தேடிவந்து அறிவு ஒட்டிக் கொள்வோருமுண்டு
தேடிச்சென்று அறிவு பெற்றுக் கொள்வோருமுண்டு
கற்பூரமன்ன மூளை கொண்டோரும் உண்டு
கடைந்தெடுத்த நெய் யொப்ப அறிவு கொண்டோருமுண்டு
ஆற்றொழுக்கன்ன அறிவு பாய்ந்தோடுவோரும் உண்டு
தேக்கிவைத்த கிணற்று நீரன்ன அறிவாளிகளுமுண்டு
இவள் தேடிச்சென்று அறிவு சேர்த்தெடுக்கும் பெண். வலிந்து கற்று வாழத்துடிக்கும் ஒருத்தி. கல்வி மேல் கொண்ட காதலால் கல்யாண வலையில் சிக்காது கல்லூரி கண்டு பல்கலைக்கழகம் புகுந்தாள். கல்விக்காந்தம் தேடிச் செல்ல காதல் காந்தம் தேடி வந்தது. ஒறுப்பதும் மறுப்பதும் அவள் குணமாக தன்னை வருத்துவதும் வலுக்கட்டாயமாய்த் தன்னிடம் இழுப்பதும் அவன் குணமானது. விடியலில் வதிவிடத்தில் வருந்தி இறையிடம் வணங்குவாள். இன்று அவன் முகத்தைக் காணவே கூடாது. சற்றும் என் குடும்பத்திற்கும் மதத்திற்கும் இனத்திற்கும் பொருத்தமில்லாத அவன் என் குடும்பத்தில் இணைந்தால் குலத்தைக் கெடுக்க வந்த கோடாரிக் காம்பாவேன். தலைநிமிர்ந்த என் தந்தை போக்கிற்கு தலை குனிவை ஏற்படுத்திவிடுவேன். ஆனாலும் அவனைக் காணும் போதெல்லாம் மனம் தடுமாறுகின்றதே? என் மனதிற்கு உறுதியைத் தா இறைவா! எனக் கண் கலங்குவாள். வெளியே செல்வாள். 1 நிமிடம் பேச அநுமதி கேட்டு விரைந்து முன்னே வந்து இறைஞ்சி நிற்பான். ஆண்டவனிடம் கேட்ட 30 நிமிட வேண்டுதல் விடைபெறும். எங்கே இந்தக் கடவுள். தவிர்ப்பதற்கான தன் பக்க நியாயங்களை எடுத்துரைப்பாள். தன் கையைக் கீறி இரத்தம் காட்டுவதும், புதிதாகச் சிகரெட் புகைத்து இழுப்பதுவும் அவன் செயல்களாகின. இவ்வாறான செய்கைகளின் போது அவள் மனதில் அவன் மேல் வெறுப்பு அதிகமாகியது. நடித்தாள், அவனைக் காணும் போதெல்லாம் காதலிப்பதாய் நடித்தாள். கல்விக்காலம் முடியும் வரை இரட்டை வேடம் போட்டாள். கற்கைக் காலம் முடிந்தது அவன் தொடர்பை அறுத்தாள். வேறு திருமணம் ஏற்றாள். இனிதாய் வாழுகின்றாள். இது சம்பவம். ஆராயத் தொடங்கியது இப்படைப்பு.
அவள் பக்கப் பார்வையில் அவள் செய்தது நியாயம். அவன் பக்கப்பார்வையில் அவள் செய்தது துரோகம். அவள் இன்று கேட்கும் கேள்வியானது. இந்த இறைவன் ஏன் என் வேண்டுதலுக்கு செவி சாய்க்கவில்லை. இதுதான் நடக்கும் என்பது விதியானால், இந்த வேண்டாத இடையூறுகள் வில்லங்கமாய் இடைச்செருகலாய் வாழ்க்கையில் நுழைகின்றன. இது அவள் வாழ்க்கையில் ஒரு சம்பவம். சரித்திரமல்ல.
காதலென்று தன் மனதிற்கு அவள் துரோகம் செய்ய விரும்பவில்லை. காதல் பறவைக்கும் வரும். விலங்குகளுக்கும் வரும். உயிரினங்கள் அனைத்திற்கும் வரும். தன் இன்பத்திற்காகத் தன்னைப் பெற்றவர்கள் மனம் புண்பட அவள் இடம் தரவில்லை. பாசம், அன்பு என்பவை எல்லாம் உடலுள் ஊறிக் கொண்டிருக்கும் ஓமோன்களின் தொழிற்பாடே அவ்வக் காலங்களில் தோன்றுகின்ற உடலுள் மனதுள் ஏற்படும் மாற்றங்களைக் கட்டுப்படுத்திவிட்டால், உலகம் சிறக்க வாழலாம் என்னும் உண்மையை உணர்ந்தவள். பறவையும் தன் பிள்ளைக்கு தேடி உணவூட்டும். சிறகு முளைக்க தன்னிச்சையாய் வாழத் தகுதியுண்டென்று அநுமதி தந்துவிடும். குரங்கு தன் குட்டியை தூக்கி வளக்கும். கொப்பிழக்கப் பாயும் போது தன் கைவிட்டு விட்டால் தனியே வாழ அநுமதி தந்துவிடும். இழந்த கன்றுகளைத் தேடிப் பசுவும் கண்ணீர் விடும். படைக்கப்பட்ட அனைத்து உயிர்களிடமும் பாசம் உண்டு. காதல் உண்டு. கடலுக்குள் கணக்கிடமுடியாத உயிரினங்கள் அற்புதமான உடல் வனப்புக்கள் தொழிற்பாடுகள் உண்டு. அவை சிலவற்றிற்கு உயிருண்டு குடல் இல்லை. அவையும் உயிர் வாழ்கின்றன. நண்டு, சிப்பி, வேய், கதலி நாசமுறும் காலம் கொண்ட கருவழிக்கும். உலகுக்குப் பிள்ளையை ஈன்றுவிட்டுத் தம் உயிர் இழக்கும். இவற்றின் பாசத்திற்கு ஈடாக எதைச் சொல்வது. இப்பாசம் பற்றி எண்ணிப் பார்ப்பார் யாருண்டு.
பாசமோ, நேசமோ, காதலோ காலங்கடந்திட துன்பம் மறைந்திட நினைவுகள் மாத்திரம் திரையாக அவ்வப்போது வந்துபோகும். அவை கூட நீண்ட இடைவெளியின் பின் மறைந்து போகும். தன் மனம் அன்று எது சரியென்று எண்ணுகின்றதோ அதைச் சரியாகச் செய்ய வேண்டியதுதான் சிறப்பு. உயிருள்ள தாவரங்களையும் மிருகங்களையும் கறியாக்கி விடுகின்றோம். மனிதர்களுக்கு மட்டும் ஈமக்கிரிகைகள் செய்கின்றோம். அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது என்பதனாலேயோ மற்றைய உயிரினங்களைவிடத் தமக்கு அன்பின் வலிமை அதிகம் என்று மனிதர்கள் கருதுகின்றார்களோ. மனிதர்களே தாவரங்கள், மிருகங்கள் அனைத்தின் கலங்களையும் தம்முள் அடக்கிய உருவமாகத்தான் காணப்படுகின்றார்கள். ஜேர்மனியிலே ஒரு பன்றி ஒரு இறைச்சிக்கடையினுள் புகுந்து கண்ணாடிகளை உடைத்து பெரிய அட்டகாசம் பண்ணியிருக்கின்றது. அதன் உணர்வுப் பிரபாகத்தை எண்ணி ஜேர்மனியர்கள் வியந்திருக்கின்றார்கள். அப்பன்றியானது தன் இனம் கொல்லப்படுவதைக் கண்டு துடித்திருக்கின்றது. நாய் பன்றிக்குப் பாலூட்டியதும். தான் வளர்த்த ஆட்டுக்குட்டிக்குத் தன் முலைப்பாலை ஒரு பெண் ஊட்டியதும் பாசத்திற்கு எடுத்துக்காட்டுக்களே. உணர்வுகள் உள்ளங்களில் வெளிப்படுதல் உறுதியே. அதே உள்ளங்கள் உணர்வுகளை தேவை நிமித்தம் உள்ளடக்கலும் தேவையே. மனதைக் கொன்று வாழ்தலை விட மனதுக்கும், எம்மைச் சார்ந்து நிற்போர் ஆசாபாசங்களுக்கும், சூழல் சுற்றங்கள் விருப்புகளுக்கும் ஏற்ப ஆசைகளை கட்டுப்படுத்தும்போது எதிர்கால வாழ்க்கையில் இன்பத்தை அநுபவிக்கலாம். மனதைக் கொன்று வாழ்வதா? மனதுக்கேற்ப வாழ்வதா?.....
மனதைக்கொன்று வாழ்வதா?
பதிலளிநீக்குமனதுக்கேற்ப வாழ்வதா?
மிகவும் சிக்கலான கேள்விதான்.
மனதைக்கொன்று வாழ்வதில் சம்பந்தப்பட்டவரின் மனம் மட்டுமே கொல்லப்படுகிறது.
மனதுக்கேற்ப வாழ்வதை இந்த சமுதாயம் என்றும் ஏற்பதில்லை.
என்ன செய்வது?
மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் இந்தக்கேள்விக்கு பதில் சொல்லவே பலரும் தயங்கக்கூடும். அது தான் இன்றைய உண்மையான யதார்த்தமான பரிதாப நிலையாக உள்ளது.
நன்றி sir
நீக்கு"சிந்தக்க வைக்கும் பதிவு ! நன்றி சகோதரி !"
பதிலளிநீக்குமிக்க நன்றி .சிந்திப்பது மட்டுமல்ல செயல்படுத்துங்கள்
நீக்குபெரும்பாலும் மனத்தைக் கொன்று வாழ்வே பழகி இருக்கிறோம். மனதைக் கொன்றிருக்கிறோம் என்பதை அறியாமலே
பதிலளிநீக்குநிச்சயமாக
நீக்குதங்கள் எழுத்து நடை மிக மிக அருமை
பதிலளிநீக்குதங்கள் குரலில் பதிவாக்கப் பட்டு கொடுத்திருந்தால் எப்படி
இருக்கும் என எண்ணாமல் இருக்க முடியவில்லை
சிக்கலான கேள்வியை எழுப்பிச் சென்றுள்ளீர்கள்
பதில்தான் சிக்கமாட்டேன் என்கிறது
மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் நடை கொண்ட
அருமையான பதிவு.பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
நன்றி சார்.ஒவ்வொரு ஆக்கத்தையும் எனது குரலில் கொடுப்பதற்கே நினைப்பேன். ஆனால் நேரம் போதாமையினால் என்னத்தை நிறைவேற்ற முடியாமல் இருக்கும். உண்மையில் குரலில் கேட்கும்போது நான் நேரடியாக சொல்வதுபோல் இருக்கும்.
நீக்குநன்றி சார். எனக்கும் குரலில் கொடுக்க வேண்டும் என்று விருப்பம் தான். என்ன செய்வது நேரம் இடம் தரவில்லை.
நீக்குஅருமை.
பதிலளிநீக்குவாழ்த்துகள்.
நன்றி அய்யா
நீக்கு