• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    வெள்ளி, 18 டிசம்பர், 2015

    நான் எழுதாவிட்டால், யார்தான் எழுதுவார்.



    எழுத மறந்த நினைவுகள்.

    இப்படியும் ஒரு பெண்ணா! 

    அழகும் இளமையும் இணைந்தே இருந்தால், முதுமையும் கூட அதை அடையப் பார்க்கும். வறுமையும் கூட இணைந்தே இருந்தால், செல்வந்தர் துணையும் சேர்ந்தே கிடைக்கும். இவர் கம்பீரத்தை வலிந்து பெற்றாரா? இல்லை அவருக்கு வலியவே கிடைத்ததா? 

               அழகாய் இருந்ததனாலும் வறுமையில் அகப்பட்டதனாலும் ஒரு செல்வந்தனுக்கு செல்ல மாணிக்கம் இரண்டாம் தாரமாய் குடும்ப வாழ்க்கையைப் பொறுப்பேற்றார். கணவனும் மட்டக்களப்பிலே முதன்முதலாக போட்டிக்கோ என்று சொல்லப்படுகின்ற வீட்டைக் கட்டியதாலும், சமுதாய மத்தியில் தங்கச் சங்கிலியை அணிந்ததனாலும் போட்டிக்கோ காளியர், சங்கிலிக் காளியர் என்ற பட்டப்பெயர்களால் அழைக்கப்பட்டார். ஆடம்பரமான வாழ்க்கை. வீட்டுக்குள்ளே குடிக்க பார்(Bar). குதூகல வாழ்க்கை. அழகான அன்பான வாழ்வில் அற்புதமான மூன்று குழந்தைகள். செல்வம் நிலைக்காது. நண்பர் சேர்க்கையும் அதை நிலைக்க விடாது. சிறிது சிறிதாய் பணமும் கரைய கோர்ட், வழக்கு என்று ஓடிஓடி கடைசியில் கணவன் உயிரும் விடைபெற்றது. கையில் காசும் கரைந்து விட்டது.

                 வளரத் துடிக்கும் குழந்தைகள், வாழ்வாதாரம் ஏதுமில்லை, புகழ் மட்டும் கொடுத்து ஏழ்மையை விட்டுச் சென்ற கணவன். அழிந்த சொத்துக்கள் போக இருந்த சொத்துக்களை அழியவிடாது பாதுகாக்கத் துணிந்த அந்த சாகசப் பெண் தனக்காய் ஒரு தொழிலைத் தேடிப் பெற்றார். மண்பானை, சட்டியிலே தன் வாழ்வாதாரத்தை ஆரம்பித்தார். பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்பிவிட்டு  பகலெல்லாம் கைவேலை, செய்த சட்டி, பானையை வீட்டு வளவினுள்ளே சுட்டெடுத்து வியாபாரிகளுக்கு கணக்குப் பார்க்கும் அழகோஅழகு. போற்றிப் பாதுகாத்த சொத்தை இன்று பேரப் பிள்ளைகள் சந்தோசத்தில் அனுபவிக்கின்றார்கள். இந்த ஊக்கத்தை இன்று நினைத்துப் பார்க்கின்றேன்.

                   ஆண்குழந்தை இரண்டு, பெண்குழந்தை ஒன்று ஆண்குழந்தைகள் ஆண்மகன்களாய் உருக்கொள்ளும் வரை அழகான அம்மாவுக்கு தொந்தரவுகள் வழமையே. அதனாலே தைரியத்தை இயல்பாகப் பெற்றாள். இரவுப்படக்காட்சி முடிந்து வீதியால் போகும் ஆண்கள், ஆண் துணையற்ற வீடு என்று முன் வேலியில் சலம் கழிப்பார்கள். பொறுத்திருந்து பார்த்து கொதிக்கும் நீரை சலம் கழிப்பார்க்கு ஊற்றிய போது அவர்கள் கத்திக் கொண்டு சென்ற காட்சியை அழகாய் வர்ணிப்பார். ஆத்திரம் கொண்டு அடக்க நினைக்கும் ஆண்கள் தலையில் தேங்காயால் ஓங்கி அடித்த கதையை ஒய்யாரமாய்ச் சொல்லிச் சிரிப்பார். பெண்களுக்கு ஆயுதங்கள் அவர்களிடமே படைக்கப்பட்டிருக்கின்றது என்று மகாத்மா காந்தி சொன்னது உண்மையே. இந்தத் தைரியத்தை இன்று நினைக்கின்றேன்.

              கையில் சுழுக்கிவிட்டது, கைமுறிவு ஏற்பட்டுவிட்டது, முழங்கால் சில்லு விலகிவிட்டது. இவ்வாறான பிரச்சினைகளுடன் Orthopädie டாக்டரிடம் சென்றால், உடனடி ஆபரேஷன் என்று வயிற்றைக் கலக்குகின்றார். ஆபரேஷன் செய்ய அறையினுள் சென்றவர்கள் முகத்தை மூடி உயிரற்றவராய் திரும்பக் கொண்டுவரும் நிலை கண்டு செல்லமாணிக்கம் அவர்கள் இன்று இருந்தால் கையால் தடவித் தடவியே வலியை நீக்கியிருப்பார், தன் கையால் செய்த எண்ணெய் எடுத்து நோய் கண்ட இடத்தில் நீவி விட்டு முறிவுக்குப் பத்துப்போட்டு முறிவை ஒட்டச் செய்திருப்பார். 
               பிள்ளை இல்லையே என்று மருத்துவமனைகள் சென்று திரும்பி, சுகமாய் இருந்த கருப்பையை மருத்துவத்தின் பெயரால் அழித்துவிட்டுச் மனச்சுமையுடன் வாழ்பவர்கள் நிலை கண்டு செல்லமாணிக்கம் அவர்கள் இருந்திருந்தால், செல்லா இடமெல்லாம் சென்று தேடிப்பெற்ற இலைகுழை கொண்டு, அம்மியில் வைத்து அரைத்தெடுத்த மருத்துவச் சாற்றைக் குவளையில் எடுத்து, தலைவாசலில் பெண்ணை சூரியனைப் பார்த்து நிற்க வைத்துத் தொண்டைக்குள் ஊற்றி கருப்பையில் கருவைத் தங்கவே செய்திருப்பார் என்று இன்று சிந்தித்துப் பார்க்கின்றேன்.

                குழந்தையை உறங்க வைக்க Iphone இல் பாட்டுப் போட்டு காதடைக்கும் Drum சத்தத்தில் உறங்கமறுக்கும் குழந்தையை உறங்கச் செய்ய இளந்தலைமுறை படும்பாட்டைப் பார்க்கும் போது செல்லமாணிக்கம் அவர்கள் தானாய் இயற்றும் கவிவரிகளில் சந்தம் சேர்த்து பாடும் அழகையும் தொட்டில் ஆட்டும் போதும், ஊஞ்சல் ஆட்டும் போதும் அழகாய்ப் பாடிய அற்புதவரிகளை, மெட்டுக்களை இன்று நினைத்துப் பார்க்கின்றேன். 
                இவர் நோயென்று படுக்கையில் சரிந்ததில்லை. பிள்ளைகளைப் பறிகொடுத்த துயரில், உணவை ஒறுத்து, உள் உறுப்புகளின் இயக்கம் நீக்கித் தானாய் இறப்பதை வலிந்து பெற்று, இறுதியில் குழந்தையாய் மாறி இவ்வுலகு நீத்தார்.  
                   இத்தனை திறமைகளையும் தன்னகத்தே கொண்ட அற்புதப் பெண்ணாய் என் கண்முன்னே தெரிபவர் வேறு யாருமில்லை. என் அன்புப் பாட்டி. ஆசை ஆச்சி. அருகே இருக்கும் போது அருமை தெரிவதில்லை. அதனால் தானோ என்னவோ அவர் வைத்தியம் கற்கவில்லை. கைப்பக்குவம் பழகவில்லை. இதனால், இழந்ததை எண்ணி ஏங்கவே முடிகிறது. 



























    3 கருத்துகள்:

    1. சாகசம் தான்.
      கடுமையான நினைவு.
      இப்படி எத்தனை நினைவுகள் நாமறியாதவைகள்
      நன்று...நன:று...

      பதிலளிநீக்கு
    2. முன்னோரின் நினைவுகள்
      நம்மை வழிநடத்தும் வல்லமை வாய்ந்தவை

      பதிலளிநீக்கு
    3. உள்ளத்து உணர்வுகள்
      உறவுகளை மீட்பதில்
      வெளிப்பட்டு விடும்
      அருமையான பகிர்வு

      http://www.ypvnpubs.com/

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...