உலகப்படைப்புக்களின் உன்னதப் படைப்பு மனிதப்படைப்பு. ஆணும் பெண்ணும் மனதால் ஒன்றுபட்டு வாழும் வாழ்க்கையே கணவன் மனைவி பந்தமாகின்றது. சமூக அமைப்பு உருவாகாத காலத்தில் யாரும் யாரொடும் வாழலாம் என்றிருந்தது. ஆனால், குடும்பம் என்று வருகின்ற போது ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட சமுதாயத்தின் மூலமே உருவாக வேண்டிய அவசியம் கருதி திருமணநடைமுறை உலகிலே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. ஆதிகாலத்தில் களவு மணத்தில் காணப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்யும் முகமாக ஆரியருடைய வரவின் பின் மாமுது பார்ப்பன் மறைவழி காட்டிடத் தீவலம் வந்ததுடன் அருந்ததி காட்டல் என்ற வட இந்திய மரபு சேர்ந்து திருமணங்கள் நடத்தப்பட்டது.
ஒரு ஆணும் பெண்ணும் இணைகின்ற நாளதை, நல்லநாளாகப் பஞ்சாங்கம் பார்த்துக் குறித்து, உற்றார் உறவினர்கள், நண்பர்களுக்கு அழைப்பு விடுத்து, அழகான மண்டபம் ஒழுங்கு செய்து, பல ஆயிரங்களை செலவு செய்து ஆணும் பெண்ணும் அழகுப் பதுமைகளாக அலங்கரித்து பெரும் விழாவாகத் திருமண விழாவை நடத்தி, அர்ச்சதை தூவி வாழ்த்துக்களை வாரி வழங்கி இரு மனங்களை ஒன்றாகச் சேர்த்து நல் மங்கலவிழாவாக திருமணவிழாவை சந்ததி தளைக்க வேண்டும் என்ற பெரிய எதிர்பார்ப்புடன் பெற்றோர்கள் நடத்துகின்றார்கள். மற்றைய விழாக்களைவிட திருமணவிழாவில் பலரை அழைத்து வாழ்த்துப் பெறுவது மணமக்கள் சிறப்பாக வாழவேண்டும். எல்லோரும் திருமணத் தம்பதிகளை அறிந்து கொள்ளவேண்டும் என்னும் காரணத்தினாலேயே ஆகும்.
திருமணவாழ்க்கை என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணத்தின் முன் திருமணத்தின் பின் என்னும் திருப்பத்தை ஏற்படுத்தும் வாழ்க்கையாக அமைவது இயற்கையே. பிறப்பிலிருந்து வெவ்வேறுபட்ட குணநலன்களுடைய குடும்பங்களிலிருந்து பிரிந்து வந்து ஒரு குடும்பத்தை உருவாக்கியதற்குவதற்கு பற்பல விட்டுக்கொடுப்புக்கள், அர்ப்பணிப்புக்கள், பாரிய பொறுமை, சகிப்புத்தன்மை, புரிந்துணர்வு போன்றவை அவசியமாகின்றன. இத்தனை பண்புகளும் இணைகின்ற போதுதான் கணவன் மனைவிகளிடையே ஒருமித்த காதல் ஏற்படுகின்றது. அந்நியோன்யமான உறவு தோன்றுகிறது. நல்ல குடும்ப வாழ்க்கை அமைகின்றது. இவ்வாறு ஒரு குடும்பத்தைக் கட்டி எழுப்பி நிறுத்திய பின் அதை உடைத்தெறிய நினைக்கலாமா? ஆனால், இன்று பல குடும்பங்களிடையே கணவன் மனைவி வாழும் வாழ்க்கை தாமரை இலைத் தண்ணீர் போன்று ஒட்டியும் ஒட்டாதும் வாழும் வாழ்க்கையாக அமைந்து விடுகின்றது. சமூகத்துக்குப் பயந்து தமது பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கையை மனதில் நிறுத்திப் பல குடும்பங்கள் பெயருக்குக் கணவன் மனைவியாக வாழுகின்றனர். இது எதனையும் மனதில் கொள்ளாதவர்கள் ஒத்துவரவில்லை என்றவுடன் விவாகரத்தை பெற்றுவிடத் துடிக்கின்றார்கள்.
வாழ்க்கையின் பல பக்கங்களில் ஒன்றுதான் திருமணம் என்னும் பந்தம். யோசிக்காமல் முடிவு எடுத்துவிட்டோம். வாழ்க்கை என்பது ஒருமுறைதான் அதனை சண்டை சச்சரவுகளுடன் வாழ்ந்து முடிக்கலாமா? என்று நினைக்கலாம். திருமணம் செய்கின்ற போது பிரச்சினை வராது என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லையோ அதேபோல், விவாகரத்திலும் எந்தவித பிரச்சினைகளும் வராது என்பதும் உத்தரவாதமில்லை. அதனால்தான் விவாகப்பதிவின்போது ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக் கொடுத்து அவரவர் சந்தோசம் துக்கங்களில் பங்கு எடுத்து நாம் வாழ்வோம் என்று கூறி கையெழுத்து இடுகின்றார்கள். ஆனால், எப்படி பிரச்சினைகளை எதிர்கொள்வோம் என்று நினைத்து திருமணம் செய்பவர்களால் அப்படிப் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கு உறுதியாக இருக்கமுடிவதில்லை.
இருவரில் ஒருவருடைய விருப்பிலேதான் அதிகமான விவாகரத்துக்கள் நடக்கின்றன. ஒருவர் விருப்பிற்கு விட்டுக் கொடுப்பவர் ஏன் இப்படி நடந்தார் என்ற கேள்வியுடனேயே காலமெல்லாம் வாழுகின்றார். ஆண்கள் குடித்துத் தம் வாழ்க்கையை அழிக்கின்றார்கள். பெண்கள் மனஅழுத்தத்தினால் நோயாளியாகின்றார்கள். விவாகரத்தில் முக்கியமாகப் பாதிக்கப்படுபவர்கள் பிள்ளைகளே. இப்பிள்ளைகள் தீவிர நடத்தையுள்ள பிள்ளைகளாகவும், மன அழுத்தமுள்ள பிள்ளைகளாகவும், பாடசாலைகளில் மற்றைய பிள்ளைகளிடமிருந்து வேறுபடுத்திப் பார்க்கும் பிள்ளைகளாகவும் காணப்படுகின்றார்கள். வீட்டில் எமது சண்டைசச்சரவுகளைப் பார்த்து பிள்ளை கெட்டுவிடும் என்று நினைத்து விவாகரத்துப் பெறுபவர்கள், தாய்தந்தையரைப் பிரிந்து வாழும் பிள்ளைகளும் கூட மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டு நடத்தை கெட்டு வாழ்வார்கள் என்னும் உண்மையை அறிந்து கொள்ள வேண்டும். கைகளில் கத்தியால் காயங்களை ஏற்படுத்திக் கொண்டு, போதைவஸ்துக்கு அடிமைகளாகி, மனநிலை பாதிக்கப்பட்டுக் காணப்படும் பிள்ளைகளின் புள்ளிவிபரமானது கணிப்பின்படி தாய்தந்தையரின் பிரிவில் வாழ்கின்ற பிள்ளைகளே அதிகமாகக் காணப்படுபவர்களாகக் கூறுகிறது.
விவாகரத்துப் பெறத் துடிப்பவர்கள் கூறும் காரணங்கள் பலவகையாக காணப்படுகின்றன. சாதி, அந்தஸ்து, குடும்பப்பகை போன்ற காரணங்களைக் காட்டி எமது விருப்பம் இல்லாமல் பெற்றோர் பார்த்துச் திருமணம் செய்து வைக்கின்றார்கள். இதனால், எம்மால் மனதால் ஒத்துப் போக முடியவில்லை. எம்மிடையே ஒருமித்த கருத்துக்கள் இல்லை என்று கூறிப் பிரிபவர்கள் ஒருவிதமாகக் காணப்படுகின்றார்கள். திருமணத்தின் பின் அதிகமான வேலைப்பழு காணப்படுவதாகவும் வீட்டுவேலை முழுவதுமாக நானே செய்யவேண்டும். காதலிக்கும் போது இருவரும் இணைந்தே செய்வோம் என்றவர் இப்போது எந்தவித உதவியும் செய்வதில்லை. அவருடைய வேலையையும் நானே சேர்த்துச் செய்ய வேண்டியுள்ளது. இதனால், இருவருக்கும் இடையில் சண்டைசச்சரவுகள் அதிகமாக ஏற்படுவதாகவும் பிரியவேண்டிய மனநிலை ஏற்படுவதாகவும் சொல்கின்றார்கள். இவ்வாறு நினைக்கும் பெண் விவாகரத்தால் வேலைப்பழு இன்னும் அதிகமாகும் என்று உணர்வதில்லை.
ஐரோப்பிய நாடுகளில் வாழும் பெண்கள் ஆண்களை விட கல்விலும் தரத்திலும் உயர்வடைந்து செல்லுகின்ற சூழ்நிலையில், காதலிக்கும் போது இருந்த வேகம் கல்யாணத்தின் பின் இவருக்கு இல்லை. நானோ வேலைத்தளங்களில் படிக்குப் படி முன்னேறிக் கொண்டு போகின்றேன். இவருக்கு எந்தவித முன்னேற்றமும் இல்லை என்று அலுத்துக் கொள்ளுகின்ற பெண்கள் அதிகம். குடும்பமாக வாழும் தம்பதிகள் நினைக்கின்றார்கள் நாங்கள், எங்களுடையது என்ற ஒரு குடும்ப அமைப்பு இல்லையென்று. ஆனால், சேர்ந்தே வாழும் பெற்றோர்கள் வாழப்போகும் வருடங்கள் அதிகம் இல்லை என்பதையும் அவர்களால் வீட்டில் பாரிய வேலைப்பழு குறைவதையும், நல்ல அனுபவசாலிகளான பெற்றோர்களால், தமது பிள்ளைகள் சரியான முறையில் வளர்க்கப்படுவார்கள் என்பதனையும் இவர்கள் நினைத்துப் பார்ப்பதில்லை. ஐரோப்பிய நாடுகளில் அதிகமான விவாகரத்துக்குக் குறட்டை காரணமாகின்றது. இரவில் தூங்கமுடிவதில்லை. இதனால், பகலில் வேலைத்தளத்தில் சரியான ஒருமைப்பாட்டுடன் வேலை செய்ய முடிவதில்லை. இவருடைய காலுறை மணத்தைத் தாங்க முடியவில்லை. இவ்வாறான அற்ப காரணங்களுக்காகவெல்லாம் தற்காலத்தில் விவாகரத்து பெறுவது வழக்கமாகிவிட்டது.
தனித்து வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலையே விவாகரத்துப் பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைகின்றது. இதனாலேயே விட்டுக்கொடுப்புக்கள் இருவருக்கிடையில் இல்லாமல் போகின்றது. அர்ப்பணிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போகின்றது. ஒருவரில் ஒருவர் தங்கிவாழும் நிலைமை புலம்பெயர்ந்த தேசங்களில் இல்லாமல் போய்விட்டது. பணமோ, மற்றைய உதவிகளோ இலகுவாக அரசாங்கத்திடமிருந்து பெறக்கூடிய வாய்ப்புக்கள் இருப்பதனால், தங்கி வாழவேண்டிய சூழ்நிலையற்ற சுதந்திரத்தை ஆணும் பெண்ணும் பெற்றுக்கொள்ளுகின்றனர். ஆனால், இறுதி காலகட்டத்தில் எந்த உயிரும் ஒரு ஆதரவைத் தேடும். அந்த உறவு கணவனாக இருந்தால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும் என்று பெண்ணும், மனைவியாக இருந்தால் எவ்வளவு அணைப்பாக இருக்கும் என்று ஆணும் நினைத்துப் பார்ப்பதில்லை.
மணவாழ்க்கையில் பல எதிர்பார்ப்புக்கள் இருவரிடையேயும் இருப்பது இயற்கை. இதனை இருவரும் புரிந்து புரிந்துணர்வுடன் நடக்க வேண்டியது அவசியமாகின்றது. ஒட்டிய உறவை வெட்டிவிடுவது இலகுவானது. ஆனால், வெட்டியதைச் சேர்ப்பது இலகுவான காரியமில்லை. எதிர்காலத்தை நினைக்கும் போது அது பாரிய பிரச்சனைகளைக் கொண்டு வந்தே சேர்க்கும். இளந்தம்பதியினரின் சின்னச்சின்னப் பிரச்சினைகளுக்குப் பெற்றோர் தலையிடுதல் தவிர்க்கப்பட வேண்டியது அத்தியாவசியமாகின்றது. பெற்றோர் இருக்கின்றார்கள் என்னும் தைரியமே பிள்ளைகளுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டுகின்றது. பிரச்சினைகளை அவர்களே பேசித் தீர்த்துவைத்தால், இருவரிடமும் புரிந்துணர்வு மேம்பட வழிகிடைக்கும். குடும்பம் பிரச்சினை என்று ஓடினால், விவாகாரத்தின் பின் பிரச்சினை வராது என்பது என்ன நிச்சயம். பின் அப்பிரச்சினையைத் தீர்த்து வைக்க எங்கே ஓடமுடியும். தாங்கும் மனமும் விட்டுக்கொடுக்கும் பண்பும் தான் மனிதனைக் காலம் முழுவதும் சந்தோசமாக வாழவைக்க உகந்தது. இதனாலேயே மறுகன்னத்தைக் கொடு என்று யேசுநாதர் சொன்னார். இன்பத்தைப் பங்கு போட்டுக்கொள்ள நினைப்பது போல் துன்பத்தையும் சோகத்தையும் பங்கு போடமுடியும் என்றால்தானே திருமணத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். காதல் பலருடன் ஏற்படலாம். திருமணம் ஒருவருடனேயே இருக்க வேண்டும். அதனால், நன்றாக யோசியுங்கள். இருமனங்களின் பிணைப்பில் ஆயிரம் காலத்துப் பயிராகத் திருமணம் விளங்க வேண்டும் என்ற உறுதியுடனேயே திருமணத்திற்கு முடிவெடுங்கள். இல்லையென்றால், திருமணம் செய்யாது தனிமரமாக வாழ்வதே உத்தமம்.