தந்தையே உனை எண்ணி நான் வந்தனை செய்கின்றேன்
சிந்தனை செய்து நான் இத்தினம் சிறப்பாகப் பெற்றேன்
எந்தனுள் மனதில் உங்கள் எண்ணம் என்றுமே இருந்தாலும்
இந்தநாள் உங்களுக்காய் என் உணவு துறக்க எண்ணினேன்.
உயிரோடு மட்டுமல்ல உயிரைவிட்டுப் பிரிந்த பின்னும் தந்தைக்காக உலகெங்கும் தந்தையர் தினம் கொண்டாடப்படும். இது தந்தையரை மனதில் எங்கும் கொண்டிருப்பார்க்கு ஏற்ற தினமாகும். இங்கு மந்திரங்கள் இல்லை. பூசைகள் இல்லை, புரோகிதர் இல்லை. ஜேர்மனியர் பரம்பரைப்பெயரையே தமது கடைசிப்பெயராகக் கொண்டிருப்பார்கள். இதுவும் தந்தையருக்குத் தரும் மரியாதையாக இருக்கிறது. நாம் எமது பரம்பரைப் பெயரை ஒன்று அல்லது இரண்டு தலைமுறையுடன் மறந்து போகின்றோம். பெற்றோர் தெரிவிப்பதும் இல்லை நாம் தெரிந்து கொள்ளும் ஆர்வம் கொள்வதும் இல்லை. உங்கள் எத்தனை பேருக்கு முப்பாட்டன் பெயர் ஞாபகத்தில் இருக்கின்றது. நினைத்துப்பாருங்கள். ஆனால், வருடம் ஒருமுறை ஆடிஅமாவாசைக்கு மாத்திரம் பிதிர்க்கடன் செய்கின்றோம்.
ஆடிஅமாவாசை தினத்தில் தந்தையை இறந்த இந்துமதத்தவர்கள் ஒவ்வொருவரும் விரதம் அனுஷ்டிக்கின்ற நாள். இன்றையநாள் இந்துக்கள் புனிதநீராடி இறந்த தந்தையரை நினைத்துப் பிதிர்க்கடன் செலுத்தி அவர்களுக்கு மோஷ்டம் கிடைக்கவேண்டுமென்று விரதம் அனுஷ்டிக்கின்றனர். அத்துடன் இறந்த எமது தந்தையருடன் நாம் நேரடித்தொடர்பு கொள்ளமுடியாது. அதனால் பிதிர்களைத் திருப்திப்படுத்தினால் அவர்கள் மகிழ்வடைந்து எமது தந்தையர்க்கு நன்மை செய்வார்கள் என்று நம்பப்படுகின்றது. அதன் மூலம் அவர்கள் சந்ததி புகழோடும் செல்வத்தோடும் நிறைந்த ஆயுளோடும் வாழும் என்றும் பிதிர்க்கடன் செலுத்தாவிட்டால், சாபத்திற்கு உள்ளாகி வம்சம் விருத்தியடையாது என்றும் சொல்லப்படுகின்றது. எள்ளும், தர்ப்பையும் கொண்டு பிதுர் தர்ப்பணம் செய்யவேண்டும் என்றால் எள்ளும் நீரும் கொண்டு பிதுர்களைத் திருப்திப்படுத்த வேண்டும் எனப்படுகின்றது. எள்ளும் தர்ப்பைப்புல்லும் விஷ்ணுவின் உடம்பிலிருந்து தோன்றியது. எனவே எள்ளைக் கொண்டு தர்ப்பணம் செய்கின்ற போது விஷ்ணு துர்த்தேவதைகளுக்குப் பரம எதிரி ஆனதால் எள்ளைப்பயன்படுத்துவதன் மூலம் துர்த்தேவதைகளிடமிருந்து பிதிர்களைக் காக்கமுடியும் என்று சொல்லப்படுகின்றது.
ஏதோ ஒரு நம்பிக்கையுடனேயே எல்லாம் செய்துவிடுகின்றோம். அதைவிட பயம் உண்டாக்கிய மனப்படிவே காரணமாகிவிடுகின்றது. பிதிர்க்கடன் செய்யாவிட்டால் சந்ததி சாபத்துக்கு உள்ளாகிவிடும் என்னும்போது இந்துமதத்தவர்கள் அல்லாத மக்கள் எல்லோரும் சாபத்துடன்தான் வாழ்கின்றார்களா? என்ற கேள்வி எழுகின்றது.
அந்த ஒரு எள் உருண்டையுடன் பிதிர்கள் திருப்திப்பட்டுவிடுவார்கள். அதன்மூலமே நல்லது செய்வார்கள். அப்படியென்றால் எல்லாமே கொடுத்துவாங்கும் வியாபாரவழக்கம் தானா? எம்மிடம் நிலவுகின்றது. இவை கேலிக்கான கேள்விகள் இல்லை. என்னுள்ளே தோன்றுகின்ற வினாக்கள். அத்துடன் அதுபற்றி வேறு ஒரு பதிவிலும் குறிப்பிட்டுள்ளேன். பெற்றோரல்லாத மற்றைய உறவுமுறையினர் இறக்கும்பட்சத்தில் அவர்களுக்கு எந்தவித பூசைகளும் செய்வதில்லையாதலால் அவர்களுக்கு மோட்சமே கிடைப்பதில்லையா? அவை பாவப்பட்ட ஆத்மாக்கள்தானா?
அத்துடன் 20,30 வருடங்கள் தாண்டியும் மோட்ச அர்ச்சனைகள் செய்யும் போது (தர்ப்பை போட்டுச் செய்யும் அர்ச்சனைக்கு ஒரு கூலி, தர்ப்பை அற்ற அர்ச்சனைக்கு ஒரு கூலி) அந்த ஆத்மா மோடசம் செல்வதே கிடையாதா? பிள்ளையும் இறந்துவிட்டால், பேரப்பிள்ளைகள் அதைச் செய்வார்களா? இல்லையென்பதால், பிதிர் நிலைதான் என்ன? இல்லை இறந்தவுடன் வேறு மறுபிறப்பு எடுத்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையின் படி மறுபிறப்பு எடுத்திருந்தால், உயிரோடு இருக்கும் ஆத்மாக்கு மோட்சஅர்ச்சனை செய்வதா?
இறந்தவுடன் உடலை எரித்துவிடுகின்றோம். ஆத்மா வாழும் என்றால், அது வெறும் காற்று அதற்கு எதுவுமே தேவையில்லை. மனிதன் உடல் உறுப்புக்களும் அதனுள் உள்ள மின்னலைத்தாக்கங்களும், ஓமோன்களின் சுரப்புக்களும் அவற்றின் ஒன்றிணைந்த தொழிற்பாடும், சூழலுமே மனிதனின் வாழ்வு. அவர்களுக்குத்தான் தேவைகள் இருக்கின்றது. இது எதுவுமே அற்று காற்றுக்குத் தேவைதான் என்ன?
எம்மை வாழவைத்த தெய்வங்களான எமது பெற்றோர்கள் உயிரைவிட்டுப் பிரிந்தார்கள் என்றாலும் வாழும் வரை அவர்களை நினைத்திருப்போம். அந்நாளில் ஆதரவற்ற அநாதைகளுக்கு பெற்றோர் நினைவாக உதவிக்கரங்கள் நீட்டுவோம் என்பது மனிதாபிமானம். அதைவிட்டு இவ்வாறான மூடநம்பிக்கையில் நாம் வாழ்ந்து நமது பிள்ளைகளையும் அவ்வழியில் வாழவைத்தல் எவ்வகையில் நியாயமாகப்படுகின்றது.
பெண்கள் விரதம் இருந்தால் மாங்கல்யபலம் பெற்று வாழ்வார்கள்.
அழகாபுரிநாட்டு மன்னன் அழகேசன் வாரிசு இல்லாது தீர்;த்த யாத்திரை சென்றபோது புத்திரபாக்கியம் பெற்றான். அவன் மகிழ்ச்சியோடு இருந்த சமயத்தில் அவன் இளமைப்பருவத்தில் இறப்பான் என்று அசரீரி கேட்டது. அதன் பின் மனம் வருந்திய மன்னன் கோயில்கோயிலாகச் சென்று ஆலயதரிசனங்கள் செய்தபோது உன் மகன் இறந்தபின் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொடுத்தால், மாங்கல்யபலத்தினால் உயிர்பெறுவான் என்று ஒரு குரல் கேட்டது. அதுபோல் அவன் இறந்ததும் பெற்றோரை இழந்த ஒரு பெண்ணை ஏமாற்றித் திருமணம் செய்து வைத்து ஒரு காட்டிற்குள் இறந்த உடலுடன் அவளைக் கொண்டுவிட்டுவிட்டனர். அப்பெண்ணும் கணவன் உறங்குவதாக நினைத்தாள். விடிந்ததும் உண்மை தெரிந்து அழுதுபுலம்பி தெய்வங்களை எல்லாம் வேண்டினாள். அதன்படி அவனும் உயிர்த்தெழுந்தால், இது ஆடிஅமாவாசை தினத்தில் நடந்தது. எனவே இத்தினத்தில் விரதம் இருக்கும் பெண்களுக்கு ஒளி கிடைக்கும். மாங்கல்யபலம் கிடைக்கும் என்று சொல்லப்படுகின்றது.
இக்கதை வேடிக்கையாக இருக்கின்றது அல்லவா? பச்சைக் குழந்தைக்குச் சொல்லும் கட்டுக்கதையாக இருக்கின்றதல்லவா? முன்னோர் சொன்னார்கள் என்பதற்காக முழுவதும் நம்பிவிடல் நியாயமா?
இறந்த உடலுக்குத் திருமணம் செய்து வைத்ததே குற்றம். இவ்வாறு நடப்பது எந்தவகையில் சாத்தியமாகும்.
கதை ஒருபுறம் இருக்க திருமணமான பெண்கள் இவ்விரதம் அநுஷ்டித்தல் ஆகாது. ஏனென்றால், தந்தைக்குத் தந்தையாகக் கணவன் இருக்கும் போது இவ்விரதம் அநுஷ்டித்தல் குற்றம் என்றும் சொல்லப்படுகின்றது. அப்படியானால், இக்கதை கற்பிக்கும் பாடம்தான் என்ன? தந்தையும் கணவனும் ஒன்றா?
தந்தை உயிரோடு இருக்கும் பிள்ளைகள் அன்றைய தினம் தலைமுழுகுவதற்குத் தடை செய்கின்றார்கள். ஏனென்றால், அது தந்தையின் உயிருக்குப் பாதிப்பாகும்.
இவ்வாறெல்லாம் எம்மவர் மத்தியில் நம்பிக்கைகள் இருக்கின்றன. இதுபற்றிச் சிறிது சிந்தித்தாலே போதும். இவ்வாறான நாட்களில் சிறப்பான காரியங்களில் ஈடுபட்டு உயிரோடு வாழும் உன்னத உயிர்களுக்கு உதவிகள் செய்யலாம். அவ்வாறான நம்பிக்கைகளை எம்மவரிடம் ஊட்டுவோம். வாழ்வின் அர்த்தங்களைப் புரியவைப்போம்.
நன்றி
உயிரோடு வாழும் உன்னத உயிர்களுக்கு நம்மாலான உதவிகளைச் செய்வோம்
பதிலளிநீக்குஉண்மைதான் சகோதரியாரே
நன்றி
நன்றி சார்
நீக்குArumai pakirvukku vazhththukkal
பதிலளிநீக்குபின்னூட்டத்திற்கு மிக்க நன்றி
நீக்குகேள்வி கேளுங்கள். மகிழ்ச்சியாய் இருக்கிறது. நம்பிக்கைபால் செய்யும் செயல்களுக்கு அர்த்தம் கேட்கக் கூடாது. சில பல பயங்களை மனதில் விதைத்தே இதையெல்லாம் செய்ய வைக்கிறார்கள். பித்ரு கடன் பற்றி நானும் எழுதி இருந்தேன். முன்னோர்களுக்கு நாம் செய்யும் தலையாய கடன் அவர்கள் போகும்போது விட்டு விட்டுப் போன அவர்களது கடமைகளை நாம் செய்து முடிப்பதே ஆகும் சடங்குகள் நம் கலாச்சாரத்தின் வெளிப்பாடு அவ்வளவே. நன்கு சிந்தியுங்கள். விடைகளை நீங்களே அறிந்து கொள்ளுங்கள். வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குசரியாகச் சொன்னீர்கள். அவர்கள் போகும்போது விட்டு விட்டுப் போன அவர்களது கடமைகளை நாம் செய்து முடிப்பது. அவ்வாறு செய்யாது விட்டோமேயானால் எம்மைப் பெற்று வளர்த்த கடனே இல்லாமை போய்விடும். சடங்குகள் கலாச்சாரத்தின் வெளிப்பாடு என்னும் போது கலாச்சாரம் பிறருக்கு வேடிக்கையாக இருக்கக் கூடாது அர்த்தம் பொருந்தியதாக இருக்க வேண்டும்
நீக்குநல்ல கேள்விகளும் ஆயவுச் சிந்தனைகளும்.
பதிலளிநீக்குசிந்தித்து நல்லதைச் செய்வோம்.
சிந்தனைக்கு இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
மிக்க நன்றி
நீக்கு