• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  வியாழன், 4 ஜூலை, 2019

  அட நல்ல தலையிடி  தலை என்ற ஒன்று இருந்தால் அதில் தலைவலி என்ற ஒன்றும் அவ்வப்போது வந்து போகும். எப்படி சுகம் என்று கேட்டால், அட நல்ல தலையிடி என்பார்கள். தலையில் நல்ல இடி கூட இருக்கிறதா? என்றால், நாள் முழுவதும் இடி முழக்கத்துடன் கொட்டோ கொட்டென்று கொட்டும் மழையை இன்று நல்ல மழை என்பதும், நச்சுப் பாம்பை நல்ல பாம்பு என்பதும், சுடுகாட்டை நன்காடு என்பதும்  நமது தமிழ் இலக்கணத்தில் மங்கலம் என்று அழைப்பார்கள். மங்கலம் இல்லாதததை மங்கலமாக அழைப்பதுவே வழக்கில் மங்கலம் எனப்படும்.  தலையிலே தாங்க முடியாத வலியைத் தரும் கொடுமையான வலியை நல்ல தலையிடி என்பதும் மங்கலமே. 

          எங்கள் உடலிலேயே தலைமைப்பீடம் மூளை. அந்த மூளையே எம்முடைய உடலை முழுமையாக இயக்குகின்றது. இந்த மூளையானது தலையில்தானே இருக்கின்றது. அப்படியானால், தலைவலி மூளைக்குள் வந்துவிட்டால்??? பயப்படத் தேவையே இல்லை. மூளைக்குத் தலைவலி வருவதே இல்லை. மூளையைத் தனியே எடுத்து ஒரு பெரிய பாறாங்கல்லைப் போட்டுப் பாருங்கள் சத்தமே இல்லாமல் அமைதியாக இருக்கும். ஏனென்றால் அதற்கு வலிக்காது. இத்தலைவலிக்குச் சுவாரஸ்யமான ஒரு நாட்டுப்பாடல் பாடப்படுகின்றது.

  தலையிடி காய்ச்சல் வந்தால் 
  தயவுடன் மருந்தைக் கேளாய்
  மலையிலுள்ள கல்லைத் தூக்கித் 
  தலையில் போட்டால் தலையிடி நின்றுவிடும்

  அப்பாடா…. தலையிடி மூளைக்கு இல்லை. அப்படியென்றால், எங்கே வருகின்றது? ஏன் வருகின்றது? மூளைக்கு வெளியே அதிகமான நரம்பு மண்டலங்கள் இருக்கின்றன. இவைதான் மூளைக்குச் செய்திகளை அனுப்பி மூளைக்குரிய செயற்பாடுகளைத் தூண்டுகின்றன. அதன்பின் மூளையிடும் கட்டளையை உள்வாங்கி எம்முடைய உடல் உறுப்புக்கள் தொழிற்படுகின்றன. எனவேதான் தலைமைப் பீடம் என்றேன். சும்மா இருக்கும் தலைமைப்பீடத்திற்கு சுற்ற வரவுள்ள உறுப்பினர்கள் சிந்தனையைத் தூண்டச் செய்து கட்டளையை பிறப்பிக்க வைக்கின்றார்கள். இதுபோலவே சுற்றவரவுள்ள நரம்புகளுக்கு அதிகமான இரத்தம் பாய்ச்சப்படுகின்ற போது நரம்புகள் வீக்கமடைகின்றன. அத்துடன் ஏனைய நரம்புகளையும், மூளையையும் அழுத்துகின்றன. “இங்க பாரப்பா எங்களுக்குத் தேவையில்லாமல் அதிகமான இரத்தம் எம்முடைய நரம்புகளுக்குள்ளே வருகின்றன என்று நரம்புகள் முறையீடு செய்ய உடனே மூளை வலியெனக் கண்டுபிடிக்கின்றது. 

            மனிதன் வாழ்க்கையில் பிரிக்கமுடியாதது நோய். ஆனால் மனிதனால், தவிர்க்கக் கூடியதும். தடுக்கக் கூடியதும் நோய்தான். அதிலே தலைவலி இருக்கின்றதே அது நிச்சயமாகத் தடுக்க வேண்டியதுதான். ஏனென்றால், தலைவலி வருகின்ற காரணங்களை அறிந்து அதை நாம் முழுமையாகத் தவிர்த்துவிட்டோமேயானால், மனமும் தலையும் சுகமாக இருக்கும் அல்லவா. உலகத்திலேயுள்ள மக்களில் 70 வீதமான மக்களுக்கு ஒரு தடவையாவது தலைவலி வந்திருக்கும் என்பது உண்மை. இவற்றின் வகைகளை நாம் பார்த்தால் 200 க்கு மேல் இருக்குமாம். இவற்றில் 5 வீதமான தலைவலியே உடம்பில் ஆபத்தான நோய்களுக்கான காரணியாக இருக்கும். ஏனையவை சும்மா எம்மை வாழ்க்கையில் வதைத்துப் பார்க்கும் தலைவலிகளே என்பதை அறியக் கூடியதாக இருக்கின்றது. 

           வாழ்க்கையை நிம்மதியாகவும், நோய் இன்றியும் செலுத்த வேண்டும் என்றால் எமக்குத் தலைவலி தருகின்ற விடயங்களைத் தவிர்க்க வேண்டும் என்பது உண்மை. இரவில் அதிகநேரம் விழித்திருந்து கணனி முன் வேலை செய்கின்றபோது கண்ணுக்கு சுமை அதிகரித்து தலைவலியைக் கொண்டுவருகின்றது. இதனைப் பலர் அறிந்திருப்பீர்கள். அதிகமான சத்தத்தைத் தொடர்ந்து கேட்பதனாலும், அசுத்தக் காற்றைச் சுவாசிப்பதனாலும், எமது உடலுக்கும் உள்ளத்திற்கும் ஒவ்வாமையான காரியங்களைச் செய்வதனாலும் தலைவலி வரக்கூடிய சாத்தியக் கூறுகள் இருக்கின்றன. இவ்வாறு சின்னச்சின்ன பல காரணங்கள் இருக்கின்ற போது இவற்றுக்கான தீர்வை நாம் காண்பதற்கு எமக்கு நாமே கேள்விகளைக் கேட்க வேண்டியதும், எம்மை நாம் அவதானிக்க வேண்டியதும் அவசியம். எந்த இடத்தில் இருந்து தலைவலி வருகின்றது. எவ்வாறான சந்தர்ப்பங்களில் தலைவலி வருகின்றது தலைவலி கொடுப்பவர் யார்? எவ்வாறான சந்தர்ப்பங்களில் தலைவலி ஏற்படுகின்றது? என்பதனை அவதானமாக அவதானிக்க வேண்டும். 

  மனஅழுத்தம் தலைவலிக்கு முக்கிய காரணமாகப்படுகின்றது. மனஅழுத்தம் எவ்வாறு ஏற்படுகின்றது. சிலர் பேசுகின்ற போது நேரம் அதிகரிக்க அதிகரிக்க தலைக்குள் ஏதோ செய்வது போல் இருக்கும். அவர் பேச்சை நிறுத்த வேண்டும். இல்லையென்றால், நாம் அவர் பேச்சை நிறுத்த வேண்டும். இவை இரண்டும் நடக்கவில்லை என்றால் எமது தலை வலிக்கத்  தொடங்கிவிடும். சிலர் 5 நிமிடம் சொல்ல வேண்டிய விடயத்தை அரைமணி நேரம் சொல்வார்கள். அப்படியே வாய்க்குக் கட்டுப் போட்டுவிட வேண்டும் போல் இருக்கும். குறைவில்லாத சில சொற்களாலே கருத்தை விளக்கிச் சொல்வதற்கு அறியாதவர்களே, பல சொற்களைச் சொல்வதற்கு எப்போதும் விரும்புவார்கள், மேன்மையும் கெடுதியும் பேச்சினாலேயே வருவதனால், சொல்லிலே சோர்வு உண்டாகாத படி ஒருவன் தன்னைக் காத்துப் பேணி வருதல் வேண்டும் என்று வள்ளுவர் கூறியிருக்கின்றார். இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஏற்படும் மனஅழுத்தத்தைத் தவிர்க்கும் போது தலைவலிக்கு நாம் தீர்வு கண்டுவிடுவோம். 

  எமக்குப் பிடிக்காத காரியங்களை பிறர் வற்புறுத்தலுக்கு நாம் செய்கின்ற போது  எம்மனதுக்கு ஒவ்வாமை ஏற்பட்டு தலைவலியைத் தரும். இவ்வாறான தலைவலியை நாம் தவிர்ப்பது இலகுவாக அமைகின்றது. வெளிப்படையாக அவ்விடயத்திலிருந்து விலகிக் கொள்வது எம்மை நாம் பாதுகாக்கும் காரணியாக அமைகின்றது.

  இதைவிட மனிதர்களின் கண்களுக்கு நன்மை விளைவிக்கும் சக்தியும் உண்டு. தீமை விளைவிக்கும் சக்தியும் உண்டு. அதனாலேயே “கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது” என்பார்கள். இதற்கு கண்ணூறு கழித்தல் செய்வார்கள். கண்ணினால் வருகின்ற ஊறு கழிக்கப்படுதல் என்பதே அதன் அர்த்தம். இதுபோலவே நாவூறும் அமைகின்றது. குழந்தைகளுக்கு பெரிய கறுப்புப் பொட்டு வைத்து பிறர் கண்கள் பொட்டிலே படிய வைத்துவிடுவார்கள். நம்மோடு பழகுபவர்கள் எல்லோரும் நல்ல மனதுடன் பழகுவார்கள் என்று சொல்ல முடியாது பொறாமை வெறுப்புடன் பழகுபவர்களும் எதிர்மறை எண்ணப் போக்குள்ளவர்களும் உண்டு. அதனால், எண்ணங்களில் நல்ல மனிதர்களைத்தேடிப் பழகுவதும் எம்முடைய தலைவலியை நாம் தவிர்க்க எடுக்கும் முயற்சியாகப்படுகின்றது. 

  எனவே அவதானம் என்பது எமது வாழ்க்கையில் மட்டுமல்ல, எம்மைச் சுற்றியுள்ள சுற்றுச் சூழலிலும், சுற்றத்தாரிலும் என்பதை அறிந்து நடக்க வேண்டியது அவசியம். 

  ஜூலை மாத வெற்றிமணி பத்திரிகையில் வெளிவந்த என்னுடைய கட்டுரை.
  Neuralink Ni

  Brain computer interface research or brain machine interfaces   மனிதனின் இதயத்தில் கை வைத்தாகள். இதய மாற்று சத்திரசிகிச்சை, கல்லீரல், சிறு...