சிவனுக்கு 1 இராத்திரி சிவராத்திரி என்பது போல் சக்திக்கு 9 இராத்திரிகள் நவராத்திரி என்று நவராத்திரி விழா கொண்டாடப்படுகின்றது. இவ்வாண்டு 2020 இல் ஐப்பசி மாதம் 17 ஆம் திகதியில் இருந்து 26 ஆம் திகதி வரை நவராத்திரி விழா கொண்டாடப்படுகின்றது. அம்மன் முதல் 3 நாட்களும் வீரத்தைக் கொடுக்கின்ற துர்க்கை அம்மன் உருவத்திலும் அடுத்து வரும் 3 நாட்கள் செல்வத்தைக் கொடுக்கின்ற இலக்குமி உருவத்திலும் இறுதி 3 நாட்கள் கல்வியைக் கொடுக்கின்ற சரஸ்வதி உருவத்திலும் காட்சியளித்து பக்தர்களுக்கு பலனளிப்பாள் என்பது காலம் காலமாக நாம் அறிந்து வரக்கூடியதாக இருக்கின்றது. மனிதனுக்கு அவசியமான கல்வி,செல்வம்,வீரம் பற்றியும், சக்தியின் 3 வடிவங்கள் பற்றிய குறியீட்டு விளக்கங்கள் பற்றியதே இப்பதிவின் முக்கிய நோக்கம்.
ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு முக்கியமான 3 விடயங்கள் இருக்கின்றன. அவைதான் கல்வி, செல்வம், வீரம் என்பவை. இவை மூன்றும் முறையாக அமைந்துவிட்டால் வாழ்க்கை மகிழ்ச்சிதான். அப்படியானால் உடல்நலம் இல்லையா என்று கேட்டுவிடாதீர்கள் ஏனென்றால் அறிவுள்ள ஒருவரால் உடல்நலத்தைச் சரியான முறையில் பராமரிக்க முடியும். அதில் முதலாவது அறிவு. அந்த அறிவை வளர்த்துக் கொள்ளவே நாம் கல்வி கற்கின்றோம். இந்த அறிவு பல தேடல்களின் மூலமே எமக்குக் கிடைக்கின்றது. தேடிப்பெற்ற அறிவின் மூலமே நாம் செல்வத்தைத் தேடிக் கொள்ளுகின்றோம். இந்த செல்வத்தையும் அறிவையும் பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்படுகின்ற போது சக்தி எமக்குத் தேவைப்படுகின்றது. இந்த சக்தி எனப்படும் வீரம் கல்வியையும் செல்வத்தையும் எம்மிடம் அழியவிடாது பாதுகாக்கும்.
அறிவு என்பது படிப்பதனால் மட்டும் வருவதில்லை. அனுபவத்தினாலும் இந்த அறிவு வரும். அந்த அறிவைப் பெற்ற மனிதன் தன்னுடைய சாதுரியத்தால் பணம் புகழ் போன்றவற்றைச் சம்பாதிக்கின்றான். அறிவுக்கும் வீரத்துக்கும் என்ன தொடர்பு என்று நீங்கள் கேட்கலாம். வீரம் என்றால் துப்பாக்கி, வாள் எடுத்துப் போரிடுவது மட்டும் வீரம் அல்ல. ஒரு சபையிலே தைரியமாகத் தன் கருத்தைச் சொல்வதும் வீரமே.
பொய்யுடை ஒருவன் சொல் வன்மையினால்
மெய் போலும்மே மெய் போலும்மே
மெய்யுடை ஒருவன் சொல மாட்டாமையினால்
பொய் போலும்மே பொய் போலும்மே
என்று வெற்றிவேற்கையில் அதிவீரராம பாண்டியன் கூறியிருக்கின்றார். தைரியமாக ஒரு சபையிலே தன் கருத்தை ஒருவன் சொல்லாமல் விட்டால் அவன் கூறுவது பொய்யாகவே போய்விடும். ஆனால், தைரியம் உள்ளவன்தன் பொய்யான கருத்தை சொல்வன்மையினால், சொல்லி உண்மையானவனாகிவிடுவான். அதனால், கற்றிருந்தால் மட்டுமே போதாது. அதை வெளிப்படுத்தும் தைரியமும் வேண்டும் அதனாலேயே வீரம் ஒவ்வொருவருக்கும் தேவைப்படுகின்றது.
சக்தியின் குறியீட்டு விளக்கங்களைப் பார்ப்போம். கல்வியைத் தருகின்ற சரஸ்வதி தாமரையில் வீற்றிருக்கின்றாள். ஒரு பூவில் ஒருவர் அப்பூ வாடாமல்,கசங்காமல் அமர்ந்திருப்பது முடியாத விடயம். இது ஒன்றும் மெஜிக் அல்ல. கடவுள் இருக்கலாம் என்றும் கூறமுடியாது. அப்படியானால், குறியீடாக சரஸ்வதி வெள்ளைத் தாமரையில் வீற்றிருக்கின்றார் என்னும் விளக்கத்தையே நாம் பார்ப்போம். நீரளவேயாகுமாம் நீராம்பல் என்றார் ஒளவை. நீரின் மட்டத்திற்கு மேலேயே தாமரை மலர் இருக்கும். அதேபோல் கற்றவர்கள் என்றுமே எங்குமே தாழ்ந்து போவதில்லை. இதை உணர்த்தவே வெண்தாமரை கீறப்பட்டுள்ளது. உண்மையில் துறையுறக் கற்றவர்கள் தூய்மையாக இருக்க வேண்டும். சிறுகறை பட்டாலும் அவர்களைக் காட்டிக்கொடுத்துவிடும். தன்னைத்தான் காதலனாயிற் எனைத் தொன்றும் துன்னற்க தீவினைபால் என்றார் திருவள்ளுவர். கல்வி கற்றுத் தீங்கு வராமல் தன்னைப் பாதுகாப்பவன் தன் அறிவைக் கொண்டு வேறு யாருக்கும் தீங்கு வராமல் பார்த்துக் கொள்வான். அதனாலேயே வெண்தாமரையின் மேல் சரஸ்வதி வீற்றிருக்கின்றாள்.
செந்தாமரையில் இலட்சுமி வீற்றிருப்பது ஏனென்றால், அதிகளவு செல்வம் வைத்திருப்பவன் எப்போதும் தன் பணச் செல்வாக்கால் மேலே நிற்பான். பணம் பத்தும் செய்யும் என்னும் பழமொழி இருக்கின்றது. ஆகவே அந்தப் பணம் ஆபத்தானது. அந்தப் பணத்தைச் சரியான வழியில் ஈட்டாமலோ செலவு செய்யாமலே பாதுகாக்காது விட்டால் ஆபத்தானது என்பதைக் குறிப்பதற்கே சிவந்த தாமரையில் இலட்சுமி வீற்றிருக்கின்றாள்.
வீரத்தைச் சொல்லத் தேவையில்லை. சிங்கவாகனத்தில் துர்க்கை அம்மன் வீற்றிருக்கின்றார் என்றால் வீரத்துக்கு வேறு எடுத்துக்காட்டுக்கள் தேவையில்லை. காட்டுக்கு அரசன் என்று சொல்லப்படும் சிங்கம் நல்ல கேட்கும் திறன் கொண்டது. மிருகங்களை அடித்து உண்டு எலும்புடன் தசைகள் இருக்கும் வண்ணம் விட்டுச்; செல்லும். அந்தத் தசைகளை மற்றைய ஓநாய் கழுதை போன்ற விலங்குகள் உண்ணும். அதன் பின் நீண்டகாலம் வேட்டையாடாது. ஒரு மனிதன் எவ்வளவு தான் வீரனாக இருந்தாலும் மற்றவர்கள் கூறுவதற்காகத் தன் தைரியத்தைக் காட்டக் கூடாது. தேவை ஏற்படும் போது மட்டுமே தன் கேட்குந் திறத்தால் சரியென்று படுவதையே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக சிங்க வாகனத்தில் துர்க்கை அம்மன் படம் வரையப்பட்டுள்ளது.
இப்போது புரிகின்றதா? இந்து மத காரியங்கள் அனைத்தும் குறியீட்டு அம்சங்கள் மூலம் விளக்கப்படும் போது மதத்தின் அறிவியல் உண்மைகளைப் புரிந்து கொள்வோம்.
அறிவியல் விளக்கங்களை ரசித்தேன்.
பதிலளிநீக்கு