• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்
    Porikkavithai(Pathar) லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
    Porikkavithai(Pathar) லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

    வெள்ளி, 13 டிசம்பர், 2013

    பற்று



            
    பற்றின் பற்று பற்றே
    பற்றில்லா வாழ்வில் பற்று தூசே
    பண்பான வாழ்வதனை
    பற்றுப்போல் பற்றுக்கொள்


    பொருள்:

    இல்வாழ்க்கையின் ஆதாரம் நட்பே. ஆசையற்ற வாழ்வில் செல்வம் தூசாகவே கருதப்படும். பசைபோல் பண்பான வாழ்வை ஒட்டிக்கொள்.

    1.    இல்வாழ்க்கை
    2.    ஆதாரம்
    3.    நட்பு
    4.    ஆசை
    5.    செல்வம்
    6.    பசை
    7.    ஒட்டிக்கொள் விளக்கம்:


    தெளிவுரை:
    இல்லறம் என்னும் நல்லறத்திலே இணைகின்ற ஆண்பெண் என்னும் இருவரும் தம்பதிகளாய் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு உண்மை நட்புடன் உறவாடவேண்டும். உண்மை நட்பு கணவன் மனைவியிடம் இணையவில்லை என்றால், அவ்வாழ்க்கையில் அடிமைத்தனம் உருவாகும். பாசவுணர்வு அற்றுப்போம். ஆண்ஆதிக்கம் அதிகரிக்கும். ஒளிவுமறைவின்றி  சுகதுக்கங்களை பறிமாறி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து நட்புடன் பழகும்போது  இல்வாழ்க்கையானது கட்டுக்கோப்புடனும்  உறுதியுடனும் அமைந்து கொள்ளுகின்றது. எனவேதான்  இல்வாழ்க்கைக்கு  நட்பு ஆதாரமாகக் கருதப்படுகின்றது.

                        அடுக்கடுக்காய் ஆசைகளை அடுக்கிக் கொள்ளும் மனிதர்களுக்கு அந்த ஆசைகளை நிறைவேற்றுவதற்காகச் செல்வம் தேவைப்படுகின்றது. பணமென்றால், பிணமும் வாய் திறக்கும் என்பது பழமொழி. செல்வத்தைத் தேடித்தான் மனிதன் கடல்கடந்து நாடுவிட்டு நாடு மாறிப் பெற்றோர்  உற்றோரைப் பிரிந்து செல்கின்றான். நாம் புகழைத் தேட ஆசைப்படுகின்றோமா? அதற்கும் பணம் தேவை. நண்பர்கள், உற்றாரை மகிழ்ச்சிப்படுத்த ஆசைப்படுகின்றேமா? அதற்கும் பணம் தேவைப்படுகின்றது. ஆசைப்பட்ட பொருள்களைக் கொள்வனவு செய்ய ஆசைப்படுகின்றோமா? பணம் தேவைப்படுகின்றது. உங்களை உங்கள் இல்லத்தை அழகு செய்யவேண்டுமா? அதற்கும் பணம் தேவை. எனவே ஆசைகள் பெருகப்பெருக அதை நிறைவற்ற செல்வம் எமக்கு அவசியமாகின்றது. எப்படித்தான் இதை யாரும் மறுத்தாலும் அதை அவர்கள் மனதளவில்புரிந்து கொள்ளாமல் இல்லை. எமக்கு எத்தனையோ ஆசைகள் இருக்கும்போது அதற்கான செல்வங்களைத் தேடிச் சேகரிக்கும் போது ஒன்றை மட்டும் மனதில் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும். அதுவே   பண்பு, மனிதப்பண்பு. இப்பண்பு நிலை தடுமாறுகின்ற போது எவ்வளவு செல்வங்களைக் குவித்து வைத்தாலும் மனைவியை நண்பியாகக் கருதி வாழ்ந்தாலும் உலகத்தின் முன்னே வெறும் தூசியாகவே கருதப்படுவோம். எம்மைத் தட்டிவிட்டுத் திரும்பிப் பார்க்காது உலகம் சென்றுவிடும்.

                            கெட்டவழியிலே சேகரிக்கும் செல்வமோ, நட்போ, சுகங்களோ நிலப்பதில்லை. அதைப் பண்பட்ட வழியில்  திருத்தமான, கள்ளமில்லா மனதுடன் சேகரிக்கும்போதே நின்று நிலைக்கக் கூடிய தன்மையைப் பெறுகின்றது. அதனாலேயே பசையைப் போல் பண்பை எம்முடன் ஒட்டிக் கொள்ளவேண்டும் என்று கூறினேன். பண்பானது பசைபோல் எம் வாழ்வில் ஒட்டிக் கொள்ளும்போது பண்பற்ற காரியங்களில் ஈடுபடத் தலைப்படமாட்டோம். இதனையே வள்ளுவர் பண்பில்லாத ஒருவர் ஈட்டிய பெருஞ்செல்வம், நல்ல பாலானது அது ஊற்றி வைக்கப்பட்ட கலத்தின் தீமையால் கெட்டாற்போன்றது என்கின்றார்.

    "பண்பு இலான் பெற்ற பெரும்செல்வம் நன்பால்
     கலம்தீமை யால்திரிந் தற்ற" 


    எனவே மனைவியுடன் நட்புடன் இல்லறவாழ்க்கையில் ஈடுபடும் ஒருவன், தன் தேவைக்காக ஆசையுடன் செல்வத்தைத் தேடும்போது  பண்புடன் சேர்த்துக் கொள்ளவேண்டும். ஆசையற்ற மனிதன் தன் வாழ்வில் செல்வத்தைத் தூசாகவே கருதுவான் என இப்பொறிக்கவிதை கூறுகின்றது.

               

    சனி, 23 நவம்பர், 2013

    ஆயம்

                   
    ஆயம் நோக்கி ஆரம்பித்த தொழில்
    ஆயத்தில் தோற்றதுபோல் ஆயம் தந்தாலும்
    ஆயம் கருதி ஆயம் நீக்கி
    வாழ்வைத் தொடர்வோம்


    இலாபம், சூதாட்டம், துன்பம், கடமை, வருத்தம்,
    பொருள்:

    இலாபம் கருதி ஆரம்பித்த தொழில் சூதாட்டத்தில் தோற்றதுபோல் துன்பத்தைத் தந்தாலும் கடமை கருதி வருத்தம் நீக்கி வாழ்வைத் தொடர்வோம்.


    விளக்கம்:
    நம்பிக்கை என்னும் வாகனம் ஏறி வாழ்க்கை என்னும் சுவாரஷ்யமான பயணத்தைத் தொடர்கின்றோம். இப்பயணம் இன்பம் நிறைந்ததாக அமையவேண்டுமானால், வாழ்வாதரமென அற்புதமான ஒரு தொழிலை மேற்கொள்ளவேண்டும். அத்தொழிலில் இலாபம் மேலும்மேலும் விரிவடையவேண்டுமென பலவிதமான உத்திகள் கையாளத் துணிகின்றோம். அதற்காக எமக்கான வாழ்காலம் வழங்கிய நேரங்களை அதற்குள்ளேயே போட்டுப் புதைக்கின்றோம். ஆனால், அத்தொழிலானது இலாபமின்றி நட்டக்கணக்கையே காட்டி எமக்கு வாழ்வின் இனிமைக்காக ஆரம்பித்த தொழில் துன்பத்தையே தந்து நின்றால், உள்ளத்தால் துவண்டு விடுகின்றோம். சூதாட்டத்தில் பணத்தைப் போட்டு ஆடி பணம் முழுவதுமாக இழந்து வெறுங்கையுடன் திரும்பி வரும்போது ஏற்படுகின்ற துன்பத்தைப் போலவே உணர்வைத் தந்தாலும் இதுவே வாழ்க்கையின் இறுதிக் கட்டமென வாடி நிற்காமல் பெற்றார், பிள்ளைகள், உறவினர்கள் போன்று எமது உதவி நாடி நிற்கின்ற மனிதர்களுக்காக வாழுகின்ற கடமையை நினைத்து மனக்கவலை நீக்கி தரமான வழியைத் தேடி ஷஷவாழ்க்கை என்றால், ஆயிரம் இருக்கும் வாசல் தோறும் வேதனை இருக்கும். வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால், ஓடுவதில்லை|| என்னும் கண்ணதாசன் வரிகளை மனதில் பதித்து வாழ்க்கையைத் தொடரவேண்டும்.

    வியாழன், 9 டிசம்பர், 2010

    பதர்

              பதர்

    பதர் நீங்கிய  பதம் உண்ணத் தகுந்தது
    பதர் நீங்கிய வாழ்வு பண்பானது
    பதரில் மனம் பதிக்கும் பதர் வாழ்வு
    பதராகிப் போம்.

    1.   உள்ளீடற்ற நெல் 2. குற்றம் 3. அற்பம் 4. அறிவீனன்
    5. பயனின்மை

    பொருள்: 

    உள்ளீடில்லாத நெல்லை அகற்றிய சோறு உண்பதற்குத் தகுதியானது. குற்றம் நீங்கிய வாழ்வும் சிறப்பானது. அற்பமான விடயங்களில் மனம் பதிக்கும் அறிவீனன் வாழ்வு பயனில்லாமல் போகும்.

    விளக்கம்:

    நெல்லின் மேலீடான தோலை அகற்றினால், உண்ணத்தக்க அரிசியைப் பெறலாம். இவ் அரிசியை உலையிலிட்டுச் சோறாக்கினாலேயே. இவ் அரிசி உண்ணத்தக்க உணவாகின்றது. அரிசியைச் சோறாக உண்பதை விடுத்து அதன் மேல்த் தோலாகிய பதரை உண்ண முடியுமா? அது உணவுமன்று, உடலுக்கு உதவும் பொருளும் அன்று. அவ்வாறே வாழுகின்ற வாழ்க்கையையும் அப்படியே நினைத்தது போல் நினைத்த மாதிரி வாழத்தான் முடியுமா? நன்றாகச் சிந்தித்து தவறுகளைப் பிரித்தறிந்து, படித்தறிந்து, புரிந்தறிந்து  அத்தவறுகளை நீக்கி மனத்துக்கண் மாசிலனாக வாழுகின்ற மனிதன், சிறப்பான வாழ்க்கையைப் பெறுவான். பிறரால் மதிக்கப்படும் வாழ்க்கையைப் பெறுவான். குற்றங்களைத் தன்னுடன் கொண்டு வாழுகின்ற மனிதன் மனநிம்மதியை இழப்பான். பொய்;, களவு, உயிர்க்கொலை, மற்றவர் மனதைக் கொல்லுதல், பிறர் துன்பத்தில் இன்பங் காணுதல், போதைப் பொருள்களுக்குத் தன்னை அடிமைப்படுத்தல், தன்னலம் நோக்கிப் பிறர்நலம் கெடுத்தல், இவை அனைத்தும் சிறப்பான வாழ்வு என்று கருதி அவற்றில் அதிக தனது குடும்பத்திற்கோ, தனது சமுதாயத்திற்கோ, தனது நாட்டுக்கோ, பிற நாடுகளுக்கோ, பயனில்லாமல் போய்விடும். இவ்வாறே கெடுவான் கேடு நினைக்கும் அறிவற்றான் வாழ்க்கை பலரால் இழிந்துரைக்கப்படும்.       

    ஆணும் ஆணும் குழந்தை பெற விஞ்ஞானம் சாத்தியமாக்குமா?

      ஆண் பெண் என்னும் இரு பால் பிரிவினர் உயிரினங்களிடையே காணப்படுகின்றன . இவை பால் கவர்ச்சியின் மூலமும் இயற்கை அமைப்பின் மூலமும் ஒன்றோடு ஒன...