும் சம்பவம்.
வீதிக்கு வந்தாள். தனியே நடந்தாள்.
இரயிலில் ஏறினாள். வீட்டின் வாசல் அழைப்புமணியை அழுத்தினாள். கண்கள் குளமாகத் தாய்,
“எங்கே மிருதுளா போன நீ. உன்ர ரெலிபோனுக்கு ரிங்
பண்ணி ரிங் பண்ணி அலுத்துப் போனன். என்ன நடந்ததோ ஏது நடந்ததோ என்று பயந்து கொண்டிருக்கிறன்.
கெதியா வாறதென்று தானே சொன்னாய். நெஞ்செல்லாம் நடுங்குது. உனக்கு என்னவாவது நடந்தால்
என்னால தாங்கமுடியுமா பிள்ள. எனக்கு உன்ன விட்டால் வேற யாரிருக்கிறா பிள்ள.....” பாசத்தின் பரிதவிப்பு இங்கு பதறுகிறது. இப் பாசத்தின்
பெறுமதியைப் புரியாத இளம் உள்ளங்கள் பெற்றோரைத் தவிக்கவிடுகின்றன.
ஏதோ ஒரு காரணத்தை இதற்காகவே தயார்படுத்தத்
தெரிந்தவர்கள் தானே பிள்ளைகள். பெற்றோரின் கண்களைக் கட்டுவதாக எண்ணித் தம் கண்களையே
குருடாக்கும் இளந்தலைமுறையினரே இன்று அதிகம். காலத்தின் விசையிலே கணனித்திரையில் இவள்
அலங்கோலக்காட்சியைக் கண்டுகளித்த இளையவர்கள் செய்தி இவள் காதுகளில் கசிந்தது.
நம்பிக்கைத் துரோகம் என்னும் ஆயுதம்
தாங்கிய பவன் இப்போது வேறு பெயரில் முகப்புத்தகத்தில் தரிசனம் தருகின்றான். தன் தொடர்பை
முறித்துக் கொண்ட பவனின் செய்கைகளை ஆதாரத்துடன் காவல்துறைக்கு தெரியப்படுத்திய மிருதுளா, இன்று துடைத்தெறியப்பட்ட
தன் பெண்மையை எண்ணித் துவண்டுவிடவில்லை. தன் அறிவென்னும் கருவி கொண்டு அறியாமையை அகற்றி
வாழத் துணி;ந்துவிட்டாள். ஆண்வர்க்கத்தின் மத்தியில் கேடுகெட்ட சில மனித மிருகங்களை வெளிச்சம்
போட்டுக் காட்டும் துறையில் தன்னை அர்ப்பணித்தாள். அறியாத வயதில் புரியாத பருவத்தில்
தவறிவிட எத்தனிக்கும் இளந்தலைமுறையினருக்கு கட்டுபாடற்ற அறிவுரைகளைக் கச்சிதமாய்ப்
புகட்டுகின்றாள். இணையத்திலே தனக்காய் ஒரு தளம் அமைத்து குழுக்களாய் பெண்கள் குழாம்
அமைத்தாள். ஸ்கைப்பிலே குழு அழைப்பு மூலம் பலரை ஒன்றாக அழைத்து இளையவர்கள் பிரச்சினைகளைத்
தீர்த்துவைக்கின்றாள்.
வாசகர்களே! உங்கள் எண்ணங்களைப் பதியவிடுங்கள்
முகநூல் கருத்துக்கள் இதில் இணைத்துள்ளேன்