• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  செவ்வாய், 31 டிசம்பர், 2019

  நாம் கொடுத்த வயது 2020  உருண்டு கொண்டிருக்கும் உலகத்திற்கு நாம் கொடுத்த வயது 2020. கோலாகலமாக ஒவ்வொரு வருடமும் மகிழ்ச்சியாகவே புதிய வருடத்தை வரவேற்கின்றோம். வருடங்கள் தோறும் நாம் புதிய தீர்மானங்கள் எடுக்கின்றோம். நடத்திக்காட்ட வழி தேடுகின்றோம். வழுக்கி விடுகின்றோம். புதிய தொழில்நுட்பங்கள், நாகரிகங்கள் வருடங்கள் தோறும் நிறைந்து விடுவதுபோல் மனங்களில் மட்டும் ஏன் மாற்றங்கள், தெளிவு. விரிவுபட்ட சிந்தனைத்திறன், பகுத்தறிவு போன்றவை நத்தை வேகத்தில் நகர்ந்து முன்னேறுகின்றது? சிந்திப்போம்…..

  மெய், வாய், கண் மூக்கு, செவி, மனம் என்பவற்றின் மூலம் அறிகின்ற அறிவில் நல்லது எது? தீயது எது? என்று பகுத்தறிகின்ற அறிவே பகுத்தறிவு. இதற்குப் பெரிதாக எதுவும் செய்யத் தேவையில்லை. அறிவைச் சந்தேகித்தாலே போதுமானது. சற்று ஆழமாகச் சிந்தித்தாலே போதுமானது. பகுத்தறிவு தோன்றிவிடும்

  உடம்பு உயிர் எடுத்ததோ? உயிர் உடம்பு எடுத்ததோ?
  உடம்பு உயிர் எடுத்த போது உருவம் ஏது?
  உருத் தரிப்பதற்கு முன் உடல் கலந்தது எங்ஙனே?
  கருத் தரிப்பதற்கு முன் காரணங்கள் எங்ஙனே?

  இது சிவவாக்கியார் சிந்தனைத் திறன்.

  உலகத்தின் சமூக சீர்திருத்தங்களுக்கு முக்கிய காரண கர்த்தாக்கள் எழுத்தாளர்களே என்பதை மனம்பதிக்க வேண்டும். எழுதிக் குவித்து சமூக சிந்தனைக்கு வித்திட்டவர்கள் திருவள்ளுவர், சுவாமி விபுலானந்தர், பாரதி, பாரதிதாசன், அண்ணாத்துரை, பெரியார் ஈ.வெ.ராமசாமி  போன்ற எழுத்தாளர்கள். இதனால் சமூகத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. இளவயதுத் திருமணம், பெண்உரிமை, விதவைத் திருமணம், சாதி மத பாகுபாடும் மூட நம்பிக்கைகளும், மனிதர்களில் ஏற்றத்தாழ்வுகள் போன்றவைகளின் தாக்கமும் இறுக்கமும் கட்டுப்பாடுகளும் மெல்லமெல்லத் தகர்த்து எறியப்படுகின்றன என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அவற்றின் வேகம் தொழில்நுட்ப வளர்ச்சியுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது குறைவாகவே இருக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. 

  ஒன்றை ஏற்கும் போது இன்னொன்று அழிந்துவிட வேண்டும் என்பது நியதி. கையில் தொலைபேசிக்குள் உலகத்தை அடக்கியபோது மற்றைய அனைத்துக் கருவிகளும் இல்லாமல் போகின்றன. அதேபோல் மூடநம்பிக்கைக்குள் இருந்து மனிதன் வெளியேறுகின்ற போது அதைக் கடைப்பிடிக்கின்ற மனிதர்கள் இன்னும் மாறாத காரணம் ஏனென்று புரியவில்லை. இதை மீறுகின்ற போது எமக்கு ஏதாவது நிகழ்ந்து விடுமோ என்ற அச்சம் மனிதர்களை மீண்டும் மீண்டும் மூடப்பழக்கவழக்கங்களுக்குள் வீழ்த்திவிடுகின்றது என்றே நான் கருதுகின்றேன். 

  ஆச்சாரம், ஆச்சாரம் என்று கூறி கணவன் இறந்த பின் எரிதணலில் மனைவியைத் தள்ளிய சமுதாயம் இப்போது எரி தணலில் தள்ளி கொலை செய்யவில்லை. இப்போது என்ன நடந்து விட்டது? கணவன் இறந்தால், நெற்றியில் பெண்கள் பொட்டு வைக்கக் கூடாது என்னும் சம்பிரதாயம் இல்லாமல் போன போது பெண்களுக்கு என்ன நேர்ந்து விட்டது? முதலாம் திகதி கோயிலுக்குப் போய் வருடத்தைத் தொடங்கியவர்களுக்கும் கோயிலுக்குப் போகாமல் வருடத்தைத் தொடங்கியவர்களுக்கும்  இடையே என்ன பெரிய மாற்றம் ஏற்பட்டுவிட்டது? 94 வயதில் இறந்த பெரியாரும் இளவயதில் இறந்த சுவாமிமார்களிடையே வாழ்க்கையில் என்ன மாற்றங்கள் காணப்பட்டன? நித்தியானந்த சுவாமிகளைப் போற்றித் தொழுகின்ற சமூகம் இன்னும் இருந்து கொண்டுதானே இருக்கின்றது! புரியவில்லை? மதத்தின் பெயரால் அழிவுகளை மனிதன் சந்திக்கும் போது மதத்தை ஏன் மனிதன் ஆரம்பித்தான் என்னும் அர்த்தம் புரியாத மனிதர்கள் மூடநம்பிக்கைக்குள் மூழ்கிப் போகின்றார்கள். 

  நட்ட கல்லைத் தெய்வமென்று நாலு புட்பம் சாத்தியே 
  சுற்றி வந்து மொணமொணென்று சொல்லு மந்திரம் ஏதடா?
  நட்ட கல்லும் பேசுமோ? நாதன் உள்ளிருக்கையில்
  சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ? 

  என்றார் சிவவாக்கியார். 

  நல்லதைச் செய்ய மனம் பதித்தாலே போதும் உலகம் நல்லதாக மாறிவிடும். ஒவ்வொரு மனிதர்களும் நாட்டின் ஒவ்வொரு பிரஜைகள். அவர்கள் திருந்தினால், உலகம் திருந்தும். எழுதிக் குவித்து ஆவது என்ன என்று சிந்தித்து எழுதுவதை நிறுத்தினாலும் சமூகம் வாழ்ந்து கொண்டுதான் இருக்கும். ஆனால், சமூக சிந்தனையுள்ள எழுத்தாளர்கள் எழுதாமல் இருக்கப் போவதில்லை. 

  யாரும் வாசிக்காது விட்டாலும் நான் எழுதுவேன். நானே வாசிப்பேன். எழுதவேண்டியது என் கடமை. சமுதாயத்திடம் நான் சொல்ல வேண்டியதைச் சொல்லியே தீர்ப்பேன். சிந்தனையை மேலும் மேலும் விரிவுபடுத்திக் கொண்டே இருப்பேன். இதுவே இவ்வருடமும் என் தீர்மானமாக இருக்கும்.


  ஞாயிறு, 22 டிசம்பர், 2019

  டுயூஸ்பேர்க் நகரில் 21.12.2019 அன்று கலைகளின் சங்கமம்


  ஆடற்கலைமாமணி திருமதி.றெஜினி சத்தியகுமார் அவர்களின் ஆடற்கலாலயம் கண்ட 30 ஆவது ஆண்டுவிழா   மனிதர்களிடம்தான் வேற்றுமைகளும் பொறாமைகளும் சொந்தம் கொண்டாடும். ஆனால், அம்மனிதர்கள் கண்டு பிடித்த கலைகளுக்குள் பேதமில்லை, பொறாமையில்லை. கலைகளிடையே ஒற்றுமை மட்டுமே இருக்கின்றது. இதனை டுயிஸ்பேர்க் நகரில் நடைபெற்ற ஆடற்கலாலயத்தின் 30 ஆவது ஆண்டுவிழா நிகழ்வுகள் நிரூபித்துக் காட்டியது. இளையோர் கைகளில் பொறுப்புகளைக் கொடுங்கள் அவர்கள் இமயத்தைத் தொட்டுக்காட்டுவார்கள் என்பதை திரு.திருமதி சத்தியகுமாரனனின் பிள்ளைகளான ச.நிமலனும், திருமதி த.தீபனா அவர்களும் நிரூபித்துக் காட்டினார்கள். 

  21.12.2020 அன்று பிற்பகல் 14.30 மணியளவில் ஆரம்பித்த நிகழ்வுகள் 23.30 வரை தொடர்ந்தது. நேரம் எம்மைக் கட்டிப்போட்டதா? இல்லை கலை வடிவங்கள் எம்மைக் கட்டிப் போட்டதா? எம்மை மறந்து நடன உருப்படிகளுக்குள் ஆழ்ந்து போனோம். 4 வயதுப் பிள்ளை தொடக்கம் எம்மைக் கலைகளுக்குள் இழுத்து வைத்துக் கொண்டிருந்தனர். 

  ஒரு கலை ஆசிரியர் தம்முடைய இத்தனை மாணவர்களை ஆசிரிய அந்தஸ்துக்கு உயர்த்திப் பார்க்கும் பெருமையை திருமதி. றெஜினா சத்தியமூர்த்தி பெற்றிருப்பது பாராட்டத்தக்க விடயமே. ச.நிமலன், த.தீபனா, சு.தர்ஷிகா ஆகியோரின் நட்டுவாங்கத்திலும் த.லகீபன் அவர்களின் மிருதங்கத்திலும், செ.நிரூஜன், பா.சுபோஷினி, கா.தாரணி ஆகியோரின் பாட்டிலும், பா.பிரசாந்த் அவர்களின் வயலின் இசையிலும், சு.வர்ணன் அவர்களின் புல்லாங்குழல் இசையிலும் நடனங்கள் கலையின் உச்சத்தைத் தொட்டன.  கலைகள் தனித்தனிப் படைப்பானாலும் அவை ஒன்றாக இணையும் போதுதான் அற்புதம் புலப்படும் அதற்கமைய அனைத்துக் கலைஞர்களும் இவ்விழாவின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்கள் என்பது உண்மையே. 

  பரதக்கலையின் ஒவ்வொரு உருப்படிகளும் ஒன்றையொன்று விஞ்சுவதாக அமைந்திருந்தன. ஒவ்வொரு நடனமணிகளையும் 4 வயது தொடக்கம் அணுவணுவாகப் பார்த்தேன். எவரின் நடனத்திலும் என்னால் குறை கண்டுபிடிக்க  முடியவில்லை. பரதக்கலையின் பல வடிவம் இந்து மதத்தின் புராணக் கதைகளை உலகுக்குக் காட்டுவதாக அமைந்திருக்கும். இதனை ஒவ்வொரு நடனத்திலும் உணரமுடிந்தது. 

  தாய்மாரும் அவர்களுடைய பிள்ளைகளும் இணைந்து  சின்னஞ் சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே என்னும் பாரதியார் பாடலுக்கு ஆடிய நடனம் மனதை விட்டு அகலாது இருக்கின்றது. பார்க்கும் போது கண்களில் இருந்து கண்ணீர் வந்துவிட்டது. இன்னும் பரதக்கலை ஜெர்மானிய மண்ணில் 50 வருடம் கடந்து வாழும் என்பது நிச்சயம். 


  ச.நிமலனின் ஹனுமான் நடனம் பார்க்கும் போது நான் நிமலனைக் காணவில்லை. ஹனுமானையும், ஒரு திறமையையும், ஒரு ஊக்கத்தையுமே மேடையில் கண்டு ரசித்தேன். நிமலனுடைய பல நடனங்களைப் பார்த்திருக்கின்றேன். அவருடைய உற்சாகமும், உழைப்பும், ஊக்கமும், திறமையும் ஒவ்வொரு நடனத்திலும் தெரியும். அவரைப் பாராட்டாமல் என் விரல்கள் நகர மறுக்கின்றது. அவரை மனதிலே பதித்தே இந்த நிகழ்ச்சிக்கு நான் சங்கமமாகியிருந்தேன். கலைஞனை கடவுளின் வடிவமாகக் கண்ட வெற்றிமணி, சிவத்தமிழ் ஆசிரியர் கலாநிதி.மு.க.சு,சிவகுமாரன் அவர்கள் 2020 சிவத்தமிழ் இதழை சிவனாகத் தன்னுடைய கண்களுக்குத் தெரிந்த ச.நிமலன் அவர்களுக்கு முதல் பிரதியைக் கொடுத்து வெளியிட்டு வைத்தார். நிமலனுடைய சிவதாண்டவத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலில் சென்றிருந்தேன். அந்த நடனம் இடம்பெறாத காரணத்தால் என் ஆசை நிறைவேறவில்லை.
          


  பாம்பு நடனத்தைப் பார்த்த போது நான் இலங்கையில் ஆடிய பாம்பு நடனத்தை ஒப்பிட்டுப் பார்த்தேன். எத்தனை கலை நுணுக்கங்கள் இப்போது இணைந்துள்ளன. இதனைப் பழுகுபவர்கள் எந்தவித எலும்பு நோய்களுக்கும் உட்பட முடியாது. புதிய உத்திகளைக் கையாண்டு அக்ரோபாட் வடிவத்தையும் இணைத்து அற்புதமாக நிமலன் பழக்கியிருந்தார். நடனம் பழகுபவர்கள் யோகா பழகத் தேவையில்லை என்றுதான் பொதுவாகவே நான் நினைப்பேன். உச்சி தொடக்கம் உள்ளங்கால்கள் வரை ஒவ்வொரு அங்கங்களுக்கும் அசைவைக் கொடுக்கும் ஒரு நடனமே பரதக்கலை என்பதை நாம் அறிவோம். பரத முனிவரே சிவனிடமிருந்து பரத்தைப் பெற்று உலகத்திற்கு அறிமுகப்படுத்தினார் என்பது அனைவரும் அறிந்ததே. அப்படி இருந்தும் நிமலனைத் தவிர எந்த ஒரு ஆண்மகனும் அரங்கத்திற்கு நடனம் ஆடவில்லை என்பது வருதத்திற்குரிய விடயமாகவே பட்டது.   “பாட்டும் நானே பாவமும் நானே பாடும் உனை நான் பாட வைத்தேனே” என்னும் பாடலைப் பாடி சபையோரை தன் இசைக்குள் கட்டிப் போட்ட செ.நிருஜன் பாராட்டுக்குரியவர். இந்தப் பாடலுக்கு இணையாக எந்தப் பாடலும் இதுவரை சினிமாவில் வரவில்லை என்று தான் நான் நினைக்கின்றேன். “சங்கீத ஜாதிமுல்லை காணவில்லை கண்கள் வந்தும் பார்வையில்லை” என்னும் பாடல் இதற்கு சற்று நிகராக அமைந்திருந்தது. ஆனால், இந்த அளவிற்கு மிருதங்க இசையைக் கூட்டுச் சேர்த்து மனதை எனக்குக் கொள்ளை கொள்ள வைக்கவில்லை என்று தான் கருதுகின்றேன். இதேபோல் கனடாவிலிருந்து வருகை தந்திருந்த கா.தாரணி பாடிய “பழம் நீ அப்பா. ஞானப் பழம் நீ அப்பா” என்னும் கே.பி.சுந்தராம்பாள் பாடல் சபையோரை மெய் மறக்கச் செய்தது. புலம்பெயர் நாடுகளின் தமிழ் கலை வடிவங்கள் எதிர்காலத்திலும் உச்சத்தைத் தொடும் என்பதற்கு இந்த நிகழ்வை விட எடுத்துக் காட்டுக்கள் தேவையில்லை.   இந்நிகழ்வுக்கு இலங்கையிலிருந்து பிரதம விருந்தினர் வந்திருந்தார். ஆச்சரியப்பட்டார். இந்தியாவிலிருந்து சிறப்பு விருந்தினர் ருக்மணி. விஜயகுமார் அவர்கள் வந்திருந்தார். ஆச்சரியப்பட்டார். புலம்பெயர் தேசத்தில் இப்படி, இவ்வளவு பெரிய மாணவக் கூட்டத்துடன் ஒரு ஆண்டுவிழா கண்டது அவர்கள் ஆச்சரியப்படும் விடயமே என்பது திண்ணம்.   இசைக்கலைஞர்களை இணைத்து எம்மை இன்பத்தில் ஆழ்த்திய ஆடற்கலாலய ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், அனுசரணையாளர்கள் அனைவருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். முழுவதுமாக ஒரு இன்பமான மாலைப் பொழுதாக இந்த நாள் அமைந்திருந்தது. 


  புதன், 18 டிசம்பர், 2019

  மன ஓசை பாகம் 1  ஒரு தாயின் உணர்வுகளின் போராட்டம் அதில் சுகமும் உண்டு சுமைகளும் உண்டு. சுகமாய்ச் சுமந்து வலியோடு வளர்த்து உயிராய் உரமாய் கனவாய் வெளியுலகில் நடமாட விட்ட உயிர்களில் பெண்கள் பிரச்சினைகள் ஒவ்வொன்றாய் தாமாக வெளிப்படுத்தும் விதமாகத் தருகிறேன். இவை அத்;தனை வடிவங்களையும் நீங்கள் வாசிக்கின்ற போது உங்கள் உணர்வுகளின் போராட்டம், உள் உணர்வுகளின் வெளிப்பாடு இருக்கும்.


  மூளையின் அடங்காத ஆட்டிப்படைப்பு
  ஆழமாய் குடைந்ததால்
  வார்த்தைகளைக் கட்டிப்போட முடியாமல்
  கணனிக்குள் புதைகிறேன்.

  அந்தரங்கங்களில் அற்புதம் தோன்றும்
  அழுக்குகளில் சொர்க்கம் பிறக்கும்
  தலையணை மந்திரம் தாரகமந்திரமாகும்
  இருட்டறை எதிர்காலத்தைக் காட்டும் - அங்கு
  மனிதப்படைப்பு புனிதமாய் உருவெடுக்கும்  ஓருடலில் ஈருயிர் உலகில் நடமாடத் தொடங்கும்
  மார்பகங்கள் மெல்ல மெல்ல வீங்கும்
  தன்னுள் வளரும் உயிருக்கு மூளை
  உணவு தயார் படுத்தத் தொடங்கிவிடும்
  உடலமைப்பு பல மாற்றங்களைக் காட்டும்
  வயிறு மெல்ல மெல்ல பெருக்கும்
  முகத்தின் பொலிவு மெருகேறும்
  உடலினுள் ஒரு உயிர் தாயை
  மெல்ல மெல்ல உருசிக்கத் தொடங்க
  உண்பதெல்லாம் வாந்தியாய் வெளிவரத் தொடங்கும்
  குழந்தைக்கு தலைமயிர் வளர்கிறது என்று
  பாட்டியின் அனுபவக் குறிப்பு வெளிப்படுத்தும்

   
   நிமிர்ந்து அமருகின்றேன்
  நான் தாய்!
  நான் அம்மா!
  என் பலவீனத்தில் உன் தந்தையின் பலத்தில்
  உன் உயிர் என்னுள் சிறைப்பிடிக்கப்பட்டிருக்கிறது.
  என் கரங்களைப் பிடித்தே உன் தந்தை நடக்கின்றார்
  என் பரிசத்தில் உன் பரிசத்தை உணரவிழைகின்றார்.

  அப்பா என்று மனதுள் இசைத்துப் பார்க்கின்றார்.
  எனை இறுகப் பிடித்தே என் இதயம் நுழைகின்றார்
  நன்றி என்றே காதுக்குள் காற்றாய் இசைக்கின்றார்
  பெருங் காரியம் செய்த உணர்வில் கர்வம் கொள்கின்றேன்  எனக்குள் நீ உன் அங்கங்களைப் பொருத்துகிறாய்
  உன்னை நீயே வடிவமைக்கின்றாய்
  அற்புதமாய் உரிமைப் போராட்டத்தை ஆரம்பிக்கின்றாய்
  அடித்தாலும் உதைத்தாலும் ஆக்கினைகள் செய்தாலும்
  அன்போடு இரசிக்கும் அந்தமனம் தாய் மனமே  எனக்குச் சுத்தமாய் புரியவில்லை
  வலிக்குக் கூடச் சிரிப்பு வருமா!!
  வலிக்கச் செய்வது யாரென்பதைப் பொறுத்ததே
  வலியின் வலிமை
  எனக்குள் வாழ வாழிடம் தேடிய நீ
  உலகுள் பிரவேசிக்க வழியையும் தேர்ந்தெடுத்தாய்
  அழுதேன் துடித்தேன்
  உனது அவசரமும் எனது துடிப்பும்
  அக்கண அகோர போராட்டம்


  என்னை விட்டு
  நீ வர எத்தனித்தாயா? இல்லை
  வரவுக்கு அஞ்சினாயா?
  காலம் போட்ட கணக்கை உன்னால்,
  கட்டுப்படுத்த முடியவில்லை.
  வெட்டிப்பிரித்து என் நெஞ்சிலே போட்டபோதே
  புரிந்தது தாய் ரசிக்கும் சங்கீதம்
  உடலின் உக்கிர வேதனையின் மருந்து
  பிய்த்து எடுத்த கலங்களின் காயத்தின்
  வேதனையை வென்ற சுகம் அத்தனையும்
  தன் மழலையின் முதல் ஆ, ஓ என்னும்
  சத்தம்தான் என்னும் உண்மை  தொடரும் ..............................................................................  வியாழன், 5 டிசம்பர், 2019

  பெயருக்கும் புகழுக்கும் ஆசைப்பட்டு பொய்களை தம் மனமறிந்து கூறும் மனிதர்கள்

  தர்மம் தலைகாக்கும் என்னும் பழமொழியை யாம் அனைவரும் அறிந்திருக்கின்றோம். அதுபோலவே சத்தியமும் ஒரு சந்தர்ப்பத்தில் வந்து கைகொடுக்கும் என்பது நிச்சயமான உண்மை. ''உள்ளத்தில் உண்மை ஒளி உண்டானால், வாக்கினில் ஒளி உண்டாகும்'' என்பார் பாரதி. உள்ளத்தில் உள்ளது உண்மை என்னும் சத்தியம். வாய்வழி வருவது வாய்மை என்பதாகும். உள்ளத்தால் ஒன்றை நினைத்துவிட்டால், வாய்வழி அந்த உண்மை வாய்மையாக வெளிப்படும். உண்மை உள்ளத்தில் இல்லையென்றால், வாய்மை அந்தப் பொய்யை வெளிப்படுத்திவிடும். அப்படியென்றால், உள்ளம் சொல்வதைத்தான் உடல் செயல்படுத்துவதாக இருக்க வேண்டும். ஆனால், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் மனிதர்களே அதிகமானவர்களாக இருக்கின்றார்கள். எனவே வாய்வழி வருவது எல்லாம் உண்மையாக இருக்கும் என்று அர்த்தமில்லை. எனவே வாய்மை உண்மையென்ற பொருள்படாது. எனவே எமக்கு நாம் உண்மையாக இருக்க வேண்டும். அப்போதுதான் வாக்கிலும் உண்மை ஒளி உண்டாகும். 

  பொய்மையும் வாய்மையிடத்துப் புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின் என வள்ளுவர் கூறுகின்ற போது நன்மையைத் தரும் என்றால் பொய் கூட உண்மைக்குச் சமமானது என்பார்கள். இங்கு கூட உண்மைக்கு அப்பால் வாய்மை என்ற வார்த்தையையே வள்ளுவர் பயன்படுத்தியுள்ளார். இங்கு உள்ளத்தில் உண்மை இருக்க வாய்வழி வாய்மையாகப் பொய் வெளிப்படுகின்றது. பிறருக்கு நன்மை கிடைப்பதற்காக என்றே இதைக் கருதவேண்டியுள்ளது. ஆனால், அங்கு நன்மை கிடைப்பதற்காக மறைக்கப்பட்ட உண்மைகூட ஒரு இடத்தில் வெளிப்பட்டு விடும் என்பதே சத்தியம். அதனால், நம்பிக்கை உள்ளவர்களிடமும், நல்ல நண்பர்களிடமும், பெற்றோரிடமும் உண்மையை மறைத்தல் கூடாது. அது கொலைக்குச் சமமானதாகும். 

  சரித்திரத்தில் இடம் பிடிப்பதற்கு மனமறிந்து உண்மைகளை மறைப்பதற்குப் பலர் முற்படுகின்றார்கள். உலோபியைப் போல உள்ளம் நிறைந்த உண்மையும் ஓலைக்குடிசையில் வாழ்கிறது என்று வில்லியம் ஷேக்ஸ்பியர் சொல்லியிருக்கின்றார். ஆனால் தோண்டத் தோண்டப் புலப்படும் அகழ்வாராய்ச்சிகள் போல என்றோ ஒருநாள் உண்மை வெளிவரும் என்னும் சத்தியத்தில் நாம் நம்பிக்கை வைக்க வேண்டும். பாவத்திற்குப் பல காரணங்கள் உண்டு. ஆனால், அவற்றுக்கெல்லாம் பொருத்தமான கருவியாகப் படுவது பொய்யே ஆகும். பாவமான காரியங்களைச் செய்துவிட்டு அவற்றை மறைப்பதற்குப் பொய் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது. எனவே உண்மைக்கு மாறானது பொய் என்றால், பொய் சொல்பவர்கள் பாவம் செய்பவர்களாகவே கருதப்படுகின்றார்கள். உண்மை வெளிப்படும் பட்சத்தில் மானம், மரியாதை என்னும் பண்புகளை இழந்து தலைகுனிந்து நிற்கவேண்டிய நிலைமை பொய் கூறியவர்களுக்கு ஏற்படுகின்றது.

  ஆயிரம் பொய்யைச் சொல்லி ஒரு கல்யாணம் நடத்தலாம் என்பார்கள். ஆனால், அந்தப் பொய்கள் வெளிப்படும் பட்சத்தில் அந்தக் குடும்பமே சிதைந்து போகும். இதனால், உண்மையை மறைத்தமைக்கு எந்தவித பயனுமில்லை. குடிகாரன் குடிக்கமாட்டேன் என்று கூறுகின்ற சத்தியமானது அடுத்த விநாடியே மறைந்து விடுகின்றது என்றால் உண்மையன்றி அக்குடிகாரன் கூறியது வாய்வழி வந்த வார்த்தைகளே ஆகும். அது நில்லாது ஓடிவிடும்.

  சில உண்மைகள் கூட காலத்துக்குக் காலம் மாறக்கூடியது. சூரியன் பூமியை வலம் வருகின்றது என்று அன்று விஞ்ஞானிகள் கூறிய உண்மை இன்று பொய்யாகப்பட்டுள்ளது. சூரியன் நகர்வதில்லை பூமியே சூரியனைச் சுற்றி வருகின்றது என்பது நிரூபணமாகியுள்ளது. ஆராய்ச்சிகளும், கண்டுபிடிப்புக்களும் நிச்சயமான உண்மைகளாகாதவை. அவை காலத்துக்குக் காலம் மாறக்கூடியது. 

  நாம் காணுகின்ற இச்சமுதாயத்தில் தமக்கு பெயரும் புகழும் கிடைக்க வேண்டும் என்பதற்காக மனமறிந்து பல பொய்களை துணிந்து கூறுகின்றார்கள். ஆனால், அப்பொய்கள் ஒருநாள் பூதாகரமாக வெளிப்பட்டு நிற்கும் என்று அவர்கள் அறியாது இருக்கின்றார்கள். பாண்டிமாதேவியின் சிலம்பைக் கோவலன் திருடினான் என்று  பொற்கொல்லன் கூறிய பொய்யானது, பொய்ப்பிக்கப்பட்டு உண்மை வெளிப்பட்டது. அப்போது பார்ப்பார், அறவோர் பசு, பத்தினிப் பெண்டீர், மூத்தோர், குழவி நீங்கலாக பாண்டியநாடு முழுவதுமாக எரிக்கப்பட்ட செய்தி சிலப்பதிகாரம் தெரியாதவர்கள் கூட தெரிந்த செய்தியாகும். 

  போர்க்களத்தில் குற்றுயிரும் குறை உயிருமாகக் கிடக்கின்றான் கர்ணன். அவன் செய்த தர்மங்கள் அவன் உயிரைப் போகவிடாது காப்பாற்றுகின்றது. இங்கு தர்மம் தலைகாக்கின்றது. அந்த சந்தர்ப்பத்தில் மறைக்கப்பட்ட உண்மை வெளிப்படுகின்றது. குந்தியானவள் அத்தனை வருடங்களும் கர்ணன் தன்னுடைய மகன் என்று மறைத்து வைத்திருந்த உண்மை, அவனது இறப்பின் இறுதித் தருணத்தில் வெளிப்படுகின்றது. உண்மை கடைசிக் காலத்தில் கூட கைவந்து உதவும். தோண்டத் தோண்ட வெளிப்படுகின்ற அகழ்வாராய்ச்சித் தடயங்கள் போல உண்மைகள் எம்முன்னே வந்து நிற்கும்.

  சத்தியம், உண்மை என்றவுடன் எம்முடைய மனதிலே முதலில் வந்து நிற்பது சூரிய குலத்தின் 28 ஆவது மன்னனாகிய அரிச்சத்திர மன்னனே ஆவார். அவர் கனவிலே செய்த சத்தியத்தை மறைத்து ஒரு பொய் சொல்லியிருந்தால் தன் வாழ்நாள் முழுவதும் கஷ்டத்தை அனுபவித்திருக்கத் தேவையில்லை. பாம்பு கடித்து மகன் இறந்த போதும் கூட உண்மையை மறைக்கவில்லை. ஆனால், தக்க சந்தர்ப்பத்தில் உண்மை தன் வீரியத்தைக் காட்டியது. அரிச்சந்திரமன்னனும் சுவர்க்க வாழ்வு பெற்றார். கதைகள் எல்லாம் உண்மையானவையான இல்லை கட்டுக்கதைகளேதான் என்று நாம் கருதினாலும், இவை அனைத்தும் மனித வாழ்வுக்குத் தேவையான கருத்துக்களையே எமக்குத் தெரிகின்றன. 

  பாரிஸ்டர் பட்டம் பெற்ற பின் அரிச்சந்திர நாடகம் பார்க்கச் சென்ற காந்தியடிகள் தன்னுடைய நண்பனையும் அழைத்துச் சென்றாராம். நாடகம் பார்த்துத் திரும்பிய போது இந்நாடகம் பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்ட போது, இந்த நாடகம் என் வாழ்க்கையையே மாற்றப் போகிறது. சத்தியத்தை உயிருள்ளவரை காப்பாற்ற வேண்டும் என்று கருதுவதாகச் சொன்னாராம். அவருடைய நண்பரிடம் கேட்ட போது சத்தியத்தின் படி நடந்தால், மனைவி, பிள்ளைகளைக் கூட  இழக்க வேண்டிவரும் என்று கூறினாராம். எனவே அனைத்தும் அவரவர் புரிதலின்படியே நடக்கும். இக்கட்டுரையைக்கூட உங்கள் புரிதலின்படியே ஏற்றுக் கொள்வீர்கள் என்பது நிச்சயம்.

  எனவே கண்ணதாசன் தந்த வரிகளுடன் இக்கட்டுரையை நிறைவு செய்கிறேன். ''உண்மையை வாங்கிப் பொய்களை விற்று உருப்பட வாருங்கள். காலம் போனால் திரும்புவதில்லை. காசுகள் உயிரைக் காப்பதுமில்லை. விளம்பரத்தாலே உயர்ந்தவன் வாழ்வு நிரந்தரமாகாது'' 

  திங்கள், 11 நவம்பர், 2019

  சொல்லும் செயலும் ஒன்றாக வேண்டும்  வார்த்தைக்குள் அரிதாரம் பூசி, அலங்காரம் போட்டு அற்புதமாக யாரும் பேசலாம். ஆசைகளை, எண்ணங்களை அடுக்கி வைத்து நடைமுறைப்படுத்த முயற்சியின்றி மழுங்கிப் போகலாம். பிறர் முயற்சியைப் பார்த்து கொட்டாவி விடலாம். சொல்வதற்கு பலரால் முடியும். அதை செய்து காட்டுவதற்கு ஒரு சிலராலேயே முடிகின்றது. சொல்வது போல் நடத்திக் காட்டுதலே செயலாகப்படுகின்றது. சொல்வது ஒன்று செய்வது ஒன்றாகும் பட்சத்தில் சமுகத்திடையே தவறாக அடையாளப்படுத்தப்படுவர். நாம் வாழும் உலகத்திற்கு சொல் வேண்டாம் செயலே வேண்டும். 

  சொன்னதைச் செய்து காட்டிய துரியோதனன், கர்ணன் மனதில் மலையாய் உயர்ந்தான். நீ என் நண்பன் என்று கூறிய ஒரு வார்த்தைக்கு துரியோதனன் கொடுத்த மரியாதை அளவிட முடியாதது. வில்வித்தை வீரன் அர்ச்சுனனுடன் நேருக்கு நேர் நின்று போரிடக் கூடிய தகுதி பெற்ற ஒரே வீரன் கர்ணன். சபையிலே அரசகுமாரர்கள் அரசகுமாரர்களுடனேயே போரிடுவார்கள், உன் குலம் என்ன? என்று துரோணாச்சாரியார், கிருபாச்சாரியார் ஆகியோர் கூறிய வார்த்தைகள் கேட்டு உடைந்து போய் நின்றான் கர்ணன். நண்பன் கலங்கி நிற்கும் சமயத்தில் கைகொடுப்பவனே உண்மை நண்பன். சூரர்களுக்கும் நதிகளுக்கும் மூலம் பார்ப்பதில்லை. அசுரர்களைக் கொல்லுகின்ற அஸ்திரம் ஒரு பிராமணனுடைய எலும்பில் இருந்து வந்தது. அக்னி ஜலத்திலிருந்து வந்தது. எனவே எது எங்கிருந்து வந்தது என்பது முக்கியமல்ல. அதனுடைய வீரியமே முக்கியம். அதனால், கர்ணனுடய வீரத்தைப் பற்றி பேசுங்கள். அவருடைய மூலத்தைப் பற்றிப் பேச யாருக்கும் உரிமையில்லை என்று கூறி, அச்சந்தர்ப்பத்திலேயே கர்ணனுக்கு அங்கத நாட்டைப் பரிசளித்து, இப்போது அங்கத நாட்டுக்கு அரசன் கர்ணன். எனவே இப்போது அரசகுமாரனுடன் போரிடும் தகுதி இவனுக்கு இருக்கிறது என்று கர்ணனை உச்சத்துக்கு உயர்த்தினான். நண்பன் என்று கூறிய வாய்ச் சொல் மட்டுமன்றி அதனை நடத்தியும் காட்டிய செயல் வீரன் துரியோதனன் ஆவான். 

  இது போன்று அந்தப்புரத்திலே துரியோதனன் மனைவி பானுமதியுடன் கர்ணன் சதுரங்கம் விளையாடிக் கொண்டிருந்த வேளையில் துரியோதனன் வரவு கண்டு பானுமதி திடீரென்று எழுந்தாள். விளையாட்டில் தோற்று விடுவாள் என்று கருதி எழுகின்றாள் என்று நினைத்த கர்ணன் அவளுடைய ஆடையைப் பிடித்து இழுத்தான். கை தவறி பானுமதி இடையிலே இருந்த மேகலையில் கை பட்டு அதில் ஒட்டியிருந்த முத்துக்கள் சிதறின. அச்சம்பவத்தைக் கண்ட துரியோதனன் எவ்வித சந்தேகமும் கொள்ளாது. சிதறிய முத்துக்களை எடுக்கவோ கோர்க்கவோ என்று கேட்கின்றான். 

  ''மடந்தை பொன் திருமேகலை மணிஉகவே மாசு அறத் திகழும்          ஏகாந்த இடந்தனில் புரிந்தே நானயர்ந்து இருப்ப எடுக்கவோ கோர்க்கவோ''

  என்றான் என வில்லிபுத்தூராழ்வார் பாடினார். நண்பன் என்று சொல்லுக்கு களங்கம் ஏற்பட கர்ணன் நடந்ததுமில்லை. நண்பன் என்று சொன்ன வார்த்தைகளை மந்திரமாக கொண்டு அது போலவே வாழ்ந்து காட்டியவன் துரியோதனன். 

  தன்னுடைய தாய் குந்தி தேவிக்கு கொடுத்த சொல்லைக் காப்பாற்றிய கர்ணன் ஒரு தடவைக்கு மேல் நாகாஸ்திரத்தை செலுத்தாது, தன்னுடைய வாய்ச்சொல்லே பெரிதென மதித்து உயிர் நீத்தான். 
  சொல் என்பது மந்திரம். சொல்லும் செயலும் ஒன்றானால் இவ்வுலகம் சொல்லும் உங்கள் செயல்கள். அந்தச் சொல்லில் உண்மை கலந்து வாழ்ந்தவனே அரிச்சந்திரன்.

  நீ எனக்கு அரசைத் தரவில்லை என்று ஒரே ஒரு பொய் சொல் என்று கேட்டான் கௌசிகன். அதற்கு அரிச்சந்திரனும், 

  ''பதிஇ ழந்தனம் பாலனை இழந்தனம் படைத்த 
   நிதிஇ ழந்தனம் இனிநமக் குளதென நினைக்கும்
   கதிஇ ழக்கினும் கட்டுரை இழக்கிலேம் என்றார்
   மதிஇ ழந்துதன் வாயிழந்(து) அருந்தவன் மறைந்தான்

  ''எம்முடைய அரசை இழந்து விட்டோம். சொத்து சுகங்களை இழந்து விட்டோம். மகனை இழந்து விட்டோம். இனி எங்களுக்கு ஒன்றே ஒன்று தான் இருக்கிறது என்று நினைக்கும் சொர்க்கத்தை இழந்தாலும் சொன்ன சொல்லை இழக்க மாட்டோம்'' என்று சொல்ல அதுகேட்ட முனிவர் கௌசிகனும் சொல்ல வார்த்தைகள் இழந்து மறைந்தார். என்று அரிச்சந்திர புராணம் கூறுகிறது. அரிச்சந்திரன் உண்மையைத் தவிர பொய் சொல்ல மாட்டேன் என்ற சொல்லுக்கு ஏற்ப செயற்படுத்திக் காட்டினான். என்று வாய்ச்சொல்லில் வீரம் வைத்து நேர்மைத் திறமில்லா நடிப்புச்சுதேசிகள் பற்றி பாரதி,

  ''நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத்திறமு மின்றி
   வஞ்சனை சொல்வா ரடீ – கிளியே 
   வாய்ச் சொல்லில் வீரரடி''

  என்றார்.

  எனவே புராணங்களும், இதிகாசங்களும், இலக்கியங்களும் போதித்த சொல்லின் வாய்மை, செயலிலும் இருக்க வேண்டும். நினைத்ததை சொல்வது மாத்திரமில்லாது நடத்தியும் காட்டுவதே வாயிலிருந்து புறப்பட்டு வரும் வார்த்தைகளுக்கு மதிப்பாகப்படுகின்றது. 


  திங்கள், 14 அக்டோபர், 2019

  அசட்டு மாப்பிள்ளை நாடக நூல் பற்றிய ஒரு கண்ணோட்டம்
  நாடக இலக்கியங்கள் அருகிப் போன இக்கால கட்டத்திலே வரணியூரானின் அசட்டு மாப்பிள்ளை என்னும் நாடக நூல் எனக்குக் கிடைத்தது. இந்த நூலைத் தில்லை நூலகம் வெளயீடு செய்து வைத்துள்ளது. 1975 ஆம் ஆண்டு மேடையேற்றப்பட்டு அந்த ஆண்டே நூலாகவும் வெளிவந்துள்ளது, 44 ஆண்டு காலப்பகுதி கடந்த நிலையிலும் சமூகத்திற்கு இக்கருத்துக்கள் தேவைப்படுகின்றது என்று நினைக்கும் போது மனிதன் இலத்திரனியலில் வளர்ந்துள்ளதுள்ள அளவிற்கு மனிதப்பண்பில் வளரவில்லை என்றே தோன்றுகின்றது. 1994 இல் இரண்டாவது பதிப்பு வெளிவந்தது. 

  ஒரு இலக்கியம் என்ன வடிமாக இருந்தாலும் சமுதாயத்திற்கு நல்ல கருத்துக்களை வித்திட்டுப் போக வேண்டும் என்பது என்னுடைய ஆழமான கருத்தாக இருக்கின்றது. அந்த வகையில் இந்த நூல் முழு திருப்தியைத் தந்திருக்கின்றது. 9 கதாபாத்திரங்கள் இந்நாடகத்தில் வலம் வருகின்றார்கள். திருக்குறள் சிறந்தது என்று கூறினால் மட்டும் போதாது. அதன் கருத்துக்களைப் பரப்புவதற்கு பொருத்தமான இடங்களில்  பயன்படுத்த வேண்டும் என்பதை இந்த நாடக ஆசிரியர் இந்நாடகத்தின் மூலம் வலியுறுத்தியுள்ளார். ஆங்கிலம் என்பது தேவைப்படும் மொழி. ஆனாலும் தேவையற்ற பொழுதுகளில் அதனை பயன்னடுத்த வேண்டிய அவசியமில்லை என்பதை ஆசிரியர் நிரூபித்துக் காட்டியுள்ளார். பண்டிதர் கதாபாத்திரம் என்பது ஒரு ஆசிரியர் பாடத்தைக் கற்பிக்கும் ஆசிரியராக மாத்திரம் இருக்க வேண்டியது அவசியமில்லை. ஒரு மாணவனைச் சரியான முறையில் வாழ்க்கையில் வழி நடத்தக் கூடிய பண்புகளைப் பெற்றிருக்க வேண்டியது அவசியம் என்பதை பண்டிதர் கதாபாத்திரம் மூலம் வரணியூரான் அவர்கள் வலியுறுத்தியிருக்கின்றார்.

  பாத்திரப் படைப்புக்கள் கச்சிதமாக அமைந்திருக்கின்றன. அசட்டு மாப்பிள்ளையானவர் அறிவாளி என்பதை மாமனார் பார்த்த மாத்திரத்தில் புரிந்து கொள்வது சிறப்பாக இருக்கின்றது. பொதுவாகவே சமூக சீர்திருத்தவாதி வெகுசன விரோதி என்றே உலகத்தில் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. இதனாலேலே சோக்கிரட்டீஸ் சிறையில் அடைக்கப்பட்டார். எம்மிடையே நியாயத்தை எடுத்துச் சொல்பவர்கள் சபைக்கு உதவாதவர்கள் என்று கருதுகின்ற இக்கால கட்டத்தில் இந்நாடக ஆசிரியர் அழகாக நாடகத்தை நகர்த்திச் சென்றிருக்கின்றார். 

  அசடாக இருந்தாலும் அறிவாளி. ஒரு திருமணத்திற்கு அழகு மட்டும் தேவையில்லை. அசடாக இருந்தாலும் வாழ்க்கையை நேர்மையான வழியில் சமூகத்திற்கு நன்மை பயக்க வாழ்பவனே சிறந்த மாப்பிள்ளை என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார். சீதனம் என்பது உழைத்துச் சம்பாதிக்கத் துணிவில்லாதவனே பெற்றுக் கொள்வது எனபதை அசட்டு மாப்பிள்ளை வாயிலாக உலகத்திற்கு ஆசிரியர் உணர்த்தியுள்ளார். பணமுள்ள பாக்கியவான்கள் திருமணம் ஆகாத கன்னிப் பெண்களுக்கு புனர்வாழ்வு நிலையம் ஆரம்பித்துக் கொடுக்கலாம் என்றும் சிந்திக்க வைத்துள்ளார். 

  ஒரு நாடகம் ஒரு திரைப்படம் போல் தாக்கத்தை ஏற்படுத்தியதை நான் உணர்ந்தேன். வரிக்கு வரி அற்புதமான சிந்தனைகள் திருக்குறள் ஊடாக இழையோடிக் காணப்பட்டன. 

  காலம் கடந்தாலும் நல்ல சிந்தனைகள் வாசகரால் வரவேற்கப்படும் என்பதற்கு இந்நூல் ஒரு எடுத்துக்காட்டு. நாடக ஆசிரியருக்கு வாழ்த்துகள். இந்நூலை மறுபதிப்புச் செய்த உடுவை எஸ். தில்லைநடராசா அவர்களுக்கு மிக்க நன்றி.

  ஞாயிறு, 6 அக்டோபர், 2019

  வாழ்க்கை என்பது வழுக்கையா?  எனக்குள்ளே நான் பல கேள்விகள் கேட்கின்றேன். பல பக்கப் பார்வையில் என் சிந்தனைகள் விரிவுபடுகின்றன. இறுதியில் ஒரு தீர்மானம் எடுக்கின்றேன். அவை எவ்வாறு விரிவுபடுகின்றன என வாருங்கள் இணைந்தே சிந்திப்போம்.

  நாம் பிறக்கும்போது தலை முழுவதும் தலைமயிரோடே பிறந்தோம். கூட வந்த மயிர்கள் ஒவ்வொன்றாகக் கழன்றன. புதிது புதிதாக மயிர்கள் முளைத்தன. தலையில் முளைத்தவையும் கூடவரவல்லை. பழைய மயிர்களும் எமது தலையில் இருப்பது இல்லை. கழுவினோம், துடைத்தோம், அலங்கரித்தோம், இருந்தும் எம்மை விட்டே போனது. இறுதியில் வழுக்கையானது. எதுவுமே இல்லாத மண்டையில் அடர்த்தியாக இருந்த மயிர்களும் அலங்கரிப்பும் இருந்த இடம் தெரியாமல் போவது போலவேதான் வாழ்க்கையும் அமைந்திருக்கின்றது. 

  தனியாகப் பிறந்தோம், தலை நிமிர்ந்து வாழ்ந்தோம், தோளோடு சேர்ந்தோம், தோல்விகளை வென்றோம், சாதனைகள் புரிந்தோம், சாதித்துக் காட்டினோம்ளூ இறுதியில் தெரியாமல் போனோம். இதுவே வாழ்க்கை. போராடித் தொடர்கின்ற வாழ்க்கையில் இறுதியில் யாருடனும் போராடாது எமக்கு நாமே போராடித் தோற்றுப் போக வைப்பதே இயற்கை நியதி. அப்படியானால், இப்படித்தான் நடக்கப் போகின்றது என்பதை நாம் முன்னமே தெரிந்திருந்தும் எமது வாழ்க்கையில் ஏன் இந்தப் போராட்டம்? ஏன் இந்த மகிழ்ச்சி? ஏன் இந்த பாசப் பிணைப்பு? ஏன் இந்தப் பிரிவுத் துயர்? என்று சிந்தித்துப் பார்த்தோமென்றால், வாழ்க்கை என்பது வழுக்கை என்றே உணர்வோம். 

  வாழ்க்கையில் இறுதிவரை போராடித் தோற்றுப் போனவர்களும் இருக்கின்றார்கள். வாழ்க்கையின் வெற்றி உச்சத்தைத் தொட்டவர்களும் இருக்கின்றார்கள். ஆனால், இறுதியில் இரு தரத்தினரும் உலக வாழ்க்கையில் ஒன்றுமில்லாமல் போனவர்களே. மாட மாளிகைகள், கோடான கோடிக் கோபுரங்கள் கட்டி வாழ்ந்த மன்னர்கள் இன்று எங்கே? பாட்டாலே உலகத்தை வென்ற பாவேந்தர்கள் எங்கே? நாயன்மார்கள் எங்கே? ஆழ்வார்கள் எங்கே? உலகத்தையே தன் கைக்குள் அடக்கிவிடலாம் என்று போர் தொடுத்த ஹிட்லர் எங்கே? அண்டவெளி ஆராய்ச்சியாளர்கள் எங்கே? தொழில்நுட்ப ஆய்வாளர்கள் எங்கே? தம்முடைய பெயரை நிலை நிறுத்திப் போனவர்கள் கூட பெற்றது ஏதுமில்லை. அவர் பெயர் சொல்லிப் பெயர் பெறும் சொந்தங்களே அவர்கள் புகழுடன் தொடர்கின்றார்கள் என்பது உண்மையே. அதுகூட ஓரிரு சந்ததி கடந்து மறக்கப்பட்டு அப்படியென்றால், ஏனிந்த போராட்டம்! வாழ்க்கையை நன்றாக அனுபவித்துச் செல்ல மனம் தடைபோடுவதும் ஏன்? ! 

  இறப்பு என்பது நிச்சயம். இறந்தவர்கள் திரும்பி வருவதில்லை. படைப்புக்கள் அத்தனையும் ஒருநாள் இல்லாமல்தான் போகின்றன. கண்டுபிடிப்புக்கள் எல்லாம் காணாமல்தான் போகின்றன. அன்று நாம் பயன்படுத்திய உபகரணங்களை நாம் பயன்படுத்துகின்றோமா?(Radio, Taperecorder சமையல் உபகரணங்கள்) இன்று பயன்படுத்துபவவை நாளை தொடருமா? இல்லவே இல்லை. தொழில்நுட்பங்கள் பழையவற்றை ஒன்றுமில்லாமல் பண்ணிவிடுகின்றன. சிந்திக்கச் சிந்திக்க புதியவை பிறப்பெடுக்கின்றன. பழையவை தேக்கம் கண்டுவிடுகின்றன. எனவே உயர்திணை அஃறிணை அத்தனையும் வாழ்க்கையில் வழுக்கையே. 

  ஆனால், தனக்காக வாழ்ந்து ஆடு, மாடுகள் போல் பசித்தால் புல்லைத் தின்று, உறக்கம் வந்தால் உறங்கி வாழ வேண்டுமா? மிருகங்கள் போல் தேடி வேட்டை ஆடி, பசி நீங்க காலாற நடந்து, உறக்கம் வர உறங்கிப் போகும் வாழ்க்கை சரியா? அவ்வாறு மனிதன் வாழ்ந்தால், இந்தப் பூமியில் மாற்றங்கள் தோன்றியிருக்குமா! இலை குழை உடுத்தே இன்றும் மனிதன் வாழ்ந்திருப்பான். அவ்வாழ்க்கை அழகென்று சொல்பவர்களும் உண்டு. ஆறறிவு படைத்த மனிதனின் படைப்புக்கள் மேம்பட உலகத்தை வசதி படைத்த உலகம் ஆக்குவோம் என்று சொல்பவர்களும் உண்டு. 

  "காயமே பொய்யடா காற்றடைத்த வெறும் பையடா
  மாயனார் குயவன் செய்த மண்பாண்டம் ஓடடா"

  என்று பாடிய சித்தர் உலகநிலையாமையை உரைத்தார். 

  "காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே"

  என்ற பட்டினத்தார் இல்லாமல் போகும் உடலின் நிலையாமையை எடுத்துரைத்தார்.

  ஆடிய ஆட்டம் என்ன?
  பேசிய வார்த்தை என்ன?
  தேடிய செல்வம் என்ன?
  திரண்டதோர் சுற்றம் என்ன?
  கூடுவிட்டு ஆவி போனால் 
  கூடவே வருவது என்ன? 

  என்று எதுவுமே எமக்குச் சொந்தம் இல்லை என்று கண்ணதாசன் பாடினார். இவ்வாறு அவரவர் நிலையாமை பற்றி எடுத்துரைக்க, அந்த உலக நிலையாமையை எடுத்துரைத்த திருமூலர் கூட

  "தன்னை நன்றாகத் தமிழ் செய்ய என்னை நன்றாக இறைவன் படைத்தனன்" 

  என்று பாடித் தன் கடமையை திருமூலரே உணர்த்தியிருக்கின்றார். அதாவது உலக வாழ்க்கை வழுக்கை என்றாலும் ஒவ்வொரு மனிதர்களுக்கும் கடமை உள்ளது அல்லது கடமையை உள்ளதாக்கிக் கொள்ள வேண்டும் என்பது புலப்படுகின்றது. துறவியானவர் துறவறத்தில் இருந்த வண்ணம் சமூகத்திற்கு நல்லவற்றை உரைக்கவில்லையா? 

  ஒன்றுமில்லாமல் போவோம் என்று தெரியாமலே பிறக்கின்றோம். வாழ்க்கையில் நாம் எதுவுமில்லாமலே போவோம் என்று தெரிந்தே வாழ்கின்றோம்ள, சாதிக்கத் துடிக்கின்றோம். ஆனால், மனிதன் மூளையில் ஒன்று குடைந்து கொண்டே இருக்கும். இந்த பூமியில் பிறந்து விட்டோம். எமக்கோ அல்லது எம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கோ ஒரு வெளிச்சத்தைக் காட்டிவிட்டு மறைவோம் என்று சில மனிதர்கள் வாழ்க்கையைக் கொண்டு செல்வார்கள் என்பது உண்மையே. இங்கு எதிர்கால சமூகம் பற்றிய அக்கறை தொனிக்கின்றது. சிலருக்கு பிறப்பிலேயே தொடர் ஊக்கம் தொழிற்படும். தன்னால் முடியாது என்றாலும் தொடர்ந்து முயற்சியில் ஈடுபட்டு தம் இறுதிக்காலங்கள் வரையிலும் தம்முடைய எண்ணக்கருக்களை வெளிப்படுத்திக் கொண்டே இருப்பார்கள்.

  வாழ்க்கையை நிலையானதான மாற்ற விஞ்ஞானிகளும் முயற்சி மேற்கொண்டுதான் இருக்கின்றார்கள். இது நடக்குமா என்று சந்தேகப்பட்ட எத்தனையோ விடயங்கள் இன்று நடத்திக்காட்டப்பட்டுள்ளன. உருவ மாற்றுச் சிகிச்சை என்பது பிறந்தது எப்படியான தோற்றமோ அத்தோற்றத்தை முழுவதுமாக மாற்றுகின்றார்கள்((Plastik surgery) ஆணைப் பெண்ணாகவும், பெண்ணை ஆணாகவும் மாற்றுகின்றார்கள், குளோனிங் முறையில் ஒரு மனிதனை மறுபடியும் உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் முனைந்து கொண்டிருக்கின்றார்கள். குளோனிங் முறையில் கலவியில்லா குளோனிங், (Asexual Reproduction) மரபணுக்களையும் DNA  கூறுகளையும் பிரதி எடுக்கும் ஜீன் குளோனிங் (), ஒரு மிருகத்தை அப்படியே பிரதி எடுக்கும் இனப்பெருக்க குளோனிங் (சுநிசழனரஉவiஎந ஊடழniபெ)சிகிச்சை முறைகுளோனிங் (வுhநசயிநரவiஉ ஊடழniபெ) என குளோன்களை உருவாக்க மனிதன் முனைந்து கொண்டிருக்கின்றான். எம்மால் அறியப்பட்ட டாலி என்னும் செம்மறி ஆடு, டியூவி என்றழைக்கப்படும் மான், ஸ்நூபி என்றழைக்கப்படும் நாய் போன்றன குளோனிங்குக்கு அத்தாட்சிகளாகக் காணப்படுகின்றன. அண்டங்கள் தாண்டி ஆராய்ச்சிகளில் பிரபஞ்சத்தை நோக்கி பார்வையைக் கொண்டு செல்கின்றார்கள். இவையெல்லாம் வாழ்க்கையையும் பிறப்பையும் நியாயப்படுத்துவதற்கும் நிலைப்படுத்துவதற்கும் மனிதனின் முயற்சிகளாக இருக்கின்றன.

  விஞ்ஞானிகளின் வரிசையில் உலகின் தலைசிறந்த அறிவியலாளரான ஸ்ரீபன்  வில்லியம் கார்க்கிங் (08.01.1942 – 14.03.2018) என்றுமே எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துபவராகக் காணப்படுகின்றார். வாழவே முடியாத ஒரு மனிதன். தசையூட்டமற்ற பக்க மரப்பு நோயால்(Amyotrophic lateral sclerosis – ALS )அதாவது இயக்க நரம்பணு நோயால்  (ஆழவழச நெரசழn னளைநயளந) பாதிக்கப்பட்டார். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூளை சொல்வதை தசை செய்யாது. உடல் அடங்கி ஒரு சக்கர நாற்காலிக்குள் ஐக்கியமாகிவிட்டது. இயக்கவியல் விஞ்ஞானியான இவர் ஷஷஈக்வலைசர்|| என்ற கொம்பியூட்டர் புரோக்ராம் உதவியோடு  கன்னத் தசைகள் மூலம் கொம்பியூட்டரில் பேசி வந்தார். இந்நோய் கண்டபோது இன்னும் 2 வருடங்களே ஸ்ரீபன் வில்லியம் ஹாக்கிங் வாழ்வார் என்று மருத்துவர்கள் இவருடைய இறப்புக்கு நாள் குறித்தனர். 23 வயதில் இவருக்கு இவ் அச்சுறுத்தல் கிடைத்தது ஆனால், உலகவாழ்க்கையை விட்டுப் பிரியப் போகின்றோம் என்று தெரிந்திருந்தும் காதலித்தார். திருமணம் செய்தார். பிரபஞ்சத்தை முழுவதுமாக அறிந்து கொள்ளவேண்டும் என்ற ஆவலும் முயற்சியும் அவரை 76 வருடங்கள் வரை வாழ வைத்தது. இறப்பு எந்த நிமிடமும் வரலாம் என்று சிந்தித்த ஸ்ரீபன் ஹாக்கிங் வாழும் வரை அசைய முடியாத நிலையிலும் தன்னுடைய மூளையைப் பயன்படுத்தி தன்னுடைய ஆராய்ச்சியில் ஈடுபடுத்திக் கொண்டே இருந்தார். 

  இவ்வாறான மனிதர்களை சிந்தித்துப் பார்க்கின்ற போது வாழ்ககை என்பது வழுக்கை என்று நினைத்தாலும், எதற்காவது வாழ வேண்டும் என்ற நினைப்பானது  மூளை சுறுசுறுப்பான மனிதர்களுக்கு தோன்றிக் கொண்டே இருக்கும். இது இயற்கையின் நியதி, கோட்பாடு என்றே கூறலாம். 

  செவ்வாய், 24 செப்டம்பர், 2019

  இந்த பிரபஞ்சத்தில் நாம் எங்கே இருக்கின்றோம்,

  இந்த பிரபஞ்சத்தில் நாம் எங்கே இருக்கின்றோம், எந்த அளவாக நாம் இருக்கின்றோம், எமது அறிவு பிற உயிர்களுடன் ஒப்பிடும் பொழுது எப்படியானது என்பன பற்றி ஆராய்வதே இக்கட்டுரை.

                நாம் வாழும் பூமி சூரியக்குடும்பத்தைச் சேர்ந்தது. இச்சூரியக் குடும்பத்தில் ஒன்பது கிரகங்களும் அவை பிரயாணம் செய்கின்ற பாதைகளும் அமைந்த பரப்பு சிற்றண்டம் என்று அழைக்கப்படும். நாம் வாழுகின்ற பூமி தன்னைத் தானே சுற்றுவதுடன் சூரியனையும் சுற்றி வரும் பாதை இந்தச் சிற்றண்டத்திலேயே அடங்குகின்றது. 1008 சிற்றண்டங்கள் சேர்ந்த பரப்பு ஒரு பேரண்டமாகும். 1002 பேரண்டங்கள் சேர்ந்த பரப்பு ஒரு புவனம் ஆகும். 2214 புவனங்கள் சேர்ந்த பரப்பு சாகரம் எனப்படுகின்றது. 7 சாகரங்கள் சேர்ந்த பரப்பு பதம் எனப்படுகிறது. 814 பதங்கள் சேர்ந்ததே இந்தப் பிரபஞ்சம் என பிரபஞ்சப் படைப்புப் பற்றி தொன்மைத் தத்துவங்களும் அண்மை அறிவியலும் என்னும் நூலில் இருந்து அறியக் கூடியதாக இருக்கின்றது. நாம் வாழும் பூமி 51 கோடியே 66 ஆயிரம் கிலோ மீற்றர் கொண்டது. எனவே நாம் வாழுகின்ற பூமியில் நாம் வாழும் பகுதி எந்த அளவில் இருக்கிறது. இந்தப் பிரபஞ்சத்தில் நாங்கள் எந்த அளவில் இருக்கின்றோம் என்பதை இப்போது எம்மால் அறியக் கூடியதாக இருக்கின்றது.

                   நாம் வாழும் பூமி 4.54 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது. அதன் வயது 460 கோடி வருடங்கள் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள். இத்தனை கோடி வருடங்களில் நிலம், நீர், காற்று போன்றவற்றில் சிறிய நுண்ணுயிர்கள, தாவரங்கள், பூச்சிகள், ஊர்வன,  விலங்குகள், மனிதன் என ஒரு பில்லியனுக்கும் அதிகமான வகையான உயிரினங்கள் வாழுகின்றன. அவற்றுள் ஒரு இனமே மனித இனம். இம்மனித இனத்திலே நாமே அறிவாளிகள். எம்மை மிஞ்ச ஆளும் இல்லை. எமக்கு நிகர் எவரும் இல்லை என மார்பு தட்டிக் கொள்ளும் நாம், இன்னும் கொஞ்சம் ஆழமாகப் பார்ப்போம்.  இந்த பிரபஞ்சத்தில் பூமி தவிர்ந்த வேற்றுப் பிரபஞ்சப்பரப்பில் எம்மைப் போன்ற மனிதர்களோ வேறு விதமான உயிரினங்களோ வாழ்கின்றனவா என ஆராய்ச்சியாளர்கள் தேடிக் கொண்டிருக்கின்றார்கள். எழுத்தாளர்களும் கற்பனையில் உயிர்கள் இப்படி இருக்கலாம் என்று அப்படி இருக்கலாம் என்று வடிவங்கள் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இது பற்றிய விதம் விதமான ஆங்கிலப்படங்கள் வெளிவந்துள்ளன. ஒரு அண்டத்தில் இருந்து பிற அண்டத்தை அடையவே மனிதனின் ஆயுள் காலம் முடிந்து விடும். இந்த அற்புதமான பிரபஞ்சப் படைப்பில் மனிதனும் அவன் போன்ற வேற்றுக் கிரகவாசிகளும் இம்முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பார்கள் என்பதே எனது கற்பனையாகின்றது.


            எமது 450 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்தான் தாவரங்கள் தோன்றின என்றும், உலகில் மனிதனின் தொகை 700 கோடியாக அதிகரித்துள்ளது என்பதும் ஆய்வாளர்கள் கணிப்பீடு. இக்கணிப்பீடில் எமது ஆயுள் காலம் எத்தனை. நாம் வாழும் காலப்பகுதியில் திருவள்ளுவர், சுவாமி விபுலானந்த அடிகளார், தனிநாயகம் அடிகளார், விவேகானந்தர், கண்ணதாசன், சூரிய மையக் கோட்பாட்டை அறிவித்த Nicolaus Copernicus, மரபியலின் தந்தை Gregor Johann Mendel, தத்துவஞானி Socrates பரிமாணவளர்ச்சிக் கொள்கையாளர் Charles Robert Darwin போன்ற எத்தனையோ எழுத்தாளர்கள்சுவாமிகள், மேதாவிகள், ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகளைக் கண்டிருக்கின்றோம். கேள்விப்பட்டிருக்கின்றோம். தற்போது இணையம் அவர்களை அடையாளம் காட்டுகிறது. காலப்போக்கில் எம்முடைய வீடியோ நாடாக்கள், ஒலி நாடாக்கள் மறைந்து போனது போல் இணைய வடிவமும் மாறலாம். அப்போது இணையம் தொலைத்து ரொபோட்டோக்கள் தேடும் காலங்களில் இவர்கள் மறக்கப்படலாம். இவர்கள் நினைக்கப்பட்டாலும் அவர்கள் ஆயுள் காலத்தின் பின் இவர்கள் ஆற்றிய சேவைகளும் பணிகளும் அவர்கள் இறப்பின் பின் அவர்களுக்கு என்னவாகின்றது? அவர்கள் மத்தியில் நாம் எங்கே நிற்கின்றோம்? என்பதை ஓடிக் கொண்டே இருக்கும் நாம் சிந்தித்துப் பார்க்கும் நிலையில் இருக்கின்றோம். எமது சந்ததியை முன்னோக்கிப் பார்க்கின்ற போது எமது தந்தையின் தந்தையை அல்லது எமது தந்தையின் பாட்டனின் பெயர் எமக்குத் தெரிந்திருக்கின்றதா? இல்லை அவர்பற்றி அறிகின்றோமா? இங்கு எமது நிலை இப்பிரபஞ்ச வாழ்நாளில் எங்கே என்று இப்போது அறிந்து கொள்கின்றோம்.


        இத்தேடல் என்பது மனிதனில் மட்டும்தான் இருக்கின்றதா இல்லை வேறு உயிரினங்களிலும் இருக்கின்றனவா? என்பன கேள்விக்குறிகள். பூமியில் கோடிக்கணக்கான உயிரினங்கள் உள்ளன. அவற்றை தொல்காப்பியர் 

  ''ஒன்ற றிவதுவே உற்ற றிவதுவே
  இரண்டறிவதுவே அதனொடு நாவே
  மூன்றறிவதுவெ அவற்றொடு மூக்கே
  நான்கறிவதுவே அவற்றொடு கண்ணே
  ஐந்தறிவதுவே அவற்றொடு செவியே
  ஆறறிவதுவெ அவற்றொடு மனனே
  நேரிதி உயர்ந்தோர் நெறிப்படுத்தினரே''

  என ஓரறிவு, ஈரறிவென வகைப்படுத்தினார். ஆனால் இவ்வகைப்படுத்தலை விஞ்ஞானிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. லின்னேயஸ் என்னும் பிரான்ஸ் நாட்டு விஞ்ஞானி 1707 ஆம் ஆண்டிலே உயிர்களின் உடலமைப்பு, தன்மை, இயல்புகளை அடிப்படையாகக் கொண்டு வகைப்படுத்தினார். உயிரினங்கள் முதலில் தாவரங்கள், பிராணிகள் என்று வேறுபடுத்தினார். பிராணிகளில் முதுகெலும்பு உள்ளவை, முதுகெலும்பு இல்லாதவை என்று இரு உபபிரிவுகள் உள்ளன. முதுகெலும்பு உள்ளவை மீன், தவளை, ஊர்வன, பறப்பன, பாலூட்டிகள் என்று 5 பிரிவுகள் உள்ளன. முதுகெலும்பு இல்லாதவை அமீபா, கடற்பஞ்சி, மண்புழு, பூச்சி, சிப்பி, நட்சத்திரமீன் ஆகியன அடங்கும்.


  தாவரங்களில் இரு பெரும் பிரிவுகள் உண்டு. பூ உள்ளவை, பூ இல்லாதவை. பூவுள்ள தாவரங்களில் மூடிய விதையுள்ளவை, மூடாத விதை உள்ளவை என இருவகைப்படுகின்றன. ஆல்கா, காளான், பாசி, பிரணி ஆகியவை பூக்காத தாவரங்களாகின்றன. பாலூட்டிகள் குட்டி போட்டு பால் தருபவை. ஆடும், மாடும் ஒரே குடும்பம் . பூனையும், புலியும் ஒரு குடும்பம் . கழுதையும், குதிரையும் ஒரே குடும்பம். இவற்றில் சைவமும் அசைவமும் உள்ளன. ஊர்வனவற்றுள்ள பாலூட்டிகள் உஷ்ண ரத்தம் உடையவை. நுரையீரல்களால் சுவாசிப்பவை. பறவைகளும் நுரையீரலால் சுவாசிக்கின்றன. ஆனால் அவை முட்டையிட்டு குஞ்சு பொரிப்பவை. ஒவ்வொரு பிரிவிலும் வௌ;வேறு லட்சணங்களும், பாகுபாடுகளும் இருக்கின்றன. இவ்வாறு லின்னேயஸ் அவர்களுடைய ஆராய்ச்சி செல்கின்றது.

                இவற்றுடன் மனிதனின் திறமையை ஒப்பிட்டுப் பார்க்கும் போது நாம் எம்மை நாமே மெச்சிக் கொள்வது போலியாகவே படுகின்றது. பிறருக்காக எம்மை நாம் இழக்கின்றோம் சமூகசேவை செய்கின்றோம் என்று சொல்லும்போது முதலையின் பல் இடுக்கிலே இறைச்சி பொறுத்துவிட்டால், ஆ என்றபடி வாயை விரித்தபடி நீரினுள் முதலை படுத்திருக்கும். அப்போது குகிமா என்னும் குருவி வாயினுள் இருந்தபடி அதன் பற்களை துப்பரவு செய்துவிட்டுப் பறந்துவிடும். காகம் வீதியில் கொட்டிக்கிடக்கும் குப்பைகளை துப்பரவு செய்து செல்வதுடன் உணவுகளைக் கண்டால் கா...கா.. எனக் கத்தி தன் இனத்திற்கும் உணவுகளைப் பகிர்ந்தளிக்கும். இதுவும் ஒரு சமூக சேவையே.

           மனிதர்களில் சிறந்த கட்டிடக் கலை விற்பனர்களுக்கு பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கின்றோம் கண்களே இல்லாத கறையான்கள் சிறந்த கட்டிடக்கலை நிபுணர்கள் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டியதே. இவர்களில் அரசன், அரசி, தொழிலாளர்கள், படைவீரர்கள், போன்ற பல பிரிவுகள் இருக்கின்றன. தொழிலாளர் கறையான்கள் செம்மண்ணை உண்ணும் அச்செம்மண் வயிற்றினுள் சென்று அமிலங்களுடன் சேர்ந்து ஒருவகை பதார்த்தமாகும். இதனை வாயினால் வெளியெடுத்தே தன் கட்டிடப்பணியைத் தொழிலாளர் கறையான்கள் மேற்கொள்ளும். இக்கட்டிடத்தில் ஏதாவது பழுது ஏற்பட்டுவிட்டால், டிக்டிக் என்று மற்றைய கறையான்கள் தட்டும்போது தொழிலாளர் கறையான்கள் வந்து திருத்த வேலைகளைச் செய்வார்கள். இக்கட்டிடத்தில் பலவகையான அறைகள் இருக்கின்றன. உலாவும் அறையும் உண்டு. தொனேசியாவிலுள்ள ஒரு கறையான் புற்று 15,000 தொன் எடையுள்ளது. இது 150 ஆண்டுகள் பழைமையானது. சோழர்காலக் கட்டிடடம், பல்லவர்காலக் கட்டிடம் என நாமும் பெருமை பேசிக் கொள்ளுகின்றோம். ஆபிரிக்கக் காட்டிலுள்ள கறையான் புற்றுக்களை  யானைகளால்கூட உடைக்க முடியாது. இந்ந புற்றுக்களை 21 பாகை சென்ரிகிறேட்டிலிருந்து 36 பாகை சென்ரிகிறேட் வரை வெப்பநிலையில் வைத்திருப்பார்கள். தொழிலாளர்கள் கட்டிடம் கட்ட பாதுகாப்புப் பணியைப் படைவீரர்கள் செய்கின்றார்கள். படைவீரர்கள் மெழுகுபோல் ஒரு எச்சிலை அக்கட்டிடத்தில் உமிழ்ந்துவிட அம்மணத்தில் பூச்சிகள் நெருங்காது. மீறி நெருங்கும் பூச்சிகளை படைவீரர்கள் கொன்றுவிடுவார்கள். இப்போது நினைத்துப் பாருங்கள் நாம் மட்டுமா நாட்டையும் வீட்டையும் காக்கின்றோம்? இப்படிப் பல பணிகளைப் பிரித்து ஒவ்வொருவருக்கும் கொடுத்து ஒரு இராச்சியமே நடத்தும் கறையான்களைப் பற்றி எம்முடைய ஒளவைப்பாட்டி என்ன சொல்ல வருகின்றார் என்று பார்ப்போம்.  வான்குருவி யின்கூடு வல்லரக்குத் தொல்கறையான்
  தேன்சிலம்பி யாவருக்குஞ் செய்யரிதால் யாம்பெரிதும்
  வல்லோமே என்று வலிமைசொல வேண்டாங்காண்
  எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது

  தூக்கணாங்குருவிக் கூடு, தேன்கூடு, கறையான் புற்று இவை யாருக்கும் செய்வது அரிது. எனவே யாம் கெட்டிக்காரர் என்று வலிமை சொல்ல வேண்டாம் என்று உறைக்கச் சொல்லுகின்றார்.

        கடலில் ஆயிரக் கணக்கான உயிரினங்கள், தாவரங்கள் வாழுகின்றன. இவற்றில் சில தாவரங்கள் மீன்களைப் பிடித்து இழுத்து உண்ணுகின்றன. சிலவகை மீன்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக வாயினால் ஒரு வகை வாயுவைக் கக்கித் தம்மைப் பாதுகாக்கும் சிலவகை மீன்கள் தலை,வால் பகுதியில் மின் விளக்குகள் போன்ற ஒளியை உருவாக்கி மீன்களை மயக்கி இழுத்து இரையாக்கிக் கொள்ளுகின்றன. இது தம்மைத்தாம் பிரபல்யப்படுத்துவதற்கு ஓடித்திரிகின்ற மனிதர்களைப் போலவே தமக்கு வெளிச்சம் போட்டுத் திரிவதைக் காணக்கூடியதாக இருக்கின்றன. இதைவிட விலாங்கு மீனின் தலைப்பகுதி பாம்பைப் போன்றிருக்கும் வால்பகுதி மீனைப் போன்றிருக்கும். அது மீனுக்கு வாலைக் காட்டி மீனினம் என்று தப்பிக் கொள்ளும் பாம்புக்கு தலையைக் காட்டி பாம்பு இனம் என்று தப்பிக் கொள்ளும். இவ்வாறான விலாங்குமீன் போன்ற மனிதர்களை நாம் வாழும் காலத்தில் கண்டிருக்கின்றோம். எனவே கடல் வாழ் உயிரினங்களுடன் ஒப்பிடும் போது நம் பெருமையை நாம் சொல்ல வழியில்லாமல் போகின்றது அல்லவா.

  கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
  அவையல்ல நல்ல மரங்கள் - சபைநடுவே
  நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய
  மாட்டா தவனன் மரம்

  என்று தரப்படுகின்ற எழுதப்பட்ட செய்தியை ஒரு சபையிலே வாசிக்கத் தெரியாதவனை மரம் என்று இகழ்ந்தார் ஒளவைப்பிராட்டி. ஆனால்,

  'மரம்தான் மரம்தான் எல்லாம் மரம்தான்
  மறந்தான் மறந்தான் மனிதன் மறந்தான்'

  எனக் கவிதை பாடிய கவிப்பேரரசு வைரமுத்து மரங்களின் அத்தனை மகிமையையும் எடுத்துக் காட்டி மரங்களைப் பெருமைப்படுத்தினார்.

  வேர்களால் உண்ட நீரை தலையாலே எமக்குத் திருப்பித் தருகின்ற தென்னையை எமது உபகாரத்திற்கு ஒப்பிடுவோமா. தன்னுடைய அங்கங்கள் அனைத்தையும் எமக்குப் பயன்படத் தருகின்ற பனையை எமது உபகாரத்திற்கு எடுத்துரைப்போமா?
  நோய்களுக்கு மருந்தாக வாய்க்குச் சுவையாக வாழ்க்கைக்கு உதவியாகப் பயன்படுகின்ற மரங்களுக்குள் ஆச்சரியப்பட வைக்கும் பண்புகள் இருக்கின்றன.

          இவ்வாறு உலகப்படைப்பின் அனைத்தும் அற்புதமே. அனைத்துடனும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது நாம் .......?


  அப்துல் கலாம் வாழ்வில் 100 அரிய நிகழ்ச்சிகள் நூல்

  "தூங்கி எழுந்தால் பூமி உனக்குப் படுக்கை ஆகிறது. எழுந்து நடந்தால் அதுவே உனக்குப் பாதையாகிறது" - டாக்டர் அப்துல் கலாம்   எவரும...