உலகம் என் முன்னே விரிந்து கிடக்கிறது. உலகைக் காணக் கண் தந்த என் தந்தை இன்றில்லை. விரல் பிடித்து நான் நடந்த போது என் விடியலைக் காட்டி, உயிர் மூச்சை உவந்தளித்து, உலகுக்கு என்னை அடையாளம் காட்டிய என் அகக் கண்ணாடி இன்றில்லை. தவிப்பு என்பதை நாம் உணர்கின்ற வேளை எம் பெற்றோரை நாம் இழக்கும் வேளை என்பதில் எள் அளவும் சந்தேகம் இல்லை. ஆயிரம் தான் உறவுகள் வந்தாலும் என் தந்தைக்கு ஈடாமோ! கனவுகள் வருவதும், காட்சிகள் பதிவதும் நாம் அவர்களுடன் வாழும் அற்ப, சிலமணிநேர மகிழ்வுக்காய் என்பதை நினைக்கும் போது கனவு மெய்ப்பட வேண்டும் என மனம் ஏங்குகிறது.
மனிதப் படைப்பில் மகத்தான உணர்வு ஞாபகங்களும் மறதியுமே. சிலவேளை மறந்து, சிலவேளை நினைத்திருக்கும் மனதே எமது வாழ்க்கையை நாம் கொண்டு செல்லத் தேவையான உணர்வாகின்றது. இல்லையென்றால், உயிர் கொண்டு நடமாடும் நடைப்பிணங்களாகி விடுவோம்.
ஒருவேளைச் சிந்தனையில் மறபிறப்பு என்பது இதுதானோ என்று எண்ணிப் பார்ப்பேன். தாயின் தந்தையின் செல்களின் மறுபிறப்புத் தானே நான். என் தந்தையிடம் இருந்து போட்டி போட்டு ஓடிவந்து தாயிடம் ஒட்டிக் கொண்ட உருவல்லவா நான். இவ்வுலகுக்கு ஒரு பெண்ணாய் வெளிவர முனைந்து நின்ற அந்த ஒரு துளியை இந்த வடிவமாய் ஆக்கித் தந்த பொறுப்பு தாய் தந்தையினுடையதே. அப்படியானால், அவர்களின் குணங்களின் பாதிப்பு எனக்கும் இருக்குமல்லவா? மனிதன் மறுபிறப்பு எடுக்கின்றான். அவர்களின் வாரிசுகளின் மூலம். சில பிள்ளைகள் தமது பெற்றோர்களின் இழப்பின் பின் பெற்றோர்களைப் போலவே நடத்தையில் மாற்றத்தைக் கொண்டு வருகின்றன. பெற்றோர்களின் வடிவ அமைப்பு பிள்ளைகளில் காணப்படுவது. இத்தனையும் மறுபிறப்புக்கள் தானே. எரித்துவிடும் புதைத்துவிடும் உருவங்கள், மீண்டும் நடமாடுவது அவரவர் பிள்ளைகளின் நடத்தைகளின் மூலமே. உடலால் மட்டுமன்றி உணர்வுகளாலும் ஒன்றி நிற்பதுவே பிள்ளைகளின் கடமைகளாகின்றது. இவர்களின் பிள்ளைகள் என்று நாம் சொல்லுமுன் உலகு எமது பெற்றோரைச் சொல்லவேண்டும். சாயலிலும் சாதனையிலும் பெற்றோருக்கு இணையாக மேலாக நாம் வாழ்ந்து காட்டினாலேயே நம் பிறப்பின் முழுமையைப் பெறுவோம்.
எனது தந்தையின் ஆர்வமும், பேச்சாற்றலும், சமூகசிந்தனையும், முற்போக்குச் சிந்தனையயும் சிறிதளவாவது என்னைப் பாதிக்கத்தானே வேண்டும். சேர்ந்தே வாழ்ந்த போது நினைத்துப் பார்க்காத விடயங்கள் இழந்து நிற்கும் போது சிந்தனையைக் கிளறுகின்றன. நான் ஒவ்வொரு மேடையிலும் நிற்கும்போது எனது தந்தையைத்தான் நினைத்துப் பார்ப்பேன். சிறுவயதில் அவரிடம் இருந்து வந்த பகுத்தறிவுச் சிந்தனை என்னைப் பக்குவப்படுத்தியது என்பதை மறந்துவிட முடியுமா? கோயிலுக்குத் தலைவராய் இருந்தபோதும் என்றும் தனக்காய் மன்றாடியதில்லை. அன்னதானங்கள் செய்வதிலும் ஆலயப்பணி செய்வதிலும் காலத்தைக் கடந்தியபோதும் கையெடுத்துக கடவுளை வணங்கியதில்லை. ஊருக்கொரு கோயில் வேண்டும். அதில் மக்கள் ஒன்றுகூடவேண்டும் என்பதுவே அவர் சிந்தனையாக இருந்தது. பாடசாலைகள் கட்டுவதற்கு முழுமூச்சாக ஈடுபட்டபோது அறிவாளிகள் உள்ள சமுதாயமே உலகை சரியான பாதைக்கு இட்டுச் செல்லும் என்று அயராது உழைப்பார் சாதிமத பேதம் பார்க்காது அனைவராலும் அன்பு செலுத்திய அற்புத மனிதர். அவர் விட்டுச் சென்ற பாதையைத் தொடர்வதுதான் அவர் எச்சங்களாகிய பிள்ளைகளின் கடமைகளாக இருக்க வேண்டும்.
ஆண்டுகள் பலவானாலும் ஆழமாய் மனதில் நிற்பது பெறோர்கள் நினைவுகளே. அவை கனவாக வந்து எம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கும். நான் கூட இருப்பேன் என்று சொல்லும். தொடர்ந்து வந்து போவேன் என்று சொல்லும். வாழ்வுக்கு வழி காட்டும். அப்போது அவர்கள் எம்முடனேயே இருக்கின்றார்கள் என்று நினைக்கும் போது கனவு கலைந்து எம்முடன் அவர்கள் என்றும் இல்லை என்னும் மெய்யைக் கூறும். எனவே, கனவ மெய்ப்பட வேண்டும். இறந்தவர் தொடர்பு என்றும் வேண்டும். இதற்கு விஞ்ஞானம் வழி சொல்லாதா?
எனது பெற்றோர் இளமைக்கால புகைப்படம்.
எனது பெற்றோர் இளமைக்கால புகைப்படம்.
அப்பாவின் ஆசிர்வாதம் என்றும் தங்களுக்கு உண்டு... வணக்கங்கள்...
பதிலளிநீக்குதந்தை தாய் போலத் தெய்வம் உண்டோ.!...
பதிலளிநீக்குநன்று..நன்று....
நிறைய ஓய்வு நேரம் கிடைக்கட்டும்.
தந்தை தாய் போலத் தெய்வம் உண்டோ.!...
பதிலளிநீக்குநன்று..நன்று....
நிறைய ஓய்வு நேரம் கிடைக்கட்டும்.
தந்தையின் அடிச்சுவட்டைப் பின்பற்றிப் பயணிக்கும் தங்களை
பதிலளிநீக்குவெற்றியும் பின்தொடரும் சகோதரியாரே
அன்புள்ள சகோதரி திருமதி. சந்திரகெளரி அவர்களுக்கு வணக்கம்! உங்களது வலைத்தள வாசகர்களில் நானும் ஒருவன். நமது மூத்த வலைப்பதிவர் அய்யா திரு வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அவர்கள், தனது வலைத்தளத்தில் ”நினைவில் நிற்கும் பதிவர்களும், பதிவுகளும்” என்ற தலைப்பினில் வலைப்பதிவர்களை அறிமுகப்படுத்தும் தொடர் ஒன்றினை தொடங்கி எழுதி வருகிறார்.
பதிலளிநீக்குதங்களின் வலைத்தளத்தினை இன்று (28.06.2015) அறிமுகம் செய்து தங்கள் எழுத்துக்களை சிறப்பித்து எழுதியுள்ளார், என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இது ஒரு தகவலுக்காக மட்டுமே. தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.
அவரது வலைத்தளத்தின் இணைப்பு இதோ:
நினைவில் நிற்போர் - 28ம் திருநாள் http://gopu1949.blogspot.in/2015/06/28.html