• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014

    மாற்றம் ஒன்றே மாறாதது (இன்றைய சிந்தனை)



    வானத்தில் வட்டமிடும் பட்டாம் பூச்சியல்ல நாம். அந்தரத்தில் சுற்றிச்சுழன்று தொங்கிக் கொண்டிருக்கும் சுகவாசிகள் நாம். ஆச்சரியமாக இருக்கின்றது அல்லவா ஆனாலும் உண்மை அதுதானே. கோடிக்கணக்கான கோள்கள் அதில் நாம் அந்தரத்தில் ஆடிக்கொண்டிருக்கின்றோம். ஆடுவது தெரியாது ஆட்டம் போடுகின்றோம். தங்கியிருக்கும் இத் தரிப்பிடமோ, இல்லை தொங்கிக் கொண்டிருக்கும் இத் தரிப்பிடமோ ஓர்நாள் விடுபட்டால், விடுபடுவதை அகக்கண்ணால் பாருங்கள். பரசூட் இல்லாமலே அழகாகப் பறந்து கொண்டிருப்போம். சுவாசமின்றி தத்தளிப்போம். உயிர் போவதே தெரியாது மறைந்து போவோம். நினைத்துப் பார்த்தால், பயமாக இருக்கின்றதல்லவா. நினைக்;கின்றோமா? இதுபோல்த்தான் வாழ்க்கை. நிலையில்லை என்று தெரிந்து கொண்டும், நம் வாழ்வு நிலைப்பதில்லை என்று புரிந்து கொண்டும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தேவை தேடி ஓடுகின்றோம் அல்லவா! இதுவே வாழ்வின் அதிசயம். 
                     
                   சிலவேளை வாழ்வு தென்றலாய் தாலாட்டும். மகிழ்ச்சியை அள்ளித் தரும். அவ்வேளை இவ்வாழ்வு நிலைக்க வேண்டுமென்று ஆசையில் நீச்சலடிப்போம். ஆடாத ஆட்டமெல்லாம் போடுவோம். இதே மகிழ்வு ஒருநாள் துன்பத்தைத் தந்துவிட்டால், பொல்லாத வாழ்விது வாழத்தான் வேண்டுமா? ஏதாவது நிகழமாட்டாதா! இவ்வாழ்வே முடியமாட்டாதா!  என்று மனமுடைந்து ஓரிடத்தில் அமர்ந்துவிடுவோம். துடிப்போடு துள்ளலிட்ட உடலானது நோயால் ஓர்நாள் துவண்டுவிட்டால், வெறுப்புடனே வேதனையில் ஆண்டவனை நோக்கி பார்வையைத் திருப்புவோம். 

               இன்று நம்பிக் கொள்பவை நாளை நாம் நம்ப மறுப்போம். 16ம் நூற்றாண்டுவரை பூமி உருண்டை என்று யாரும் நம்பவில்லையே. தட்டையானதென்றே நம்பிக்கொண்டிருந்தார்கள். மேருமலையை நடுவில் காண்ட தட்டையான பூமியென நம்பப்பட்ட பூமி உருண்டையென மாறியது எப்படி? ஹிப்பாகிரட்டீஸ், அரிஸ்டோட்டில் கூறவில்லையானால், 1400 இல் மெக்கலன் நிரூபித்துக் காட்டவில்லையானால், இன்னும் பூமி தட்டையானதே. 

              நம்பிக்கையும் ஓர் நாள் இழக்கநேரிடும். எவையுமே ஓர்நாள் மாற்றம் பெறும். குழந்தையாய்க் கன்னியாய்த் தாயாய் பாட்டியாய் பருவங்கள் மாறும். ஏழையாய் செல்வந்தனாய் அல்லது செல்வந்தன் ஏழையாய் தராதரங்கள் மாறும். கோடையாய் மாரியாய் காலங்கள் மாறும். சொந்தவீடு வாடகை வீடாய், வாடகைவீடு சொந்தவீடாய் உரிமைகள் மாறும். தாய்க்கு மகனாய் மனைவிக்கு கணவனாய் சொந்தங்கள் மாறும். நண்பர்கள் மாறும்.  பேனாய் தட்டச்சாய், புத்தகம் கணனித் திரையாய், தொலைபேசி  இணையமாய் தொழில்நுட்பம் மாறும். ஆசைகள் மாறும், அர்ப்பணங்கள் மாறும், தேடல்கள் மாறும், கலாச்சாரங்கள் மாறும். அனைத்துமே மாறும். அதுவே மாற்றம் ஒன்றே மாறாதது.  
                      
                  இவ்வாறான மாற்றங்கள் தெளிவாகத் தெரியும் இந்தப் புலம்பெயர்வில் மக்கள் மனங்களின் ஆசைகளால் விழைகின்ற கலாச்சார மாறுபாடுகளும் மனங்களின் ஆச்சரியங்களும் அறியவே என் வாழ்வியல் இலக்கியம் கணனி உலகில் வலம் வருகின்றது. அறிய விரும்புவோம். அதன் பக்கப் பார்வையைச் செலுத்துங்கள். 

    2 கருத்துகள்:

    1. மாற்றங்கள் மாறாதது என்று தெளிவாய்ச் சொல்லிச் செல்கிறீர்கள். கணினியில் நீங்கள் வலம் வருவதால்தானே நாங்கள் உங்கள் கருத்துக்களைப் படிக்க முடிகிறது.

      பதிலளிநீக்கு
    2. மாற்றம் ஒன்றுதான் மாறாதது
      உண்மைதான் சகோதரியாரே

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...