• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    வியாழன், 15 டிசம்பர், 2011

    உதிர்ந்த ரோஜா





    சொர்க்கம் என்று தேடிவரும் அயல்நாடு சுமக்க வைக்கும் மனச்சுமைகளோ கோடி அவற்றிலே சில சுமைகள் பேனாவிற்குள் அழுகின்றன. அவற்றில் ஒன்று இந்த
                                                    
                                                       உதிர்ந்த ரோஜா



    பவளமல்லிகை வீட்டுமுற்றத்தில் காற்றோடு கலந்து வந்து தன் சுகந்தத்தைப் பரவ விட்டிருந்தது. மலர்கள் மொட்டவிழ்ந்து தேனீக்களுடன் உறவாடி மகிழ்ந்திருந்தன. வண்ணாத்திப் பூச்சிகள் வண்ணம் வண்ணமாய் வட்டமிட்டிருந்தன. கூந்தலைத் துவாயினால் உலர்த்தியவண்ணம் புத்தம் புதிய நாளின் வருகையை ரசித்த வண்ணம் சுபா முற்றத்திற்கு வந்தாள்;. ஒரு ரோஜாவை முகர்ந்து பார்க்கக் குனிந்தவளின் கழுத்தில் தொங்கவிடப்பட்டிருந்த தாலியானது அம்மலரின் மேல் பட்டதும் அம்மலரின் இதழ்கள் உதிர்ந்து கீழே மண்படுக்கையில் தஞ்சமடைந்தன. தன்னை உருக்குலைத்த தாலியை ஒரு கணம் உற்று நோக்கினாள், சுபா. அந்த நாளின் இனிமை எங்கோ பறந்து போயின. அம்மி மிதித்து அருந்ததி பார்த்து பெரியோர் வாழ்த்த அவள் கழுத்தில் ஏறிய அந்த மாங்கல்யம், சாத்திரம் சம்பிரதாயங்களைக் கேலி செய்வதுபோல் அவள் கண்களுக்குத் தோன்றியது.
                   
                                              அறிந்த குடும்பம், கௌரவமான குடும்பம், அருமையான பெற்றோர் பெற்றெடுத்த ரவி, கனடாவிலிருந்து சாவகச்சேரி வந்தடைந்தான். வாலிப்பான அவன் உடற்கட்டு அவன் வாழ்க்கை பற்றி ஆராயாது சுபா மனதுக்கு வேலி போட்டது. மூத்தோர் பெரியோர் வாழ்த்த ரவி கட்டிய மாங்கல்யம் சுபா மார்பிலே தவள்ந்தது. கல்யாணம் முடிந்தது ரவி கனடா திரும்ப வேண்டிய நாளும் வந்தது. ''எங்களுடைய கல்யாணப்படத்தைக் காட்டித்தான் உங்களுக்கு விசா எடுக்க வேண்டும். எடுத்த பிறகு அறிவிக்கின்றேன். ரிக்கட் போட்டு கனடா வாருங்கள்'' என்று ரவி அழகாகக் கூறி விமானமேறிப் போனவன்தான். கழுத்தில் ஏறிய தாலியும் வயிற்றில் ஏறிய குழந்தையையும் சுமந்து அவன் விசா எப்போது பெறுவான் என்று தவமிருந்தாள், சுபா. மனதில் கவலை கவ்விக் கொண்டால் வயிற்றில் பிள்iளையும் தாக்கத்தை நோக்கும் என்னும் துயர் அறிந்தும் அறியாதவளாய்ச் சுபா பிள்ளையைப் பெற்றெடுத்தாள். ஆறுமாத காலங்களே ஆசையோடு வளர்த்த பிள்ளை அப்பா யாரென்று அறியாமலே ஆண்டவன் காலடியை நாடிச் சென்று விட்டது. இவஈவாறான சோகத்தில் இருந்தவளுக்கு அன்றொரு நாள் சுகமான செய்தியொன்று வந்தது. 
                     
                                                     விசா கிடைத்துவிட்டதாகவும் கடவைச் சீட்டு எடுத்துக் கொண்டு கனடா வரும்படியும் அனைத்து விபரங்களும் அடங்கிய தபால் கிடைத்த சந்தோஷத்தில் தலைகால் தெரியாது குதித்தாள், சுபா. தன்னை வாழவைக்கும் என நம்பிய கனடா மண்ணை அவள் பாதங்கள் தொட்டது. ரவியைக் கண்டவுடன் தன் மனதுள் அடக்கி வைத்திருந்த சோகங்களையெல்லாம் கொட்டி அழுதாள். அவளுக்கு ஆறதல் கூறிய ரவி,  கனடாவில் வாழும் தனது அக்கா வீட்டிற்கு அவளை அழைத்துச் சென்றான். அன்று இரவு ''ஏன் எங்களுக்கென்று தனியாக வீடு எடுக்கவில்லையா'' என்று சுபா கேட்டாள். '' இந்த நாட்டில் வீடு எடுப்பது ஒன்றும்; சின்ன விஷயமில்லை. இந்த வீட்டில் சமாளிப்போம். வசதியாக ஏதாவது வீடு கிடைத்தால், தனியாகப் போகலாம்'' என்று கூறிச் சமாளித்தான். சுபாவும் தனிக்குடித்தனம் போகும் நாளை எண்ணிக் காத்திருந்தாள் அதுவரை இவ்வீடு அவளுக்குச் சிறையாகவே பட்டது. சுதந்திரம் என்பது சொல்லிக் கொள்ளாமலே அவளிடமிருந்து பறித்தெடுக்கப்பட்டது. கட்டுப்பாடு என்பது கணக்கு வழக்கின்றி அவ்வீட்டில் ஆட்சி புரிந்தது. 
                    
                                                ஒருநாள் தொலைபேசி அலறியது. அதை எடுப்பதற்காக அவள் ஓடியபோது ' சுபா எதற்காக நீ ஓடுகின்றாய்? இங்க வரும் ரெலிபோன் அழைப்பெல்லாம் உனக்குத்தானா வருகின்றது? அதை அக்கா எடுப்பா|| என்று தடுத்துவிட்டான் ரவி. ஆனால், ஜேர்மனியிலிருந்து சுபாவினுடைய அக்காதான் தொலைபேசி எடுத்துள்ளார் என்று தெரிந்ததும் ' சரிசரி போய்க் கதை. ஆனால், இங்கத்தைய கதை ஒன்றையும் உளறித் தள்ளாதே|| என்று கட்டளையாகக் கூறிப் பக்கத்தில் இருந்துவிட்டான். அந்நியநாட்டில் பேச்சுச்சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம், எல்லாம் கிடைக்கும் என்றுதான் இலங்கையில் இருக்கும்போது நினைத்திருந்தாள். ஆனால், வாழ்க்கைச் சுதந்திரத்தையே கனடாவில் சுபா இழந்து நின்றாள். ரவி இரவு வேலை என்று மாதத்தில் சில நாள்களே வீட்டில் தங்குவான். எதற்கெடுத்தாலும் சுபாவில் எரிந்து விழுவான்.  வேலைக் கஷ்டத்தில் இவ்வாறான போக்கில் ரவி இருக்கின்றான் என நினைத்து எதுவுமே பேசாது காலத்தைக் கடத்தினாள், சுபா. தன்னுடைய துயரை வெளியில் வெளிப்படுத்த முடியாத கட்டுப்பாட்டினுள் சுபா அடைக்கப்பட்டாள். 
                   
                 திடீரென ஒருநாள் ரவி, '' சுபா! இங்கு அக்காவினுடைய வீட்டில் தங்குவது பிரச்சினை போல இருக்கிறது. அடுத்த கிழமை நீ இலங்கைக்குப் போவதற்கு ரிக்கட் போட்டிருக்கிறேன். ஊருக்குப் போ. வீடு எடுத்ததன் பிறகு அறிவிக்கின்றேன். திரும்பி வா. என்ன சரிதானே?'' என்றான், ரவி. முடிவை எடுத்ததன் பின் வினா அவசியம்தான? இதற்குமேல் எதுவும் கதைப்பதற்கு சுபா மனம் இடம் தரவில்லை. கட்டுப்பாடான சூழலில் இருந்து நாட்டுக்குப் போவதே அவளுக்குச் சரியெனப்பட்டது. நகை போட்டு, உடை உடுத்து கண்ணாடி அலுமாரியில் அழகுக்கு வைக்கும் பொம்மையல்லவே அவள்.  ''சரி அம்மாவையும் பார்க்க வேண்டும் போல்த்தான் இருக்கின்றது. நான் போகின்றேன்'' என்றாள். 
                    
                                          நாடு திரும்பும் வேளை வந்தது. விமானநிலையம் வந்தடைந்தாள். சந்தர்ப்ப வசமாக சுபா தனது பழைய சிநேகிதியை கண்டாள். விமானத்தினுள் அருகருகே இருப்பதற்காகப் பக்கத்தில் இருந்தவர்களின் உதவியை நாடித் தனது சிநேகிதியின் அருகே அமர்ந்து விட்டாள். அவள் சிநேகிதியும் '' என்னடி சுபா எப்படி கனடா வந்த நீ ? எனக்கு ஒரு ரெலிபோன் எடுத்திருக்கலாமே? ரவியோட நின்றாயே? என வினாவுக்கு மேல் வினா எழுப்பினாள். '' அவரை உனக்குத் தெரியுமா? என்று கேட்டாள் சுபா. ''இதென்ன என்னுடைய மகளோடதானே ரவியின்ர மகளும் Kindergarden  இலே படிக்கின்றா. நான் அடிக்கடி கதைக்கிறனான்'' என்றாள் சிநேகிதி. சுபாவுக்கு நெஞ்சமே வெடித்துவிடும் போல் இருந்தது. அவளது முகமாற்றத்தை உற்றுநோக்கிய சிநேகிதியும் '' ஏன் சுபா ஒருமாதிரியாய் இருக்கின்றாய்?  என்று கேட்டாள். ''இல்லை. அவர்தான் இலங்கைக்கு வந்து என்னைக் கல்யாணம் செய்து இங்கே என்னை எடுத்தவர். அவருடைய அக்கா வீட்டில்த்தான் இவ்வளவு நாள்களும் நின்றேன். வேறு வீடு எடுத்ததன் பின் என்னைக் கூப்பிடுவதாகச் சொல்லி இலங்கைக்கு அனுப்புகின்றார். என்று கலங்கிய கண்களுடன் விபரத்தை விம்மிவிம்மி வெளிப்படுத்தினாள். ''ரவியைப் பற்றிய விபரம் முன்னமே நீ அறியவில்லையா சுபா. ஒன்றும் விசாரிக்காமலேயா இந்தக் கல்யாணம் செய்தாய்? எதற்காக இப்போது ஊருக்குப் போகின்றாய். கனடாவிலேயே நின்றிருக்கலாமே என்று கேட்ட சிநேகிதியிடம் ''இல்லை இங்கே இருப்பதைவிட ஊருக்குப் போய் என் அம்மாவின் மடியில் விழுந்து ஓ..... என்று அழுதால்த்தான் என்னுடைய மனப்பாரம் குறையும். என் ஜீவனும் நிம்மதியடையும். என்று கூறி இலங்கை வந்தடைந்தாள். காலம் கடக்கின்றது. கனடா செல்லும் காரியம் நடைபெறவில்லை. அப்படியென்றால் ரவிக்கு இவள் யார்? வைப்பாட்டியா? மனைவியா? அவளைக் கனடாவிற்கு அழைத்ததன் காரணம்தான் யாது? புரியாத புதிருக்கு இன்னும்தான் சுபா விளக்கம் தேடுகின்றாள். 

                        தன்னை உருக்குலைத்த தாலியினால், இப்போது உருக்குலைந்து கிடக்கும் ரோஜா இதழ்களை ஒவ்வொன்றாகப் பொறுக்கி எடுத்தாள், சுபா. ஒரு கல்லாடிக் குவளையினுள் நீரிட்டு அந்த இதழ்களை அதனுள் இட்டாள். உதிர்ந்த இதழ்கள் வாடிச் சருகாகும் வரை அதற்கு வாழ்வளிக்கும் முனைப்பில் இறங்கினாள்.

    14 கருத்துகள்:

    1. தேடல் நிறைந்ததுதான் வாழ்க்கை..

      இந்த தேடல் ஒருவருக்கொருவர் மாறுபடும்..

      உதிர்ந்த ரோஜா இதழ்களை பொருக்கி எடுத்து

      அதற்கும் மறுவாழ்வு கொடுக்க என்னும் உங்கள் கதாநாயகி

      அதிக மன உரம் படைத்தவர்.

      அழகா கதை சொன்னீங்க சகோதரி.



      கொஞ்சம் நம்ம வலைப்பக்கமும் வாங்க ....

      பதிலளிநீக்கு
    2. உதிர்ந்த ரோஜா இதழ்களைக் கூட கூடுமானவரை
      வாடாது காக்கவேண்டும் என்கிற இரக்க சிந்தனையுள்ள
      பெண்ணை எப்படி இதுபோன்ற சுய நலப்பிண்டங்களுக்கு
      ஏமாற்ற மனம் வருகிறது,
      இவர்கள் மனிதஇனத்தைச் சேர்ந்தவர்கள்தானா ?
      அயல் நாடுகளில் உள்ள சில அயோக்கியர்களை
      படம் பிடித்துக் காட்டிப் போகும் இப்பதிவு
      ஒரு நல்ல படிப்பினையூட்டும் பதிவு
      வழிகாட்டும் பதிவு
      தற்போதைய நிலையில் அவசியமான பதிவும் கூட்
      அருமையான பதிவு.தொட்ர வாழ்த்துக்கள்
      த.ம 1

      பதிலளிநீக்கு
    3. நன்றி மகேந்திரன் . நிச்சயமாக உங்கள் பக்கமும் என் பார்வை இருக்கும்.

      பதிலளிநீக்கு
    4. Ramani சொன்னது…//

      என்ன செய்வது இப்படியும் மனிதர்கள் வாழுகின்றார்கள். ஆனால் வெளிநாட்டிலே பெண்களுக்கான எத்தனையோ நிறுவனங்கள் இருக்கும் போது யாருடைய உதவியை யாவது பெற்று அங்கிருந்தபடியே வாழ்ந்து காட்டக்கூடிய வழிமுறையைக் கையாண்டிருக்கக் கூடும். ஆனால் ஒவ்வொருவருடைய சுபாவமும் வெவ்வேறுவிதமாக இருக்கும் போது என்ன செய்வது

      பதிலளிநீக்கு
    5. என்ன செய்வது ஐயா இப்படியும் சில மனிதர்கள்

      பதிலளிநீக்கு
    6. பெண்கள் மட்டும் ஏமாற்றப் படுவதில்லை. அழகான உருவம் அயல்நாட்டு வேலை என்று கனவுகளில் எதையும் சரியாக சிந்திக்காத பெண்ணின் கதை. நீங்கள் நான் எழுதியுள்ள பெண்கள் முன்னேற்றம் எனும் உண்மைக் கதையைப் படியுங்கள். பாவம் ஆண்கள் என்றும் ஒப்புக்கொள்வீர்கள்.

      பதிலளிநீக்கு
    7. G.M Balasubramaniam சொன்னது…

      ஆண்கள் பாவம் என்று நானும் வாழ்வியல் இலக்கியங்கள் எழுதியுள்ளேன். அடங்கிடுமா பெண்வர்க்கம் என்னும் ஒரு கவிதை இந்த ப்ளாக் இலேயே எழுதியிருந்தேன். ஆணோ பெண்ணோ தவறுகள் சுட்டிக்காட்டப் பட வேண்டும். திருத்தப்பட வேண்டும் என்பதே எனது ஆக்கங்களின் நோக்கம். உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி

      பதிலளிநீக்கு
    8. //''இல்லை இங்கே இருப்பதைவிட ஊருக்குப் போய் என் அம்மாவின் மடியில் விழுந்து ஓ..... என்று அழுதால்த்தான் என்னுடைய மனப்பாரம் குறையும். என் ஜீவனும் நிம்மதியடையும். என்று கூறி இலங்கை வந்தடைந்தாள்.//

      மிகவும் உருக்கமான கதை. தினமும் எத்தனை பேர் எங்கெங்கே இத்தகைய கொடுமைகளுக்கு ஆளாகிறார்களோ! நினைத்தாலே மனதுக்குக் கஷ்டமாகத்தான் உள்ளது.

      அயல்நாட்டு மோகமோ, பொருளாதார நெருக்கடிகளோ, நிம்மதியாக இருக்கும் இடத்தில் சிலரை இருக்க விடுவதில்லை.

      பதிலளிநீக்கு
    9. இன்றைய காலசூழலை அருமையாய் வெளிக்காடியுள்ளீர்கள்.தவறுகள் யார் செய்தபோதும் அது தவறே.
      ஏமாறுவதும் ஏமாற்றபடுவது தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது..

      உதிர்ந்த ரோஜாவை உணர்வோடு சேர்த்துவிட்டீர்கள்..

      பதிலளிநீக்கு
    10. அன்புடன் மலிக்கா சொன்னது…//

      வாருங்கள் மால்லிகா . உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி

      பதிலளிநீக்கு
    11. வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது//

      பகுத்தறிவு படைத்த மனிதனே பல தவறுகளைச் செய்கின்றான். இதைக் கண்டும் காணாதும் எத்தனை மனிதர்கள்
      உலகில் வாழுகின்றார்கள்

      பதிலளிநீக்கு
    12. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்...
      http://blogintamil.blogspot.in/2014/06/blog-post_11.html

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...