சுவிஸ் நாட்டில் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 125 ஆவது ஆண்டுவிழாவினை சுவிஸ் நாட்டின் உதயம், முனைப்பு அமைப்புக்களும் ஜேர்மனி தமிழ் கல்விச் சேவையும் இணைந்து
Kirch Trimbach, Chappeligass – 39, 4632 Trimbach, Olten, Switzerland என்னும் இடத்தில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளுடன் நடத்தினர். இந்நிகழ்ச்சிக்கு வேலப்பன் ஜெயக்குமார் அவர்களே முக்கிய பொறுப்பாளராக விளங்கினார். இந்நிகழ்விலே கனடாவில் வசிக்கும் பாபு வசந்தகுமார் அவர்கள் தயாரித்து அளித்த விபுலானந்த அடிகளாரின் ஆவணப்படம் வெளியீடு செய்யப்பட்டது. அத்துடன் மட்டக்களப்பு மாமாங்கப்பிள்ளையார் ஆலய இசை இறுவெட்டு அறிமுகமும் இடம்பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பிரதமவிருந்தினராக கனடாவில் இருந்து வருகை தந்திருந்த சுவாமி விபுலானந்த அடிகளாரின் ஆவணப்படத் தயாரிப்பாளர் பாபு வசந்தகுமார் கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினராக சமூக சிந்தனையாளரும், எழுத்தாளருமாகிய இராஜேஸ்வரி பாலசுந்தரம் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
மண்டபம் நிறைந்த மக்களுடன் மங்கள விளக்கேற்றல் என்னும் பாரம்பரிய நிகழ்ச்சி ஆரம்பமானது. ஜேர்மனி தமிழ் கல்விச்சேவை பொறுப்பாளர் பொன்னுத்துரை ஸ்ரீஜீவகன் அவர்களும், சிறப்பு விருந்தினர் இராஜேஸ்வரி பாலசுந்தரம் அவர்களும், மு.குமாரசாமி அவர்களும், க.சுந்தரலிங்கம் அவர்களும், திருமதி. அன்னலட்சுமி அவர்களும் மங்களவிளக்கை ஏற்றி விழாவை ஆரம்பித்து வைத்தார்கள். அதனை அடுத்து மெனள அஞ்சலி இடம்பெற்றது. அதனை அடுத்து தமிழ்த்தாய் வாழ்த்தை தமிழையும் இறைவனையும் ஒன்றாகவே காணுகின்ற விபுலானந்த அடிகளாரின் பாடல் ஒலிபரப்பப்பட்டது. அதனைத் தொடர்ந்து வேலப்பன் ஜெயக்குமார் அவர்கள் வரவேற்புரையை நடத்தினார்.
இந்நிகழ்ச்சியினை ஜேர்மனி தமிழ் கல்விச்சேவை செயற்குழு உறுப்பினரும் எழுத்தாளருமான சந்திரகௌரி சிவபாலன் அவர்களும் இராஜேந்திரம் சுயேந்திரன் அவர்களும் தொகுத்து வழங்கியிருந்தார்கள். நடன ஆசிரியை மதிவதனி அவர்களின் மாணவிகள் வரவேற்பு நடனத்தை ஆடினர். தொடர்ந்து இடம்பெற்ற நிகழ்ச்சிகளாக விபுலானந்த அடிகளாரைப் பற்றி திருமதி. சரளா விமல்ராஜ், திருமதி. ராதிகா திவாகரன், திருமதி புஸ்பலதா சுந்தரம், திருமதி. ஜீவா விஜயகுமாரன், திருமதி. விஜயகுமாரி தேவராஜா, திருமதி சாந்தினி சிவா, கல்லாறு சதீஸ் அவர்கள், ஆகியோர் உரை நிகழ்த்தினர்.
ஜேர்மனி தமிழ் கல்விச் சேவையின் பொறுப்பாளர் ஸ்ரீஜீவகன் அவர்கள் தலைமை வகித்தார். அவர் தன்னுடைய தலைமையுரையில் ஜேர்மனி தமிழ் கல்விச்சேவையின் 28 ஆவது ஆண்டுவிழாவிலே 07.10.2017 இலே சுவாமி விபுலானந்த அடிகளாரின் ஆவணப்படமும் மட்டக்களப்பு மாமாங்கப் பிள்ளையார் ஆலய இறுவெட்டும் வெளியீடு செய்யப்பட்டமை பற்றியும் விபுலானந்த அடிகளார் பன்முகப்புலமை பற்றியும் விபுலானந்த அடிகளாருக்கு உலகம் முழுவதும் விழா எடுக்க வேண்டிய அவசியம் பற்றியும் எடுத்துரைத்தார். ஜேர்மன் தமிழ் கல்விச்சேவை செயற்குழு உறுப்பினர் சந்திரகௌரி சிவபாலன் அவர்கள் சுவாமி விபுலானந்த அடிகளாரின் பன்முகப்புலமை என்ற தலைப்பில் உரையாற்றி ஆவணப்பட வெளியீட்டுரையினையும் வழங்கினார். தொடர்ந்து செயற்குழு உறுப்பினர்களாகிய அம்பலவன் புவனேந்திரம் அவர்கள் மாமாங்கப்பிள்ளையார் இறுவெட்டுரையினையும் விபுலானந்த அடிகளார் பற்றிய கவி ஒன்றினையும் வடித்தார், திருமதி. ஜெகதீஸ்வரி மகேந்திரன் சுவாமி விபுலானந்த அடிகளார் பற்றி கவிப்பா வடித்தனர். அதன் பின் ஜேர்மனி தமிழ் கல்விச்சேவை உறுப்பினர்கள் விழாவைச் சிறப்பாக ஒழுங்குபடுத்தி நடத்திக் கொண்டிருந்த வேலப்பன். ஜெயக்குமார் அவர்களையும், ஆவணப்பட தயாரிப்பாளர் பாபு வசந்தக்குமார் அவர்களையும் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்துக் கௌரவித்தனர்.
அதன்பின் ஆவணப்படம் சபையோருக்குப் போட்டுக் காட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆவணப்படம் வெளியீடும், மட்டக்களப்பு மாமாங்கப் பிள்ளையார் ஆலய இறுவெட்டு வெளியீடும் இடம்பெற்றது.
சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட திருமதி இராஜேஸ்வரி பாலசுந்தரம் தன்னுடைய ஆய்வுக் கட்டுரையனை வாசித்து அளித்தார். இவரை நிகழ்ச்சி அமைப்புக் குழுவினர் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தனர்.
இசை நிகழ்ச்சியினை சுந்தரலிங்கம் ஜேசான் உள்ளிட்ட மாணவர்கள் சிறப்பாக நிகழ்த்தியிருந்தனர். பங்குபற்றிய அனைத்து மாணவர்களுக்கும் விழா அமைப்புக்குழுவினர் நினைவுப்பரிசினை வழங்கினர்.
ஆவணப்படத்தை நெறியாள்கை செய்த சீவகன் பூபாலரெட்ணம் அவர்கள் அரங்கம் வானொலி, பத்திரிகையை நிகழ்த்திக் கொண்டிருப்பவர் ஸ்கைப் மூலமாக இலங்கையில் இருந்து பேசினார். அதனைத் தொடர்ந்து ஆவணப்படத் தயாரிப்பாளர் பாபு வசந்தகுமார் அவர்கள் தன்னுடைய உரையில் இவ் ஆவணப்படத் தயாரிப்பில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி எடுத்துரைத்தார்.
இளையராகங்கள் ஹரோக்கி இசைக்குழு உரிமையாளர் இரஞ்சன் அவர்களே ஒலிஒளி அமைப்புக்கு அனுசரணை வழங்கியிருந்தார். புகைப்படங்கள் எடுப்பதற்கு கேதீஸ்வரன் அவர்கள் அனுசரணை வழங்கியிருந்தார். மட்டக்களப்பு காரைதீவு மக்கள் உணவுகளைப் பரிமாறி அனைத்து மக்களையும் மகிழ்ச்சிப்படுத்தினார்கள்.
முடிவுவரை அனைவரும் பொறுமையாக இருந்து நிகழ்ச்சியைச் சிறப்பாக நடத்திக் கொடுத்திருந்தனர்.
விழா நிகழ்வுப் பகிர்வு அருமை. பாராட்டுகள்.
பதிலளிநீக்குசுவாமி விபுலானந்தரின் 126வது ஆண்டு விழா வையொட்டி சுவிட்சர்லாந்தில் முதற் தடவையாக விழா நடைபெற்றது அளவில்லா ஆனந்த்தை தருகின்றது.சுகுஅண்ணனின் முழு பொறுப்பில் நடைபெற்ற இந்த விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. நமது முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் வாழ்க்கை வரலாற்றினை நாம் என்றும் கொண்டாடுவோம். நன்றி .விஜீவா .சுவிஸ்
பதிலளிநீக்கு