உற்ற நட்பை உவப்புடன் கூற விரும்புகையில், மற்றைய நட்பையும் சுட்டிக்காட்ட விழைவது இயற்கையே. கண்டொன்று பேசி, கட்டியணைத்துப் பல நகைச்சுவைக் கதைகள் கூறிப் புறமதில் பல கதைகள் புனைந்து கூறும் நட்பும் ஒரு நட்பே. இந்நட்பானது அடியிலிருந்து கரும்பை நுனிவரை உண்பது போன்றது. இனிப்புச் சுவையானது, இன்பத்தை உடனே தந்து மேலே போகப்போக சுவை குன்றிப் போதலைப் போன்றிருக்கும் என முன்னமே நாலடியார் கூறி வைத்திருக்கின்றார். மனிதர்கள் மனதை வெட்டி ஆராய்ந்து நட்புக் கொள்ள முடியாது. அப்படியே வெட்டிப் பார்த்தாலும் பண்புகளை பிரித்தறியத்தான் முடியுமா? பழகிப் பார்த்தே மனிதன் பண்புகளை உணர முடியும்.
பெற்ற தாயிடமும் பிரியமுடன் துணைசேர்த்த துணையுடனும் பகிர்ந்து கொள்ள முடியாத எத்தனையோ விடயங்களை உண்மை நண்பரிடம் கூறி மனப்பாரம் குறைக்கின்றோம். தூய்மைக்கு இலக்கணமாய் உயிரினும் மேலாய்ப் போற்றிப் பாதுகாக்க வேண்டிய நட்பின் புனிதம் நோக்கியே வள்ளுவப் பெருந்தகை தன் அறிவுப் பெட்டகத்தில் தீ நட்பு, கூடாநட்பு, நட்பு, நட்பாராய்தல் என நான்கு அதிகாரங்களை எழுதி, விபரமாய் விளக்கியுள்ளார். பாரதி தன் ''கண்ணன் என் தோழன்' என்னும் பாடலில் தன்னை அர்ச்சுனனாகவும் கண்ணனைத் தோழனாகவும் பாவனை பண்ணி நல்ல நட்பின் இலக்கணங்கள் அத்தனையையும் கண்ணனில் கண்டு அழகாகப் பாடியுள்ளார்.
இதஞ் சொல்லி மாற்றிடுவான்
பிழைக்கும் வழி சொல்ல வேண்டுமென் றாலொரு
பேச்சினிலே சொல்வான்
உள்ளத்திலே கருவங்கொண்ட போதினில்
ஓங்கி அடித்திடுவான் - நெஞ்சில்
கள்ளத்தைக் கொண்டொரு வார்த்தை சொன்னாலங்கு
காறியுமிழ்ந் திடுவான்'
என நட்பின் இலக்கணங்களைக் கண்ணன் பாட்டில் அறியக்கூடியதாக இருக்கிறது. எனவே உண்மை நண்பன் உரிமையுடன் எதையும் எடுத்துச் சொல்ல வல்லவனாய் இருத்தல் வேண்டும்.
'காய் முற்றின் தீங்கனியாகும். இளந்தளிர் நாள் போய் முற்றின் என்னாகிப்போம்'' அதாவது காயானது, முற்றினால் உண்ணக் கூடிய இனிய பழமாகும். இளந்தளிரானது முற்றுமானால், முடிவில் சருகுபோல் போய் விடும். நல்லவர்களுடன் நாம் நண்பர்களாக இணையும் பொழுது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சியடைந்து முடிவில் அவர்கள் நட்பானது பழம் போல் இனிக்கின்ற இன்பத்தைப் பெறுவோம்.. கயவர்களுடன் பழகும் போது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து சருகுபோல் உயிரற்று பறந்து போவோம். என்பதை நன்னெறி நவின்றீன்ற சிவப்பிரகாசர் மூலம் அறிந்தோம். இதனையே தான் 'சேராத இடந்தனிலே சேர வேண்டாம்'' அதாவது நல்லிணக்கம் இல்லாதவர்களுடன் இணங்க வேண்டாம் என உலகநீதி கூறுகின்றது. கற்கக் கற்க நயம் பயக்கும் நூல் போல் பழகப்பழக இனிய நன்மை விளைவிப்பதே உண்மை நட்பாகும்
எனவே 'பேயோடு பழகினும் பிரிவதரிதே'' என மனதில் நினைத்துப் பேய் போன்ற குணநலம் மிக்க நண்பர்களுடன் காலம் முழுவதும் பழகுதல் மூடத்தனமாகும். பன்றியோடு கூடிய கன்றும் பவ்வி தின்னும்'' அதனால், பவ்வி தின்னும் பன்றியோடு பழகுதல் பழி சேர்க்கும் என்று 'பூவோடு கூடிய நாரும் மணம் பெறும்'' எனப் பூப் போன்ற நண்பர்களைத் தேடிப் பெற வேண்டும்;. கர்ணனுக்கோர் துரியோதனன், குசேலனுக்கோர் கண்ணன், ஒளவைக்கோர் அதியமான் என நாம் அறிந்த கதாபாத்திரங்களை நினைவில் நிறுத்தி கற்கக் கற்க நயம் பயக்கும் நூல் போல், பழகப்பழக இனிய நன்மை தரும் சிறந்த நட்பைத் தேடிப் பெறுவோம்.
நல்ல கருவினை முன்னிறுத்தி, அழகாக வனையப்பட்ட சொல்லோட்டமான உரைவீச்சு. வாழ்த்துகள் சகோதரி.
பதிலளிநீக்குநன்றி இராஐ. திhகராஜன் அவர்களே. இக்காலகட்டத்துக்கு மட்டுமல்ல. எக்காலத்திற்கும் சொல்லவேண்டிய தலைப்பே.
பதிலளிநீக்குமிக அழகான கவிதை துளிகள் !!! நன்றி ... வாழ்த்துகள்!!!
பதிலளிநீக்குநன்றி கோபிநாத் அவர்களே!
பதிலளிநீக்குKaddurai mikka nanru vaalthukal.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் என்றும் வளம் சேர்க்கும் நன்றி.
பதிலளிநீக்கு// அப்படியே வெட்டிப் பார்த்தாலும் பண்புகளை பிரித்தறியத்தான் முடியுமா? பழகிப் பார்த்தே மனிதன் பண்புகளை உணர முடியும்./
பதிலளிநீக்குஅழகான நட்பு பற்றிய அருமையான கட்டுரை..பகிர்வுக்கு நன்றி தோழி!...கண்ணன் என் தோழன் என்று சொன்ன எட்டயபுரத்துப் பாட்டன் சொன்ன வரிகளை அழகாகக் கொடுத்துள்ளீர்கள்!
அருமை!
நட்புடன்
நடராஜன்!
நன்றி நடராஐன் அவர்களே,
பதிலளிநீக்குநேரம் கிடைக்கின்ற போது ஆக்கங்களை வாசித்து உங்கள் மனப்பதிவுகளைத் தாருங்கள்.
அன்புடன்
கௌரி சிவபாலன்
நட்பின் நடப்பை
பதிலளிநீக்குநளினமாய் சொன்ன
” உண்மை நட்பை
தேடிப்பொருவோம் ”
உயர்த கருத்தை
உரசிப்பார்த்த சந்திரிக்கா
சக தோழியாய்
சந்தோசம் அடைகின்றோம்.
நன்றி தோழி.
பதிலளிநீக்கு