உயிரினில் பாதி, மனிதரில் எத்தனை நிறங்கள்
இரு நூல்கள் ஒரு மேடையில் ஜேர்மனி எழுத்தாளர் சங்க அனுசரணையுடன் வெளியீடு
16.06.2019 அன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 14.30 மணியளவில் திரு.திருமதி.சிவராஜா தம்பதிகளின் உயிரினில் பாதி(கவிதை), மனிதரில் எத்தனை நிறங்கள் (சொல்லோவியம்) என்னும் இரண்டு நூல்கள் Internationales Zentrum, Flachsmarkt – 15, 47051
Duisburg என்னும் இடத்தில் மிகச் சிறப்பாக வெளியிடப்பட்டது. இந்நூலுக்கான வெளியீட்டு அனுசரணையை ஜேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கம் வழங்கியிருந்தது.
எழுத்தாளரும், மண்சஞ்சிகையின் ஆசிரியருமான திரு.வ.சிவராஜா மனிதரில் எத்தனை நிறங்கள் என்னும் சொல்லோவியத்தையும், திருமதி. இராஜேஸ்வரி சிவராஜா உயிரினில் பாதி என்னும் கவிதை நூலையும் எழுதியிருந்தார்கள். இந்நிகழ்ச்சி அனைத்தையும் அறிவிப்பாளரும், நடன ஆசிரியையும், ஜேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்க உறுப்பினருமான திருமதி. சாந்தினி துரைரங்கம் தொகுத்து வழங்கியிருந்தார்.
மங்கள விளக்கேற்றல், மௌனஅஞ்சலியுடன் நிகழ்வுகள் ஆரம்பமானது. தமிழ்மொழி வாழ்த்துப்பாடலை சங்கீத ஆசிரியை கலைவாணி ஏகானந்தராஜாவும் அவர் மாணவியும் பாடினார்கள். வரவேற்பு நடனம் திருமதி.சாந்தினி துரைரங்கத்தின் மாணவிகள் வழங்கினார்கள். வரவேற்புரை திரு.திருமதி.சிவராசா தம்பதிகளின் மகளான திருமதி. சிவதர்சனி பிரங்ளினால் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து எசன் தமிழ்மொழிச்சேவை கலாசார மன்ற மாணவிகள் வரவேற்பு நடனத்தை வழங்கினர். அதனைத் தொடர்ந்து ஜேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் அம்பலவன் புவனேந்திரன் அவர்கள் தலைமையுரை வழங்கினார்.
அதன்பின் நூல் வெளியீடு இடம்பெற்றது. திருமதி.இராஜேஸ்வரி சிவராசா எழுதிய உயிரினில் பாதி என்னும் கவிதை நூல் செல்வன் பிரணவன் யோகராசாவினால் வெளியீடு செய்து வைக்கப்பட அதன் முதல் பிரதியினை எசன் தமிழ்மொழிச் சேவை கலாசார மன்ற தலைவரும், தமிழார்வலரும், தொழிலதிபருமான திரு. சிவஅருள் பெற்றுக் கொண்டார்.
வ.சிவராசா அவர்களால் எழுதப்பட்ட மனிதரில் எத்தனை நிறங்கள் என்னும் நூலை செல்வன் பிரணவன் யோகராசா வெளியீடு செய்து வைக்க முதல் பிரதியை மொழிபெயர்ப்பாளரும் கௌரவ விருந்தினருமாகக் கலந்து கொண்ட திரு.ஐ.இரகுநாதன் பெற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து அவரின்கௌரவ விருந்தினர் உரை இடம்பெற்றது.
உயிரினில் பாதி என்னும் கவிதை நூலைத் தமிழாசிரியர், கவிதாயினி நகுலா சிவநாதன் விமர்சனம் செய்தார். அடுத்த நிகழ்வாக எசன் தமிழ் கலாசார மன்ற மாணவியின் தனிநடனம் இடம் பெற்றது. அதனைத் தொடர்ந்து மனிதரில் எத்தனை நிறங்கள் என்னும் நூலை எழுத்தாளரும், தமிழார்வலருமான செல்வன் சி.சிவவிநோபன் விமர்சனம் செய்தார்.
விமர்சன உரைகளை அடுத்து நூல்களைப் பார்வையாளர்கள் பெற்றுக் கொண்டனர். அதனை அடுத்து ஜேர்மனி தமிழ் கல்விச்சேவை தலைவர் திரு.பொ.சிறிஜீவகன் சிறப்புரையாற்றினார். ஜேர்மனி தமிழ்கல்விச் சேவையினால், திருமதி. இராஜேஸ்வரி சிவராசா பொன்னாடை போர்த்தி, மாலை அணிவித்துக் கௌரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்வைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினராகக் கலந்து சிறப்பித்த வெற்றிமணி பத்திரிகை ஆசிரியர் கலாநிதி.மு.க.சு. சிவகுமாரன் அவர்கள் உரையாற்றியதைத் தொடர்ந்து திருமதி. கலைநிதி சபேசனுடைய மாணவிகளின் நடனம் இடம்பெற்றது.
அதன்பின் பிரதமவிருந்தினராகக் கலந்து சிறப்பிக்க சுவிஸில் இருந்து வருகை தந்திருந்த கல்வியியல் முதுமாணிப்பட்டதாரியும், ஜெனீவா கலை இலக்கியப் பேரவைத் தலைவருமான க. அருந்தவராசா அவர்கள் பிரதம விருந்தினர் உரையை வழங்கினார்.
அதனை அடுத்து ஜேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கச் செயலாளரும், எழுத்தாளருமான திருமதி.சந்திரகௌரி சிவபாலன்(கௌசி), தமிழ் ஆர்வலரும், சமூக செயற்பாட்டாளருமான திரு.இ.இரமேஸ்வரன், ஆன்மீக சொற்பொழிவாளர் திரு.குகதாசன், சங்கீத ஆசிரியை திருமதி.கலைவாணி ஏகானந்தராஜா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
அதனை அடுத்து திருமதி.இராஜேஸ்வரி சிவராசா, திரு.வ.சிவராசா ஆகியோரின் ஏற்புரை இடம்பெற்றது.
பிற்பகல் 18.00 மணியளவில் நூல்வெளியீட்டு நிகழ்வுகள் சிறப்பாக முடிவுற்றது. வருகை தந்திருந்த அனைவருக்கும் திரு.திருமதி.சிவராசா தம்பதிகளினால் இராப்போசனம் அன்புடன் பகிர்ந்தளிக்கப்பட மனநிறைவுடன் அனைவரும் விடைபெற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.