• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    புதன், 7 நவம்பர், 2012

    திருமணம்



                     

    உலகத்தோற்றங்களில் உன்னதமான தோற்றம் மனிதத் தோற்றம். இதன் மூலமே குடும்பம், குழந்தைகள், நாடு, அபிவிருத்தி, கண்டுபிடிப்புக்கள், உலகமாற்றங்கள் போன்ற அனைத்துப் பரிமாணங்களும் உருவாகின்றன. ஆணும் பெண்ணும் மனதாலும் உடலாலும் ஒன்றுபட்ட வாழ்க்கையை வாழ்வதன் மூலம் சிறப்பான குடும்பம் உருவாகின்றது. இக்குடும்பம் ஓர் ஒழுங்குபடுத்தப்பட்ட சமுதாயத்தின் மூலம் உருவாக வேண்டியதன் அவசியம் கருதியே திருமணநடைமுறை உலகில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. 

                     ஆதிகால மனிதனின் உறவுமுறையின் ஆரம்பமே இத்திருமணம்தான்.  மனிதர் கூட்டத்திலிருந்து மனிதக் குடும்பம் உருவாகவும் உடலுறவில் ஒழுங்குநிலை தோன்றவும் திருமணநடைமுறை தேவைப்பட்டது.  முதலில் ஆளும் வர்க்கத்தின் தலைமுறைச் சொத்தை அநுபவிக்க அரசர் திருமணத்தை உருவாக்கினர். 

                      மனிதஇனம் விலங்கினமாய் வாழ்ந்த காலத்தில் உறவு முறையற்ற  உடலுறவு மேற்கொண்டனர். சமூகம் என்னும் ஒரு அமைப்பு உருக்கொள்ளாத காலத்தில் யாரோடும் சேரலாம் என்றிருந்தது. சமூகமெனும் அமைப்பு உருப்பெற்ற காலத்தில் ஒரு சிலர் ஒரு சிலரோடு சேர்ந்து வாழும் போக்கு உருவாகிப் பின் விரும்பியவர் விரும்பியவரோடு சேர்ந்து வாழ்ந்தனர். இச்சேர்க்கை வாழ்க்கை ஓர் சமூகஅமைப்பாக உருவாகும் வரை திருமணம் என்ற நடைமுறை வழக்கில் இருந்ததில்லை.  விலங்குகளாய் மனிதன் எந்தவித உடைமைகளுமற்று உணவைத்தேடி அலைந்த காலத்தில் திருமணம் தேவைப்படவில்லை.  பின் ஆண்கள் கால்நடைகளை உடைமைகளாக்கப் பெண்கள் நிலங்களை உடைமைகளாக்கினர். நிலங்களில் பயிர் செய்வதற்கு ஆள்களின் துணை தேவைப்பட்டது. ஆள்களைப் பெருக்கவும் நிலங்களைப் பாதுகாக்கவும் பெண்களுக்கு ஆண்களின் துணை நிரந்தரத் தேவையாகப்பட்டது. இதனால் திருமணம் அவசியமாக்கபட்டது.  நிலங்கள், கால்நடைகள் உடைமைகள் ஆகியது போல் ஆள்களும் உடைமைகளாக ஒவ்வொருவரும் தங்கள் குழந்தைகளை(குழந்தைச்செல்வம்) உடைமைகளாக்கினர்.  இதற்குத் திருமணம் அவசியமாகியது. 

                     விலங்குகளுடன் இணைந்து பகுத்தறிவில்லாது வாழ்ந்த மனிதன் ஆதிகாலத்தில் அவற்றைப் போலவே உறவு கொண்டான். சகோதரன் சகோதரி, தாயும் மகனும், தந்தையும் மகளும் உறவு கொண்டனர். கணவன் இறந்தபின் மூத்தமகனைத் திருமணம் செய்துகொண்டநிலையையும் அறியக்கூடியதாக இருக்கின்றது. (J.G.Frager, Totemism&Progancy-1970 Vol.  IVP .28).

                  இவ்வாறு வரன்முறையற்ற காட்டுமிராண்டி நிலையிலிருந்து குழுமணமுறை உருவாகிற்று. ஒரு குழு ஆடவர் ஒரு குழு பெண்கூட்டத்தை மணந்து கொண்டு வாழ்ந்தனர். இக்குழுமணமுறையிலிருந்தே பல கணவன் முறை உருவாகியிருக்கலாம். பாண்டவர் ஐவரை மணந்து வாழ்ந்த திரௌபதி பற்றிய கதை ஒரு காலத்தில் இந்தியாவிலும் இப்பல கணவன்முறை இருந்திருக்கலாம் என்பதை எடுத்துக்காட்டுகின்றது. 
                 


     இக்குழுமணத்தின் பின்னேயே ஒருவன் ஒருத்திமுறை உருவானது. விரும்பிய ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழவும் குடும்பம் நடத்தவும் எந்தவித தடையும் பண்டைய காலத்தில் இருந்ததில்லை.  இதனையே களவுமணம் என்றனர். விரும்பிய ஒரு பெண் விரும்பிய ஒரு ஆடவனுடன் ஊரைவிட்டு வெளியேறிக் கூடிவாழ்ந்தமையையே உடன்போக்கு என்றனர். அக்காலத்தில் இத்தகைய மணமுறைகளில் எந்தவித தடையும் இருந்ததில்லை. இது பற்றிச் சங்ககால அகப்பாடல்களில் அறியக்கூடியதாக இருக்கின்றது. இதில் ஏற்பட்ட சிற்சில தவறுகளினால், திருமணச் சடங்குமுறை தோன்றியது. இதனையே தொல்காப்பியர் தன் கற்பியல் என்னும் பகுதியில் 
                 'பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் 
                  ஐயர் யாத்தனர் கரணம் என்ப'' 
                                                                        என்று கூறியிருக்கின்றார். அன்றைய திருமணங்களில் ஐயர் இல்லை, மந்திரங்கள் இல்லை, தீவலம் இல்லை. ஆரியர் தமிழ்நாட்டினுள் புகுந்தபின்பே இம்முறைகள் எல்லாம் கையாளப்பட்டது. அக்காலத் திருமணங்கள் பற்றி இரு அகநானுற்றுப் பாக்களில் எடுத்தாளப்பட்டிருக்கின்றது. அறவாணன் தன்னுடைய தமிழர்மேல் நடந்த பண்பாட்டுப் படையெடுப்பு என்னும் நூலில் விரிவாக விளக்கியுள்ளார்.

    திருமணத்திற்கு நல்ல நாள் தெரிவுசெய்யப்பட்டது.
    வளர்பிறை நாட்களில் திங்களும் ரோகினியும் ஒன்றாக சேர்ந்திருக்கும் நாள் நல்லநாளாகக் கருதப்பட்டது.
    திருமணங்கள் விடியற்காலையில் நடத்தப்பட்டது. 
    மணநாளுக்கு முந்தியநாள் முற்றத்தில் வெண்மணல் பரப்பப்பட்டது. பந்தல், தோரணங்கள் கட்டப்பட்டன.
    முரசுகள் முழங்கின, விளக்குகள் ஏற்றப்பட்டது.
    கடவுளைப் போற்றி வழிபட்டனர்
    மணமகளை அலங்கரித்து பந்தலுக்கு அழைத்து வந்தனர்.
    மங்களகரமான பிள்ளைகளைப் பெற்ற பெண்கள் பூவும், நெல்லும் நிறைந்த நீர்க்குடங்களைச் சுமந்து வந்தனர்.
    குழந்தைகளைப் பெற்ற வாழ்வரசிகள் இக்குடங்களிலுள்ள நீரை மணமகளின் மேல் ஊற்றுவர். அப்போது கணவனுக்கேற்ற மனைவியாக வாழ்வாயாக என பெற்றோரும் மற்றோரும் வாழ்த்துவர்.
    மணமகனிடம் மணமகளை ஒப்படைத்து வாழ்த்தொலி எழுப்புவர்.
    அன்றிரவே மணமகளும் மணமகனும் தனியறையில் கூடிமகிழ விடப்படுவர்.
    மணநாளன்று விருந்தினர்அனைவருக்கும் விருந்து வழங்கப்பட்டது.
    இடையர்களின் திருமணத்தில் செம்மறியாட்டின் பாலை உறை ஊற்றி எடுத்த தயிர், வரகரிசிச்சோறு, பொரித்த ஈரல் ஆகியவை விருந்துணவாக வழங்கப்பட்டது. 

            பின் ஆரியர் வரவின் பின் மாமுது பார்ப்பான் மறைவழிகாட்டிடத் தீவலம் வந்ததுடன் அருந்ததி காட்டல் என்ற வட இந்திய மரபும் சேர்ந்தது. பண்டைக்காலத்தில் தலிகட்டும் சடங்கு இருந்தில்லை. ஆண்பெண்ணுக்குத் தாலிகட்டும் முறை பிற்காலத்திலேயே பேசப்படுகின்றது. கந்தபுராணம் என்னும் நூலில் முருகன் தெய்வயானையின் கழுத்தில் தாலி கட்டியதாக கூறப்படுகின்றது. அதுவும் தெய்வயானை ஆரியப்பெண்ணாகக் காணப்பட்டார். இப்பழக்கத்தைத் தமிழர்கள் ஆரியச்சார்பு பெற்ற மலையாளநாயர்களிடமிருந்து பெற்றிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
              
            இவ்வாறு நாம் திருமணநடைமுறைகள் மாற்றம் பெற்று வந்திருந்தமையை  அறிந்து கொள்ளுகின்றோம். தற்காலத்தில் தமிழர் உலகமெங்கும் புலம்பெயர்ந்து வாழுகின்ற சூழ்நிலையில் அவர்கள் பழக்கவழக்கங்கள்  திருமணவாழ்க்கை முறைகள் போன்றவை அவரவர் வாழுகின்ற நாடுகளின் சூழலுக்கேற்ப மாறுபாடுபடுவதை அறியக்கூடியதாக உள்ளது. 
                   
                       

    12 கருத்துகள்:

    1. திருமணத்தின் தோற்றம் முதல் இன்றுவரை
      அதன் அடி ஆழம்வரைப் போய்
      மிக மிக விரிவாக ஆழமாக சிந்தித்துக்
      கொடுத்த பதிவு அருமையிலும் அருமை
      மனம் கவர்ந்த பயனுள்ள பதிவு
      பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
      தொடர வாழ்த்துக்கள்

      பதிலளிநீக்கு
    2. ஒருவனுக்கு ஒருத்தி என்ற தத்துவத்தையே திருமணபந்தம்
      உண்டாக்குகிறது.
      நல்ல ஒரு பதிவு. அழகான படங்கள்.

      பதிலளிநீக்கு
    3. வணக்கம் சகோதரி
      நலமா?
      நீண்ட இடைவெளி ஆகிவிட்டது...

      சரித்திரப் பின்னணிகளுடன்
      திருமண பந்தம் பற்றிய பதிவு நெஞ்சம் நிறைத்தது...
      சொர்கத்தில் நிச்சயிக்கப்படும் ஒரு வைபவம் பற்றிய
      பதிவு மிக அருமை...

      பதிலளிநீக்கு
    4. படங்களுடன் விளக்கமான நல்ல பகிர்வு...

      நன்றி...

      பதிலளிநீக்கு
    5. அம்மா உங்கள் பதிவு நன்றாக உள்ளது. திருமணம் பற்றிய அனைத்து செய்திகள் அறிய நல்ல வாய்ப்பு. மிக்க நன்றி .
      அன்புடன் கருப்பசாமி.



      பதிலளிநீக்கு
    6. தாலி மறுப்பு திருமணங்கள்
      இராகு காலத்தில் தாலி கட்டி திருமணம்
      அய்யர், அருந்ததி பார்த்து திருமணம்
      மோதிரம் மாற்றி திருமணம்


      அனைவரும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்

      ஆம் வாழ்வதற்கு இருமனம் ஒத்திருக்க வேண்டும்
      அது நீடித்திருக்க வேண்டும்

      பதிலளிநீக்கு
    7. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

      மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_12.html) சென்று பார்க்கவும்... நன்றி...

      பதிலளிநீக்கு
    8. கற்காலம் முதல் தற்காலம் வரை, உடலுறவு மற்றும் திருமணம் பற்றி பல்வேறு செய்திகளைத் தந்துள்ளீர்கள்.

      பாராட்டுக்கள்.

      பதிலளிநீக்கு
    9. மதிப்புக்குரிய சகோதரி அவர்களுக்கு, தமிழ் இலக்கியங்கள் சொல்லும் ஒரு உண்மையை தாங்கள் தெளிவாக கூற வில்லை. அது என்னவென்றால் ஆணுக்கு பெண் அடிமை இல்லை. மேலும் ஆரிய பார்ப்பனர் கூட்டமே நம் தமிழர் சமூகத்தில் பெண்ணடிமைத்தனம் என்ற முறையை தாலி கட்டுதல் என்ற சடங்கு மூலம் திணித்தார்கள். அன்று முதல் இன்று வரை பெண்கள் ஆணாதிக்கத்தின் அடிமையாகவே நடத்தப்படுகின்றனர். இன்றய காலங்களில் உலக மகளிர் தினம் என்பது ஒரு பொய்யான தின கொண்டாட்டம்.

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    ஜெர்மனியில் தமிழர் பண்பாட்டு மாற்றம்

      ஆங்கிலேயர் , போத்துக்கேயர்கள், ஒல்லாந்தர்  தமது ஆட்சிக் காலத்தின் போது எமது நாடுகளில் தம்முடைய பண்பாட்டைக் கட்டாயமாகத் திணித்த நிலையிலிர...