"தூங்கி எழுந்தால் பூமி உனக்குப் படுக்கை ஆகிறது. எழுந்து நடந்தால் அதுவே உனக்குப் பாதையாகிறது" - டாக்டர் அப்துல் கலாம்
எவருமே வெறுக்காமல் எல்லோருமே விரும்பிய ஏவுகணைகளை விட மாணவர்களின் வினாக்களுக்கு விடை தருவதை பெருமையாக நினைத்த டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் பற்றிய அப்துல் கலாம் வாழ்வில் 100 அரிய நிகழ்ச்சிகள் என்ற புத்தகம் பற்றிய என்னுடைய பார்வை.
இந்த நூலை குடந்தை பாலு அவர்கள் எழுதியிருக்கின்றார். இதை வாசித்த போது அப்துல்கலாம் அவர்கள் மேல் எனக்கு இருந்த மதிப்பு இன்னும் ஒரு படி மேல் உயர்ந்தது. இப்படியும் ஒருவர் வாழ்ந்திருக்கின்றார் என்று பெருமையாக அவரைப் பற்றி நினைத்தேன். 15.10. 1931 ஆம் ஆண்டு இராமேஸ்வரத்தில் ஒரு சின்னஞ் சிறிய கிராமத்தில் வறுமைக் கோட்டில் பிறக்கின்றார். 27. 7. 2015 ல் I.A.M மாணவர்களிடம் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது மாரடைப்பால் இறக்கின்றார்.
இதற்கு
இடைப்பட்ட காலப்பகுதியில் நடைபெற்ற சில சம்பவங்களை ஆசிரியர் குடந்தை பாலு அவர்கள் தொகுத்திருக்கின்றார். அவருடைய
இந்த நூல் உலகத்துக்கு இவர் ஆற்றிய சிறந்த பணி என்றே கருதுகின்றேன். அவர்
எடுத்துக் காட்டியதில் சிலவற்றையே நான் கொண்டுவருகின்றேன்.
டாக்டர் அப்துல் கலாமிடம் ஒரு நல்ல ஆசிரியருக்கு என்ன தகுதி வேண்டும் என்று ஒரு மாணவன் கேட்டபோது அவர் ஆசிரியர் பணியை விருப்பத்துடன் செய்ய வேண்டும் வாழ்க்கை முழுவதும் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும் அத்துடன் ஆசிரியர் புனிதமான வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும் என்றாராம்.
கல்புத்தூர் என்ற சிற்றூரில் இருந்த சுடர்க்கொடி என்ற ஒரு மாணவி டாக்டர் அப்துல் கலாமிடம் விஞ்ஞானி தமிழன் மனிதன் இந்தியன் இவர்களை நீங்கள் வரிசைப்படுத்துங்கள் என்று கேட்டாளாம். அதற்கு அப்துல் கலாமும் மனிதனுக்குள் மற்ற மூவரும் அடங்கி இருக்கிறார்கள் என்று ஒரு நுட்பமான பதிலை கூறினாராம்.
டாக்டர்
அப்துல் கலாம் ஐந்தாம் வகுப்பு ராமேஸ்வரம் தொடக்கப் பள்ளியில் படித்துக்
கொண்டிருந்தபோது அந்த கால வழக்கத்தின்படி தலையிலே தொப்பி அணிந்திருந்தாராம்.
அவருக்குப் பக்கத்திலே பூணூலும் குடுமியுமாக அவருடைய நண்பன் ராமநாத சாஸ்திரி என்ற
பிராமணர் சிறுவனும் அமர்ந்திருந்தானாம். இவர்களுடைய வகுப்பிற்கு வந்த ஆசிரியர் கலாமை
பார்த்து கடைசி வரிசையில் போய் இருக்கச் சொன்னாராம். இதை தந்தையிடம் சென்று ராமநாத
சாஸ்திரி அவர்கள் கவலையுடன் முறையிட்டாராம்.
இதைக்
கேட்ட அவனுடைய தந்தை லட்சுமணனை சாஸ்திரிக்கு அடக்க முடியாத கோபம் வந்து குழந்தைகள்
கள்ளம் கபடம் இல்லாதவர்கள் அவர்கள் மனம் பரிசுத்தமானவை அவற்றில் உயர்ந்தவன்
தாழ்ந்தவன் போன்ற நச்சு கருத்துக்களை புகுத்த கூடாது இறைவன் என்பவன் ஒருவனே
சம்பிரதாயங்கள் தான் வேறு வேறு ஆனது என்று அறிவுரை கூறினாராம் இதுதான் கலாமுடைய
வாழ்க்கையில் ஆழ்மனதில் பதிந்து எல்லா மதத்தினரையும் மதிக்க கூடிய பக்குவத்தைக்
கொடுத்தது என்று அவர் கூறுகின்றார்.
அப்துல்
கலாமுடன் இணைந்து பேராசிரியர் அருண் திவாரி சில நூல்களை எழுதி இருக்கிறார். அவர்
கலாமிடம் ஐயா உங்களுடைய வாழ்க்கையைப் பற்றி சுருக்கமாகச் சில வரிகள் கூறுங்கள்
என்று கேட்ட போது
அன்பைக் கொட்டி
வளர்க்கப்பட்ட
ஒரு குழந்தை
வளர்ந்ததும்
போராட்டம் மேலும் போராட்டம்
துன்பத்தை
வெளிப்படுத்தும் கண்ணீர்
பின்
ஆனந்தக் கண்ணீர்
இறுதியில்
எழில்
நிலவின்
உதயம்
காண்பது போன்ற நிறைவு
என்றாராம்
.
போலியோவால் பாதிக்கப்பட்டு 3, 4 கிலோ எடையுள்ள செயற்கைக்கால் அணிந்த குழந்தைகள் நடப்பதற்குக் கடினப்படுவதைக் கண்டு ஏவுகணைக்குப் பயன்படுத்தும் பொருள்களைக் கொண்டு ஃப்ளோர் ரியாக்ஷன் ஆர்தொஸிஸ் என்ற எடை குறைவான 300 400 கிராம்கள் மட்டுமேயுள்ள செயற்கைக் கால்களைத் தயாரித்தார். அதனை அணிந்த குழந்தைகள் மகிழ்ந்ததைக் கண்ட அவர் அணு சோதனையிட்டது ஏவுகணை செலுத்தியது என இவற்றை விட இந்த செயற்கை கால் கண்டுபிடிப்பைத் தான் நான் பெருமையாக நினைக்கிறேன் என்று கூறி மகிழ்ந்தார்
திருச்சி பீமநகர் எஸ் டி ஏ மெட்ரிகுலேஷன் பள்ளி முதலாம் வகுப்பு மாணவன் உங்களின்
சிரிப்பு, புத்திசாலித்தனம், சுறுசுறுப்பு இவை எனக்கு மிகவும்
பிடிக்கும். எதிர்காலத்தில் உங்களைப் போலவே நானும் அறிவு ஜீவியாக வேண்டும். அதுவே
என் லட்சியம் என்று ஒரு கடிதம்
எழுதி அனுப்பினானாம். அதற்கு டாக்டர் அப்துல் கலாமும்
அன்புள்ள சமீர்! கற்பது படைப்பு திறனைத் தரும் படைப்புத்திறன் சிந்தனைக்கு
வழிகாட்டும். சிந்தனை அறிவைத்தரும். அறிவு உங்களை உயர்ந்த மனிதனாக்கும் என்று
பதில் எழுதி அனுப்பினார்
இவ்வாறு மற்றவர்களைப் பற்றிய சிந்தனை மட்டுமே தன்னுடைய நோக்கமாகக் கொண்டிருந்த கலாம் அவர்களுக்குத் தனக்கென்று சொந்தமாக வீடு கிடையாது, சொத்து, சுகம் ,வாங்கி சேமிப்பு என்று எதுவும் கிடையாது. குடும்பம், குழந்தைகள் என்று யாரும் இல்லை ஆனால் அவருக்கு எல்லாமே இருந்தது. அவரை நேசிக்க பல கோடி இதயங்கள் இருந்தன இந்தியாவில் ஒவ்வொரு வீடும் அவரது வீடாக இருந்தது
குடியரசுத்தலைவர் பதவியில் நிறைவான பணியாற்றி புது டில்லியில் இருந்து புறப்பட்ட போது அவர் கையில் இரண்டு சிறு பெட்டிகள் ஒரு பை முழுக்கத் தன்னுடைய சொந்தப் புத்தகங்கள் மட்டுமே கொண்டு வெளியேறுகின்றார். பலர் அவருக்கு பரிசுப்பொருள்கள் கொடுத்த போது என்னுடைய தந்தை ஒருபோதும் பரிசுப் பொருள்களை வாங்காதே என்று அறிவுரை கூறினார் என்று எதனையும் வாங்காது செல்கின்றார்
இவ்வாறு இந்த நூல் முழுவதும் டாக்டர் அப்துல் கலாம் என்ற
உயரிய மனிதன் பற்றிய சிறப்பான பல நிகழ்ச்சிகள் கொட்டி கிடக்கின்றன. ஆசிரியருக்கு
நன்றி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.