• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  ஞாயிறு, 30 அக்டோபர், 2016

  வள்ளுவர் விழா 2016 எனது உரை (கேள்வி அதிகாரம்)


  ஓதற் கெளிதா யுணர்தற் கரிதாகி
  வேதப் பொருளாய் மிகவிளங்கித் - தீதற்றோர்
  உள்ளுதொ றுள்ளுதொ றுள்ள முருக்குமே
  வள்ளுவர் வாய்மொழி மாண்பு

  என்னும் மாங்குடி மருதனாரின் வார்த்தைகளை முன் வைத்து இந்த வள்ளுவர் விழாவைச் சிறப்பிக்க வந்திருக்கும் நடுவர்களே, ஆசிரியர்கயே, வருங்கால மேதைகளே, வள்ளுவத்தை வாழ்விக்க வந்திருக்கும் சபையோரே உங்கள் அத்தனை பேரையும் வணங்கி என் பெற்றோரை முன் நிறுத்தி என் உரையைத் தொடங்குகின்றேன். 

               ஒரு மனிதன் எதுவும் செய்யாமலே மற்றவர்களின் எதிர்ப்பைச் சந்திக்க வேண்டுமென்றால் இந்த ஒலி வாங்கியைப் பிடித்தால் போதும். அவரவர்கள் மனதுக்குள் முணுமுணுக்கத் தொடங்கிவிடுவார்கள். வந்திட்டாள் யா.... பேசியே கொல்லப் போகின்றாள். அது என்னவோ தெரியாது. இது ஒரு வியாதி. பிடித்தவர்களை பிடித்துக் கொள்ளும். பேசியே கொல்வது என்பார்களே அது இதுதான். இப்படி இருக்கும் போது என்ன வள்ளுவர் கேள்வி என்னும் அதிகாரத்தை வைத்து

  ''செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் 
  செல்வத்துள் எல்லாம் தலை''

  என்று சொல்லுகின்றார். அதில் 16 செல்வங்களினுள்ளும் கேள்விச் செல்வமே சிறப்பு என்கிறார். பேச்சே மனிதனைக் கொல்லும் போது அதை ஏன் சிறந்த செல்வம் என்கிறார். கேள்விச் செவியன் ஊரைக் கெடுத்தான் என்கிறார்களே இவ்வாறான எண்ணங்கள் எல்லாம் உங்களிடம் தோன்றும். எதனால் கேட்கின்றோம் காதால் தானே. அந்தக் காது மூடியிடாமல் திறந்தே இருக்கிறது.  ஆனால், வாய் மூடிபோட்டு மூடி பற்கள் என்னும் அரணிட்டு நாக்கைப் பாதுகாத்து வைத்திருக்கின்றது. அதனால், அளந்து பேசு, அளவில்லாமல் கேள் என்பதே அர்த்தம். வள்ளுவர் உங்களிடம் கேட்கும் படி கூறியது கடன் அல்ல. பிச்சை அல்ல. 

  ''எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் 
  ஆன்ற பெருமை தரும்''  என்கிறார். 

  அதாவது கேட்கின்ற போது நல்லதையே கேட்க வேண்டும். அது கேட்ட அளவு சிறிதாக இருந்தாலும் அதனால் கிடைக்கும் பெருமை உயர்வாக இருக்கும். அது எப்படி காதுதான் மூடியிடப்படாததே என்று நீங்கள் மீண்டும் கேட்கலாம். அதற்கும் ஒரு குறள் சொல்கிறார். மெய்யுணர்தல் என்னும் அதிகாரத்தில் 

  ''எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்
  மெய்ப்பொருள் காண்பது அறிவு''

  எந்தப்பொருள் எந்த இயல்பாகத் தோன்றினாலும் அந்தப் பொருளில் உண்மையான இயல்பை அறிவதுதான் அறிவு. இதனையே கேள்வி அதிகாரம் படிக்கின்ற போது இவ்வாறான கேள்விகள் எழும் என்று அறிந்து அடுத்து வருகின்ற அறிவுடைமை என்னும் அதிகாரத்தில் மனதை அது போக விரும்புகின்ற இடமெல்லாம் போக விடாமல் தீமையிலிருந்து நீக்கி நல்ல வழியில் செலுத்துவதே அறிவு அதாவது 

  ''சென்ற இடத்து செலவிடா தீதுஒரீஇ
  நன்றின்பால் உய்ப்பது அறிவு'' என்று கூறி

  ''எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
  மெய்ப்பொருள் காண்பது அறிவு'' என்றார். 

  எந்தப் பொருளை எத்தகையோர் சொல்லக் கேட்டாலும் அதை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் அந்தப் பொருளிலுள்ள உண்மையான தன்மையைக் காண்பதுதான் அறிவு என்று சொல்கின்றார். இதனையே கி.மு. 470 – கி.மு. 399 காலப்பகுதியில் வாழ்ந்த கிரேக்க தத்துவஞானி சோக்ரட்டீஸ் என்பவர் ''யார் சொன்னார் எவர் சொன்னார் என்பதை விட்டுவிட்டு எவர் சொன்ன சொல்லையும் உனது சொந்த அறிவால் எண்ணிப் பார்'' என்று சொல்கிறார். வள்ளுவர் இப்படியும் அப்படியும் யோசித்துப் பார்த்துத்தான் அனைத்துக் குறள்களும் யாத்துள்ளார். வள்ளுவர் கிரேக்க தத்துவஞானியைக் கற்றிருக்க் கூடும். அதற்குரிய சந்தர்ப்பங்களும் உண்டு. ஏனென்றால் சங்ககாலத்தில் தோன்றிய புறநானுற்றுப் பாடல்களிலேயே பொன்னோடு வந்து யவனப்பிரியா என்று அழைக்கப்படும் மிளகைப் பெற்று யவணர்கள் சென்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வள்ளுவரை சோக்கிரட்டீஸ் கற்றிருக்க வாய்ப்பில்லை. திருக்குறள் சோக்கிரட்டீஸ் காலத்தின் பின்பே தோன்றியிருக்கக் கூடும். நிச்சயமாக இதுபற்றிய சிந்தனை இருவருக்கும் வந்திருக்கக் கூடும். அதுபற்றியெல்லாம் ஆராயும் மேடை இதுவல்ல. வள்ளுவர் தொல்காப்பியம், அர்த்தசாஸ்திரம், மனுசாஸ்திரம், வெள்ளிவீதியார் பாடல்கள், ஒளவையார் பாடல்கள் இவையெல்லாம் கற்றே திருக்குறளைத் தந்திருக்கின்றார் என்பதற்கான ஆதாரங்கள் உண்டு. 

           இப்போது கேள்வி என்னும் அதிகாரத்திற்கு வருவோம். செல்வம் எல்லாவற்றிற்குள்ளும் இந்த கேள்விச் செல்வமே சிறந்தது. அதனால், கேட்பதற்கு உயிர் வாழ வேண்டும் இல்லையா அதற்காக உணவை உண்ண வேண்டும். அதுகூட செவிக்குணவு இல்லாத போதுதான் என்பதை மனம் பதிக்க வேண்டும். அப்படியான செவி உணவைப் பெற்றவர்கள் தேவர்களுக்கு ஒப்பானவர்கள். தேவர்கள் என்பவர்கள் யார் இந்திரனைத் தலைவனாகக்கொண்ட தேவலோகத்தில் வாழ்பவர்கள். இவர்களுக்கு இன்பம் மட்டுமே கிடைக்குமாம். செவியுணவாகிய கேள்வி உணவு பெற்றவர்களுக்கு இன்பம் மட்டுமே கிடைக்கும் என்று கருதுகிறார். நீ படிக்கவில்லை என்றாலும் கேள் என்று ஆiணை இடுகின்றார். ஏனென்றால் நீ தளர்வுறுகின்ற காலத்தில் உனக்குத் துணையாக இருக்கும். ஒரு நல்லவனைக் கொல்வதற்காக ஒரு சிலர் ஓடிவருகின்றார்கள். அவன் ஓடிய வழியில் நின்ற உங்களை ஷஷஇந்த வழியால் அந்நபர் ஓடினானா? என்று கேட்கும் போது வள்ளுவர் வாய்மை பேசச் சொன்னார் என்று நிற்பீர்களா? இல்லை, வள்ளுவரைப் படித்த நீங்கள் இல்லை என்று பொய்யைச் சொல்வீர்களா? நிச்சயமாக

  'பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த
  நன்மை பயக்கும் எனின்''

  ''வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் 
  தீமை இலாத சொலல்''

  என்னும் குறள்கள் அவ்விடத்தில் பொய்யே சொல்லப் பணித்திருக்கும். 

  படிப்பதனால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு என்ற பாடல் கேட்டிருப்பீர்கள். மொகலாய மன்னன் அக்பர் எழுதப்ப படிக்கத் தெரியாதவர். சாக்ரடீஸ் தத்துவஞானி, தோமஸ் அல்வா எடிசன், மைக்கல் பரடே என்னும் விஞ்ஞானிகள் பெரிதாகப் படிக்கவில்லை. இவர்களுக்கெல்லாம் கேள்விச் செல்வமே கைகொடுத்தது. ஒழுக்கமுடையவர்களிடமிருந்து பெற்ற வாய்ச்சொற்களே வழுக்குநிலத்திலே ஊன்றிய கோல் போல் தெளிவாக இருக்கும். அப்படியான வாய்ச்சொற்களைக் கேட்டவர்கள் சில விடயங்களைப் புரிந்து கொல்லுதல் கடினம். அப்படித் தவறாகப் புரிந்து கொண்டாலும் அவர்கள் வாயிலிருந்து அறியாமை காட்டும் சொற்கள் வராது. ஏனென்றால், அவற்றில் ஆழமான தெளிவு இல்லாவிட்டால் பேசமாட்டார்கள். ஏனென்றால், அதனையும் வள்ளுவர் சொல்லியிருக்கின்றார். 

  ''கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
  சொல்லாடச் சோர்வு படும்''

  கற்றவர் முன் வாயைத் திறந்து பேசினால் அவனுடைய மதிப்பு அப்படியே அழிந்து போய்விடும். அதனால்தான் 

  ''பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லார்; இழைத்துணர்ந்து 
  ஈண்டிய கேள்வி யவர்''  என்றார். 

  சில இடங்களிலே மிகக் கடினமான வார்த்தைப் பிரயோகங்களை வள்ளுவர் வைக்கின்றார். சிலருக்கு தாழ்மையாகச் சொன்னால் ஏற்றுக் கொள்வார்கள். சிலருக்கு இடித்துரைக்க வேண்டும். கேள்வி அறிவால் துளைக்கப்படாத செவிகள் எவ்வளவு ஆழமான பார்வை என்று பாருங்கள். காதிலே செவிப்பறை இருக்கின்றது. சொற்கள் அச் செவிப்பiறையை ஊடுருவிச் செல்லும். அதனை துளைத்துக் கொண்டு போதல் என்கிறார். அப்படித் துளைக்கப்படாத செவிகள் ஓசைகளைக் கேட்கும் தன்மையைப் பெற்றிருந்தாலும் செவிட்டுச் செவி என்கிறார். கேள்வி அறிவைப் பெறாத செவியன் செவிடன் செவிடனே. இதைவிட இன்னும் ஒரு இடத்தில் படுகேவலமாகச் சொல்லுகிறார். கேள்வி அறிவால் பெறுகின்ற சுவை உணவைப் பெறாது நாவால் பெறுகின்ற கறி உணவும் ஆட்டுக்கால் சூப்பும் வகைவகையாய் உணவுகளும் உண்ணுகின்ற சுவையை விரும்புபவர்கள்; உயிரோடு வாழ்ந்தால் என்ன? இறந்தால் என்ன? நீ செத்தவன்தான்டா என்று கூறுகின்றார். 

  செல்வத்துக்குள்ளே எல்லாம் கேள்விச் செல்வமே சிறந்தது. அதைக் கேட்பதற்காக உணவை உட்கொள். அந்தக் கேள்வி செல்வம் உனக்கு இருந்தால் தேவர்களுக்கு ஒப்பாவாய், அதனால் நீ படிக்க வில்லை என்றாலும் கேள். அது உனக்கு துணையாக இருக்கும்.  அதனால் ஒழுக்கமுடையவர்களுடைய வாய்ச் சொற்களில் நல்லதைக் கேள் அது எந்த அளவில் கிடைக்கிறதோ அதற்கேற்ப உனக்குப் பெருமை தருவதுடன் வாழ்க்கைக்குத் துணையாக இருக்கும். நீயும் மற்றவர்களுக்கு அறியாத சொற்களைப் பேச மாட்டாய். அப்படி நீ கேள்விச் சுவை பெறவில்லையோ உன்னுடைய செவி செவிட்டுச் செவி, நீ யாரிடமும் பணிவான வார்த்தைகள் சொல்ல மாட்டாய், நீ வாழ்வதும் ஒன்றுதான் இறப்பதும் என்று தான் என்று கூறி கேள்வி அதிகாரத்தை முடித்து விடுகின்றார். 

              இந்தப் பேசிக் கேட்கும் கேள்வி பற்றிய ஒரு சம்பவம் சொல்கின்றேன். ஒரு பெண் கல்வியறிவற்றவள். ஒரு பெண் ஒரு நிறவனத்தில் கூலித் தொழில் செய்பவள் சில நாட்களாக அவள் வேலைக்கு வந்தாள் சோர்வாக இருக்கின்றாள். அப்போது அருகே இருந்த தொழிலாளி அவளைப் பிடித்துக்கேட்டார் ''ஏன் இப்படி சோர்வாக இருக்கின்றாய்'' என்று. அது ''ஒவ்வொரு நாள்களும் இரவில் திருக்குறள் சொற்பொழிவுக்குப் போவேன். அதுதான் கொஞ்சம் தூக்கக் களைப்பு'' என்றாள். ''அப்படியா? திருக்குறள் உனக்கு என்ன விளங்கி இருக்கிறது. சரிசரி ஒரு குறளை சொல் பார்ப்போம்''என்றார். ''அது வந்து சார்... அது எனக்குத் தெரியாது'' என்றாள். ''அப்படி என்றால் எதற்காக இப்படி ஒவ்வொரு நாளும் போய் உன் நேரத்தை வீணாக்குகின்றாய்'' என்று தொழிலாளி கேட்டார். உடனே தன்னிடமுள்ள ஓட்டையான அழுக்குப் பாத்திரம் ஒன்றை அவரிடம் கொடுத்து நீர் மொண்டு தருவீர்களா என்று கேட்டாள். அவரும் சிரித்து விட்டு எப்படி ஓட்டைப் பாத்திரத்தில் நீர் எடுக்க முடியும் என்றார். பறவாயில்லை முயற்சி செய்யுங்கள் என்றாள். அவரும் ஒரு முறை முயன்றார். நீர் தங்கவில்லை. இப்படி 3 தடவை செய்து காட்டி பைத்தியம் இப்போது தெரிகிறதா என்றார். அதற்கு அவளும் அப்பாத்திரத்தைக் காட்டி நீர் தங்கவில்லை பாத்திரம் துப்பரவாகி விட்டது அல்லவா. அதேபோல் தான் என் மனதில் குறள்கள் தங்கவில்லை. என் மனதும் துப்பரவாகிவிட்டது. என்றாள்.  இச்சம்பவம் கூட நான் கேள்வி அறிவால் பெற்றதே. அதனால் நீங்கள் கற்கவில்லை என்றாலும் கேளுங்கள் நீங்கள் கேட்ட மாத்திரத்தில் அந்தளவில்  பயனைப் பெறுவீர்கள். 

                          யார் அந்த வள்ளுவர். அவரை நினைத்துப் பார்க்க என் கண் முன்னாலே மிகப் பிரமாண்டமாக தெரிகின்றார். யார் அந்த வள்ளுவர்? அவர் உருவம் தெரியுமா? இப்போது கீறப்பட்ட உருவம் கற்பனை வடிவம். யாருக்காவது அவர் காலம் தெரியுமா? அதுவும் கற்பனை. எப்படி காரைக்கால் அம்மையார் காலத்திலே வெண்பா தோன்றுவதற்கு முன் குறள் வெண்பாவால் அவர் பாடியிருக்க முடியும். காதலும், வீரமும் போற்றப்பட முன் அவற்றின் சீர்கேட்டை எழுதியிருக்க முடியும். சங்ககாலத்திலே குறுந்தொகை பாடலொன்றில் ''யானும் அவனும் புணர்ந்த ஞான்று. குறுகுகள் பார்த்திருந்தனவே. தானது பொய்ப்பின் நானெது செய்வேன்'' என்னும் பாடல் உட்பட சங்கப்பாடல்களில் பல முறை தவறிய காதல் போர்முறைகள் பேசப்படுகின்றன. இவற்றைச் சீர்திருத்தும் நோக்குடன் குறள் வடித்த வள்ளுவர் கிறிஸ்துவுக்கு முன் தோன்றியிருக்க முடியாது என்று எண்ணத் தோன்றுகின்றது. இது ஆய்வுக்கு உரிய விடயம். ஆனாலும், இன்று 3 வயதுப் பிள்ளை அவர் எழுதிய திருக்குறள் மனனம் செய்து எம்முன் ஒப்பித்து விளக்கம் சொல்கின்றது என்றால், இன்றும் நின்று நிலைக்கும் அந்த மனிதன் இனியும் நிலைப்பார் என்பதற்கு என்ன சந்தேகம் இருக்கின்றது. பரிணாம வளர்ச்சியின் தந்தை என்று சொல்லப்படும் சார்ள்ஸ் டாவின் அவர்கள் சொன்ன ''வலிமையுள்ளது வாழும்'' என்ற கூற்றுக்கிணங்க வள்ளுவம் வாழும் என்பது நிச்சயம். 

       இன்றைய உலகில் நீண்ட கட்டுரைகள் வாசிப்பதற்கு யாரும் விரும்புவதில்லை. வட்ஸப், வைபர் மெசெஞ் இல் 2 வரியில் எழுதிவிட்டு போய்விடுகின்றான். 21 ஆம் நூற்றாண்டில் மனிதன் இப்படித்தான் இருப்பான் என்று நினைத்து அன்றே 7 சொற்களில் குறளை வடித்து விட்டுப் போய் இருக்கின்றாரே! என்ன ஆச்சரியம். சமுதாயத்தை நோக்கி எழுப்பப்படும் உணர்வுகள் நின்று நிலைக்கும் என்பது எனது முழுநம்பிக்கை. மக்களுக்காக மக்களுக்குச் சொல்லப்படுபவையும் சொல்பவர்களும் நின்று நிலைப்பார்கள். 
  வெறும் உள்ளத்து உணர்ச்சிகளுக்காகப் பாடப்படுபவை அழிந்து போம். 

  தேடிச்சோறு நிதம் தின்று சில சின்னஞ்சிறு கதைகள் பேசி ... என்னும் பாடலிலே பாரதி 
  ''சொல்லடி சிவசக்தி எனைச் சுடர் மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்
  வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே'' என்றார். தான் வாழ்வதற்கு வல்லமை கேட்கவில்லை. மாநிலம் பயனுற வாழவதற்குக் கேட்டார். அதனால் இன்றும் நின்று நிலைக்கின்றார். அவ்வாறே திருவள்ளுவர் தன் நன்மைக்காகப் பாடவில்லை. சமுதாய சீர்திருத்தத்துக்காகப் பாடினார். சமுதாய சீர்கேடுகளை  களைந்தெறியவே வள்ளுவர் 1330 குறள்களை யாத்தார். இந்த குறள்களிலே கேள்வி என்ற அதிகாரம் கூறியவற்றை கேட்ட நீங்கள் இன்று தெளிவு பெற்றிருப்பீர்கள் என்று நம்புகின்றேன். உண்மையில் பேசிக்கொல்லும் கொலையை நான் நடத்தியிருந்தேன் என்றால் மிகச் சந்தோசப்படுவேன். ஏனென்றால், உங்கள் கேள்வி சிறப்புப் பெற அறியாமையை நான் கொன்றிருந்தால் அதுவும் கொலைதானே. 


  ஞாயிறு, 16 அக்டோபர், 2016

  இலங்கைப் பயணம் பாகம் 3  மட்டக்களப்பு மண்ணை நினைத்த போது மனதில் தேன் வந்து பாய்கிறது. நான் ஓடி விளையாடிய மண். இளமைக்காலத்தை இனிதாக அநுபவித்த பொழுதுகள், கால் பதித்த ஆலயங்கள், வாழ்ந்து வாழ்வைத் தொலைத்த வீட்டுக்காணி, நான் கல்வி கற்ற இடம், உறவினர்கள், நண்பர்கள், அப்பப்பா கண் கிளிக் செய்த புகைப்படத்தை மூளை பதிவு செய்ய, கைத்தொலைபேசியில் அடங்கிய படங்கள் உங்களுக்கு அடையாளப்படுத்த மட்டக்களப்பு நினைவுகளைத் தாங்கிவருகின்றது இப்பதிவு. 
                    மட்டக்களப்பு மாநகர் எங்களை வரவேற்ற மாத்திரத்தில் மீன்பாடிய வாவி அழகாகக் காட்சியளித்தது. விபுலானந்த அடிகளாரின்  சிந்தனைக்கு வித்தாகிய  வாவி, மீன்பாடும் ஓசைக்கு மகிழ்ந்திருக்கும் வாவி கண்களைக்  கவர்ந்தது.

  புதிய அரசாங்க அதிபரும் எனது நண்பியுமாகிய திருமதி. P.S.M சார்ள்ஸ் வீட்டிற்கு சென்று அவரைச் சந்தித்து அவரது முனைப்பிலே உருவான மட்டக்களப்பு பூங்காவைத் தரிசித்தோம்.   சுதந்திரத் தந்தையின் அழகுச்சிலை அப்பூங்காக்கு அழகூட்டியது. 


    மட்டக்களப்பு மண்ணை நன்னிலைக்குக் கொண்டு வருவதற்காகத் தான் எடுக்கும் முயற்சியில் அரசியல் வாதிகளின் தலையீடும் முன்னேற்றத்தைக் குலைக்கும் சில வல்லுருவிகளின் செயல்களும் தடங்களாக இருப்பதாகவும், தான் பதவியில் இருக்கும் போதே வாழ்வாதாரங்களை இழந்து நிற்கும் நூற்றுக்கணக்கான விதவைப் பெண்களுக்கு வாழ்வழித்து விட வேண்டும் என்னும் உத்வேகத்தில் இருப்பதாகவும் அரசாங்க அதிபர் திருமதி P.S.M சார்ள்ஸ் கூறிக்கொண்டார். ஊரை தின்று வயிறு வளர்க்கும் கூட்டத்தினரிடையே மனவருத்தத்துடன் தன் கடமையை சரியான முறையில் நடத்திவிட வேண்டும் என்னும் துடிப்போடு தொழிற்படும் ஒரு அரசாங்க அதிபரின் உள்ளக் குமுறலை உணரக்கூடியதாக இருந்தது. நாட்டில் நடக்கின்ற பித்தலாட்டங்கள், ஏமாற்று வேலைகள், அடுத்தவர் நில உரிமைகளை தமக்குச் சாதகமாக சட்டரீதியற்ற முறையில் மாற்றிக் கொள்ளும் ஈவிரக்கமற்ற செயல்கள் இவற்றுக்கெல்லாம் கண்ணில் எண்ணை விட்டுக் கொண்டிருக்க வேண்டிய சூழ்நிலையை அறிந்தேன். நாக்கில் நரம்பில்லாது பேசும் நயவஞ்கர்களின் பேச்சுக்கு காது கொடுக்காது உங்கள் கடமையை நேர் வழியில் செய்யுங்கள். இதுவரை காலமும் உங்களால் முன்னெடுக்கப்பட்ட பணிகளால் உயர்ந்து, உங்களை நம்பியிருக்கும் மக்களுக்கு உங்கள் தேவை அவசியம் என்று கூறினேன். அவர் கடமையில் இருக்கும் போதே காரியங்களை ஆற்றிவிட வேண்டும் எமது மண்ணை நன் நிலைக்குக் கொண்டு வரவேண்டும் என்னும் எண்ணத்தை ஒவ்வொரு மக்களும் உணரவேண்டியது அவசியமாகிறது. 

               
  இதையும் மீறி வாழ்வை தொலைத்து நிற்கும் வாழ்வாதாரம் இழந்து நிற்கும் மக்களுக்காகவும் மண்ணின் முன்னேற்றத்திற்காக நேர்மையுடன் உழைக்கும் வாசம் அமைப்பினரின் பணிகளை அறிந்து மிக்க மகிழ்ச்சி கொண்டேன். அவர்களின் துணையுடன் எமது மண்ணின் மகிமைக்கு உதவிக் கரம் நீட்டுகின்ற அனைத்து நல்மனம் கொண்டார்க்கும் நன்றியையும் வாழ்த்துகளையும் கூறிக் கொள்கின்றேன். உங்கள் போன்றோரின் ஒத்துழைப்புடன் நமது நாடு நிச்சயம் நன் நிலைக்குத் திரும்பும் என்னும் நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.

  என்னை உருவாக்கிய என் எழுத்துக்கு அடித்தளமிட்ட பாடசாலையை பார்த்தேன். முகப்பூச்சிட்டு பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை செய்யப்பட்ட புதிய வடிவத்தில் மீண்டும் புதுப்பொலிவுடன் காட்சியளித்தது. பலரை உருவாக்கிய கட்டிடம் அடித்தளம் உறுதிபெற்று, புதிய கட்டிட வருகைகளுடனும், நிர்வாக மாற்றங்களுடனும் மெடுக்குடன் நின்றது. எத்தனை குறும்புகள், மாடிகளில் ஓட்டம், மாங்காய் ஒளித்து தின்ற எண்ணங்கள் எல்லாம் வந்து போயின.

               எத்தனை மாற்றங்களைக் காட்டினாலும், வயதையும் மிஞ்சி நான் அன்று கண்ட பொலிவுடனே இன்றும் இருக்கின்றேன் என்று நின்று நிமிர்ந்து நின்ற மரத்தைக் கண்ட போது ஆச்சரியப்பட்டு விட்டேன். பஸ்ஸிலிருந்து இறங்கி வேகநடை விரைந்து செல்ல, இம்மரத்தடியால் வளைந்து வந்து பாடசாலைக்கு ஓடிச் சென்ற ஞாபகம் மூளைப்பதிவை விட்டகலவில்லை. எங்கள் பாடசாலையின் அருகே அமைந்திருந்த மட்டக்களப்பு மத்திய கல்லூரி மாணவர்கள் பாடசாலை அமைந்திருக்கின்றது. பெண்களைப் பின் தொடர்ந்து வரும் மாணவர்கள் இவ்விடத்தில் தரித்து விடுவார்கள். அதேபோல் பெண்களைக் காத்திருக்கும் வாலிபப் பருவமும் இங்கு வந்து காத்திருக்கும். வீதிகள் சில மாற்றத்தைக் கண்டாலும் இயற்கை எண்ணங்களைத் தாங்கி அப்படியே காணப்படுகின்றது. 

  1628 இல் போத்துக்கேயரால் மட்டக்களப்பில் கட்டப்பட்ட கோட்டையைக் கண்டேன். பின் ஒல்லாந்தர்கள் 1638 இல் கைப்பற்றினார்கள். பின் அவர்களால் அழிக்கப்பட்டு மீண்டும் கட்டப்பட்டுப் பின் 1796 பிரித்தானியர்களால் கைப்பற்றப்பட்டது. இங்குதான் தற்போது அரசாங்க அதிபர் அலுவலகம் அமைந்திருக்கின்றது. 

  இப்படத்தில் இருப்பது பிரித்தானியர்களின் பீரங்கி ஆகும்.  

  போக்குவரத்து நேரத்தை குறைப்பதற்காக மட்டக்களப்பு வாவியினுள் வந்திறங்கி கொழும்பு நோக்கிச் செல்லும் ஹெலிகொப்டர் அச்சூழலில் அழகாகக் காட்சியளித்தது. 
               நான் பிறந்து வளர்ந்த இடம் ஏறாவூரில் கோயில்கள் சிறப்புற்ற அளவிற்கு கிராமம் வளர்ச்சியடையவில்லை என்றே கருதுகின்றேன். ஆங்காங்கே சில கடைகள் காணப்பட்டாலும் அழிவுற்ற எண்ணத் தடயம் அங்கு இன்னும் மறையவில்லை என்றே கூற வேண்டும். பல இடங்கள் மீள் நிலைக்குத் திரும்பி வந்தாலும் மனித நடமாட்டம் தமிழர்கள் வாழும் பகுதிகளில் குறைவாகவே காணப்படுகின்றது. கோயில் திருவிழாவிற்கு ஊர் நிறைந்த சனக்கூட்டம் காணப்பட்டதாகவும், ஊர் செழிப்பாகக் காணப்பட்டதாகவும், மண்ணை மதித்து இடம்பெயர்ந்தவர்கள் இந்நாட்களில் அங்கு வந்து கூடினார்கள், அம்மனைத் தரிசித்தார்கள் எனவும் பேசப்பட்டது. என் சிறு வயது காலங்களில் காணப்பட்ட பொலிவையும், செழிப்பையும் அங்கு காணமுடியாததது வேதனையாகவே இருந்தது.  வீட்டுக் கைத்தொழில் புரிபவர்கள் அந்நிலையிலிருந்து இன்னும் மாறவில்லை. 
  பாலர் பாடசாலை, கல்யாண மண்டபம், வாசிகசாலைகள் உருப்பெற்றுக் கொண்டிருக்கின்றன. சுற்றுலாத்தளம் போல் ஊர்வாசிகள் விழாக்கள், விடுமுறைக்காக அங்கு வந்து தங்கிப் போவதற்காக நவீன வீடுகளை அமைத்து வந்து போவதாகவே உள்ளார்கள். நானும் ஒருவகையில் இக்குற்றச்சாட்டுக்கு உட்பட்டவளே. இன்னும் காலம் இருக்கின்றது. ஒருநாள் நான் வாழ்ந்த பூமி நின்று நிமிர்ந்து நிற்கும் என்னும் நம்பிக்கை என்னுள் இருக்கின்றது. எதுவாக இருந்தாலும் இருபத்து இரண்டு வருடங்கள் ஒழிந்திருந்த மகிழ்வு ஏதோ வகையில் என் மண்ணை மிதித்த போது எனக்குள் வந்து போனது.
  திங்கள், 3 அக்டோபர், 2016

  இலங்கைப் பயணத் தொடர் 2


  யாழ்ப்பாணம்
                   
   2012 இல் நான் யாழ்ப்பாணம் சென்றிருந்ததை விட பாரிய மாற்றத்தை 4 வருடங்களின் பின் உணரக்கூடியதாக இருந்தது. ஒரு  நாடு முன்னேற வேண்டுமானால், முதலில் பாதைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும என்று மகாத்மா காந்தி ஒரு இடத்தில் கூறியிருக்கின்றார். அதேபோல் விரிவுபடுத்தப்பட்ட பாதை வியாபார போக்குவரத்துக்கு இலகுவாகவும் மக்களின் தொழில் பயணங்களுக்கு இலகுவாகவும் இருப்பது நாடு முன்னேற வழிசெய்கின்றது. ஆனால், வாகனச்சாரதிகளின் பொறுப்பற்ற நடவடிக்கைகளினால் வாகன விபத்துக்களும் வருத்தங்களும் அநுபவிக்க வேண்டிய சூழ்நிலை பிரயாணிகளுக்கு ஏற்படுகின்றது. நான் பயணம் செய்த சொகுசு பஸ் என்று அழைக்கப்படும் பலூன் பஸ் இருப்பிடங்களில் மூட்டைப்பூச்சிகளை வளர்த்து இரத்தம் உறிஞ்சும் பணியையும் செய்கின்றார்களோ! என்று நினைத்தேன். வெளிநாட்டு உணவுண்ட உடல்களை நன்றாகவே அம்மூட்டைப் பூச்சிகள் பதம் பார்த்தன. என்றுமே மூட்டைப்பூச்சியைக் கண்டிராத என்னுடைய மகள் தனது உடலைப் பதம் பார்த்த மூட்டைப் பூச்சியை ஏதோ பூச்சி ஓடுகின்றது என்று பயந்து இருக்கையில் இருப்பதற்கு மறுத்துவிட்டார். சாரதியை விசாரித்தபோது அதற்கு நாங்கள் ஒன்றும் செய்யமுடியாது என்று பொறுப்பில்லாது பதிலிறுத்தார்கள். பிரயாணம் முடிந்து வாகனத்தை நிறுத்தினால் மருந்து தெளித்து துப்பரவு செய்த பின்தான் அடுத்த பயணத்தை ஆரம்பிக்க வேண்டும் என்ற சிறிய வரன்முறை தெரியாமலே வாகனம் சேவையில் ஈடுபடுத்தும் நிலமையை எச்சரித்தேன். அதே பஸ் யாழ்ப்பாணம் நெருங்கிய வேளையில் ரயர் வெடித்து அத்தனை பயணிகளும் வாகனத்தை விட்டு இறங்கி பாதையில் நின்றனர். அளவுக்கு மிஞ்சிய பொதிகளை பயணிகளுடன் ஏற்றிக் கொண்டு வரும்போது இப்படியான அசம்பாவிதங்கள் நடப்பதற்கு வழி இருக்கின்றது அல்லவா! ஏதோ வாழ்வதற்கு நாட்கள் இருக்கின்றது என்னும் காரணத்தால் நாம் உயிர் தப்பினோம். வேகமாக வாகனத்தைச் செலுத்துதல், வீதி ஒழுங்குமுறை தெரியாது வாகனம் கொண்டு செல்லுதல் போன்ற காரணங்களினால் அச்சங் கொண்ட பயணமாகவே போக்குவரத்து இலற்கையில் அமைகின்றது. இவையெல்லாம் சீர்செய்ய முடியாத தவறுகள் அல்ல என்பது யாவரும் அறிந்ததே.
                                                   
                                    யாழ்ப்பாண நூலகம் ஒரு கோயில் போல் வைத்திருக்கின்றார்கள். அழகான வாயில்.  அங்கும்   யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கும் சென்று என் நூலை அன்பளிப்பாகக் கொடுத்தேன். 
  யாழ்ப்பாண பல்கலைக்கழகத்து கலைப்பிரிவு பீடாதிபதி பேராசிரியர் 
  N. ஞானக்குமரன் அவர்களைச் சந்தித்து என் நூலை வழங்கினேன். நன்றாக உபசரித்து என் நூலைப் பெற்றுக் கொண்டார். நல்ல மனிதர். ஆனால், என்ன செய்வது அவருக்குத் தமிழ் ஒரு சொல் கூடத் தெரியாது என்பதே வருத்தப்பட வைத்தது. பூலோகசிங்கம் புத்தகசாலையிலும் என் நூல்கள் சிலவற்றை ஒப்படைத்தேன்.

              
                         காங்கேசன் துறை (தல்சேவனா) கடற்கரை அழகான ஹொட்டல்கள் கட்டப்பட்டு அழகாகக் காட்சியளிக்கின்றது. ரசிக்கும் படியான புகைப்படங்களை எனது மகளின் கைத்தொலைபேசி பிடித்துக் கொண்டது.  யாழ்ப்பாண நகரம் நினைத்துப் பார்க்க முடியாத வகையில் முன்னேற்றம் கண்டிருக்கின்றது. வெளிநாட்டு உதவிகள் கிடைக்கும் போது சிறிதளவேனும் அரசாங்கம் கவனம் எடுக்கவில்லையானால் வினாக்களை எதிர்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்படும் என்னும் காரணத்தினால் போர் நடைபெற்ற பிரதேசங்கள் கவனத்தில் எடுக்கப்படுகின்றன என்பதை அறிந்தேன். கிளிநொச்சியில் நின்று போர்க்கால அனர்த்தங்களை நினைத்துப் பார்த்தேன். தீமையிலும் நன்மை உண்டு என்று எண்ணத் தோன்றியது. 

  யாழ்மண்ணில்  தலைவாழை இலைபோட்டு உணவுண்ட மரக்கறிச் சுவையுடன் யாழ்மண்ணை விட்டு பயணமானோம்.

  ஞாயிறு, 2 அக்டோபர், 2016

  இலங்கைப் பயணம்


  போருக்குப் பின் மாற்றம் காணும் உலக வரிசையில் இலங்கை       (பத்திரிக்கை ஆசிரியர்கள், புரவலர்  ஹாசிம்   உமர், எனது சகோதரர்கள்)

  நான் இலங்கை மண்ணில் கழித்த விடுமுறை காலங்களில் நான் அநுபவித்த சில அநுபவப் படிவங்களை என் வாசகர்களுக்கு வழங்குகின்றேன். 

  ஜேர்மனி, ஜப்பான் போன்ற நாடுகள் போர் கண்டு மீண்டு தலைநிமிர்த்தி வேறு நாடுகளின் கண்களை விரியச் செய்து திரும்பிப் பார்க்க வைக்கின்றன.  அந்த வரிசையில் இலங்கை இன்று வளர்ச்சிப் படிகளில் துரிதமாக முன்னேறிக் கொண்டிருக்கின்றது என்பதே உண்மை. மனங்களையும் மண்ணையும் மாற்றிமாற்றிப் பார்க்கின்றேன். மண் வேற்று நாடுகளை விஞ்சத் துடிக்கின்றது. மனங்கள் மனிதத்தை மறக்கத் துடிக்கின்றன. இவ்வேறுபாட்டினுள்ளும் அன்புள்ளம் கொண்ட அரவணைப்புள்ளங்களும் இருக்கவே செய்கின்றன.

  இவ்வருட (2016) விடுமுறை இலங்கை மண்ணிலே கொழும்பு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, பொலனறுவை போன்ற நகரங்களிலே கழிந்தது. மறக்க முடியாத என் முக்கோண முக்குளிப்புத் தாயக வெளியீடும் அதனுடன் இணைந்து கொண்டது. முதலில் என் நூல் வெளியீடு பற்றி சிறிது தெளித்து விட்டு மண்ணின் மறக்கவொண்ணாச் சுவையையும் தருகின்றேன். 

               என் கனவு நிஜமான நாள் 28.08.2016. தமிழ்ச்சங்க மேடை என் எழுத்துக்கு அங்கீகாரம் வழங்குமா? என்னும் கேள்வி என் இளவயதில் இதயத்தில் இருந்தது. அக்கேள்விக்கு அன்றைய நாள் விடை தந்தது. என் நூல் மலேசியா, இங்கிலாந்து, ஜேர்மனி போன்ற நாடுகளில் வெளியீடு செய்யப்பட்டடிருந்தாலும் கொழும்புத் தமிழ் சங்கத்து மேடையிலே வீற்றிருந்த காட்சியே என் நெஞ்சுக்கு மிக்க மகிழ்வைக் கொடுத்தது. வீரகேசரி சங்கமம் ஆசிரியர் ஜீவா சதாசிவம் நிகழ்ச்சித் தொகுப்பில் நூல் வெளியீடு இடம்பெற்றது. தலைமைப் பொறுப்பை கொழும்புத் தமிழ்ச்சங்கத் தலைவர் தம்பு சிவா அவர்கள் எடுத்திருந்தார்.  


  கௌரவ விருந்தினர்களாக ஞானம் சங்சிகை ஆசிரியர் தி. ஞானசேகரன் அவர்களும், தேசிய சம்பளங்கள் மற்றும் ஆணைக்குழு உறுப்பினர் திரு. உடுவை தில்லைநடராஜா அவர்களும், தடாகம் கலை இலக்கிய வட்ட அமைப்பாளர் கலைமகள் ஹிதாயா அவர்களும், ஊற்று வலையுலக எழுத்தாளர் மன்ற செயலாளர் யாழ்பவாணன் அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள். அறிமுகவுரை ஞாயிறு தினக்குரல் ஆசிரியர் பாரதி ராஜநாயகம் அவர்கள் வழ்ங்கினார். விமர்சன உரையை தகவம் அமைப்புச் செயலாளர் வசந்தி தயாபரன் அவர்கள் சிறப்பாகச் செய்திருந்தார். முதலாவது பிரதியை புரவலர் புத்தகப் பூங்கா நிறுவனர் ஹாசிம் உமர் எனது சகோதன் திலகராஜ் இடம் இருந்து பெற்றுக் கொண்டார்.

                              (தமிழ் மொழி வாழ்த்து எனது மருமகள் சதுர்ஷா)
  விழா 3 மணிக்கு ஆரம்பித்து 6 மணிக்கு முடிவிற்றது. எழுத்தாளர்கள், வாசகர்கள், எழுத்துலக ஜம்பவான்கள் நிறைவில் மண்டபம் சிறப்புற்றிருந்தது. ஊற்று வலையுலக எழுத்தாளர் மன்றத்தினர் நவயுக கவிதாயினி என்னும் பட்டத்தை எனக்கு வழங்கிக் கைளரவித்தனர். அதேபோல், தடாகம் கலை இலக்கிய வட்டத்தினர் கவினெழி பட்டத்தினையும் வழங்கிக் கௌரவித்தனர். அவ் இரண்டு அமைப்பினர்க்கும்  என் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன் 


  வரவேற்புரை எனது மகள் மெனுஷா


  ( நூல் விமர்சனம் திருமதி வசந்தி தயாபரன் ) 


  (திரு. தம்பு சிவா விடம் இருந்து திரு. உடுவை தில்லை நடராஜா நூல் பெற்றுக்கொள்ளுகின்றார்)


  (கலைமகள் ஹிதாயா அவர்களிடம் இருந்து நினைவுப் பரிசும் சான்றிதழும் பெற்றுக் கொண்டேன் )  (முதல் பிரதி பெற்றுக் கொண்டமை )


  (ஞாயிறு தினக்குரல் ஆசிரியர் திரு. பாரதி ராஜநாயகம் )


  (வீரகேசரி பத்திரிகையில்  வெளியான பேட்டி )


    


  தொடர்பற்றுப் போன பல்கலைக்கழக நண்பர்கள், பாடசாலை நண்பர்கள் தொடர்புகளை ஏற்படுத்தி, பத்திரிகை நிருபர்கள், ஆசிரியர்கள் இணைந்து இனிதே நிறைவுற்ற நூல்வெளியீட்டு மனநிறைவுடன், இலங்கைப் பத்திரிகைகளில் இடம்பெற்ற விமர்சனங்கள், பேட்டிகள், தொலைக்காட்சி நேர்காணல் என்று என் எழுத்துலக வாழ்வு இலங்கை மக்களால் உணரப்பட இலங்கையின் மற்றைய இடங்கள் நோக்கி என் எண்ணத்திசை திரும்பியது


     (வசந்தம் தொலைக்காட்சியில் வெளியான என்னுடைய நேர்காணல் ) 

  பத்திரிகை நிருபர்கள், ஆசிரியர்கள் இணைந்து இனிதே நிறைவுற்ற நூல்வெளியீட்டு மனநிறைவுடன் இலங்கையின் மற்றைய இடங்கள் நோக்கி என் எண்ணத்திசை திரும்பியது.

  திருகோணமலை   கெந்தகப் பூமி என்று அழைக்கப்படும் திருகோணமலை நோக்கிய பயணத்திலே சுட்டெரிக்கும் வெயிலில் சூரியனின் தாராள மனப்பாங்கு கச்சிதமாய்த் தெரிந்தது. வெப்பம் அதிகரித்துவிட்டால் ஜேர்மனியில் பாடசாலைகளுக்கு விடுமுறை தந்துவிடுவார்கள். மந்தம் பிடித்து வேலை செய்வதற்கு மக்களெல்லாம் மயங்கிக் கிடப்பார்கள். உண்மையில் திருகோணமலை மக்கள் கெட்டிக்காரர்கள் தான் உச்சி வெயிலிலும் உற்சாகமாகத் தான் தொழிற்படுகின்றார்கள். திருக்கோணேசர் கோயில் அமைப்பும் அழகும் சுற்றாடலை சூழ்ந்திசைக்கும் ஓம்... என்னும் ஓசையும் உல்லாசப் பயணிகளைக் கவர்ந்திழுப்பதில் ஆச்சரியப்படுவதற்கில்லை. இயற்கையின் இரம்பியத்தைப் பறைசாற்ற இம்மலை ஒன்றே போதும். இராவணன் வெட்டு, தாயாருக்கு ஈமக்கடமைகள் புரிந்ததாகச் சொல்லப்படும் புராணக்கதையை விளக்கும் வரைபடங்கள் ஆலயத்தினுள் அழகாகக் காட்சியளித்தன. திருகோணமலைப் பயணத்திலே குறிப்பிடத்தக்க பாரிய குறைபாடாகக் காணப்படுவது திருகோணமலையிலிருந்து நீர்கொழும்பு செல்லுகின்ற பாதையில் சாப்பாட்டுக் கடைகளே கண்ணில் தென்படவில்லை. பாதை ஓரம் தேடிய படி வாகனத்தைச் செலுத்தி இறுதியில் குருநாகலிலே தான் உணவகத்தைக் காணக்கூடியதாக இருந்தது. அப்போதுதான் அங்கு நடைபெற்ற ஒரு உண்மைச் சம்பவத்தை கேட்டறிந்தேன். சிறு கைக் குழந்தையுடன் பிரயாணம் செய்த ஒரு தாய் பசியை அடக்க முடியாமல் ஒரு கடையில் பனிஸ் என்று சொல்லப்படும் பாண் வகையைச் சாப்பிட்டிருக்கின்றார். தொண்டை வரட்சியால் உள் சென்ற பனிஸ் தொண்டையில் அடைத்து உயிர் துறந்திருக்கின்றார். நெடிய தூரப்பயண வீதிகளில் (திருகோணமலை கொழும்பு வீதி) உணவகங்கள் அமைக்கப்பட வேண்டிய அவசியத்தை மக்கள் உணர வேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான விண்ணப்பமாக இருக்கின்றது.  திருகோணமலை புறாத்தீவு 


  நிலாவெளி கடற்கரை  
                                                         ( இராவணன் வெட்டு )

  மறுபதிவில் தொடரும் யாழ்நகர், மட்டக்களப்பு , சரித்திரத் தளம் பொலநறுவ 
                
  அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

    இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...