• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    புதன், 2 நவம்பர், 2022

    அபியால் முடியவில்லை





    "மணி 7 ஆகிறது. இன்னும் குறட்டைச் சத்தம் குறைந்த பாடில்லை. இரவு முழுவதும் முழித்திருந்து என்ன கன்றாவி எல்லாம் ரிவியில பார்க்கிறரோ தெரியாது. இந்தக் கர்மத்தைக் கட்டி இந்த நாட்டில வாழ வேண்டிக் கிடக்கிறது" வாய்க்குள் முணுமுணுத்தபடி கோகிலா வேலைக்குப் போகத் தயாரானாள். 

    "இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து

    அதனை அவன்கண் விடல்"

    என்ற வள்ளுவர் வாக்குப் போல் இவன் இதைச் செய்வான் என்று ஆராய்ந்து அவனிடம் அந்தத் தொழிலைக் கொடுக்க வேண்டும் என்று இயற்கை கீரனை கோகிலாக்குக் கட்டிக் கொடுத்திருக்கிறது. கோகிலாவின் முணுமுணுப்பெல்லாம் அவளுக்குள் மட்டும்தான் கேட்கும். வெளியே கேட்டால், மனிசன் துள்ளி வந்து குடலை உருவிப் போடுவான் என்ற பயம் அவளுக்குள் இருக்கிறது. 

    கீரன் நல்ல பட்டரும் கொழுப்பும் உண்டு பிள்ளைத்தாச்சிப் பெண்கள்போல வயிறு வளர்த்திருப்பான். மதியம்தான் அவனுக்குக் காலை. எழுந்து குளித்து சுவாமியறைக்குள் போனால், அரைமணி நேரம் வெளியே வராமல் பக்திப் பழமாகிவிடுவான். வெளியே போனால், இராசா மாதிரி நிமிர்ந்த நடையுடன் வெயிலென்ன பனியென்ன கோர்ட்டும் சூட்டும் போட்டுத் தன்னை ஒரு பணக்காரன் போல காட்டிக் கொள்ளுவான். கடையில் சாமான் வாங்குவதென்றால் கட்டுக் கட்டாகப் பேர்சில் பணத்தை வைத்து வெளியிலே மற்றவர்கள் பார்ப்பது போல் சாமான்கள் வாங்கக் காசு எடுத்துக் கொடுப்பான். 

    குடிக்கிறது கூழ். கொப்பளிக்கிறது பன்னீர். இந்த நாய் வேலைக்கும் போகாது. வீட்டிலயும் வேலை செய்யாது. ஆனால், கை நிறைய காசை காட்டிக் கொண்டு திரியும். இந்த அரசாங்கத்துக்கு என்ன மூளை. வருத்தம் வருத்தம் என்று வெளியில காட்டிறது. வீட்டுக்குள்ள மூக்குமுட்டத் தின்றது. சனங்கள் கஸ்டப்பட்டு வேலை செய்து ரெக்ஸ் கட்ட, இப்பிடியான ஏமாத்துக்காரனுகள் சொகுசா வாழுறானுகள். இதுக்குள்ள சோசலில இருக்கிறதுகளுக்கு கஸ்டம் என்று அரசாங்கம் நம்பி பணத்தைக் கட்டிக் கொடுக்கிறது. இந்தப் பாவங்களெல்லாம் எங்கே போய் முடியப்போகுதோ" என்று திட்டித் தீர்ப்பது கீரனுடைய மனைவி கோகிலாதான். கோகிலா தனக்குள்ளே தான் திட்டித் தீர்ப்பாள். அவளுடைய வாழ்க்கை ஒரு பிள்ளையுடன் முடிந்து விட்டது.  

    சுறுசுறுப்பும் ஆர்வமும் மிக்க தன்னுடைய வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என்று மனதுக்குள் கலங்குவாள். வீட்டுக்குத் தலைமகன் செய்ய வேண்டியது எல்லாம் ஒரு பெண்ணாகச் செய்கின்ற போது உடல்வலி தாங்காது தனியாக அழுது தீர்ப்பாள். மகனும் எப்போதும் எதையோ வெறித்துப் பார்த்துக் கொண்டே இருப்பான். 

    காலை வானம் வெளுக்க முன்னமே அவள் எழுந்து விடுவாள். ஒரு உணவகத்திலே அவள் நிலங்களைத் துடைத்து சமயலறையைத் துப்பரவு செய்து விட்டு வரவேண்டும். இங்கு வேலை செய்தால் ஒரு 100 ஒயிரோக்குப் பதிந்து விட்டு மீதமுள்ள காசைக் கையிலே கொடுப்பார்கள். இதனாலே அரசாங்கம் கொடுக்கின்ற அரசாங்கப்  பணத்தை விட கையில் கொஞ்சம் காசு புளங்கும். அப்படி உழைத்தாலேயே ஜெர்மனியில் கொஞ்சம் சொகுசு வாழ்க்கை வாழ முடியும். என்ன சொகுசுப் பணம் என்பதைத் தவிர வெளியே போய் வேறு 4 முகங்களைப் பார்த்தால் அவளுக்கு மனம் கொஞ்சம் நிம்மதியாக இருக்கும். அவருக்கு 100 ஒயிரோவில் சன்கிளாஸ், விலைகூடிய உடுப்பு, விடுமுறைக்கு வேறு எங்காவது நாட்டுக்குப் போக வேண்டும். இதற்கெல்லாம் எந்த நாடு சும்மா காசு கொடுக்கப் போகிறது. இந்த நாடுதான் சும்மா இருக்க காசு கொடுக்கிறதே. ஜெர்மனி உழைத்துச் சாப்பிடுபவர்களைத் தவிர ஏதாவது சாட்டுப் போக்குச் சொல்லி ஏமாற்றி அரசாங்கப் பணத்தில் வாழுகின்றவர்களுக்குத்தான் சலுகை செய்து கொடுக்கிறது என்று புளுங்குபவர்கள் தான் அதிகம்.  

    கோகிலாக்கும் கீரனுக்கும் ஒரே ஒரு மகன் அபி வளர்ந்து வாட்டசாட்டமாகத்தான் இருக்கின்றான். சிறுவனாக பாடசாலையில் ஆசிரியர்கள் எதுவுமே வாய்திறந்து பேசாத பெடியன் என்று சொல்வார்கள். அது இந்த நாட்டுக்குப் பொருந்தாதே. கோகிலா, கீரன் இருவரையும் ஆசிரியர் அழைத்து எப்போதும் பேசுவார்கள். உங்களுடைய மகன் சுமாராகப் படித்தாலும் கலகலப்புக் குறைவாகவே இருக்கின்றான் என்று அவர்கள் சொல்லுகின்ற போது வாய்பேச முடியாதவர்களாகவே அவர்கள் இருவரும் இருந்தனர். 

    கோகிலா படபடப்பாக வேலைக்குப் போக ஆயத்தமாகினாள். சமையலறைக்குள் மதியச் சாப்பாடு தயாரித்துவிட்டாள். காலைச் சாப்பாட்டுக்குரிய பாண் பட்டர், வூஸ்ட் என்னும் இறைச்சி எல்லாம் வைத்துவிட்டாள். முட்டை ஒம்லெட் போட்டு தட்டில் வைத்துவிட்டாள். அபியை பாடசாலைக்குப் போவதற்காக எழுப்பிவிட்டு அவசரமாகக் கதவைப் பூட்டிவிட்டு வேலைக்குத் தயாரானாள். 

    அப்பாக்குப் பக்கத்தில் படுத்திருந்த அபியும் பாடசாலைக்குப் போவதற்காக எழும்பினான். எழும்பியவனுடைய கையைப் பிடித்து இழுத்தான் கீரன். அப்பா பள்ளிக்கூடம் போக வேண்டும் என்று கையை உதறிய மகனை. ஒன்றுமே பேசாமல் மீண்டும் கட்டிப் பிடித்து இழுத்தான். அவனுடைய இறுகிய பிடிக்குள் அகப்பட்டான் அபி. அவனுடைய ஒவ்வொரு அங்கங்களும் கீரனால் ருசிபார்க்கப்பட்டன.  இளமையின் உச்சத்தில் வாலிப்பான உடற்கட்டில் மெருகேறிப் போன அவனுடைய அங்கங்கள் தன்னுடைய தந்தையின் காமவெறிக்குள் கட்டுப்பட்டுப் போனது. மெல்ல மெல்ல தன்னுடைய காமவெறியின் ஆற்றல் ஓய்ந்து போன நிலையில் கீரன் மீண்டும் போர்வைக்குள் அடங்கிப் போனான். 

    படபடப்புடன் எழுந்த அபியும் குளியல் அறைக்குள் போய்க் கண்ணாடி முன் நின்று சிலமணிநேரம் அழுது தீர்த்தான். தன்னுடைய முகத்தைப் பார்க்கத் தனக்கே பிடிக்கவில்லை. எத்தனை நாளாக இப்படிச் சித்திரவதையை அவன் அனுபவிப்பான். இதற்கு ஒரு முடிவு இல்லையா? பாசத்தோடு தூக்கி வளர்த்த பிள்ளையை இப்படி அனுபவிக்க எந்த மிருகம்தான் விரும்பும். எத்தனை ஆண்கள் இப்படி பாலியல் வன்முறைக்கு உட்படுகின்றார்கள் என்பதை அறியாதவர்கள் தான் அதிகம்

    ஒரு பிளேட்டை எடுத்தான். தன்னுடைய கைகளில் கீறிக் கீறி தன்னுடைய ஆவேசத்தைத் தீர்த்தான். நேரம் 8 ஐக் காட்டியது. இதற்குப் பிறகு பாடசாலைக்குப் போக முடியாது என்பதை உணர்ந்தான், ஏற்கனவே இவனுடைய கைகளில் இந்தக் கீறல் காயங்கள் அதிகமாகவே இருந்தன. எப்போதுமே நீண்ட கையுள்ள மேலங்கி அணியும் இவனுக்கு மட்டும்தான் தெரியும் தன்னுடைய மனதின் அழுகையும் வேதனையும். இந்தக் கைக் காயங்களின் வலியைவிடப் பெரியது அவனுடைய உளக் காயங்கள் என்னும் உண்மையை அவனுக்குத் தானே தெரியும். குளித்துவிட்டு பிளாஸ்டரை எடுத்து காயங்களின் மேல் ஒட்டினான். ஆடை மாற்றிவிட்டு வெளியே கிளம்பி விட்டான். 

    வீட்டை விட்டு வெளியே வந்த அபி நகரத்தின் அருகாமையில் போடப்பட்டிருந்த ஒரு கல் போன்ற இருக்கையில் அமர்ந்து கொண்டு நகரத்தின் நடமாட்டத்தைக் கவனித்துக் கொண்டிருந்தான். கொலோன் நகரம் எப்போதும் கலகலப்பாகவே இருக்கும். அங்குள்ள தேவாலயத்தைப் பார்ப்பதற்கு சுற்றுலாப்பயணிகளும் குவிந்து கொண்டிருப்பார்கள். அந்தத் தேவாலயத்துக்கு முன்னே கலைஞர்கள் பாடுவதும் படம் வரைவதும் என்று தம்முடைய ஆற்றல்களை வெளிப்படுத்திப் பணம் சம்பாதித்துக் கொண்டிருப்பார்கள். அங்கு வந்து இருந்தாலே போதும் பொழுது பஞ்சாகப் பறந்து போய்விடும். கவலைகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போகும். பாடசாலைக்குப் போகாமல் அபியும் அங்கு வந்து அமர்ந்து விட்டான். எண்ணங்களை தன் பாட்டிலே தவள விட்டபடி வாய்க்குள்ளே சிப்ஸ் ஐ அடைந்தபடி வருவோர் போவோரை உணர்ச்சியில்லாதவனாகப் பார்த்துக் கொண்டிருந்தான். 

    இங்குள்ளவர்கள் எத்தனை பேர் பாவச்சுமைகளையும், பழிச் சுமைகளையும், கவலைச் சுமைகளையும் வேதனைகளையும் மூட்டை மூட்டையாய்ச் சுமந்து கொண்டு போவார்கள். மனதைப் படம் பிடிக்கும் கருவி இருந்தால் எல்லாம் வெளிப்படையாகத் தெரியும்.

    அபியுடைய நண்பன் சுரேஸ் அன்று லீவு எடுத்திருந்தான். கொரொனாத் தாக்கத்திலிருந்து இப்போதுதான் மீண்டிருக்கின்றான். தற்செயலாக அபியைக் கண்டவன். ~~என்னடா அபி ஸ்கூலுக்குப் போகவில்லையா? என்று கேட்டபடி அருகில் வந்து அமர்ந்தான். பதில் இல்லாமல் தலையை மட்டும் இலலையென்று ஆட்டினான் அபி. என்னடா என்ன நடந்தது. என்றான். எதுவுமே பேசாமல் அபி இருக்க. பலமுறை அவனை அசைத்துப் பார்த்தான். இறுதியில் எப்படியோ போ. எதையோ பறி கொடுத்தவன் போல எப்படித்தான் எப்பவும் உன்னால் இருக்க முடிகிறதோ. ஆன்டியிடம் உன்னைப் பற்றிச் சொல்ல வேண்டும். அப்பாக்குத்தான் உன்னைப் பற்றி என்ன தெரியப் போகிறது. ஆன்டிதானே தாயுமானவள், தந்தையுமானவள் என்று சொல்லிவிட்டு நாளைக்கு ஸ்கூலுக்கு வா. சரிதானே. அதுக்கும் மௌனமா? என்னவோ போ என்று சொல்லிவிட்டுப் போனான். 

    அபிக்குத் தன்னை நினைக்க வெறுப்பாக இருந்தது. மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் எத்தனை நாளைக்குத் தான் நான் இப்படி வாழ்வது. வெளியில் சொல்லுகின்ற தைரியமும் இல்லாமல் நான் என்ன ஈனப் பிறப்பு பிறந்திருக்கிறேன். இப்போது சுரேசிடம் சொல்லியிருக்கலாமே. ஏன் என்னால் முடியவில்லை? என்று தன்னுடைய மனதை நினைத்துத் தவித்துக் கொண்டே இருந்தான். இந்த நேரத்திலே வேலை முடிந்து வந்து கொண்டிருந்தாள் கோகிலா.

    தூரத்தில் வருகின்ற போதே அபியைக் கண்டு விட்டாள். இந்த நேரத்தில் இவன் இங்கே இருந்து என்ன செய்கிறான். இவன் பள்ளிக் கூடத்துக்குப் போகாமல் இங்கே வந்திருந்து காவாலியாகத்தான் போகப் போகிறான் போல இருக்குது என்று நினைத்தபடி அவனருகே ஓடி வந்தாள். 

    "அபி..... " என்று அவனை அசைத்துப் பார்த்தாள். அவன் பதில் எதுவுமே பேசவில்லை. என்னடா ஏன்டா பள்ளிக்கூடத்துக்குப் போகவில்லை. நான் மாடுபோல் வேலை செய்வது உனக்காகத்தானே என்று அவனை அணைக்கப் போனாள். விரைவாக அவனுடைய கைகள் தாயுடைய கைகளைத் தட்டி விட்டது. அபி... என்னடா என்றாள். 

    "ஏன் உனக்குத் தெரியாதா? நடிக்காத அம்மா. என்னத்துக்கு என்னைப் பெத்தனீ? இப்படிப் பலி கொடுக்கவா? எல்லாம் உன்னாலதான். 

    "நான் என்னடா செய்றது? உனக்குத் தெரியும் தானே அவரைப்பற்றி. வா வீட்ட போவம்"

    நீ போ. நான் வரல்ல. வராமல் எங்கே போகப் போகிறாய்? பயத்துடன் அவள் கேட்டாள். 

    எங்கேயோ போறன். நீ உன்ர புருஷனுக்குச் சமைச்சுக் கொடுத்துத் தாலாட்டு. உனக்கு ஏனம்மா புள்ள? ஆத்திரத்தைக் கொட்டித் தீர்த்தான். என்ர வயசில பிள்ளைகள் எப்படியெல்லாம் திரியுதுகள். என்னால படிக்க முடியல்ல. நித்திரை கொள்ள முடியல்ல. இப்படியே போனால் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில தான் கொண்டு போட வேணும். விருக்கென்று எழுந்தான். 

    "எங்க போறாய் என்று இழுத்தாள் கோகிலா. இது இன்று நேற்றா மகன் நடக்கிறது. என்ன செய்வது வாய் திறக்க முடியாதவர்களாக நாங்கள் இருக்கிறோம். இவ்வளவு காலமும் கட்டிக் காப்பாத்தி வந்த மானமும் மரியாதையும் இவனால போகப் போகிறதே என்று தான் பயமாக இருக்கிறது. எப்படி இருந்த என்னை இந்த மிருகத்திட்டக் கட்டிக் கொடுத்திட்டார்கள். ஊருக்குத் தெரிந்தால், அதுகள் நிம்மதியா இருக்குங்களா?  என்றுதான் பார்க்கிறேன் என்றாள். 

    "ஓ.. ஓஹோ நீ உன்ர மானம் மரியாதையைப் பார்த்து இத்தனை நாளும் நடக்கிறதெல்லாம் தெரிஞ்சு தெரியாத மாதிரி இருக்கிறாய். உனக்கு ஊரில இருக்கிறவர்களுக்குத் தெரியக் கூடாது. மானம் மரியாதை போய்விடும். இவைகள் தான் முக்கியம். என்று சொல்லிவிட்டு விறுவிறு என்று எழுந்து நடந்தான். அவன் கால்களை விட மனம் வேகமாக ஓடியது. 

    பக்கத்தில் போகின்றவர்கள் எல்லாம் எதையோ மனதுக்குள் கொண்டு ஓடுவது போல் அவனுடைய கண்களுக்குத் தெரிந்தன. விடுதலை பெறத் துடித்த மனம் செய்வதறியாது துடித்தது. ஓடிக்களைத்து ஆறுதல் காண ஒரு தரிப்பிடத்தில் தரித்தது புகைவண்டி. 

    கோலோன் புகையிரத நிலையம் மக்களால் நெருங்கி வடிந்தது. நிற்பவர்களும் நடப்பவர்களும் முகத்திலே ஏதோ அவசரத்தைப் புதைத்துக் கொண்டு நடந்தார்கள், நின்றார்கள். பிரயாணிகளின் சலசலப்பு புகையிரத நிலையத்தில் குறைவாகவே இருந்தது. வாயை மூடிய மாஸ்க் போட்டு வருபவர்கள் போகின்றவர்களை அடையாளம் தெரியாமல் மறைத்திருந்தது. அவனுடைய உள்ளக்கிடக்கையும் அப்படித்தான். இந்த ரெயினில் குதித்து விடுவோமா? 

    இல்லை நான் ஏன் குதிக்க வேண்டும். வெலன்டீனா என்னிடம் எத்தனை தடவை நெருங்கியிருக்கிறாள். அவளுடைய அழகும் அன்பும் எனக்காகவே காத்துக் கிடக்கிறது. தமிழர்கள் போல் பிள்ளைகளுடைய மனதைப் புரியாதவர்கள் இல்லையே ஜெர்மனியர்கள். என்னை அவள் புரிந்து கொள்வாள் தானே. ஏன் அவளிடம் கூட என்னை வெளிப்படுத்த எனக்கு முடியவில்லை? ஒரு கோழையை வளர்த்து அவருக்குப் பணிவிடை செய்கின்ற என்னுடைய அம்மாவை நான் என்ன செய்வது? வெறுப்பு வெறுப்பாக அவனுடைய மனம் தத்தளித்தது. 

    இருக்கையை இறுக்கிப் பிடித்தபடி கைகால்கள் நடுங்க மனம் படபட என்று அடித்துக் கொள்ள கோகிலா நிசப்தமாக அழுகையைக் கட்டுப்படுத்தியபடி இருந்தாள். விடியல் என்பது தானாக வர வேண்டும் என்று அவள் நினைப்பது எந்த அளவுக்கு நடக்கும். வாழ வேண்டிய மகனை இப்படிச் சிறைக்குள் அடைத்து வைத்து வாழ்வது எந்த அளவிற்கு நன்மையில் முடியும். நடைப்பிணமாக எழுந்து வீட்டை நோக்கி நடந்தாள்.

    இரயிலினுள் ஒருவர் பின் ஒருவராக உள் நுழைகின்றார்கள். எப்படித்தான் சனநெருக்கடி என்றாலும், உள்ளே இருந்து இறங்குபவர்கள் முழுவதும் இறங்கிய பின்தான் வெளியே இருப்பவர்கள் உள்ளே நுழைவார்கள். இது எல்லாம் படித்து வருவதில்லை. பழக்கத்தால் வருவதுதான். அவன் நினைக்காமலே இரயிலினுள் ஏறிவிட்டான். அது வூப்பற்றால் தாண்டிப் போகின்ற இரயில். வூப்பற்றாலில் ஒரு அம்மன் ஆலயம் இருக்கிறது. இரயிலல் போகின்றவர்கள் இறங்கிப் போக அருகாமையில்த்தான் அமைந்திருக்கிறது. இன்று வெள்ளிக் கிழமை என்ற காரணத்தால் நிச்சயமாக் கோயில் திறந்திருக்கும். அங்கு போக அவனுடைய மனம் நினைக்கின்றது. சரி அங்கே போவோம் என்று நினைத்தபடி இருந்துவிட்டான். 

    இரயில் ஓட்டத்தில் எண்ணங்கள் வேகமாக ஓடுகின்றன. பக்கத்து சாளரத்தால் ஓடிப் போகின்ற மரங்களை அவனால் நிறுத்த முடியாது அதுபோல தன்னுடைய எண்ணங்களை நிறுத்த முடியவில்லை. ஆனால், மரங்கள் போல எண்ண அலைகள் மூளைக்குள்ளே பதியம் போட்டு வைக்கப்பட்டுவிட்டது. அப்போது மனதுக்குள் ஒரு தைரியம் வந்தது போல் உணர்வு தோன்றியது. இந்த உணர்வைக் கோயில் தந்ததா? இல்லை தானாகவே வந்ததா? கையிலே கைத்தொலைபேசி இருக்கிறது. பக்கத்தில் பலர் இருக்கின்றார்கள். ஆனால், அவனுக்கு எதிலுமே நாட்டமில்லை. கடந்த காலத்தை மட்டும் மீட்டிப் பார்க்கிறான். அவன் எவ்வளவு அடிமையாகக் கோழையாக இருந்திருக்கின்றான் என்று திரும்பத் திரும்ப மனம் சொல்லிக் கொண்டே இருந்தது. 

    கோயிலுக்குள் போய்க் கண்மூடி நிற்கிறான். பூஜை மாலை 7 மணிக்குத்தான் என்பது அவனுக்குத் தெரியும். அவன் பூஜை பார்க்க வந்தவன் இல்லையே. மன்றாட வந்தவன். தன் உள்ளத்தைப் பேசாத கடவுளிடம் திறந்து காட்டிப் பேச வந்தவன். கண்மூடி நிற்கிறான். வருபவர் போகின்றவர் எவருமே அவனுக்குத் தெரியவில்லை. கண்ணுக்குள் படம் ஓடுகின்றது. அத்தனையும், இத்தனை நாள் மறைத்து வைத்த அத்தனையும் சிற்பத்தின் முன் காட்டப்படுகின்றது. படம் ஓடி முடிந்தது. முற்றும் என்று படம் முடிந்துவிட்டது. திரும்பிப் பார்க்காமல் மீண்டும் ஒரு தெளிவுடன் இரயில் ஏறி வீட்டுக்கு வந்து விட்டான். 

    வீட்டின் கதவு திறபடக் கோகிலா ஓடி வந்தாள். வந்திட்டியா அபி. வந்திட்டியா அபி. வா சாப்பிட. கையக் கழுவிட்டு வா. நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன். குளியலறைக்குள் போனான். அது பூட்டிக் கிடந்தது. அப்போதுதான் கீரனுக்கு விடிந்திருக்கின்றது என்று தெரிந்தது. அறைக்குள்ளே போனவன் திரும்பவும் சமையலறைக்குள் வந்தான். என்னடா கைகழுவ இல்லையா? 

    எங்க கழுவ என்று கத்திவிட்டு சமையலறை பாத்திரங்கள் கழுவும் தொட்டிக்குள் கைகளைக் கழுவினான். கோகிலாவும் அபிக்கு சாப்பாடு எடுத்துக் கொண்டு நின்றாள். 

    பக்கத்தில் வந்த அபி லாச்சியைத் திறந்தான். கையில் எடுத்த மீன் வெட்டும் கத்தியால் முதலில் கோகிலாவின் முதுகில் குத்தினான். பெரிதாகக் கத்தியபடித் திரும்பியவளின் மார்பில் மீண்டும் கத்தி பதிந்தது. மூர்ச்சித்து விழுந்தாள். 

    கோகிலா கத்திய சத்தம் கேட்டு ஓடி வந்த கீரன் சற்றும் எதிர்பார்க்காத வண்ணம் அவனுடைய மார்;பிலும் கண்ட கண்ட இடங்களிலும் கத்தியைப் பல முறை ஆசை தீரப் பதித்தான். மலை சரிந்தது. கண் மூடித் திறப்பதற்குள் எல்லாம் முடிந்து விட்டது. இருவரையும் வெறித்துப் பார்த்த அபி மெதுவாக நடந்தான். 

    உலகத்தில் வாழக் கூடாதவர்கள். தண்டனை என்ற பெயரிலே ஜெர்மனிய 5 நட்சத்திர ஹொட்டல் போன்ற சிறையிலே தண்டனை அனுபவிப்பதற்கு அவன் விரும்பவில்லை. தொலைபேசியை அழுத்திய அபி. என்னுடைய அப்பாவையும் அம்மாவையும் நான் கத்தியால் குத்திக் கொன்று விட்டேன். என்னுடைய வீட்டு விலாசம் ஹேர்பேட் ஸ்ராச 43. என்று பொலிசுக்கு சொல்லிவிட்டு தொலைபேசியை வைத்தான். அந்த இடத்திலேயே நிலத்தில் இருந்து விட்டான். படபடவென்று வந்த பொலிஸார் பிரேதங்களை வெளியகற்றினார்கள். 

    சலனமில்லாமல் சுதந்திரப் பறவையாய் அபியின் உள்ளம் காற்றில் மிதந்து கொண்டிருந்தது




     





    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...