மாலை நேரம். சூரியன் தன் கடைசி ஒளிக்கீற்றை பூமியின் நெற்றியில் மெதுவாகத் தடவி விட்டு மறைந்து கொண்டிருந்தது. அந்த வெளிச்சம் போல், ஒரு மனிதனின் வாழ்க்கையும் சாய்ந்து கொண்டிருந்தது. பழைய ஓட்டு வீட்டின் முன், கீறல் நிறைந்த மர நாற்காலியில் அமர்ந்திருந்தார் சுப்பிரமணியன்.
வயது
எண்பது.
தூரிகை
கொண்டு தலை முடியில் வெள்ளை
அடித்திருந்தது முதுமை.
வாழ்ந்து
களைத்த சோர்வு கண்களில்
சொந்தம் கொண்டாடியது.
ஆனால்
இதயத்தில் என்னமோ
இன்னும்
ஒரு இளமை உயிரோடிருந்தது.
அவர்
கையில் இருந்தது ஒரு கடிதம்.
புதிதாக
வந்ததல்ல.
பல
ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட
ஒன்று.
காகிதம்
மஞ்சள் நிறம் அடைந்திருந்தது.
எழுத்துக்கள்
மங்கியிருந்தாலும்,
அவை
அவரது மனத்தில்
மட்டும் ஒருபோதும் மங்கவில்லை.
அந்தக்
கடிதத்தின் ஒவ்வொரு வரியும்
ஒரு
பெயரைக் கூறிக் கொண்டிருந்தது.
மீனாட்சி.
சுப்பிரமணியனின் கண்கள் அந்த மஞ்சள் நிறக் கடிதத்திலிருந்து விலகி, வானத்தைப் பார்த்தன. அவர் நினைவுகள் இப்போது பல தசாப்தங்களைக் கடந்து, ஒரு கிராமத்துக்கு அவரை அழைத்துச் சென்றன.
அவர் மீனாட்சியைப் பிரிந்த பிறகு, வாழ்க்கை அவரை வெகுதூரம் இழுத்துச் சென்றிருந்தது. ஒரு காலத்தில் பசுமையான வயல்வெளிகளில் மீனாட்சியின் கைகளைப் பிடித்து நடந்த அந்தச் சிறு கிராமத்துச் சாலைகள் மறைந்து, இப்போது வானைத் தொடும் பிரம்மாண்டமான கட்டிடங்கள் நிறைந்த ஒரு புதிய உலகம் விரிந்து கிடந்தது.
ஆனால், எவ்வளவுதான் நவீன உலகம் வளர்ந்தாலும், சுப்பிரமணியனின் இதயம் மட்டும் இன்னும் அந்த ஓட்டு வீட்டின் முன் அமர்ந்து கொண்டு, மீனாட்சி மேடையில் பாடிய அந்தப் பழைய பாடலையே கேட்டுக் கொண்டிருந்தது.
அவர் கையில் இருந்த அந்தக் கடிதம் மட்டும் ஒரு அமைதியான தீவு போலத் தெரிந்தது.
மீனாட்சி
அந்தப் பெயர், அவரது வாழ்க்கையில் சொல்லப்படாத ஒரு கவிதை. முடிக்கப்படாத ஒரு வாக்கியம். உடலிலும் மனத்திலும் துள்ளிக் குதித்துத் தாண்டவமாடும் இளமை. நாளை என்னும் ஒன்று இருக்கிறது என்பதைப் பற்றிய சிந்தனை சிறிதளவு கூட எட்டிப் பார்க்காத வசந்த காலம். மீனாட்சியும் அவர்கள் இருவரும் ஒரே கிராமத்தின் மண் வாசனையில் வளர்ந்தவர்கள். பள்ளிக்குச் செல்லும் வழியில், நெல் வயலின் ஓரத்தில் பூத்திருந்த மல்லிகைச் செடியைப் போல, அவர்களுக்குள் ஒரு உணர்வு மலர்ந்தது. அது காதல் என்று அப்போது யாரும் பெயரிடவில்லை. ஆனால் அது காதலே தான்.
சுப்பிரமணியன்
மௌனமானவன்.
பேச்சைத்
தவிர்த்து புத்தகங்களில்
முகம் புதைத்துக் கொள்வான்.கல்வியும்
வாசிப்பும் அவனுக்குள்
ஊற்றெடுத்துக் கொண்டிருக்கும்.
மீனாட்சி
பாடலில் உயிர் ஊற்றுவாள்.
அவள்
குரலில் ஒரு தெய்வீகமான மென்மை
இருந்தது.
பள்ளி
விழாக்களில் அவள் பாடும்
போது,
அவன்
உலகமே நின்றுவிடும்.
அந்த
ஒருகுரலில்
அவன்
தன் வாழ்க்கையின் அர்த்தத்தைத்
தேடுவான்.
பார்வைகள்
பேசின.
சிரிப்புகள்
சொல்லிவிட்டன.
காதலுக்கு வார்த்தைகள் மட்டும் தேவையில்லை. அந்தக் காலம் காதல் என்பது ஒரு கொலைக் குற்றம் செய்தது போல சமூகத்தால் பார்க்கப்பட்டது. பெண்கள் மனத்தால் கூட ஒரு ஆணை நினைத்தல் கூடாது. ஆண்களின் கனவில் பெண்கள் வந்தால் அது தவறு. காதலையே பாடிய சங்ககாலத்தை அக்காலத்து மக்கள் மறந்திருந்த காலம். அவர்களின் காதல் மனம் என்னும் மேடையிலே தீபமாய் மட்டும் எரிந்தது. வெளிச்சத்திலே வாழ முடியாது தடையில் காதல் சிக்கித் தவித்தது.
அன்று ஒருநாள், மீனாட்சிக்குத் திருமணம் நிச்சயமான செய்தி சுப்பிரமணியம் காதுகளில் எட்டியது. அந்த நாள் அவன் இதயம் உடைந்தது. வேதனையில் துடித்தது. தன்னுடைய இதயத்துக்குள் பூட்டி வைத்திருந்த அந்த தீபம். வேறு ஒரு இதயத்துக்கு வெளிச்சம் கொடுக்கப் போகின்றது என்னும் செய்தியானது அவனுடைய வாழ்க்கையையே சூனியமாக்கியது.
திருமணத்திற்கு முந்தைய இரவு, மீனாட்சி அவனுக்குக் கடிதம் ஒன்று எழுதினாள்.அந்தக் கடிதத்தில், அவள் தன் வாழ்க்கையின் எல்லா துயரத்தையும் அடக்கி வைத்திருந்தாள்.
“இந்தக் காதல் இன்று இப்பிறப்பில் நிறைவேறவில்லை என்றாலும், அது பொய்யாகப் போகாது. நான் நாளை உன்னுடையவளாக போகாது போகலாம். ஆனால் என்னுடைய மனம் உன்னோடுதான் இருக்கும். உன்னை விட்டு ஒரு துளி கூட நகராது“.
அந்தக் கடிதம் இப்போதும் சுப்பிரமணியனின் உயிரோடு கலந்திருந்தது. காலத்தின் கட்டாயத்தில் தம்முடைய பெற்றோர்களின் பேச்சுக்கு மறு பேச்சுப் பேசாது வளர்க்கப்பட வாழ்க்கை தம்முடைய காதலுக்குச் சமாதி கட்டியது. உணர்வுகளுக்குத் தடை போட்டு சமுதாயக் கட்டுப்பாடுகளுக்கும் ஏற்றத்தாழ்வுகளுக்கும் தம்முடைய மனத்தைக் கொன்றார்கள்.
திருமணப் பந்தயத்தில் இணைந்த மீனாட்சி வேறு ஊருக்குத் தாலி காட்டிய கணவனுடன் போனாள். சுப்பிரமணியனும் வேறு வாழ்க்கைக்குள் நுழைந்தான். காலம் அவர்களைப் பிரித்தது. ஆனால் நினைவுகளைப் பிரிக்கவில்லை.
சுப்பிரமணியன் திருமணம் செய்துகொண்டார். நல்ல மனைவி. அமைதியான குடும்பம். பிள்ளைகள். அவருடைய வாழ்க்கையை வெளியில் இருந்து பார்த்தால் முழுமையானதாகத் தெரிந்தது. தன்னுடைய குடும்பத்துக்கு எவ்வித குறையும் அவர் வைத்ததில்லை. மனைவியை மனம் கலங்காது பார்த்தார். ஆனால், அந்த முதல் காதலான மீனாட்சியின் நினைவு நிலவு போல இரவில் வந்து அவனைத் தட்டும். இது துரோகம் அல்ல. இதுதான் மனத்தின் இயல்பு. ஆழமாக அடிமனத்தில் பதிவு எதனையும் இலகுவில் அழித்து விடாது.
மீனாட்சி மறுபுறம் ஆதரவு என்பது என்ன விலை, அன்பு என்பது எத்தனை கிலோ வைக்க வேண்டியது என்று கேள்வி கேட்கும் ஒரு கணவனுடன் வாழ்ந்தாள். அந்த வாழ்க்கை அவளுக்குச் சுமையாக இருந்தது. வாழ்க்கையை இலகுவாக மாற்றுவது மனம் நிறைந்த மகிழ்ச்சி மட்டுமே. அது இல்லாத மன வெளி வெறுமையாகத்தான் இருக்கும். அவ்வப்போது வந்து போகும் தோழியாக அவளுடைய நினைவுகள் மட்டுமே இருந்தது.
காலப்போக்கில் சுப்பிரமணியம் மனைவியை இழந்தார். இரண்டு பிள்ளைகளும் நகர வாழ்க்கைக்குத் தம்மை அர்ப்பணித்துச் சென்றார்கள். அவ்வப்போதே பிள்ளைகளைக் காணக் கூடியதாக இருந்தது.
பள்ளிக்கூடத்தில் பழைய மாணவர்கள் சந்திப்பு அறிவிக்கப்பட்டது. எழுபது கடந்த மீனாட்சியும் சுப்ரமணியமும் காலம் கரைத்த நாட்களின் கணக்குகளை மறந்து மீண்டும் உயிர்த்தெழுந்த இளமை நினைவுகளுடன் அந்தச் சந்திப்புக்குத் தயாரானார்கள். தளர்ந்த தேகத்திலும் தளராத இளமை நினைவுகளுடன் கடந்த காலங்களை மறந்து தாம் வாழ்ந்த அந்த நினைவுகளுடன் சந்தித்தார்கள்.
முதுமை எதையும் கேட்காமல் அவர்களுடன் வந்து ஒட்டிக் கொண்டது. தோற்றத்தில் இருவரும் வயதானவர்களாக சொல்லிக் கொள்ளத் தடை இல்லை. அவர்கள் மட்டுமல்ல. அவர்களுடைய நண்பர்கள் அனைவரும் முழுவதுமான மாற்றத்துடன் பேச்சிலும், நடையிலும், பாவனையில் சிறிது நடுக்கத்துடன் காணப்பட்டனர். ஆனால் கிண்டலுக்கு மட்டும் குறைவில்லை.
இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்த போது ஒரு நிமிட மௌனத்தில் நாற்பது ஆண்டுகள் பேசிக்கொண்டிருந்தன. முதலில் மீனாட்சியே பேசினாள்.
“நலமா?”
அந்த ஒரே வார்த்தையில் அவர்கள் இளமை திரும்பி வந்தது. இழந்த காலங்கள் திரும்பி வந்தன. மனம் விட்டுப் பேசினார்கள். எல்லோரும் தம்முடைய கடந்த காலங்களைப் பற்றி மகிழ்ச்சியுடன் பேசினார்கள். இதில் பலரின் வாழ்க்கைச் சரிதங்கள் நிச்சயம் மறைக்கப்பட்டன. இது அவர்களின் வாழ்க்கைக்குக் கட்டாயமாக்கப்பட்டது. ஒவ்வொருவராக விடைபெற்ற போது சுப்ரமணியமும் மீனாட்சியிடமிருந்து விடைபெற்றார்.
இந்தச் சந்திப்பு அவர்களின் பிரிவை இணைத்து வைத்த சங்கிலியானது. அன்றிலிருந்து மீண்டும் பேசத் தொடங்கினார்கள். தொலைபேசியில், மெசஞ்சரில், கடிதங்களில் பேசத் தொடங்கினார்கள். அதில் அன்பு இருந்தது. இது உடலைத் தேடும் காதல் அல்ல. துணை தேடும் காதல். மழை பெய்யும் நாட்களில்,
“அந்த வயல் நினைவா?” என்று அவள் கேட்பாள்.
“உன் பாடல் இன்னும் காதில் ஒலிக்கிறது” என்று அவர் சொல்வார். அவர்கள் ஒருபோதும் ஒன்றாக வாழவில்லை. ஆனால் மனத்துக்குள் ஒருபோதும் பிரியவில்லை.
ஒருநாள்,
சுப்பிரமணியனுக்கு கடிதம் ஒன்று வந்தது.
“எனக்கு நேரம் குறைந்து கொண்டிருக்கிறது.உன்னை மீண்டும் சந்தித்ததேஎன் வாழ்க்கையின் நிறைவு.இந்த முதுமையிலும்என்னை நேசித்ததற்கு நன்றி.”
அவர் அழுதார். வாய் விட்டு அழுதார். முதன்முறையாக தன் வாழ்க்கைக்காக அழுதார். இதுவே மீனாட்சியின் கடைசிக் கடிதம். சில நாட்களில் மீனாட்சி மறைந்தாள்.
இப்போது சுப்பிரமணியன் தினமும் அந்தக் கடிதத்தைத் திறந்து வைக்கிறார். அவள் பதில் சொல்ல மாட்டாள் என்று அறிந்தும் அவளுடன் பேசுகிறார். காதல் என்பது இளமை அல்ல. உடல் அல்ல. காதல் என்பது நேரத்தைத் தாண்டியும் மரணத்தைத் தாண்டியும் இதயத்தில் உயிரோடு இருக்கும் ஒரு உணர்வு. சுப்பிரமணியனின் காதல் முடியவில்லை. அது முதுமையிலும் இளமையாகவே இருந்தது.

.jpeg)


