• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  செவ்வாய், 23 செப்டம்பர், 2014

  திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன இலாபம்

            


  திரு! திருந்தாத ஜென்மம் என்பது பல சமூகநலவாதிகள் முடிவு. ஆனால், திருவே என் பாசவிளக்கு பண்புள்ள மகன். என் காலடி மண்ணில் பூசை செய்யும் அன்புப் பண்பாளன் இது தாயாரின் மன எண்ணம். யார் அந்தத் திரு? 
               
                     ராஜி பால் நிறக் கன்னங்களில், கண்ணீர் கண்மையின் நிறங்கலந்து சாரைசாரையாக வரிபோட்டது. வழிகின்ற கண்ணீரைத் தேக்கி வைத்திருந்தால், குளமொன்றை அடையாளச் சின்னமாகக் கட்டி வைத்திருக்கலாம். விடியாது எனக்கினி பொழுதுகள் இவ்வாழ்க்கைக்கு விடை தேடவேண்டியது அவசியம் என விக்கி விக்கி அழுதாள், மாரிக்குளிரில் விறைத்துத்தான் போனாள். முழங்காலைத் தொட்டுவிடும்படி பனிப்படுக்கை வீதியை ஆக்கிரமித்திருந்தது. வீட்டுவாசலில் நின்று 

  "மாமி கதவைத் திறவுங்கள்..... எனக்கு கை சரியாக விறைத்து விட்டது. உடம்பெல்லாம் குத்துது..... கால் விரல்களெல்லாம் விறைத்துவிட்டது. தயவுசெய்து கதவைத் திறங்க மாமி. உள்ளுக்கு வந்து கதைக்கலாம். பிளீஸ்... என்னால முடியல்ல. என்னால தாங்க முடியல.....ஜக்கட்டை எடுத்திட்டு வெளியில போறதென்றால் போறன். அதை எடுக்கவாவது கதவைத் திறவுங்கள்.....''

   பிரான்ஸ் மண்ணில் அன்றைய வெப்பநிலை – 18 பாகை காட்டியது. எந்தக் கல்நெஞ்சக்காரரும் குளிரில் வாடுவோருக்குக் கரைந்துவிடும் காலநிலை. ஆனால், ராஜி மாமியாரோ அதற்கு விதிவிலக்கு. இரும்பிதய இயங்திரமோ! அழுதழுது ஓய்ந்த ராஜி அவ்விடத்தில் சரிந்துவிட்டாள். அவ்வீடு நாடி வந்த அம்பிகைபாதம் அலறித் துடித்தபடி 

  "ராஜி...! ராஜி...! என்னாச்சு.....''

   வாசல் மணியை அழுத்தினார். கதவு திறக்கப்படவில்லை. ஒரு முடிவோடு இருப்பவர்களை எதுவுமே செய்ய முடியாது. கைத்தொலைபேசி போதுமே ஒரு உயிரின் உடனடித் தேவைக்கு. இலக்கத்தின் துணையோடு அம்புலன்ஸ் வாகனம் எதிரே வந்து நிற்க, உணர்விழந்த ராஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். 
           
          இயற்கையாகவே பெண்களுக்கு இரங்கும் குணமுண்டு என்பதெல்லாம் அனைவருக்கும் பொருத்தமில்லாத வாசகம். எழுதப்படும் பொன்மொழிகள் எல்லாம் எல்லோருக்கும் பொருந்தும் என்று சொல்லமுடியாதல்லவா! சூழ்நிலை, காலம், பரம்பரைக் குணம், வளர்ந்தவிதம் என ஆளுக்கு ஆள் வேறுபடும் என்பது இந்த ராஜி மாமியார் பகவதி மூலம் அறியப்படுகின்றது. 
         
        மருத்துவமனை மருத்துவம் பார்த்த பின்புதானே மற்றவை பற்றிப் பேசும். இது உடல்நிறம் போல் மனநிறமும் கொண்ட வெள்ளயைர்கள் தயாள குணத்தின் ஒரு வடிவம். படிவங்கள் நிறப்பி அளித்த பின் ராஜி அருகே வந்தார் சேகர்.

  "என்னம்மா நடந்தது....''

  "அழுகையைத் தவிர வேறு எதுவுமே பேசமுடியவில்லை. வெளியே விட்டுக் கதவைச் சாத்திவிட்டார்கள்...''

  "வீட்டில் திரு நின்றானா?

  "ம்...ம்....''

  "திருந்தாத ஜென்மம்....''

  "நீ கவலைப்படாதே.... இது நீ இரண்டாவது ஆள்.... இதற்கு முன்னும் ஒரு பிள்ளையைக் கல்யாணம் செய்து, அந்தப் பிள்ளையிலும் சந்தேகப்பட்டு துரத்தி விட்டிற்றுதுகள். (மனிதன் மிருகமாவது மற்றவர்கள் வார்த்தைகள் உணர்த்தும்) கவலைப்படாத நான் பார்த்துக் கொள்ளுறன். படுத்திரு ... நாளைக்கு வாரன். வந்து கூட்டிற்றுப் போறன்''

  அங்கிருந்து நகர்ந்த அம்பிகைபாதம் திருவிற்குத் தொலைபேசி எடுத்தார். நடந்த விடயங்களை விளக்கமாக திருவிற்கு எடுத்துரைத்தார்.

  "நீங்கள் இதில் தலையிடாதீங்க அண்ண..... அவள் நடத்தை கெட்டவள். அவளிட கதையைக் கதைக்காதீங்க.... இனி அவள் இந்த வீட்டு வாசலை மிதிக்கக் கூடாது. எக்கேடு கெட்டாவது போகட்டும்''

  "என்னடா திரு! உன்னக் கல்யாணம் பண்றதுகள் எல்லாரும் நடத்தை கெட்டதுகளா? பெண் பாவம் பொல்லாதது. வீணா அந்தப் பிள்ளையில பழி போடாத. கல்யாணத்துக்கு முதல் நடந்த விசயமெல்லாம் இப்ப எடுத்து வச்சு கதைக்கிறாய். இங்க யாருதான் இளம் வயதில காதலிக்கல்ல. பெரிசா இதைப் பிடிச்சுக் கொண்டு நிக்கிறா... போ.... அந்தப் பிள்ள ஆஸ்பத்திரியில கிடக்குது. கணவன் என்ர முறையில நீதான் பார்க்க வேண்டும்....''

  "வேற கதை இருந்தாக் கதையிங்க... இல்லாட்டி ரெலிபோனக் கட் பண்ணிப் போடுவன்.....'

  மிருகத்துடன் பேசலாம். இந்த மனித ஜென்மத்துடன் பேச முடியாது என்ற முடிவுடன் வீட்டிற்குச் சென்ற அம்பிகைபாதம், அடுத்தநாள் தன் வீட்டிற்கு ராஜியை அழைத்து வந்தார். 

  இத்தனைக்கும் காரணம்தான் என்ன? பாடசாலைக் காலங்களில் பருவக் காதலுக்கு அடிமையானாள் ராஜி. காதல் ஏற்றத்தாழ்வு பார்ப்பதில்லை, அழகு அறிவு தேடுவதில்லை, சாதி மதம் சாற்றுவதில்லை, சொல்லிக் கொண்டு வருவதில்லை. அவ்வாறே தொற்றிக் கொண்ட உணர்வினால், விசாகன் விருப்பத்திற்கு மறுப்புத் தெரிவிக்கவில்லை. ஆனால், மறுத்தனர் பெற்றோர் மணம் முடித்து வைத்தனர் திருவை. இன்று ஏதோ வழியில் காதுக் கெட்டிய ராஜி காதல் கதையானது  திருவிற்கும் தாயாருக்கும் பொல்லாக் கொலைக் குற்றமாய்ப் பட்டது. கல்யாண பந்தத்தின் பின் கருத்தில் சிறிதும் தன் காதலுக்கு இடந்தராது, கட்டியவன் மனதுக்கேற்ப பாரிஸ் நகரில் வாழப் பழக்கப்பட்டாள். வீட்டுக்கருமம் பார்த்து,  தான் வாழவேண்டுமானால், தான் வேலைக்குச் சென்று உழைக்க வேண்டும் என்ற கட்டளைக்கும் கட்டுப்பட்டு, மாமியார் கண்டிப்புக்கும் வழிவிட்டு வாழ்ந்து வந்தாள். 
                      
                      எப்படித்தான் ஒரு பெண்ணாள் இப்படி அடிமையாக வாழமுடியும். சுடுநீரில் குளிப்பதற்குத் தடை, இருக்கும் அறையில் வெப்பமூட்டி பயன்படுத்தத் தடை, தொலைபேசியில் பேசுவதற்குத் தடை, தடை....தடை....தடை.... எல்லாவற்றிற்கும் தடை. இவை எல்லாவற்றிற்கும் மேல் இப்படியொரு பழி. 
             
                    அம்பிகைபாதம் தம்பதியினர் இவள் நிலைதனை நினைத்துப் பல தடவை அந்த கல்லைக் கரைக்கப் பார்த்தனர். முடியவில்லை. இதற்கு முவுதான் என்ன?

                   பல முயற்சியின் பின்  ராஜியை மனதால் நினைத்து மறக்காது வாழ்ந்து கொண்டிருக்கும் விசாகன் இருக்கும் இடம் அறிந்தனர். ஆண்டவன் போடும் கணக்குப் பிழைப்பதில்லை. அபலைப் பெண்ணுக்கு வாழ்வு பிழைப்பதில்லை. அம்பிகைபாதத்தின் அயராத உழைப்பினால், விசாகன் விருப்பத்தை அறிந்து மகிழ்ச்சியின் உச்சத்தைத் தொட்டார் அம்பிகைபாதம். காதல் பிரிவொன்று கண்டாலும் ஒரு மெல்லிய இழையாய் தொடர்பு இருந்து கொண்டே இருக்கும். உண்மைக் காதல் உருவின்றி மனதுக்குள் வாழும். 
             
                         பொருத்தம் பார்த்துக் கட்டிய தாலி, நீதிமன்றம் பார்த்து அறுந்தது. மனது பார்த்து இணைந்த காதல் இறுதிவரை நிலைக்கவே பாரிஸ் மாநகரிலே பிரபல மண்டபத்திலே பலபேரை அழைத்து, குற்றஞ்சாட்டியவனுக்கு சாட்டையடி கொடுக்கும் வகையாக பிரபல்யமாக ராஜி கழுத்தில் விசாகன் தாலி வீற்றிருந்தது. வாழ்த்த வந்தோர் மனதில் உச்சத்தின் மகிழ்வு பிரதிபலித்தது. "கடவுள் போல் வந்தாய் தம்பி. அந்த நரகத்திலிருந்து ராஜியை மீட்டாய். நீங்கள் நல்லாய் வாழணும். இந்தப் பிள்ளை இனியாவது சந்தோஸமாக இருக்கணும்''

  வாழ்த்துக்கள் பலம் பெறட்டும் என நாமும் மனமார வழ்த்துவோம்.
  ஞாயிறு, 21 செப்டம்பர், 2014

  Versatile Blogger Award  விருதை விரும்பார் உலகில் யார் உண்டு! எண்ணமெல்லாம் எழுத்தாக்குகின்றோம். அதை ஏற்பவர் யார்? எடுத்தாள்பவர் யார்? ஏதிது எம்மை இம்சைப்படுத்துகின்றதே என்று எடுத்தெறிவார் யார்? புரியாது தான். ஆனாலும் உறக்கமின்று உள்ளத்தை வெளிப்படுத்த கணணி விசைப்பலகையை தடவிக் கொண்டேதான் இருக்கின்றோம். காட்சிப் படுத்திக் கொண்டுதான் இருக்கின்றோம். ஏற்பாரும் உண்டு சட்டை செய்யாது போவாரும் உண்டு.
                   
  என்ன இது வலை உலகில் ஏதோ விருதொன்று உலாவுகிறதே ....
  நினைத்தேன். அதற்குள் எனக்கும் ஒரு விருது என் முகநூலை தட்டியது. விட்டுவிட முடியுமா? விருதாச்சே. விரும்பி ஏற்றேன். இதை எனக்காய் வழங்கி மகிழ்ந்தவர் கோவைக் கவி. வழங்கியது மட்டுமா. ஏற்றுப் பின் கொடுக்க என்று எச்சரிக்கையும் வைத்துவிட்டார். அது மட்டுமா என்னைப் பற்றி பிறருக்கும் எடுத்துரைக்க வேண்டும். அதற்கும் சம்மதம். இது என்ன கல்லுடைத்து நார்பிழியும் வேலையா? எழுத்துத் தானே எம்மோடு ஒட்டிக் கொண்ட பிப்பல்லவா


                                  விருது வழங்கியவர்
                                      http://kovaikkavi.wordpress.com/
   என்னைப்பற்றி

  இலங்கை மண்ணில் ஏர் ஊர் என்னும் பெயர் மருவிய ஏறாவூர் என்னை பெற்றெடுத்தது. வேலுப்பிள்ளை என்னும் தந்தையாரும் பரமேஸ்வரி என்னும் தாயாரும் என்னுடல் உருவாக உதிரம் தந்தார்கள். 
  ஊருக்காய் உழைத்தார் என் தந்தை. என் வாழ்வுக்காய் உழைத்தார் என் தாய். நான்கு பிள்ளைகள் நலமாக வாழ இருவர் வளமும் இணைந்ததனால், கல்வி தொடர்ந்தேன். பேராதனை பல்கலைக் கழகம்  நான் பட்டம் சுமக்க இடம் தந்தது. தொடர்ந்து கல்வியியல் டிப்ளோமா பட்டத்தையும் நுகேகொட பல்கலைக் கழகம் தந்தது.

  தொடரும் என் தமிழ்  தாகம் தீர்க்க ஆசிரியர் தொழில் என்னை அணைத்துக் கொண்டது. அன்பான மாணவர்களின் பாச மழையும், ஆத்மார்த்த தொழிலும் திருமண பந்தத்தால் முறிவடைந்தது. ஜேர்மனிய மண் மீண்டும் வளர்ப்புத் தாயானது. மீண்டும் மொழித் தாகம் ஜெர்மன் மொழியில் தவித்ததனால் கற்றேன். இங்கு கணவன் ஒரு மகளுடன் வாழ்கிறேன். ஆனாலும் மூச்சுக் காற்றை நிறுத்த முடியுமா? மொழி மேல் கொண்ட காதலை தவிர்க்க முடியுமா? எழுதுகிறேன் ..... எழுதுகிறேன்......எழுதுகிறேன்....

  பெற்ற விருதை யாருக்கு வழங்கலாம் என்றுநினைத்த போது, எம்மை நேசிப்பாரை நாம் நேசிக்க வேண்டும் அல்லவா! தமிழோடு நான் வாழ்ந்ததற்கு அடையாளமாகவும் என் தொழிலுக்கு அத்தாட்சியாகவும் இன்றும் எழுதி என்னை மகிழ்விக்கின்ற என் அருமை மாணவர்கள் இருவர் வலையை அறியாதவர்கள், அவர்களை அறிய வேண்டும். அவர்கள் திறமைகள் பாராட்டப்பட வேண்டும். ஊக்கத்தினால் அவர் திறமைகள் மேல் செல்ல வேண்டும் என்னும் மனவிருப்பில் மனமகிழ்ந்து இவ்விரு வலைகளுக்கும் இவ்விருதை வழங்குகின்றேன்.

                              1. http://is2276.blogspot.de/  இவரின் இப்பதிவைப் படித்துப் பாருங்கள்

                         2. http://tkaandeepan.blogspot.de/  இவரின் இப்பதிவைப் படித்துப் பாருங்கள் 


  அடுத்து நான் கொடுக்க விரும்புபவர்

                      3. http://indianreflects.blogspot.com/  இவர் என் மாணவர் அல்ல. ஆனால், இவர் பதிவுகள் எனக்கு மிகப் பிடிக்கும். "தவறு செய்யாத மனிதனே இல்லை..தவறிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளாதவன் மனிதனே இல்லை.." என்னும் இவர் கொள்கையும் நாட்டிற்க்கு ஏதும் நல்லது நடக்காதா? உண்மை நின்றிடாதா? மனிதன் சிந்தனை மாறிடாதா? உலகம் புத்துயிர் பெற்றிடாதா? என ஏங்கும் பலரில் ஒருவன். சுருக்கமாக, "உங்களில் ஒருவன்" என்னும் சிந்தனையும் அருமை


  மற்றையவர்கள் மிகப் பிரபல்யமானவர்கள். எப்பதிவு நான் இட்டாலும் முதலில் ஓடிவந்து தமது கருத்துரையை வழங்கிச் செல்வார்கள். அவர்களுக்கே என் விருதை வழங்க வேண்டும் என்று மிக ஆசைப்படுகின்றேன். நிச்சயமாக இவ்விருது அவர்கள் பெற்றிருப்பார்கள் என்பது நிச்சயம். ஆனாலும் பல முறை விருது பெறுவது என்ன கசக்குமா?
                                                     
                                     4. http://yaathoramani.blogspot.de/                           5. http://karanthaijayakumar.blogspot.com/  வெள்ளி, 19 செப்டம்பர், 2014

  அறை  மன அறையுள் அறை அழுக்கிட்டு
  நடிப்பு அறையால் மறைத்திருப்போர்
  நட்பு அறையை அறையாய் 
  அமைப்பது எப்படி?

  பொருள்: 

  மனமென்னும் சுரங்கத்தினுள் வஞ்சனை என்னும் அழுக்கைப் போட்டு நடிப்பென்னும் திரைச்சீலையால் மறைத்திருப்பவர்கள் நட்பு என்னும் கட்டிடத்தைப் பாறைபோல் உறுதியாக அமைப்பது எப்படி?

  1. சுரங்கம்
  2. வஞ்சனை
  3. திரைச்சீலை
  4. கட்டிடம்
  5. பாறை

  தெளிவுரை:

  நிலக்கரி, தங்கம் போன்றவை தோண்டி எடுக்கும் இடம் சுரங்கம் எனப்படுகின்றது. மனிதன் பிறக்கும் போது மனம் என்னும் ஆழச்சுரங்கத்தினுள் தங்கம், வைரம் போன்ற எண்ணங்களும் உணர்வுகளும் உருவாகக் கூடிய வெற்றிடமாகவே அமைந்திருக்கும். அத்துடன் மனிதர்கள் எல்லோரும் நல்லவர்களாகவே பிறக்கின்றார்கள். வளருகின்ற சூழல், வளர்க்கப்படுகின்ற தன்மை, அவர்களை தீய வழிக்கு இட்டுச் செல்லுகின்றது. இவ்வாறாக சந்தர்ப்பம் சூழ்நிலையால் மாசு பட்ட மனத்தினுள் வஞ்சனை எனப்படுகின்ற அழுக்கைப் புதைத்து வாழுதல் எல்லோருக்கும் இலகுவாகவானது. ஏனெனில், மனதை அறியும் கருவி உலகில் படைக்கப்படவில்லையே. மனமென்ன பேசும், மனமென்ன கருதும் என்பதை மதிப்பிடும் வல்லமை பிறருக்கு கிடையவே கிடையாது. அதனாலேயே நடிப்பென்னும் திரைச்சீலையால் தம் உள் மனதை மறைத்து வெளிவேடம் போட்டு, உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் உத்தமர்கள் உலகில் பலராகப்படுகின்றனர். 

                 மனிதர் தமது இயல்பான உண்மை நிலையினை மறைத்து வாழ்தலே நடிப்பெனப்படுகின்றது. இங்கு நடிப்பென்னும் திரைச்சீலை என்று நடிப்புக்கு திரைச்சீலை உருவகிக்கப்பட்டுள்ளது. மனிதன் மனதில் தோன்றும் நடிப்பு என்னும் திரைச்சீலையானது இலகுவில் விலக்கப்படக்கூடியதே. ஒரு மனிதன் மனதில் நல்லெண்ணங்களை விதைத்தல், நல்லறிவூட்டும் நூல்களைக் கற்றல், யோகா போன்ற ஞானப்பயிற்சிகள் செய்தல், தன் முயற்சி மூலம் நல்லவனாக மனதால் சிந்தித்தல், பொன்ற காரியங்களைச் செய்வதன் மூலம் நடிப்பென்னும் திரைச்சீலையை அகற்றலாம். இதனாலேயே நடிப்பானது திரைச்சீலை எனப்படுகின்றது. இந்நடிப்பெனும் திரைச்சீலை கொண்டு வாழ்வோர் நட்பெனும் மாபெரும் கட்டிடத்தைக் கட்டியெழுப்ப முடியாதவர்களாகி விடுகின்றனர். இதனையே வள்ளுவப் பெருந்தகையும்

  'மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும் 
   ஒருவுக ஒப்பிலார் நட்பு''

  என்கின்றார். அதாவது மனதிலே மாசு இல்லாதவர்களையே நண்பர்களாகப் பெற வேண்டும். மாசு உள்ளவர்களுடைய நட்பை, விலை கொடுத்தாவது விலக்கிட வேண்டும். இதனையே இப்பொறிக்கவிதையானது மனதினுள் வஞ்சனையை நிறைத்துக் கொண்டு, நண்பர் போல் நடிப்பவர்கள் நட்பென்னும் அற்புத உறவை உறுதியாகப் பெற முடியாது என வலியுறுத்துகின்றது. 

  திங்கள், 15 செப்டம்பர், 2014

  இன்றைய சிந்தனை (15.09.2014)  படித்தறியும் அறிவை விட பட்டு  அறியும் அனுபவம் பசுமரத்தாணி போல் மனதில் பதிந்து விடும். இதனாலேயே காட்சிப்படுத்தும் கல்வி முறை வழக்கத்தில் வந்தது. 

  ஒரு முதியவர் இறக்கும் போது ஒரு நூலகமே அழிகிறது எனலாம். அனுபவம் தரும் பாடம் அனுபவத்ஹின் மூலமே பெற முடியும்.

  வழக்கறிஞனால் சாட்சிகளின் மூலம் வழக்கைத் திசை திருப்ப முடியும். எழுத்தாளனால் சான்றுகளின் மூலம் வரலாற்றைப் புரட்டிப் போடா முடியும் 

  சனி, 13 செப்டம்பர், 2014

  அடையாளப்படுத்தல்  வாழ்வின் அத்தியாயங்கள் ஒருநாள் மறைந்துபோம். வாழ்வின் தடயங்கள் ஒருநாள் அழிந்துபோம். வாழ்க்கையின் ஆதாரங்கள் நிலைப்பது கலைஞன் வாழ்க்கையில் மட்டுமே. 

             பெற்ற பிள்ளைகளும் பரம்பரையை மறந்துபோம். தந்தையின் தந்தை பெயர் வரை பரம்பரை ஞாபகங்கள் நிலைத்திருக்கும் அதன்பின் வாழ்ந்தோம் என்பதற்கு அடையாளமே இல்லாமல் போய்விடும். வாழ்ந்தே ஆகவேண்டுமென வாழ்க்கை சொல்கிறது. வாழ்க்கையின் ஆசைகளும் கூடிக்கொண்டே போகின்றது. தடுத்து நிறுத்த எண்ணுகையில் புதிதாய் ஒன்று பிறப்பெடுக்கின்றது. புதுமையாகத்தான் இருக்கின்றது. ஆனால், புரியாமலே போகின்றது. பிறப்பவர் யாவரும் ஞானிகள் இல்லை. பிறந்தவர் யாவரும் மேதாவிகளும் இல்லை. விஞ்ஞானிகளும் இல்லை. அடையாளப்படுத்தல் தேவை என்றால், அடையாளம் தேடவேண்டும். அடையாளப்படுத்தல் என்பது எம்மால் இயன்ற வரை எம்மை நாமே அடையாளப்படுத்துவோம். அப்போது நாமில்லா உலகில் நம்மைப் பற்றிப் பேசுவார் உலகில் பலர். 

  வியாழன், 11 செப்டம்பர், 2014

  பணம், பணம், பணம் பணமில்லையேல் பிணம், பிணம், பிணம்

              

  கருவிகள் ஆயிரம் இருந்தும் கைக்கொள்ளும் வசதிகள் உண்டா?
  வாழ்வில் ஆசைகள் பலவிருந்தும் ஆண்டுகொள்ளும் திறன் உண்டா? 
  வெளிமனது சிரிக்க உள்மனது அழும் மனிதர்கள் உலகில் பலருண்டு
  புரிந்து கொண்டும் பகிர்ந்திடாத மனிதர்கள் பலரும் உலகில் உண்டு 
  ஆசைகள், அன்புகள்;, மகிழ்வுகள், அனைத்திற்கும் தேவை நோட்டு 
  இதை தெரிந்தே மனிதர் பெரிதென்று தெரிவிக்காது மறுக்கின்றார்
  நோட்டுக் கட்டை நீட்டி நீட்டிக் காரியத்தை முடிக்கின்றார்
  நோட்டுத் தேவையில்லை என்று நீட்டி வசனம் உரைக்கின்றார்.
  நோட்டு மட்டும் தேவை என்று எவரும் இன்று நினைப்பதில்லை
  அன்பு மட்டும் போதுமென்று எவரும் இன்று வாழ்வதில்லை
  ஆன்மீகத் துறவிகளும் ஞானிகளும் கூட அளவின்றி சேர்க்கின்றார்
  அநாதைகள் வாழ்வுக்கும் ஆச்சிரமத் தொண்டுக்கும் தேவை என்றே
  அளவு இல்லாது சேர்க்கின்றார் ஆனந்தமும் அவர் கொள்கின்றார்.
  அன்பைப் பெறவும் அன்பை ஆதரிக்கவும் அதுதானே தேவை
  வாரிசுகள் மனமகிழ, வசந்தம் தேடிக்கொள்ள, வசதிகள் பெற்றுயர 
  புதுமைகள் நாட, புகழைத் தேட, புதியவை கைவர, 
  தேவை... தேவை.....தேவை.....தேவை.....பணமது தேவை 
  பலருக்கு உதவ, பண்பாளனாய் உலாவ கத்தைகத்தையாய் தேவை
  இரவிரவாய் கண் முழித்து பணத்தைத் தேடும் மனிதன்
  பகலெல்லாம் பகட்டுக்காட்டிப் பலரையும் ஆசையில் ஆழ்த்துவான்
  பணம் தேவையில்லை பாசம்தான் தேவையென பரிந்துவேறு உரைத்திடுவான்
  பாரில் இது இல்லையென்றால், பாரதி வாழ்வு போலாகும்
  தானும் வாழ்வை இழந்து தன் குடும்பமும் தத்தளிக்கும்
  நாம் இல்லாத உலகினிலே நமக்காய் சிலை வடிப்பார்
  இறந்தும் நாம் வாழ்கின்றோமென எவரெவரோ புகழ் உரைப்பார்
  கேட்பதற்கும் நாமில்லை, மகிழ்ந்து கொள்வதற்கு நாம் வாழ்வதுமில்லை

  அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

    இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...