• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    புதன், 25 மே, 2011

    என்னையே நானறியேன் (அங்கம் 5 )






    துயருறுகாதை          

     சங்காரம் நடக்குது வீட்டிற்குள்ளே 
    சஞ்சலம் தெரியுது மனதுக்குள்ளே
    வஞ்சனை புரிந்தது வேதவனோ
    மிஞ்சிய வாழ்வது வேதனையோ
      
    என்னையே நானறியேன் என்றவளாய்த் தன் எண்ணங்கள் செயல்கள் அனைத்தையும் தன் மனதுக்கிணைந்த இரு மாணவர்களை அழைத்து நாளும் நடக்கும் தன் திருவிளையாடல்களைத் திரைவிமர்சனமாய் விளக்கினாள். அவர்கள் உதவி அவளை மனநிலை மருத்துவரிடம்  அழைத்துச் செல்லப் பயன்பட்டது. காரியம் நடக்கிறது. காரணம் புரியவில்லை. சம்பவம் நடக்கிறது. சம்பவிப்பதன் அர்த்தம் புரியவில்லை. 


    மருத்துவமனையில் உடலுக்கு உரமூட்டும் திரவகம் செலுத்தப்பட்டது. தனியாய் இருக்க ஒரு இடம் தரப்பட்டது. ஒரு சிலுவை மட்டும் அங்கே கர்த்தர் பட்ட வேதனையை உணர்த்திக் கொண்டிருந்தது. ஆனால், அந்தச் சிலுவை அவளுக்கோ அகங்கோரமாய்க் காட்சியளித்தது. அதிலிருந்து தன்னை நோக்கி வரும் ஒளியைத் தன் உடல், வாய் மூலம் வெளியகற்றும் வாயுவினால் ஊதிஊதித் துரத்தித் துரத்தி விட்டாள். நரக வேதனையே அங்கு கிடைத்தது. மனஅமைதி அங்கு கிடைக்கவில்லை. இடுப்பில் போடப்படும் ஊசியினால்த் துடித்துப் போவாள். இக்காலப்பகுதியில், அவள் ஆசைக் கனவாலயம் கைமாறப்பட்டது. பறிக்க நினைத்தவர்கள், போராடியவர்கள் பற்றிக் கொண்டனர். வேதனையின் விளிம்பானாள். ஒரு பெண்ணுக்குக் தான் செய்யும் தவறுகள் கறை படியச் செய்வதுண்டு. தன்னைச் சுற்றியுள்ள சுகங்களும் கறையினுள் அமிழ்த்தி விடுவதும் உண்டு. இங்கு சுற்றியுள்ள கண்கள் சுகத்தைக் கெடுத்துவிட்டன.
                     
    கால ஓட்டத்தில் விடுதலையாகிய கரண் நாடு திரும்பினான். உருமாறிய தன் வீட்டின் அலங்கோலங் கண்டான். நிற்காத கதிரைகளும், பழுதடைந்த சோபாக்களும், நிலத்தில் படுத்திருந்த படுக்கைகளும் கண்டு அதிர்ச்சியுற்றான். அயலவரின் அலசலின் பின் மனைவி, மகன் வாழும் இடம் கண்டறிந்தான். அமைதியான அந்தச் சூழலை விட்டு மீண்டும் ஒரு புதிய வீட்டிற்கு வரதேவியை அழைத்து வந்தான். மாற்றுத் தாயிடம் வளர்ந்த மகனைத் தன் சொந்தத் தாயுடன் இணைத்தான். ஆனால், தன் கணவனையே அடையாளம் காணமுடியாத நிலையில் அவள். வரதேவி வைத்தியசாலையில் அநுமதிக்கப்பட்டிருந்த வேளை அரசாங்க உதவியுடன் வரதேவி வீட்டைத் துப்பரவு செய்வதற்காக வந்து போன ஒரு பெண் அழகாக, வரதேவியால் அடித்து நொறுக்கப்படாது புதிதாய் இருந்த சோபாவைத் தன் மனைக்குச் சொந்தமாக்கி விட்டு அந்த இடத்தில் பழைய ஒரு சோபாவைப் போட்டிருந்த விடயம் வீட்டிற்கு வந்த பின்தான் உணரக்கூடியதாக இருந்து. யாரைத்தான் நம்புவதோ இவ்வுலகில்.? மகன் போல் இருப்பான், மானத்தைக் கவர நினைப்பான். உயிராய் பழகுவார், உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார். நல்லவராய் நடிப்பார், உண்மைக் கதை தெரிந்தும் நாலு பேருக்கு நயவஞ்சகமாய் உரைப்பார். புத்தியில் அவள் மத்திமம் என்று அறிந்திருந்தும் அவள் நிலை புரிந்துரைக்காது இகழ்ந்துரைப்பார். இப்படி எத்தனையோ கதாபாத்திரங்கள் அவளோடு வந்து உறவாடின.  
                    
    வரதேவி மீண்டும் தன் மனை புகுந்தாள். தான் செய்த தவறுகளை உணர்ந்த கரண் திருந்தி வாழ முயற்சித்தான். இந்நிலையில், அவள் சோர்ந்து நிமிரக் காரணமாகியது, இலண்டன்தமிழ் வானொலியில் ஒலித்த அந்த இளையவன் இனிய குரல். அவன் குரல் கேட்டு அடங்கிக் கிடந்த அவள் அறிவு விழித்துக் கொண்டது. ஆன்மாவின் உன்னதமான ராகங்களைத் தட்டி எழுப்பியது. காற்றலை வாழ்வியல் கூறும். வாழ்வைக் குதூகலமாக்கச் சிரிக்க வைக்கும். அறிவுக்குப் புதிர் போடும். ஆனால், ஒரு மனம் பேதலித்த பெண்ணை மகிழ வைக்குமா? அழிந்து கொண்டிருக்கின்ற வாழ்வுக்கு ஆறுதல் அழிக்குமா? ஆம், வானொலி கூட சிலருக்கு வைத்தியக் கருவியாகின்றது. மின்னலென மூளையில் பட்டுத் தெறித்த அந்தக் குரலுடன் அவள் பூரண நிறையறிவு நிரம்பப் பெற்றாள். சிந்தனை தூண்டப்பட்டது, சோர்வுகள் அகற்றப்பட்டன. சுதந்திர உணர்வு பெருக்கெடுத்தது. வானொலியில் ஒலித்த அந்தக் குரலுக்கும் வரதேவிக்கும் என்ன தொடர்பு. யார்யாரோ இதயத்துள் வருகின்றார்கள், போகின்றார்கள். வந்தவர்கள் யாவரும் மனதுள் நிலைத்து நிற்பதுவுமில்லை. நிலைத்து நிற்பவர்கள் தொடர்வதுவுமில்லை. காலஓட்டத்தில் கடந்துவந்த பாதையில் நண்பர்கள் ஆயிரம், நல்லவர்கள் ஆயிரம். ஆனால், நின்று நிலைப்போர் எத்தனை?  இங்கு வரதேவி நோய்க்கு மருந்தான அந்தக் இளையவன் குரலானது வரதேவி என்றும் சந்தித்திராத குரல்.  இதுதான் அலைகளின் தாக்கம் என்று விஞ்ஞானிகள் உரைக்கின்றார்களோ! குரல்கூட மருந்தான மாயம் இங்குதான் கேள்விப்படுகின்றோம். இப்போது வரதேவி வாழ்கிறாள். அடிக்கடி வந்து போகும் ஆதாரபுத்தியின் தடுமாற்றத்தில் அவள் சிலசமயங்களில் தடுமாறிப் போவாள். எதிர்காலம் என்ன சோதனைகளை வேதனைகளைத் தரப்போகின்றதோ எனத் துடித்துப் போவாள். சரியான முறையில் முழுவதுமாகத் தன்னால் வளர்க்க முடியாது போன தன் மகனை எண்ணி வேதனைப்படுவாள். நேர்மையற்ற வாழ்க்கைத் துணைவன் நிலை கண்டு ஆக்கிரோஷப்படுவாள். அடிக்கடி வந்து தொல்லை கொடுக்கும் நோயின் தாக்கத்தில் அக்கினியாவாள். 

    என்னையே நான் அறியேன் - என்
    இதயத்து வேதனை புரியேன் - பழைய
    நிலையது நினைவில் வருவதனால்
    மனதில் நிம்மதி மலர்வதெப்போ?


    இப்போது வரம் இழந்த தேவியானாள். சோகங்கள் என்றும் தொடர்வதில்லை. அடிக்கடி இன்பங்களும் வந்த போகும் இது இயற்கை கற்பிக்கும் பாடம். வாழ்வின் அர்த்தமும், மகிழ்ச்சியும் ஆழமான அன்பிலேயே வரும். காற்று மனதுக்கு அவசியம் போல் இன்பமான வாழ்வுக்கு நல்ல தொடர்பும் உறவும் தேவை. அன்பு செய்து உரிமை பாராட்டி வரவேற்புணர்வு தர ஒருவர் இருக்கும் போது மகிழ்ச்சி பெருகும் அந்த இன்பமான வாழ்க்கையை நோக்கி நம்பிக்கையோடு  நடக்கிறாள் வரதேவி.


    வரதேவி ஜேர்மனி வந்தது அடைக்கலக்காதை
    கணவனால் துன்புற்றது துயருறுகாதை
    நோயினால் துன்புற்றது துயருறுகாதை 
    இப்போது அவள் வாழ்வில் நடப்பது எதிர்கொள்காதை

    எதிர்கொள் காதை காட்டிய அதிசயம் அறிய, பொறுத்திருங்கள் தொடர்கின்றேன்.

     பிடித்திருந்தால் இன்ட்லியில் ஓட்டுப் போடுங்கள். உங்கள் எண்ணப்பதிவை Comments என்னும் பகுதியில் குறிப்பிடுங்கள்.
                         
                                                                 
                     

    செவ்வாய், 17 மே, 2011

    என்னையே நானறியேன் (அங்கம் 4 )

     (
                                                                                                                                      
    குடும்ப வாழ்க்கை என்பது கண்ணடிப்பாத்திரம் போல் பேணிப்பாதுகாக்க வேண்டியது. அத்தனை உறுப்பினரும் அவதானமாக அதனைப் பயன்படுத்தாவிட்டால் கண்ணாடி வாழ்க்கை உடைந்து சுக்குநூறாகிவிடும். அதனாலேயே இல்லறத்தை நீள்கடலுக்குள் பயணம் செய்யும் படகுக்கு ஒப்பிடுவார்கள். துடுப்புக்கள் இரண்டின் துடிப்பும் சீராய் இராது போனால், படகில் பயணம் செய்வது எப்படிச் சாத்தியமாகும். வாழப்படுதலே வாழ்க்கை அவ்வாழ்க்கை எப்படியோ வாழ்ந்து விடுவதற்கானதல்ல. அதை நரகமாக்குவதும் சொர்க்கமாக்குவதும் வாழுகின்ற முறையில்த் தான் இருக்கின்றது. சட்டரீதியாய் அத்தாட்சிப்பத்திரம் பெற்று உறவு சொல்ல ஒரு பிள்ளையைப் பெறுதல் மாத்திரம் குடும்ப வாழ்க்கையல்ல. அன்புத் தொடர்பு ஆக்கிரமித்து இருத்தல் வேண்டும். இது உடல் உள்ளம் ஆன்மீக வேதனைகளைப் பகிர்ந்து கொண்டு ஏற்படுத்தும் ஆழமான உறவாகும். போதைக்கு அடிமையாகிய மனிதனால் குடும்ப வாழ்க்கை வேதனைப்படுகிறது சமுதாய வாழ்க்கை சஞ்சலப்படுகிறது. பணம்> சொத்து> அந்தஸ்து போன்றவையே குடும்ப சக்தி என நினைத்து அன்புள்ள உறவுகளை மனிதன் மறந்து விடுகின்றான். இவ்வழியே நல்வழி எனக் கொண்ட கரண் சட்டரீதியற்ற முறையில் பல சங்கதிகள் செய்யத் தொடங்கினான். பலரை ஏமாற்றலாம். ஆண்டவன் கண்களைக் கட்டமுடியுமா! கடவைச்சீட்டுக்கள் தயாரித்தல் வெளிநாடுகளுக்கு மக்களைக கொண்டுவருதல் இவ்வாறு இன்னோரன்ன காரியங்களில் கவனம் கலந்து கொண்டது.
           
    தூண்டியவரை எரிக்கும் மனத்தீ
    துயருறவைக்கும் வாழ்வைத் தீக்கிரையாக்கும்
    சொல்லும் செயலும் தடுமாறிய வாழ்வை
    நல்லவர்கள் கொள்வதில்லை.



    கரண் நல்லவனா? கெட்டவனா? அவசரஅவசரமாகத் தன் தேவை கருதி தன் கடவைச் சீட்டை வீடு முழுவதும் ஆராய்ந்து தேடி சோர்ந்து போனாள் வரதேவி. அப்போதுதான் அவள் மூளைக்குள் அகப்பட்டது கரண் தாயகம் நோக்கிச் சென்ற திடீர்ப் பயணம். வரதேவி கடவைச் சீட்டில் யாரோ ஒரு பெண்ணை வாழுகின்ற நாட்டிற்குள் சட்டரீதியற்ற முறையில் அரசுக்குக் கண்ணைக் கட்டி அந்தப் பெண்ணை வரவழைத்து வருவதற்காகத் தாயகம் நோக்கிப் பறந்த மாயம். புலப்பட்டது. வாழ்வதற்கு வாழும் நாடு அங்கீகாரம் வழங்கிவிட்டால் அந்நாட்டின் புலனாய்வுக்கு வேலை கொடுத்து ஏமாற்றத் தொடங்கிவிடுவார்கள் நன்றிமறந்தவர்கள். சட்டதிட்டங்களுக்குள் அடங்கிவாழ மாட்டாத மனிதன் சமூகத்துரோகி அல்லவா! தவறுகள் தண்டிக்கப்படல் தர்மம் அல்லவா? சிறிய அறையினுள் சிறைக்கம்பிகளுக்கூடாக உலகைப் பார்க்கும் கட்டளை கரணுக்குத் தாயகத்துக் காவல்துறையினரால் வழங்கப்பட்டது. தன் கடவைச்சீட்டுடன் தன் கணவன் நாட்டைவிட்டுத் தலைமறைவாகிவிட்டான் என்னும் உண்மை சொல்லி ஜேர்மனி நாட்டு அரசிடம் தஞ்சம் அடைந்தாள் வரதேவி. நரம்பில்லாத நாவாலும் முகத்தால் மனமறியவொண்ணா பிறப்பாலும்>  பொய்யையும் மெய்யாக்கி வாழும் நாட்டில் பிடுங்க வேண்டியவற்றைப் பிடுங்கி எடுப்பவர்கள் ஆயிரம். இல்லறத்தில் இருந்தபடியே இல்லை இப்போ இல்லறம். இல்லறத்தான் இப்போ இல்லில் இல்லை. என் இதயத்திலும் இல்லை என்று சொல்லால் சொந்தக்கதை மறைத்துச் சுரண்டி வாழ்பவர்களும் உண்டு. ஜேர்மனியர் எம் நாட்டைச் சுரண்டி வாழ்ந்ததாகச் சரித்திரம் சொல்லவில்லையே இப்படியிருக்கும் போது நாம் மட்டும் ஏன் தஞ்சம் தந்தவரை வஞ்சிப்பது. ஆனால் வரதேவி உண்மையை மறைக்காது வாழ வழியின்றி ஆதரவு தேடிப் பெற்றாள். நிம்மதியுடன் வீடு வந்தாள். உடலயர்ச்சி போக்க மெத்தையிலே பொத்தென்று விழுந்தான். மனம் முழுவதும் சொல்லவொண்ணாத் துயரம். உடலெல்லாம் அயர்ச்சி. சோர்ந்திருந்த மூளை ஓய்வுகாணத் துடித்தது. கண் இமைகள் அவளை அறியாமலே கீழ்நோக்கிச் சாய்ந்தது.
               

    வானத்து நிலவானது சாளரம் நோக்கி மெல்லமெல்ல அண்மித்தது. கண்விழித்துப் பார்த்தாள். அறையினுள் நுழைந்துவிடத் துடிக்கும் நிலாவைக் கண்கள் மொய்த்துக் கொண்டது. சிறிது நேரம் அப்படியே பார்த்துக் கொண்டிருந்திருப்பாள். மண்டைக்குள் மின்சாரம் வெடிப்பது போன்ற ஒரு சத்தம். உடலின் தலைமையகத்தை மேலே மேலே உயர்த்தி உயர்த்திப் பார்த்தாள். முடியவில்லை. சிரசின் உள்ளே ஒரு சங்காரமே நடந்தேறியது. அன்றைய இருள் அகன்றதே தெரியாது வயிற்றைக் குமட்டிக் கொண்டு வந்தது. காலைப்பொழுது உண்ட உணவின் ஒவ்வாமையோ என மனதைக் கட்டுப்படுத்தினாள். அவளையும் மீறிப் பீறிட்ட வாந்தியைக் குளியலறைத் தொட்டியினுள் கொட்டிவிட்டாள். அதிர்ச்சியில் திறந்த வாயை அடைக்கமுடியவில்லை. தொடர்ச்சியாக வந்த இரத்தவாந்தி தொட்டியை நிரப்பிக் கொண்டிருந்தது. உணவு செரித்து மலமாவது இயற்கை. அது மயிராவதன் மாயம்தான் என்ன? கத்தைகத்தையாய் உடல் வெளியேற்றிய மயிர்க்குவியல் கண்டு மலைத்துப் போனாள். மலத்துடன் இணைந்தே மயிர்க்குவியல் சிக்கிக்கிடந்தது. இவ்வளவும் எங்கேயிருந்து வருகின்றது. புரியவில்லை. மலைத்துப் போனாள். எனக்கு என்ன நடக்கிறது. அலறினாள். துடித்தாள். அந்தச் சின்னவனோ தாயுடன் இணைந்து அழுவதைத் தவிர எதைத்தான் செய்வான். நேரத்துக்கு நேரம் புத்தியில் தடுமாற்றம் புரியாதவளாய் உடலுள் ஏற்படுகின்ற உள்ளுணர்வுகளைப் புரியாது தவித்தாள். ஆயிரக்கணக்கான ஊசிகளால் ஆயிரம் பேர் சேர்ந்து உடலிலே குத்தி எடுப்பது போன்ற வலி உடலிலே தோன்றித்தோன்றி மறைந்தது. 


    நோய் வந்தால் கட்டிலை அணைப்பார் நோயாளிகள். கட்டிலை உடைப்பாரோ? வரதேவி நோய் கண்டாள். வீட்டுத்தளபாடங்கள் அவள் கைபட்டு சுக்குநூறாயின. அனைத்தையும் தன் இரு கரங்களால் அடித்து நொறுக்கி ஆண்வலுவுடன் வீட்டின் வெளிப்பகுதியில் அடுக்கி விட்டாள். ஒரு பெண்ணால் இப்படி முடியுமா? பெண்ணின் மறுபக்கம் அசுரவேகத்திலும் தொழிற்படும் என்பதற்கு இதுவும் எடுத்துக் காட்டல்லவா? புத்தி தடுமாறிய நிலையிலும் அதிவிசேடபுத்தி தொழிற்பட்டது. வீட்டுப் பாதுகாவலரை அழைத்தாள்.              
    அன்புக்குரிய தன் இரு மாணவர்களை அழைத்தாள். 'உயிரோடு இருக்கும் என் காலங்கள் ஒடுங்கிப் போவது போல் உணர்கின்றேன். என் பிள்ளையை அவனுடைய பாலர்பாடசாலை ஆசிரியரிடம் தயவுசெய்து ஒப்படைத்து விடுங்கள். என்னை நானறியும் போது என் பிள்ளை என்னிடம் வந்தடையட்டும். என்று வேண்டிக் கேட்டாள். சிரிப்பவர்கள் எல்லோரும் மனதால் சிரிப்பதுவும் இல்லை. கதைப்பவர்கள் எல்N;லாரும் உண்மை அனைத்தும் கதைப்பதுவும் இல்லை. ஒவ்வொரு மனிதன் வாழ்க்கைக்குள்ளும் ஆயிரம் சோகக்கதை இருக்கும். வாழ்க்கையே சோகமானால்?

    மீண்டும்தொடர்கிறேன். அதுவரை உங்கள் எண்ணத்தை எழுதிவிடுங்கள்
                                            
                                 





    புதன், 11 மே, 2011

    என்னையே நானறியேன் (அங்கம் 3)


     

     உள்ளுரமொடு உற்றறிவது பெருத்தது
    கண்ணுறக்கமும் உடலயர்ச்சியும் வெறுத்தது
    பல்கலைகளும் பயில்பயிற்சியும் வளர்ந்தது
    நல்மதியுடன் மாணவர்களும் மகிழ்ந்தனர்
    ல்லறிஞர்கள் நாட்டுயர்வினர் நாடவே 
    பற்கலையுடன் விழாவொன்று நடந்தது
    விளையாட்டுடன் விருதுகளும் கிடைத்தன.



    பிரமாண்டமான இவ்விழாக்களும் விளையாட்டுப்போட்டிகளும் நடந்தேறி சூழல்சுற்றங்களின் கண்களும் இக்கல்விச்சாலையிலே மொய்த்தன. அக்கல்விச்சாலையைத் தம்பக்கம் அபகரிக்கத் தமிழ்க்கல்வி நிறுவனம் போட்டா போட்டி போட்டது. மாணவர்களைத் தம்;பக்கம் இழுக்கவும், அவர் மனதை மாற்றவும், தம் கல்விச்சாலையுடன் வரதேவி வளர்த்தெடுத்த கல்விக்கோயிலை வலுக்கட்டாயமாக இணைக்கவும் பல கஷ்டங்களைக் கொடுத்தது. வரதேவி ஆத்மதொழிலுக்கு அடிக்கடி இடையூறுகள் தலையெடுக்கத் தொடங்க, ஆண்டுகள் கடந்தன. அன்புமகன் அடியெடுத்தான், எழுதுகோல் பிடித்தான், வரி தொடுத்தான். பாலர்பாடசாலை நோக்கி அவனது தினசரி வாழ்வு திருப்பம் கண்டது. அவள் தேடலறிவின் பார்வை, ஆணிவேராய் நம்பியிருந்த தன் குடும்பத்தலைவன் குணங்களின் குழறுபடியில் நோட்டம் கண்டது.

     நண்பர்கள் வருகையின் போது மாத்திரம் ஏதாவது சிற்றுணவாய்க் கடிக்கவும், குடிக்கவும் பயன்பட்ட பழக்கம் நாளுக்குநாள் உற்ற தோழனாய், உற்சாக பானமாய் உடலுள் சென்று தீவிர உணர்வுடன் தீவிரமாய்த் தொழிற்பட்டு அன்புக்கு விரோதியானது. நீரோடும் உடல் வேண்டும். நீரோடு வாழ வேண்டும். அந்நீரோடு மது சேர்ந்தோடினால், உளவோட்டம் நெருங்கிவிடும், உளநெருக்கடி கண்டுவிடும். 

    அன்று அளவுக்கு மீறிய குடிபோதையில் கத்தி எடுத்தான். கத்தி என்றால், வெட்டும் என்று அறிந்திருந்தும் தீட்டிய கத்தியில் கூர்பரிசோதனை செய்யத் துணிந்தான். 'விடுங்கோ! உங்களுக்கென்ன விசரே பிடிச்சிருக்கு.விடுங்கோ கத்தியை விடுங்கோ''. வரதேவி போராட்டமானது புனிதம் இழந்த அவன் போக்கால் தோல்வி கண்டது. தனது கையைக் கத்தியால் சீவி எடுத்தான். கையிலிருந்த வடிந்த
    இரத்தத்தைப் பார்த்து ஒரு கோரச்சிரிப்புச் சிரித்தான்.



    5 விரல்களால் குருதியை அள்ளி எடுத்தான். வீட்டுச்சுவரிலே அச்சடித்தான். 

    விரல் ஓவியங்கள் குருதிக்கலவையில் விசித்திரமாய்த் தோன்றின. அவள் அசையவில்லை, கண்கள் இமைக்கவில்லை, விறைத்த பார்வையில் விடுபடவில்லை. முதலுதவி செய்ய முன்வரவில்லை. அவள் இரக்கமுள்ளவள், ஆனால்,  இரக்கமற்ற விலங்குகளிடம் அவ் இரக்கம் துடிப்படைய மாட்டாது. அவள் பாசமுள்ளவள். ஆனால், பண்பில்லாதவர்களிடம் அது அடிபணிய மாட்டாது. வெட்டியவனே கட்டுப் போட்டான். எப்படிப்பட்டவனானாலும் காயம் மாற்ற மருத்துவர்கள் தயங்காது தொழிற்படல் மருத்துவதர்மம் அல்லவா. அதனால், பிழைத்துப் போனான். நாளுக்குநாள் வீட்டில் பேயாட்டம். அடித்து நொறுக்கும் கண்ணாடிப் பாத்திரங்களே, நாளும் அவ்வீட்டில் ஒலிக்கும் இசைக்கச்சேரி. குருதிவாடையே அவ்வீட்;டின சாம்பிராணி; வாசனை. நான்கு சுவருக்குள்ளே 4 வயதுக் குழந்தையின் இதயம் உடைந்த போனது.  பயங்கர மிருகங்களிடையே அகப்பட்ட சின்னப் பூனை போல் உடல் நெளிந்து நெளிந்து ஒளிந்து வாழ்ந்தான் சின்னவன்.

    கணவன் மிருகமானால்,ஒதுங்கிப்பதுங்கி வாழும் ஒரு அப்பாவியாய் ஒரு பெண் வாழ வேண்டும். தீமையைத் தட்டிக் கேட்கும் தீவிரவாதியாகவோ அதட்டலுக்கோ மிரட்டலுக்கோ அடிபணியாத மனத் தைரியம் மிக்கவளாகவோ வாழ்ந்தால் அவள் வாழ்வு'குரங்கின்             கைப்பூமாலையே''  

                                              திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றது என்பார்களே. சொர்க்கம் கண்மூடிக் கொண்டு தான் மானுக்கு மதயானையை நிச்சயிக்குமோ. அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து அக்கினி வலம் வந்து மாங்கல்யம் அணிவிக்கின்றார்களே அது ஏன்? அம்மி போல் கல் மனம் கொண்ட ஆண்மகனும் உண்டு என்பதற்காகவோ! அருந்ததி காட்டகின்றார்களே, கற்புக்கரசியாய் கணவன் தவறுகளைக் கண்டு கொள்ளாதே என்பதற்காகவோ. அக்கினி வலம் வருகின்றார்களே, அது ஏன்? வாழ்க்கை என்னும் தீக்கு அருகே வந்துவிட்டாய். எட்டி அவதானமாய் நில். உன் வாழ்வை எரித்துவிடும் வல் அரக்கர்களும் இருக்கின்றார்கள் என்று அச்சுறுத்துவதற்காகவோ! இத்தனை சடங்குகளும் செய்து பத்துப் பொருத்தம் பார்த்து குடும்பமாய் இனமாய் நண்பர்களாய் சேர்ந்து குதூகலமாய் ஒரு கொடுமைக்குள் அல்லவா வரதேவி வாழ்க்கையைத் தள்ளிவிட்டார்கள். இந்த சாத்திர சம்பிரதாயங்கள் சொன்ன நற்பலன்கள் இங்கு எப்படித் தீப்பலன்கள் ஆயிற்று. இன்னும் உண்டு இதைவிட மேலும் உண்டு. பெண்களே கண்களைத் திறவுங்கள். வரதேவி வாழ்க்கைச் சரிதம் தரும் பாடம் அதுவரை இன்று நிறுத்தி அடுத்த அங்கத்தில் தொடர இருக்கின்றேன்.

    வெள்ளி, 6 மே, 2011

    என்னையே நானறியேன் ( அங்கம் 2 )


      
    கணவனின் உழைப்பும் தன்மேல் அவன் கொண்ட காதலின் பிரதிபலிப்பும் ஒன்றாய் அவள் கண்களுக்குத் தெரிந்தது. அழகான சோபாவில் காய்த்துப் போன அவன் கரங்களின் அடையாளங்கள் தென்பட்டன. சமையலறை அடுப்பிலே நித்திரையின்றிச் சிவந்திருந்த அவன் கண்கள் தோன்றின. ரம்மியமான தளபாட அழகிலும் உழைத்து உழைத்துத் தேய்ந்து போன அவன் உடற் பொலிவு தென்பட்டது. மனம் இளகிப் போனாள். அவன் இரு கரங்களையும்
    இணைத்தெடுத்தாள். தன் கண்களில் ஒற்றிக் கொண்டாள். ' இஞ்ச பாருங்கோ! உங்களின்ர இந்த சின்ன இதயத்துக்குள்ள ஒதுங்க ஒரு இடம் தந்தாலே எனக்குப் போதும் பாருங்க. ஆபத்துக்கு உதவாத பிள்ளை> அரும்பசிக்கு உதவாத அன்னம்;> தாபத்தைத் தீராத தண்ணீர்> தரித்திரம் அறியாத பெண்கள்> கோபத்தை அடக்காத வேந்தன்> குறுமொழி கொள்ளாச் சீடன்> பாபத்தைத் தீராத் தீர்த்தம்> பயனில்லையாம் ஏழும். எனவே தரித்திரம் அறியாத பெண்ணல்ல நான். இரத்தம் சிந்தி நீங்க என்னை ராணி போல் வைத்திருக்க வேண்டும் என்றெல்லாம் பெரிசா நான் கனவொன்றும் காணவில்லை. எப்படி நீங்கள் வாழுகின்றீர்கள் என்றெல்லாம் கேட்டு என் கழுத்தை நான் உங்களிடம் நீட்டவில்லை. எப்படி நீங்கள் வாழ்ந்தாலும் உங்களோடு வாழவேண்டும். அதுதான் எனக்குச் சந்தோஷம்'' அவள் மனமும் உதடும் உதிர்த்த வார்த்தைகளில் உள்ளம் நெகிழ்ந்தான் 
    கரண். ஆடம்பரமான வாழ்வு வரும் போகும். ஆனால் ஆதரவான உள்ளம் கிடைப்பதும் அரிது> தொடர்வதும் அரிது. 
                             

                      வரதேவி வாழ்க்கைத்துணைவன் ஆதரவான ஆண்மகன் மட்டுமல்ல> நாடுவிட்டு வேறுநாடு வந்தாலும்> தாய் பாலோடு சேர்த்துப் பருகத் தந்த தமிழ் அறிவுடன்> நூற்றாண்டு கடந்தும் அந்நிய மண்ணில் தமிழ் ஆட்சிபுரிய வேண்டி ஹரிதாஸ் நிறுவன ஆதரவுடன் தமிழ்க்கல்விச்சாலை அமைத்துத் தனியனாய்த் தமிழ் கற்பித்த வந்த தமிழ்மகன். 
        அவன் போட்டுவிட்ட பாதை மேல் போகத்துணிந்தாள் வரதேவி. அவள் ஆசிரியையாய்ப் பணியாற்றிய அறிவு மட்டும் கொண்டவளல்ல. குழந்தைகள் மனங்கோணாக் குணவதியும் கூட
     தம்மிலும் தம் அறிவால் வளர்வார்> சிறப்புடையவராயின். உள்ளம் குதூகலிப்பார் உண்மை அசிரியர். ஒருவர் கற்ற இன்பத்திலும் மேலாமே தான் கற்ற கல்வி பிறர் அறியச் சொலல். இத்தன்மை அனைத்தும் பெற்ற வரதேவி> புகலிடம் தேடிவந்த இடத்திலேயே வந்து மூன்றாம் நாள் புகழிடம் பெறும் மாணவப்பூங்காவுக்குள் நுழைந்தாள். பூத்தும் பூக்காதிருந்த பூந்தளிர்கள் கண்டு அவள் மூளைக்குள் இலட்சிய விருட்சம் வளரத் தொடங்கியது. தான் கற்றவை தான் கற்பித்தல் மூலம் பெற்ற அநுபவச் சொத்து அத்தனையையும் இந்தத் தளிர்களுக்கு நீராய் வார்க்கத் தொடங்கினாள். தவிர்க்க முடியாதது பசியும்>தாகமும். அடக்கமுடியாதது ஆசையும்> துக்கமும். வரதேவி கொண்டது கல்வித் தாகம். அவளால் அடக்கமுடியாத ஆசை எதிர்கால சிற்பிகள். ஆசிரியப்பணி ஒரு ஆனந்தப்பணி. கல்விநாடிவரும் செல்வங்களுக்குள்ளே புகுந்துவிட்டால்> கவலைகள் விடைபெறும். உள்ளம் துள்ளல் இசைபாடும். அதட்டவும் அணைக்கவும் ஆசானுக்குள்ள உரிமை பெற்றோருக்குள்ள உரிமை போலானது. அதைச் சேவையாய் உணர்வோர் உடல்வலி உளவலிநோக்கார். ஆசிரியரை ஒட்டிக் கொண்ட மாணவர் எத்தனை ஆண்டுகள் கடந்தும் அவரை மறவார். எதிர்கால உலகச் சிற்பிகள் சரியான முறையில் வடிக்கப்படாவிட்டால், உலகம் அவர்கள் கைகளால் உருமாறிச் சீரழியும். விஷக்கிருமிகள் போல் உலகுநோய் பெற்று சிறிதுசிறிதாய் உலகத்தையே அழித்துவிடும். எனவே ஆசிரியர் என்பான் ஆசு இரியர் குற்றங்களை விட்டோடச் செய்வார். ( இவர்கள் மாணவர்களுக்கு உலகத்தையும் பாடத்தையும் கற்றுத் தரல் வேண்டும். மூலபாடங்களை விதி மறவாமல் பாதுகாக்கக் கற்பித்தல் வேண்டும். கேட்டதைப் பலமுறை சிந்திக்க வைத்தல் வேண்டும். மனதில் பதியக் கேட்ட கருத்துக்களை அவர் மனதில் மீண்டும் கேட்டுப் பதிய வைத்தல் வேண்டும். கற்கும் மாணவர்களோடு பழகத் தூண்டுதல் செய்தல் வேண்டும். ) எனவே இப்பணியூடு வாழும் நாட்டில் தமிழ் மணம் வீசவேண்டும் என்றெண்ணிப் பணி தொடர்ந்தாள் வரதேவி. இப்படி இந்நாட்டில் எத்தனை திக்குகளில் இத்தகு நோக்குடன் பற்பலர் வாழ்ந்தார்களோ! இப்போது சாம்பல் மூடிய நெருப்பாய் மறைந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றார்களோ! 


    இவ்வாறாக உள்ளம் கொண்ட தீவிரம் தொடர்ந்தது. அத்தோடு வயிற்றில் அவள் உதிரம் சுமந்த வாரிசொன்றும் உருவானது. ஒரு குறிக்கோளுடன் தொடர்வார் அக்குறிக்கோள் நிறைவேறப் பலவித முயற்சிகளில் ஈடுபடல் புதிதன்று. ' இஞ்சபாருங்கோ! படிப்பிப்பது மட்டும் பிள்ளைகளுக்குப் போதாது. ஒரு பிள்ளை கேட்கிறதை மறந்து போகும். பார்க்கிறதை நினைவில் வைக்கும். செய்வதைத்தான் கற்றுக் கொள்ளும். அதனால், பரீட்சை வைப்போம்> கலைகள் விளையாட்டுக்களில் பயிற்சி கொடுப்போம். போட்டிகள் மூலம் திறமைகளைக் கொண்டுவருவோம'';. என்று கணவனுக்கு உந்துதலைக் கொடுத்தாள். ஆனால், இந்த சமுதாயம் இருக்கிறதே, இனிப்பாய் இருந்தால், விழுங்கிவிடும். கசப்பாய் இருந்தால் துப்பிவிடும். இவள் முயற்சிகளின் முடிவுதான் என்ன.........  
                                                               

    திங்கள், 2 மே, 2011

    என்னையே நானறியேன் (அங்கம் 1)

                                                
      


    பாட்டுடைத் தலைவனையுடைத்தாய் பாடுபொருள் கொண்டு ஏட்டிலே வடிப்பது இலக்கியமானால், பாட்டுடைத் தலைவன் தெய்வீகத் திருமகனாய் திகழ்வது மட்டுமே திறமன்று. ‚


    எரிமருள் வேங்கை கடவுள் காக்கும் 
    குறுகார் களனியின் உடலத்தங்கன் 
    ஏதிலாளன் கவலை கவற்ற 
    ஒருமுலை அறுத்த திருமாவுண்ணி'' 

    என்னும் நற்றுணைச் செய்யுள் ஒன்றில் துன்பம் மீதுறப் பெற்ற பெண்ணொருத்தித் தன் முலை அறுத்தெறிந்த செய்தியை எடுத்துத் தன் காலத்தில் நடந்தேறிய உண்மை நிகழ்ச்சியாய் நூலைப் படிப்பவர்கள் யாவரும் நம்பும் வண்ணம் கதைபுனைந்த இளங்கோவடிகளின் இலக்கியம் மட்டுமே திறமன்று. நம்மோடு வாழ்ந்து நாமறியாச் செய்தி பல காட்டி, ஊரோடு நாம் வாழ உன்னத அறிவுரைகள் காட்டி நிற்கும் குடிமகளின் வாழ்வும் ஒரு இலக்கியமாய் இடம்பிடிப்பதும் திறமன்றல்லோ. இன்றிலிருந்து என் பிளக்கில் வெளிவரும் என்னையே நானறியேன் இலக்கியம் ஒரு உண்மைக் கதை. கதைகள் யாவும் கற்பனையல்ல. வாழ்வின் தத்துவங்களே.
                                          
                                                    என்னையே நானறியேன்
              
    தாலி என்ற பந்தம் நாடு கடந்ததால், அத்தாலிப்பந்தம் வாழும்நாடு தேடி வந்தாள் வரதேவி. தாலி ஒரு பெண்ணுக்கு வேலி என்பது ஒரு பழமொழி. தாலி தாங்கும் பெண் தன் கணவனை என்றும் தன் மார்பில் தாங்குவாள். தாலம்பனை என்னும் பனையோலையினால், செய்யப்பட்ட மாலையையே ஆதி காலத்தில் மணமகன் பெண்ணுக்கு அணிவிக்கின்றான். அதனால், தாலம் தாலியானது. பனையோலை பழுதுபடும் என்ற காரணத்தினால், பின் மஞ்சள் கயிற்றில் அணிந்து பின்னர் உலோகத்தால் உருமாறி, இன்று பெண்ணின் எடைக்கு ஏற்ப தங்கத்தால் அணியப்படும் அந்தஸ்துத் தாலியாக தரம் உயர்ந்திருக்கின்றது. எப்படியாயினும் இவனுக்கு இவள் என்ற அந்தஸ்தைப் பெண்ணுக்குக் கொடுப்பது இந்தத் தாலியே. அத்தாலியே வரதேவியை ஜேர்மனிக்குத் தளம் இறக்கியது. பெற்றோர் பெருந்தவமிருந்து பெற்ற மகள் என்ற காரணத்தால், வரம் பெற்று வந்த மகளை வரதேவி என்று வாயார அழைத்து அப்பெயரிட்டனர் பெற்றோர். இளமைக் கனவுகளின் இதயத் துடிப்போடு இரு பாதங்களையும் ஜேர்மனி மண்ணில் பதித்தாள். பாதணி அணிந்த பாதமென்றாலும், உடல் சில்லிட்டது. காலநிலை மாற்றத்தில் புது உணர்வொன்று ஏற்பட்டது. யாழ்ப்பாணம் இப்படி உடலை விறைக்கச் செய்த அநுபவத்தை அவள் எங்கே பெற்றிருக்கின்றாள். வெள்ளைத் தோல்களுக்கு நடுவே இலங்கைப் பெண்ணாள், நம்பிக்கை என்னும் ஆயுதத்தின் வலு தாங்கியவளாக நடந்தாள். நாடோ நாட்டுமக்களோ அவளைப் பயமுறுத்தவில்லை. சஞ்சிகையிலும் திரைப்படங்களிலும் மாத்திரமே கண்ட அந்த வெளிநாட்டு இன்பம், இன்று அவளை ஒட்டி வந்து பற்றிக் கொண்டது. மனமெங்கும் மகிழ்ச்சி பிரவாகித்திருந்தது. என்னைப் போல் அதிர்ஷ்டசாலி யாருமில்லை என்று தன்னைத்தான் அறிந்து கொண்ட களிப்பில் பெருமிதம் கொண்டாள். வழியெல்லாம் கொட்டிக்கிடந்த பனிநுரைகளை அள்ளிக்கொள்ளக் கொள்ளை ஆசை கொண்டாள். 


    பனிமலர்கள் மேலிருந்து பவனி வர
    நனியாவல் கொண்டதனைக் கன்னம் வைக்க
    கனியாய்த் தன்கன்னம் சிவந்து வர
    கழிபேருவ கையுடன் கணவன் கண்டாள்.
               
    புதிய இடமும், புதிய சூழலும் பார்த்தவுடன் இன்பத்தை அள்ளித் தரும். அடியிலிருந்து கரும்பை உண்ணுமாப் போல் இன்பம் தோன்றும். நாளாகநாளாக இன்பத்தின் வேகம் குறைந்து செல்ல துன்பத்தின் பலம் சோபையுறும். முதல் நாள் கண்ட அநுபவம் 20 வருடங்கள் கடந்தும் அனைவருக்கும் இனிப்பாய் இருக்கும். களவாய்ப் பொதிஅடக்கிகளில் கொண்டுவந்து, நாடுகள் பல கடந்து, கால்நடையாய் வந்து, உண்ண உணவும் உடுக்க உடையுமின்றி, குளிரிலே வாடி, மழையிலே நனைந்து, குற்றுயிராய்க் குறித்த நாட்டிற்குள் கால் வைக்கும் போது ஏற்படும் அந்தத் தரிசன இன்பம் இருக்கின்றதே, காலங்கடந்தாலும் நெஞ்சில் பசுமையாய்ப் புலப்படும். இன்பமும் துன்பமும் சந்தர்ப்பம் சூழ்நிலைக்கேற்பவே அமைகிறது. சந்தர்ப்பம் வந்தமைவதும் அவர்கள் சந்திக்கும் மனிதர்களையும் சம்பவங்களையும் பொறுத்தது. நாம் கேட்டுக்கொண்டு இப்பூமியில் வந்து பிறப்பதில்லை. ஏற்றபடி வாழ்வு அமைவதும் இல்லை. சாதித்தவர், வாழ்வைத் தன் முயற்சியில் சாதித்துவிட்டேன் என்பார். முயன்றுமுயன்று தோற்றவர், முடிவு என் கையில் இல்லை என்பார். இந்த வரதேவி என்ன வரம் பெற்று ஜேர்மனிக் காற்றைச் சவாசிக்க வந்தாளோ?..... 


    எதிர்நின்ற தன் குங்குமத்திற்குச் சொந்தக்காரன். குழந்தை போல் அவளை அணைத்தெடுத்தான். அவள் வாழ அழகுபடுத்திய அந்த அற்புத அரண்மனையாம் வீட்டிற்குள் அழைத்து வந்தான். 'எப்படி, வரா! இந்தவீடு உமக்குப் பிடிச்சிரிக்கே?'' அன்பொழுகக் கேட்டான் அவள் கணவன் கரண். ஆனால், வரதேவியோ வீட்டை நோக்கினாள். நெஞ்சிற்குள் ஏதோ ஊசிபோல் குத்தியெடுத்தது ..........

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...