• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    ஞாயிறு, 6 நவம்பர், 2011

    7 ஆம் அறிவு திரைப்பட விமர்சனம்.




    காலம் கடந்த பதிவானாலும் கட்டாயம் பதியவேண்டிய பதிவாகையினால், கரங்கள் வடிக்கின்றன. போதிமாதவர் ஒரு தமிழன். தமிழர்களின் ஆதித் திறமை அகிலம் புரியவேண்டும். இதை உலகுக்கு உணர்த்த வேண்டும் என்னும் உணர்வுடன் ஏ.ஆர். முருகதாஸ் அவர்களினால், கதை புனையப்பட்டு இயக்கப்பட்டு உழைப்பெல்லாம் கொட்டி சூர்யாவின் முத்திரை பதிக்கப்பட்ட நடிப்பால், வெளிவந்த திரைப்படமே 7ஆம் அறிவு. தமிழின் மேல் கொண்டுள்ள பற்று இத்திரைப்படத்தில் நன்றாகப் புலப்படுகின்றது. முதலில் நிறைவைக் கவனித்து முடிவில் குறையையும் கண்காணிப்போம். இது விமர்சகர் கடமையல்லவா? 
                 

                                      ஒரு திரைப்படம் எடுக்கவேண்டுமானால், அதில் காதலும் வீரமும் காஸ்யமும் கலந்து வெளிவருவது தமிழ் திரைப்படக்கலாசாரம். அதன்படியே பல எண்ணங்களை மனதுள் அடக்கினாலும் அதில் காதலையும் புகுத்த வேண்டும் அதில் நாட்டமுள்ள ரசிகர்களைத் திருப்திப்படுத்த வேண்டும் என்னும் எண்ணத்தில் காதல் புகுத்தப்பட்டுள்ளது. காஸ்யம் இணைந்துள்ளது. போதிதர்மர் பல்லவர் காலத்தில் வாழ்ந்தவர் இவர் மருத்துவக்கலை, தற்பாதுகாப்புக்கலை, மனவசியப்படுத்தும் கலை (Hypnotism ) போன்ற கலைகளில் வல்லவர். சூர்யா இப்பாத்திரத்தில் புகுந்து அவராகவே மாறிக் காட்சி தோறும் அற்புதமாக நடித்திருக்கின்றார். தான் பெறும் சம்பளத்திற்கு தன் உழைப்பைக் கொட்டியிருக்கின்றார். சீனாவில் ஏற்பட்ட கொள்ளைநோயை நீக்குவதற்காக சீனாவிற்கு போதிமாதவர் அனுப்பப்படுகின்றார். அந்நோய் அவரால் நீக்கப்பட்டு அந்நாட்டு மக்களினால் கடவுளாகப் போற்றப்படுகின்றார். இவரிடம் இருக்கும் திறமைகளை சீன மக்களுக்குக் கற்றுத்தருகின்றார். இவர் உடலை தமது மண்ணில் புதைத்தால் தம் நாட்டிற்கு நன்மை கிடைக்கும் என்று நம்பிய சீன இனத்தவர்கள் நஞ்சு கொடுத்து அவரைக் கொல்லுகின்றனர். இது தெரிந்திருந்தும் அந்நஞ்சை அருந்தி போதிதர்மர் இறக்கின்றார். நஞ்சென்று அறிந்தும் போதிமாதவர் அதை அருந்தி இறப்பது நம்பமுடியாத சம்பவமாகக் காணப்படுகின்றது. ஆனாலும் கதை புனையப்பட்டதா? உண்மையாக நடந்ததா? என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது. இவ்வளவும் உண்மைச்சம்பவமாக இத்திரைப்படத்தில் சொல்லப்படுகின்றது. இனிவரும் கதை கதாசிரியரின் கற்பனையில் எழுந்த உயரியநோக்கம். வரவேற்கப்பட வேண்டியது. இக்காலத்திற்குத் தேவையானது. பாமரமக்களுக்குச் சில விடயங்களை அறியச் செய்வதற்கு திரைப்படத்துறையே சிறந்த துறை அதைப்பயன்படுத்தி ஏ.ஆர் முருகதாஸ் தன் பணியைச் செய்திருக்கின்றார். 
                   

                              சிலவருடங்களின் பின் இப்படி ஒருமனிதன் வாழ்ந்தார். அவர் திறமைகளை அவர் மரபணுக்களைக் கொண்ட ஒருவரிடம் மீண்டும் கொண்டுவர முடியும் என இந்தியநாட்டு இளம் விஞ்ஞானியான ஸ்ருதி பல இடையூறுகளுக்கு மத்தியில் முயற்சி செய்கின்றார். மீண்டும் இத்திறமைகளைக் கொண்ட இளைஞனாக சூர்யாவே உருவெடுக்கின்றார். இச்சமயம் சீனநாட்டில் பல்லவகாலத்தில் தோன்றிய அதேநோயை இந்தியாவில்; வரவழைப்பதற்கு சீனநாட்டவர் ஒருவர் இந்தியாநோக்கி அனுப்பப்படுகின்றார். அவராக நடிப்பவர் யோனிரைன்கியூ (Johnny rynk) என்கிற வியட்நாமிய ஸ்ரன்ட் நடிகர். அற்புதமான நடிப்பு. இவர் ஒருநாய்க்கு இந்நோயை ஊசிமருந்தின் மூலம் வரவழைக்கின்றார். இந்நோய் இந்தியமண்ணில் பரவுகின்றது. தன்னுடைய மனவசியப்படுத்தும் கலை மூலம் பலரை அழித்து தன் முயற்சில் முன்னேறுகின்றார். ஆனால், பல முயற்சிகளின் மூலம் இளம் விஞ்ஞானியான ஸ்ருதி சூர்யாவில் காணப்படும் மரபணுவலுவை அதிகரிக்கச் செய்து சீனநாட்டவரை அழிக்கின்றார். இதுவே கதை.
                     
         
           காட்சிகள் பிரமாண்டமாக படமாக்கப்பட்டுள்ளது. புகைப்படக்கலைஞனுக்கு வெற்றி கிட்டியுள்து. சூர்யாவை ஆரம்பத்தில் அறிமுகப்படுத்துகின்ற விதம் வரவேற்கப்படுகின்றது. வியட்நாமிய கலைஞனின் சண்டைக்காட்சிகள் அதிசயிக்கும் வண்ணம் மிக அற்புதமாகப் படமாக்கப்பட்டிருக்கின்றது. சூர்யா மிகத்திறமையாகச் சண்டைக்காட்சிகளில் தோன்றியுள்ளார். ஸ்ருதி மரபணுக்கள் பற்றிய விளக்கத்தை பாமரமக்களும் அறியும் வண்ணம் சூர்யாவிற்கு மெதுவாக மென்மையாக விளக்கும் விதம் சிறப்பாக இருக்கின்றது. இது பற்றிய அறிவை மக்களுக்கு விளங்கச் செய்யும் பணியைக் கதாசிரியர் அழகாகச் செய்திருக்கின்றார். பார்வை மூலம் மக்களைத் தன்வயப்படுத்தும் கலையை மிக அதிகமாக எடுத்துக்காட்டியிருக்கின்றார். இக்காட்சி அதிகரித்து விட்டதோ என எண்ணத் தோன்றுகின்றது. இவ்வசியம் பற்றிய பல நிகழ்ச்சிகளை ஜேர்மனிய தொலைக்காட்சிகளில் பார்த்திருக்கின்றேன். இப்படி நடக்குமா எனப் பலரும் சந்தேகப்பட்டுப் பேசலாம். ஆனால், இது சாத்தியம் என்பது எனது ஆழ்ந்த தேடலின் மூலம் கிடைத்தது. ஆனால், இவ்வாறான திறமைகள் கெட்டவர்கள் கைகளில் அகப்படக்கூடாது என்பதே இத்திரைப்படம் எடுத்துக்காட்டும் விளக்கமாகப்படுகின்றது. இத்திரைப்படம் அலுப்பபைத் தரவில்லை ஆர்வத்தையே தூண்டியுள்ளது. இயக்குனருக்கு ஒரு சமாஷ் போடலாம். 
                          
                                                இத்திரைப்படம் புலம்பெயர்ந்தநாடுகளில் வாழுகின்ற தமிழர்கள் இதயங்களில் இடம்பிடிக்கவேண்டும். நல்ல வசூலை அள்ளிக் கொட்டவேண்டும் என்ற எண்ணத்தில் சில இடங்களில் கதைவசனங்கள் கையாளப்பட்டிருப்பது. பாமரமக்களும் புரியும் வண்ணம் இருக்கின்றது. இனவெறுப்புக்களை ஏற்படுத்துவதில் தலையாய பொறுப்பு தொடர்பு சாதனங்களுக்கு உண்டு. இதில் திரைப்படத்துறை முக்கிய பங்குவகிக்கின்றது. பிறமக்களைப் பற்றிய பொய்யான தகவல்களை ஓயாமல் பரப்புவது, எழுதுவது, பேசுவது, விளம்பரப்படுத்துவது, போன்றவற்றின் மூலம் ஒரு இனத்தைப்பற்றி நாட்டைப்பற்றிய தப்பான எண்ணங்களை ஏனைய மக்களிடம் பரப்ப முடியும். ஐப்பானியர், Nஐர்மனியர்களைப் பற்றியும் ஆங்கிலேயர், அமெரிக்கர்களைப் பற்றியும் செய்த விளம்பரச் செய்திகள் செய்த விபரீதங்கள் யாவரும் அறிந்ததே. Nஐர்மனிய நாசிகாரரான கிட்லரின் விளம்பர அமைச்சரும் இலக்கியத்தில் டாக்டர் பட்டம் பெற்றவருமான கோயபல்சைக் கொண்டு யூதமக்களைப் பற்றியக் கொடுமையான பொய்ப்பிரசாரங்கள் செய்து இனவெறுப்பை வளர்த்தனர். ஒரு இன மக்களின் அறிவையும் பண்பையும் சிறு வாய்ப்பாட்டில் அடைத்துவிடுவதன் மூலம் மெய்மையைக் கண்டறியும் நேரமும் முயற்சியும் குறைக்கப்படுகின்றது. வடஇந்தியர் சீக்கியரை அறியாத அப்பாவிகள் சிரிப்புக்குள்ளானவர்கள் என்றும் சீனரைப் பாம்பு தின்னிகள் என்றும் இத்தாலியர் பாட்டுப்பாடிச் சோம்பித் திரிபவர் என்றும் ஸ்கொட்லாந்து கருமிகள் என்றும் கருதப்படுவது இவ்வாறு பரப்பப்பட்ட செய்திகளாலேயே ஆகும். சீனநாட்டவர்களுடன் தற்போதுள்ள பகை உணர்வை மேலும் தூண்டும் வண்ணம் இத்திரைப்படம் தற்பொழுது வெளிவந்திருப்பது. இவ்வுணர்வை மேலும் மேலும் தூண்டும் வண்ணமேயுள்ளது. 


                         ஐரோப்பிய நாடுகளில் பிறந்து வளருகின்ற பிள்ளைகளே சரளமாகத் தமிழ் பேசுகின்ற போது தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த பிரபல தமிழ்நடிகர் கமலகாசனுடைய மகள் தமிழைப் பேசுகின்ற பாணி விசித்திரமாக இருக்கின்றது. 
                         

                             வழமையாக அனைத்துப் படங்களிலும் கதாநாயகன் வில்லனிடம் இறக்கும் வண்ணம் அடிவாங்குவார். இறுதியில் திடீரென வீரம் எழுந்து வில்லனை வெளுத்து வாங்குவார். இது அனைத்துப் படங்களிலும் பார்த்ததுப் பார்த்துப் புளித்துப் போன விடயம். இதுவே இங்கேயும் கையாளப்பட்டிருப்பது விரும்பத்தக்கதாக இல்லை. இலங்கைத் தமிழர்களுக்கு நடந்த கொடுமையை திரைப்படம் எடுத்துப் பணம் உழைப்பதற்கு இன்னும் எத்தனை இயக்குனர்கள் முனைந்திருக்கின்றார்கள் என்று புரியவில்லை. தமிழர்களின் மேல் ஏற்படும் பரிதாப உணர்வை இத்திரைப்படத்தில் எடுத்துப் பேசுவது. வடிவேல் பாணியில் ஒரு சின்னத்தனமாகப்படுகின்றது. இவர்கள் எல்லாம் முனைந்து நின்று நடிகர்கள், இயக்குனர்கள் போன்றோர் இத்திரைப்படத்தில் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு சிறுதொகையாவது அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கினால், இத்திரைப்படம் எடுத்த முயற்சியில் ஒரு நல்ல காரியம் பண்ணிய திருப்தி ஏற்படும். பல இழப்புகள் கண்டு தற்பொழுது அமைதியாக வாழுகின்ற இலங்கைத் தமிழர்களை சில காலம் விட்டுவைக்கலாம் என்று நினைக்கின்றேன். முதலில் சேர,சோழ,பாண்டியர் வாழ்ந்து சங்கத்தமிழ் வளர்த்து வீரம் பொருந்திய மண்ணாகக் கருதப்படும் இந்தியநாட்டில் தனித்தமிழ்நாடு பெறுவோம். அங்கிருந்து இலங்கை நோக்கிப் பின் புறப்படுவோம். புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் எல்லோரும் மடையர்கள் அல்ல. மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் எத்தனையோ கண்ணீர்காவியங்கள் புலம்பெயர்வாழ் தமிழர்களிடம் காணப்படுகின்றன. யாராவது இயக்குனர்கள் தமிழர்களே தமிழர்களை அழித்த வீரசம்பவங்களையும் படமாக்கினால், இன்னும் சிறப்பாக இருக்கும் அப்போதும் சில உண்மைகள் விழித்துக்கொள்ளும். 
                  

                                     7 ஆம் அறிவு ரசிக்கக் கூடியது. பழைய உண்மைச் சம்பவம் ஒன்றை வெளிக்கொண்டுவருகின்றது. மரபணு, வசியப்படுத்தல் பற்றிய தகவல்களை மக்களுக்கு வழங்குகின்றது என்னும் மட்டில் சிறப்புப் பெறுகின்றது. நல்லதையே எடுத்துக் கொள்வோம். விரோதங்களைக் களைந்தெறிந்தோம். பகுத்தறிவைப் பெருக்குவோம். பண்பட்ட சமுதாயத்தை வெளிக்கொண்டு வருவோம். 
                            

                   




    8 கருத்துகள்:

    1. //7 ஆம் அறிவு ரசிக்கக் கூடியது. பழைய உண்மைச் சம்பவம் ஒன்றை வெளிக்கொண்டுவருகின்றது. மரபணு, வசியப்படுத்தல் பற்றிய தகவல்களை மக்களுக்கு வழங்குகின்றது என்னும் மட்டில் சிறப்புப் பெறுகின்றது. நல்லதையே எடுத்துக் கொள்வோம். விரோதங்களைக் களைந்தெறிந்தோம். பகுத்தறிவைப் பெருக்குவோம். பண்பட்ட சமுதாயத்தை வெளிக்கொண்டு வருவோம். //

      படத்தின் கடைசியில் சூர்யா அவர்களின் வசனம் மிகவும் பிடித்திருந்த்து சகோ..

      // ஐரோப்பிய நாடுகளில் பிறந்து வளருகின்ற பிள்ளைகளே சரளமாகத் தமிழ் பேசுகின்ற போது தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த பிரபல தமிழ்நடிகர் கமலகாசனுடைய மகள் தமிழைப் பேசுகின்ற பாணி விசித்திரமாக இருக்கின்றது. //

      எனக்கும் இது நெருடலாகவே இருந்தது..

      பதிலளிநீக்கு
    2. குறை நிறைகளை மிகச் சரியாக சுட்டிக்காட்டி
      சம நிலை நோக்கோடு எழுதப்பட்ட விமர்சனம்
      மிக மிக அருமை அதிகமாக எதிர்ப்பார்ர்பைத்
      தூண்டும்படியாக இங்கே அதிக விளம்பரம் செய்ததுதான்
      பாதிப் பிரச்சனை.எதிர்பார்ப்பில்லாமல் போயிருந்தால்
      ஒருவேளை படம் திருப்தி உண்டாக்கி இருக்கலாம்
      எனப்து என் எண்ணம்
      அருமையான விமர்சனப் பதிவைத் தந்தமைக்கு வாழ்த்துக்கள்

      பதிலளிநீக்கு
    3. சம்பத் குமார் சொன்னது//

      ஆம் நிச்சயமாக. என்னுடைய அறிந்ததும் புரிந்ததும் தலைப்பு கட்டுரைகளைப் பாருங்கள். நானும் இவற்றைத்தான்எழுதியிருக்கின்றேன். அதனால் எனக்கும் அது பிடித்திருந்தது. பிண்ணுட்டத்துக்கு மிக்க நன்றி

      பதிலளிநீக்கு
    4. இந்த படம் இன்னும் பார்க்கவில்லை .விமரிசனம் நன்று.அருமையான விமர்சனப் பதிவைத் தந்தமைக்கு வாழ்த்துக்கள்

      பதிலளிநீக்கு
    5. சொல்லவந்த சரித்திரத்தகவல்கள் சரியோ தப்போ என்ற ஆராய்சிகளிற்கு அப்பால், அனைத்துத்தரப்பு தமிழ்மக்களினதும் உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டுப் பணம் பணம்பண்ணும் வித்தையில் முருகதாஸ் கைதேர்ந்தவர் என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது உண்மை. நல்லதொரு பதிவு இட்டிருக்கிறீர்கள்.

      பதிலளிநீக்கு
    6. வெரிகுட்.. பிளஸ் பாயிண்ட்ஸை சொல்லி பாசிட்டிவ் போஸ்ட்

      பதிலளிநீக்கு
    7. சகோ ! மிக அருமையா விமர்சனம் செய்திருக்கீங்க... நீங்கள் எதிர்பார்ப்பது போல் கண்டிப்பாக இயக்குனர்கள் - ........ வரலாற்று படங்கள் எடுபார்கள். காத்திருப்போம்.

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    ஜெர்மனியில் தமிழர் பண்பாட்டு மாற்றம்

      ஆங்கிலேயர் , போத்துக்கேயர்கள், ஒல்லாந்தர்  தமது ஆட்சிக் காலத்தின் போது எமது நாடுகளில் தம்முடைய பண்பாட்டைக் கட்டாயமாகத் திணித்த நிலையிலிர...