4ஆம் ஆண்டு அரையாண்டு சான்றிதழின் அடிப்படையில் 5 ஆம் ஆண்டுக்கான பாடசாலை தெரிவுசெய்யப்படும். 4ஆவது வருட அரையாண்டு சான்றிதழின்போது வகுப்பாசிரியர் மாணவர்களின் பெற்றோரைத் தனிப்பட்ட முறையில் அழைத்து அவரவர் எப்பாடசாலைக்குப் பதிவு செய்வதற்கான தகுதியைப் பெற்றிருக்கின்றார்கள் என்பதை விளக்கிச் சொல்வார். அதன்படி பெற்றோர் பிள்ளைகளை அடுத்துவரும் கல்வி ஆண்டுக்கான பாடசாலைகளைத் தெரிவு செய்வார்கள். அவை தொடர்முன்னணிப் பாடசாலை (weiterführendeschule) என்று அழைக்கப்படுகின்றன.
அவை Gymnasium, Realschule, Gesamtschule, Hauptschule என நான்காகப் பிரிக்கப்படும். இதைவிட Sonderschule என்னும் பாடசாலையில் மூர்க்கத்தனமான கற்றல் கடினமான, அல்லது வலது குறைந்த பிள்ளைகள் கற்பதற்காக அனுப்பப்படுகின்றனர்.
Primarstufe:
இதுவே Grundschule என அழைக்கப்படுகின்றது. 1 தொடக்கம் 4 ஆம் வகுப்பு வரை இப்பாடசாலையில் மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இப்பாடசாலையானது பாடசாலைப் படிமுறையின் முதற்கட்டமாக அமைகின்றது. இங்கு வகுப்பில் கற்றல் திறன் குறைந்த மாணவர்களைத் தெரிவுசெய்து அவர்களின் கற்றல் திறன் குறைந்த முக்கிய பாடங்களுக்கு மேலதிக பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன. இதைவிட ஒவ்வொரு பாடசாலையிலும் offene ganztagsschule அமைந்திருக்கின்றது. இது காலை 7.30 தொடக்கம் 16.00 மணிவரை திறந்திருக்கும். இது பாடசாலையில் ஒரு பக்கத்தில் அமைந்திருக்கும் அவ்வப் பாடசாலைக்குரிய ஒரு கட்டிடமாக இருக்கின்றது. இங்கு வேலைக்குச் செல்லும் பெற்றோர்கள் அல்லது பாடசாலை வீட்டுவேலைகளை (Hausaufgaben) பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுப்பது கடினமான பெற்றோர்கள் தமது பிள்ளைகளை இங்கு விடுவார்கள். பிள்ளைகளும் பாடசாலை 8.10 க்கு ஆரம்பிக்கும் முன்னும் பாடசாலை விட்டபின்னும் 16.00 மணிவரை இப்பாடசாலையிலேயே இருப்பார்கள். இங்கு பிள்ளைகளுக்கான மதிய உணவு வழங்கப்படுகின்றது. விளையாட்டுக்கள் சொல்லிக்கொடுக்கப்படுகின்றன. வீட்டுப்பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. 1 தொடக்கம் 4 ஆம் வகுப்பு வரையுள்ள இப்பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள், புள்ளித் தராதரம் அடிப்படையில் ; Sekundestufe 1 க்கு அனுப்பப்படுகின்றார்கள்.
Sekundestufe 1:
இப்பாடசாலைகளே அடிப்படைக்கல்விக்கும் பல்கலைக்கழகக் கல்விக்கும் இடைப்பட்ட பாடசாலைகளாகக் காணப்படுகின்றன. இப்பாடசாலைகளிலேயே மாணவர்கள் தம் எதிர்கால வாழ்க்கைக்குத் தம்மைத் தயார்ப்படுத்தும் நடைமுறைகளில் ஈடுபடுவர். ஆசிரியர்கள் ஏனைய நிறுவனங்கள் போன்றவை அவர்களை நெறிப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள்.
இப்படிமுறையிலேயே 5 தொடக்கம் 10 வரையுள்ள வகுப்புக்கள் அடங்குகின்றன. பாடசாலைகளும் Gymnasium, Realschule, Gesamtschule, Hauptschule என நான்காகப் பிரிக்கப்படுகின்றன. 9 அல்லது 10 ஆம் வகுப்பில் பாடசாலை இப்படிமுறை முடிவடைந்துவிடுகின்றது.
Sekundestufe 2:
11 தொடக்கம் 12 வரையுள்ள வகுப்புகள் இப்படிமுறையில் அடங்குகின்றன. இக்கல்வியை Abitur என்று அழைப்பார்கள். இவ்வகுப்புக்களை Gymnasium, Gesamtschule இல் கல்வி கற்கும் மாணவர்கள் அப்பாடசாலையிலேயே தொடர வாய்ப்பிருக்கின்றது. ஆனால், Hauptschule, Realschule வில் கல்வி கற்கும் மாணவர்கள், 10 ஆம் வகுப்பை சித்தியடைந்திருந்தால் Gymnasium, Gesamtschule ஆகிய இவ்விரண்டு பாடசாலைகளிலும் தமது Abitur கல்வியைத் தொடர்வார்கள். அல்லது Hauptschulabschluss, Realschulabschluss பெற்று தமது தகுதிக்கேற்பவும் விருப்பத்திற்கேற்பவுமான தொழிற்கல்விக்கான பயிற்சியைப் பெறுவதற்குத் தயாராவார்கள். இது பற்றிப் பின் விபரமாகப் பார்க்கலாம். Gymnasium, Gesamtschule ஆகிய இவ்விரண்டு பாடசாலைகளிலும் தமது Abitur செய்வதற்குரிய தராதரத்தைப் பெற்றிருக்காத பட்சத்தில் beruflichen Schulformen, Berufskollegs, Fachoberschulen oder Berufsoberschulen சென்று தமது தொழில் வாய்ப்புக்கான கல்வியைத் தொடர்வார்கள். அல்லது இங்கு Abitur செய்து பல்கலைக்கழகம் செல்வதற்குரிய வாய்ப்பைப் பெறுவார்கள்.
Zweiter Bildungsweg :
கல்வியைப் பாடசாலைகளில் தொடராது விட்டவர்கள், வேறுநாடுகளில் இருந்து வந்தவர்கள், பாடசாலைக்கல்விக்குரிய வயதைக் கடந்தவர்கள், இங்கு கல்வி கற்பதற்குரிய வாய்ப்பைப் பெறுகின்றனர். Hauptschulabschluss, Realschulabschluss பெறவும், Abitur திரும்பப் படிப்பதற்கும் பல்கலைக்கழகம் செல்வதற்கும் வாய்ப்பிருக்கின்றது. இது இரவுப்பாடசாலையாகவும் volkshochschule போன்ற பாடசாலைகளாகவும் அமைகின்றன. இங்கு பலவிதமான பாடப்பிரிவுகள் கற்பிக்கப்படுகின்றன.
ஒவ்வொரு மாணவர்களும் 18 வயதுவரை கட்டாயக்கல்வி கற்கவேண்டியது அவசியமாகின்றது. இதற்கு ஒவ்வொரு பிள்ளைகளின் பெற்றோர் அல்லது பராமரிப்பாளர் பொறுப்பாகின்றார். இக்கட்டுப்பாடு ஜேர்மனிய வதிவிட உரிமை பெற்ற பிள்ளைகளுக்கு மட்டுமல்ல, இங்கு வாழுகின்ற அனைத்து வெளிநாட்டுப்பிள்ளைகளுக்கும் கூட அமைகின்றது.
ஒவ்வொரு பாடசாலைகளினதும் நடைமுறைகள் பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.