• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014

    இதுவும் எமது கலாச்சாரமா?



    காலத்தின் கோலத்தால், கற்ற மண், எமைப் பெற்ற மண், உறவோடு மகிழ்ந்து உயிராகக் கலந்த கலாசார விழுமியங்களைப் போற்றிய மண். இம் மண்ணை விட்டுப் பிரிந்தோம். இதனால், பல மனங்களில்  புலம்பெயர்வு பல குணங்களைப் புகுத்திவிட்டது. நல்லவை சில, பொல்லாதவை சில. அவற்றில் ஒன்று இன்று வெளிச்சமாகின்றது. சில உரையாடல்களே மனங்களை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது. இங்கு வாழ்வோர் எவ்வாறான மனநிலைகளுடன் வாழ்கின்றார்கள் என்பதை வாழ்வியல் இலக்கியமே புடம் போட்டுக் காட்டமுடியும். 


            "அக்கறை காட்டுவதும், அளவறிந்து சமைப்பதும், கலோரின் பார்ப்பதும், கொலஸ்ரோல் கணக்கில் வைப்பதும் அப்பப்ப்பா...... போதும் போதும் என்ன செய்தும் இந்த கொலஸ்ரோல் இவருக்குக் குறைந்த பாடில்லையே! ஒரு இடத்தில் இருப்பவரா இவர்? ஓடி ஓடி அலுப்பில்லாமல் வேலை செய்து கொண்டிருப்பவர். அப்படியிருந்தும் இந்தப் பாழாய்ப் போன கொழுப்பு இருப்பது மனதுக்கு கவலையை அல்லவா தருகின்றது'' தன் கணவன் உடலின் கொலஸ்ரோல் என்னும் கொழுப்பு அதிகரித்திருப்பதை நினைத்துக் கலங்கினால் அருள்பாரதி. 

              இதைக் கேட்டுக் கொண்டிருந்த திவ்யாவோ 

    "இந்தக் கொலஸ்ரோல் எல்லாருக்கும் வருது என்ரவருக்கு கொஞ்சமும் வருகுதில்லயே! காலையில் 2 முட்டையை அடித்து முட்டைக் கோப்பி குடிக்குது, மாஜரீனை அள்ளிப் பாணில் பூசி அதற்குள் Wurst 2,3 என்று வைத்துச் சாப்பிடுதுளூ மூக்குமுட்ட சோற்றை பிடிபிடிக்குது, அப்பிடியே நாள் முழுவதும் இந்த couch இல் இருந்து கொண்டு ரி.வி பார்த்துக் கொண்டு இருக்குது. வேலைக்குப் போகுதா? கடைகளுக்காவது போகுதா? பிள்ளைகளையாவது ஸ்கூலுக்குக் கூட்டிப் போகுதா? ஒன்றுமில்லை என்ன பிறவியோ!'' என்று தன் கணவனைப் பற்றிக் கரிந்து கொண்டினாள், அம்மி மிதித்து அருந்ததி பார்த்து தாலி கட்டிய தாரம் திவ்யா. 

             நாளும் அவள் பாடும் பல்லவிதான் இது என்று அறிந்திருந்தும் 

    "வீடுகளில் பெண்கள் வீட்டிலிருப்பார்கள். ஆண்கள் வெளி வேலைகளும் பார்த்து தொழிலுக்கும் சென்று வருவார்கள். உங்கள் வீட்டிலேயே இவை எல்லாம் தலைகீழாக நடக்கிறது. பிழை எல்லாம் உங்களிடம்தான். நீங்கள் வெளியில் போக முடியாது என்று சொன்னால், அவர் எப்படியாவது போவார் தானே! அவளுக்கு அறிவுரை பகிர்ந்தாள்.

    "நல்லா சொன்னீங்க. அது சனியன் அப்பிடியே இருக்கும். பிள்ளைகள் பால் கேட்டால், தண்ணீர் கேட்டால், நான் என் செய்வது? 

     "பிள்ளைகளுக்கு மட்டும் வாங்கி வாருங்கள்'' எது சொல்லியும் பயனில்லை என்று அறிந்தும் அருள்பாரதி தன் கடமைக்குச் சொல்லி  அவ்விடம் விட்டு அகன்றாள். 
            
             அன்பும் பாசமும் அவரவர் நடந்து கொள்ளும் முறையிலேயே தங்கியிருக்கின்றது. தாலி பந்தம் என்பது கூட அது தந்தவனின் நடவடிக்கையிலேயே தங்கியிருக்கின்றது. சொர்க்கத்தைக் கூட காட்டிவிடும் கணவனும் உண்டு. நரகத்தைக் கூட காட்டிவிடும் தாரமும் உண்டு. இவ்வாறு மனதுக்குள் நினைத்தபடி விடைபெற்ற அருள்பாரதிக்கு திவ்யா வாழ்வானது கேள்விக் குறியாகவே இருந்தது. 

             அழகான இரண்டு குழந்தைகள்ளூ ஆதரவான நாடுளூ கணவன் தொழில் ஏதும் புரியாமலே தொகைப் பணத்தை வங்கியிலிருந்து பெறக்கூடிய சூழல். குழந்தைகளுக்கு பாடசாலைச் செலவு, பாடசாலை ஆரம்பிக்கும் போது பாடசாலை உபகரணங்கள் வாங்குவதற்குப் பணம்,இசை பயில ஓர் தொகைப் பணம், பிரத்தியேக வகுப்புக்குப் பணம், ஒவ்வொரு குழந்தைக்கும் பிரத்தியேகப் பணம், 3 ஆவது குழந்தைக்கு மேலதிகப் பணம், வீட்டு வாடகை, மருத்துவக் காப்புறுதி, தொலைக்காட்சி, தொலைபேசிக்குக் கட்டுப்பணம், குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் மாதாந்தச் செலவுக்குப் பணம், இத்தனை வசதிகள் இருந்தும் எதற்கு நான் வேலைக்குப் போகவேண்டும் என்று பிடிவாதமாய் அமர்ந்திருக்கும் பார்த்திபனை யாரால் திருத்த முடியும். இதைவிட வலது குறைந்தவர்களுக்கு மேலதிக பணம் கிடைக்கும், ஜேர்மனி நாட்டுப் பிரஜை அந்தஸ்தும் கிடைக்கும் என்ற காரணத்தால், ஒரு நோயைக் காரணம் காட்டி அதுவும் பெற்று விட்ட அறிவாளிக்கு யார்தான் அறிவுரை கூறமுடியும். 

                      நாடு மனிதனை சோம்பேறியாக்குகின்றது என்பதற்கு இதைவிட ஆதாரம் தேவையா? 

              அடிக்கடி தொலைபேசி மூலம் அலுத்துக் கொள்ளும் திவ்யாவும், கணவன் தேவைக்கேற்ப விலை மதிப்புடைய புகைப்படக்கருவி, பெருந்திரைக்  கணனி, டED தொலைக்காட்சி சொகுசுச் சோபா, இவ்வாறான வசதிகளைத் தன் திறமை மூலம் அதாவது சீட்டுப் போடல், உணவுப் பண்டங்கள் தயாரித்து சோம்பேறிக் குடும்பப் பெண்களுக்கு விற்றல் போன்று சேகரிக்கும் பணத்தில் தன் ஆசையையும் கணவன் ஆசையையும் இணைத்தே நிவர்த்தி செய்வாள். அதேவேளை தன்னோடு உறவாடும் அனைவருக்கும் கணவன் எதிர்ப்புப் புராணம் பாடுவாள். 

             "இஞ்ச பாருங்க அக்கா Wurst (பாணுக்குள் வைத்து உண்ணும் இறைச்சி) வாங்கி வைத்தால் ஒரே நாளில் முடித்துப் போடுகின்றார். 3 முட்டை அடித்துக் குடிக்கிறார். எல்லாம் சாப்பிடுது. இதுக்கு சாவு வருகுதில்லையே!

              திகைத்துவிட்டாள் அருள்பாரதி. "கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்'' தாலியைத் தாங்கும் இதயம் கணவனையே தாங்குகிறது என்னும் நம்பிக்கை எல்லாம் பொய்யா? கழுத்திலே தொங்குவதென்ன??? அலங்காரச் சின்னமா? இல்லை தங்கத்தை இடைபோட்டுக் காட்டத் தொங்கும் சாதனமா? ஊராரும் உறவோரும் வாழ்த்த, அம்மி மிதித்து அருந்ததி பார்த்து, மந்திரம் ஓத, நட்சத்திரப் பொருத்தம், பணப் பொருத்தம், வசியப் பொருத்தம், மகேந்திரப் பொருத்தம், தீர்க்கப் பொருத்தம், யோனிப் பொருத்தம், இராசிப் பொருத்தம், இராசி அதிபதிப் பொருத்தம், ரச்சுப் பொருத்தம், வேதைப் பொருத்தம் என பத்துப் பொருத்தங்கள் பார்த்து, சடங்குகள் சம்பிரதாயங்கள் செய்து இரு மனங்களை இணைத்து வைத்துச் செய்யும் திருமணம் சடங்கா? இல்லை வெறும் சம்பிரதாய சாக்குப்போக்கா

             சிரிப்புடன் கூடிய ஆச்சரியத்துடன் "என்ன இது வாழ்க்கை வாழுகின்றீர்கள்''

             "இது செத்தாலும் என் கண்ணில் ஒரு சொட்டுத் தண்ணீர் வராது. இந்தப் பிள்ளைகளுக்காகத்தான் இதோட சேர்ந்து வாழுகின்றேன். இல்லையென்றால், விட்டுப் போட்டு அரசாங்கப் பணத்தில் அழகாக வாழுவேன்''  என்றாள் திவ்யா.

              "ஆச்சரியாக இருக்கிறதே உங்கள் வாழ்க்கை. தம்பதிகளான விழாக்களுக்குப் போகின்றீர்கள் போகும் வீடுகளில் கணவனை விழுந்து விழுந்து கவனிக்கின்றீர்கள். சிரித்துச் சிரித்துப் பேசுகின்றீர்கள். என்ன வாழ்க்கை இது. நாடகமா வாழ்க்கை. மனிதப் பிறவிகளை நினைக்கும் போது எரிச்சல் அல்லவா வருகின்றது!

                என்ன செய்வது? மனிதர்களுக்கு முன் நடிக்க வேண்டுமே. போகும் இடம் எது என்று பாராமல் உத்தரதாண்டவம் ஆடிவிடுவாரே..... அடுத்தவர் வீடுகளில் நன்றாக கவனிக்கவில்லை என்றால், அவர்கள் வீடுகளுக்கு நான் வரமாட்டேன் என்றுவிடுவாரே! எல்லாவற்றையும் சமாளித்துத் தானே வாழவேண்டி இருக்கிறது. 

    இதைவிடப் பிரிந்து உண்மையாக வாழலாமே?

      "கொஞ்சம் பொறுங்கள் ஒரு பிள்ளையைப் பெற்றுவிட்டு அவரைத் துரத்தி விடுகின்றேன்''

    திடுக்கிட்டு விட்டாள் அருள் பாரதி. மூன்றாவது பிள்ளைக்கு அரசாங்கப் பணம் அதிகமென்றபடியால், பிள்ளையைப் பெற்றுவிட்டுப் பிதாவைத் துரத்திவிடல். எப்படியிருக்கிறது பெண்களின் வல்லமை. பணத்துக்காகப் படுக்கை விரிக்கும் கலாச்சாரம் தமிழ் கலாச்சாரம் என்றாகிவிட்டது. உடலாலும் உள்ளத்தாலும் இணைந்து தன் அன்பின் பிரதிபலிப்பாகவே பிள்ளையைப் பெற்றெடுக்கின்றோம். பிறக்கின்ற பிள்ளையால் பணம் வரும் என்று எண்ணிப் பிள்ளையைப் பெற்றெடுத்தல் எவ்வளவு கேவலமான செயல், ஐரோப்பிய மண்ணில் இதுவும் நடக்கின்றதே. 

          உண்மை அறியும் ஆவலில் அருள்பாரதி திவ்யா கணவனிடம் வினாவினாள், 

               கணவனோ  

    "இவள் ஒரு சொல்லும் கேட்கிறாள் இல்லை. எந்த நேரமும் வெளியே திரியவேண்டும். 24 மணிநேரமும் தொலைபேசி வேண்டும், நான் கோவித்து சாப்பிடவில்லை என்றால், ஏன் சாப்பிடவில்லை என்று ஒருபோதும் கேட்பதில்லை. தன் பாட்டுக்கு ஊர் சுற்றுகிறாள். நாட்டிலிருந்து இவளை இங்கு கூப்பிடுவதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்று எனக்குத்தான் தெரியும். ஆக்களை பழக்கம் பிடித்தபின் என்னை எடுத்தெறிந்து பேசுகின்றாள். எனக்கு ஒருவித மரியாதையும் தருவதில்லை. எதாவது கதைத்தால், வீட்டைவிட்டுப் போ. எனக்குத் தனியே வாழத் தெரியும் என்கிறாள்'' என அலுத்துக் கொள்ளுகின்றார். 

              இருவர் போட்டியிலும் சண்டையின் மத்தியிலும் வளகின்ற பிள்ளைகளை ஒருதடவை நினைத்துப் பார்த்தால் பயங்கரமாக இருக்கின்றது. புரியாத குடும்பம் என தலையைப் பிய்த்துக் கொள்ள வேண்டிய  சூழ்நிலை அருள்பாரதிக்கு, 

            "இப்படி ஒரு வாழ்வு தேவையா திவ்யா? வேறுபட்ட மனங்களுடன் ஒரு குடும்ப வாழ்வு வாழ முடியுமா? கணவன் மனைவி அந்நியோன்யம் இல்லாது ஒரு குடும்பமா? ஆச்சரியமாக இருக்கிறதே? இப்படியும் வாழலாமா? அப்படியென்றால், உள்ளத்தால் இணையாவிட்டால், இந்த உறவு தேவையில்லை என்று உதறிவிட்டுப் பிரியும் ஜேர்மனியர் உத்தமர்கள் அல்லவா! உண்மை வாழ்வு இல்லையெனில் புரிந்தே பிரிவோம். மனதால் கிளேசமின்றி காணுகின்ற போது நட்பை மட்டும் வைத்துக் கொள்வோம். உதவி தேவைப்படும் போது உதவிடுவோம். என்று பிரியும் வெள்ளையர்கள் வாழ்வு வெண்மை அல்லவா! என்று வெறுப்புடன் பேசிவிட்ட அருள் பாரதி விடைபெற்றாள். 

               மீண்டும் ஓரிரு மாதங்களின் பின் திவ்யாவைச் சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. "எப்படி திவ்யா சுகமாக இருக்கின்றீகளா?

    "ஓமக்கா..... எனக்கு இப்போ 2 மாதம். பிள்ளை தங்கச்சி கேட்டு அடம்பிடிக்கிறாள்...''

               

    5 கருத்துகள்:

    1. ஓம் கௌசி! முற்று முழுதான உண்மையிது.
      திருமணம் ஒரு நிறுவனமா!
      திருமணம் ஒரு தொழிற்சாலையா!
      அன்பிணையும் அதிசயப் பின்னலா!
      அற்ப நாடகம் சிலரிற்கு!
      பலர் வாழ்வே நாடகம் தான்.
      இதில் பிள்ளைகளிற்கு மாதிரியாக எப்படிப் பெற்றோர் இருக்க முடியுமோ தெரியவில்லை.
      Vetha.Langathilakam.

      பதிலளிநீக்கு
    2. குழந்தைகளை நினைத்தால்தான் மனம் கனக்கிறது சகோதரியாரே
      இப்படியும் பலர் இருக்த்ததான் செய்கிறார்கள்

      பதிலளிநீக்கு
    3. Thambirajah Pavanandarajah

      சிறிய கதையாக இருந்தாலும் சிந்திக்க வேண்டிய பலவிடயங்களை உள்ளடக்கியுள்ளீர்கள் ,முக்கியமாக ,மேற்கு நாடுகளில் ,வசதியற்றவர்களுக்கு, ,வழங்கும் பணம் நம்நாட்டவர் பலரால் துஷ் பிரயோகம் செய்யப்படுவது மிகக் கேவலமானது அண்மையில் வந்தசெய்திஒன்றின்படி இங்கு இருக்கும் துருக்கி நாட்டவருக்கு அடுத்ததாக ,இரண்டாவது இடத்தில் நம்மவர்கள் இருக்கிறார்கள் இது நமது இனத்துக்கு கேவலமான விடயம் .மற்றது இங்கு வந்தபின் ,இங்குள்ள பெண்களுக்குச் சார்பான பலசட்டதிட்டங்களை அறிந்ததும் சில பெண்கள் ஏறுக்கு மாறாக நடப்பது உண்மை ,ஆனால் கதையில் உள்ளதைப்போன்ற ஒருகணவன் கிடைத்தால் ,எந்தப் பெண்ணுக்கும் மிகவும் கஷ்ரம்தான் .,எது எப்படி இருந்தபோதிலும் குடும்பப் பிரச்சனையை வெளியில் பேசி சந்திசிரிக்கவைப்பதைவிட தமக்குள் பேசி சுமுகமான முடிவுக்கு வருவதுதான் சரியாக இருக்கும் , மிகவும் ஆராயப்படவேண்டிய பலசிக்கல்கள் இருந்தாலும் பலரையும் சிந்திக்கத்தூண்டும் விதமாக எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்.

      பதிலளிநீக்கு
    4. சொர்க்கத்தைக் கூட காட்டிவிடும் கணவனும் உண்டு. நரகத்தைக் கூட காட்டிவிடும் தாரமும் உண்டு. சிந்திக்க வைத்தன ஒவ்வொரு வரிகளும் அருமை சகோதரி எனது பதிவு ''மௌனமொழி'' படிக்க வேண்டுகிறேன்.

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...