மதங்களிலே பழமையானது இந்துமதம் என்பது யாவரும் அறிந்ததே. சைவம், வைணவம், சாக்தம், சைளமாரம், காணாபத்யம் என்பன இந்துமதத்தினுள் அடங்குகின்றன. சிவபெருமானை முழுமுதற்கடவுளாகக் கொண்ட சமயம் சைவசமயம் ஆகும். இச்சிவபெருமான் திருநீலகண்டர் எனவும் சைவசமயத்தவர்களினால் அழைக்கப்படுகின்றார். திருநீலகண்டர் என்னும் நாமத்தினால் சிவபெருமானை அழைத்ததன் உண்மைக் காரணம் என்ன என்பதைப் பராணக்கதை எடுத்துரைக்கின்றது. உலகத்திற்கு உண்மை ஞானத்தை முதலில் எடுத்தியம்பிய சைவசமயத்தின் ஆன்மீகக் கதைகளின் மெய்ப்பொருள் அறியாது, கதையை மட்;டும் உள்வாங்கிக் கருத்தை மட்டும் விட்டுவிட்டதனால், மதம் நின்று நிலைக்கின்றது. இயற்கை மறைபொருளாக மறைந்து கிடக்கின்றது.
புராணக்கதை திருநீலகண்டர் என்னும் நாமத்திற்குக் கொடுக்கும் விளக்கமாவது, தேவர்களும் அசுரர்களும் நீண்ட காலம் வாழவேண்டும் என்று சிவனாரிடம் வேண்டிக் கொண்டனர். அப்போது சிவபெருமானும் பாற்கடலைக் கடைந்து, அதனுள் இருக்கும் அமுதத்தை அருந்தினால், நீண்டகாலம் உயிர்வாழலாம் என்று எடுத்துரைத்தார். அப்போது தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து மேருமலையை மத்தாகவும் வாசுகி என்ற பாம்பைக் கயிறாகவும் கொண்டு பாற்கடலைக் கடைந்தார்கள். அப்போது விஷம் பிரிந்து வெளியேறியது. அவ்விஷத்தை சிவபெருமான் எடுத்து உண்டதாகவும் அவ்விஷமானது சிவபெருமானைக் கொன்றுவிடும் என்று எண்ணிய உமையம்மையார், உடனே சிவபெருமானுடைய கழுத்தைப் பிடித்ததாகவும், அதனால் அவ்விஷமானது சிவபெருமானுடைய கண்டத்தில் தங்கிவிட்டதாகவும் இதனாலேயே சிவனுக்குத் திருநீலகண்டர் என்ற ஒரு பெயர் நிலவுவதாகவும் புராணக்கதை புனையப்பட்டது. அத்துடன் அசுரர்கள் அமுதத்தை உண்டால் நீண்டகாலம் உயிர்வாழ்ந்துவிடுவார்கள். அதனால், உலகுக்குத் தீங்கு ஏற்படுமே என்று கருதிய கிருஷ்ணபரமாத்மாவும் அழகான பெண் வடிவம் தாங்கி அங்கு தோன்ற அசுரர்கள் கவனமெல்லாம் அப்பெண்வடிவில் இலயிக்க, மறுபுறம் சிவபெருமானும் தேவர்களுக்கு அமுதம் முழுவதையும் கொடுத்து முடித்துவிட்டதாகவும் அக்கதை கூறுகின்றது. இதுவே புராணக்கதை கூறும் விளக்கமாகப்படுகின்றது.
ஆனால், அற்புதமான அண்டவெளி இரகசியத்தை சுவையான கதையாக இந்து மதம் கூறியிருக்கின்றது என்றால் அதிவிவேகமுள்ள மக்கள் அக்காலத்தில் வாழ்ந்து மடிந்திருக்கின்றார்கள் என்ற உண்மை புலனாகின்றது. ஆனால் இந்த அண்டவெளி இரகசியத்தின் உண்மை விளக்கத்தை எடுத்துரைக்காது சமயத்தோடு எடுத்துரைத்த காரணத்தினால், விளக்கம் மறைந்து போக மதம் நின்று நிலைக்கிறது. இப்போது விளக்கத்திற்குள் வருகின்றேன். பாற்கடல் என்றால், என்ன? பால் போன்றிருக்கும் கடலல்லவா! அதுவே ஆங்கிலத்தில் Milkyway என்றும் ஜேர்மனிய மொழியில் Milchstaße என்றும் அழைக்கப்படும் அண்டவெளியாகும். தூரத்தில் நின்று பார்க்கும் போது பால் போன்று வெண்மையாகவே காட்சியளிக்குமாம். அதனாலேயே எம்மவரும் பாற்கடல் என்றழைத்தார்கள்.
மேருமலை என்னவென்று அறிய ஆவல் மேன்படுகிறதல்லவா! அதுவே எம்மையெல்லாம் காக்கின்ற கதிரவன். கதிரவனை பக்கமாக நின்று பார்த்தால், மேல் நோக்கி எரியும் மலையாகத்தான் காட்சியளிக்கும். உச்சியில் நின்று பார்த்தால், புள்ளியாகவே, அதாவது எமக்குத் தெரிவது போன்றே காட்சியளிக்கும். மேரு என்பது பொன். மேருமலையெனில் பொன்மலை என்பது புலப்படுகின்றது. எனவே பொன்மலை என்பது எம்மைக் காக்கும் சூரியன் என்னும் உண்மை மிக இலகுவாகப் புரிகிறதல்லவா
அவ்வாறெனில் வாசுகி என்னும் பாம்பு! அதுவே சூரியனைச் சுற்றி வலம் வருகின்ற அந்த 9 கிரகங்களும் ஆகும். கிரகங்கள் ஒன்பதும் தலையாகவும் அவற்றின் நிழல் வால் போன்றும் தூர நின்று பார்ப்பவர்களுக்குத் தோன்றமளிக்குமாம். இதனையே மேருமலையைச் சுற்றிவருகின்ற வாசுகி என்ற பாம்பாக எடுத்துரைத்தனர்.
சூரியன் தோற்றத்திலும் கிரகங்களின் சுழற்சியிலும் தோன்றிய நச்சுவாயுவானது அண்டவெளியிலே கலந்திருக்கின்றது. இது உயிரினங்கள் தோன்ற முடியாத நச்சு நிலையாகும். அது சுழன்று பூமிக்கு வருகின்றது. உலகெங்கும் பரந்திருக்கும் இந்த நச்சுவாயுவினால், உலகமக்கள் அனைவருக்கும் பாதிப்பே. அது எந்த வடிவில் என்று கூறமுடியாது. ஆனால், அழிவு நிச்சயமாகிறது. அந்த அழிவைத் தருகின்ற நஞ்சை கண்டத்தில் தாங்கியவராக சிவபெருமான் உருவகிக்கப்பட்டார். நஞ்சை விழுங்கவும் முடியாது துப்பவும் முடியாது. இரண்டும் ஆபத்தே. ஆனால் உலகெங்கும் நஞ்சு இருப்பது நிச்சயம். அவரவர் உடல்நிலைக்கேற்ப நாம் நஞ்சற்ற காற்றைச் சுவாசித்து வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். வெண்குருதிசிறுதுணிக்கை எம்மைப் பாதுகாக்கின்றது. எனவே கண்டத்தில் நஞ்சை அடக்கிய சிவனும் அறிவின் படைப்பே.
இப்பிரபஞ்சமே சிவனின் வடிவம். அவர் கழுத்தில் தங்கிய விஷமே இப்பிரபஞ்சத்தில் தங்கியுள்ள விஷமாகும். ஒரு உடலில் கழுத்துப்பகுதியில் விஷம் தங்கினால், அவ்விஷத்தை விழுங்கவும் முடியாது, துப்பவும் முடியாது. துப்பினால் பிறருக்குக் கேடு. விழுங்கினால், விழுங்கியவருக்குக் கேடு. இதனாலேயே திருநீலகண்டர் வடிவில் கழுத்தில்(கண்டம்) விஷம் தங்கியதாக கதை புனையப்பட்டுள்ளது.
இங்கு அசுர தேவர்களை தோற்றம் தான் யாது! என்ற ஆராய்ச்சியில் இறங்கினால், சுரம் அசுரம் என்னும் இரண்டு பதங்களையும் எடுத்து நோக்கினால், . சுரம் என்றால் தேவர்கள் அசுரம் என்றால், அசுரர்கள். இதன் விளக்கம் தான் யாது! நியூட்டனின் விதி தரும் விளக்கமே இதன் விளக்கமாகும். எதற்கும் ஒரு செயலுக்கும் எதிர்ச்செயல் இருக்கும். என்பதாகும். தீமை இருந்தால், நன்மை இருக்கும். மகிழ்ச்சி இருந்தால், துன்பம் இருக்கும். எனவே தேவர்கள் இருந்தால் அசுரர்கள் இருக்க வேண்டும் அல்லவா! உலகில் இந்த இரண்டுவகை மனிதர்கள் வாழுகின்றார்கள்: அவர்களே இந்த அசுர தேவர்கள் ஆவார்கள்.
எனவே அழகான அற்புதமான இயற்கை நிகழ்வுகள், அக்கால அறிவாளிகளின் தவறான வெளிப்படுத்தலால் உலகிலே ஆன்மீகம் புகுந்தது. பகுத்தறிவு அழிந்தது. திருநீலகண்டர் வடிவம் தெய்வமானது. இயற்கை நிகழ்வு தெரியாமல் போனது. இவ்வாறு பல இன்னும் இருக்கிறன தொடருவேன். பொறுத்திருங்கள்.