• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    வியாழன், 31 டிசம்பர், 2015

    2016 ஏ

           



    பூமித்தாயின் புதுவரவே!
    அண்ட சுழற்சின் பிறப்பே!
    தமையனை வழி அனுப்பித் 
    தரணி ஆள வந்தவனே!
    ஓராண்டே கூட வந்தாலும்
    ஓராயிரம் சுமைகள் தருபவனே!
    ஓராயிரம் புதுமைகள் படைப்பவனே!

    உனை வரவேற்க

    வான வேடிக்கைகள் 
    வைன்(wine) உடைப்புக்கள்
     முத்த அணைப்புக்கள்
    ஆலய மணியோசைகள்
    அலங்கார ஆடைஅணிகள்
    ஆரம்பமோ ஆனந்தம் 
    ஆனாலும் மனதில் ஆதங்கம்

    வெண்பஞ்சாய் வருவாய் என 
    விழி வைத்துக் காத்திருந்தோம் 
    வரும் போதே ஏமாற்றி
    வாரி மழை இறைக்கின்றாய்
    வசந்தத்தைத் தருவாயா? தமையன் போல்
    வாரி உயிர் எடுப்பாயா?
    வந்து சொல்லும் செய்தியென்ன?

    அனைத்து உறவுகளுக்கும் புதுவருட நல் வாழ்த்துக்கள்

    சனி, 26 டிசம்பர், 2015

    மீண்டும் மீட்டிப் பார்க்கிறேன்


    கடற்கரை மணலோரம் காலம் போவதறியாது
    கால் பதித்து நடைபயின்று விளையாடியதை
    மீண்டும் மீட்டிப் பார்க்கிறேன்

    அலையோ டலையாய் கடலலை தழுவ
    மலைமேடாய் அலையோடுயர்ந்து
    உடல் நனைத்து உறவாடிய பொழுதுகளை
    மீண்டுமாய் மீட்டிப் பார்க்கிறேன்.

    சிப்பி சங்கு சேகரித்து சின்னஞ்சிறு உருச் செய்து
    சிறப்பாய் கடல் மண்ணில்சிறந்த நல்படம் வரைந்து
    படம் நனையும் காட்சிகளை பார்த்து பார்த்து
    மகிழ்ந்திருந்த மகிழ்ச்சி மிகு காலங்களை
    மீண்டுமாய் மீட்டிப் பார்க்கிறேன்.


    இன்று 

    கடல் அன்னையே! – உன்
    கோரப்பசி தீர்க்க அலைக்கரங்களால்
    ஆருயிர்கள் அள்ளி விழுங்கி
    அழகாய் ஏப்பம் விட்டதனை
    மீண்டுமாய் மீட்டிப் பாக்கிறேன்.


    உன்னால் வாழ்வு பெற்றோர்
    உன்னால் வாழ்விழந்தார்
    நன்றிக் கடனதனை
    வலிந்து நீ எடுத்தாயோ!

    உன் வஞ்சகச் செயலை நான்
    மீண்டுமாய் மீட்டிப் பார்க்கிறேன்.


    ஆழிப் பேரலையாய் கடல்கோளாய்
    ஆழகான பெயர் தாங்கி
    காசினி எங்கும் கலங்காது
    கால் பதித்து நீ! காலம் காலமாய்
    காத்துவைத்த காலங்கடந்த
    தொல்பொருள் சின்னங்களை
    கவர்ந்து சென்ற நிகழ்வுகளை
    மீண்டுமாய் மீட்டிப் பார்க்கிறேன்.

    வெள்ளி, 18 டிசம்பர், 2015

    நான் எழுதாவிட்டால், யார்தான் எழுதுவார்.



    எழுத மறந்த நினைவுகள்.

    இப்படியும் ஒரு பெண்ணா! 

    அழகும் இளமையும் இணைந்தே இருந்தால், முதுமையும் கூட அதை அடையப் பார்க்கும். வறுமையும் கூட இணைந்தே இருந்தால், செல்வந்தர் துணையும் சேர்ந்தே கிடைக்கும். இவர் கம்பீரத்தை வலிந்து பெற்றாரா? இல்லை அவருக்கு வலியவே கிடைத்ததா? 

               அழகாய் இருந்ததனாலும் வறுமையில் அகப்பட்டதனாலும் ஒரு செல்வந்தனுக்கு செல்ல மாணிக்கம் இரண்டாம் தாரமாய் குடும்ப வாழ்க்கையைப் பொறுப்பேற்றார். கணவனும் மட்டக்களப்பிலே முதன்முதலாக போட்டிக்கோ என்று சொல்லப்படுகின்ற வீட்டைக் கட்டியதாலும், சமுதாய மத்தியில் தங்கச் சங்கிலியை அணிந்ததனாலும் போட்டிக்கோ காளியர், சங்கிலிக் காளியர் என்ற பட்டப்பெயர்களால் அழைக்கப்பட்டார். ஆடம்பரமான வாழ்க்கை. வீட்டுக்குள்ளே குடிக்க பார்(Bar). குதூகல வாழ்க்கை. அழகான அன்பான வாழ்வில் அற்புதமான மூன்று குழந்தைகள். செல்வம் நிலைக்காது. நண்பர் சேர்க்கையும் அதை நிலைக்க விடாது. சிறிது சிறிதாய் பணமும் கரைய கோர்ட், வழக்கு என்று ஓடிஓடி கடைசியில் கணவன் உயிரும் விடைபெற்றது. கையில் காசும் கரைந்து விட்டது.

                 வளரத் துடிக்கும் குழந்தைகள், வாழ்வாதாரம் ஏதுமில்லை, புகழ் மட்டும் கொடுத்து ஏழ்மையை விட்டுச் சென்ற கணவன். அழிந்த சொத்துக்கள் போக இருந்த சொத்துக்களை அழியவிடாது பாதுகாக்கத் துணிந்த அந்த சாகசப் பெண் தனக்காய் ஒரு தொழிலைத் தேடிப் பெற்றார். மண்பானை, சட்டியிலே தன் வாழ்வாதாரத்தை ஆரம்பித்தார். பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்பிவிட்டு  பகலெல்லாம் கைவேலை, செய்த சட்டி, பானையை வீட்டு வளவினுள்ளே சுட்டெடுத்து வியாபாரிகளுக்கு கணக்குப் பார்க்கும் அழகோஅழகு. போற்றிப் பாதுகாத்த சொத்தை இன்று பேரப் பிள்ளைகள் சந்தோசத்தில் அனுபவிக்கின்றார்கள். இந்த ஊக்கத்தை இன்று நினைத்துப் பார்க்கின்றேன்.

                   ஆண்குழந்தை இரண்டு, பெண்குழந்தை ஒன்று ஆண்குழந்தைகள் ஆண்மகன்களாய் உருக்கொள்ளும் வரை அழகான அம்மாவுக்கு தொந்தரவுகள் வழமையே. அதனாலே தைரியத்தை இயல்பாகப் பெற்றாள். இரவுப்படக்காட்சி முடிந்து வீதியால் போகும் ஆண்கள், ஆண் துணையற்ற வீடு என்று முன் வேலியில் சலம் கழிப்பார்கள். பொறுத்திருந்து பார்த்து கொதிக்கும் நீரை சலம் கழிப்பார்க்கு ஊற்றிய போது அவர்கள் கத்திக் கொண்டு சென்ற காட்சியை அழகாய் வர்ணிப்பார். ஆத்திரம் கொண்டு அடக்க நினைக்கும் ஆண்கள் தலையில் தேங்காயால் ஓங்கி அடித்த கதையை ஒய்யாரமாய்ச் சொல்லிச் சிரிப்பார். பெண்களுக்கு ஆயுதங்கள் அவர்களிடமே படைக்கப்பட்டிருக்கின்றது என்று மகாத்மா காந்தி சொன்னது உண்மையே. இந்தத் தைரியத்தை இன்று நினைக்கின்றேன்.

              கையில் சுழுக்கிவிட்டது, கைமுறிவு ஏற்பட்டுவிட்டது, முழங்கால் சில்லு விலகிவிட்டது. இவ்வாறான பிரச்சினைகளுடன் Orthopädie டாக்டரிடம் சென்றால், உடனடி ஆபரேஷன் என்று வயிற்றைக் கலக்குகின்றார். ஆபரேஷன் செய்ய அறையினுள் சென்றவர்கள் முகத்தை மூடி உயிரற்றவராய் திரும்பக் கொண்டுவரும் நிலை கண்டு செல்லமாணிக்கம் அவர்கள் இன்று இருந்தால் கையால் தடவித் தடவியே வலியை நீக்கியிருப்பார், தன் கையால் செய்த எண்ணெய் எடுத்து நோய் கண்ட இடத்தில் நீவி விட்டு முறிவுக்குப் பத்துப்போட்டு முறிவை ஒட்டச் செய்திருப்பார். 
               பிள்ளை இல்லையே என்று மருத்துவமனைகள் சென்று திரும்பி, சுகமாய் இருந்த கருப்பையை மருத்துவத்தின் பெயரால் அழித்துவிட்டுச் மனச்சுமையுடன் வாழ்பவர்கள் நிலை கண்டு செல்லமாணிக்கம் அவர்கள் இருந்திருந்தால், செல்லா இடமெல்லாம் சென்று தேடிப்பெற்ற இலைகுழை கொண்டு, அம்மியில் வைத்து அரைத்தெடுத்த மருத்துவச் சாற்றைக் குவளையில் எடுத்து, தலைவாசலில் பெண்ணை சூரியனைப் பார்த்து நிற்க வைத்துத் தொண்டைக்குள் ஊற்றி கருப்பையில் கருவைத் தங்கவே செய்திருப்பார் என்று இன்று சிந்தித்துப் பார்க்கின்றேன்.

                குழந்தையை உறங்க வைக்க Iphone இல் பாட்டுப் போட்டு காதடைக்கும் Drum சத்தத்தில் உறங்கமறுக்கும் குழந்தையை உறங்கச் செய்ய இளந்தலைமுறை படும்பாட்டைப் பார்க்கும் போது செல்லமாணிக்கம் அவர்கள் தானாய் இயற்றும் கவிவரிகளில் சந்தம் சேர்த்து பாடும் அழகையும் தொட்டில் ஆட்டும் போதும், ஊஞ்சல் ஆட்டும் போதும் அழகாய்ப் பாடிய அற்புதவரிகளை, மெட்டுக்களை இன்று நினைத்துப் பார்க்கின்றேன். 
                இவர் நோயென்று படுக்கையில் சரிந்ததில்லை. பிள்ளைகளைப் பறிகொடுத்த துயரில், உணவை ஒறுத்து, உள் உறுப்புகளின் இயக்கம் நீக்கித் தானாய் இறப்பதை வலிந்து பெற்று, இறுதியில் குழந்தையாய் மாறி இவ்வுலகு நீத்தார்.  
                   இத்தனை திறமைகளையும் தன்னகத்தே கொண்ட அற்புதப் பெண்ணாய் என் கண்முன்னே தெரிபவர் வேறு யாருமில்லை. என் அன்புப் பாட்டி. ஆசை ஆச்சி. அருகே இருக்கும் போது அருமை தெரிவதில்லை. அதனால் தானோ என்னவோ அவர் வைத்தியம் கற்கவில்லை. கைப்பக்குவம் பழகவில்லை. இதனால், இழந்ததை எண்ணி ஏங்கவே முடிகிறது. 



























    ஞாயிறு, 22 நவம்பர், 2015

    மூளைப்பட இயக்குனர்




    சிறகடிக்கும் நினைவுகளை சிந்தைக்குள்ளே சிறைப்பிடிக்கும்
    கண்ணுக்குள்ளே தோன்றும் காட்சிப் படிவங்களை 
    கச்சிதமாய்ப் படம்பிடித்து கட்டுக்கோப்பாய்ச் சேகரிக்கும்
    கட்டுக்கடங்கா ஆசைகளைக் கலையாது சேர்த்தெடுக்கும்
    வெட்டி ஒட்டி வேதனைகள் மகிழ்வுகளை 
    வெளிவிடாது தேக்கியே வைத்திருக்கும்
    வாழ்க்கை முழுவதும் வாழ்ந்து ருசித்ததை 
    வர்ணக் கலவையுடன் வரைந்தே வைத்திருக்கும்
    நினைத்ததை நீங்கா நிலைத்திருக்கும் நினைவுகளை 
    நடந்ததை நடத்தத் துணிவின்றித் தவறியதை  
    வாழ்ந்ததை நித்தமும் வாழ விரும்பியதை
    இழந்ததை இழக்க எள்ளளவும் விரும்பாததை 
    சேர்ந்தே கழித்திருந்து விட்டுப் பிரிந்ததை 
    பிரிய மனமில்லாத பொக்கிச உறவுகளை
    நினைக்காத வேளையிலே நித்திரையில் காட்டிடுமே
    நிலையில்லா காட்சியில் வாழ்ந்து களித்திருக்க
    வாழ்வொன்றைத் தந்திடுமே மகிழ்ச்சியில் ஆழ்த்திடுமே
    நேரே காணும் திரைப்படத்தை நமக்குள்ளே காட்டிடுமே
    கண்ணால் பார்க்கா அற்புத காட்சிகளைக் 
    கண்ணுக்குள்ளே கலர் கலராய்க் காட்டிடுமே

    அண்ட சராசரங்கள் அத்தனைக்கும் மீறிய 
    அற்புத இயக்குனர் எமக்குள்ளே வாழ்கிறார் - இவர்
    தயாரிப்பில் வெளியான மூளைப் படத்தை 
    மீளப்பார்க்க விரும்பும் பார்வையாளர் ஆயிரம்
    மீளப் பார்க்க விரும்பா பார்வையாளர் ஆயிரம்
    மறுஒளிபரப்பு வராதாவென ஏங்குவோர் ஓர்புறம்
    ஏனிப்படி வந்ததென ஆராய்வோர் ஓர்புறம்
    ஒருமுறையேனும் பார்த்து மகிழ்ந்து இருந்தோமென
    களித்திருப்போர் ஆயிரம் ஓராயிரம் ஓராயிரம









    சனி, 31 அக்டோபர், 2015

    கொண்டாட்டங்களுக்கு நன்கொடை ரசீதும்

             


    வந்தது மறந்து, வாழ்ந்தது மறந்து, வாழ வேண்டியது மறந்தது, தமிழர் போடும் ஆட்டம் புலம்பெயர்வில் அளவின்றிப் போய்விட்டது.  மெல்லவும் முடியாது விழுங்கவும் முடியாது திண்டாடும் பலரின் குரல்கள் பூனைக்கு மணி கட்டுவாரின்றிப் புலம்புகின்றது. சமுதாயக் குரலைப் பதிவு செய்யாத எவரும் எழுத்தாளராக நடமாட முடியாதல்லவா!

    ஆசைக்கு அளவுண்டு. பேராசைக்கு அழிவுண்டு. விழாக்களும் விருதுகளும் மலிந்து விட்டன. பணமும் புகழும் திறமையைத் தீர்மானிக்கின்றன. கொண்டாட்டங்களும் களியாட்டங்களும் அளவுக்கு அதிகமாகி விட்டன. கொள்கைகளும் கோஷங்களும்  கொஞ்சம் அடங்கியிருக்கின்றன. கலாச்சாரக் கலப்பும், அந்நிய மோகமும் பெற்றோருக்கு இனிப்பாகி விட்டன.

    புலம்பெயர்ந்தவுடன் பிள்ளைகளை அடுத்தடுத்துப் பெறும் கலாச்சாரம் ஆரம்பமாகியது. அதனைத் தொடர்ந்து போட்டி போட்டு பொறாமை கொண்டு அடுத்தவரைப் பார்த்துப் பார்த்தே பிள்ளைகளை வளர்க்கும் கலாச்சாரம் தொடர்ந்தது. மாற்றான் பிள்ளை நடனம் பயின்றால், என் பிள்ளை சங்கீதமும் நடனமும் சேர்ந்தே பயில வேண்டும். நேரமின்றி பிள்ளையை ஓடஓட விட்ட கலாச்சாரம் ஓய்ந்து விட்டது. தேவையைத் தீர்மானிக்காது அடுத்தவர் பார்வையைத் தீர்மானித்து வீடும் வாகனமும் வாங்கும் கலாச்சாரம் தொடர்ந்தது. இன்று கொண்டாட்டங்கள் கூடிவிட்டன.

    கொண்டாட்டங்கள்:

    இன்று கெண்டாட்டங்கள் களை கட்டுகிறன. ஒரே வீட்டில் பலவகை கொண்டாட்டங்கள். நச்சரிப்புடன் விருந்தினர் ஓய்வின்றி ஓடிக் கொண்டிருக்கின்றனர். வார இறுதிநாளில் வீட்டுக்கடமைகள் முடிக்க முடியாது திண்டாடும் வேலைக்குப் போகும் தமிழர்கள். பிள்ளை பிறந்தவுடன் அதன் துடக்குக் கழிக்கும் விழாவில் ஆரம்பித்து முதலாவது பிறந்தநாள் விழா, 10 ஆவது பிறந்தநாள் விழா, எத்தனை பெண்பிள்ளைகள் இருக்கின்றனவோ அத்தனைக்கும் பூப்புனிதநீராட்டு விழா, அத்தனைக்கும் பிறந்தநாள் விழா, 18 ஆவது பிறந்தநாள் விழா, நிச்சயதார்த்தம், திருமணவிழா, வளைகாப்பு, மீண்டும் குழந்தை பிறந்த கொண்டாட்டம், 50 ஆவது பிறந்தநாள், 60 ஆவது பிறந்தநாள், 25 ஆவது கல்யாணநாள். வீடு குடிபுகு விழா, இதுதவிர நடன அரங்கேற்றம், சங்கீத அரங்கேற்றம், மிருதங்க அரங்கேற்றம். வயலின் அரங்கேற்றம் எனத் தொடரும் வாழ்வில் தொடரும் கொண்டாட்டங்கள் மிதமிஞ்சிய நிலையில் புலம்பெயர் தமிழர் குதூகலிக்கின்றனர். ஆடம்பரத்திற்கே திருமணம் என ஆடம்பரத் திருமணத்திற்காக கல்வியையே விட்டெறிந்து விட்டு தொழிலுக்குப் போகத் தொடங்கியுள்ள ஒரு இளைய சமுதாயம் உருமாறுகிறது. 

    தமது ஆசைக்காக விழாக் கொண்டாடுவோருக்கு ஒரு ஆலோசனை கூற ஆசைப்படுகின்றேன். விழாக்களுக்கு விருந்தினரை அழைக்கும்போது "பரிசுப் பொருள்கள் தர விரும்புவோர். தாய்நாட்டிலே பசி பட்டினியால் வாடுவோர், அன்றாடம் உணவுக்கு அல்லாடுபவர்கள் அதிகம் இருக்கின்றார்கள். அவர்கள் தேவைக்கான பணத்தை அனுப்பிவிட்டு அந்த ரசீதை எங்களுக்கு அன்பளிப்பாகத் தாருங்கள்'' என்று அழைப்பிதழ் கொடுத்தீர்கள் என்றால், நீங்கள் விழாக் கொண்டாடுவதில் பெருமை இருக்கின்றது. இதன் மூலம் புண்ணியம் தேடுபவர்களாகவும் ஆவீர்கள் என்று சொல்லிக் கொள்ள ஆசைப்படுகின்றேன்.

    கலாச்சாரச் சீர்கேடு:

    விவாகரத்து மலிந்து விட்ட நிலையில் அந்நிய மோகத்தில் அல்லாடும் பெற்றோர். பிள்ளைகளின் கலாச்சாரச் சீர்கேட்டை மறைத்துக் காத்த  காலம் மலையேறிவிட்டது. இன்று பெற்றோர் போற்றிப் பாராட்டும் காலம் வந்து விட்டது. பிழையைச் சரியென்பது போல், கலாச்சாரச் சீர்கேட்டை ஊர் கூடிக் கொண்டாடும் காலம் நடைபெறுகின்றது. மறைவில் மகிழ வேண்டிய விடயங்கள் படம் போட்டு முகநூலில் படம் விரித்துக் காட்டப்படுகின்றன. திரைப்படங்கள் திரை விரித்த நிகழ்வுகள் வாழ்வில் அம்பலப்படுத்தப்படுகின்றன. எதுவானாலும் பெற்றோர் தயார் என்னும் நிலைமை பிள்ளைகள் துணிந்துவிட்டனர். 


    நூல் வெளியீடு:

    அன்றைய நாளில் தேவை கருதி தேவைப்படும் நூலை வாசிகசாலை சென்றும் கடையில் வாங்கிப் படித்து, ஆய்வுக்கட்டுரைகள் எழுதியும் வாசித்தும் ஆவல் தீர்த்த காலங்கள் மறைந்து விட்டன. நூல் வெளியீடு என்ற பெயரிலே தரமற்ற தமது படைப்புக்களை கைகளில் திணித்து பணத்தைத் தாருங்கள் என்று கட்டாயப்படுத்தும் கலாச்சாரம் அதிகரித்துவிட்டது. நூல்வெளியீடு என்றவுடன் வருவதற்குத் தயங்கும் மக்கள் நம்மவர் மத்தியில் அதிகரித்துவிட்டனர். இதன் மூலம் தரமான படைப்புக்களை வெளியீடு செய்வதற்கு எழுத்தாளர்கள் தயங்கி நிற்கின்றனர். புத்தகம் என்னும் போது அந்நூலினுள் புகுந்து வெளிவரும் போது ஒரு புதிய அநுபவம் கிடைக்க வேண்டும். அந்நூலைத் தேடிப்பெற வேண்டும். வாசகன் தன் தேவை கருதி ஒரு நூலை வாங்கிப் படிக்க வேண்டும். கண்டவற்றையெல்லாம் அள்ளிப் போடும் குப்பைத் தொட்டிலல்ல எமது மூளை. இதைப் படைப்பாளிகள் புர்pந்து கொள்ள வேண்டும். 

    இன்னும் உண்டு தொடர்வோம்.







    ஞாயிறு, 25 அக்டோபர், 2015

    செவ்வரத்தை நூல் வெளியீட்டு விழா (17.10.2015)


    இலக்கியப் பரப்பிலே இனம் காணப்பட வேண்டிய நிகழ்வு. இலைமறை காய்களாய், இலங்கையில் போர் நிமிர்த்தங்களினால் வறுமையில் நலிவடைந்து வாழுகின்ற  எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் பணியிலும் உதவி செய்யும் மனப்பாங்கிலும ஜேர்மனி எழுத்தாளர் சங்கம் நடத்திய சிறுகதைப் போட்டியில்; 134 பேர்களின் 141 கதைகள் பங்கு பற்றின. 17 வயதிலிருந்து 73 வயது வரையுள்ளோர் சிறுகதைகளை எழுதி அனுப்பியிருந்தார்கள். 

    இதில் தெரிவுக்குழுவினால் தெரிவுசெய்யப்பட்ட முதலாம் பரிசுக்குரிய சிறுகதைக்கு 25,000 ரூபாய்கள் பரிசுத் தொகையும் இரண்டாம் பரிசுக்குரிய சிறுகதைக்கு10,000 ரூபாய்கள் பரிசுத் தொகையும், மூன்றாம் பரிசுக்குரிய சிறுகதைக்கு 5,000 ரூபாய்கள் பரிசுத் தொகையும் வழங்கியிருந்தார்கள். அத்துடன் இத்துடன் இணைத்து போட்டியில் பங்குபற்றிய 50 சிறந்த சிறுகதைகளைத் தெரிவுசெய்து செவ்வரத்தை என்னும் நூலாக 17.10.2015 அன்று வெளியீடு செய்திருந்தார்கள். 

    அற்புதமாக நடந்தேறிய இந்நிகழ்வில் இலங்கையில் இருந்து வைத்திய கலாநிதி திரு.ஞானசேகரம் அவர்கள் வருகை தந்திருந்தார். சிறப்பு விருந்தினர்களாக டென்மார்க் நகரிலிருந்து எழுத்தாளர் ஜீவகுமரன் அவர்களும் இலங்கை ஆசிரியர் சங்க ஓய்வு பெற்ற செயலாளர் திரு. சரவணபவானந்தன் அவர்களும் வருகை தந்திருந்தார்கள். நூலாய்வினை ஆன்மீக எழுத்தாளர் திருமதி. ஞனம் ஞானசேகரன் அவர்கள் செய்திருந்தார். 

    இந்நிகழ்வின் சில நிழற்படங்கள் 








     










    ஞாயிறு, 4 அக்டோபர், 2015

               
                         இணையத் தமிழனை இணைக்கும் விழா  



               காலம் என்னும் காற்று எமைப் புரட்டிப் போட்டாலும்
               வாழ்க்கை என்னும் சூழல் எமை வதைத்து நின்றாலும்
               தமிழென்னும் கைத்தடி கொண்டு தடுமாறா மனம் கொண்டு 
               எழுத்தால் என்றும் எழுந்து நிற்போம் 

    அமீபாவாய்த் தோன்றி மனிதக் குரங்காய் பரிணாமங் கண்டு இன்று மனிதனாய் பெருமை கொண்டு ஒன்றாய்க் கூடிக் குதூகளித்தோம். விலங்கைச் சுட்டு, மரங்களில் பறித்து உணவை உண்டோம்.  காலம் கரைந்தது கூடிய வாழ்வு குலைந்தது. நாடாகப் பிரிந்தோம். இனமாகப் பிரிந்தோம். மனிதனுடன் மனிதன் பேசவே நேரமின்றி, பறந்து திரிந்தோம். இன்று கணனி எமைப் புரட்டிப் போட்டது. தேசத்தால், மொழியால், இனத்தால் பிரிந்தவர்கள் இணையத்தால் இணைந்து மொழியால் கூடிநிற்கின்றோம். யாரையும் யாரும் தேடலாம், யாரோடும் யாரும் தொடர்பு கொள்ளலாம். ஆதி என்ன? அதில் எம் எம் மொழி எங்கே? உண்மை புரிகிறது. அதை உலகம் புரிகிறது. கணனித் திரை காட்டிய உண்மை, உலகத் தலைக்குள் புகுந்து கொள்ளும் நாளும் நெருங்கும் நாளை நம்பிக் கிடக்கிறது நம் இதயம். 

      இந்நிலையில் புதுக்கோட்டை தலைநிமிர்ந்து நிற்கும் வலைப்பதிவர் திருவிழா நெஞ்சுக்குள் மகிழ்வை நிறைத்துத் தருகின்றது. 

    தமிழென்னும் ஓர் இனம் உண்டு தனியே அதற்கோர் இடமுண்டு என்று உலகு உச்சம் தலையில் வைத்துக் கொண்டாடும் நாள் நெருங்கிவிட்டது.  

    இவ் வலைப் பதிவர் திருவிழாவிற்கு வலை உலக அன்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

    சனி, 19 செப்டம்பர், 2015

    அழகு தேடும் இளமை

       
     அழகு காட்டி ஆசை ஊட்டி
    பணத்தை அள்ளப் பார்க்கும் கொடுமை
    விலைக்குப் போகும் பொருளின் விலையை
    விண்ணுக்குயர்த்தும் கொடுமை
    மதி மயங்கும் இளமை தன்னை
    மயக்கிப் போடும் வலிய புத்தி
    மடையர்களாய் மயங்கும் நுகர்வோர் தம்மை
    கணக்குப் போடும் முதலாளித் தன்மை

    கல்லும் பொன்னிறமும் மலிந்த உடையில்
    பணமும் மதிப்பும் மிதந்து நிற்கும்
    மயங்கி நிற்கும் இளமை இங்கு
    கறந்து நிற்கும் பெற்றோர் பணத்தை
    கையில் புரளும் பணத்தின் பலத்தால்
    கண்ணைக் கட்டி காசை எறியும்
    கண் கெட்ட மனிதர் ஆட்டம்
    எண்ணிப் பார்த்தால் ஏனோ வெறுப்பு

    புடவைக் கடையிலோர் பெண்ணின் ஆட்சி
    அடங்கிப் பணியும் கணவன் போக்கு
    ஐரோப்பியத் தமிழன் முதலாளிப் போக்கில்
    விற்பளையாளன் பயந்து நிற்கும் பாவக்காட்சி
    தொட்ட ஆடை பார்க்க முடியும்
    தொட்டு அணிய அநுமதி இல்லை
    கட்டிப் பார்க்கா ஆடை வாங்கி
    காட்சிப் படுத்தும் இளமையோ அதிகம்

    நுகர்வோரை மதிக்காத முறையற்ற விற்பனையால்
    ஐரோப்பியர் முன்னிலையில் தலைகுனியும் தமிழன்நிலை
    பெருக்கத்து வேண்டுவது பணிவென்று அறியாத
    படிப்பறிவற்ற பேதைகளால் தடுமாறும் தமிழனிங்கு
    பணம்புரளும் கரங்களுள்ளோர் பணத்தை வழங்க
    பாரிலுண்டு பல பரிதாப இல்லங்கள்
    பலநாள் அணியா ஆடையின் நாட்டத்தால்
    பணமும் மதிப்பும் இழத்தல் தகுமோ

    சொல்வீர்! சொல்வீர்! சொல்வீர்!



    வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

    நினைத்துப் பார்க்கின்றேன்



       




    உறவின் பலமென்ன உங்கள் சிறப்பான சொற்களே
    பிறப்பின் பலமென்ன உங்கள் முறையான வளர்ப்பே
    குறையாத செல்வமென்ன உங்கள் நிறைவான அன்பே
    உன்னத நாட்களென்ன உங்களிடம் வளர்ந்த நாட்களே
    •                                            

    அணையாத அகல்விளக்கு – பெற்றோர்
    துணையான அறிவுரைகள்
    கணையாக உள்ளத்தில் - என்றும்
    கனமாக நிறைந்திருக்கும்
    பெற்றோர் வளமான சிந்தனைகள் - எம்
    வழிமாறும் மனஇருள் நீக்கும் 
    ஒளிதீபங்கள் 



    ஆழ்கடல் மனதில் ஆழமாய் உறைந்திருக்கும் நினைவுகள்
    ஆயுள் உள்ள வரை தேயாது உறைந்திருக்கும்
    ஓயாது தேடினாலும் ஓரிடமும் காணவொண்ணா – பெற்றோர்
    ஒப்பில்லா உள்ளம். 

    •   

    ஏழெழு காலங்கள் தேடினாலும் - வாழ்வில்
    தீராது நாம் பட்ட கடன்
    தேடி நாம் நின்றாலும் வாராது 
    கோடி இன்பம் காட்டிப் பெற்றோர்
    சீராட்டித் தந்த இன்பம்



    மனக்கோயிலின் தெய்வங்களே!
    உறவு எங்கள் உள்ளத்தில் உறைந்தது
    கனிவு உங்கள் உள்ளமிருந்து கவர்ந்தது
    நிறைவு உங்கள் அன்பில் கண்டது
    சோர்வு நீங்கள் என்றுமே காட்டாதது
    வாழ்வு உங்கள் வழிகாட்டலில் வந்தது



    எப்படி எப்படி எல்லாமோ
    குழப்படி பற்பல செய்தேனே
    பிரம்படி பட்டுத் திருந்தாது
    தப்படி வாழ்விது சிறக்காதென
    சொல்லடி பட்டுத் திருந்தியதை
    எப்படி இங்கு எடுத்துரைப்பேன்

    சனி, 1 ஆகஸ்ட், 2015

    சீ......தனம் புலம்பெயர்விலுமா!



                                    
                           பணமென்னும் பிசாசு ஆட்டுகின்ற ஆட்டம்
                        மனமென்னும் பேதைக்குப் போடுகின்ற தூபம்
                        விதை போட்டது யாரென்று புரியாத போதும் 
                        புலம்பெயர்ந்தும் திருந்தாத  மந்தையர் கூட்டம் 
               
    பெண்ணைப் பெற்றால், வயிற்றில் புளியைக் கரைக்கும் நிலைமை புலம்பெயர்விலுமா! 
    பலரின் புலம்பல் என் பார்வையிலும் என் கருத்திலும் இங்கு பதிவாகின்றது.

    சீதனம் பெறும் போதே தனம் என்னும் செல்வம் சீ என்னும் வெறுப்புக்கு உள்ளாகின்றது . பெற்றோர் பெண்ணைப் பெற்று கல்வி, செல்வம், குடும்பப் பொறுப்பு, பொறுமை, அத்தனையும் சேர்த்துக் கொடுக்கத் திருமணம் என்னும் பெயரில் தாலியைக் கழுத்தில் கட்டிவிட்டு சொந்தம் கொண்டாடும் ஆண்மக்களே! 

                       பெண் என்பவள் இச் சமுதாயத்தை ஒரு குடும்பத்தை சுமக்கின்ற அச்சாணி. இப்பெருமை எல்லாம் சேர்த்தே பூமிக்கு, பூமாதேவி என்னும் பெண்பால் பெயரிட்டார்கள். செல்வத்தைக் கொடுப்பதாகக் கருதும் கடவுளையே பெண்ணாகக் கருதி இலக்குமி என்று பெயரிட்டார்கள். வாழ வந்த வீட்டிற்கு வளம் சேர்க்கும் பெண்களை பணம் சேர்த்துக் கொண்டு வாருங்கள் என்று  வாயைப் பிளந்து கொண்டிருக்கும் வறிய கையாலாகாத ஆண்சமுதாயமே!

                            திருமணம் என்பது இருவர் இணைந்து வாழுகின்ற ஒரு கோட்டை; வளருகின்ற விருட்சம். இது தகர்த்து எறியப்படவோ? இடையில் வெட்டி விழுத்தப்படவோ கூடாதது. இக்கோட்டைக்கு உற்றார் உறவினர்கள் அரணாக இருக்க வேண்டும். ஆரம்பமே, அடித்தளமே ஆட்டம் கண்டால் வாழ்க்கையை நிறுத்த முடியுமா? வாழ்வு நிலையாகுமா?

                          பணமில்லாது வாழ்வில்லை. பணமே வாழ்வுமில்லை. இது புரிந்தே உலகில் யாவரும் வாழுகின்றனர். ஆனால், பிறரின் உழைப்பில் பணம் சேர்க்க நான் நினைப்பதில் நியாயம் இருக்கின்றதா? பெண்ணையும்  ஆணையும் சேர்த்து வைக்கலாம். இதனால் வம்சம் விருத்தியாகும், வாழ்க்கை சிறக்கும். பெண்ணோடு சேர்த்து பணத்தையும் தாருங்கள். அப்போதுதான் ஓரளவாவது வாழ்க்கையை என்னால் கொண்டு இழுக்க முடியும் என்று கேட்பது ஆணுக்குக் கேவலம் இல்லையா?  

                யாழ்ப்பாணத்து அரசர் காலத்து நடைமுறைகளின் தொகுப்பாகிய சீதனம் என்பது யாழ்ப்பாணத்தை ஒல்லாந்தர் ஆண்டகாலத்தில் 17 ஆம் நூற்றாண்டில் கொண்டுவரப்பட்ட தேசவழமைச் சட்டமாகும். கேரளாவில் நடைமுறைப்படுத்தப்படும் மருமக்கட்தாயச் சட்டத்தின் கூறுகள் யாழ்ப்பாண சமுதாய நிலைமைக்கு ஏற்ப மாற்றமடைந்து யாழ்ப்பாண சீதன முறை கொண்டுவரப்பட்டது. ஆண் கொண்டுவரும் சொத்து முதுசம். பெண் கொண்டுவரும் சொத்து சீதனம். ஆணும் பெண்ணும் சேர்ந்து தேடிக்கொள்ளும் சொத்து தேடிய தேட்டம். இவ்வாறு விக்கிபீடியா சீதனத்துக்கான விளக்கம் கொடுக்கின்றது. இப்போது முதுசம் எங்கோ மறைந்தது? சீதனம் இங்கே நிலைத்தது. தேடிய தேட்டமே நடக்க வேண்டியது. 
                      
                  பெண்கள் தொழிலின்றி வீட்டில் கணவன் உழைப்பை எதிர் பார்த்துக் காத்திருந்த காலப் பகுதியில் பணம் படைத்த பெற்றோர் நன்கொடையாக அதாவது அன்பளிப்பாக மகளின் திருமண மகிழ்வில் கொடுத்த நிகழ்வு  நடந்து முடிந்து விட்ட நடைமுறை ஆகும். இன்று பெண்ணும் ஆணும் சரி சமமாக உழைக்கும், அல்லது ஆணை விட பெண் கூடுதலாக உழைக்கும் காலம். இக்காலத்திலும் சீதனம் என்ற பெயரில் பிச்சை எடுக்க நினைப்பது சமுதாய சீர் குலைவு என்பதே உண்மை. 
             
              ‘சீதனம் எவன் கேட்டால் செருப்பெடுத்தடி 
              கோவணம் கட்டிய கும்பகனை மணம் பிடி’’ 

    ஏனென்றால் பெண் தன் குடும்பத்தை நடத்தக் கூடிய வலிமை மிக்கவள் இல்லையா? ஆண் எப்படித்தான் இருந்தால் என்ன? அவனை மனிதனாக்கும் வலிமை பெண்ணுக்கு உண்டு.

             ‘’ தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகை சான்ற
               சொற்காத்துச் சோர்விலாள்  பெண்’’

    கற்பு நெறியில் தன்னையும் காத்து, தன் கணவனையும் காத்து, தகுதி வாய்ந்த புகழையும் காத்து உறுதி தளராது வாழ்பவளே பெண் என்று வள்ளுவரே கூறியிருக்கின்றார். 

                 சீதனம் கேட்பதும், கொடுப்பதும் குற்றம் என்றே கருதுகின்றேன். கடந்த காலத்தை மறந்து சீதனம் கேட்பது பெண்களே என்பது உண்மையே. அவர்கள் கருத்தில் ஆணுக்குப் பின் பெண்ணைப் பெற்ற தாய்மார் ஆணைக் கொடுத்துக் கறக்கும் பணத்தைப் பெற்று அடுத்துத் திருமணத்திற்காக காத்திருக்கும் பெண்ணுக்கு சீதனம் கொடுக்கத் திட்டம் இடுகின்றனர். மகனை வளர்க்க செலவு செய்ததை வரும் மருமகள் குடும்பத்திடம் இருந்து கறக்க நினைக்கிறாள். அடிப்படையில் இயலாமையே இதற்கு காரணமாகின்றது. புலம்பெயர்வில் அதிகமாக அரசாங்கப் பணத்தில் வளர்க்கும் மகனுக்கே சீதனம் எதிர்பார்க்கும் பெற்றோர். பெற்றேன் கஷ்டப்பட்டு வளர்த்தேன் என்றெல்லாம் வாய் அளப்பது சரியா? தாய் சொன்னார். தனையன் தலை ஆட்டுகின்றான். தாயிற் சிறந்த கோவில் இல்லை என்று காரணம் காட்டி பணத்துக்கு தலை பணிந்து நிற்கின்றனர் ஆண்கள். அதனால், கோவிலினுள்ளே உள்ள சக்தியாக இருக்க வேண்டிய   தாய். சீதனம் கேட்டு பழமொழியையே மாற்றி அமைக்கின்றாள். 

                    பெண்ணைப் பெற்றவர்கள் கூறுகின்றார்கள். பிள்ளையைப் படிக்க வைத்து சிறந்த உத்தியோகம் பெற வைத்து திருமணம் செய்து கொடுக்கும் போது. சீதனமும் தா எனக் கேட்டல் எவ்வகையில் நியாயம் ஆகின்றது. என் பிள்ளை உழைத்துக் கணவனையும் கண் கலங்காது பார்த்துக் கொள்வாள். தன் வாழ்க்கையையும் உயர்வுக்குக் கொண்டு வருவாள். கணவன் உழைப்பில் மண்டியிட்டுக் கிடக்க  வேண்டிய அவசியம் இல்லை. தன் மகளை வாழ வைக்க அக்காலம் போல் மருமகனுக்குச் சீதனம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. பணம் மட்டுமா, தங்க நகையையே விரும்பாத பெண்களுக்கு தங்க நகைகளும் சீதனமாகக் கேட்கின்றார்கள். வாழ வழி அற்று புலம் பெயர்ந்த நிலைமை மறந்து சொந்த நாட்டில் வீடற்று தங்க வந்த இடத்திலேயே சீதனமாக வீடும் கேட்கின்றார்கள். இரவு பகலாக உழைத்து இரண்டு மூன்று வேலை என்று செய்து வீட்டை வாங்கி, வங்கிக்கு பணத்தைக் கட்டிக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில், வீட்டை மகள் பெயருக்கு எழுதும் படிக் கூறிப் பின் மகனை வளைத்துத் தன் மகளுக்கு அவ்வீட்டை எழுதிக் கொடுக்கப் பண்ணும் பெற்றோரின் திறமைக்கு நாம் என்ன மடையர்களோ? என்று கேள்வி கேட்கும் பெண்ணைப் பெற்றோர், வாழும் வரை உழைத்து வீடு வாங்கி மீண்டும் வாடகை வீட்டில் குடியிருக்க விரும்புவாரோ!

                          ஐரோப்பிய நாட்டில் வளருகின்ற பெண்கள் கணவனை விலை கொடுத்து வாங்க மறுப்பதனால், திருமண கலாச்சாரம் மறைந்து போகும் நிலை ஏற்படுகின்றது. ஐரோப்பிய கலாச்சாரம் மேலோங்குகின்றது. இயற்கையான உடல் இச்சைகள் தவறான வழிகளில் தடுமாறும் சூழல் ஏற்படப் போகின்றது. கலாச்சாரக் கட்டுப்பாடுகள் மீறும் நிலை வரும் காலங்களில் மேம்படப் போகின்றது. ஐரோப்பிய நாடுகளில் சூழல், சுற்றம், உறவினர் போன்றோருக்குப்  பயந்து பெண்கள் வாழ்ந்த நிலைமை இல்லையென்பதால் சுதந்திரம் என்ற பெயரில் பெண்கள் நடமாடுவதற்கு வழி வகுக்கும் ஆண்களைப் பெற்றவர்களே சிந்தித்துப் பாருங்கள். புலம்பெயர்வில் சீ....... தனம் தேவையா?

    எழுதி விட்டேன். இது பற்றி காலம் காலமாக எழுதப்படுகின்றது. ஆயினும் சமுதாயம் சீர்பெற ஒரு சிந்திப்பு என்னாலும் நடக்கட்டும்.

    என் வாசகங்கள்

                                                   
                               




    சனி, 27 ஜூன், 2015

    கனவு மெய்ப்பட வேண்டும்

             

    உலகம் என் முன்னே விரிந்து கிடக்கிறது. உலகைக் காணக் கண் தந்த என் தந்தை இன்றில்லை. விரல் பிடித்து நான் நடந்த போது என் விடியலைக் காட்டி, உயிர் மூச்சை உவந்தளித்து, உலகுக்கு  என்னை அடையாளம் காட்டிய என் அகக் கண்ணாடி இன்றில்லை. தவிப்பு என்பதை நாம் உணர்கின்ற வேளை எம் பெற்றோரை நாம் இழக்கும் வேளை என்பதில் எள் அளவும் சந்தேகம் இல்லை. ஆயிரம் தான் உறவுகள் வந்தாலும் என் தந்தைக்கு ஈடாமோ! கனவுகள் வருவதும், காட்சிகள் பதிவதும் நாம் அவர்களுடன் வாழும் அற்ப, சிலமணிநேர மகிழ்வுக்காய் என்பதை நினைக்கும் போது கனவு  மெய்ப்பட வேண்டும் என மனம் ஏங்குகிறது. 

                        மனிதப் படைப்பில் மகத்தான உணர்வு  ஞாபகங்களும் மறதியுமே. சிலவேளை மறந்து, சிலவேளை நினைத்திருக்கும் மனதே எமது வாழ்க்கையை நாம் கொண்டு செல்லத் தேவையான உணர்வாகின்றது. இல்லையென்றால், உயிர் கொண்டு நடமாடும் நடைப்பிணங்களாகி விடுவோம். 
                             ஒருவேளைச் சிந்தனையில் மறபிறப்பு என்பது இதுதானோ என்று எண்ணிப் பார்ப்பேன். தாயின் தந்தையின் செல்களின் மறுபிறப்புத் தானே நான். என் தந்தையிடம் இருந்து போட்டி போட்டு ஓடிவந்து தாயிடம் ஒட்டிக் கொண்ட உருவல்லவா நான். இவ்வுலகுக்கு ஒரு பெண்ணாய் வெளிவர முனைந்து நின்ற அந்த ஒரு துளியை இந்த வடிவமாய் ஆக்கித் தந்த பொறுப்பு தாய் தந்தையினுடையதே. அப்படியானால், அவர்களின் குணங்களின் பாதிப்பு எனக்கும் இருக்குமல்லவா? மனிதன் மறுபிறப்பு எடுக்கின்றான். அவர்களின் வாரிசுகளின் மூலம். சில பிள்ளைகள் தமது பெற்றோர்களின் இழப்பின் பின் பெற்றோர்களைப் போலவே நடத்தையில் மாற்றத்தைக் கொண்டு வருகின்றன. பெற்றோர்களின் வடிவ அமைப்பு பிள்ளைகளில் காணப்படுவது. இத்தனையும் மறுபிறப்புக்கள் தானே. எரித்துவிடும் புதைத்துவிடும் உருவங்கள், மீண்டும் நடமாடுவது அவரவர் பிள்ளைகளின் நடத்தைகளின் மூலமே. உடலால் மட்டுமன்றி உணர்வுகளாலும் ஒன்றி நிற்பதுவே பிள்ளைகளின் கடமைகளாகின்றது. இவர்களின் பிள்ளைகள் என்று நாம் சொல்லுமுன் உலகு எமது பெற்றோரைச் சொல்லவேண்டும். சாயலிலும் சாதனையிலும் பெற்றோருக்கு இணையாக மேலாக நாம் வாழ்ந்து காட்டினாலேயே நம் பிறப்பின் முழுமையைப் பெறுவோம். 
               
                எனது தந்தையின் ஆர்வமும், பேச்சாற்றலும், சமூகசிந்தனையும், முற்போக்குச் சிந்தனையயும் சிறிதளவாவது என்னைப் பாதிக்கத்தானே வேண்டும். சேர்ந்தே வாழ்ந்த போது நினைத்துப் பார்க்காத விடயங்கள் இழந்து நிற்கும் போது சிந்தனையைக் கிளறுகின்றன. நான் ஒவ்வொரு மேடையிலும் நிற்கும்போது எனது தந்தையைத்தான் நினைத்துப் பார்ப்பேன். சிறுவயதில் அவரிடம் இருந்து வந்த பகுத்தறிவுச் சிந்தனை என்னைப் பக்குவப்படுத்தியது என்பதை மறந்துவிட முடியுமா? கோயிலுக்குத் தலைவராய் இருந்தபோதும் என்றும் தனக்காய் மன்றாடியதில்லை. அன்னதானங்கள் செய்வதிலும் ஆலயப்பணி செய்வதிலும் காலத்தைக் கடந்தியபோதும் கையெடுத்துக கடவுளை வணங்கியதில்லை. ஊருக்கொரு கோயில் வேண்டும். அதில் மக்கள் ஒன்றுகூடவேண்டும்  என்பதுவே அவர் சிந்தனையாக இருந்தது. பாடசாலைகள் கட்டுவதற்கு முழுமூச்சாக ஈடுபட்டபோது அறிவாளிகள் உள்ள சமுதாயமே உலகை சரியான பாதைக்கு இட்டுச் செல்லும் என்று அயராது உழைப்பார் சாதிமத பேதம் பார்க்காது அனைவராலும் அன்பு செலுத்திய அற்புத மனிதர். அவர் விட்டுச் சென்ற பாதையைத் தொடர்வதுதான் அவர் எச்சங்களாகிய பிள்ளைகளின்  கடமைகளாக இருக்க வேண்டும். 

                ஆண்டுகள் பலவானாலும் ஆழமாய் மனதில் நிற்பது பெறோர்கள் நினைவுகளே. அவை கனவாக வந்து எம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கும். நான் கூட இருப்பேன் என்று சொல்லும். தொடர்ந்து வந்து போவேன் என்று சொல்லும். வாழ்வுக்கு வழி காட்டும். அப்போது அவர்கள் எம்முடனேயே இருக்கின்றார்கள் என்று நினைக்கும் போது கனவு கலைந்து எம்முடன் அவர்கள் என்றும் இல்லை என்னும் மெய்யைக் கூறும். எனவே, கனவ  மெய்ப்பட வேண்டும். இறந்தவர் தொடர்பு என்றும் வேண்டும். இதற்கு விஞ்ஞானம்  வழி சொல்லாதா?


    எனது பெற்றோர் இளமைக்கால புகைப்படம். 

    சனி, 13 ஜூன், 2015

    1958 என்னும் நூலின் விமர்சனம்

               

               


               காலம் என்னும் காற்று எமைப் புரட்டிப் போட்டாலும்
               வாழ்க்கை என்னும் சூழல் எமை வதைத்து நின்றாலும்
               தமிழென்னும் கைத்தடி கொண்டு தடுமாறா மனம் கொண்டு 
               எழுத்தால் என்றும் எழுந்து நிற்போம் 


    1958 என்னும் பெயருடன்  வழமையான அணிந்துரை, வாழ்த்துரை பதிப்புரை, போன்ற அம்சங்களின்றி சாதாரணமாக ஆசிரியர் முன்னுரையுடனே வெளிவந்துள்ள இந்நூலின் ஆசிரியர் இரவி அருணாசலம் அவர்கள் மிகப் பிரபல்யம் ஆனவரே. புதிசு, சரிநிகர், புலம், ஒரு பேப்பர் ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியர் குழுவில் ஒருவராக இருக்கின்றார். ஐபிசி தமிழ்வானொலி, டிடிஎன் தமிழ் தொலைக்காட்சி ஆகிய ஊடகங்களில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார். இது இவருடைய 5 ஆவது நூல். 50 க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியிருக்கிறார். இவர் கதை சொல்லும்  அநுபவம் பெற்றோரிடம் இருந்து இவருக்குத் தாரைவார்த்துக் கொடுக்கப்பட்டிருக்கின்றது  என்பது என்னால் அறியப்படுகின்றது.  இந்நூல் ஒரு நாவல். காலச்சுவடு பதிப்பகத்தால் வெளியீடு செய்யப்பட்டிருக்கும் இந்த நூல் மூலம் நான் வாழாத ஒரு இடத்திற்கு, ஆண்டுக்கு ஆசிரியர் இரவி அவர்கள் என்னை அழைத்துச் சென்றிருக்கின்றார். 1958 ஆம் ஆண்டு நானும் வாழ்ந்ததில்லை ஆசிரியர் இரவி அவர்களும் வாழ்ந்ததில்லை.  இங்குதான் எழுத்தாளன் தலைநிமிர்ந்து நிற்கின்றான். வாழ்ந்த காலத்தையும் வாழாத காலத்தையும் கண்ட சம்பவத்தையும் காணாத சம்பவத்தையும் ஒரு நிலைக்கண்ணாடி போல் வாசகர் முன் நிறுத்தக் கூடிய வலிமை எழுத்தாளனுக்குத்தான் உண்டு என்று கூறுவதில் பெருமைப்படுகின்றேன். இதனால்தான் எழுத்தாளன் பிரம்மா எனப்படுகின்றான். 

                இந்நூலின் பிரம்மா ஆகிய இரவி அவர்கள், 1958ம் ஆண்டின்  பல்வேறு அநுபவங்களுடன், பல்வேறு செய்திகள் காணப்பட பல்வேறு பாத்திரங்களின் பண்புகளையும் வாழ்க்கை முறைகளையும் அவற்றுக்கிடையே நடைபெறும் நிகழ்ச்சிகளையும் ஒழுங்குபடுத்தி இந்த 1958 என்னும் நூலிலே எமக்குக் கோர்த்து தந்திருக்கின்றார். நூலின் பெயரைக் கேட்டவுடன் எல்லோர் மனதிலும் தோன்றுகின்ற எண்ணமே இந்த நூலில் தெளிவுபடுத்தப்படுகின்றது. "1958  ஆம் ஆண்டு இலங்கையில் தமிழர் மீது ஏவப்பட்ட இன வன்முறை குறித்துப் பேசுகின்ற புதினம் இது. இன வன்முறை நிகழ்ந்த நாட்களிலும் அதன் பின் வந்த நாட்களிலும் மனநிலை ரீதியாக ஒரு தமிழ்க் குடும்பம் சந்திக்கும் நெருக்கடிகளை சித்திரிக்கிறது. மொழி நடையினாலும் கதை சொல்லும் உத்தியினாலும் சிறப்புப் பெற்றிருக்கின்றது" என நூலின் பின்புறம் சாராம்சத்தை உணர்த்துகின்றது. புத்தகம் என்பது புதிய அகம். அந்த வீட்டினுள் புகுந்து வெளிவருபவர்கள் ஒரு புதிய அநுபவத்தைப் பெற்றிருக்க வேண்டும். அந்த அநுபவங்களை இந்நூலின் மூலம் நான் பெற்றேன். வாசகர்களும் பெறப் போகின்றார்கள். 
                
           ஒரு நாவல் என்னும்போது பல்வேறுபட்ட அநுபவங்கள், செய்திகளைக் கொண்டதாக இருத்தல் வேண்டும். இவை அடங்கிய வாழ்க்கைமுறை முழுமையாகவோ அல்லது அதன் பகுதி வாழ்க்கையோ  விளக்கமாகத் தெளிவுபடுத்தப்பட்டிருக்க வேண்டும்.            கதாபாத்திரங்களின் பண்புகள்;, வாழ்க்கைமுறைகள், அவற்றுக்கிடையே நடைபெறும் நிகழ்ச்சிகள், இந்தப் பாத்திரங்கள் சமூகத்தோடு எவ்வாறு உறவு கொண்டுள்ளன போன்றவற்றை ஒழுங்குபடுத்திக் கதையாகத் தொகுத்துத் தரவேண்டும்.  கதாபாத்திரங்களை உருவாக்குவதிலும் அவற்றை வழிநடத்துவதிலும் தான் ஒரு நாவலின் வெற்றி தங்கியிருக்கின்றது. கதாபாத்திரங்கள் பிறரோடு உரையாடும் உரையாடல்கள் பாத்திரங்களின் வளர்ச்சிக்கு துணையாக அமைந்துவிடுகின்றன. வாசகர்கள் பாத்திரங்களின் செயல்கள் மூலம் கதையை உணர்ந்து கொள்ளுகின்றனர் அல்லது ஆசிரியர் பாத்திரங்களின் நடவடிக்கைகளை தனது கூற்றாகக் கூறுவார். இங்கு ஆசிரியர் இரவி அவர்கள் தனது கூற்றாகப் பாத்திரங்களைச் சம்பவங்களை வழிநடத்திச் செல்லுகின்றார். இது இந்நூலுக்கு சிறப்பம்சமாகப்படுகின்றது பாத்திரங்களின் உரையாடலின்போது வட்டாரச்சொற்கள் பிறமொழிச்சொற்கள் கலந்து வரலாம். ஆனால், ஆசிரியர் கூற்றின்போது எழுத்துவழக்கு நிச்சயமாக இருக்கவேண்டும். எனவே நாவல் என்னும் இலக்கிய அமைப்பில் ஆசிரியர் வெற்றி பெறுகின்றார். இந்தக் கதையிலே அவரும் அக்காலத்தில் வாழ்ந்து பாத்திரங்களையும் வாழவைத்திருக்கின்றார். 
            
                 இந்த நூலிலே கல்லுலுவ, மினுவாங்கொட. குணுப்பிட்டி, வவுனியா, யாழ்ப்பாணம், கீரிமலை அளவெட்டி இவ்வாறு நகரங்கள் வாழ்ந்திருக்கின்றன. சிங்களவர், முஸ்லிம்கள், தமிழர்கள் ஆகிய மூன்று இனங்களும் ஒற்றுமையாக  வாழ்ந்திருக்கின்றன. ஒவ்வொரு இனத்தவர்களின் அடையாளங்கள், வாழ்க்கைமுறைகள் அழகாக எடுத்துக்காட்டப்பட்டிருக்கின்றன. பெனியன் தெரியத்தக்கதாக ரெர்லின் சேர்ட்டை உள்ளேவிட்டு, சாரக்கட்டின்மேல், பேர்ஸ் வைத்த அகலப்பாம்புத்தோல் பெல்ற்றை கட்டியிருத்தல் பெரேரா அடையாளம். இவ்வாறு ஒவ்வொரு இனத்தவர்களின் அடையாளங்கள் சிறப்பாகக் காட்டப்பட்டுள்ளன.  இஸ்லாமிய பெண்கள் தமது தலைமயிரை வெளியே தெரியவிடாது முக்காடிற்றுக் கொள்வார்கள். தலைமயிர் ஒரு மனிதனுக்கு அழகைக் கொடுக்கும். அது ஆண்களுக்கு தெரிதல் அவர்கள் மனதைக் கெடுக்கும் என்பதனால்தான் தலைமயிர் தெரியாது முக்காடிடப்புடுகின்றது என்று நான் அறிந்தேன். ஆனால், வான் வெளியில் தலைமயிர் தெரிந்தால் இபிலீசு என்னும் சாத்தான் இறங்கிவிடுவான். இபிலீசு என்னும் சாத்தான் குடியிருக்க ஆசைப்படும் இடம் தலைமுடி மயிர்க்கற்றைகள். அதனாலேதான் மயிரை மூடிமறைக்கின்றார்கள், இன்னும் ஓர் இடத்தில்  என்று மதத்தைக் கற்று எமக்குத் தந்திருக்கின்றார்.;  மூவினங்களும் ஒற்றுமையாய் வாழ்ந்த ஒரு சூழலிலேதான் எனது இளமைப்பருவங்கள் இன்பமாக அமைந்திருந்தன. அதனால், இந்நூலை வாசித்தபோது என் பல நினைவுகள் மீட்டிப்பார்க்கப்பட்டன.  
                               
                    ஒவ்வொருவர் மனதிலும் ஒவ்வொரு கதை இருக்கும். நாமெல்லாம் கடந்து வந்த உலகத்திலே கண்ணீர் உண்டு, கவலைகள் உண்டு, ஓட்டம் உண்டு, அநுபவங்கள் உண்டு, விரக்தியுண்டு, வேதனை உண்டு என்று அடுக்கிக் கொண்டு போகலாம். இந்நூலிலே வேதனைகளும் உண்டு, அந்தக்கால வாழ்க்கைமுறைகளும் உண்டு. நம்பிக்கைகள் உண்டு, பக்தியுண்டு, பண்பாடு உண்டு, காதல் உண்டு, வீரம் உண்டு. இந்நூலை வாசித்தபோது ஒரு திரைப்படம் பார்க்கும் போது ஏற்படுகின்ற உணர்வுகள் என் முன்னே நிழலாடியது. பல பல விடயங்கள் இந்நூலிலே நான் கற்றுக் கொண்டேன். 

                   வெடி பற்றி. அதன் வகைகள் புரிந்திருக்கிறதா உங்களுக்கு மூலவெடி, ஹனுமான் வெடி, சாண்டோ வெடி, புஸ்வானம் என விரிகின்றது. ஏன் ஓலைப்பெட்டி வகைகள் பெட்டி, கடகம், பட்டை, நீத்துப்பெட்டி, மடிப்பெட்டி, கொட்டைப்பெட்டி, நீத்துப்பெட்டி, அடுக்குப்பெட்டி என பெட்டி வகைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. கள்ளின்பருவங்கள் சித்திரைக்குச் சிதறுகள்ளு, பங்குனிக்குப் பரவுகள்ளு, ஆனிக்கு அரிபனைக்கள்ளு, ஆடிக்கு அருந்தள் கள்ளு, ஆவணிக்குக் காய்வெட்டிக்கள்ளு என்றிருக்கின்றன. 


                   இதில் பல நம்பிக்கைகளை எடுத்துக்காட்டுகின்றார். ஹஜ்ரத்துல்முன்தஹா என்பது சொர்க்கத்திலிருக்கிற ஒரு மரம். இந்தமரத்தில் கோடிக்கணக்கான இலைகள் இருக்கின்றன. உலகத்தில் இருக்கின்ற அத்தனை உயிர்களின் பெயர்களும் அதில் எழுதப்பட்டிருக்கும். காற்றடிக்கும் போது சில இலைகள் உதிரும். அப்போது இலையில் பெயரிடப்பட்டவர்கள் மண்ணில் மரித்தவர்கள் ஆகின்றார்கள். இந்த ஹஜ்ரத்துல்முன்தஹா என்பது ஒரு நம்பிக்கை. இதேபோல், இன்னுமொரு நம்பிக்கை. இதனையும் நம்புவதா என்பது போல் இருக்கும் பலி கொடுத்தல். குட்டிக்கிடாயை மாடாக்குவதற்கு மரையாக்குவதற்கும் செய்யும் பிரயத்தனங்களும் அதனை பின் வேள்வியில் பலி கொடுப்பதும் மனதுக்கு கசப்பான உணர்வைத் தந்தது. இவையெல்லாம் நம்பிக்கைகள். இரவி அவர்கள் என்ன செய்யமுடியும். இது மனிதர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவைதானே. கடலைத்துவையல் கொடுத்து, தவிடு புண்ணாக்குக் கொடுத்து, அவை உண்டது செமித்துக் கொடுக்க சாராயம் சிறிதளவு கலந்து கொடுத்து பலாவிலை, ஆலமிலை எடுத்து அதற்குள் கடலைத்துவையல், தவிடு பிண்ணாக்குக் குழையல் வைத்து நாலாக மடித்து கிடாயின்தாடையை நெருக்கிப்பிடித்து வாயைத் திறக்க வைத்து நாலாக மடித்ததை உள்ளே அதக்குவார்கள். பத்துத் தடைவை அப்படிப்போன பின் கிடாய் மற்றவற்றை உண்ண பஞ்சிப்படும். அப்போது ஒரு பொல்லெடுத்து அதன் உணவை உள்ளே தள்ளுவார்கள். அது தொண்டைவரை போய்விடும். இந்தக்கிடா நடக்கக்கூடாது, என்ன கொடுமை! இக்கிடாயை வேள்வியில் பலி கொடுப்பார்கள். மூட நம்பிக்கையில் உயிர்கள் பலிக்கடாவாகுவதை யாரும் எண்ணிப்பார்ப்பதில்லை. ஆசையாக பயன்படுத்தும் வாகனம் பழுதுபட்டால் விற்பதற்கே மனம் கலங்கும் மக்கள் மத்தியில், இவ்வாறான உயிர்க் கொலைகள் மதம் என்ற பெயரில் மதம் பிடித்திருப்பது அருவருப்பைத் தந்தது.
                    
                      இதைவிட பேய்களின் நம்பிக்கை. உதாரணத்திற்கு ஒரு பேய் வாய்க்காலுக்கு தண்ணீர் இறைக்கின்றது.  பேய் வருகின்றது கையைப் பிடிக்கும் போது குளிர்கின்றது. இதுவெல்லாம் 1958 ஆம் ஆண்டு. இந்தப்பேயெல்லாம் இப்போது எங்கே போனவையோ தெரியாது. இதுபோல் சாத்திரம் பற்றி ஓரிடத்தில் கூறுகிறார். கோள்களினதும் கிரகங்களினதும் சொற்படிதான் உலகம் இயங்குகின்றது. அதனுள் மனிதர்களும் அடங்குகின்றனர். அவற்றின் பார்வையிலிருந்து யாரும் தப்ப முடியாது. பூரணைக்கு ஏன் கடல் பொங்குகின்றது. அமாவாசைக்கு ஏன் அடங்கிக் கிடக்கின்றது. சிலர் பூரணைநாட்களில் தன்பாட்டில் சிரிக்கின்றனர். அமாவாசை நாட்களில் வலிவந்தாற்போல் துடிக்கின்றனர். இவையெல்லாம் கோள்களின் பலன்களே என்பது பற்றிக் கூறுகின்றார். உண்மைதான் இதில் நீங்களும் அநுபவப்பட்டிருப்பீர்கள். அறிந்திருப்பீர்கள். 

                 அருணாசலம், ஹாஜியார், சித்திலெப்பை, ஆரிபு, தேர, பெரேரா, நோனா, பத்மாவதி, மிருணா, சுவாம்பிள்ளை, இப்படிக் கதாபாத்திரங்கள் இக்கதையிலே நடமாடுகின்றன. ஒவ்வொரு கதாபாத்திரங்களினூடாகப் பல சமூகசீர்திருத்தப்பண்புகள், நெற்றியில் அடித்தாற்போல் சிற்சில வார்த்தைகள், படிப்பினைகளை விதைத்துச் செல்கின்றார். நாம் யதார்த்தைச் சிந்திக்க வேண்டும். மனிதனுக்குத் தேவையானது அன்பு, துவக்கினால் ஆகக் கூடியது என்ன செய்துவிட முடியும். உயிர்களைப் பலி எடுக்கலாம். அன்பை அதனால் விதைத்துவிட முடியுமா? நாம் கற்பதற்கு நிறைய உண்டு, மனதில் கள்ளம் இல்லாமல் பக்கம் சாராமல், தேடவேண்டும். தேடல்தான் திறனை வளர்க்கும்., திணிப்பு வேறு, விருப்பம் வேறு. எதனையும் யாருக்கும் திணிக்கமுடியாது. அவர்கள் விரும்பி ஏற்கவேண்டும். இப்படிப் பல என் நெஞ்சைத் தொட்ட வார்த்தைகள் இதனுள்ளே அடங்கிக் கிடந்தன. ஒரு பிக்குவின் வார்த்தைகளாக யாரும் காந்தி அல்ல மகன். காந்தி துன்பப்பட்ட மக்களின் விளிம்புநிலையில் நின்றார். யாவரினது துயரத்தையும் தன் துயர் ஆக்கினார். மக்களிடையே ஒருவரான பயணம் அவருடையது. தாழ்த்தப்பட்ட மக்களை மேல்சாதி ஒடுக்கும்போது, மேல் சாதிமீது அவர் கோபப்பட்டார் அல்லர். அதன்பின் நிமித்தம் அவர்களை வென்றெடுக்கலாம் என்று நம்;பினார். மேற்சாதி தாழ்த்தப்பட்மோரைக் கோயிலுக்குள் விடவில்லை என்றவுடன் தாழ்த்தப்பட்டோர் தமக்குக் கோயிலைக்கட்டி அதில் அவர்கள் வழிபாடியற்றட்டும் என்றுதான் காந்தியால்  வழிகாட்டமுடிந்தது. அதுதான் சரி. யாரும் யாருக்கும் நோகாத வாழ்க்கை வாழ வேண்டும். வார்த்தைகளை வாசிக்கின்ற போது ஒரு மனிதன் உடனடியாகத் திருந்தாது விட்டாலும் மூளைப்பதிவிலே உறைந்து சிற்சில சமயங்கள் அவனுக்கு உறுத்தலைத் தரும் அல்லவா. இவ்வாறான வார்த்தை உறுத்தல்கள் தான் மனிதனைச் சீர்ப்படுத்தும் அதனால், இவ்வாறான நூல்களை நீங்கள் வாசிக்கின்ற போதுதான் மனமென்கின்ற மாயையை உங்களுக்குக் கட்டிப்போட முடியும்.

               104ம் பக்கத்திலிருந்து 115 ஆம் பக்கம் வரை வாசிக்கும் போது நான் இங்கில்லை என் நினைவுகளை மீட்டவைத்து கண்களைக் குளமாக்கின. நான் பட்ட துயர், அதற்கான காரணங்கள் எல்லாம் வந்து ஒரு வெறுப்பைத் தந்தன. படித்துப் பாருங்கள் உங்களுக்கும் இவ்வாறு பல இடங்கள் மனதிலே படும்.

                  இப்போது கதைக்கு வருகின்றேன். ஒரு ஆசிரியர் தோட்டத்தொழிலாளியாக மாறியகதை. கதாசிரியர் இரவி அருணாச்சலம் அவர்களின் உண்மைக்கதைபோல் தெரிகின்றது. இதுபற்றி கதாசிரியர்தான் சொல்லவேண்டும். கல்லுலுவ என்னும் சிங்களக் கிராமத்தில் வாழுகின்ற ஒரு தமிழ்க்குடும்பம் அதாவது ஒரு ஆசிரியர், மனைவி, ஒரு பெண்கைக்குழந்தை மூவரும் அங்குவாழ்ந்த இஸ்லாமிய, தமிழ், சிங்களக் குடும்பங்களுடன் அன்பாகவும் ஒருத்தருக்கொருத்தர் ஆதரவாகவும் வாழ்ந்து 1958 ஆம் ஆண்டு நடைபெற்ற கலவரத்ததால் சிங்கள, இஸ்லாம் என்ற இரண்டு இனங்களின் ஒத்துழைப்புடன் காப்பாற்றப்பட்டு சொந்த ஊர் கீரிமலை நாடி வந்து தோட்டத்தொழிலில் ஈடுபட நாட்டங்கொள்வதுவே கதை. இக்கருவைக் கொண்டு கதையோட்டம் செல்கின்றது. கதை தொடர்ந்து செல்லப் பின்னணி நினைத்துப் பார்க்கப்படுகின்றது. நினைக்கும் சமயத்தில் கதைஓட்டம் மாறுபடுகின்றது. வாசிக்கும் நிகழ்வு நிறுத்தப்பட்டு அச்சம்பவத்திற்கான எடுகோள்கள் வேறு சம்பவத்தை விளக்கிச் செல்கின்றது. இது சிலருக்கு மயக்கத்தைத் தரலாம். ஆனால், அவ்வவ் சந்தர்ப்பங்களிலேயே இவற்றை விளக்கவேண்டிய அவசியம் கருதியே இக்கதையை ஆசிரியர் கொண்டு செல்கின்றார். ஏனென்றால், எதை எவ்விடத்தில், எப்படிச் சொல்லவேண்டுமோ அதை அவ்விடத்தில் அப்படியே சொல்வதுதான் சிறப்பு. அதைத்தான் கதாசிரியர் கூறியிருக்கின்றார். ஏனென்றால், இரவி அவர்களுக்கு 10 வருடங்கள் இலங்கையில் கற்பித்த அநுபவம் இருக்கின்றது. 

            "ஆடு அழுகிறதே என்று அள்ளிக்குழை போட்டோம், வாழை வாடுகிறதே என்று வாய்க்கால் வெட்டி நீர் வார்த்தோம், நாய்க்குக் கல்லெறிந்து கதறியழப் பார்த்ததில்லை" போன்ற அடிக்கடி வந்துபோகும் அழகான வரிகளுடன் இந்நூலை அலசியதில் நான் கற்றுக் கொண்டது அன்பு என்பது எல்லோருடைய இதயங்களிலும் இருக்கின்றது. சந்தர்ப்பமும் சூழ்நிலையும் விதைக்கின்ற சம்பவங்கள் அன்பை மீறி மனித மனங்களை மாற்றிவிடுகின்றன. என்பதுதான் உண்மை.  எல்லா வகையான இனங்களிலும் மனிதனும் உண்டு, மிருகமும் உண்டு. உலகில் அனைவரும் புத்தனும் இல்லை காந்தியும் இல்லை. பழகிய உறவுகளும் வாழ்ந்த இடமும் மனிதன் உயிருள்ளவரை மனம் விட்டு அகலாது. இந்த உண்மைகளே எனக்குள் சப்பாணியிட்டு அமர்ந்து கொண்டன. 
                                215 பக்கங்களுடன் வெளியாகியுள்ள இந்நூலைப் படிப்பவர்கள் நிச்சயம் பயன்பெறுவர் என்பது திண்ணம். 
                   





               
     



    ஞாயிறு, 17 மே, 2015

    புலம்பெயர்வில் இளைஞர்கள் புரியும் சாதனைகள்

                           
                         

    அண்மையில் என் மனதை வருடிய நிகழ்வொன்றை உங்கள் முன்னிலையில் கொண்டு வருகின்றேன். 

    காலம் தமிழனை திசை மாறி, கண்டம் மாறி ஓடச் செய்தாலும் தமிழன், செல்லும் இடமெங்கும் தன் திறமையை வெளிக் கொண்டுவந்து தலைநிமிர்ந்து நிற்பான். இதற்கு எடுத்துக்கட்டாக புலம்பெயர்ந்த இளஞ்சந்ததியினர் உலகளாவிய ரீதியிலே புரிகின்ற சாதனைகள் சிறப்பாக அமைகின்றன. 

                 ஜேர்மனிய Geldern நகரிலே நடைபெற்ற பாடசாலை மாணவர்கள் நடத்திய நிகழ்வொன்று என் நெஞ்சத்தை நெருடியது. சிறந்த நெறியாள்கையில் Geldern பாடசாலை மாணவர்கள் ஒன்றிணைந்து நடத்திய ஒரு நாடகம். இந்நாடகத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ராம் பரமானந்தன் என்னும் இளைஞன், தன் குரலாலும் நடிப்பாலும் பலரைக் கவர்ந்திழுத்தார். முற்று முழுதாக ஜேர்மனிய கலாச்சார நாட்டிய நாடக அமைப்பில் பாடல்களாலும் வசனங்களாலும் அமைந்திருந்த இந்த நாடகத்திற்கான பயிற்சி சுமார் 1 வருடமாக  நடைபெற்றது. குரல் பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு, ஆடை அலங்காரம் என இதற்கான தயாரிப்பு அற்புதமாக நடைபெற்றது. 40 மாணவர்களில் இப்பாத்திரத்திற்காக ராம் பரமானந்தன் தெரிவுசெய்யப்பட்டிருந்தார் என்பது பெருமைக்குரிய விடயமாகும். இவருக்கு மாத்திரம் 11 பேர் ஆடை, அலங்காரம், ஒலி,ஒளி போன்ற அனைத்து விடயங்களுக்கும் ஒதுக்கப்பட்டிருந்தமை சிறப்பு வாய்ந்ததாக அமைகின்றது. இவர் கர்நாடக இசையையும் கற்று டிப்ளோமா தேர்வில் வெற்றியீட்டியுள்ளார். ஆங்கிலப்பாடல்கள், தமிழ் சினிமாப்பாடல்கள் பாடுவதிலும், நடனங்கள் ஆடுவதிலும், கவிதை எழுதுவதிலும் திறமைசாலி என்பது குறிப்பிடத்தக்கது. 

                    300 ஆயிரம் ஒயிரோக்கள் செலவில் பிரமாண்டமான தயாரிப்பில் வெளியான இந்நாடகத்திற்கு 140 பேர் பணியாற்றியிருந்தார்கள். மேடை ஒழுங்கு, நடிப்பு, நடனம், ஒப்பனை, ஆடை அலங்காரம், ஒலி, ஒளி அமைப்பென  நிகழ்வு களைகட்டியிருந்தது. 7 நாட்கள் தொடர்ந்து நடந்த இந்நாடகத்தில் பங்குபற்றிய அனைத்து நடிகர்களும் தமது நடிப்பை மாத்திரமன்றி பாடல்களையும் சிறிதும் களைப்பின்றி அற்புதமாகப் பாடியிருந்தனர். 
                                                    
    ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் முன் மனிதருக்கு மேல் அமானுஸ்ய சக்திகள் வாழ்ந்த காலத்தில் ஒரு அரக்கன் அராஜகம் செய்துவருகின்றான். இவ் அராஜகத்தைத் தாங்கமுடியாத 3 தேவதைகள் தமக்குள்ளே உள்ள கருத்து வேறுபாடுகளைக் களைந்து அவ் அரக்கனை அழிக்க ஒன்றிணைகின்றனர். இதில் ஒருவர் நெருப்பின் சிவப்பையும், மற்றையவர் பனிபோல் வெள்ளையையும், மூன்றாவது தேவதை கறுப்பு நிறமாகவும் கொண்டவர். இதனால் அவனைக் கொல்ல முடியாத தேவதைகள், அவனை ஒரு மந்திரக்கண்ணாடிக்குள் அடைத்து ஒரு அழகிய மகாராணியின் அரண்மனைக்குள் வைக்கின்றனர். அரக்கனோ மகாராணியின் தூய்மையான மனதை கெட்ட மந்திரங்களால் கறுக்கச் செய்து கொடூரமான இராட்சசி ஆக்குகின்றான். இவரோ அந்நாட்டு பலம் வாய்ந்த மன்னனை இரண்டாம் தாரமாக  திருமணம் செய்கின்றபோது அவரின் அழகான மகளுக்கு சித்தியாகின்றார். மன்னன் இறந்த பின் மன்னன் மகளை மகாராணி சித்திரவதைகள் செய்வதைக் கண்ட தேவதைகள் அவர்களின் நிறங்களுக்கேற்ப கறுத்தமுடி, வெள்ளைமேனி, சிவந்த உதடு வழங்கி மந்திர சக்திகளையும் கொடுக்கின்றனர். அதைக் கண்ட அரக்கன் தன் விடுதலைக்கான வழியை சிறுமியிடம் காண்கின்றான். அவளின் 18 ஆவது பிறந்ததினத்தில் அவளை வீட்டை விட்டு வெளியே அனுப்பும் நோக்குடன் சுயம்பரம் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்கின்றாள். கண்ணாடிக்குள் இருக்கும் அரக்கன், மகாராணியிடம் இளம் சிறுமி உன்னை விட அழகி எனக் கூறி மகாராணிக்குக் கொலைவெறி ஊட்டுகின்றான்.
                                     
            இதிலிருந்து தப்பி காட்டுக்குள் தப்பி ஓடிய இளவரசி ஒரு நாடகக் குழுவிடம் அடைக்கலம் பெறுகின்றாள்.  இந்நாடகத்தில் உண்மை இளவரசன் நடிக்கின்றான். இவ் இளவரசியும் இதில் இணைந்து கொண்டு நடிக்கும் போது அவளில் நாட்டம் கொண்டு இவ்விளவரசன் இவ் இளவரசியை மணக்கின்றான். அதே ஒப்பனையுடன் அரண்மனைக்கு திரும்பி வந்த இளவரசி தன் முகமூடியைக் கழட்டி மகாராணியை வெற்றி கொள்கின்றாள். அப்போது கண்ணாடியிலுள்ள மந்திரம் மறைய விடுதலை பெற்ற அரக்கன் விடுதலை பெற்று வெளியே வருகின்றான்(ராம்). அரக்கன் வெளியே வர நாடகக்குழுவினர் அனைவரும் இறக்கின்றனர். இளவரசி அரக்கனை வென்று மின்சி பாடுகின்றாள்.  இதுவே இந்நாடகத்தின் மூலக் கதையாக அமைந்திருந்தது. இடையிடையே பாடல்கள் நாடகத்திற்கு மெருகேற்றியது. கதாபாத்திரங்கள் தமது குரலாலே மேடையில் பாடி நடித்தது அற்புதமான விடையமாக இருந்தது.  பார்வையாளர்களாக வந்திருந்தவர்களில் oberhausen  நகரைச் சேர்ந்தவர்கள் அந்நகரில் இந்நாடகத்தை நடத்தும்படி கேட்டதற்கமைய இந்நாடகம் அங்கும் மேடையேறுகின்றது. 

                        மேலைத்தேய கற்றல், நடனங்கள், பாடல்கள், நடிப்பு, தொழில் என்று பலபக்கங்களில் தம் திறமைகளை வெளிக்காட்டிவரும் எமது இளந்தலைமுறையினர், எம் பெயர் சொல்ல வரும்காலங்களில் தலைநிமிர்ந்து நிற்பார்கள் என்பதற்கு ராம் பரமானந்தன் நடிப்பில்  காட்டிய நுணுக்கங்களும், ஜேர்மனி மொழியில் பாடிய பாடல்களின் இனிமையும் எடுத்துக்கட்டாக அமைகின்றன. அத்துடன் இந்நிகழ்வுக்கு வந்திருந்த Berlin , Hamburg இசைக்கல்லூரி ஆசிரியர்கள், இவரை தமது இசைக்கல்லூரியில் கல்வி கற்கும் படி பரிந்துள்ளனர். பெற்றோர்க்கும் தமிழ் இனத்திற்கும் பெருமை சேர்த்த ராம் பரமானந்தன் பாராட்டப்பட வேண்டியவர். இவர் மேலும் மேலும் வாழும் நாட்டு மக்களுடன் இணைந்து பல மேடைகள் ஏறவேண்டும் என்று தமிழ் இனத்தின் சார்பாக வாழ்த்துகின்றேன்.

    இந் நாடகம் மீண்டும் ஜேர்மனிய ஒபர்கௌசன் நகரில் 10.06.2015 அன்று மேடையேறுகின்றது.

    Theater Oberhausen
    Will-Quadflieg-Platz 1
    46045 Oberhausen


    Minsi பாடலுக்கு ஒரு உதாரணம் 

     https://youtu.be/QmT7XeXNrDo          

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...