• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    செவ்வாய், 22 ஏப்ரல், 2025

    தீ

     


    விடைபெறத் துடிக்கும் எண்ணங்களை வரிகளில் கொண்டுவர எத்தனிக்கும் போது முன்னே விரியும் பக்கங்களில் தீ கண்முன்னே எரிகிறது. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், என்னும் ஐம்பூதங்களை வென்று நிற்க முடிந்தவர்கள் இந்த உணகில் யாருமில்லை. காட்டுத்தீ, நாட்டுத்தீ, மதத்தீ, பொறாமை என்னும் மனத்தீ எனத் தீ பல பக்கங்களைத் திருப்புகின்றது. காமத்தைக் கூடத் தீயாக காமத்தீயாகத்தான் புலவர்கள் கவிபுனைந்தார்கள். மறுவாசிப்பிலே தீ பல கதைகள் சொல்லும். ஒரு நாட்டை அழிக்க மன்னர்களும் மூதாதையரும் தீயைத் தானே பயன்படுத்தியிருக்கின்றார்கள். 

    தீ என்பது மனித வரலாற்றில், மனித நாகரீகத்தின் ஆரம்பம். அறிவுப் புரட்சியின் துவக்கப்புள்ளி. 3 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் ஹோமோ எரெக்டஸ் இனத்தவரும், நியான்டர்தால் மனிதர்களும், ஹோமோ சேப்பியன்ஸின் மூதாதையரும் நெருப்பைப் பயன்படுத்தினர். தீயின் சக்தியை மனித உடலின் வடிவமோ, அமைப்போ, வலிமையோ மட்டுப்படுத்துவதில்லை. ஒரேஒரு பெண்ணால் ஒரு தீக்கல்லையோ அல்லது ஒரு தீப்பந்தத்தையோ கொண்டு ஓர் ஒட்டுமொத்தக் காட்டையும் ஒரு சில மணிநேரத்தில் எரித்து சாம்பலாக்கிவிட முடியும். குளிர்காய, சிங்கங்களை எதிர்க்கும் ஆயுதமாக, சேகரித்த கொட்டைகளை, கிழங்குகளைக் கொன்ற விலங்குகளைச் சுட்டுச் சாப்பிட என்று பயன்படுத்தப்பட்டது. சமைத்தல் முறை உருவானது. உணவில் இருந்த கிருமிகளையும் ஒட்டுண்ணிகளையும் தீ கொன்றது. சமையல் முறை கண்டுபிடித்ததற்கும், மக்களுடைய குடல் பாதையின் நீளம் குறைந்ததற்கும், மனித மூளை வளர்ந்ததற்கும் இடையே நேரடித் தொடர்பு இருந்ததாக அறிஞர்கள் கூறுகின்றார்கள்.

    இன்று உலக மக்கள் நாவில் நின்று நடனமாடுவது கலிஃபோர்னியா மாநிலத்தில் அமைந்துள்ள லாஸ் ஆஞ்சல்ஸ் நகரில் பற்றி எரிகின்ற தீ. உலகின் சினிமா தொழில்நுட்ப, கலாச்சாரம் மற்றும் வணிகத்தின் மையமாக விளங்குகிற லாஸ் ஆஞ்சல்ஸ் க்குத் தீ வைத்தவர் யார்? காட்டுத் தீ நாட்டுத் தீயாக மாறியதா. 

    அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை 

    அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்

    வெந்து தணிந்தது காடு – தழல்

    வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?

    தத்தரிகிட தத்தரிகிட தித்தோம் 


    என்று எண்ணத்தில் தோன்றுகின்ற சிறுபொறியை சிறுமை என்கின்ற மரப்பொந்தில் பாரதி இடுகிறார். அந்த சிறுபொறியால், சிறுமைகள் அழிந்தது. அச்சம், மடமை, துன்பம், பொய் ஆகிய தீமைகள் அனைத்தும் மனமென்னும் காட்டிலே அழிகின்றன என்று ஆனந்தக் கூத்தாடுகின்றார். பாரதி எழுதிய எண்ணத்தீ, மனக்காட்டுத்தீயாக மாறியது. 

    ஆனால், 2025 இல்  அழகிய வெப்பமான காலநிலை மற்றும் இயற்கைப் புகழ்பெற்ற லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஏற்பட்ட தீயானது, பொருளாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் சமூக அமைப்புகளைப் பெருமளவில் பாதித்துள்ளது. இதுவரை 25 பேர் இறந்திருக்கின்றார்கள். 1.80.000 பேர் தமது உடைமைகளை இழந்து வெளியேறியிருக்கின்றார்கள். ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் அழிந்து தரைமட்டமாகியுள்ளன. இங்கு கடந்த சில ஆண்டுகளாக நிலவும் நீண்ட கால வறண்ட காலநிலை, அதிகமான காற்றின் வேகம் மற்றும் வட்டாரத்தில் ஏற்படும் மின்னழுத்தம் ஆகியவையே தீவிரமான தீப்பற்றல்களை உண்டாக்கியுள்ளது. லாஸ் ஆஞ்சல்ஸ் நகரத்தில் பல ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பு முகாம்களில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தீப்பற்றலுக்கு முன்னதாக, அரசு பொதுமக்களுக்கு எச்சரிக்கைகள் மற்றும் பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் வழங்கியிருந்தாலும், சூழ்நிலை மிகவும் தீவிரமானதால் தீயணைப்பில் சிரமம் ஏற்பட்டது. தீயணைப்பு முறைமைகள் சிறந்த போதிலும், தீயின்மை மற்றும் நிலையான காற்று வேகங்களால் தீப்பற்றல் பெரிதும் பரவியது. 

    வேள்வி என்னும் பெயரில் திராவிடர்களை அழிக்க வனங்களை இராமன் எரித்தான் அதனாலேயே சூர்ப்பனகை கொதித்தெழுந்தாள் என்று இராமாயண மறுவாசிப்பு செய்யப்படுகின்றது. இலங்கை மண்ணை அனுமானுடைய நெருப்பூட்டிய வால் எரித்ததே. 

    முன்னை இட்ட தீ முப்புரத்திலே

    பின்னை இட்ட தீ தென் இலங்கையில்

    அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே

    யானும் இட்ட தீ மூள்க மூள்கவே 

    முன்னொருகால் சிவன் இட்ட தீ முப்புரத்திலே. பின்னர் அனுமான் இட்ட தீ தென் இலங்கையில். அன்னை இட்ட தீ என் அடிவயிற்றில். யானும் என் அன்னைக்கு இட்ட தீ மூண்டு எரியட்டும் என்று இலங்கையில் எரிந்த தீயை எடுத்துரைத்துத் தாய்க்குத் தீ வைத்த பட்டினத்தார் பாடினார். இன்று நாட்டுத்தீயாக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் எரிகிறது.

    தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே 

    நாவினால் சுட்ட வடு 

    என்று நாவினால் சுட்ட திருவள்ளுவர் வரிக்கு ஒப்பாகக் கண்ணகி நாவினால் சுட்ட தீ பாண்டியன் அவையிலே பாண்டியன் உயிரைக் கொன்றது. பாண்டிமாதேவியும் இணைந்தே கொல்லப்பட்டார். 

    சிவனுடைய கண்களுக்கு மட்டுமே எரிக்கும் ஆற்றல் உண்டு என்பதல்ல மனிதர்களுக்கும் உண்டு என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைவது  கண்ணகி பாண்டிய மன்னன் உயிர் நீத்த பின் "பார்ப்பா ரறவோர் பசுப்பத் தினிப்பெண்டிர்

    மூத்தோர் குழவி யெனுமிவரைக் கைவிட்டுத்

    தீத்திறத்தார் பக்கமே சேர்கென்று"

    நாட்டுத்தீயைப் பரவச்செய்தமை. 

    யூதருக்கு எதிரான ஹிட்லர் வன்மத்தின் உச்சக்கட்டத் தீ யூதர்களின் நூலகத்தை எரித்தது மட்டமல்ல, தமிழர்களின் அறிவை அழிக்க யாழ் நூலகத்தையும் தீ குறி பார்த்தது. 

    பட்டப்பகலிலே மனிதர்கள் பார்த்திருக்க கணவனை இழந்த பெண்கள் தீக்குளித்தார்களே. அதற்கும் இந்தத்தீ காரணமாகியதே. தன்னுடைய கற்பை நிரூபிக்கச் சீதையும் தீக்குள் இறங்கினாள். அன்றும் தீ காரணமாகியது. ஒடுக்கப்பட்ட மனிதர்களைத் தீக்குள் தள்ளியதற்கு நந்தனார் சாட்சி அல்லவா.


    இத்தனை அவலத்தின் மத்தியிலும் உயிரின் ஆதாரம் காமத்தைத் தீயாகக் காட்டினார்கள் புலவர்கள் 


    செந்தமிழை சாறாய்ப் பிழிந்து செழுந் 

    சீதச் சந்தனமென்று  யாரோ தடவினார் 

    பைந்தமிழை ஆய்கின்ற கோன் நந்தி 

    ஆகம் தழுவாமல் வேகின்ற பாவியான் 

    என்று  நந்திவர்மனில் காமமுற்ற பெண் நந்திவர்மனின் உடலைத் தழுவாமல் உடலெல்லாம் தீயால் வேகுகின்றது என்று பாடுவதாக நந்திக்கலம்பகத்திலே உள்ளது.

    காமத்தீ பற்றித் "தீப்பிடிக்கத் தீப்பிடிக்க முத்தம் கொடுடா’’ என சினிமாவிலே பாடல்வரிகள் காமம் தீக்கொப்பானது என்பதை எடுத்துக்காட்டுகின்றது. எந்தத் தீயையும் அணைக்க  தீயணைப்புப் படை அவசியம். அந்தப் பணியை லோஸ் ஏஞ்சல் தீயணைப்புப் படையினர் செய்து கொண்டிருக்கின்றார்கள். 

    "தீயே நின்னைப் போல எமதறிவு கனலுக" என்று கூறிய பாரதியைப் போல அறிவுத் தீயை அனைவரும் வரவேற்போம்.  




     

     

     


    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    ரசவாதி நூல் அனுபவம்

    நூல்:  ரசவாதி ஆசிரியர் பாலோ கொயலோ தமிழில்: நாகலட்சுமி சண்முகம் இந்த நூலின் ஆசிரியர் பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர். உங்கள் கனவுகளை பின்தொடர...