வந்தது மறந்து, வாழ்ந்தது மறந்து, வாழ வேண்டியது மறந்தது, தமிழர் போடும் ஆட்டம் புலம்பெயர்வில் அளவின்றிப் போய்விட்டது. மெல்லவும் முடியாது விழுங்கவும் முடியாது திண்டாடும் பலரின் குரல்கள் பூனைக்கு மணி கட்டுவாரின்றிப் புலம்புகின்றது. சமுதாயக் குரலைப் பதிவு செய்யாத எவரும் எழுத்தாளராக நடமாட முடியாதல்லவா!
ஆசைக்கு அளவுண்டு. பேராசைக்கு அழிவுண்டு. விழாக்களும் விருதுகளும் மலிந்து விட்டன. பணமும் புகழும் திறமையைத் தீர்மானிக்கின்றன. கொண்டாட்டங்களும் களியாட்டங்களும் அளவுக்கு அதிகமாகி விட்டன. கொள்கைகளும் கோஷங்களும் கொஞ்சம் அடங்கியிருக்கின்றன. கலாச்சாரக் கலப்பும், அந்நிய மோகமும் பெற்றோருக்கு இனிப்பாகி விட்டன.
புலம்பெயர்ந்தவுடன் பிள்ளைகளை அடுத்தடுத்துப் பெறும் கலாச்சாரம் ஆரம்பமாகியது. அதனைத் தொடர்ந்து போட்டி போட்டு பொறாமை கொண்டு அடுத்தவரைப் பார்த்துப் பார்த்தே பிள்ளைகளை வளர்க்கும் கலாச்சாரம் தொடர்ந்தது. மாற்றான் பிள்ளை நடனம் பயின்றால், என் பிள்ளை சங்கீதமும் நடனமும் சேர்ந்தே பயில வேண்டும். நேரமின்றி பிள்ளையை ஓடஓட விட்ட கலாச்சாரம் ஓய்ந்து விட்டது. தேவையைத் தீர்மானிக்காது அடுத்தவர் பார்வையைத் தீர்மானித்து வீடும் வாகனமும் வாங்கும் கலாச்சாரம் தொடர்ந்தது. இன்று கொண்டாட்டங்கள் கூடிவிட்டன.
கொண்டாட்டங்கள்:
இன்று கெண்டாட்டங்கள் களை கட்டுகிறன. ஒரே வீட்டில் பலவகை கொண்டாட்டங்கள். நச்சரிப்புடன் விருந்தினர் ஓய்வின்றி ஓடிக் கொண்டிருக்கின்றனர். வார இறுதிநாளில் வீட்டுக்கடமைகள் முடிக்க முடியாது திண்டாடும் வேலைக்குப் போகும் தமிழர்கள். பிள்ளை பிறந்தவுடன் அதன் துடக்குக் கழிக்கும் விழாவில் ஆரம்பித்து முதலாவது பிறந்தநாள் விழா, 10 ஆவது பிறந்தநாள் விழா, எத்தனை பெண்பிள்ளைகள் இருக்கின்றனவோ அத்தனைக்கும் பூப்புனிதநீராட்டு விழா, அத்தனைக்கும் பிறந்தநாள் விழா, 18 ஆவது பிறந்தநாள் விழா, நிச்சயதார்த்தம், திருமணவிழா, வளைகாப்பு, மீண்டும் குழந்தை பிறந்த கொண்டாட்டம், 50 ஆவது பிறந்தநாள், 60 ஆவது பிறந்தநாள், 25 ஆவது கல்யாணநாள். வீடு குடிபுகு விழா, இதுதவிர நடன அரங்கேற்றம், சங்கீத அரங்கேற்றம், மிருதங்க அரங்கேற்றம். வயலின் அரங்கேற்றம் எனத் தொடரும் வாழ்வில் தொடரும் கொண்டாட்டங்கள் மிதமிஞ்சிய நிலையில் புலம்பெயர் தமிழர் குதூகலிக்கின்றனர். ஆடம்பரத்திற்கே திருமணம் என ஆடம்பரத் திருமணத்திற்காக கல்வியையே விட்டெறிந்து விட்டு தொழிலுக்குப் போகத் தொடங்கியுள்ள ஒரு இளைய சமுதாயம் உருமாறுகிறது.
தமது ஆசைக்காக விழாக் கொண்டாடுவோருக்கு ஒரு ஆலோசனை கூற ஆசைப்படுகின்றேன். விழாக்களுக்கு விருந்தினரை அழைக்கும்போது "பரிசுப் பொருள்கள் தர விரும்புவோர். தாய்நாட்டிலே பசி பட்டினியால் வாடுவோர், அன்றாடம் உணவுக்கு அல்லாடுபவர்கள் அதிகம் இருக்கின்றார்கள். அவர்கள் தேவைக்கான பணத்தை அனுப்பிவிட்டு அந்த ரசீதை எங்களுக்கு அன்பளிப்பாகத் தாருங்கள்'' என்று அழைப்பிதழ் கொடுத்தீர்கள் என்றால், நீங்கள் விழாக் கொண்டாடுவதில் பெருமை இருக்கின்றது. இதன் மூலம் புண்ணியம் தேடுபவர்களாகவும் ஆவீர்கள் என்று சொல்லிக் கொள்ள ஆசைப்படுகின்றேன்.
கலாச்சாரச் சீர்கேடு:
விவாகரத்து மலிந்து விட்ட நிலையில் அந்நிய மோகத்தில் அல்லாடும் பெற்றோர். பிள்ளைகளின் கலாச்சாரச் சீர்கேட்டை மறைத்துக் காத்த காலம் மலையேறிவிட்டது. இன்று பெற்றோர் போற்றிப் பாராட்டும் காலம் வந்து விட்டது. பிழையைச் சரியென்பது போல், கலாச்சாரச் சீர்கேட்டை ஊர் கூடிக் கொண்டாடும் காலம் நடைபெறுகின்றது. மறைவில் மகிழ வேண்டிய விடயங்கள் படம் போட்டு முகநூலில் படம் விரித்துக் காட்டப்படுகின்றன. திரைப்படங்கள் திரை விரித்த நிகழ்வுகள் வாழ்வில் அம்பலப்படுத்தப்படுகின்றன. எதுவானாலும் பெற்றோர் தயார் என்னும் நிலைமை பிள்ளைகள் துணிந்துவிட்டனர்.
நூல் வெளியீடு:
அன்றைய நாளில் தேவை கருதி தேவைப்படும் நூலை வாசிகசாலை சென்றும் கடையில் வாங்கிப் படித்து, ஆய்வுக்கட்டுரைகள் எழுதியும் வாசித்தும் ஆவல் தீர்த்த காலங்கள் மறைந்து விட்டன. நூல் வெளியீடு என்ற பெயரிலே தரமற்ற தமது படைப்புக்களை கைகளில் திணித்து பணத்தைத் தாருங்கள் என்று கட்டாயப்படுத்தும் கலாச்சாரம் அதிகரித்துவிட்டது. நூல்வெளியீடு என்றவுடன் வருவதற்குத் தயங்கும் மக்கள் நம்மவர் மத்தியில் அதிகரித்துவிட்டனர். இதன் மூலம் தரமான படைப்புக்களை வெளியீடு செய்வதற்கு எழுத்தாளர்கள் தயங்கி நிற்கின்றனர். புத்தகம் என்னும் போது அந்நூலினுள் புகுந்து வெளிவரும் போது ஒரு புதிய அநுபவம் கிடைக்க வேண்டும். அந்நூலைத் தேடிப்பெற வேண்டும். வாசகன் தன் தேவை கருதி ஒரு நூலை வாங்கிப் படிக்க வேண்டும். கண்டவற்றையெல்லாம் அள்ளிப் போடும் குப்பைத் தொட்டிலல்ல எமது மூளை. இதைப் படைப்பாளிகள் புர்pந்து கொள்ள வேண்டும்.
இன்னும் உண்டு தொடர்வோம்.
உண்மை சகோதரியாரே
பதிலளிநீக்குதங்கள் எண்ணங்களில் உண்மை உண்டு
பதிலளிநீக்குஅன்று
வெளியீட்டு விழாவும் அறிமுக விழாவும்
நூலின் உள்ளடக்கம் பற்றி அறியவே
ஆனால், இன்றோ
தரமற்ற தமது படைப்புக்களை
கைகளில் திணித்து பணத்தைத் தாருங்கள் என்று
கட்டாயப்படுத்தும் நிலை ஆயிற்றே!