சூரியனின் கவர்ச்சி இல்லாவிட்டால் பூமியால் நிலையாகச் சரியாக தன்வழிப் பாதையில் சுழலமுடியுமா? புவியீர்ப்பு சக்தியின்றி மனிதர்களால் நிலைத்து நிற்க முடியுமா? கண்ணுக்குத் தெரியாது எங்கோ ஒரு மூலையில் இருந்து எம்மை அறியாமலும் அறிந்தும் பலரின் பங்களிப்புக்கள் எம்முடைய உயர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கின்றன. எண்ணம் எம்முடையதாக இருந்தாலும் எம்மைத் தூக்கி நிறுத்த ஒருவர் துணைவருவார் என்பது உண்மையே. தற்போது பல நிறுவனங்கள், வியாபார ஸ்தாபனங்கள், விஞ்ஞானிகள், கண்டுபிடிப்பாளர்கள் என அனைவரின் வளர்ச்சிக்குப் பின்னே பலரின் உழைப்பும் உதவியும் தியாகங்களும் அடங்கியிருக்கும்.
கோடீஸ்வரன் பில்கேட்ஜ் உயர்வுக்கு அடிப்படையில் அவர் நண்பன் Paul allem இருந்திருக்கின்றார். விஞ்ஞானி ஸ்ரீபன் ஹார்க்கின் ஆராய்ச்சிக்கும் ஆற்றலுக்கும் பின்னே டிக்ரான் தஹ்ரா (Dikran Tahta) என்னும் கணித ஆசிரியர் இருந்திருக்கின்றார். கற்பித்தலில் மட்டுமன்றி அவரை சக்கர நாற்காலியில் தள்ளிக் கொண்டு செல்வது வரை அவரின் பங்களிப்பு இருந்திருக்கின்றது. நோய்வாய்ப்பட்டு தற்கொலைக்கு முயற்சியில் இருந்த போதும் அவரைக் காப்பாற்றி தன்னுடைய முயற்சியினால் ஹார்க்கிங் ஐ முன்னுக்கு கொண்டுவர கூடவே இருந்து காதலையும் அன்பையும் பகிர்ந்து கொண்டு ஒரு காதலியாக மனைவியாக தாதியாக கூடவே பயணித்தவர் ஜேன் ஹார்க்கிங் (Jane Hawhing) ஆவார். இவர்களின் ஒத்துழைப்பும் உதவியும் இல்லாது விட்டால் வெறும் முகத்தசைகளின் அசைவை மட்டும் வைத்துக் கொண்டு வானத்தை நோக்கி ஸ்ரீபன் ஹார்க்கிங் ஆராய்ச்சிகள் நிகழ்த்தியிருக்க முடியுமா? வாடிக்கையாளர்களை நம்பியே உற்பத்தியாளன். அவனை ஊக்கிவிக்கும் வங்கிகள் என உயர்ச்சிக்குப் பின் பல கைகள் மறைந்திருக்கும் என்பது உண்மையே. நாம் காணும் உலகத்தை விட்டு இந்த பிரபஞ்சமும் இப்படித்தான் இயங்குகின்றது.
இன்று நாம் போற்றும் இரண்டு இதிகாசங்களான மகாபாரதம், இராமாயணம் என்னும் இரண்டையும் எடுத்து நோக்கினால். இவை வெளிவருவதற்கும் காரணகர்த்தாக்கள் இல்லாமல் இல்லை. கம்பர் கம்பராமாயணத்தை எழுதிவிட்டு இதனை அரங்கேற்றுவதற்கு உதவி நாடி சடையப்ப வள்ளலிடம் செல்கின்றார். அவரோ சோழ மன்னனிடம் கம்பரை அனுப்புகின்றார். மன்னனோ தன்னுடைய அரசிலே உள்ள சிக்கல்களைக் காரணம் காட்டி திருவரங்க ஆச்சார்யார்களுக்கு திருவோலை அனுப்புகின்றான். ஆனால் அவர்களோ தில்லைவாழ் அந்தணர்களின் ஒப்பிதல் பெற்றுவரும்படி அனுப்புகிறார்கள். அப்போது பாம்பு தீண்டி இறந்த ஒருவனை நாகபாசத்துப் பாடல்கள் பாடி வியாசர் உயிர்ப்பித்தாராம். அதன் பின்புதான் அவருடைய காவியம் சிறப்பு என்று தீட்சிதர்கள் ஒப்பிதல் கொடுத்தார்களாம். இவ்வாறு அலைந்து திரிந்து இறுதியில் திருவரங்கம் சென்று அரங்கேற்றம் தொடங்கும் போது நஞ்சடகோபனைப் பாடினாயா? என்று ஒருவர் தடுத்தார். பின் சடகோபரந்தாதி பாடினார். அதன் பின் அரங்கேற்றம் தொடங்க பல எதிர்ப்புகள் வைணவர்களிடமிருந்தெல்லாம் தோன்றியது. இறுதியில் ஸ்ரீமன்நாத முனிகள் இரணியவதைப் படலம் ஒன்றே போதும் கம்பரின் காப்பியம் தெய்வீக காப்பியம் தான் என்பதற்கு ஐயம் இல்லை. இது காப்பியத்தில் இடம்பெறலாம் என்றாராம். ஒரு நூல் அரங்கேற எத்தனை சோதனைகளைத் தாண்ட வேண்டும் என்பது தற்காலத்திலிருப்போர்க்குப் புரியாது. ஆனால், ஒரு நூல் வெளிவர பலரின் உதவிகள் இருந்திருக்கின்றன என்பதை அறியக் கூடியதாக இருக்கின்றது.
இதேபோல் மகாபாரதத்தை வியாசர் சொல்லச் சொல்ல பிள்ளையார் எழுதியதாகவும் நிறுத்தாமல் வேகமாகப் பாடவேண்டும் என்று பிள்ளையார் நிபந்தனையிடப் பாடலைப் புரிந்து கொண்டு எழுத வேண்டும் என்று வியாசர் கட்டளையிட்டார். சம்மதித்த பிள்ளையார் வேதவியாசர் சொல்லச் சொல்ல எழுதிய வேகத்தில் பிள்ளையாரின் எழுத்தாணி உடைந்தது. உடனே தன்னுடைய தும்பிக்கையின் தந்தத்தை உடைத்து பிள்ளையார் எழுதினார் என வரலாறு கூறுகின்றது. இவ்வாறு மாபாரதத்தின் தோற்றத்தில் பிள்ளையாரின் பங்கு இருந்திருக்கின்றது.
சங்க இலக்கியங்களிலே அகத்திணைப் பாடல்களில் வெகுவாகப் பேசப்படுபவர் தோழி. காதலன் காதலியிடையே காதல் மலர்வதற்கும் இரவுக்குறி பகற்குறி என்று சந்திப்பு நிகழ்வதற்கும் தோழியின் அர்ப்பணிப்பும் ஆலோசனைகளும் மிகுந்து இருந்திருக்கின்றன.
“அந்தணர் பெரியோய்! அவலமின்றி இருமின்
கோதாவரியின் குளிர்பூஞ்சாரலில்
அச்சம் ஊட்டிய ஞமலியை இன்று
கதமிகு சீயம் கடித்துக் கொன்றதே||
இப்பாடலின் சந்தர்ப்பம் காதலர் சந்திப்புக்கு தோழியின் உதவியை அழகாக எடுத்துக் காட்டுகின்றது. கோதாவரிக் கரையிலே ஒரு பூஞ்சோலையில் காதலர் இருவரும் சந்திக்க எண்ணினர். ஆனால், அதற்கு முன்னமே அந்த இடத்தில் ஒரு அந்தணர் உலாவிக் கொண்டிருக்கின்றார். அவரை எப்படி அந்த இடத்தில் இருந்து அனுப்பலாம் என்று எண்ணிய தோழியானவள் அந்த அந்தணர் நாய்க்கு அஞ்சுபவர் என அறிந்து வைத்திருக்கின்றாள். எனவே அவரிடம் சென்ற தோழி “நீ அஞ்சாதே அந்த நாயை ஒரு சிங்கம் கொன்று விட்டது என்கின்றாள். நாய்க்கு அஞ்சுபவர் சிங்கம் என்றால் அந்த இடத்தில் நிற்பாரா? இவ்வாறு காதலுக்கு உதவிய தோழியர் அர்ப்பணிப்புகள் பற்றி சங்கப் பாடல்கள் பல எடுத்துக்காட்டுகின்றன.
இவ்வாறு ஒருவரின் மகிழ்ச்சிக்கும் உயர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் வெற்றிக்கும் பலரின் தியாகங்களும் ஒத்துழைப்புக்களும் உதவிகளும் நிச்சயம் அமைந்திருக்கும் என்பது உண்மையே.
வணக்கம்
பதிலளிநீக்குஉண்மையில் ஒருவரின் வளர்ச்சிக்கு பின் யாறோ ஒருவர் இருப்பார் நிச்சயமாக. தங்களது பதிவின் வழி பல விடயங்களை கற்றேன் வாழ்த்துக்கள்
அன்புடன்
ரூபன்
அருமை...
பதிலளிநீக்கு