• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    புதன், 9 மார்ச், 2011

    காலக்கணிப்பீடும் என் கருத்தின் ஆழமும்



    அவள் உடல் வனப்பென்ன. மொழிச் சிறப்பென்ன. நடை எடுப்பென்ன. பெற்றோர் செதுக்கிய நடமாடும் சிற்பம். அறிவு தேடிவந்து ஒட்டிவளரும் மூளையின் சொந்தக்காரி. நட்பின் குணம் தஞ்சம் அடைந்த தகுந்த இதயம். 21 வயது இளநங்கை. அவள் பெற்றோர் நெஞ்சிலோ தகதகப்பு. இக்காலப்பகுதி இவள் உயிருக்கு ஆபத்து. கவனமாய் இருத்தல் வேண்டும் என காலக்கணிப்பீட்டுச் சாதகர் சாற்றிய வரிகளின் சாட்டையடி. எத்தனை கோயில்கள் உண்டோ அத்தனை கோயில்களிலும் நேர்த்திக்கடன். ஆண்டவனிடமே கடனா? என் மகளைக் காப்பாற்றி தாருங்கள் (இது கடன்) பெற்ற கடனைப் பண்டமாற்றாக கற்பூரச்சட்டி, காவடி, விரதம், தூக்குக்காவடி, சங்கிலி, உடுக்கப் பட்டு, இப்படி தருகிறேன் என்று பேச்சுவார்த்தை. ஆனால், பலன் என்ன? வாகனமென்னும் காலன் வந்து உயிர்வடிவம் தூக்கிப் பறந்து போக உடல் தரையில் சாய்ந்தது. 
                  இது சம்பவம். மனச்சஞ்சலம் இப்போது தேடுகின்றேன். சாத்திரம் பொய்யா? கணிப்பீடு பொய்யா? இல்லை. உண்மை என்று உரைக்கிறது சம்பவம். இப்படித்தான் நடக்கும் என்று உயிர்கள் பிறக்கும் போது ஒழுங்கமைப்புச் செய்யப்பட்டுவிட்டால், பின் எதற்காக இறைவனுடன் பேச்சுவார்த்தை. இப்படித்தான் நடக்கும் என்பது விதியானால், விதியை மதியால் வெல்லலாம் என்பதும் ஒரு வரியானால், அந்த விதியை மதியால் வெல்லலாம் என்னும் ஒரு விதியும் இருந்திருக்க வேண்டும் அல்லவா. 
                   உயிர்ப்படைப்பின் ஆரம்பநிலை முடித்து அவற்றின் தொழிற்பாடு நடைமுறை அனைத்தும் விதியென்று விதித்துவிட்டு அனந்தசயன நிலையில் விஷ்ணு பள்ளி கொள்ளுகின்றார் என்றும் ஞானநிலையில் சிவன் கண்மூடித் தியான நிலையில் வீற்றிருக்கின்றார் என்றும் எடுத்துக் காட்டும் வரைபடங்கள், அக்காலம் அநுபவித்த மனிதர் கூற்றுக்கள்தானோ! இதனால்தான் கத்தினாலும், நேர்த்தி வைத்தாலும் ஆவது ஒன்றுமில்லாமல் ஆகிவிடுகின்றதோ. எப்போதோ Programm பண்ணப்பட்டுவிட்டது. நடந்தேயாகும். 
              பிரான்ஸ், சுவிட்சலாந்து எல்லையிலே பூமிக்கு அடியில் 300 அடி ஆழத்தில் 27 கிலோமீற்றர் நீளத்தில் ஒரு விஞ்ஞான ஆய்வுகூடம் அமைத்து, உயிர்கள் தோற்றம் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் விஞ்சிய ஞானத்தால் மெய்யான ஞானத்தைத் தேடுகிறார்கள். இந்நிலையும் உயிரை ஆக்கியோன் ஒழுங்குபடுத்திய வளர்ச்சிப் படியின் ஒரு நிலையே தான். ஆய்வுகள் அனைத்தும் முடித்து அற்புதம் வெளிப்படும் நிலையில் அற்புதமாய் வாழ்ந்த உயிரினங்கள் மடியக் காரணமாய் இருந்த பிரளயம் தோன்றுமோ. பிரளயத்தின் பின் மீண்டும் உயிரினங்கள் தோன்றுமோ! அனந்தசயன நிலை என்று பலரால் உரைக்கப்படும் நிலை விழிக்குமோ! மீண்டும் மனிதன் போன்ற ஒரு உயிரினம் பிறக்குமோ! யாரறிவார்.
          நினைப்பது யாவும் நடப்பதில்லை.
           நினைக்காத எதுவோ நடக்கிறது
           தவிப்பது வாழ்வில் கிடைப்பதில்லை
           தவிக்காத எதுவோ கிடைக்கிறது
           நடப்பது எதுவோ நடக்கட்டுமென 
           இருப்பதுவும் வாழ்வில் முடிவதில்லை
           இருக்கிற தெங்கோ இட்டபடி
           நடக்கிற ததுவே விட்டபடி

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    ஜெர்மனியில் தமிழர் பண்பாட்டு மாற்றம்

      ஆங்கிலேயர் , போத்துக்கேயர்கள், ஒல்லாந்தர்  தமது ஆட்சிக் காலத்தின் போது எமது நாடுகளில் தம்முடைய பண்பாட்டைக் கட்டாயமாகத் திணித்த நிலையிலிர...