• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    ஞாயிறு, 16 அக்டோபர், 2016

    இலங்கைப் பயணம் பாகம் 3



    மட்டக்களப்பு மண்ணை நினைத்த போது மனதில் தேன் வந்து பாய்கிறது. நான் ஓடி விளையாடிய மண். இளமைக்காலத்தை இனிதாக அநுபவித்த பொழுதுகள், கால் பதித்த ஆலயங்கள், வாழ்ந்து வாழ்வைத் தொலைத்த வீட்டுக்காணி, நான் கல்வி கற்ற இடம், உறவினர்கள், நண்பர்கள், அப்பப்பா கண் கிளிக் செய்த புகைப்படத்தை மூளை பதிவு செய்ய, கைத்தொலைபேசியில் அடங்கிய படங்கள் உங்களுக்கு அடையாளப்படுத்த மட்டக்களப்பு நினைவுகளைத் தாங்கிவருகின்றது இப்பதிவு. 
                      மட்டக்களப்பு மாநகர் எங்களை வரவேற்ற மாத்திரத்தில் மீன்பாடிய வாவி அழகாகக் காட்சியளித்தது. விபுலானந்த அடிகளாரின்  சிந்தனைக்கு வித்தாகிய  வாவி, மீன்பாடும் ஓசைக்கு மகிழ்ந்திருக்கும் வாவி கண்களைக்  கவர்ந்தது.





    புதிய அரசாங்க அதிபரும் எனது நண்பியுமாகிய திருமதி. P.S.M சார்ள்ஸ் வீட்டிற்கு சென்று அவரைச் சந்தித்து அவரது முனைப்பிலே உருவான மட்டக்களப்பு பூங்காவைத் தரிசித்தோம். 



    சுதந்திரத் தந்தையின் அழகுச்சிலை அப்பூங்காக்கு அழகூட்டியது. 


      மட்டக்களப்பு மண்ணை நன்னிலைக்குக் கொண்டு வருவதற்காகத் தான் எடுக்கும் முயற்சியில் அரசியல் வாதிகளின் தலையீடும் முன்னேற்றத்தைக் குலைக்கும் சில வல்லுருவிகளின் செயல்களும் தடங்களாக இருப்பதாகவும், தான் பதவியில் இருக்கும் போதே வாழ்வாதாரங்களை இழந்து நிற்கும் நூற்றுக்கணக்கான விதவைப் பெண்களுக்கு வாழ்வழித்து விட வேண்டும் என்னும் உத்வேகத்தில் இருப்பதாகவும் அரசாங்க அதிபர் திருமதி P.S.M சார்ள்ஸ் கூறிக்கொண்டார். ஊரை தின்று வயிறு வளர்க்கும் கூட்டத்தினரிடையே மனவருத்தத்துடன் தன் கடமையை சரியான முறையில் நடத்திவிட வேண்டும் என்னும் துடிப்போடு தொழிற்படும் ஒரு அரசாங்க அதிபரின் உள்ளக் குமுறலை உணரக்கூடியதாக இருந்தது. நாட்டில் நடக்கின்ற பித்தலாட்டங்கள், ஏமாற்று வேலைகள், அடுத்தவர் நில உரிமைகளை தமக்குச் சாதகமாக சட்டரீதியற்ற முறையில் மாற்றிக் கொள்ளும் ஈவிரக்கமற்ற செயல்கள் இவற்றுக்கெல்லாம் கண்ணில் எண்ணை விட்டுக் கொண்டிருக்க வேண்டிய சூழ்நிலையை அறிந்தேன். நாக்கில் நரம்பில்லாது பேசும் நயவஞ்கர்களின் பேச்சுக்கு காது கொடுக்காது உங்கள் கடமையை நேர் வழியில் செய்யுங்கள். இதுவரை காலமும் உங்களால் முன்னெடுக்கப்பட்ட பணிகளால் உயர்ந்து, உங்களை நம்பியிருக்கும் மக்களுக்கு உங்கள் தேவை அவசியம் என்று கூறினேன். அவர் கடமையில் இருக்கும் போதே காரியங்களை ஆற்றிவிட வேண்டும் எமது மண்ணை நன் நிலைக்குக் கொண்டு வரவேண்டும் என்னும் எண்ணத்தை ஒவ்வொரு மக்களும் உணரவேண்டியது அவசியமாகிறது. 

                 
    இதையும் மீறி வாழ்வை தொலைத்து நிற்கும் வாழ்வாதாரம் இழந்து நிற்கும் மக்களுக்காகவும் மண்ணின் முன்னேற்றத்திற்காக நேர்மையுடன் உழைக்கும் வாசம் அமைப்பினரின் பணிகளை அறிந்து மிக்க மகிழ்ச்சி கொண்டேன். அவர்களின் துணையுடன் எமது மண்ணின் மகிமைக்கு உதவிக் கரம் நீட்டுகின்ற அனைத்து நல்மனம் கொண்டார்க்கும் நன்றியையும் வாழ்த்துகளையும் கூறிக் கொள்கின்றேன். உங்கள் போன்றோரின் ஒத்துழைப்புடன் நமது நாடு நிச்சயம் நன் நிலைக்குத் திரும்பும் என்னும் நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.

    என்னை உருவாக்கிய என் எழுத்துக்கு அடித்தளமிட்ட பாடசாலையை பார்த்தேன். முகப்பூச்சிட்டு பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை செய்யப்பட்ட புதிய வடிவத்தில் மீண்டும் புதுப்பொலிவுடன் காட்சியளித்தது. பலரை உருவாக்கிய கட்டிடம் அடித்தளம் உறுதிபெற்று, புதிய கட்டிட வருகைகளுடனும், நிர்வாக மாற்றங்களுடனும் மெடுக்குடன் நின்றது. எத்தனை குறும்புகள், மாடிகளில் ஓட்டம், மாங்காய் ஒளித்து தின்ற எண்ணங்கள் எல்லாம் வந்து போயின.

                 எத்தனை மாற்றங்களைக் காட்டினாலும், வயதையும் மிஞ்சி நான் அன்று கண்ட பொலிவுடனே இன்றும் இருக்கின்றேன் என்று நின்று நிமிர்ந்து நின்ற மரத்தைக் கண்ட போது ஆச்சரியப்பட்டு விட்டேன். பஸ்ஸிலிருந்து இறங்கி வேகநடை விரைந்து செல்ல, இம்மரத்தடியால் வளைந்து வந்து பாடசாலைக்கு ஓடிச் சென்ற ஞாபகம் மூளைப்பதிவை விட்டகலவில்லை. எங்கள் பாடசாலையின் அருகே அமைந்திருந்த மட்டக்களப்பு மத்திய கல்லூரி மாணவர்கள் பாடசாலை அமைந்திருக்கின்றது. பெண்களைப் பின் தொடர்ந்து வரும் மாணவர்கள் இவ்விடத்தில் தரித்து விடுவார்கள். அதேபோல் பெண்களைக் காத்திருக்கும் வாலிபப் பருவமும் இங்கு வந்து காத்திருக்கும். வீதிகள் சில மாற்றத்தைக் கண்டாலும் இயற்கை எண்ணங்களைத் தாங்கி அப்படியே காணப்படுகின்றது. 

    1628 இல் போத்துக்கேயரால் மட்டக்களப்பில் கட்டப்பட்ட கோட்டையைக் கண்டேன். பின் ஒல்லாந்தர்கள் 1638 இல் கைப்பற்றினார்கள். பின் அவர்களால் அழிக்கப்பட்டு மீண்டும் கட்டப்பட்டுப் பின் 1796 பிரித்தானியர்களால் கைப்பற்றப்பட்டது. இங்குதான் தற்போது அரசாங்க அதிபர் அலுவலகம் அமைந்திருக்கின்றது. 

    இப்படத்தில் இருப்பது பிரித்தானியர்களின் பீரங்கி ஆகும்.  





    போக்குவரத்து நேரத்தை குறைப்பதற்காக மட்டக்களப்பு வாவியினுள் வந்திறங்கி கொழும்பு நோக்கிச் செல்லும் ஹெலிகொப்டர் அச்சூழலில் அழகாகக் காட்சியளித்தது. 




                 நான் பிறந்து வளர்ந்த இடம் ஏறாவூரில் கோயில்கள் சிறப்புற்ற அளவிற்கு கிராமம் வளர்ச்சியடையவில்லை என்றே கருதுகின்றேன். ஆங்காங்கே சில கடைகள் காணப்பட்டாலும் அழிவுற்ற எண்ணத் தடயம் அங்கு இன்னும் மறையவில்லை என்றே கூற வேண்டும். பல இடங்கள் மீள் நிலைக்குத் திரும்பி வந்தாலும் மனித நடமாட்டம் தமிழர்கள் வாழும் பகுதிகளில் குறைவாகவே காணப்படுகின்றது. கோயில் திருவிழாவிற்கு ஊர் நிறைந்த சனக்கூட்டம் காணப்பட்டதாகவும், ஊர் செழிப்பாகக் காணப்பட்டதாகவும், மண்ணை மதித்து இடம்பெயர்ந்தவர்கள் இந்நாட்களில் அங்கு வந்து கூடினார்கள், அம்மனைத் தரிசித்தார்கள் எனவும் பேசப்பட்டது. என் சிறு வயது காலங்களில் காணப்பட்ட பொலிவையும், செழிப்பையும் அங்கு காணமுடியாததது வேதனையாகவே இருந்தது.  வீட்டுக் கைத்தொழில் புரிபவர்கள் அந்நிலையிலிருந்து இன்னும் மாறவில்லை. 




    பாலர் பாடசாலை, கல்யாண மண்டபம், வாசிகசாலைகள் உருப்பெற்றுக் கொண்டிருக்கின்றன. சுற்றுலாத்தளம் போல் ஊர்வாசிகள் விழாக்கள், விடுமுறைக்காக அங்கு வந்து தங்கிப் போவதற்காக நவீன வீடுகளை அமைத்து வந்து போவதாகவே உள்ளார்கள். நானும் ஒருவகையில் இக்குற்றச்சாட்டுக்கு உட்பட்டவளே. இன்னும் காலம் இருக்கின்றது. ஒருநாள் நான் வாழ்ந்த பூமி நின்று நிமிர்ந்து நிற்கும் என்னும் நம்பிக்கை என்னுள் இருக்கின்றது. எதுவாக இருந்தாலும் இருபத்து இரண்டு வருடங்கள் ஒழிந்திருந்த மகிழ்வு ஏதோ வகையில் என் மண்ணை மிதித்த போது எனக்குள் வந்து போனது.








    4 கருத்துகள்:

    1. வணக்கம் சகோ
      தங்களது எழுத்துகளில் தங்களது மன ஒட்டத்தை அறிந்து கொள்ள முடிகின்றது பிறந்த மண்ணை யார்தான் மறக்க இயலும்.

      பதிலளிநீக்கு
    2. நான் இன்னும் மட்டக்களப்புக்குச் சென்றதில்லை.
      விரைவாக மட்டக்களப்புக்குப் போய்ப் பார் என்கிறது
      தங்கள் பதிவு

      பதிலளிநீக்கு
    3. அன்புமிக்க கௌசி அவர்களுக்கு, என் நெஞ்சார்ந்த அன்பும் வாழ்த்துக்களும். மட்டக்களப்பு நாங்கள் அடிக்கடி காதில் கேட்ட ஊர், அதைப்பற்றி விவரங்கள் தெரியாது. உங்கள் கட்டுரை அந்த ஊரைப்பற்றிய நல்ல அறிமுகம் கொடுத்துவிட்டது. உங்கள் கட்டுரை நான் எழுதிய ‘என் கிராமத்தைத் தொலைத்துவிட்டேன்’ என்பதை நினவூட்டியது.
      “என் தாத்தா கட்டிய வீடு
      இடிந்த சுவர்களும் இருக்கிறது
      இருக்கிறது என்பதைத் தவிர வேறென்ன
      இருக்கிறது”
      என்று எழுதியிருந்தேன். நினைவுகளைக் கிளரிவிட்டீர்கள்.
      - கவிஞர். டாக்டர் எழில்வேந்தன்

      பதிலளிநீக்கு
    4. அன்பின் கௌசி அவர்களுக்கு,

      எழில் வந்தனங்கள்.

      கோடிக்கணக்கான விண்மீண்களில்
      தனித்து ஒளிரும்
      ஒரு நட்சத்திரம் எங்கோ ஒளிந்திருந்ததை
      நான் இப்போது கண்டதில் மகிழ்கிறேன்.
      இது
      ஒளிரும் நட்சத்திரம் மட்டுமல்ல
      எனக்கு
      நம்பிக்கை தருகிற நட்சத்திரம்.

      இது, முதலில் உங்களுக்கு எதிர்நோக்கோடு அனுப்பினேன். அதை உங்களுடைய எழுத்துக்கள் உறுதிப்படுத்திவருகின்றன. மட்டக்கள்ளப்பு பற்றிய கட்டுடரை படித்தேன், படித் தேன் குடித்தேன்.
      அருமையாக எழுதியுள்ளீர்கள். கருத்து எழுதியுள்ளேன். திருமதி சார்லஸ் அவர்களுக்கு என் அன்பையும் வாழ்த்துக்களையும்
      தெரிவியுங்கள்.

      ஒத்த சிந்தனையுடைய நம்மைப்போன்றோர் இணைந்து செயல் செயல்படுவது தமிழ்ச் சமுதாயத்திற்கு நன்மை பயக்கும் என்று கருதுகிறேன்.

      என்றென்றும் அன்பும் நன்றியுடன் ,
      எழில்

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...