பூமிப் பந்திலே தோன்றிய உயிர்களில் மகத்தான உயிரினம் மனித இனம். இம்மனித இனத் தோற்றத்தில் ஆணும் பெண்ணும் அவசியமாக இருந்தாலும் தாயே ஒரு கரு உருவாகி கர்ப்பம் தரித்துப் பாராமரிப்பதில் முக்கிய பொறுப்பை ஏற்றுக் கொள்ளுகின்றாள். அந்தத் தாய் கருப்பை ஆய்வு கூடத்தினுள் வைத்து ஒரு குழந்தையைப் பெற்றெடுத்து இந்த உலகத்துக்குக் கொடுப்பது என்பது இலகுவான காரியமல்ல. மூன்றாவது மாதத்துடன் வாந்தி, தலைச் சுற்றலில் ஆரம்பித்துத் உடலுக்குள் ஏற்பட்ட மாற்றத்தை உடல் உணர்ந்து கொள்ளும் வரை உபாதை அடைகின்றாள். வலிதாங்கி, உடல் நோய் பொறுத்து, பத்தியம் இருந்து தாய் குழந்தையைப் பெற்றெடுக்கின்றாள். எம்முடைய தமிழ் மக்கள் பச்ச உடம்புக்காரி என்று குழந்தையைப் பெற்றெடுத்த தாயை கவனமாகப் பேணுவார்கள். குழந்தை பிறந்த பிறகு தாயின் உடல் மற்றும் மன நலத்தை மீட்டெடுக்க ஒவ்வொரு கலாச்சாரத்திலும் தனித்துவமான வீட்டு மருத்துவச் சடங்குகளும், பாட்டி வைத்திய முறைகளும் (Home remedies) பின்பற்றப்படுகின்றன. அதில் மட்டக்களப்பு மக்கள் இன்றும் சில பகுதிகளில் குழந்தை பிரசவித்த தாய்மாருக்கு எடுக்கும் கவனம் குறிப்பிடத்தக்கது.
குழந்தை பிறந்த பிறகு ஒரு தாய்க்கு ஏன் அதிகப்படியான கவனிப்பும் பராமரிப்பும் தேவைப்படுகிறது என்றால், ஒரு உயிர் உருவாவதும், அது உலகிற்கு வருவதும் தாயின் உடலுக்கு மிகப்பெரிய சவாலாகும். பிரசவத்தின் போது ஏற்படும் இரத்த இழப்பால் உடல் பலவீனமடையும். அதை ஈடுகட்ட சத்தான உணவு அவசியம். கர்ப்ப காலத்தில் விரிவடைந்த கருப்பை மற்றும் பிற உறுப்புகள் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப கால அவகாசம் தேவை. உடலில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் அளவுகள் திடீரென குறைவதால் உடல் சோர்வு ஏற்படும். பிரசவத்திற்குப் பின் பல பெண்களுக்கு பிரசவத்திற்குப் பிந்தைய மனச்சோர்வு அல்லது 'Baby Blues' ஏற்பட வாய்ப்புள்ளது. தூக்கமின்மை மற்றும் புதிய பொறுப்புகள் தாய்க்கு மன அழுத்தத்தை தரலாம். அன்பான கவனிப்பு மற்றும் அரவணைப்பு மட்டுமே தாயை இந்த மனநிலையில் இருந்து மீட்க உதவும்.
தாய்ப்பால் ஊட்டுதல்
குழந்தைக்குத் தேவையான முழு ஊட்டச்சத்தும் தாயிடமிருந்தே கிடைக்கிறது. தாய் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே குழந்தைக்குத் தேவையான பால் சுரக்கும். தாய் உட்கொள்ளும் உணவே குழந்தையின் செரிமானத்தையும் ஆரோக்கியத்தையும் தீர்மானிக்கிறது. பிரசவத்திற்குப் பிறகு தாயின் நோய் எதிர்ப்பு சக்தி தற்காலிகமாகக் குறைந்திருக்கும். கிருமித்தொற்று ஏற்படாமல் இருக்கவும், உடல் காயங்கள் (தையல்கள் போன்றவை) விரைவில் ஆறவும் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது.
பெரும்பாலான நாடுகளில் இந்த காலத்தை "தனிமைப்படுத்தப்பட்ட காலம்" (Confinement Period) என்று அழைக்கிறார்கள். அதன் முக்கிய விவரங்கள் இதோ:
இந்தியாவில் பிரசவத்திற்குப் பிந்தைய பராமரிப்பு என்பது ஒரு கலை போலவே போற்றப்படுகிறது. தாய்க்கும் குழந்தைக்கும் தினமும் வெதுவெதுப்பான நல்லெண்ணெய் அல்லது மூலிகை எண்ணெய் மசாஜ் செய்யப்படுகிறது. இது எலும்புகளை வலுப்படுத்தவும், இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. பிரசவ லேகியம், காயம் (காயப்பொடி), ஓமம் கலந்த நீர் போன்றவை செரிமானத்திற்கும் பால் சுரப்பிற்கும் தரப்படுகிறது. பொதுவாக 40 நாட்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் ஓய்வெடுக்க வேண்டும். 'வயிறு கட்டுதல்' (Tummy Binding) மூலம் கருப்பை பழைய நிலைக்குத் திரும்ப உதவுகிறார்கள்.
2. சீனா: 'சுவோ யுயே சி' (Zuo Yue Zi - Sitting the Month)
இதன் பொருள் "ஒரு மாதம் அமர்ந்திருத்தல்" என்பதாகும். 'வெப்பம்' தான் இவர்களின் முக்கிய கொள்கை. தாய்மார்கள் குளிர்ந்த நீரில் கை நனைக்கவோ, குளிக்கவோ, தலை வாரவோ கூடாது என்பது பழங்கால நம்பிக்கை. இஞ்சி, பேரீச்சம்பழம் மற்றும் மூலிகைகள் சேர்த்த சூப் வகைகள் அதிகம் தரப்படும். குறிப்பாக, பன்றி கால் சூப், பால் சுரப்பிற்கு மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது.
3. லத்தீன் அமெரிக்கா: 'லா குவாரன்டீனா' (La Cuarentena)
மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளில் 40 நாட்கள் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. 'Faja' எனப்படும் துணியால் வயிற்றை இறுக்கமாகக் கட்டுவார்கள். உடலை முழுவதுமாகப் போர்த்திக் கொண்டு காற்று புகாமல் பார்த்துக்கொள்வார்கள். 40-வது நாளில் தாய்க்கு ஒரு மூலிகைக் குளியல் அளிக்கப்படும், இது 'உடலை மூடுதல்' (Closing the bones) என்று அழைக்கப்படுகிறது.
4. மலேசியா மற்றும் இந்தோனேசியா: 'பாந்தாங்' (Pantang)
'பெர்டுங்கு' (Bertungku) என்ற முறையில், சூடாக்கப்பட்ட கற்கள் அல்லது மூலிகை மூட்டைகளைக் கொண்டு வயிற்றுப் பகுதியில் ஒத்தடம் கொடுப்பார்கள். 'ஜமு' (Jamu) எனப்படும் பாரம்பரிய மூலிகை பானங்கள் உடல் வலிமையைத் திரும்பப் பெற வழங்கப்படுகின்றன.
இதுவே ஒரு குழந்தை பிறந்துவிட்டால் மட்டக்காளப்பிலே பிள்ளை பிறப்பதற்கு 1 மாதத்திற்கு முன் கருவேலம் பட்டை, சித்தரத்தை, வேர்க்கொம்பு, பறங்கிக்கிழங்கு, மஞ்சள், ஓமம், வெட்டிவேர், நாயுருவி வேர், அசமதாகம், மிளகு, திப்பிலி போன்ற பல வேதிப் பொருட்களை மாதவிடாய் வந்த பிள்ளையிடம் கொடுத்து சின்னச்சின்னத் துண்டாக வெட்டிக் கழுவி அதனைத் தென்னஞ்சாராயப் போத்தலுக்குள் நல்ல நேரம் பார்த்துப் போட்டு மூடிவிடுவார்கள்.
அந்தப் போத்தலை நீர் ஊறுகின்ற வாய்க்கால் பகுதிக்கு அண்மையில் நிலத்துக்குக் கீழே புதைத்து வைப்பார்கள். குழந்தை பிறந்தபின் ஊற வைத்த போத்தலை எடுக்கும் போது அது நன்றாக ஊறி இருக்கும்.
குழந்தை பிறந்து 3 ஆவது நாளில் குழந்தை பெற்ற பெண்களை நன்றாகச் சுடுநீரில் குளிக்க வார்ப்பார்கள். மதியச் சாப்பாட்டின் பின் இந்த ஊற வைத்த பொருட்களை வடித்தெடுத்து அப்பொருள்களை இவையெல்லாம் ஊறிய தென்னஞ்சாராயத்தில் இருந்து ஒரு தேக்கரண்டி எடுத்துக் குடிக்கக் கொடுப்பார்கள்.
அதன் பின் இந்த ஊறிய வேதிப் பொருட்களை நன்றாகக் காய வைத்து இடித்து மாவாக்கி குழந்தை பெற்ற தாய்மாருக்கு மாதவிடாய் ஏற்படுகின்ற காலத்தில் தேனில் கலந்து 3 உருண்டைகள் உருட்டிக் கொடுப்பார்கள்.
பெண்களைக் குளிக்க வார்ப்பதை வேது வார்ப்பது என்பார்கள். அதற்கு வேப்பம் பட்டை, வேப்ப இலை, ஆமணக்கு, ஆடாதோடை போன்றவற்றை அவித்த நல்ல சூடான நீரை இடுப்புப் பகுதிக்கெல்லாம் ஊற்றிக் குளிக்க வார்ப்பார்கள்.
வேர்க்கொம்பு, பரங்கிக்காய், கருவேலம் பட்டை, அசமதாகம், மஞ்சள், வெள்ளைப் பூண்டு, மிளகு, திப்பிலி போன்ற பொருட்கள் மாத்திரமே ஊற வைத்து மண்ணுக்குள் புதைக்காமல் கொடுக்கின்ற வழக்கம் ஏறாவூரில் இருக்கின்றது.
இவ்வாறெல்லாம் கொடுப்பது மட்டுமல்ல. பத்தியக்கறி என்று சரக்குச் சாமான்களாலேயே தூள் செய்து அந்தத் தூளிலேயே தாய்க்கு உணவு சமைத்துக் கொடுப்பார்கள். ஒரு மாதத்துக்குக் குஞ்சுக் கோழி, மீன், முருங்கைக்காய் என்று பார்த்துப் பார்த்துச் சமைத்து உண்ணக் கொடுப்பார்கள்.
ஒரு குழந்தை பிறக்கும்போது, அங்கே ஒரு தாயும் பிறக்கிறாள். பழைய ஆரோக்கியத்தை மீட்டெடுக்கவும், புதிய பொறுப்புகளைச் சுமக்கத் தயாராகவும் அந்தத் தாய்க்கு ஓய்வும், சத்தான உணவும், எல்லாவற்றிற்கும் மேலாக அன்பான அரவணைப்பும் மிக அவசியம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.