ஆடற்கலைமாமணி திருமதி.றெஜினி சத்தியகுமார் அவர்களின் ஆடற்கலாலயம் கண்ட 30 ஆவது ஆண்டுவிழா
மனிதர்களிடம்தான் வேற்றுமைகளும் பொறாமைகளும் சொந்தம் கொண்டாடும். ஆனால், அம்மனிதர்கள் கண்டு பிடித்த கலைகளுக்குள் பேதமில்லை, பொறாமையில்லை. கலைகளிடையே ஒற்றுமை மட்டுமே இருக்கின்றது. இதனை டுயிஸ்பேர்க் நகரில் நடைபெற்ற ஆடற்கலாலயத்தின் 30 ஆவது ஆண்டுவிழா நிகழ்வுகள் நிரூபித்துக் காட்டியது. இளையோர் கைகளில் பொறுப்புகளைக் கொடுங்கள் அவர்கள் இமயத்தைத் தொட்டுக்காட்டுவார்கள் என்பதை திரு.திருமதி சத்தியகுமாரனனின் பிள்ளைகளான ச.நிமலனும், திருமதி த.தீபனா அவர்களும் நிரூபித்துக் காட்டினார்கள்.
21.12.2020 அன்று பிற்பகல் 14.30 மணியளவில் ஆரம்பித்த நிகழ்வுகள் 23.30 வரை தொடர்ந்தது. நேரம் எம்மைக் கட்டிப்போட்டதா? இல்லை கலை வடிவங்கள் எம்மைக் கட்டிப் போட்டதா? எம்மை மறந்து நடன உருப்படிகளுக்குள் ஆழ்ந்து போனோம். 4 வயதுப் பிள்ளை தொடக்கம் எம்மைக் கலைகளுக்குள் இழுத்து வைத்துக் கொண்டிருந்தனர்.
ஒரு கலை ஆசிரியர் தம்முடைய இத்தனை மாணவர்களை ஆசிரிய அந்தஸ்துக்கு உயர்த்திப் பார்க்கும் பெருமையை திருமதி. றெஜினா சத்தியமூர்த்தி பெற்றிருப்பது பாராட்டத்தக்க விடயமே. ச.நிமலன், த.தீபனா, சு.தர்ஷிகா ஆகியோரின் நட்டுவாங்கத்திலும் த.லகீபன் அவர்களின் மிருதங்கத்திலும், செ.நிரூஜன், பா.சுபோஷினி, கா.தாரணி ஆகியோரின் பாட்டிலும், பா.பிரசாந்த் அவர்களின் வயலின் இசையிலும், சு.வர்ணன் அவர்களின் புல்லாங்குழல் இசையிலும் நடனங்கள் கலையின் உச்சத்தைத் தொட்டன. கலைகள் தனித்தனிப் படைப்பானாலும் அவை ஒன்றாக இணையும் போதுதான் அற்புதம் புலப்படும் அதற்கமைய அனைத்துக் கலைஞர்களும் இவ்விழாவின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்கள் என்பது உண்மையே.
பரதக்கலையின் ஒவ்வொரு உருப்படிகளும் ஒன்றையொன்று விஞ்சுவதாக அமைந்திருந்தன. ஒவ்வொரு நடனமணிகளையும் 4 வயது தொடக்கம் அணுவணுவாகப் பார்த்தேன். எவரின் நடனத்திலும் என்னால் குறை கண்டுபிடிக்க முடியவில்லை. பரதக்கலையின் பல வடிவம் இந்து மதத்தின் புராணக் கதைகளை உலகுக்குக் காட்டுவதாக அமைந்திருக்கும். இதனை ஒவ்வொரு நடனத்திலும் உணரமுடிந்தது.
தாய்மாரும் அவர்களுடைய பிள்ளைகளும் இணைந்து சின்னஞ் சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே என்னும் பாரதியார் பாடலுக்கு ஆடிய நடனம் மனதை விட்டு அகலாது இருக்கின்றது. பார்க்கும் போது கண்களில் இருந்து கண்ணீர் வந்துவிட்டது. இன்னும் பரதக்கலை ஜெர்மானிய மண்ணில் 50 வருடம் கடந்து வாழும் என்பது நிச்சயம்.
ச.நிமலனின் ஹனுமான் நடனம் பார்க்கும் போது நான் நிமலனைக் காணவில்லை. ஹனுமானையும், ஒரு திறமையையும், ஒரு ஊக்கத்தையுமே மேடையில் கண்டு ரசித்தேன். நிமலனுடைய பல நடனங்களைப் பார்த்திருக்கின்றேன். அவருடைய உற்சாகமும், உழைப்பும், ஊக்கமும், திறமையும் ஒவ்வொரு நடனத்திலும் தெரியும். அவரைப் பாராட்டாமல் என் விரல்கள் நகர மறுக்கின்றது. அவரை மனதிலே பதித்தே இந்த நிகழ்ச்சிக்கு நான் சங்கமமாகியிருந்தேன். கலைஞனை கடவுளின் வடிவமாகக் கண்ட வெற்றிமணி, சிவத்தமிழ் ஆசிரியர் கலாநிதி.மு.க.சு,சிவகுமாரன் அவர்கள் 2020 சிவத்தமிழ் இதழை சிவனாகத் தன்னுடைய கண்களுக்குத் தெரிந்த ச.நிமலன் அவர்களுக்கு முதல் பிரதியைக் கொடுத்து வெளியிட்டு வைத்தார். நிமலனுடைய சிவதாண்டவத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலில் சென்றிருந்தேன். அந்த நடனம் இடம்பெறாத காரணத்தால் என் ஆசை நிறைவேறவில்லை.
பாம்பு நடனத்தைப் பார்த்த போது நான் இலங்கையில் ஆடிய பாம்பு நடனத்தை ஒப்பிட்டுப் பார்த்தேன். எத்தனை கலை நுணுக்கங்கள் இப்போது இணைந்துள்ளன. இதனைப் பழுகுபவர்கள் எந்தவித எலும்பு நோய்களுக்கும் உட்பட முடியாது. புதிய உத்திகளைக் கையாண்டு அக்ரோபாட் வடிவத்தையும் இணைத்து அற்புதமாக நிமலன் பழக்கியிருந்தார். நடனம் பழகுபவர்கள் யோகா பழகத் தேவையில்லை என்றுதான் பொதுவாகவே நான் நினைப்பேன். உச்சி தொடக்கம் உள்ளங்கால்கள் வரை ஒவ்வொரு அங்கங்களுக்கும் அசைவைக் கொடுக்கும் ஒரு நடனமே பரதக்கலை என்பதை நாம் அறிவோம். பரத முனிவரே சிவனிடமிருந்து பரத்தைப் பெற்று உலகத்திற்கு அறிமுகப்படுத்தினார் என்பது அனைவரும் அறிந்ததே. அப்படி இருந்தும் நிமலனைத் தவிர எந்த ஒரு ஆண்மகனும் அரங்கத்திற்கு நடனம் ஆடவில்லை என்பது வருதத்திற்குரிய விடயமாகவே பட்டது.
“பாட்டும் நானே பாவமும் நானே பாடும் உனை நான் பாட வைத்தேனே” என்னும் பாடலைப் பாடி சபையோரை தன் இசைக்குள் கட்டிப் போட்ட செ.நிருஜன் பாராட்டுக்குரியவர். இந்தப் பாடலுக்கு இணையாக எந்தப் பாடலும் இதுவரை சினிமாவில் வரவில்லை என்று தான் நான் நினைக்கின்றேன். “சங்கீத ஜாதிமுல்லை காணவில்லை கண்கள் வந்தும் பார்வையில்லை” என்னும் பாடல் இதற்கு சற்று நிகராக அமைந்திருந்தது. ஆனால், இந்த அளவிற்கு மிருதங்க இசையைக் கூட்டுச் சேர்த்து மனதை எனக்குக் கொள்ளை கொள்ள வைக்கவில்லை என்று தான் கருதுகின்றேன். இதேபோல் கனடாவிலிருந்து வருகை தந்திருந்த கா.தாரணி பாடிய “பழம் நீ அப்பா. ஞானப் பழம் நீ அப்பா” என்னும் கே.பி.சுந்தராம்பாள் பாடல் சபையோரை மெய் மறக்கச் செய்தது. புலம்பெயர் நாடுகளின் தமிழ் கலை வடிவங்கள் எதிர்காலத்திலும் உச்சத்தைத் தொடும் என்பதற்கு இந்த நிகழ்வை விட எடுத்துக் காட்டுக்கள் தேவையில்லை.
இந்நிகழ்வுக்கு இலங்கையிலிருந்து பிரதம விருந்தினர் வந்திருந்தார். ஆச்சரியப்பட்டார். இந்தியாவிலிருந்து சிறப்பு விருந்தினர் ருக்மணி. விஜயகுமார் அவர்கள் வந்திருந்தார். ஆச்சரியப்பட்டார். புலம்பெயர் தேசத்தில் இப்படி, இவ்வளவு பெரிய மாணவக் கூட்டத்துடன் ஒரு ஆண்டுவிழா கண்டது அவர்கள் ஆச்சரியப்படும் விடயமே என்பது திண்ணம்.
இசைக்கலைஞர்களை இணைத்து எம்மை இன்பத்தில் ஆழ்த்திய ஆடற்கலாலய ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், அனுசரணையாளர்கள் அனைவருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். முழுவதுமாக ஒரு இன்பமான மாலைப் பொழுதாக இந்த நாள் அமைந்திருந்தது.
நிகழ்வை நேரில் பார்த்தது போன்று தொகுப்பு அமைந்திருக்கிறது.
பதிலளிநீக்குமிக்க நன்றி. கைத்தொலைபேசியில் எடுத்தபடியால் படங்கள் அவ்வளவாகத் தெளிவில்லை.
நீக்குஅழகாக விவரித்தமைக்கு நன்றி சகோ.
பதிலளிநீக்குஎனது அனுபவத்தில் சொந்த நாட்டைவிட வாழப்போன நாடுகளில்தான் தமிழ் வாழ்ந்து கொண்டு இருக்கிறது.
நிச்சயமாக. நாம் வாழும் வரை எம்மால் இயன்ற பங்களிப்புக்களைச் செய்வோம். தமிழின் பெருமையை உலகம் அறியும் முயற்சியில்தான் ஈடுபட்டுள்ளோம்
நீக்குபடங்களுடன் மிக அருமையான விவரணை. ஜெர்மனியில் உங்கள் கூட அமர்ந்து கண்டு களித்ததுபோல் இருந்தது :)
பதிலளிநீக்குஉங்களுக்கு ஜெர்மனியில் நிகழ்வுகள் பார்த்த அனுபவம் உண்டு அல்லவா?
நீக்குசின்னஞ்சிறுகிளியே மிக மிக அருமை <3
பதிலளிநீக்குநன்றி
நீக்குஅருமை... அருமை...
பதிலளிநீக்குபின்னூட்டத்திற்கு மிக்க நன்றி சகோ
நீக்கு