• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    சனி, 30 நவம்பர், 2013

    திருக்குறள்

                                          வள்ளுவர் பெருமையும் திருக்குறள் போட்டியும்




    வளமான வாழ்வதனை வாழ்உயிர்க்கு வழங்கவே
    செறிவான குறளமுதம் உவந்தளித்த வள்ளுவரை
    சிரந்தாழ்த்திப் போற்றியே சீரிய வாழ்வதனை
    சிறப்புடனே பேணி  சிறப்பதனை உணர்த்துவோம்.

    இக்காலவாழ்வு அக்கால வாழ்வுபோல் இல்லை. ஆனாலும் கசப்பான ஒரு உண்மை இற்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன் (அதாவது வள்ளுவர் ஆண்டு இன்றுள்ள ஆண்டுடன் 31 ஆண்டுகளைக் கூட்ட வரும் ஆண்டு) மனிதன் ஏற்று நடக்கவேண்டிய நடைமுறைகள் எதுவாக இருந்ததோ அதே நடைமுறைகள் இன்று வாழுகின்ற மக்களுக்கும் தேவைப்படுகின்றது. விஞ்ஞானம் வளர்ந்திருக்கின்றது. ஆனால், மனிதன் குணங்கள் அப்படியேதான் இருக்கின்றன.
                   
              அக்கால மக்கள் மத்தியில் இருந்த பிரச்சினைகளுக்கு அருமருந்தாக சின்னச்சின்னக் குளிசைகளாக குறள்வடிவத்திலே வள்ளுவர் தந்த மருந்துகள் இக்காலத்திற்கும் அதாவது 2000 ஆண்டுகள் கழிந்த பின்பும் மக்களுக்குத் தேவைப்படுகின்றது. அதனாலேயே வள்ளுவர் ஒரு தீர்க்கதரிசியாக விளங்குகின்றார்.

                திருவள்ளுவர் ஒரு துறவி, தத்துவமேதை, தலைசிறந்த புலவர். இவர் ஆதி, பகவன் என்னும் பெற்றோருக்கு சென்னையிலுள்ள மயிலாப்பூர் என்னும் இடத்தில் பிறந்ததாக வரலாறு கூறுகின்றது. இவர் 2000ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களுடன் மன்னர்களுடன் புலவர்களுடன் வாழ்ந்து அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையை உற்றுநோக்கி தனது அநுபவங்களை குறள்வடிவில் தந்திருக்கின்றார். பல இடங்களிலே தன்னம்பிக்கை ஊட்டுகின்ற வரிகள் மனித இனத்தினை உயர்வுக்குக் கொண்டு செல்வதற்காக வள்ளுவரால் தரப்பட்டுள்ளன . உதாரணமாக

    "உள்ளுவது எல்லாம் உயர்வுஉள்ளல் மற்றுஅது
     தள்ளினும் தள்ளாமை நீர்த்து"

    நீ எண்ணுகின்றவை உயர்வாகவே இருக்கட்டும். அது நிறைவேறவில்லையானாலும் நிறைவேறியதாகவே கருதப்படும்.   இந்த வரிகள் என்னை மிகவும் கவர்ந்த வரிகளாகக் கருதப்படுகின்றன. சிலர் கூறுவார்கள் காரிலே போகும் நீ சைக்கிளில் போகும் ஒருவனை நினைத்துத் திருப்திப்படு. சைக்கிளில் போகும் நீ நடந்து போகும் ஒருவனை நினைத்துப் பெருமைப்படு. நடந்து போகும் நீ காலில்லாத ஒருவனை நினைத்துப் பெருமைப்படு என்று. எமக்குக் கீழே உள்ளவர்களைநினைத்து நினைத்து  நாம் பெருமைப்பட்டுக் கொண்டிருந்தால், எப்போது நாம் முன்னேறுவது? எமக்கு மேலே உயர்வில் ஒரு உலகம் இருக்கின்றது. இந்த வாழ்க்கை ஒருமுறைதான் அதில் முயன்று முன்னேற நினைக்கவேண்டும். எண்ணமே செயல் வடிவம் பெறுகின்றது. இதுவே உள்ளுவதெல்லாம் உயர்வு உள்ளல்  என்பதாகும்.
              
    இவ்வாறு ஒரு விடயத்தைச் சொல்வதன் மூலம் வேறு ஒரு விடயத்தையும் விளக்கிவிடுகின்றார்.


    "கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
     சொல்லா நலத்தது சால்பு"

    சான்றாண்மை பற்றித்தான் சொல்ல வந்தார். ஆனால், தவம் என்பது உயிர்களைக் கொல்லாதததை அடிப்படையாகக் கொண்டது என்பதையும் சேர்த்துச் சொல்லிவிடுகின்றார். அதாவது உயிர்களைக் கொல்லாததுதான் தவம் என்று சொல்லப்படுவது. பிறருடைய குற்றங்களை எடுத்துச்சொல்லாதது தான் சான்றாண்மை எனப்படுகின்றது என்று சான்றான்மையையும் தவத்தையும் ஒப்பிட்டுக் காட்டுகின்றார். இதில் ஒன்றை நாம் ஆழமாகக் கவனிக்கவேண்டும். பிறருடைய குற்றங்களை கூறக்கூடாது என்றால் அதாவது, குற்றங்களைச் சுட்டிக்காட்டவில்லையானால், குற்றங்களிலிருந்து மனிதன் திருந்திவாழ வழி எங்கே இருக்கின்றது. சிலர் சில தவறுகளைத் தாம் அறியாமலே செய்கின்றார்கள். அப்போது அத்தவறுகளை அவர்களிடமே சுட்டிக்காட்டித் திருத்திக்கொள்ள நாம் உதவி செய்யவேண்டும். அதைவிட்டு ஒருவன் செய்த குற்றங்களை மற்றவர்களிடம் கூறிக்கொள்தல் சான்றாண்மையாகக் கருதப்படாது. என்று கருதிக் கூறாது விட்டால் குற்றங்கள் அதிகரிக்க நாமும் காரணமாகி விடுவோம் அல்லவா!   இங்குள்ள ஆழமான கருத்து பிறர் குற்றங்களை பிறரிடம் கூறாது குற்றம் புரிபவரிடமே எடுத்துரைக்க வேண்டும் என்ற கருத்தில் இக்குறளை நாம் உள்வாங்கலாம்.

         இந்தத் திருக்குறளிலே அதிகமாக என்னைப் பாதித்த திருக்குறள்

    "எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
     மெய்ப்பொருள் காண்ப தறிவு"

    ஏன் என்ற கேள்விகளைக் கேட்டு அதன் சரியான முடிவை எடுக்க வேண்டும். இதைத்தான் சாக்ரட்டீஸ் அவர்கள்,

    "யார் சொன்னார் எவர் சொன்னார் என்பதை விட்டுவிட்டு எவர் சொன்ன சொல்லையும் உனது சொந்த அறிவால் எண்ணிப்பார்"என்றார்.

    இக்குறள் ஒவ்வொரு இளையவர்கள் மனதிலும் ஆணி அடித்தது போல் பதியப்படவேண்டிய குறளாகும். அப்போதுதான் எதிர்கால வாழ்வில் மூடப்பழக்க வழக்கங்களும் மூடநம்பிக்கைகளும் தகர்த்து எறியப்பட்டு யதார்த்த உண்மை புலப்படும். பெற்றோர்களே! உங்கள் பிள்ளைகளின் வாயை அடைத்துவிடாதீர்கள். இது ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நான் எடுத்துரைக்கும் வரிகளாகின்றன.

            "கடுகைத் துளைத்து ஏழ்கடலைப் புகுத்தி குறுகத் தறித்த குறள் "
    என புலவர் இடைக்காடனார் பாடியுள்ளார். அதனையே இன்னும் ஒரு படி மேல்சென்று

    "அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டி குறுகத் தரித்த குறள்"

     என்று ஒளவையார் கூறியுள்ளார். அதைப்பிரித்தும் காட்டியுள்ளார். விஞ்ஞானி ஏர்னெஸ்ட் ருதர்போர்ட் அவர்கள் அணுவைப்  பிரிக்க முடியும் கண்டறிவதற்கு முன்னமே  ஒளவையார் அறிந்து வைத்திருந்தார் . ஒளவை கூறியதுபோல் அவ்வளவு ஆழமாக ஒன்றே முக்கால் வரிகளில் ஆழமான வாழ்வியல் உண்மைகளை வள்ளுவர் படைத்துள்ளார். எனவே திருக்குறளைப் படிக்கும் போது ஆழமாகவும் அழுத்தமாகவும் படிக்க வேண்டும்.


    "துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
    துப்பாய தூவும் மழை"

    உண்பவர்களுக்கு உணவுப் பொருள்களை உண்டாக்கி தந்து, தானும் அவர்களுக்கு உணவாக அமைவது மழை. ஆனால், தற்போது துப்பாக்கி என்பது ஒரு உயிரைக்கொல்லும் கருவியாகவே கருதப்படுகின்றது. வள்ளுவர் காலத்துப் பொருள் இக்காலத்தில் விளங்கிக் கொள்வது கடினமாகின்றது. அதனால், பொருள்நாடி ஆழமாக கற்கும்போதே அதன் இனிமை மேலோங்கும். வள்ளுவரும் நாம் வாழும் இக்காலத்தில் வாழ்ந்திருந்தால், நிச்சயமாக அகராதி துணை நாடியே இருப்பார். இது

    "பழையன கழிதலும் புகுவன புகுதலும் வழுவல கால வழக்கே" என்பதுடன் சம்பந்தப்பட்டது.

          திருக்குறளினுள் நாம் சில இடங்களில் ஒன்றுடன் ஒன்று பொருந்துவதான விடயங்கள் அமைந்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றன.

    அதாவது பயப்பட வேண்டியதற்குப் பயப்படாமல் இருப்பது அறியாமை. அப்படி பயப்படுவதற்குப் பயப்படுவது அறிவுடையவர்கள் செயலாக இருக்கின்றது. ஏனென்றால், அவர்கள் எதிர்காலத்தில் நடக்கப்போவதை முன்னமே அறிந்து கொள்ளும் வல்லமையுடையவர்கள். இதனால், அவர்களுக்கு திடீரென நடுக்கத்தைக் கொடுக்கும் துன்பம் ஏதும் ஏற்படாது. என்று வாழுகின்ற வாழ்க்கையில் எதிர்கொள்ளும் துன்பங்களுக்கு ஆய்ந்து தயங்கும் பக்குவத்தை மனிதன் கொள்ளவேண்டிய அவசியத்தை

    "அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது
     அஞ்சல் அறிவுடையார் தொழில்"

    "அறிவுடையார் ஆவது அறிவர் அறிவிலார்
     அஃதறி கல்லாதவர்"

    "எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை
     அதிர வருவதுஓர் நோய்"

    என்னும் இம் மூன்று குறள்கள் மூலமாக ஒன்றோடு ஒன்று தொடர்பு படுத்தி எடுத்துக் காட்டியுள்ளார்

    குறள் வடிவத்தை நாம் உச்சரிக்கின்ற போது சில இடங்களில் அழுத்திக் கூறும்போதே அதன் அழகு புரிகின்றது.

    "கற்க கசடறக் கற்க கற்றவை கற்றபின்
     நிற்க அதற்குத் தக"

    ஆழமாகக் கற்கும் போது அதில் அழகும் இருக்கும். அறிவும் இருக்கும். கற்கக் கசடறக்கற்க கற்றவை கற்றபின் நிற்க அதற்குத் தக. என்பதுபோல்  நாமும் கற்றபடி வாழுகின்றபோதுதான். எழுதிய எம்பாட்டன் வள்ளுவனுக்குப்  பெருமை சேர்ப்பதாக அமையும். உதாரணமாக

    "எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வுஇல்லை
     செய்ந்நன்றி கொன்ற மகற்கு"

    என்னும் குறளைக் கற்கின்றபோது ஒருவர் செய்த நன்றியை மறக்கக்கூடாது என்னும் கருத்தை மூளைக்குள் அழியாத அறிவுப்பலகையாக நாம் பதித்து வைக்கின்றபோது அதனைச் செயலில் காட்டவும் தயங்கக்கூடாது. எம் இரத்தத்தில் இக்குறள் பதிந்துவிடும். இச்செய்தியை மூளைக்குத் தேவைப்படும் வேளையில் காட்டிவிடும். 

         "யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல், வள்ளுவர்போல், இளங்கோவைப்போல் பூமிதனில் யாங்கனுமே பிறந்ததில்லை"

    என்று மகாகவி பாரதியார் பாடியிருக்கின்றார். இவ்வாறு பாரதி புகழ்ந்துரைத்த வள்ளுவரின் 133 அடி உயரமுள்ள சிலை ஒன்று மூன்று கடல் சங்கமிக்கின்ற கன்னியாகுமரியிலே அமைக்கப்பட்டுள்ளது. வள்ளுவர் தந்த திருக்குறளின் பெருமையை உலகுக்குணர்த்த கலைஞர் அவர்கள் இந்தியாவின் தலைநகரில் 1976 ஆம் ஆண்டு வள்ளுவர் கோட்டத்தை அமைத்தார். அங்கு கிரினைட் பளிங்குக் கற்களிலே திருக்குறள் 1330 குறள்களையும் ஒவ்வொரு கல்லிலும் ஒவ்வொரு அதிகாரமாக பொறித்துச் சுவர்களிலே  பொருத்தி  பார்வைக்கு வைத்தார். அத்துடன் திருக்குறளின் பெருமையைப் புலவர்கள் கூறும் திருவள்ளுவமாலையையும் பொறித்து வைத்துள்ளார்.

             தான் உணர்ந்த பெருமையைப் பலரும் உணர கலைஞர் கட்டிய வள்ளுவர் கோட்டம் போல் தான் உணர்ந்த வள்ளுவர் பெருமையை புலம்பெயர்ந்து வாழும் ஐரோப்பிய இளையவர்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக ஸ்ரீஜீவகன் அவர்கள் வள்ளுவர் பாடசாலை அமைத்து திருக்குறள் போட்டிகளை நடத்தி வள்ளுவர் பெருமைகளை பெற்றோர் சிறார் மத்தியில் கொண்டுசெல்கின்றார் என்றால், இவர் முன்னெடுப்பிற்கும் நாம்  பாராட்டுக்களைத் தெரிவிக்க வேண்டியது அவசியமாகின்றது.




                  16.11.2013 அன்று டோட்முன்ட் நகரில் நடந்தேறிய திருக்குறள் பேட்டியில் பங்குபற்றிய சிறுவர்கள், இளையவர்கள் வாழுகின்ற சூழல் அபாரமானது. நாமெல்லாம் திருக்குறள் கறறபோது கிடைத்த பொழுதுகள் இவர்களுக்குக் இப்போது கிடைக்காத பொழுதுகள். இவர்கள் எத்தனை எத்தனையோ தொலைநுட்ப சாதனங்கள் மத்தியில் தமது நேரத்தைத் தொலைத்து, தமது வாழ்நாட்டு வாழ்வாதாரக் கல்வியையும் தொடர்ந்து வாழுகின்ற தலைமுறையினர். இவர்கள் இத்திருக்குறள்களை கற்று மனனம் செய்து அதன் பொருள் உணர்ந்து  இங்கு ஒப்புவித்திருக்கின்றார்கள் என்றால், அதையிட்டு அவர்கள் பெற்றோர் பெருமைப்படவேண்டியது அவசியமாகின்றது. மிகச் சிறப்பாக அன்றைய வள்ளுவருக்குப் பெருமை சேர்த்த விழா நாளின் நிகழ்வுகளின் புகைப்படங்களை இங்கு காணலாம். 
      
     






    13 கருத்துகள்:

    1. தாங்கள் சுட்டிக்காட்டுள்ள குறள்கள் எல்லாமே எனக்கும் மிகவும் பிடித்தமானவைகளே.

      >>>>>

      பதிலளிநீக்கு
    2. விழா பற்றிய படங்கள் + விளக்கங்கள் மிகச்சிறப்பாகவே உள்ளன.

      //நீ எண்ணுகின்றவை உயர்வாகவே இருக்கட்டும். அது நிறைவேறவில்லையானாலும் நிறைவேறியதாகவே கருதப்படும். //

      அருமையான எண்ணங்கள்.

      பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

      பதிலளிநீக்கு
      பதில்கள்
      1. எண்ணமே உயர்வுக்கு வழிகாட்டும். அதனாலேதான் அப்துல்கலாம் அவர்கள் இளைஞர்களே ஆசைப்படுங்கள் என்றார் . அதுவே உயர்வான ஆசையாக இருத்தல் வேண்டும்

        நீக்கு
    3. சிறப்பான பகிர்வு... வாழ்த்துக்கள்... நன்றி...

      பதிலளிநீக்கு
    4. அற்புதமான பதிவு
      புகைப்படங்களுடன் தாங்கள் விழாக்குறித்து
      விளக்கிப் போனவிதமும்
      வள்ளுவர்பெருமானின் சிறப்புக் குறித்தும்
      தங்களைக் கவர்ந்த குறள் குறித்து
      விளக்கிப் போனவிதமும் மிக மிக அருமை

      தங்கள் பதிவினைத் தொடர்வது பெருமை
      கொள்ளச் செய்கிறது
      பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

      பதிலளிநீக்கு
      பதில்கள்
      1. மிக்க ன்றி சார் , உங்கள் பதிவுகள் கூட மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி எண்ணத்தைத் தூண்டிவிடுகின்றது

        நீக்கு
    5. திருக்குறள் பற்றிய தங்கள் விளக்கக் கட்டுரை சிறப்பு.
      திருக்குறள் விழா, படங்கள், திருவாளர் ஜீவகனின் சேவை அனைத்தும் சிறப்பு.
      இனிய பாராட்டு.
      பணிதொடர நல்வாழ்த்து.
      வேதா. இலங்காதிலகம்.

      பதிலளிநீக்கு
      பதில்கள்
      1. மிக்க நன்றி. உங்கள் பாராட்டுக்கள் அவரிடமும் போய்ச் சேரும்

        நீக்கு
    6. திருக்குறள் விழா, படங்கள், திருவாளர் ஜீவகனின் சேவை அனைத்தும் அருமை வாழ்த்துக்கள் சகோதரியாரே

      பதிலளிநீக்கு
    7. விழாவை பற்றி ஆழமான பதிவு
      நேர்த்தியான குறள் தேர்வு
      மொத்தத்தில் பிரமாதம் சகோதரி !

      பதிலளிநீக்கு
    8. திருக்குறள் மனனப்போட்டி விழா பற்றியும், திருக்குறள் பற்றியும் அழகாக
      எழுதிய சகோதரி கௌசி அவர்கட்கும், கருத்துரைகள், வாழ்த்துரைகள், பாராட்டுக்கள் கூறிய அன்பான உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
      ஜீவகன்

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...