• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    வெள்ளி, 15 ஜூன், 2012

    ஆணே உன் கதி இதுதானா?




    அந்நியநாட்டிலே வாழும் மனிதர் ஆயிரம் - அவர்
    வாழ்க்கை முறையும் ஆளுக்காள் தனிரகம்
    சோம்பிக் கிடப்பாரையும் வாழ வைக்கும்
    சோம்பல் அறியா மனிதரையும் வாழவைக்கும்

    பகலவன் கடமையைப் பங்கேற்றுக் கொண்ட வீதிவிளக்குகள், அசைவின்றி அமைதியைப் பேணிப் பாதுகாக்கும் சாலையோர மரங்கள், வியாபாரநிலையங்களின் விடிவிளக்குகள் மட்டுமே தமது கடமையைப் பங்கேற்றுக் கொண்ட மாலைப்பொழுது , உலகமே உறங்கிக் கொண்டிருக்கும் ஆரவாரமில்லாத மாரிகாலப் பொழுது. வெள்ளைப்பனியில் ஜேர்மனி மூழ்கிக் கிடக்கும் - 14 பாகை கடுங்குளிர். ஆனால், அவள் மட்டும் சாளரம் நடுவே  சாலையை நோக்கியவண்ணம் நின்று கொண்டிருந்தாள். அவள்தான் சாரதா. மணி இரவு பன்னிரெண்டை வழியனுப்பி வைத்திருந்தது. அயலவர் ஆழ்ந்த உறக்கத்திற்குத் தன் காலடிஓசை தகராறு செய்யக்கூடாது என்பதற்காக வாடகை வீட்டின் படிகளில் மெல்லெனத் தாண்டித் தாண்டித் தன் வாசல் கதவை மெதுவாய்த் திறந்தான், பத்மன். ஜேர்மனியில் பகல் 1.00 மணியில் இருந்து 3.00 மணி வரையும் இரவில் சில நகரங்களில் 21.00 மணியிலிருந்து அடுத்த நாள் காலை 6.00 மணி வரையிலும் சில நகரங்களில்  22.00 மணியிலிருந்து அடுத்த நாள் காலை 6.00 மணி வரையிலும் சத்தம் செய்தல் கூடாது. ஞாயிற்றுக் கிழமைகளில் முழுநாளும் சத்தம் இல்லாத நாளாக அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டும். இதுவே சட்டமாக இருக்கின்றது. சனிக்கிழமைகளில் 23.00 மணி வரை பிரச்சினை இல்லை. ஆனால், குடியிருப்பிற்கு அருகிலுள்ள குடியிருப்பாளர்களிடம் முன்னமே அறிவித்து இருக்க வேண்டும். அதனால் தான் வசிக்கும் வீட்டிற்கு அருகிலுள்ள குடியிருப்பாளர்கள்  வீட்டில் தன் காலடிச்சத்தம் இடைஞ்சல் செய்யக் கூடாது என்பதற்காக மெல்லென வீட்டினுள் பத்மன் நுழைந்தான்.

    இனிமையான இளமைப் பருவங்கள் கடமைச் சுமையால் கரைந்தோட, காதோரம் வெள்ளிக் கம்பிகள் அவதாரம் செய்ய, நாற்பத்து நான்கு வயதில் தன் மூளையில் தட்டிய, தனக்கென்று ஒரு துணை தேவை என்னும் விடயத்தைக் கருத்தில் கொண்டு துணை ஒன்றைப் பெற்றான். ஆர்ப்பாட்டம் இல்லாது ஆலயத்தில் ஆதரவான சில நண்பர்கள் ஆசீர்வாதத்துடன் மங்கலநாணைத் தன் மனைக்கும் மனதுக்கும் சொந்தக்காரிக்கு அணிவித்தான். அவளும் அவன் மனதுக்குப் பிடித்த பெண்ணாய் அன்போடு வாழ்கின்றாள்;. இன்னும் அவனுக்கு இரவே பகல், பகலே இரவு. பகலில் ஒரு நிறுவனத்தில் வேலை முடித்து அங்கிருந்தே சீன உணவகத்தில் சமையல் பாத்திரங்களைக் கழுவித் துப்புரவு செய்யும் தொடர் பணியை முடித்து இரவு முடியும் அதிகாலைப் பொழுது தன் ஓய்வுக்காக வீட்டை அண்மிப்பான். அவ்வேளை வரை அவனுக்காக உறங்காது விழித்திருக்கும் தன் மனைவியுடன் அளவளாவி விட்டு களைப்பில் கண்ணுறங்கிவிடுவது அவனது நாளாந்த வழக்கமாகும். எப்படித்தான் சீன உணவகத்தில் வேலை செய்தாலும் ஐரோப்பிய நாட்டில் வாழ்ந்தாலும் எங்கள் நாட்டுச் சோறும் உறைப்புக் குழம்பும் சாப்பிட்டால்த்தான் எம்மவர்க்கு உணவு உண்ட உணர்வு ஏற்படும். அதேபோல் பத்மனுக்கு மனைவி சாரதா கைப்பக்குவத்தில் கோழிக்கறி உறக்கத்தை படுக்கைக்குப் போகாமலே கொண்டு வந்தது. ஆனாலும், அன்றைய செய்திகளை இப்போதே கேட்க வேண்டும் அல்லவா. உணவை வாயில் திணித்த வண்ணம், அடுத்த நாள் கடமைகள் பற்றி மனைவியிடமிருந்து விளக்கத்தைப் பெற்றான்.

    சாரதாவும் காத்திருந்து வெளியிடும் பத்திரிகைத் துணுக்குகள் போல் தன்னிடம் வந்தடைந்த தகவல்களை பிரதியீடு செய்தாள். தாயகத்திலிருந்து தாயாரின் தொலைபேசி வந்ததாம். அத்தானுக்கு ஆரம்பித்துக் கொடுத்த நிறுவனம் அமோகமாய் வெற்றிநடை போடுகின்றதாம். அக்காளுக்குக் கட்டிக் கொடுத்த வீட்டில் இரு மாடிகளுக்கும் இணைப்பை ஏற்படுத்தும் தொலைபேசி ஒன்று அனுப்பப்பட வேண்டியுள்ளது. தங்கையின் திருமணம் தடபுடலாக 500 பேர் வாழ்த்த சொகுசு ஹொட்டலில் தடபுடலாக நடந்தேறியுள்ளது. தம்பிக்குத் தலைநகரில் தலைசிறந்த வியாபாரநிறுவனம் அமைத்தாயிற்று. கடைக்குட்டிக்குப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இவையனைத்தும் வந்த செய்திகளாய் இருக்க. ''தம்பியை ஒருக்கால் நாளைக்கு ரெலிபோன் எடுக்கச் சொல்லு பிள்ள' இது நாளைய கடமையாய் இருந்தது. 

    அத்தனையையும் கேட்டுச் சிரித்தபடி சாரதா கன்னத்தைத் தடவியபடி, 'இன்னும் ஒரு கடமைதானே பாக்கி இருக்கிறது சாரதா. அதன் பின் நமக்காக நாம் வாழ்வோம். என்னைப் போலும் உன்னைப் போலும் இரண்டு பிள்ளைகளைப் பெற்று அவர்களுக்காக நானும் நீயும் கண் விழிப்போம் இன்பமான நாளை எமக்காக உருவாக்கிக் கொள்ளுவோம்'' என்றான், பத்மன். அவன் கூறிவிட்டான். அது எந்த அளவிற்கு உண்மை என்று சாரதா உணராதவளானாள். ஆனால், அவர்களுக்காக அவர்கள் வாழும் நாளை எண்ணி அந்த இரு ஜீவன்கள் ஏங்கிக் கொண்டிருக்கின்றன என்பது மாத்திரம் உண்மை. 

    உணவு உள்ளே செல்ல கட்டில் அவனை வரவேற்றது. படுத்த மறுகணமே நித்திராதேவி அவனை அணைத்துக் கொண்டாள். சாரதா வெப்பமூட்டிகளைக் குறைத்தாள், மின்விளக்குகளை அணைத்தாள், போர்வைக்குள் புகுந்தாள். வழமைபோல் காலை கண்விழித்தாள். கட்டிலின் அருகே வேலைக்குப் போகாமல் இன்னும் அசந்து தூங்கிக் கொண்டிருக்கும் கணவனைப் பார்த்தாள். துடித்து எழுந்தாள். இவரை எழுப்பிவிட மறந்துவிட்டேனே பேசப்போகின்றார் என்று நினைத்தபடி அருகே சென்று மெல்லென அவனைத் தொட்டு எழுப்பினாள். உடல் சில்லென்று குளிர்ந்தது. அவனை மெல்ல உழுப்பினாள். உடல் அசையவில்லை. மீண்டும் உழுப்பினாள். பேச்சில்லை. ஐயோ... என்று அலறியபடி போர்வையை நீக்கினாள். உயிரற்று அவன் உடல் அமைதியாக சலனமின்றி உறங்கிக் கொண்டிருந்தது. சாரதா உடல் நடுக்கம் கண்டது. அழுவதா துடிப்பதா அடுத்த காரியத்தில் இறங்குவதா எதுவாக இருந்தாலும் அவளாகவே செய்ய வேண்டும். தொலைபேசியில் 113 என்னும் இலக்கத்தை அழுத்தினாள். விரைந்து வந்தது அம்புலன்ஸ் வண்டி. உடல்தாங்கி வைத்தியசாலை நோக்கி விரைந்தது. பத்மன் வாழ்வை முடித்துக் கொண்டான் என்னும் வேதனைச் செய்தி உறுதியானது. கடமைகள் முடிக்கப் பிறந்தவன் போல் அந்நியநாட்டில் வாசம் செய்து தன் சொந்தக் கடமை முடிக்காது சொல்லிக் கொள்ளாமல் விடைபெற்ற பத்மன் நிலையால் அதிகம் பாதிக்கப் படப்போவது சாரதா மட்டுமே என்பது நிச்சயம்.  


    ஆசிரியர் குறிப்பு

    ஐரோப்பியநாடுகளில் 50 தாண்டித் தமிழர்கள் வாழ்வது அருமையாகி விட்டது. இரவு படுத்து பகல் எழுந்திருப்பது கேள்விக்குறியாகிவிட்டது. அளவுகடந்த கடமைச்சுமையும் அடுத்தவர்களைப் பார்த்துத் தாமும் அதுபோல் வாழவேண்டும் என்ற அளவுக்கு மீறிய ஆசையும் ஓய்வில்லாத உழைப்பும் மனஅழுத்தங்களையும் இதயச்சுமையையும் கொண்டுவருகின்றது. வைத்தியவசதி அதிகமுள்ள நாடானாலும் இவர்கள் உயிர்களைக் காப்பாற்றாமல் போவதற்கு அவர்களே அவர்களுக்குப் பொறுப்பாகின்றார்கள். 


                 

    திங்கள், 4 ஜூன், 2012

    விடியலைத் தேடி!



    காரிருள் சூழ்ந்திருக்கக் கருமேகம் வானில்
    விடியலைத் தேடி விரைகிறது
    காலஓட்டத்தில் கலந்திருக்கும் மானிடரும்
    ஞால விடிவுதேடி விரைகின்றார்
    அஞ்ஞானத்தை அழித்து மெஞ்ஞானத்தில் வெல்ல
    மெஞ்ஞானிகள் தேடுகிறார் விடியலை
    மெய்ஞானத்தை வென்று விஞ்ஞானத்தை விளக்க
    விஞ்ஞானியும் தேடுகிறான் விடியலை
    எஞ்ஞானமுமின்றி தன் துணைஞானம் கொண்டு
    தன்ஞானம் இழக்கின்றாள் அத்தமிழ்மகள்

    ஞாலத்தின் விடியலுக்கு ஆதவன் உதித்தான் - உறவுப்
    பாலத்தின் விடியலுக்கு உதித்தவன்
    உத்தமனென உறங்குகிறான் கண் விழித்தபடி – அவன்
    முழுஉருவும் மூடும் விழிகளுக்குள்
    முப்பதைத் தாண்டிய முதிர் கன்னியாய் – அவன்
    செப்பிய வார்த்தைகள் பலாக்கனியாய்
    காலதேவன் கடுகதி ஓட்டத்தில்
    காத்திருப்புக்கள் யுகங்களாய் கழிகின்றன
    விடியாத பொழுதுகள் வேதனையின் சுவடுகள் - அவள்
    படியாத வாழ்வைப் பறைசாற்றுவதாய் - காதல்
    செடியொன்று சருகாகி சாக்கடையில் சகதியாகுமுன்
    மலரெடுத்து மாலையாக்கி மன்றல் காண
    மனப்பீடை மனந்தாங்கி மணவாளன் மார்பில்சாயும்
    விடியலைத் தேடி விசுவாசம் கொள்கின்றாள்



    01.06.12 முத்துக்கமலம் இணையத்தில் வெளியான எனது படைப்பு

    LGBTQ

    கட்டுப்பாடு, விட்டுக் கொடுப்பு இவற்றை ஒட்டியே மனித வாழ்க்கை குடும்பம் என்ற அமைப்புடன் ஓடிக்கொண்டிருக்கின்றது. இவற்றை மனதில் கொள்ளாத உணர்வுகள...