தர்மம் தலைகாக்கும் என்னும் பழமொழியை யாம் அனைவரும் அறிந்திருக்கின்றோம். அதுபோலவே சத்தியமும் ஒரு சந்தர்ப்பத்தில் வந்து கைகொடுக்கும் என்பது நிச்சயமான உண்மை. ''உள்ளத்தில் உண்மை ஒளி உண்டானால், வாக்கினில் ஒளி உண்டாகும்'' என்பார் பாரதி. உள்ளத்தில் உள்ளது உண்மை என்னும் சத்தியம். வாய்வழி வருவது வாய்மை என்பதாகும். உள்ளத்தால் ஒன்றை நினைத்துவிட்டால், வாய்வழி அந்த உண்மை வாய்மையாக வெளிப்படும். உண்மை உள்ளத்தில் இல்லையென்றால், வாய்மை அந்தப் பொய்யை வெளிப்படுத்திவிடும். அப்படியென்றால், உள்ளம் சொல்வதைத்தான் உடல் செயல்படுத்துவதாக இருக்க வேண்டும். ஆனால், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் மனிதர்களே அதிகமானவர்களாக இருக்கின்றார்கள். எனவே வாய்வழி வருவது எல்லாம் உண்மையாக இருக்கும் என்று அர்த்தமில்லை. எனவே வாய்மை உண்மையென்ற பொருள்படாது. எனவே எமக்கு நாம் உண்மையாக இருக்க வேண்டும். அப்போதுதான் வாக்கிலும் உண்மை ஒளி உண்டாகும்.
பொய்மையும் வாய்மையிடத்துப் புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின் என வள்ளுவர் கூறுகின்ற போது நன்மையைத் தரும் என்றால் பொய் கூட உண்மைக்குச் சமமானது என்பார்கள். இங்கு கூட உண்மைக்கு அப்பால் வாய்மை என்ற வார்த்தையையே வள்ளுவர் பயன்படுத்தியுள்ளார். இங்கு உள்ளத்தில் உண்மை இருக்க வாய்வழி வாய்மையாகப் பொய் வெளிப்படுகின்றது. பிறருக்கு நன்மை கிடைப்பதற்காக என்றே இதைக் கருதவேண்டியுள்ளது. ஆனால், அங்கு நன்மை கிடைப்பதற்காக மறைக்கப்பட்ட உண்மைகூட ஒரு இடத்தில் வெளிப்பட்டு விடும் என்பதே சத்தியம். அதனால், நம்பிக்கை உள்ளவர்களிடமும், நல்ல நண்பர்களிடமும், பெற்றோரிடமும் உண்மையை மறைத்தல் கூடாது. அது கொலைக்குச் சமமானதாகும்.
சரித்திரத்தில் இடம் பிடிப்பதற்கு மனமறிந்து உண்மைகளை மறைப்பதற்குப் பலர் முற்படுகின்றார்கள். உலோபியைப் போல உள்ளம் நிறைந்த உண்மையும் ஓலைக்குடிசையில் வாழ்கிறது என்று வில்லியம் ஷேக்ஸ்பியர் சொல்லியிருக்கின்றார். ஆனால் தோண்டத் தோண்டப் புலப்படும் அகழ்வாராய்ச்சிகள் போல என்றோ ஒருநாள் உண்மை வெளிவரும் என்னும் சத்தியத்தில் நாம் நம்பிக்கை வைக்க வேண்டும். பாவத்திற்குப் பல காரணங்கள் உண்டு. ஆனால், அவற்றுக்கெல்லாம் பொருத்தமான கருவியாகப் படுவது பொய்யே ஆகும். பாவமான காரியங்களைச் செய்துவிட்டு அவற்றை மறைப்பதற்குப் பொய் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது. எனவே உண்மைக்கு மாறானது பொய் என்றால், பொய் சொல்பவர்கள் பாவம் செய்பவர்களாகவே கருதப்படுகின்றார்கள். உண்மை வெளிப்படும் பட்சத்தில் மானம், மரியாதை என்னும் பண்புகளை இழந்து தலைகுனிந்து நிற்கவேண்டிய நிலைமை பொய் கூறியவர்களுக்கு ஏற்படுகின்றது.
ஆயிரம் பொய்யைச் சொல்லி ஒரு கல்யாணம் நடத்தலாம் என்பார்கள். ஆனால், அந்தப் பொய்கள் வெளிப்படும் பட்சத்தில் அந்தக் குடும்பமே சிதைந்து போகும். இதனால், உண்மையை மறைத்தமைக்கு எந்தவித பயனுமில்லை. குடிகாரன் குடிக்கமாட்டேன் என்று கூறுகின்ற சத்தியமானது அடுத்த விநாடியே மறைந்து விடுகின்றது என்றால் உண்மையன்றி அக்குடிகாரன் கூறியது வாய்வழி வந்த வார்த்தைகளே ஆகும். அது நில்லாது ஓடிவிடும்.
சில உண்மைகள் கூட காலத்துக்குக் காலம் மாறக்கூடியது. சூரியன் பூமியை வலம் வருகின்றது என்று அன்று விஞ்ஞானிகள் கூறிய உண்மை இன்று பொய்யாகப்பட்டுள்ளது. சூரியன் நகர்வதில்லை பூமியே சூரியனைச் சுற்றி வருகின்றது என்பது நிரூபணமாகியுள்ளது. ஆராய்ச்சிகளும், கண்டுபிடிப்புக்களும் நிச்சயமான உண்மைகளாகாதவை. அவை காலத்துக்குக் காலம் மாறக்கூடியது.
நாம் காணுகின்ற இச்சமுதாயத்தில் தமக்கு பெயரும் புகழும் கிடைக்க வேண்டும் என்பதற்காக மனமறிந்து பல பொய்களை துணிந்து கூறுகின்றார்கள். ஆனால், அப்பொய்கள் ஒருநாள் பூதாகரமாக வெளிப்பட்டு நிற்கும் என்று அவர்கள் அறியாது இருக்கின்றார்கள். பாண்டிமாதேவியின் சிலம்பைக் கோவலன் திருடினான் என்று பொற்கொல்லன் கூறிய பொய்யானது, பொய்ப்பிக்கப்பட்டு உண்மை வெளிப்பட்டது. அப்போது பார்ப்பார், அறவோர் பசு, பத்தினிப் பெண்டீர், மூத்தோர், குழவி நீங்கலாக பாண்டியநாடு முழுவதுமாக எரிக்கப்பட்ட செய்தி சிலப்பதிகாரம் தெரியாதவர்கள் கூட தெரிந்த செய்தியாகும்.
போர்க்களத்தில் குற்றுயிரும் குறை உயிருமாகக் கிடக்கின்றான் கர்ணன். அவன் செய்த தர்மங்கள் அவன் உயிரைப் போகவிடாது காப்பாற்றுகின்றது. இங்கு தர்மம் தலைகாக்கின்றது. அந்த சந்தர்ப்பத்தில் மறைக்கப்பட்ட உண்மை வெளிப்படுகின்றது. குந்தியானவள் அத்தனை வருடங்களும் கர்ணன் தன்னுடைய மகன் என்று மறைத்து வைத்திருந்த உண்மை, அவனது இறப்பின் இறுதித் தருணத்தில் வெளிப்படுகின்றது. உண்மை கடைசிக் காலத்தில் கூட கைவந்து உதவும். தோண்டத் தோண்ட வெளிப்படுகின்ற அகழ்வாராய்ச்சித் தடயங்கள் போல உண்மைகள் எம்முன்னே வந்து நிற்கும்.
சத்தியம், உண்மை என்றவுடன் எம்முடைய மனதிலே முதலில் வந்து நிற்பது சூரிய குலத்தின் 28 ஆவது மன்னனாகிய அரிச்சத்திர மன்னனே ஆவார். அவர் கனவிலே செய்த சத்தியத்தை மறைத்து ஒரு பொய் சொல்லியிருந்தால் தன் வாழ்நாள் முழுவதும் கஷ்டத்தை அனுபவித்திருக்கத் தேவையில்லை. பாம்பு கடித்து மகன் இறந்த போதும் கூட உண்மையை மறைக்கவில்லை. ஆனால், தக்க சந்தர்ப்பத்தில் உண்மை தன் வீரியத்தைக் காட்டியது. அரிச்சந்திரமன்னனும் சுவர்க்க வாழ்வு பெற்றார். கதைகள் எல்லாம் உண்மையானவையான இல்லை கட்டுக்கதைகளேதான் என்று நாம் கருதினாலும், இவை அனைத்தும் மனித வாழ்வுக்குத் தேவையான கருத்துக்களையே எமக்குத் தெரிகின்றன.
பாரிஸ்டர் பட்டம் பெற்ற பின் அரிச்சந்திர நாடகம் பார்க்கச் சென்ற காந்தியடிகள் தன்னுடைய நண்பனையும் அழைத்துச் சென்றாராம். நாடகம் பார்த்துத் திரும்பிய போது இந்நாடகம் பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்ட போது, இந்த நாடகம் என் வாழ்க்கையையே மாற்றப் போகிறது. சத்தியத்தை உயிருள்ளவரை காப்பாற்ற வேண்டும் என்று கருதுவதாகச் சொன்னாராம். அவருடைய நண்பரிடம் கேட்ட போது சத்தியத்தின் படி நடந்தால், மனைவி, பிள்ளைகளைக் கூட இழக்க வேண்டிவரும் என்று கூறினாராம். எனவே அனைத்தும் அவரவர் புரிதலின்படியே நடக்கும். இக்கட்டுரையைக்கூட உங்கள் புரிதலின்படியே ஏற்றுக் கொள்வீர்கள் என்பது நிச்சயம்.
எனவே கண்ணதாசன் தந்த வரிகளுடன் இக்கட்டுரையை நிறைவு செய்கிறேன். ''உண்மையை வாங்கிப் பொய்களை விற்று உருப்பட வாருங்கள். காலம் போனால் திரும்புவதில்லை. காசுகள் உயிரைக் காப்பதுமில்லை. விளம்பரத்தாலே உயர்ந்தவன் வாழ்வு நிரந்தரமாகாது''
உருப்பட வாருங்கள். காலம் போனால் திரும்புவதில்லை. காசுகள் உயிரைக் காப்பதுமில்லை. விளம்பரத்தாலே உயர்ந்தவன் வாழ்வு நிரந்தரமாகாது'' / /
பதிலளிநீக்குஅருமையா சொல்றீங்க. வாழ்த்துக்கள்.
சொன்னது அனைத்தும் அருமை... உண்மை...
பதிலளிநீக்குஉண்மை
பதிலளிநீக்குஉண்மை
உண்மை
அருமை
ஆயிரம் பொய்யைச் சொல்லி ஆட்சி ஆளலாம் என்பதுதான் படிக்கும் போது என் சிந்தனைக்கு வந்தது
பதிலளிநீக்குஉங்கள் பதிவு மிக அருமை!
பதிலளிநீக்குஇளம் வயதில் சத்தியம், உண்மை என்று பேசி, கடைபிடித்து திரிந்த நாட்கள் நினைவுக்கு வந்தன!
' எங்கே உண்மை இருக்கிறதோ, அங்கே அழகு இருக்கிறது. உண்மையும் அழகும் இருக்குமிடத்தில் தெய்வம் குடியிருக்கிறது' என்று கவிஞர் கீட்ஸ் சொன்னது நினைவுக்கு வரும் அதே சமயம், கவிஞர் கண்ணதாசன் ' ' உள்ளம் என்பது ஆமை, அதில் உண்மை என்பது ஊமை' என்று சொன்னதும் ஞாபகம் வருகிறது.
பழைய நினைவுகளை கிளறி விட்டு விட்டீர்கள்!
பொய்களை விற்று
பதிலளிநீக்குவாழும் சிலர் இருப்பதால் தான்
மெய்கள் ஊமை ஆகிற்றோ!
மெய்கள்
ஒரு நாள் மின்னும் போது
பொய்யர்கள் வாழ்வு என்னவாகும்?
மிக்க நன்றி சகோதரி மனோ
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி. டி.பி.ஆர். ஜோசப் சார்
பதிலளிநீக்குநன்றி சகோதரன் தனபாலன். நீங்களாக இருந்தால் இக்கட்டுரை முழுவதுமாக திருக்குறளில் விலாசித் தள்ளியிருப்பீர்கள்
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி ஜெயக்குமார் ஐயா
பதிலளிநீக்குயதார்த்தத்தைக் கூறியவிதம் அருமை.
பதிலளிநீக்குஆழ்ந்த சிந்தனை. யதார்த்தமான உண்மையை சொல்லும் பதிவு. வாழ்த்துக்கள் சகோதரி!
பதிலளிநீக்குஉண்மை வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்கு