வீடுகள் வாழ்வின் படிமங்கள்
'மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின்'
சுவர் கொண்ட வீடல்ல வீடு
நினைவுகள் குடியிருக்கும் இடமே வீடு.
தாய் காத்த வாசலும்,
தந்தை நடந்த முற்றமும்,
பிள்ளைப் பருவம் விளையாடிய திண்ணையும்
காலம் கடந்தாலும் மனத்தை விட்டு அகலாது
நான் வாழும் நகரிலே திடீரென ஒரு நாள் தீயணைப்புப் படை வாகனத்தின் இரைச்சல் காதைத் துளைத்தது. சிறிது நேரத்தில் அருகாமையில் அமர்ந்திருந்த ஒரு வீட்டைத் தீ தன்னுடைய நாவிற்குள் தூக்கிச் சாப்பிட்டு சாம்பலாகத் துப்பிய காட்சியைச் செய்திகள் பரப்பின. மனிதன் எரிந்தால் மனம் கலங்கும் நாம் கட்டிடத்தின் எரிதழலை நினைத்து அவ்வளவு கவலைப்படுவதில்லை.
'நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்திவ் வுலகு'
நேற்று இருந்தவன் இன்று இல்லை என்பதே உலகத்தின் நிலையாமை என்று வள்ளுவர் உணர்த்துகிறார். மனித வாழ்க்கைக்கு மட்டுமல்ல, மனிதன் உருவாக்கிய வீடுகளுக்கும் இதே நிலையாமை பொருந்துகிறது. நேற்று வரை மனிதர்களின் சிரிப்பால் நிறைந்திருந்த வீடு, இன்று தீயின் நாக்கில் சாம்பலாகி இருக்கலாம். நேற்று நம்முடையதாக இருந்த வீடு, இன்று வேறொருவருடையதாக மாறியிருக்கலாம். நாம் நடமாடிய அறைகளில் வேறு ஒருவர் நடமாடலாம். ஒருநாள் எனக்கு ஒரு கனவு வந்தது. எங்களுடைய வீட்டினுள்ளே யாரோ ஒரு வெள்ளை இனப் பெண் சர்வசாதாரணமாக வாசல் கதவைத் திறந்து உள்நுழைந்து வரவேற்பறைக்குள் செல்கின்றாள்.
வீடுகள் காலத்தின் படிமங்கள். ஒவ்வொரு சாளரங்களும் சுவாசத்தின் திறவுகோல். வாசல் கதவு மகிழ்ச்சியின் சாளரம். எத்தனை காததூரம் பிரயாணம் செய்து நாடு விட்டு நாடு தாண்டி சுற்றாலாவென்று சுற்றி வந்தாலும் எங்கள் வீட்டுக்குள் நுழையும் போதே உடலும் மனமும் அசதியின்றி மகிழ்ச்சியின் உச்சத்துக்கு வரும். எம்முடைய கட்டிலில் சரியும் போதே நிம்மதியான உறக்கம் வரும்.
சிலருக்கு வீடு ஒரு கனவு. பல கனவுகள் கற்பனைகளுடனேயே வீட்டைக் கட்டுகின்றனர். தம்முடைய உழைப்பை வீடு கட்டுவதற்கு முழுவதுமாகச் செலவு செய்கின்றார்கள். பாலுமகேந்திராவின் இயக்கத்தில் வெளிவந்த வீடு என்னும் திரைப்படம் வீட்டின் கனவைச் சிறப்பாக எடுத்துக் காட்டியிருக்கும்.
வீட்டின் சுவர்களுக்குக் காதுகள் இருப்பதாகக் கவிஞர்கள் கற்பனை செய்தது பொய் அல்ல. பல வருடங்களின் பின் இலங்கை சென்றிருந்த போது என்னைப் பார்க்க உறவினர்கள் எல்லோரும் வந்திருந்தார்கள். சிரிப்பும் கும்மாளம் அண்ணன் வீட்டை ஆட்சி செய்திருந்தது. அந்தச் சுவர்கள் சிரிப்பைக் கேட்டிருக்கின்றன. உறிஞ்சி உள்ளே வைத்திருந்தன. இரவு எல்லோரும் சென்று விட்டார்கள். நாங்களும் தூங்கிவிட்டோம். இரவிரவாக என் காதுக்குள் வரவேற்பறையில் பலர் பேசிக் கொண்டிருப்பது போலக் கேட்டுக் கொண்டே இருந்தது. நாங்கள் தூங்கியபின் அண்ணன் குடும்பம் பேசிக் கொண்டிருக்கின்றதோ என்று நினைத்து எழுந்து வந்த பார்த்தேன். யாருமில்லை. பேச்சலைகள் சுவருடன் முட்டி மோதுகின்றன என்று நினைத்தேன். வீட்டின் சுவர்கள் சிரிப்பையும் கேட்கின்றன, அழுகையையும் கேட்டிருக்கின்றன. குழந்தையின் முதல் அழுகையிலிருந்து முதியவரின் இறுதி மூச்சுவரை கேட்டுக் கொண்டே இருக்கும். ஒரு குடும்பத்தின் முழு வரலாறும் சுவர்களுக்குள் பதிந்திருக்கிறது. புகைப்படங்களில் உறைந்து போன முகங்களைவிட, அந்தப் புகைப்படங்கள் தொங்கியிருந்த சுவருக்குத்தான் மனிதர்களின் வாழ்வைப் பற்றி அதிகம் தெரிந்திருக்கலாம்.
வீடு என்பது மனிதன் வசிக்கும் இடம் மட்டுமல்ல மனிதன் தன்னையே கண்டுகொள்ளும் இடம். வெளி உலகில் நாம் பல வேடங்களில் நடிக்கின்றோம். ஆனால் வீட்டின் கதவை மூடியவுடன் அந்த வேடங்கள் கழன்று விழுகின்றன. அங்கே நாம் நாமாகின்றோம். அதனால்தான் வீடு என்பது முகவரி அல்ல. அது ஒரு மனிதனின் அகவரைபடம். கண்ணாடி என்றுமே பொய் சொல்வதில்லை. அதேபோல வீடு மட்டுமே எம்மைப் புரிந்து வைத்திருக்கும். அங்கு நாம் நாமாக இருப்போம். மனையில் மாசற்ற பெண் வாழவேண்டும். அவள் அந்த வீட்டைச் சொர்க்கபுரியாக்குவாள்.
"மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்"
வீட்டைச் சிறப்பாக நிர்வகிக்கும் நல்ல பண்புகள் மனைவியிடம் இல்லாவிட்டால், ஒருவனின் குடும்ப வாழ்க்கை மற்ற எத்தகைய பெருமை மற்றும் செல்வச் சிறப்புகளைப் பெற்றிருந்தாலும் பயனில்லாமல் போய்விடும் என்கிறார் வள்ளுவர். அந்த வீடு சிறப்பாக நினைவுகளைத் தாங்காது.
கவனிப்பாரற்று விடப்படும் வீட்டை மரங்களும் செடிகளும் உண்ணத் தொடங்கிவிடும். வீட்டை மனிதர்களுக்கு மட்டுமே பிடிக்கின்றது என்பதில்லை. சாளரங்களின் இடைவெளியில் பறவைகள் கூடுகட்டுகின்றன. சுவர்களில் பாசி படர்கிறது. முற்றத்தில் களைகள் வளர்கின்றன. சிலந்தி ஆங்காங்கே வலை பின்னிக் கழித்திருக்கும். ஒருகாலத்தில் மனிதர்களின் காலடிச் சத்தத்தால் நிறைந்திருந்த இடத்தை இயற்கை மெதுவாகத் தனதாக்கிக் கொள்கிறது. இப்போது யுத்தத்தால் புலம்பெயர்ந்து வந்தவர்கள் எல்லோரும் இந்த இயற்கையின் ஆக்கிரமிப்பைப் பார்த்திருப்பீர்கள்.
வீடுகள் மாறுகின்று போது பொருட்கள் எல்லாம் காவிச் செல்வோம். ஆனால் வீட்டை மட்டும் விட்டுச் செல்வோம். ஆனால் அதன் நினைவுகள் மட்டும் எம்மோடு கூட வரும். பழைய வீட்டை விட்டு வெளியேறும் போது, நாம் கதவை மட்டும் மூடுவதில்லை. நம் வாழ்க்கையின் ஒரு பருவத்தையும் மூடுகிறோம். அந்த வாசலில் நின்று விடைபெற்றவர்களையும், அந்தப் படிக்கட்டில் ஓடிய குழந்தைப் பருவத்தையும், அந்தச் சுவரில் அளந்த உயரத்தையும், அந்த முற்றத்தில் விழுந்த மழைத்துளிகளையும் அங்கேயே விட்டுச் செல்கிறோம்.
பின்னர் எவ்வளவு தூரம் சென்றாலும், மனத்தின் ஒரு சிறிய அறை அந்த வீட்டிலேயே பூட்டப்பட்டிருக்கும். மாதத்தில் ஒரு முறையாவது நான் வளர்ந்த வீட்டை நினைத்துப் பார்க்காது விட்டதில்லை. அது என் நினைவுப் பெட்டகத்தில் இருந்த அழிந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றேன். என் முதல் வீடு புகுந்து பார்க்க முடியாத இடத்தில் இருந்தது. அதுவும் ஒருநாள் தீயின் நாவுக்குள் அடங்கிப் போனது. அடுத்து என் பருவ வயதில் என்னை இரசித்து, என் பாடல் கேட்டு, என் ஆடல் பார்த்து, என்னோடு சேர்ந்து என் நூலகத்தில் என் வாசிப்பைக் கேட்ட வீடும் சாம்பலாகிக் கருகிய மேனியுடன் பொலிவிழந்து நின்ற போது என் தந்தையின் தவிப்பை அன்று நான் உணரவில்லை. என் தாயின் சொர்க்க பூரியாகிய மாணிக்ககிரியின் இழப்பின் வேதனையை அறியவில்லை.
தான் வாழ்ந்த வீட்டை விட்டுப் போகும் சந்தர்ப்பத்தில் ஒரு தடவை திரும்பிப் பார்க்கும் போது வியப்பான உண்மை புலப்படும் மனிதன் வீட்டைக் கட்டுகிறான் என்று நாம் நினைக்கிறோம். உண்மையில் வீடுதான் மனிதனையும் கட்டுகிறது. குழந்தையின் ஒழுக்கம், குடும்பத்தின் பழக்கம், உறவுகளின் நெருக்கம், நினைவுகளின் சேமிப்பு, இவை அனைத்தும் ஒரு வீட்டின் அமைதியான கட்டுமானப் பணிகளே. செங்கற்களால் கட்டப்பட்ட வீடு ஒருபுறம், அன்பால் கட்டப்பட்ட வீடு மறுபுறம். முதலாவது இடிந்து விழலாம். இரண்டாவது தலைமுறைகளைத் தாண்டியும் நிலைத்திருக்கலாம்.
மனிதர்கள் இந்த உலகிற்கு விருந்தினர்களாகத்தான் வருகின்றனர். நாம் கட்டும் வீடுகள் நம்மைவிட நீண்ட காலம் நிற்கின்றன. ஒரு தலைமுறை கட்டிய வீட்டு வாசலை இன்னொரு தலைமுறை திறக்கிறது. நம் குழந்தைகள் விளையாடிய முற்றத்தில் ஒருநாள் அவர்களின் குழந்தைகள் ஓடக்கூடும். வாடகை வீட்டில் நம் கைகளால் தொட்ட சுவரை, நம்மை அறியாத ஒருவன் நாளைத் தொட்டுப் பார்க்கலாம்.
