• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    சனி, 26 மார்ச், 2016

    பிரேமை

                       


                        

    மூளைக்குள்ளே பாய்கின்ற மின்சாரம் அதிவேகமாக தொழிற்படத் தொடங்குகின்றது. பதிந்து வைத்த ஒரு பகுதி மாத்திரம் அடிக்கடி பளிச்சிட்டுக் கொண்டிருக்கின்றது. அவள் கவனத்தைத் திசை திருப்ப வேறு நிகழ்ச்சிகளை முன் கொண்டு வருகின்றாள்.   ஆனால், அதுவோ அதிவேகமாக அப்பக்கமே இழுக்கின்றது. மூளைக்குள்ளேயே படுபோராட்டம். நினைவும் மறுப்பும் எதிர்த்து நின்று எகிறிப் பாய்கின்றன. காண்போர் காதுகளுக்கெல்லாம் இதுபற்றிய பேச்சே தொடர்கின்றது. இருளிலே அவ்வுருவம் இருப்பது போல் உணர்கின்றாள். தனிமையில் அவள் வார்த்தைகள் மீண்டும் மீண்டும் ஒலிப்பது போல் உணர்கின்றாள். நடந்த சம்பவங்களுக்கும் நடக்கின்ற சம்பவங்களுக்கும் முடிச்சுப் போட்டுப் பார்க்கின்றாள். தான் உயிர்நீப்பின் மரணச்சடங்குகள் என் உடலுக்கு வேண்டாம். என் உடலை மருத்துவமனைக்கு ஒப்படைத்து விடுங்கள் என்று வீட்டிலுள்ளோருக்கு கட்டளையிடுகின்றாள். என் உயிர் நீப்பின் என் உடலுக்கு எரியூட்ட வேண்டாம். காக்கைக்கும் புழுவுக்கும் என் உடல் உணவாகட்டும் என்று கூறிய வள்ளுவர் வாக்குப் போல் உத்தரவிடுகின்றாள். 

             இவள் விபரீத நடவடிக்கைகள் கண்ட கணவன் வைத்தியரிடம் அவளை அழைத்துச் செல்ல மனஅழுத்தம் என மருத்துவர் பதிலிறுக்கின்றார். மனமாற்ற நடவடிக்கை எடுக்காது விட்டால், விபரீதத்தை எதிர்நோக்க வேண்டிவரும் என்று மருத்துவரும் அறிவுறுத்துகின்றார். ஏனென்றால், அவள் வாழவேண்டும். அவளால் உருவாக வேண்டிய ஒரு உலகம் இருக்கின்றது. அவள் உதவியை நாடும் உள்ளங்கள் இருக்கின்றன. இவ்வாறுதான் துணையை இழந்த உள்ளங்கள் தனிமைக் கொலையைச் செய்கின்ற ஐரோப்பிய நாடுகளில் தவிக்கின்றன. மறதிநோயும், மயக்கநோயும், மனநிலை தடுமாறும் மந்த நோயும் ஆட்டிப் படைக்கின்றன. 

             இவள் நிலை பலருக்கு நடிப்பு, இவளுக்குத் துடிப்பு, எல்லோரும் ஒரே மனநிலையில் இருப்பார்கள் என்று சொல்வதற்கில்லை. வளர்ப்பு முறையாலும் வளர்ந்த சூழ்நிலையாலும் கல் மனம் கொண்டார் எதையும் தாங்கும் இரும்பு போலாவர்.  பலர் கூறும் வார்த்தைகளும் ஒரு காதால் வந்து மறு காதல் மறைந்துவிடும். ஆனால், இளகிய மனம் தன் நிலையை இழந்து விடும். கடமையுள்ளவர்கள் வெளியே செல்ல வீட்டில் தனித்திருக்கும் பெண்கள் மனநிலை பாதிக்கப்படுவது இயற்கை. இதனாலேயே ஐரோப்பிய நாடுகளில் ஒருவர் இறந்தால், குடும்பத்துடன் இணைந்து ஒப்பாரி வைப்பதை விட்டுவிட்டு அக்குடும்பத்தைச் சிரிக்க வைப்பதற்காக இருக்கும் இடம் விட்டு உறவினர்கள் அவர்களை வேறு இடத்திற்கு அழைத்துச் செல்வார்கள். பல்வேறுபட்ட மூளைப்பதிவுகளைப் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படுத்துவார்கள். இது எமது கலாச்சாரம் இல்லையென்று திரும்பத்திரும்ப அதேசம்பவத்தை எடுத்துரைத்து 1 வருடம் எந்தவித நிகழ்வுகளுக்கும் சம்பந்தப்பட்டவர் சமூகமளிக்கக் கூடாது என்று கட்டளையிட்டு, சிரித்துவிட்டால், சிரிப்பதைப் பாருங்கள். கொஞ்சம் கூடக் கவலையில்லாமல் என்று மறைவாகப் பேசி, மனக்கொலை செய்யும் எமது சமுதாயம் என்றுதான் வெளிச்சம் காணப் போகின்றதோ. 

             வெள்ளைக்காரர் போல் நடையும் உடையும் மாத்திரம் போதாது. நல்பழக்கவழக்கங்களும் கற்றுக் கொள்ள வேண்டும், மனிதத் தன்மையையும் மனம் கொள்ள வேண்டும். 

    3 கருத்துகள்:

    1. "வெள்ளைக்காரர் போல் நடையும் உடையும் மாத்திரம் போதாது. நல்பழக்கவழக்கங்களும் கற்றுக் கொள்ள வேண்டும், மனிதத் தன்மையையும் மனம் கொள்ள வேண்டும்." என்ற வழிகாட்டலை வரவேற்கிறேன்.
      சிறந்த படைப்பு

      பதிலளிநீக்கு
    2. தங்களது பதிவு பயனுள்ள விடயமாகவே தோன்றுகின்றது

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    ஜெர்மனியில் தமிழர் பண்பாட்டு மாற்றம்

      ஆங்கிலேயர் , போத்துக்கேயர்கள், ஒல்லாந்தர்  தமது ஆட்சிக் காலத்தின் போது எமது நாடுகளில் தம்முடைய பண்பாட்டைக் கட்டாயமாகத் திணித்த நிலையிலிர...