பெண்ணைப் பெற்ற பெற்றோர் அவளை ஒரு ஆணிடம் கையளிக்கும் வரை யார்
பொருத்தமானவன் என்று தேடிக்கொண்டே இருப்பார்கள். அலை அடித்துக் கொண்டுதான் தான்
இருக்கும். காற்று வீசிக் கொண்டுதான் இருக்கும். பெற்றோரும் வரன் தேடிக்கொண்டுதான்
இருப்பார்கள். ஏனென்றால் தனித்து ஒரு மனிதனால் இன்பமாக வாழ்ந்துவிட முடியாது.
அதனால் பொருத்தம் தேடி இரு மனங்களைப் பொருத்திவிடுகின்றார்கள். ஆனால், தேடி
ஆராய்ந்து, சேர்த்துவைக்கும் திருமணங்கள் சில ஆண்டுகளில் மனப்பொருத்தம் இன்றி ஒருவரை
ஒருவர் குறை கூறிய வண்ணம் பிரிந்து அகன்று
விடுகின்றன.
காரணம் தான்
என்ன? தேடிவைத்தல் நன்றா? அவர்கள் தேடிக்கொள்ளல் நன்றா? வாழ்க்கை என்பது ஒரே
ஒருமுறைதான் . இதை ஆத்திகனும் நம்ப வேண்டும். நாத்திகனும் நம்ப வேண்டும். மறுபிறப்பு
உண்டென்று நம்பும் ஆத்திகன் கூட நம்பவேண்டியது மறுபிறப்பில் அவன் சூழல் வேறு,
சொந்தம் வேறு, வாழ்க்கை வேறு, ஏன் .... அவனே வேறு. முற்பிறப்பு பற்றி ஒரு அணுக்
கூட அவனால் புரிந்து கொள்ளமுடிவதில்லை. புரியாது வரப்போகின்ற மறு பிறப்புக்காக
புரிந்து கொள்ள வேண்டிய இப்பிறப்பில் அனுபவிக்க வேண்டிய எத்தனையோ விடயங்களை இழந்து
வாழ்வோர் பலர். இவ்வாறு இருக்கும்போது
பிறந்த பிறப்பை மனிதன் புரிந்து நடந்து கொள்ள வாழ்க்கையைப் பூரணமாக வாழவேண்டும். அதில்
பிரிவுகளோ இணைவுகளோ காரணத்தோடுதான் நடக்க வேண்டும்.
கலாச்சாரம்
என்ற பெயரிலும் பிறர் எம்மைப்பற்றி என்ன நினைத்து விடுவார்கள் என்னும் தன்மான
உணர்விலும், அந்தஸ்து வெறியிலும் இளைய தலைமுறைகளின் எதிர்கால வாழ்க்கையை
சீரழிக்கும் எத்தனையோ பெற்றோர்கள் எம்மிடையே இருக்கின்றார்கள். எமது பிள்ளைகளின்
குடும்ப வாழ்வு என்று நினைத்து அவர்கள் சந்தோசமே எமது சந்தோசம் என்று ஒவ்வொரு
பெற்றோரும் நினைக்கின்ற பொழுதே பொருத்தமான கணவனைப் பெண்ணுக்கும் பொருத்தமான மனைவியை
ஆணுக்கும் தெரிவு செய்ய முடியும்.
பொதுவாகவே
பொருத்தம் பார்த்து தேர்ந்து செய்கின்ற திருமணங்கள் குடும்பங்களின் நிலைமைகளை
கருத்தில் கொண்டு செய்யப்படுகின்றன. இதில் பணம் என்பதை மீறி பண்பை கவனித்தல்
அவசியமாகின்றது. ஐந்து விரலும் ஒன்றாக இல்லாவிட்டாலும் ஒரு மரபணுவில் இருந்து
வரும் பிள்ளைகளுக்கு அந்த மரபணுத் தாக்கம் இல்லாது விடாது. சகோதரர்களிடையே
ஒற்றுமைப் போக்கு சிலவிடயங்களில் காணப்படும். அதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.
குடும்பத்தில் ஒருவருக்கு இருக்கின்ற குணமானது மற்றைய சகோதரர் சிலரிடமாவது இருக்க
வேண்டும். முயற்சி இல்லாத சில சகோதரர் இருந்தால் மற்றையவரிடமும் அக்குணம் இருக்க
சந்தர்ப்பம் இருக்கின்றது. ஒருவர் கோபக்காரனானால் மற்றையவர்களிடமும் இக்குணம் இருப்பதற்கு சந்தர்ப்பம் இருக்கின்றது.
குடும்பப் பழக்க வழக்கங்கள் எவ்வாறு கூட வருகின்றது
என்றால் ஒன்றாக வளருகின்ற சகோதரர்கள், ஒருவரை ஒருவர் பார்த்து வளருகின்ற போது பழக்கவழக்கங்கள்
அவ்வாறே பின்பற்றப்படுகின்றன. பேசுகின்ற தன்மை, நடவடிக்கைகள், சமூகப்பார்வை அனைத்துமே ஒன்றாக அமைகின்றன. தொற்று வியாதி போல் கூடவே இருந்து மூளை கற்றுக்
கொள்ளும் விடையங்களாக இவை அமைகின்றன.
திருமணங்கள்
முறிவடைந்து விடக்கூடாது. என்று அக்கறை கொள்ளும் பேற்றோர் இதனாலேயே குடும்ப
நிலைமைகளைக் கவனத்தில் கொண்டு திருமண ஒப்பந்தங்கள் செய்கின்றார்கள். ஆனால், இளந்தலைமுறையினர் இதை உணர்ந்து கொள்வதில்லை. நான்
குடும்பத்தை திருமணம் செய்யவில்லை. அவரைத்தான் திருமணம் செய்யப் போகின்றேன் என்று அடம்
பிடிக்கின்ற இளையவர்கள் பெற்றோர் அனுபவத்தை சிந்தித்துப் பார்த்தல் வேண்டும்.
அத்துடன் பேற்றோர் பார்க்கும் பொருத்தம் சரிதானா என்னும் பரிசீலனை செய்யும்
உரிமையும் ஒரு பெண்ணுக்குத் தேவை.
காதல்
உணர்வினால் இணைந்து கொள்ளும் இளந்தலைமுறையினர் கூட தற்செயலாக வருகின்ற ஒரு
ஈர்ப்புக்குத் தம்மை முழுமையாக ஈடுபடுத்த முயலுதல் கூடாது. எதிர்காலம், திருமணம், குடும்ப
வாழ்க்கை, குடும்ப மகிழ்ச்சி, யதார்த்தம் இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டே
திருமணத்தை முடிவு செய்தல் வேண்டும். முடிவு செய்த பின் முறித்துக் கொள்ள
முன்வருவதை விட முதலிலேயே முயற்சி செய்து தனக்கு வரும் கணவனை புரிந்து கொண்டு
திருமணம் செய்வது அவசியமாகின்றது. அதற்கு எத்தனை காலமும் பொறுத்திருக்கலாம்.
திருமணத்தின் முன் அவரைப் புரிந்து கொள்ள அவருடன் பழக முடியாது என்னும் பிற்ப்போக்கான
எண்ணத்தைக் கைவிட்டுவிடுங்கள். நன்றாக நண்பர்களாகவே பழகிப் பாருங்கள். முடிவை
எடுத்துவிட்டு முறிக்க முயலாதீர்கள். உண்மைக்கும் போலிக்கும் வேறுபாடு கண்டுகொள்ள
முடியாதவரை உங்கள் எதிர்கால வாழ்வு நரகமே என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது
அவசியம். காதலித்து விட்டேன். அவனைத் திருத்த முடியும் என்று நீங்கள் நம்பினால், அதை
நடத்தி காட்டும் தைரியம் உங்களிடம் இருக்கின்றதா என்னும் நம்பிக்கையைப் பரிசீலனை
செய்து பாருங்கள்.
திருமணம்
செய்துவிட்டீர்களா? குடும்ப வாழ்க்கை சிக்கலானது. பொறுப்புக்கள் நிறைந்தது.
அதேபோல் இப்பிறப்பும் அழகானது. அதை சிக்கல் நிறைந்ததாக மாற்றி வாழும் காலம்
முழுவதும் மகிழ்ச்சி இல்லாது, அழுது புலம்பி இப்படியே இருந்து இறந்து விடுவோம்
என்றுமட்டும் எண்ண வேண்டாம்.
பொறுப்புக்களும்
பொறுமையும் மனிதனுக்கு இருக்க வேண்டியது அவசியமே. அது கணவன் மனைவி இருவருக்கும் அவசியமானது.
பிரச்சனை என்று வரும் போது பேசித்தீர்க்கும் மனநிலை இருவருக்கும் அவசியம்.
மனம் திறந்து இருவரும் பேசும் சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும். குற்றம் யாரிடம்
உள்ளதோ மன்னிப்புக் கேட்கும் மனநிலை அவரிடம் இருக்க வேண்டும். குற்றத்தை யாராக
இருந்தாலும் ஏற்றுக் கொள்ளும் நல்ல மனம் தேவை. எதையும் ஆற அமர இருந்து
சிந்திக்கும் குணம் வேண்டும். ஆத்திரம் அறிவைக் கெடுக்கும். சிறுவிடயத்தைக்
கூட ஆறுதலாக ஏற்றுக் கொள்ளாது, ஆத்திரப்பட்டு காட்டுக் கூச்சல் போடுவதும் காது
கிழியக் கத்துவதும், கூட இருக்கும் குடும்பத்தினரைப் பாதிப்பதுடன் இக்குணம்
அனைவரையும் பற்றிக் கொள்ளும். குடும்ப அமைதி சீரழிந்து போகும். மனநிலையில்
பாதிப்பு ஏற்படும். எனவே பொறுமைசாலிகளை தேடிக்கொள்ளுங்கள்.
தேடல்
நிறைந்த வாழ்வில் எதிர்பார்ப்புக்கள் நிறையவே இருக்கும். கணவன் தன்னைத்
தாங்க வேண்டும் என்று மனைவியும், மனைவி தன்னைத் தாங்க வேண்டும் என்று கணவனும்
நினைப்பது இயற்கை. அவர்கள் ஆசைக்கேற்ப சின்னச் சின்னப் பரிசில்களை அல்லது அரவணைப்பை
இருவரும் பகிர்ந்து கொள்ள வேண்டும். அன்பும் ஆதரவும் இல்லை என்றால் ஏக்கம் இருவர்
மத்தியிலும் இருப்பதுடன் இடையில் சிறிய இடைவெளி வந்துவிடும். எனவே உங்களுக்காக ஏங்கும்
ஒரு பொருத்தத்தைத் தேடுங்கள்.
முயற்சி இல்லாத ஒரு மனிதனால் தன்னையும் தன்
குடும்பத்தையும் மகிழ்ச்சியில் வைத்திருக்க முடியாது. கிடைக்கின்ற
சந்தர்ப்பத்தைச் சரியான முறையில் பொறுமையுடன் கையாளத் தெரிந்திருக்க
வேண்டும். காலத்தைக் குறைகூறி காரியத்தைக் கைவிட்டு விடக்கூடாது. வாழ்க்கையை
முன்னிலைக்குக் கொண்டுவரும் எண்ணமே நோக்கமாக
இருக்க வேண்டும். கையில் இருக்கும் பணத்தைக் கரைப்பதை விட பெருக்குவதைப் பற்றிச்
சிந்திக்க வேண்டும். அடுத்தவர்களை விட நானே நம்பர் 1 என்னும் எண்ணத்தை மனதில்
பதிக்க வேண்டும். அவர்களே முன்னேறத் துடிப்பவர்கள். மமதையை விட்டு மனங்களைப்
போற்றி வாழ்வில் முன்னேற்றம் காணும் பொருத்தத்தைத் தேடுங்கள் வாழ்வில் மகிழ்ச்சி
காண்பீர்கள்.
பணத்தை
மட்டும் குறியாகவும் பாசத்தை ஒரு சிறு பகுதியாகவும் கொள்ளும் பொருத்தமும்
வாழ்க்கையில் கசப்பை ஏற்படுத்தும். உண்மைப்பாசம் மனதில் இருந்தால் மனைவி
பிள்ளைகளுக்காக நேரத்தை ஒதுக்கும் மனநிலை கணவனுக்கு ஏற்படும். அதனால் உண்மை
அன்பைத் தேடிப்பெறுங்கள். எனது குடும்பம், எனது வாழ்க்கை, எனது குடும்பத்தின்
மகிழ்ச்சி என்று எண்ணும் பொருத்தத்தை பொறுமையாகத்
தேடுங்கள்.
வாழ்க்கை
முறியாது வாழ வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், உங்கள் கண்கள், அறிவு ஆராய்ச்சி
கொள்ளட்டும். முயன்று வெல்லுங்கள். பிறகு பார்த்துக் கொள்வோம் என்று அசட்டையாக
விட்டுவிட்டீர்களேயானால் வாழ்க்கை
சூனியம். அதிலிருந்து மீளமுடியாது. பிரிந்து வாழுகின்றபோதும் மனதில் பெரிய
சுமையுடனே வாழ்வீர்கள். சமுதாயத்திடையே கரை பூசப்பட்டவர்களாவே காணப்படுவீர்கள்.
உங்களிடம் உள்ள உண்மை, அதாவது சரியான தீர்மானம் யாருக்கும் புலப்படாது. உங்களிடமுள்ள
குறைகளே பேசப்படும். நிறைகள் வீசப்படும். அதனால் பின் வரும் பழியைவிட முன் வரும்
பழி மேலானது.
ஒருமுறையே
வாழ்கின்றோம். அதை இன்பமாக வாழுங்கள்.
திருமண முறிவுகள் எண்ணிக்கையில் அதிகரித்துப் போகும் இக்காலகட்டத்திலே
எதிர்காலத் தலைமுறைக்கான இப்பதிவை படிப்பவர்கள் என்னால் தவற விடப்பட்ட விடயங்கள்
இருந்தால், அதனை உங்கள் பின்னூட்டத்தில் சேர்த்திக் கொள்ளுங்கள். நன்றி
மிக மிக அற்புதமான
பதிலளிநீக்குஇன்றைய சூழலில் மிக அவசியமான பதிவு
மிக மிக ஆழமாகச் சிந்தித்து
அதி அற்புதமானப் பதிவினை
மிக மிக நேர்த்தியாகத் தந்தமைக்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
நல்லது சொல்லி இருக்கிறீர்கள் மனதில் கொள்ளவேண்டியது இன்றைய அவசியம்
பதிலளிநீக்குவாழ்வது ஒரு முறை
பதிலளிநீக்குவாழ்ந்து பார்ப்போம் மகிழ்வாக
அற்புதமான கட்டுரை சகோதரியாரே
இளைஞர்கள் மட்டமல்ல அனைவருமே அறிய வேண்டிய
செய்திகள்அடங்கிய பதிவு
நன்றி சகோதரியாரே
அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய கருத்துகளுடன் பகிர்வு அருமை...
பதிலளிநீக்கு