• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  சனி, 18 பிப்ரவரி, 2012

  இந்நிலைக்கு இடம் தந்தவர் யார்?


                 
  பலன் ஒன்று படி இறங்கி வந்ததனால், அபிராமி தன் மடியில் வந்த மகவைத் தொட்டிலில் போட்டுத் தாலாட்டித் தன் தோளில் போட்டுச் சீராட்டி சப்பாணிப்பருவம், சாய்ந்தாடுபருவம், எனப் பருவந்தோறும் நாட்டுப்பாடல்கள் பாடி இயற்கையாய் அன்பையும் கலந்து வளர்த்த பிள்ளை அட்ஷயா, பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை என
                
                  மலர் பருவம் தளிர் பருவம்
                  மகிழ்ந்தின்பச் சுவை ததும்பும்
                  மாங்கனிப் பருவம் தேன் சுவைப்பருவம்
                  தித்திப்பாய் தெளிந்து நிற்கும் பருவம்
                          
                 வந்தடைந்தாள். கன்னிப்பருவத்தில் எத்தகைய பெண்ணாகிலும் ஒருவித களைகட்டியே காணப்படுவாள். இது இயற்கை. இறைவன் இனத்தை வளர்க்க இயற்றி வைத்த சூன்யம். காட்சிப்பொருளாகக் காலமெல்லாம் அவள் வாழத் தோற்றம் பெற்றதல்லவே வாழ்க்கை. ||மாங்கல்யம் தந்துநானே|| ஒலிக்க அவள் கழுத்திலே தொங்கி மார்பிலே தவழ மங்கலநாண் அணிந்து அடுத்த தலைமுறைக்கு வலிமை சேர்க்க வேண்டியதல்லவா அவள் வாழ்க்கை. 
                 
                    எனவே பருவமடைந்த பெண்ணைப் பலரும் அறிய பூப்புனிதநீராட்டுவிழா செய்யப் பெற்றோர் சித்தம் கொண்டனர். ஐரோப்பியநாட்டிலே தமிழர்கள் பூப்புனித நீராட்டுவிழா செய்வதென்றால், அழைப்பிதழ் தொடக்கம் அணிகலன் வரை தாய்நாட்டில் இருந்து கொண்டு வருவார்கள். அதுமட்டுமல்ல வாழைமரத்தை வாழைக்குலையுடன் இணைத்தே தாய்நாட்டிலிருந்து இறக்குமதி செய்து நட்டுவார்கள். பெண்ணைப் பெற்றவுடன் அவள் பூப்புனித நீராட்டு விழாவிற்கென்றே பணம் சேகரிக்கும் பணியில் தம்மை முழுதாக ஈடுபடுத்துவார்கள். பலருக்கும் தமது பெண்ணின் பூப்புனித நீராட்டு விழாவே சிறந்தவிழா என்று பெயர்பெற வேண்டும் என்பதில் ஆர்வம் அதிகமாக இருக்கும். விதவிதமான ஆடையில் விலைமதிக்கவொண்ணா படாடோபத்துடன் ஆடம்பரத்தை விரவவிட்டு விழாவைச் சிறப்பிப்பர். ஐரோப்பியர்கள் வியந்து நிற்கும் வண்ணம் விருந்தினரை அழைப்பார்கள். ஏனெனில் இவ்வாறு மண்டபம் நிறைந்த மக்களை ஐரோப்பியர்கள் மேடை நிகழ்வுகளில்தான் கண்டிருப்பார்கள். ஆனால், தமது குடும்ப விழாக்களுக்கு இப்படி அழைப்பது அவர்களுக்கு அதிசயமாகத் தெரிவது ஒன்றும் வியப்பில்லை. விருந்தினரை அழைப்பது மட்டுமன்றி உறவினர்களையும் ஸ்பொன்சர் செய்து தாயகத்திலிருந்து அழைப்பது வழக்கமாக இருந்தது. பெற்றோர் தமது பெற்றோர் உறவினர்களை சகோதரர்களை அவர்கள் ஆசீர்வாதம் பெறுவதற்கு அழைப்பார்கள். அரவிந்த் தம்பதியினர் இந்நடைமுறைக்கு விதிவிலக்கானவர்கள் அல்ல. 

              அரவிந்த் தம்பதியினர் தமது ஏக புதல்வி அட்சயாவின் பூப்புனிதநீராட்டுவிழாவிற்கான ஆயத்தங்களைத் தடபுடலாக நடத்தத் திட்டமிட்டனர். விருந்தினரை இவ்விழாவிற்கு அழைப்பதன் நோக்கமே பெண் நல்லமுறையில் வாழவேண்டும் என்று வாழ்த்துகளை, வாழ்ந்த அநுபவம் பெற்றவர்களிடம் இருந்து பெறுவதற்காகவும், தமது மகிழ்ச்சியைப் பலருடன் இணைந்து பகிர்ந்து கொள்வதற்காகவும், எனது மகள் வயதுக்கு வந்துவிட்டாள். அதனால், ஆணைப் பெற்றோர்களே! அவதானமாக இருங்கள். எங்கள் வீட்டிலும் ஒரு பெண் இருக்கின்றாள் என உலகுக்கு அறிவிப்பதற்குமாகவே அமைகின்றது. 
                           
                     அரவிந்த் தனது தந்தையை தாய்நாட்டிலிருந்து வரவழைத்திருந்தார். தன் தந்தையை அழைத்திருந்த பெருமையில் சில கடமைகளை அவரிடமே ஒப்படைத்திருந்தார். அவரும் ஓடியாடி வேலைகளை செய்து கொண்டிருந்தார். 

                    விழாவிற்கான நாளும் நெருங்கியது. நல்வாழ்த்துச் சொல்லப் பலரும் பங்குபற்றினார்கள். மண்டபம் நிறைந்த விருந்தினர்கள். அழகான மண்டபம் அதில் அழகுத் தேவதையாய் பருவப் பெண்களெல்லாம் கண்டு பொறாமை கொள்ளும் அளவிற்கு பேரழகியாய் மண்டபத்து மேடையிலே வீற்றிருந்தாள் அட்சயா. சொர்க்கத்துத் தேவதைக்குத் தொடக்குக் கழிக்கும் வைபவம் நடந்தேறியது. புகைப்பட வீடியோ கலாசாரங்கள் அமர்க்களமாய் அமைந்தன. பிற்காலத்தில் பெற்றோரும் மற்றோரும் இந்நாளை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திப் பார்க்கவென ஒப்பனை மாறாத பொலிவுடன் படங்கள் வீடியோக்கள் அவதானமாக எடுக்கப்பட்டது. விருந்தினர் உபசரிப்பு முற்றுப்பெற்று அன்பளிப்பு வரிசை நீண்டது. மெல்லமெல்ல வரிசை நீளம் குறைய மண்டபம் காலியாக அரவிந்த் குடும்பமும் வீடு திரும்பியது.

                    தன் மகளின் பூப்புனித நீராட்டுவிழாவைச் சிறப்புடன் நடத்திமுடித்த பெருமையுடன் அரவிந்தன் தம்பதியினர் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். மாதமொன்று கழிந்தது. மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாய் தன் மகளுக்கு ஏற்படவில்லையென அபிராமி மனதில்  ஓர் ஏக்கம் எழுந்தது. ஆனால், இப்பருவத்தில் சில பெண்கள் 2 வருடங்களின் பின்னும் அடுத்த மாதவிடாய் காண்பார்கள் என அயலவர் பகர்ந்து நிற்க அபிராமியும் அமைதியானாள். மாதங்கள் ஒவ்வொன்றாய்க் கடந்து செல்ல அட்சயா வயிற்றைக் குமட்டி வாந்தி எடுக்கத் தொடங்கினாள்.  உடலில் வாட்டம் ஏற்பட்டது. உணவுகளைக் காணும் போது வெறுப்பு எற்பட்டது. பலரின் கண்ணும் என் பிள்ளைமேல் பட்டுவிட்டதே. வராதநோய் ஏதோ வந்துவிட்டது. என அங்கலாய்த்த தாய் அபிராமி, தன் மகளை வைத்தியரிடம் கொண்டு சென்றார். தகுந்த பரிசேதனையின் பின் தன் மகளின் வயிறு வாரிசொன்றைச் சுமக்கிறது என்னும் இடியொன்று அபிராமி காதுகளில் வந்து விழுந்தது. ஒடுங்கிப் போனாள் அவள். அசையாது பிரமை பிடித்தவள் போளானாள். மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் பிள்ளையை வீட்டிற்கு அழைத்துச் சென்றாள். அப்பாவியாய் நின்ற அந்தப் பச்சைக் குழந்தை ஒரு குழந்தையை சுமக்கும் நிலை பெற்றது கண்டு துடித்துப் பேன பெற்றோர்கள், காரணம் வினவி காரண கர்த்தாவை அடையாளங் கண்டு பிடித்தனர். 

                                            

               வயது செல்லச் செல்ல பகுத்தறிவு பண்பட்ட நிலையில் தொழிற்படும். இது மனிதப்பண்பு. ஆனால், இப்பண்பற்ற மிருகமாகும் மனிதர்கள் சமுதாயத்தில் துடிக்கத் துடிக்க உயிருடன் புதைகுழியில் புதைக்கப்பட வேண்டியவர்கள். இக்காலத்தில் 11,12 வயதிலேயே பெண்கள் பருவமடைகின்றனர். பார்க்கும்போது குழந்தைகள் என எண்ணத் தோன்றும் உள்ளம் வர வேண்டும். ஆனல், மிருகமாய் வாழும் கிழட்டு ஜென்மங்கள்; பண்பட்ட கலாசாரம் என்று சொல்லப்படுகின்ற எம்மினத்தில் வாழ்வது வெட்கப்பட வேண்டியது. தாயகத்தில் இருந்து விமானம் ஏறி வந்து தன் மகனின் பிஞ்சுக் குழந்தையைத் தொடுவதற்கு அந்த முற்றிய மரத்திற்கு எப்படி மனம் வந்தது? மௌனமாய் நாடு திரும்பி விட்டாலும்  தன் கேவலமான துரோகச் செயல் ஒர்நாள் வெளிப்படும் என ஏன் அந்த மிருகம் எண்ணவில்லை? 

                  உண்மை தெரிந்த பெற்றோர் துடித்துப் போனார்கள். தன் மகளின் பெண்மையைச் சீர்குழைத்த தன் தந்தையை நினைத்து அரவிந்த் ஆடிப்போய்விட்டார். அரவிந்த் எடுக்க வேண்டிய நடவடிக்கை யாதென வாசகர்களே! வந்து தீர்ப்பளியுங்கள்.

     மிருகமாய் வாழும் ஜென்மங்கள் என்னும் தலைப்பில் என்னால் எழுதப்பட்ட இக்கதை தினக்குரல் என்னும் பத்திரிகையில் 26.02.12அன்று பிரசுரிக்கப்பட்டது                                                                           

  ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012

  புத்தாண்டுத் தீர்மானங்கள் - 2012 ஒரு சுயபரிசீலனை                      புத்தாண்டுத் தீர்மானங்கள் - 2012
                               ஒரு சுயபரிசீலனை
  ஆண்டாண்டு தொடர்கிறது ஆளுக்கொரு தீர்மானம் - அன்று
  ஆடையில்லா மனிதனுக்குள் அளவுகடந்த தீர்மானம்
  தேடித் தேடித் சேர்த்தளித்த தீர்மானம் - நாம்
  தெளிந்த வாழ்க்கை தொடர்தலுக்கு ஆதாரம்.
  அறிஞர்கள் ஞானிகள் விஞ்ஞானிகள் தீர்மானம்
  அநுபவிக்கும் மக்கள்நல வாழ்க்கை கொடையாகும்
  விடைதேடி போகும் வாழ்வில் தீர்மானம் 
  விரிவடைந்து போவதுதான் சமகாலம்
  மகேந்திரன் போட்ட மூன்று தீர்மானம் 
  மகிழ்வுடனே நிறைவேற ஆர்வபானம்
  மனம் நிறைந்து ஓடவேண்டும் மூளையெங்கும்
  தினந் தினமாய் முன்னேற்றம் காணவேண்டும்.
  மறைவாக சேர்த்திருக்கும் என்எழுத்து பொக்கிஷங்கள்
  மேடையேறிப் பலரறிய நூலாக வேண்டும்
  நூல் விரித்ததைக் கற்ற எதிர்கால சிற்பிகளும்
  நுண்ணறிவு பெற்றுயர் தமிழ் பயிலவேண்டும்.
  பதின்முன்று ஆண்டுகளாய் பயணிக்காத் தாயகத்தில்
  பதித்தென் கால் பயணித்து மீளவேண்டும் - அச்சிறப்பைப்
  பார்த்தென் மகளும் பரவசம்தான் கொள்ளவேண்டும்
  பாரிலிதன் சிறப்பெடுத்து வாழ்நாட்டு நண்பருக்கு உரைக்கவேண்டும்
  பதிவுலகில் பவனிவரும் நேரமது கூடவேண்டும்
  பதிவிரண்டு வாரமொன்று வழங்க வேண்டும்
  சதிசெய்யும் நேரமதை சந்தித்து மீள வேண்டும்
  சக்கைபோடு போட்டெ ழுத்துலகில் மிளிர வேண்டும்.
  என் தீர்மானம் விரிவாகக் கூறிவிட்டேன் 
  பிறர் தீர்மானம் காண ஆசை கொண்டேன்
  விரைவாக அழைக்கின்றேன் ரமணிசார் உங்கள்
  இவ்வருடத் தீர்மானம் உரைக்கலாமா?
  அன்புத் தோழி ஸ்ரவாணி ஆர்வமுடன் கேட்கின்றேன்
  அவசரமில்லை ஆனாலும் அவசியமாய் ஓர்பதிவு
  இவ்வருடத் தீர்மானம் எடுத்துரைக்க மாட்டீரோ?
  அம்பலத்தார் அவர்களே அக்கறையுடன் அழைக்கின்றேன்
  அம்பலமாக சுவையுடனே இவ்வருட உங்கள்
  அத்தியாவசியத் தீர்மானம் அம்பலப்படுத்தி – என்
  ஆவலைத் தீருங்கள்.
  என் தீர்மானம் அறிய இவவுக்கென்ன ஆர்வமென
  எடுத்தெறிந்து விடாதீர்கள்.
  எழுத்திலே வடிக்கையிலே மனதினிலே நிலைத்துவிடும்
  நிஜமான தீர்மானங்கள். 

  வெள்ளி, 10 பிப்ரவரி, 2012

  மூன்றெழுத்து


                         
           

  உருவாக உடலில் இடம் தந்த
    அன்னைக்கு மூன்றெழுத்து
  உதிரத்தைப் பாலாகப் பருகிடும் 
    பிள்ளைக்கு மூன்றெழுத்து
  குரலெடுத்து மொழிவடிக்கும் முதல்வார்த்தை
    அம்மா எனும்சொல் மூன்றெழுத்து
  அரவணைத்து வளர்த் தெடுக்கும் 
    அப்பாக்கும் மூன்றெழுத்து
  இணைந்தே நடத்தும் இல்லறத்தின் 
    அன்புக்கும் மூன்றெழுத்து 
  இனிதாக வளர்ந்துவர அறிவூட்டும்
    கல்விக்கும் மூன்றெழுத்து
  தென்றலாய் ஓவியமாய்க் கனிந்த – அந்தக்
    கன்னிக்ககு மூன்றெழுத்து – அவள் 
  கருத்தினிலே இடம் பிடிக்கும்
    காதலுக்கு மூன்றெழுத்து
  கணவனுடன் கச்சிதமாய் வாழ்ந்துவரும் 
    கற்புக்கு மூன்றெழுத்து – அவள்
  கூந்தலிலே காட்சி தரும்
    மலருக்கு மூன்றெழுத்து – அது
  நாசி நுழை இன்பம் தரும்
    மணத்திற்கு மூன்றெழுத்து
  மணம் தரும் மலரணிந்து செல்லும்
    கோயிலுக்கு மூன்றெழுத்து – அங்கு
  மன்றாடி மனமுருகி வேண்டிநிற்கும்
    அருளுக்கு மூன்றெழுத்து
  அருளோடு சிறப்பாய் வாழத் துணையாகும்
    தொழிலுக்கு மூன்றெழுத்து
  தொழிலால் வாழ்வால் சிறப்பால் கிடைக்கும்
    புகழுக்கு மூன்றெழுத்து
  புகழுடம்பு மண்ணில் மாள இறையடிநாடும்
    உயிருக்கு மூன்றெழுத்து
  உயிரற்று தீக்கு இரையாகும்  இந்தக்
    கட்டைக்கு மூன்றெழுத்து
  கட்டையைச் சுமந்து செல்லும் 
    பெட்டிக்கு மூன்றெழுத்து
  அது உருவாக உயிர் தந்த
    மரத்துக்கு மூன்றெழுத்து
  மரப்பெட்டியில் அடக்கமாகிய உயிரடையும்
    நிலத்துக்கு மூன்றெழுத்து
  பிறப்புத் தொடங்கி இறப்பு வரை – மனிதனுடன்
    தொடர்ந்து வரும் மூன்றெழுத்து

                       
                          


  வெள்ளி, 3 பிப்ரவரி, 2012

  பொறுமையின் கனிவு அங்கம் 3                                                   
                    
   ரகு சிறுநீரகம் இரண்டும் பாதிக்குப்பட்ட நிலையில் இருப்பதாக மருத்துவ அறிக்கைகள் உறுதிப்படுத்தின. பழுதடைந்த சிறுநீரகத்தைத் தாங்கிய ரகுவின் உடலுக்கு மேலும் தாக்கம் ஏற்படாவண்ணம் வைத்தியம் துரிதமாக நடாத்தப்பட்டது என்பதுடன் முடிவடைந்த இரண்டாவது அங்கத்தைத் தொட்டுத் தொடர்கிறது இவ் அங்கம்......

                         
                                                                அங்கம் 3


  கவிதா வாழ்வில் இணைந்ததனால், அவள் காலம் ரகுவைப் போட்டு ஆட்டுவதாய் பிறர் உரைக்கும் பழி அனைத்தும் கவிதா சுமந்தாள். தன் நெஞ்சில் சுமக்கும் ரகுவின் பாரத்துடன் இணைத்தே, தாதியாய், மனைவியாய் மட்டுமன்றி நோய்த் தாக்கம் கண்டு அதிகரிக்கும் ரகுவின் ஆத்திரத்திற்கும் அடிபணிந்து வாழும் அடக்கமானவளுமானாள். அதுமட்டுமன்றி இப்படி வடுச் சொற்களைத் தாங்க வேண்டிய பெண்ணாகவும் ஆயினாள். 

                  கவிதா நிலை இவ்வாறு இருக்க இரகுவின் நிலையோ பரிதாபத்திற்குரியதானது. இந்த சமூகம் இருக்கிறதே, வலி கொண்ட மனத்திற்கு ஆறுதல் கூற மனமில்லையானாலும் சூட்டுக்கோல் வைக்க மட்டும் தயங்காது.  கோடையதில் தாகம் கூடிநிற்க தாகம் தீரவெனத் தண்ணீர் உடற்குத் தந்துவிட்டால் கையது, காலது வீக்கம் கண்டு கழுத்தின் மேல் நீரளவு தாண்டி மூச்செடுக்கவொண்ணா நிலைகண்டு திக்குமுக்காடுவான் ரகு. கவிதா நெஞ்சில் சாய்ந்தபடி இரவிரவாய்க் கண்முழிப்பான். 

         வாரியுண்டு வாரிமொண்டு வாரியுண்டு வானிருண்டு 
         பேரிகொண்டு நீர்திரண்டு பெய்ய வேண்டும் - அதுபோல்
         நீரையுண்டு தாகமின்றி நீநிலைக்க வேண்டுமென்றால்
         நீரழிவு நின்னுடலில் நேரவேண்டும்.
                       
                  நான் குறிப்பிட்டது நீரழிவு என்னும் நோயல்ல. சலமும் மலமும் வெளியேறாநிலையில் நீரின் அளவு கூடி நீருடன் எல்லாம் நிலைகலந்து விஷமளவு கூடி வாழ் காலத்தை முடித்துவிடும். ஒருநாள் ரகு மருத்துவமனையைத் தரிசிக்காவிட்டால் காவல் துறையினர் ரகு வீட்டைத் தரிசித்துவிடுவார்கள். தற்கொலை முயற்சி என்று கையுடன் கொண்டு சென்றுவிடுவர். நம்மைவிட நம் உடலில் ஐரோப்பியர் அதிக அக்கறை வைத்திருக்கின்றார்கள். எத்தனை விடயம் நம் உடலில் இருக்குதுடா சாமி.

         பிஞ்சு முகங்கள் இவர்கள் நெஞ்சைக் கவரும். வாஞ்சையுடன் அள்ளிக் கொள்ள சொந்தக் குழந்தை இல்லையெனும் வேதனை நெஞ்சில் புதைந்து கொள்ளும். அவர்கள் உறவினர் குழந்தைகளில் அன்பு காட்டினாலும் சொந்தக் குழந்தை போலாகுமா? உடலும் உள்ளமும் வேதனை கொண்டாலும் எங்கோ தூரத்து வெளிச்சம் இருவர் மனதில் மின்னிக் கொண்டுதான் இருக்கும். வனவாசம், அஞ்ஞாதவாசம் செய்த காவியநாயகர்போல் இந்த 5 வருட காலம் ரகு தம்பதியினர் வாழ்வில் துயர் குடி கொண்டுவிட்ட காலங்கலாயின. இடையில் மனமாற்றங்கள் தர உறவினர், நண்பர்கள் அறிவுரை இவர்கள் அறிவைக் கெடுக்கும். இவை தூறல்கள். இடையிடையே வந்து போய் நின்றுவிடும். 
  '' தம்பி நான் சொல்றதைக் கேளுங்கள். இந்த ஜேர்மன் காரர் இப்படித்தான் போட்டு இழுப்பார்கள். நல்லா பழுதாகினபின் கையை விரித்துவிடுவார்கள், இந்தியாக்குப் போங்கள். அங்கு உங்கள் காசுக்கு மலிவாக சிறுநீரகம் வாங்கலாம். அங்கு இப்போது சீறுநீரக மாற்று ஒப்பரேசன் நன்றாகச் செய்கின்றார்கள்'' இப்படிப் பலருடைய சம்பாஷணை ரகுவைக் குழப்பியது. ஆனால், '' சீச்சீ அங்கு போய் நோய்ப்பட்டிருக்கிற உடலுக்கு வேறு ஏதாவது தொற்று வருத்தங்களை வாங்கிக் கொண்டு வந்துவிடாதீர்கள். இப்படித்தான் ஒருவர் இந்தியாக்குப் போய் சிறுநீரகம் மாற்றி நன்றாகத்தான் இருந்தார். பிறகு ஏதோ தொற்று ஏற்பட்டு இறந்துவிட்டார். அதனால் பொறுத்ததும் பொறுத்தது இன்னும் கொஞ்சநாள்கள் பொறுத்துப் பாருங்கள். நல்லதே நடக்கும்'' இப்படிச்சிலர் வார்த்தைகள். அனைத்தும் மாறிமாறி இருவர் நெஞ்சிலும் அலைமோதிக் கொண்டிருந்தன

               ஒருநாள் திடீரென வைத்தியசாலையில் இருந்து ஒரு அழைப்பு வந்தது. உடனடியாக ரகு வைத்தியசாலையில் சேர்க்கப்பட வேண்டும். கவிதா நெஞ்சிலே பயவுணர்வு ஒட்டிக் கொண்டது. இறுதியாகக் கொடுத்த இரத்தப்பரிசோதனையில் பிழையேதோ இருக்கின்றது என உறுதியாக எண்ணிக் கலங்கிப் போனார்கள்.  அவசரஅவசரமாக மருத்துவமனை அண்மித்தவர்களுக்கு ஒரு நற்செய்தி காத்திருந்தது. இவர்கள் வாழுகின்ற பகுதி மேற்காகக் காணப்பட வடக்குப் பகுதியில் மோட்டார் சைக்கிள்( உதையுந்து ) விபத்தில் இறந்துபோன 21 வயது வாலிபன் ஒருவருடைய சிறுநீரகம் ரகுவின் உடலில் வந்து அமர்ந்து கொள்வதற்கு ஏங்கிக் கொண்டிருக்கின்றது. காலதாமதமானால் தன் உயிரை அதுவும் மாய்த்துக் கொள்ளும் என்னும் செய்தி கேட்டு இருவரும் புளகாங்கிதம் கொண்டனர். 

                   வசந்தம் இரகுவின் உலகில் துளிர்விட்டது. கண் இமைக்கும் முன் ஒரு இன்ப அதிர்ச்சி கிடைத்த நிலையைத்தான் ''கொடுக்கும் கடவுள் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொடுப்பார்'' என்பதோ. இரகுவின் உடலினுள் இணைத்த சிறுநீரகம் சிலமணி நேரத்துக்குள் ரகு உடலைத் தன் உடல் போல் கருதி உடனே தொழிற்படத் தொடங்கிவிட்டது. இதுவும் ஒரு அபூர்வம் இல்லையா? பொதுவாக சிறுநீரகம் பொருத்தப்பட்டால் குருதி பொருந்தினாலும் அச்சிறுநீரகம் சரியாக தொழிற்படுவதற்கே நாளாகும். ஆனால், உள்நுழைந்தேன் உன் உடல் என் உடலே. என் பணி தொடந்தேன். ஏற்றுக் கொள் உன் வசமே, என்று தன் பணியை அவ்வாலிபனின் சிறுநீரகம் ரகு உடலில் தொழிற்படத் தொடங்கிவிட்டது. 
    
                             ஜேர்மனிய உறுப்பு ஒரு தமிழனின் உடலில் தொடர் வாழ்வுக்குச் சொந்தமாகியது. எங்கோ மலையில் பிறந்த சந்தனம் மனிதர்கள் பூசிக்கொள்ள உதவவில்லையா? கடலில் தோன்றிய முத்து மனிதர் அணியும் மாலையாகவில்லையா? வடக்கே பிறந்த சிறுநீரகம் தெற்கே வாழும் ரகு உடலில் வாழமுடியாதா? ஒரு இழப்பு பிறிதொரு வரவுக்கே என்று மனம் பதித்த இரகு தம்பதியினரின் வாழ்வில் தேனருவி பாயத் தொடங்கியது. 10 மாதங்கள் கடக்கும் முன்னே கவிதாvவின் பொறுமையின் கனிவாய் பிஞ்சுக் குழந்தை ஒன்று இருவர் முகங்களையும் பார்த்துச் சிரித்தது. 

              பொறுமை கொண்டார் வாழ்வில் 
               பொக்கிஷம் கிடைத்துவிடும்
               தாய்போல் தாங்கும் நாட்டைச்
               சேயாய்க் காக்க வேண்டும்
               செய்நன்றி கொண்டே வாழ்வை 
               வாழ வந்த நாட்டுக்கு அர்ப்பணிக்க வேண்டும் 
               

        முற்றும்.

               

  LGBTQ

  கட்டுப்பாடு, விட்டுக் கொடுப்பு இவற்றை ஒட்டியே மனித வாழ்க்கை குடும்பம் என்ற அமைப்புடன் ஓடிக்கொண்டிருக்கின்றது. இவற்றை மனதில் கொள்ளாத உணர்வுகள...