சிந்தித்துப் பார்த்தேன். இதுகூட எனக்குத் தவறாகத் தெரியவில்லை. பாசத்தை வெளிக்காட்டி நம்மைநாமே வருத்தி வெளிவேஷம் போடுவதால் ஆவதென்ன? என்னைச் சிந்திக்க வைத்த ஒரு சம்பவம்.
வழமையாக நானும் எனது ஜேர்மனிய நண்பியும் கிழமையில் இரண்டு முறை ஜிம்மில் சந்திப்போம். இரண்டு நாட்களும் இவ்விரண்டு courses செய்து விட்டு சிறிது அளவளாவி விட்டுத் திரும்புவோம். வழமையாக திங்கள் அன்று வரவேண்டிய எனது நண்பி வரவில்லை. திரும்பவும திங்கள் வராததன் காரணத்தை புதனன்று வினாவினேன். மருத்துவப் பரிசோதனை மூலம் தனது தந்தை புற்றுநோய் கண்டுள்ள விபரம் அறிந்து, அதற்காக மருத்துவசாலையில் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதால், அங்கு சென்று வந்ததாகக் கூறினார். அவர் இரண்டு சத்திர சிகிச்சை செய்யப்பட்டு மீண்டு, வயோதிபர் இல்லத்தில் தற்போது தங்கியிருக்கும் நல்ல செய்தியையும் பின் ஒருமுறை பகிர்ந்து கொண்டார். சில நாட்களின் பின் மீண்டும் ஒரு திங்கள் வரவில்லை. புதனன்று ஒரு உழரசளந இற்கு வந்தபின் இரண்டாவதான Dance course இற்கு நிற்காமல் வீட்டிற்குச் செல்வதற்குப் புறப்பட்டார். தொடக்கத்தில் அவருடன் பேசுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இடையில் போகும்போது என்னருகே வந்து என்னை ஆரத் தழுவிக்கொண்டார். கண்களிலிருந்து வடிந்த கண்ணீரைத் துடைத்தபடி தனது தந்தை ஞாயிறு அன்று காலமாகிவிட்டதாகவும் நாளை வியாழன் இறுதிஅஞ்சலி செய்து அடக்கம் செய்யவிருப்பதாகவும் முதலாவது Course பறவாயில்லை. Dance course என்னால் செய்யமுடியாது என்று கூறி விடைபெற்றார். அவர் தனது தந்தையில் வைத்திருந்த பாசத்தை நான் நன்கு அறிவேன்.
இதுவே சம்பவம். இதைக் கேட்டபோது மனம் ஏங்கிப் போனேன். தந்தை அங்கே உயிரற்ற உடலுடன் உறங்கிக் கொண்டிருக்கின்றார். இவர் ஜிம்மிற்கு வருகின்றார். தந்தை இறந்து மூன்றாவது நாள் எங்களால் எப்படி முடியும்? வியப்பாகவே இருந்தது. இந்த சமயத்தில் தந்தையின் மரணச்சடங்கு முடிந்து அடுத்ததினமே தாயாரை Golf விளையாட அழைத்துச் சென்ற எனது இன்னுமொரு நண்பரை நினைத்துப் பார்த்தேன். இது சரியா தவறா என்ற சிந்தனையில் விரிகின்றது மனம்.
எனது நண்பி கூறினார். கணவன், பிள்ளைகள் வேலை, பாடசாலை என்று போய்விடுவார்கள். வீட்டில் தனியே இருக்கும் போது தந்தையின் ஞாபகமே வருகின்றது. முடியவில்லை. அதனால், இங்கு வந்தேன் என்றார். இதில் என்ன தவறு இருக்கின்றது. ''ஆண்டாண்டு கோடி அழுது புலம்பினாலும் மாண்டார் வருவரோ இம்மாநிலத்தே'' கூடி இருந்து நடந்ததையே நினைவுபடுத்தி வாழுகின்றவர்களையும் நோயாளியாக்குதல் மடைமையல்லவா. கவலையை நீக்குவதற்குக் கூட இருப்போர் முயற்சிக்கவேண்டும். அதனாலேயே தனியே இருந்து தாய் கலங்குவார் என்று தாயை Golf விளையாட மகன் அழைத்துச் சென்றிருக்கின்றார். எனது நண்பியோ மனதைத் தேற்ற இங்கு வந்திருக்கின்றார் என்று ஆறுதல் அடைந்தேன்.
எமது கலாச்சாரத்தில் இறந்தவீட்டில் இருப்போர் சமைப்பதற்குக் கூட இடம்விடாது. வருவோர் உணவைச் சமைத்துக் கொண்டு வருவார்கள். வந்திருந்து நடந்ததையே திரும்பத் திரும்பப் பேசி ஒரு மாதம் வரை நினைவுகளை வேறுதிசை போகவிடாது நிறுத்தி வைப்பார்கள். தன் இரத்தம் தனக்கு உயிர் கொடுத்து வளர்த்த தந்தை சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டுவிட்டால், சுடுகாட்டிற்குச் சென்று வந்தாலே தலைமுழுகவேண்டும் என்பார்கள். ஐரோப்பியர்களோ கிழமைக்கு ஒருதடவை சென்று மலர் வைத்து தந்தையை வணங்கிவிட்டு வருவார்கள். அது நம்முடன் ஒன்றாக இருந்து வாழ்ந்து, மகிழ்ந்து, அநுபவித்த, சொந்தங்கள் உறங்கும் இடம் என்று தெரிந்தும் அவ்விடம் துடக்கு இடம் என்று கருதுவர். எம்மவர் ஒரு மாதம் கோயிலுக்குச் செல்வதற்குத் தடைவிதித்துவிடுவார்கள். விழாக்களில் கலந்து கொள்ளத் தயங்குவார்கள் (மனதுக்குள் விருப்பத்தை வைத்துக்கொண்டு). இறந்தவீட்டிற்குச் செல்பவர்கள் தண்ணீர்கூடக் குடிக்கமாட்டார்கள். அது துடக்கு என்று ஒரு தடையைப் போட்டுவிடுவார்கள்.
அடுத்தவர்களைக் குறை கூறும் நாம், அதில் இருக்கும் மறுபக்கத்தையும் ஆராய்ந்து பார்க்க வேண்யடியது அவசியமாகிறது. அதனால், எமது பண்பு சீராக்கப்படும்.
ஒவ்வொரு நிகழ்வின் மறுபக்கத்தையும் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டியது தான்.
பதிலளிநீக்குஇருப்பினும் நம் முன்னோர்கள் இதுவரை கடைபிடித்து வந்துள்ள இந்தப்பழக்க வழக்கங்களிலெல்லாம் ஏதோ ஒரு வலுவான சமூக நலக்காரணங்கள் இருக்கக்கூடும் என்பதே உண்மை.
சிந்திக்கத்தூண்டும் பகிர்வுக்கு நன்றிகள்.
உண்மை... அவரவர் உணர வேண்டும்...
பதிலளிநீக்குஇங்கு நான் கண்ட சம்பவத்தையும் நினைவு கூற விரும்புகிறேன்,
பதிலளிநீக்குஎனது நண்பர் மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். அவர் மனைவின் அம்மா படுத்த படுக்கையாக ஆறு மாதம் இருந்தார். வயோதிகம்தான் காரணம் (85 வயது) ஓருநாள் மாலை 3 மணி தன் கடைசி மூச்சை வீட்டில் நிறுத்தி கொண்டார்.
ஒரு தனியார் பிணவறைக்கு தகவல கொடுத்தனர். ஒரு மணி நேரத்தில் பணியாளர்கள் வந்து Freezer ல் வைத்து விட்டனர். அவரின் மைத்துனி அமெரிக்காவிலிருந்து 2 நாள் கழித்து வந்தார்.
அந்த இரண்டு நாட்கள் உறவினர்கள் வந்தார்கள், விசாரித்தார்கள், சென்றுக் கொண்டிருந்தனர். பிறகு Freezer லிருந்து உடலை கொண்டு வந்தனர். சில பஜனை பாடல்கள் பாடப்பட்டன. மூன்று மணி நேரம் அனைத்து உறவினர்களும் பார்வையிட்டனர். பின்னர் நல்லடக்கம்.
ஆம் மனிதன் காலத்திற்கு தகுந்தாற் போன்று மாறிக் கொண்டான்
சிந்தனைக்கு உரிய கருத்து சகோதரியாரே
பதிலளிநீக்கு